Pages

Thursday, May 26, 2022

சிவகாமியின் செல்வன் 03

அந்தக் காலத்தில்  சத்தியமூர்த்திக்கும் காமராஜுக்கும் இருந்த அன்புக்கும் பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பை சொல்லிவிட முடியாது.  காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.  ஆனால் பொதுவான நிலை அதுவல்ல. காமராஜரே சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்ததுண்டு.  சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர்.  ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.  அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர்.  அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜுக்கே உண்டு.  அது மட்டுமல்ல, சாத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரத்தில் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் காமராஜுடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும் திசை தப்பித் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940ல் சத்தியமூத்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார்.  மேயர் என்ற முறையில் சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அச்சமயம் காமார்ஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைலைவராக இருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பட்டு விதித்திருந்தது.  சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து இது பெரிய தவறு இல்லையா என்று கேட்டார் காமராஜர்.

ஆமாம் அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்.  நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன் என்றார். செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்றார் காமராஜ். வேறு வழி இல்லமால் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் இந்த செய்தியை என்னிடம் கூறிய போது,  அப்புறம் என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டேன்.

இதை பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டார்கள்.  மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார் காமராஜ்.  சரி அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  என் வீட்டில் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும் தேடிப் பார்க்கணும் என்றார்.

சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாக சந்தித்தது எப்போது, நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்.

1919ல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார்.  அப்போது நான் ஒரு சாதாரண தொண்டன்.  அவரோடு அப்போது பேசவே முடியவில்லை.  அப்புறம் 4 வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்கு சந்தர்ப்பம் உண்டானது.

1923ல் திரு சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்ய பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா?  அப்பா அந்தக் கட்சியின் கொள்கைப் பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமைய்யர் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.  இப்போது அவர் இல்லை.  நானும் அந்தக் கூட்டத்துக்குப் போனேன். சத்தியமூர்த்தி சுயராஜ்ய கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.  காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்ய கட்சியின் கொள்கை.  அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது.  அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் ப்ரவேசத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்கள்.  நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூ டாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.  

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று. 

அந்த காலத்தில்  திரு.ரங்கசாமி அய்யங்கார், திரு எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தாங்க.  காரணம் திரு ரங்கசாமி ஐய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்தது.  அதனால் பிரபலமடைய சுலபமாயிருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல.

முன்னுக்கு வந்தபோது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி பதவி என்று வரும் பொது மட்டும் அதைத் தானே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு வீட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தார். பதவி மீது சத்தியமூர்த்திக்கு ஆசை இல்லை என்பது அர்த்தமில்லை.  அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமல் போனது.  காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு.  ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.  மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போனது.

1927ல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.  இதற்கு காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு இல்லாமல் இரவு பகலாகக் காரிலே சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.  அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.  அந்த சமயம் ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு வீட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  சத்திய மூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்து எடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை.  கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் அந்திரிகள் பெர்த் பட்டியல் வந்தபோது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது.  பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி.  அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

எந்த போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலிஸாரைக் கதர் குல்லாய்க்கு சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார்.  பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களை காங்கிரஸ்காரர்களுக்கு சலாம் போடவும் வைத்தார்.  ஆனால் அந்த போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை.  அந்த கவுரவத்தை சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்.

\உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் தேசபக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அப்போது சிறையில் உள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும் மாகாண காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற்றன.  சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவை சொன்னபோது அவர் சரி என்று சொன்னார்.  ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி அப்போது தலமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டும் இன்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936ல் பொது தேர்தல் வந்த போது தேர்தல் பிரசாரத்துக்காக சத்யமூர்த்தியும் நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.  அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.  திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சியில் யாரும் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை இருத்த ஏற்பாடு செய்தனர்.  இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்கு புறப்பட்டு வரும்படி தலைவர் சத்யமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.  அதை கண்ட சத்தியமூர்த்தி என்னை பார்த்து, குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே.  அவர் போட்டியிடவில்லை என்றால் பிரச்னை தீர்ந்துவிடும் அல்லவா.  நீ என்ன சொல்கிறாய்.  ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஓதுங்கிக் கொள்ள சொல்லலாமா என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராக இருப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது.  ஆகையால், நாம் இருவரும் மதுரைக்கு சென்று ராஜாவையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என் யோசனை கூறினேன்.  ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.  தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.  சத்தியமூர்த்தி, அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து என்னிடம் உங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், இப்படிச் சொன்னால் போதாது மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் தான் நம்புவேன் என்றார். சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமிராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ல் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்தியமூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

படேலும் அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.  சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை.  அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கு, அவர் மகளுக்கும் கீழ் பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள்.  அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்கு கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டாங்க  இல்லையா?  அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாக சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.  அதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்று இரவு என்னைப்  பார்த்து காமராஜ் அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன்.  முள்ளை  முள்ளால்தான் எடுக்க வேண்டும்.  வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி.  நீ தலைவனாக இரு.  நான் உனக்கு காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன் என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன்.  இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறினார் சத்தியமூர்த்தி.  தாம் கூடியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார்.  பலத்த போட்டி இருந்தபோதிலும், சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது.  அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னை பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார் காமராஜ்.

அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார் என்று கேட்டேன்.  ஆமாம், அந்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார் காமராஜ்.

(தொடரும்)















Tuesday, May 24, 2022

சிவகாமியின் செல்வன் 02

டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஸும், வேடிக்கையும்தான்.  சில தலைவர்களை பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதை பற்றியும் சொல்லிவிட்டு ஹோ ஹோ என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.

காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்கு சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை.  அந்த சிரிப்பில் கேலி இருந்தது.  ஐயோ இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் இருந்தது.  சிறிது நேரம் சிரித்துவிட்டு பிறகு, அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவர்களும் சரியில்லையேன்னேன், எந்த சமயத்தில் எதை பேசுவது, எதை பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே, வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே என்று மீண்டும் சிரிக்கிறார்.

ஜனசங்கம், சுதந்திரா இந்த கட்சிகளுடன் கூட்டுசசேரும் முயற்சிக்கு என்ன தடங்கல் என்று நான் கேட்டபோது நான் என்ன செய்யட்டும், குஜராத்துக்கும் மைசூரும் ஒத்துவரமாட்டேங்குதே, அவங்க ஊர்ப் பிரச்சினை அவங்களுக்கு, அவசரப்பட்டால் சில காரியங்கள் கெட்டுப் போகுமே.  எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித்தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக்கூடாதேங்கிறதுதான்.  

சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க.  அப்படின்னா அது ஆபத்ததில்லையா?  அந்த பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்.

இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?

அவங்க ப்ரோ இந்திரா, அந்த அம்மாவுக்கு பதவி தான் முக்கியம்.

நீங்கதானே அவங்களை பிரதமராப் போட்டீங்க, இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே?

நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப பட்டிருப்பாங்க, நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வச்சுடுவாங்க போலிருக்கே.  கோபமும் எரிச்சலும் வருகின்றன அவருக்கு.  பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு.

இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையை தடவிக் கொள்கிறார்.  சட்டையின் விளிம்பை சுருக்கி மேலே தோள்பட்டைவரை தூக்கிக் கொண்டு போய் சேர்க்கிறார்.  "உம், இருக்கட்டும்" என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.

எனக்கு ஒண்ணுமில்லே, இந்த தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு, நான் என்ன செய்வேன்?

இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு சரி பார்ப்பம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுக் குழந்தை போல சிரிக்கிறார்.  எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடப்மற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்த சிரிப்பு.

சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே?  அப்படி நீங்கள் வந்திருந்தால் இந்த சங்கடம் இருந்திருக்காதே?வாஸ்தவம் தான்.  வேறே யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவி இருக்கலாம். நாமே போயி பதவியில் உட்கார்ந்துக்கிட்டா சரியாகிடுமா? அப்பவே காரியக் கமிட்டீ அங்கத்தினர்களில் பெரும்பாலோரும் ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுகிட்டாங்க.  அடுததாப்லே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வர போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியில் போயி உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்கு கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?

இந்திரா காந்தியை எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த விவரத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா?

நேருவுக்கு பிறகு நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தலைவர் சாஸ்திரி தான்.  நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன.  சாஸ்திரி ரொம்ப சாது, காந்தீயவாதி, நேர்மையானவர், எளிய சுபாவம்.  அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நமமை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்தபோது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை.  நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது.  ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட்டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார. காங்கிரஸைக் கலைச்சுடலாம்னு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே, இப்போதுதான் புரியுது. அப்பவே கலைச்சு இருந்தால் இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும்.  அது நாட்டுக்கும் நல்லதாய் இருந்திருக்கும். 

சாஸ்திரியின் காரியங்கள் எல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க.  தான் பிரதமரா வரமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு. எப்படி இருக்கு தலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவா பேச்சை ஆரம்பிச்சாங்க.  என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லலை.

நீங்க பேசாமல் வீட்டிலே போயி உட்காருங்க, நான் கூப்பிட்டு அனுப்பிச்சா அப்ப வாங்க, அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும் எதுவும் பேசாதீங்க, உங்ககிட்டே யாரவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரசிடெண்டைப் போயி கேளுங்கன்னு சொல்லி அனுப்பிடுங்கன்னேன். 

அடுத்தாப்பலே பத்திரிக்கைக்காரங்க போயி அந்த அம்மாவைக் கேட்டப்போ எனக்கு ஒன்னும் தெரியாது, காமராஜ் என்னை பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்க சொல்லிட்டார், அவரைப் போய்க் கேளுங்கன்னு பதில் சொல்லியிருக்காங்க.  அது பேப்பர்லேகூட வந்ததா நினைவு என்றார். 

இந்திராவை போடலாம்னு ஏன் நினைச்சீங்க, மொரார்ஜி தேசாய் வந்திருக்கலாமே என்றேன்.

நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையயாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை, அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க.  காரியக் கமிட்டீ அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க.  எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாம்னு ஓர் அபிப்பிராயம் இருந்தது.  ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே  காட்டிக்கல்லே.  ரொம்ப பேர் இந்திராவை வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவர்களோடு எல்லாம் நான் ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணினேன்.  அப்புறம் அவர்கள் அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க.  ஆனால் மொரார்ஜி ரொம்ப பிடிவாதமா இருந்தார். எம்.பி.க்கெல்லாம் லெட்டர் எழுதினார்.  நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன்.  அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார்.  வேறு வழியில்லாமல் மறுநாள்  பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம்.  இந்திராவுக்குத் தான் மெஜாரிட்டி கிடைச்சுது.

சரி, இந்திராவை பிரதமராக்கினீர்களே அதுக்கப்புறம் முக்கியமான பிரச்சினைகளில் உங்களைக் கலந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க?

ஆமாம், கலந்துக்க கிட்டு தான் இருந்தாங்க.  ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னை கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க.  திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப சென்னையில் இருந்தேன்.  இந்திரா எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச்  சொன்னாங்க.  நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க. 

அப்படிச் செய்யக் கூடாது, ரொம்பத் தப்பு. வெளிநாட்டு வியாபாரம் கெட்டுப் போகும்.  வெளிநாட்டில் கோடிகோடியா கடன் வாங்கி இருக்கோம், அதை இரண்டு மடங்கா திருப்பிக்  கொடுக்க வேண்டியிருக்கும்.  டீவேல்யூவேஷன் அவசியந்தான்னு நினச்சா அதை பற்றி பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப்படாதீங்க, ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்.

அதுக்கு என்ன சொன்னாங்க?  

இல்லே, காபினெட் மெம்பெர்ஸ் ஒத்துக்கிட்டாங்கன்னு சொன் னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது.  எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ண சொன்னேன்.  என் பேச்சைக் கேட்கல்லே.  அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது.  நாட்டை இவங்க கிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டுது.

ஏன் நீங்கே அப்புறம் கூப்பிட்டு கேட்கிறதுதானே?

கேட்டேன்.  டிவேல்யூவேஷன் மேட்டரை பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியலை. ரகசியமா செய்ய வேண்டிய காரியம் அது, இதுன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் கமிட்டியில் இதை பத்தி பேசினோம். என்ன லாபம்? காரிய கமிட்டியில் இதை திருத்த முடியுமா? கண்டிக்கத்தான் முடியும்.  கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு?  எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது?  அன்றுதான் எனக்கு கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துனு நினச்சேன்.  நான் என்ன செஞ்சுத்  தொலைப்பேன்னேன்.

சிரிப்பு, பலத்த சிரிப்பு, எக்காளச் சிரிப்பு.  தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு, அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.

பார்ப்பம், பொறுமையா இருந்துதான் காரியத்தை சாதிக்கணும்.  மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார், பிடரியைத் தேய்க்கிறார், தவிக்கிறார்.  மீண்டும் அந்தகக் குழந்தைச் சிரிப்பு.

(தொடரும்)


Friday, May 20, 2022

சிவகாமியின் செல்வன் (காமராஜரின் அரசியல் வாழ்க்கை) 01

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் நான் டில்லிக்குப் போயிருந்தபோது காமராஜ் டில்லியில் முகாம் போட்டிருந்தார்.  அவரைப் பற்றி வேறுஒரு வார பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கி இருந்தேன்.  காமராஜ் அப்போது முதலமைச்சர் பதவியில் இல்லை.  ஆனால் காமராஜ் திட்டம் காரணமாக நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது. 

டி.டி.கே., அதுல்யகோஷ், எஸ். கே. பாட்டில் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.  

டி.டி.கே இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.  காமராஜ் கர்மா வீரர் என்றும், தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்றாஸ் ஸ்டேட் ரொம்ப காமராஜ் மயமாகிறதென்றும்  அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக் கொண்டு மௌனமாக உட்கார்ந்து இருந்தார்.

டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களை போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன். நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர்.  காமராஜ் போகும் இடங்களுக்கு அவரைப் பின்பற்றி நானும் நடராஜனும் போய்க்கொண்டிருந்தோம்.

அந்த காலத்தில் காமராஜின் வலது கரம் என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும் கூடவே எங்களையும் அழைத்திருந்தார்.  அன்று நாங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 9 ஆகிவிட்டது. 

அன்று காலை 9 மணிக்கு நேரு வீட்டில் காமராஜர் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது.  காமராஜுக்கு அது தெரியாது.  கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத்திருந்தார்கள்.  அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  

திடீரென்று நேரு வீட்டில் இருந்து ராஜகோபாலனை இந்திரா காந்தி டெலிபோனில் அழைத்து காமராஜ் அங்கே இருக்கிறாரா 9 மணிக்கு மீட்டிங்  இருக்கிறதே இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள்.  நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்கிறார் என்றார்.  இந்த செய்தியை ராஜகோபால் காமராஜிடம் சொன்னபோது அவர் பதறிப் போனார்.  நேற்று என்னிடம் பத்தரை மணிக்கு கூட்டம் என்று தானே சொன்னார்கள். 9 மணிக்கு மாற்றிய செய்தி எனக்கு தெரியாதே, சரி சரி வண்டியை எடுக்க சொல்லு என்று வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தார்.

நேருஜியையும், மற்றவர்களையும் வீணாக  காக்க வைத்து விட்டோமே. தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன.

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.  காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை.  ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமராஜரைக் காரில் ஏற்றி விட்டார்.

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை.  காமராஜுடன் போக வேண்டியதுதானா  இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம்.  காமராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல்லாம் தீன்மூர்த்தி பவனிலேயே  இருந்தது.

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயிருந்தன.  பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை.

கார் போய்க் கொண்டிருந்தது.  கண்ணாடி கதவுகளையெல்லாம் மூடிக் கொண்டோம்.  நடராஜன் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நானும், காமராஜும் பின் சீட்டில் இருந்தோம்.  ஒரே மௌனம்.

ஏற்கெனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தது.  இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில்  ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது.  நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக்குள் ஏறிவிட்டோம்.  கொட்டுகிற மழையில் எங்களை நடுரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை.  நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாத நிலை.  இதுதான் அவருக்கு கோபம். திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார். 

உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? இப்போது எதற்கு காரில் ஏறினாய்? கேமராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப்  பற்றி என்ன நினைப்பார்கள்?

நாங்கள் நடு நடுங்கி போனோம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜரை இப்படி ஒரு நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன்.  கார் போய்க் கொண்டே இருந்தது.  சட்டென்று காமராஜ் அதோ அதோ நிறுத்து என்றார்.  அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது.  எங்களை கண  நேரத்தில் அங்கே இறக்கி விட்டு அந்த டாக்ஸியில் எறிக் கொள்ளும்படிச் சொன்னார்.   நாங்கள் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி அதில் ஏறிக் கொண்டோம்.  நடராஜனுக்கு  இது சகஜம் போலிருக்கிறது.  காமராஜர் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை.  அவர் என்னைத் திட்டினால் தான் எனக்கு திருப்தி.  அவரிடம் திட்டு வாங்குவதில் உள்ள சந்தோசம் எனக்கு வேறு எதிலும் இல்லை என்று ஜாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அன்று பகல் 12 மணிக்கு மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டீ கூட்டம் ஒன்று இருந்தது.  நானும், நடராஜனும் அங்கே போய்  காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களை பார்த்து விட்டு சிரித்து கொண்டே என்ன இங்கே வந்திருக்கிறீர்களா சரி இங்கேயே உட்கார்ந்திருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று ரொம்ப சாந்தமாக சொல்லிவிட்டு போனார். 

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப்பட்டையாக மாறியிருக்கிறார் என்று வியந்தேன் நான். 

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன். 

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தர்ம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கியபோது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது.

7 ஆண்டுக்கு பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். 

என்ன வாங்க என்ன சங்கதி? சொல்லுங்க என்றார்.

தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும் என்றேன்.

வேண்டாம். அது எதுக்கு என்று மொட்டையாக பதில்  சொல்லி மறுத்துவிட்டார்.

தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும், காங்கிரசின் சரித்திரம் இருக்கும் என்று வாதாடி வற்புறுத்தினேன். வேண்டுமானால் நீங்கள் பயாக்ரபியா எழுதுங்க எனக்கு ஆட்சேபமில்லை என்றார்.

நான் எழுத்துவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும்.  தங்களை அடிக்கடி வந்து தொந்திரவு செய்வேன் என்றேன்.  வாங்க வாங்க என்றார். சொல்றீங்களா என்றது கேட்டேன்.  சொல்றேண்ணேன் என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப்பட்டுப் போனார்.

நான் விடவில்லை, டில்லிக்குப் போய்  அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவும் அவருக்கு நேரம் சரியாக இருந்தது,  இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

புவனேசுவர் காங்கிரஸுக்கு பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே, அதற்கு முன்னாள் நேருஜியை தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னாரா என்று என் முதல் கேள்வியை தொடங்கினேன்.

புவனேஸ்வருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. சீன ஆக்கிரமிப்புக்கு பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது.  நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான்.  மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட்டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது.  அப்புறம் அவரால் விமான கூடத்துக்கு காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது.  அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலிகாப்டரில் போய் அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானார்.  அதற்குப் பிறகு நானும், சாஸ்திரியும் விசாகப்பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம்.  அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட்டார்.  நான் சென்னைக்கு திரும்பி விட்டேன். 

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னை கூப்பிட்டு அனுப்பினார்.  மந்திரி பதவியில் இருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னை கலந்து ஆலோசித்தார்.  அப்போது வேறு சில மந்திரிகளும் விலகி இருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது.  நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன்.

இந்திராவைப் பற்றி பினனால் பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார் நேரு.

அப்போது அவர் சொன்னது என் மனத்திலே இருந்துகொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா மந்திரியாக வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக்குமோ என்னவோ?  அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை.  நானாகவே ஊகித்துக் கொண்டேன்.

நேரு இறக்கும்போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தீர்களா ?

இல்லை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியில் இருந்து சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.  எழுந்து போயிப் பேசினேன்.  நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வருபடி சாஸ்திரி என்னிடம் சொன்னார்.  நான் அடுத்த விமானத்தில் உடனே டில்லி பறந்தேன். போகும்போது விமானத்திலேயே பகல் 2 மணிக்கு நேரு இறந்து விட்டார் என்று செய்தி சொன்னார்கள்.  நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே பிரசிடெண்ட் ராதாகிருஷ்ணன் நந்தாவைத் தாற்காலிகாப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.  ஜே. ராஜகோபாலனும், வேறு சில நண்பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள். 

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேசவில்லை. பிறகு எல்லோரையும் தனித்தனியே அழைத்து பேசினேன்.  என் மனதில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  தாம் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது.  அவரிடமும் நான் பேசினேன்.  எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது என்றேன்.  அவர், இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு என் பேச்சை ஒப்புக் கொண்டுவிட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாக தேர்ந்தெடுப்பது சுலபமாயிற்று.

பார்லிமென்டரி காங்கிரஸ் கட்ச்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் 2ம் தேதி பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.  பார்லிமென்ட் மெம்பர்கள், முதல் அமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும் தூதவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்தார்கள்.  அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்து இருந்தார்கள்.

நேருஜியை போன்ற ஒரு தலைவர் இனிக் கிடப்பது அசாத்தியம்.  இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது.  கூட்டாகப் பொறுப்பேற்று, கூட்டுத்தலைமையின் கீழ் கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும்.  கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்து இருக்கிறோம்.  நேருஜி நமது மாபெரும் தலைவராயிருந்ததால், அவரிடம் இருந்த நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள்.  இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றேன்.

சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியை பிரதமாராக்கியதும் தாங்கள் தானே என்று கேட்டேன்.  ஆமாம், நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன்.  அது ஒரு கதை, அப்புறம் சொல்கிறேன் என்றார். 

(தொடரும்) 


Tuesday, May 17, 2022

காணாமல் போகும் உறவுகள்.

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை.

இருபது வருடங்கள் முன்னாடி அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை.

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம் என்று வாழ்ந்த போது அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது. அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை.

என்னங்க ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

உனக்கென்னப்பா, பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

இப்போதுதான் இறந்தாராம் என்கிறார்கள்.

எப்படி நான் நம்புவது ??

நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்.

இல்லையேல்

உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல வாழ வைப்பதும் தான் 

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை.

பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது.

எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்... காரணம்., நகரவாழ் பெரியோர்கள் கூறுவது போல இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள் ? ஒவ்வொரு பெண்ணும், சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப் பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை.

அந்த குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக் குடித்தனமோ சென்று விட்டால் ?

வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த  குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்.

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலை தான். 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப் போகிறார்கள் ? வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன்  உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா ? இவ்வளவு பாடு பட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள் ?

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்.

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த உண்மை‌‌ இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் புரிவதில்லை.

இதன் தாக்கம் இனி வரும் பல தலைமுறைகளை மிகவும் பயங்கரமாக பாதிக்கும் என்பதுதான் யதார்த்தம்.

யாராலும் மாற்ற இயலாத காலத்தின் கட்டாயம்.

Thursday, May 05, 2022

மேரேஜ் மேட்சிங் சென்டர்

சென்னையில் ஒரு மேரேஜ் மேட்சிங் சென்டர் நடத்தி வரும் நண்பரிடம் அறிந்த அதிர்ச்சி செய்தி..

இவரது மேரேஜ் சென்டரில் இதை ஆரம்பித்த 14 வருடங்களாக பெற்றோர்களை நேராக வரச்செய்து பதிவு செய்யும் முறையை ரொம்பவும் ஸ்ட்ரிக்டாக வைத்து இருக்கிறார். 

அவர் கூறுகிறார்:

சமயங்களில் பெண், பையன்களையும் நேராக ஆபீஸிற்கு வரச் சொல்லி பேசிப் பார்ப்பேன்.

பெண்கள், பையன்களுக்கு அன்றைக்கிருந்த மனநிலைக்கும், தற்போது இருக்கும் மனநிலைக்கும் தான் எத்தனை வேறுபாடுகள் தெரியுமா?

உதாரணமாக சமீபத்தில் தன் பெண்ணுக்கு வரன் ரிஜிஸ்டர் செய்ய வந்த பெண்ணின் தாயார் சொன்னது இது...

‘‘போன மாசம் எங்க பெண்ணுக்கு ஒரு இடம் பார்த்து நிச்சயம் பண்ணினோம். நாலு மாசம் கழிச்சு கல்யாண தேதி குறிச்சிருந்தோம். ஃபோன்லே பேசிக்கிட்டதிலே அந்தப் பையன் பேச்சு எங்க பொண்ணுக்கு பிடிக்காம போச்சு. இந்தக் கல்யாணமே வேண்டாம்னுட்டா..

நாங்களும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் முடியாமத்தான் மறுபடி ரிஜிஸ்டர் செய்ய வந்தோம்’’ என்றார்கள் அந்தப் பெற்றோர்.

‘‘அந்தப் பையன் அப்படி என்னதான் பேசினாராம்!’’

வேறொண்ணுமில்லை வீட்டிலே ‘குக்’ இருக்கான்னு எங்க பொண்ணு கேட்டிருக்கா. 

அதுக்கு அந்தப் பையன் ‘குக் இருக்கு. ஆனா அவ லீவு போட்டா நீ ஏதாவது செய்யறாப்லே இருக்கும்’னு சொல்லி இருக்கான். 

அது எங்க பொண்ணுக்குப் பிடிக்கலே. ‘குக் லீவு போட்டா எங்க அம்மா பார்த்துக்கு வாங்க’ன்னு சொல்ல வேண்டியதுதானே, நான் செய்யணும்னு ஏன் எதிர்பார்க்கறான்? இன்ன கம்பெனியிலே வேலை பார்த்து இவ்வளவு ஆயிரம் சம்பாதிக்கிறேன். எங்கிட்டேயே இவ்வளவு(!) பேசறான். சமைக்கணுமாம், காஃபி போடணுமாம்னா பேசாம கிராமத்திலே போய் படிக்காத பெண்ணைப் பார்க்க வேண்டியதுதானே’ன்னு கேட்கறா. அவ சொல்றதும் எங்களுக்கும் நியாயமா(!)படுது’’ என்று தன் பெண்ணின் மனநிலை தெரிந்தும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் அந்த அம்மா!...

அடுத்து ஃபைல் பார்க்க வந்த பெண்ணுக்கு வயது 32 இருக்கும். ‘‘நீங்க கொடுத்த அந்த ஜாதகம் பொருந்தி வந்ததுன்னு அப்பா, அந்தப் பையனோட செல் நம்பர் கொடுத்தார்.

பேசிப் பார்த்தேன். ஆனா சரிப்பட்டு வரமாட்டான்னு தோணுது. (மாட்டார் என்பதெல்லாம் இப்போது இல்லை)

என்ன விசயம் என்ற கேட்ட போது, நேத்து நான் மூவி போனேன்னு அவன்கிட்டே சொன்னேன். ‘யார்கூட போனே?’ன்னு கேட்டான். 

இந்த மாதிரி கேட்கக் கூடாதுங்கிற மேனர்ஸ் கூடத் தெரியலே! ஐ வாண்ட் மை ஸ்பேஸ். 

எனக்கு ரொம்ப ப்ராட் மைண்டட் பையன்தான் மேடம் ஒத்து வருவான்!’’ என்று வேகமாகப் பேசினாள் அந்தப் பெண்.

இது மட்டுமல்ல... இதுபோல் எத்தனையோ விதமான டயலாக்குகளை நான் கேட்டு வருகிறேன்.

‘‘எனக்கு லைஃப்லேயே பிடிக்காத வார்த்தை "காம்ப்ரமைஸ்" நான் எதுக்காக காம்ப்ரமைஸ் பண்ணிக்கணும். அப்படி ஒரு லைஃப் எனக்குத் தேவையே இல்லை’’ என்றாள் ஒரு பெண். அவளும் 30 வயதை நெருங்குகிறாள்....

ஒரு பெற்றோரே வந்து சொன்ன விஷயம் இது.... ‘‘எங்க பொண்ணு அட்ஜஸ்ட்டபிள் டைப் இல்லே. அதை இப்பவே சொல்லிடறோம்.

அதனால பேரண்ட்ஸ் இல்லாத இடமா ஏதாவது இருக்கான்னு பாருங்க.... அல்லது வெளியூரிலே குடும்பம் இருந்து பையன் மட்டும் இங்கே வேலை பார்க்குற மாதிரி பையன் இருக்கா?’’ என்றார்கள்...

இன்னொரு பெற்றோர் ரொம்பத் தெளிவாகச் சொன்னார்கள்... ‘‘எங்க பொண்ணு சமைப்பாள்னு எதிர்பார்க்க வேண்டாம். 

அவளுக்கு காஃபி கலக்க கூடத் தெரியாது.’’ இதைச் சொல்லிடுங்க முதல்ல! என்றார்கள்.

‘‘எங்க பொண்ணு மூட் வந்தா நல்லாவே குக் பண்ணுவா. அவளுக்கு சமைக்கத் தெரியும். ஆனா சமைக்கப் பிடிக்காது’’ என்று பெருமையாக சொல்லும் பெற்றோர்...

‘‘எங்க பொண்ணு ரொம்பவே இன்டிபெண்டண்ட். அவளை யாராவது ஏதாவது கேள்வி கேட்டாலே பிடிக்காது’’ என்று சொல்லும் பெற்றோர்.

‘‘எங்க பொண்ணுக்கு கடவுள் நம்பிக்கை சுத்தமா கிடையாது. இதை பையன் வீட்டிலே சொல்லிடுங்க. 

அவங்க விளக்கு... கிளக்கு ஏத்தச் சொல்லப் போறாங்க. அப்புறம் ‘மூட் அவுட்’ ஆயிடுவா’’ என்று தகவல் தரும் பெற்றோர்...

இதையெல்லாம் பார்க்கும் போது திருமணத்தைப் பொறுத்தவரை இன்றைய இளம் பெண்களின் சிந்தனை எவ்வளவு மாறிப் போயிருக்கிறது என்று புரிந்து கொள்ள முடிகிறது.

வரனுக்காக ரிஜிஸ்டர் செய்துவிட்டுப் போனால்கூட, பையன் வீட்டினர்தான் திரும்ப போன் அடித்துக் கூப்பிட்டு ‘வரன் ஏதாவது வந்திருக்கா? என்று பொறுப்பாக திரும்ப கேட்கிறார்கள். 

பெண் வீட்டினருக்கு நானே போன் போட்டு பேசினால்கூட...

பொண்ணு ஃப்ரைடேதான் வருவா... சண்டேதான் பேசணும்... சும்மா பேசினா மூட் அவுட் ஆயிடுவா... அப்புறம் இந்த வீக் எண்டே வேஸ்டா போயிடும் என்பார்கள். 

இன்னும் சிலர் ‘‘நீங்களே என் பொண்ணுகிட்டே பேசி அவ மைண்ட்ல என்ன இருக்குன்னு தெரிஞ்சுக்குங்களேன்...!’’ என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள்.

இன்று திருமணம் குறித்த பெண்களின் எதிர்பார்ப்பு டோட்டலாக மாறிவிட்டது...

‘இவர்தான் இனி நம் வாழ்க்கை... என் சந்தோஷமோ துக்கமோ இவர் கூடத்தான்!...’ என்று தன் வருங்காலத் துணையை தன் ‘பாதுகாப்பாக’ நினைக்கும் மனோபாவம் முற்றிலுமாகப் போய் விட்டது.

‘‘இன்று லைஃப்ல எனக்குன்னு நான் ஒரு செக்யூரிட்டி ஏற்படுத்திட்டுதான் கல்யாணத்துக்கு ஓ.கே. சொல்வேன்!’’ என்று சொல்கிறார்கள் பெண்கள்.

பெரும்பாலான பெண்கள் திருமணத்தைத் தள்ளிப் போடச் சொல்லும் காரணமே, இந்த ‘செக்யூரிடி’தான்.

‘‘ஒரு ஃப்ளாட் புக் பண்ணிட்டேன்... அதுக்கான கமிட்மெண்ட்ஸ் கொஞ்சம் இருக்கு... என்ன இருந்தாலும் எனக்குன்னு ஒரு செக்யூரிடி வேணும்!...’’ என்கிறார்கள்.

தவிர இப்போது பல பெண்கள் வேலை, புராஜெக்ட் என்று வெளியூர், வெளிநாடுகளுக்கு போய்விட்டு வருவது சகஜமாகி விட்டது.

அங்குள்ள வாழ்க்கை, வசதி, சுதந்திர மனப்பான்மை இவற்றை அப்படியே பிடித்துக்கொண்டு நம் கலாச்சாரத்திலும் அதை அப்படியே பிரதிபலிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்...

தன்னை யாரும் பேச்சில்கூட கட்டுப்படுத்தக்கூடாது என்றும் தாம் சுதந்திரமாக இருக்க எந்த தடையுமே இருக்க  கூடாது என்று நினைக்கிறார்கள்.

உதாரணமாக சினிமாவுக்கு யாருடன் போனே? என்று கேட்ட பையனை நிராகரித்த பெண்!...அப்பாவுடன், அம்மாவுடன், தோழிகளுடன் என்று பதில் சொல்வதை கூட அவர்கள் விரும்புவதில்லை.

சொல்லப் போனால் இப்போதெல்லாம் பெண்ணைப் பெற்ற (ஒரு சில) பெற்றோரின் மனப்பான்மை கூட மாறி விட்டது...

‘ஐயோ... பொண்ணுக்கு இருபத்தி ஐந்தாச்சே... கல்யாணம் பண்ணிக் கொடுக்கணுமே!’ என்று பெற்றோர் கவலைப்பட்ட காலம் போய், இப்போது 29, 30 ஆனாலும் கூட வற்புறுத்த மாட்டேன் என்கிறார்கள். சிலர் இன்னும் ஓரிரு வருடங்கள் பெண் இருந்தால் வீட்டு கமிட்மெண்ட்ஸ் எல்லாம் முடித்துவிட்டு நாமும் கொஞ்சம் வாழ்க்கையை என்ஜாய் பண்ணலாம்!’’ என்று பேசாமல் இருந்து விடுகிறார்கள்.

அனைவரையும் சொல்லவில்லை... ஒருசில பர்சன்டேஜ்தான்!...

இன்றைய பெண்களிடம் ‘இது நிச்சயம் ஒரு வெற்றிகரமான திருமணமாக அமையும்!’ என்ற நம்பிக்கை இல்லை.

நல்ல படிப்பு, நல்ல நிறுவனத்தில் வேலை, சுறுசுறுப்பான பையன் இதுபோன்ற அஸ்திவாரங்கள் நன்றாக இருக்கிறது.

என் எதிர்கால மணவாழ்க்கை 40, 50 வயதுகளிலும் சிறப்பாகவே இருக்கும் என்று நினைக்காமல் ‘ஹைட் 2 இன்ச் கூடுதலாக எதிர்பார்க்கிறேன். கலர் கொஞ்சம் பத்தாது’ என்று தான் எடுக்கப்போகும் திரைப்படத்திற்கு ஹீரோ செலக்ட் பண்ணும் பாணியில் கணவரை செலக்ட் பண்ணுவது.

தனக்கு வரப் போகும் கணவர் இந்த மாதிரி நல்ல படிப்பு படித்து, வேலையில் இருக்கிறார், நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால்..

அதற்கு அவரது பெற்றோர்களின் பொறுமை, தியாகம், அன்பு காரணம் என்கிற அடிப்படை உண்மையை மறந்துவிட்ட மாதிரியாய், ‘பேரண்ட்ஸ் கூட இருந்தா சரியா வராது’ என்று பேசுவது.

இவ்வாறெல்லாம் சிந்தித்து வயசு கூடிக் கொண்டே போய் திருமணம் முடிப்பதால் இவர்கள் வாழ்க்கையில் இழப்பது என்னென்ன தெரியுமா?

பெற்றோருக்கும் வயது ஏறிக்கொண்டே போவதால் அவர்களுக்கும் 70 வயதுக்கு மேல் ஆகி உடல்நலக் குறைவால் அவதிப்படுவது. 

வயது காலத்தில் பெற்றோர் ஆதரவில் சீரும் சிறப்புமாக நடக்க வேண்டிய திருமணத்தை பெற்றோரின் வயோதிகம் அல்லது இழப்பு காரணமாய் தானே நடத்திக் கொள்ள வேண்டிய நிலை.

கருத்தரிக்க வேண்டிய வயது தாண்டி விடுவதால் ஒரு குழந்தையை கண்ணால் பார்க்க...

கருத்தரிப்பு மையம், மருத்துவர், மருத்துவப் பரிசோதனை என்று அலைச்சலுக்கு அலைச்சல், மன உளைச்சல், செலவுக்கு செலவு போன்ற துன்பங்களுக்கு ஆளாதல்.

படிக்க வைத்து ஆளாக்கி நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டிய நேரத்திலிருக்கும் 60 +வயது பெற்றோர்கள் மகளின் திருமணத் தடையால் ஒருவித குற்ற உணர்விற்கு ஆளான மாதிரி உறவினர் நண்பர்களை ஒதுக்கி தனிமைப்பட்டு மன உளைச்சலால் பாதிப்பிற்கு உள்ளாகிறார்கள்.

இதனால் பெற்றோரின் சந்தோஷத்தை, நிம்மதியான வயோதிக வாழ்க்கையை அனுபவிப்பதைப் பார்க்கும் வாய்ப்பையே இந்தப் பெண்கள் இழக்கிறார்கள்.

முதலில் தன்னை முழுமையாக நம்பி, தன் மீது நம்பிக்கை வைத்த குடும்பத்தை, கணவரை நம்பி, தெய்வபலம் துணை நிற்கும் என்று உறுதியாக நினைத்து 20 - 24 வயதுகளில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் நிச்சயமாக வெற்றிகரமான மணவாழ்க்கை வாழ்வார்கள் என்பதில் சந்தேகமில்லை!

நமது பிள்ளைகளுக்கு நல்ல கருத்துக்களை எடுத்துரைப்போம்!

Saturday, April 16, 2022

ஏடிஎம் கார்டின் இன்சூரன்ஸ்

வங்கி சேமிப்பு கணக்கிற்குத்தான் காப்பீடு  இருக்குன்னு  கேள்வி பட்டிருக்கிறோம் ஒரு நண்பர் ஏடிஎம் கார்டிற்கும் காப்பீடு இருப்பதாக ஒரு பதிவை அனுப்பியுள்ளார். உங்கள்  பயன்பாட்டிற்கு பகிர்கிறேன்

கட்டாயம் அனைவரும் அறிந்திருக்க வேண்டிய தகவல் இது.

சாலைவிபத்தில் படுகாயம் அடைந்தாலோ,  உயிரிழப்பு ஏற்ப்பட்டாலோ சம்மந்தப்பட்டவர்கள் வைத்து இருக்கும் ஏடிஎம் கார்டின் மூலமாக இன்சூரன்ஸ் தொகை கிடைக்கும் என்பது தான் அது.

டெபிட்கார்டு கிளாசிக்,  பிளாட்டிணம் இந்த வகையை பொருத்து ஒரு லட்சம் முதல் பத்து லட்சம் வரை நாம் காப்பீட்டு நிவாரணமாக பெறமுடியும்.

நண்பருடைய தங்கை சாலை விபத்தில் மரணமடைந்து தற்போது இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

நண்பர் தங்கை மரணமடைந்த சுமார் ஆறுமாதங்களுக்கு பின் தான் இப்படிபட்ட ஒரு காப்பீடு இருப்பதை நான் அறிந்தேன்.

உடனடியாக வங்கி கிளைக்கு சென்று அதற்க்குறிய ஆவணங்களை கொடுத்து அந்த காப்பீட்டு தொகைக்கு விண்ணப்பித்தோம்.

சில மாதங்கள் சென்று அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிந்தேன்.

உடனடியாக வங்கி கிளைக்கு சென்று வங்கி மேளாளரிடம் இதுபற்றி கேட்டபோது, விபத்தில் மரணமடைந்த மூன்று மாதங்களுக்கு ள் விண்ணப்பிக்க வேண்டும் இதுதான் விதிமுறை. ஆனால் நீங்கள் சுமார் ஆறு மாதங்கள் கழித்து விண்ணப்பித்ததால் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று மேளாளர் கூறினார்.

உடனே நான் என் தங்கை இறந்த ஒரு மாதத்திற்க்குள் நான் வங்கிக்கு வந்து நகைக்கடனோ அல்லது பிரதமமந்திரி காப்பீட்டு திட்டமோ தங்கை பெயரில் உள்ளதா என்று கேட்டேன். அதையெல்லாம் செக்செய்து பார்த்துவிட்டு இல்லையென்று சொன்ன நீங்கள் இந்த காப்பீடு திட்டத்தை பற்றி கூறவில்லையே. கூறியிருந்தால் அப்போதே விண்ணப்பித்து இருப்போமே. 

இந்த ஏடிஎம் காப்பீடு பற்றி அறிந்த நீங்கள் உங்கள் வங்கி வாடிக்கையாளர் ஒருவர் விபத்தில் மரணமடைந்தார் என்று உங்களிடம் நான் சொல்லும் போது இந்த காப்பீடு பற்றி கூறியிருக்கலாம். ஆனால் கூறாமல் விட்டுவிட்டீர்கள்.

இந்த காப்பீடு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்க்கு முதல் காரணம் விசயம் அறிந்த நீங்கள் எங்களிடம் சொல்லாதது தான் என்று அவரிடம் விவாதித்தேன்.

அதற்க்கு அப்போது சரியான பதில் ஏதும் கூறாமல் சப்பைகட்டு கட்டினார்.

இந்த சம்பவம் குறித்த விழிப்புணர்வு பதிவை நான் அப்போது முகநூலில் பதிந்தேன். அந்த பதிவு பரவலாக வலைதளங்களில் பகிரப்பட்டது.

பின்னர் முகநூல் நண்பர்களின் ஆலோசனையின் படி ரிசர்வ் பேங்க்கின் ஓப்பட்ஸ்மேன் பற்றி அறிந்து அதில் புகாராக கொடுத்தேன்.

அதில் ஏடிஎம் கார்டு இன்சூரன்ஸ் பற்றி எங்களுக்கு தெரியாது. தங்கை இறந்த ஒருமாதத்தில் அந்த தகவலை வங்கி மேளாளரிடம் தெரிவித்தும் அவரும் இப்படியொரு விசயம் இருப்பதை சொல்லாமல் விட்டுவிட்டார். 

அதனால் தான் பின்னர் அது பற்றி தெரியவந்து அதன் பிறகு விண்ணப்பித்தோம்.

ஆனால் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பிக்கவில்லை என்று விண்ணப்பம் இன்சூரன்ஸ் துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

திருமணவயதில் உள்ள தங்கையின் மகளுக்கு இந்த இன்சூரன்ஸ் தொகை கிடைத்தால் பெரும் உதவியாக இருக்கும் அதனால் இந்த தொகை கிடைக்க உதவுங்கள் என்று புகார்மனுவாக பேங்கிங் ஓப்பட்ஸ்மேனுக்கு விண்ணப்பித்தோம். 

கிட்டத்தட்ட புகார் கொடுத்து பத்துமாதங்கள் இருக்கும் ஒருநாள் தொலைபேசி அழைப்பு வர எடுத்து பேசினேன்.

பெண் ஒருவர் பேசினார் நாங்கள் ரிசர்வ் பேங்க் ஓம்பட்ஸ்தானில் இருந்து பேசுகிறேன் என்று கூறி விபத்து நடந்தது முதல் அநேக விபரங்களை கேட்டார்கள் நானும் பதில் அளித்தேன். இறுதியில் அந்த அதிகாரியும் நீங்கள் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பித்து இருக்க வேண்டியது தானே என்று கேட்டார்.

நான் எங்களுக்கு அதுபோன்ற காப்பீடு இருப்பது தெரியாது.

வங்கி மேலாளரை தங்கை இறந்த ஒரு மாதத்தில் சென்று சந்தித்து இறந்த விசயத்தை கூறி வேறு காப்பீடோ கடனோ இருக்கின்றதா என்று கேட்டபோது இல்லையென்று சொன்னவர் இந்த காப்பீடு பற்றி கூறியிருக்கலாமே. அவர் கூறவில்லை. 

இது பாதிக்கப்பட்ட வங்கி வாடிக்கையாளருக்கு செய்த சேவை குறைபாடு தானே மேடம் என்றேன். 

மேலும் எந்த வங்கியிலும் இந்த ஏடிஎம் கார்டு காப்பீடு பற்றிய விசயத்தை கூறுவதே இல்லை.

இது பற்றிய செய்தியை லோன்மேளா விளம்பர பேனர்களுக்கு மத்தியில் இந்த காப்பீடுபற்றிய விசயத்தை காட்சிப்படுத்தி வைத்தால் அநேகருக்கு பயன் உள்ளதாக இருக்கும். 

எனவே இந்த காப்பீடு பற்றிய தகவல்களை வங்கி வாடிக்கையாளர்கள் தெரிந்து கொள்ளும் விதமாக காட்சிப்படுத்த வங்கிகளுக்கு அறிவுறுத்துங்கள் என்று கூறினேன்.

அதற்கு அந்த பெண் அதிகாரி சரிங்க சார் அதுபோல் செய்யசொல்லலாம் என்றார். மேலும் அவரிடம் காப்பீடு தொகை கிடைக்குமா என்று கேட்டதற்க்கு நீங்கள் அந்த காப்பீட்டு நிறுவனத்தை தொடர்பு கொண்டு கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறி இணைப்பை துண்டித்தார்.

பின்னர் கடந்த நான்கு மாதத்திற்க்கு பிறகு அந்த வங்கி மேளாளர் என்னை தொடர்பு கொண்டார்.

மீண்டும் நீங்கள் கொடுத்த ஆவணங்களை திரும்ப கொடுங்கள் மறுபடியும் விண்ணப்பிக்கலாம் என்று கூற மீண்டும் ஆவணங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு பல்லடம் சென்று சமர்ப்பித்தேன்.

ஆவணங்களை வாங்கிய மேளாளர் இந்த மேல்முறையீடு விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்படலாம், அல்லது ஏற்றுக் கொள்ளப்படாமலும் போகலாம் இது ஒரு முயற்சி மட்டுமே என்று கூறினார்.

அப்போது அவரிடம் ஓப்பட்மேன் பற்றி கேட்க அவர் ஏனுங்க நீங்க நான் தகவல் சொல்லாததால் தான் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது சொல்லியிருக்கிங்கனு சொல்லவும்.

அது தானே சார் உண்மைனு சொல்லிட்டு நான் கிளம்பினேன்.

அப்போது ரிசர்வ் பேங்க் ஓப்பட்மேனில் இருந்து இவரையும் விசாரித்து இருப்பார்கள் போல அதனால்தான் இவராகவே நம்மை அழைத்து மேல் முறையீடு செய்ய அழைத்து இருக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

அவ்வப்போது போன் செய்து சார் ஏதாச்சும் தகவல் வந்ததா என்று விசாரிப்பேன். ஒருபத்து நாட்களுக்கு முன்பு கூட நேரில் சென்று கேட்டேன்.

தகவல் ரிப்ளே வந்தால் கண்டிப்பாக நான் உங்களை கூப்பிட்டு பேசுகிறேன். இந்த தொகை கிடைச்சாலும் கிடைக்கும் இல்லைனாலும் இல்லைனு சொன்னார். 

சரிங்க சார் விடாம முயற்சி பண்ணுறோம் கிடைச்சா பெரிய உதவியா இருக்கும்னு சொல்லிட்டு வந்தேன்.

இன்னிக்கு மதியம் பாப்பா போன் பண்ணுச்சு மாமா என்னோட செல்லுக்கு ஒரு மெஜேஸ் வந்துருக்கு

ஒரு லட்சம் கிரிடிட் ஆனதாகனு சொன்னாள்.

உடனே நான் இப்போதைக்கு பணம் கிரிடிட் ஆகுதுனா அந்த ஏடிஎம் கார்டு இன்சூரன்ஸ் ஆகதான் இருக்க வேண்டூம். நான் பேங்க் மேனேஜரிடம் கேட்டு சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு பேங்க் மேனேஜரை அழைத்தேன் .

விபரம் சொல்லவும் அப்படியா நான் மெயில் செக்பண்ணிட்டு இன்சூரன்ஸ் ஆபீஸ்ல பேசிட்டு அழைக்கிறேன் என்று போனை கட்செய்தார்.

சற்று நேரம் கழித்து பேங்க் மேனேஜர் அழைத்தார். ஆமாங்க அது அந்த ஏடிஎம் இன்சூரன்ஸ் பணம்தான் கிரிடிட் ஆகியிருக்குனு சொன்னார்.

உடனே அடுத்த நொடி அவரிடம் சார் ரொம்ப ரொம்ப நன்றினு சொல்ல, பரவாயில்லைங்க நீங்க விண்ணப்பம் நிராரிக்கப்பட்டதோடு நிற்க்காமல்  மேல்முறையீடு விண்ணப்பம் அது இதுனு ஓப்பட்ஸ்மேன் அப்படினு அழைஞ்சி திரிஞ்சு விடாப்பிடியா இருந்திங்க அதனால இந்த தொகை கிடைச்சுருக்குனு சொன்னார்.

ஆமா சார் இந்த பணம் இப்போ இருக்கும் சூழ்நிலையில் பயன்உள்ளதாக இருக்கும்சார் உங்களுக்கும்,  ரிசர்வ் பேங்க் ஒப்பட்ஸ்மேனுக்கும் நன்றி என்று கூறி போனை வைத்தேன்.

அன்பான நண்பர்களே

ஒருவருடைய இழப்பு என்பது ஈடு செய்யமுடியாதது தான். இருந்தாலும் கஷ்ட்டப்படும் குடும்பத்தில் உள்ள முக்கிய உறுப்பினர் விபத்தில் இறந்தால் அது பேரிழப்பு தான்.

அந்த பேரிழப்பின் மத்தியில் இது போன்ற நிவாரணதொகை என்பது கொஞ்சம் அவர்களை தாங்கிப் பிடிக்கும் ஒரு ஊன்றுகோலாய் இருக்கும் என்பது உண்மைதான்.

இதுபோன்ற விபத்து மரணங்கள் நமக்கு தெரிந்த வட்டாரங்களில் நடந்தால் இந்த ஏடிஎம் காப்பீடு பற்றி தெரிய செய்து மூன்று மாதங்களுக்குள் முறையான ஆவணங்களை சமர்பித்து அந்த காப்பீட்டு பலனை பெற்றுக்கொள்ளலாம்.

இதுபோன்ற நிகழ்வுநடந்தால் சம்மந்தப்பட்டவர்கள் அந்த துக்கநிகழ்வில் இருந்து மீண்டுவர காலங்கள் ஆகும். ஆகையால் அவர்களின் நண்பர்களோ, உறவுகளோ, அவர்களின் நலன் விரும்பிகளோ இந்த விசயத்தை செய்ய உதவுங்கள்.

1) முதலில் இறந்த நபரின் வங்கிகணக்கு புத்தகம் மற்றும் டெபிட் கார்டை வங்கிகிளைக்கு எடுத்து சென்று இறந்தவர் பற்றிய விபரங்களை கூற வேண்டும்.

2) இறப்பு செய்தியை அவர்களிடம் தெரிவித்தற்ககான Acknowledgement வாங்கிக் கொள்ளுங்கள்.

3) இறந்த நபர் இறந்த தேதிக்கு முன்பான தொன்னூறு நாட்களுக்குள் ஏதாவது ஒரு பரிவர்த்தணையை டெபிட்கார்டு மூலம் செய்துள்ளாரா என்பதை வங்கிமூலமாக உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.*

4) வாரிசு சான்றிதழ், இறப்பு சான்றிதழ்,  மற்றும் விபத்து மரணத்திற்க்குண்டான பிரேத பரிசோதனை அறிக்கை, FIR காப்பி நகல், மற்றும் முதன்மை வாரிசுதாரரின் வங்கிக்கணக்கு புத்தகநகல், மற்றும் பான்கார்டு நகல் இவைகளை துரிதமாக வாங்கவும். காலதாமதம் நிச்சயமாக ஆகும். அப்படிப்பட்ட பட்சத்தில் வங்கி மேளாளரை சந்தித்து எந்த ஆவணம் வர தாமதம் ஆகிறதோ அதை தெரியப்படுத்திக் கொள்ளவும்.

5) சம்மந்தப்பட்ட காப்பீட்டு கம்பெணியின் இழப்பீடு பெறுவதற்கான விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து மேலேசொன்ன ஆவணங்கள் அனைத்தையும் இணைத்து, வங்கி மேளாளரிடம் கொடுத்து அதற்கும் ஒரு Acknowledgement வாங்கி வைத்துக்கொள்ளவும்.

6) முடிந்தவரை அவர்கள் கூறும் மூன்று மாதத்திற்க்குள் விண்ணப்பிக்கவும்.

அவரவர் கார்டின் தன்மையை பொறுத்து  ஒரு லட்சரூபாய் முதல் பத்து லட்சரூபாய் வரை இழப்பீடாக பெறலாம்.

விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால் ரிசர்வ் பேங்க் ஓப்பட்ஸ்மேனுக்கு புகாரை ஆன்லைன் வழியாக தெரிவிக்கலாம். காலதாமதம் ஆனாலும் நமக்குரிய நிவாரணத்தைப் பெற அவர்கள் தூண்டு கோலாய் இருக்கிறார்கள் என்பது நான் கண்ட நிதர்சனம்.

நன்றி: ரிசர்வ் பேங்க்!

Monday, March 21, 2022

டாக்டர்களின் எதிரி வேர்க்கடலை

மல்லாட்டை... 

கல்லக்கா..

வேர்க்கடலை..

நிலக்கடலை...

டாக்டர்களின் எதிரி யார்?

நிலக்கடலை தான்.

சூழ்ச்சியறியா மக்களும் நிலக்கடலையும்.

நிலக்கடலை_சர்க்கரயைகொல்லும்.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அது கொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகு எலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

நிலக்கடலை செடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ள பறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்ல உதாரணம்.

நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்.

நீரழிவு நோயை தடுக்கும்:

நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. மாங்கனீஸ் சத்துமாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

பித்தப் பை கல்லைக் கரைக்கும்:

நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்கு தினமும் சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 வருடம் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் தெரியவந்துள்ளது.

இதயம் காக்கும்:

நிலக் கடலை சாப்பிட்டால் எடை போடும் என்று நாம் நினைக்கிறோம். உண்மையல்ல. மாறாக உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது. இதுவே மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாக திகழ்கிறது.

இளமையை பராமரிக்கும்

இது இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. நிலக்கடலையில் பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் உள்ளது. இது நமக்கு நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது.

ஞாபக சக்தி அதிகரிக்கும்:

நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு நல்ல டானிக் போன்றது. நிலக்கடலையில் மூளை வளர்ச்சிக்கு பயன்படும் விட்டமின் 3 நியாசின் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கும் ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனளிக்கிறது. ரத்த ஓட்டத்தையும் சீராக்குகிறது.

மன அழுத்தம் போக்கும்:

நிலக்கடையில் பரிப்டோபான் என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட் டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும். உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. செரட்டோனின் மூளை நரம்புகளை தூண்டுகிறது. மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிடுவோருக்கு மன அழுத்தத்தைப் போக்குகிறது.

கொழுப்பை குறைக்கும்:

தலைப்பை படிப்பவர்களுக்கு ஆச்சரியம் ஏற்படலாம். ஆனால் அதுதான் உண்மை. நிலக்கடலை சாப்பிட்டால் கொழுப்பு சத்து அதிகமாகும் என்று நம்மில் பலரும் நினைத்திருப்போம். ஆனால் அதில் உண்மையில்லை. மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் நிலக்கடலையில்உள்ளது. 

நிலக்கடலையில் உள்ள தாமிரம் மற்றும் துத்தநாக சத்தானது நமது உடலின் தீமை செய்யும் கொழுப்பை குறைத்து நன்மை செய்யும் கொழுப்பை அதிகமாக்குகிறது. 100 கிராம் நிலக்கடலையில் 24 கிராம்மோனோ அன் சாச்சுரேட்டேட் வகை கொழுப்பு உள்ளது. பாலிஅன்சாச்சுரேட்டேடு 16 கிராம் உள்ளது.

இந்த இருவகை கொழுப்புமே நமது உடம்புக்கு நன்மை செய்யும் கொழுப்பாகும். பாதாமை விட நிலக்கடலையில் நன்மை செய்யும் கொழுப்பு அதிகமாக உள்ளது. நிலக்கடலையில் உள்ள ஒமேகா-3 சத்தானது நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

அமெரிக்கர்களை கவர்ந்த நிலக்கடலை:

உலக அளவில் சீனாவிற்கு அடுத்து இந்தியாவில்தான் நிலக்கடலை அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்விரு நாடுகளின் மக்கள்பெருக்கத்திற்கும் நிலக்கடலை முக்கிய காரணமாகும். இந்தியாவில் குழந்தைப் பேறுக்கான மருந்துகளின் விற்பனை வாய்ப்புக்கு நிலக்கடலை உண்ணும் வழக்கம் தடையாக இருக்கிறது மற்றும் சில இதய நோய்க்கான மருந்துகளை விற்பனை செய்ய முடியவில்லை.

எனவே இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்களை பரப்பி நிலக்கடலை மற்றும் நிலக்கடலை எண்ணெய் வகைகளை பயன்படுத்துவதை தடுத்துவிட்டார்கள். இதன் காரணமாக குழந்தையில்லாத தம்பதிகள் பெருகிவிட்டார்கள்.

கடந்த பல வருடமாக இந்தியாவில் நிலக்கடலையின் விலை பெரியமாற்றம் ஏதும் இல்லாமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் இதே கால கட்டத்தில் அமெரிக்கர்களின் உணவில் நிலக்கடலையின் பங்கு 15 மடங்கு கூடி இருப்பதுடன் விலையும் கூடிஇருக்கிறது. இந்தியர்கள் அனைவரும் நிலக்கடலை சாப்பிட ஆரம்பித்தால் அமெரிக்கர்கள் நிலக்கடலை அதிகம் விலை கொடுத்து சாப்பிட வேண்டும் என்று கருதிதான் இந்தியர்களிடம் நிலக்கடலை குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது.

கருப்பை கோளாறுக்கு முற்றுப்புள்ளி:

பெண்களின் இயல்பான ஹார்மோன் வளர்ச்சியை நிலக்கடலை சீராக்குகிறது. இதனால் பெண்களுக்கு விரைவில் குழந்தை பேறு ஏற்படுவதுடன் பெண்களுக்கு ஏற்படும் மார்பகக் கட்டி உண்டாவதையும் தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, விட்டமின்கள், குறுட்டாமிக் அமிலம் நிலக்கடலையில் நிறைந்துள்ளது. இதன் காரணமாக பெண்களுக்கு கருப்பை கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

நிறைந்துள்ள சத்துக்கள்:

100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.

நார்சத்து- 9 மி.கி.

கரையும் கொழுப்பு – 40 மி.கி.

புரதம்- 25 மி.கி.

ட்ரிப்டோபான்- 0.24 கி.

திரியோனின் – 0.85 கி

ஐசோலூசின் – 0.85 மி.கி.

லூசின் – 1.625 மி.கி.

லைசின் – 0.901 கி

குலுட்டாமிக் ஆசிட்- 5 கி

கிளைசின்- 1.512 கி

விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி

கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) – 93.00 மி.கி.

காப்பர் – 11.44 மி.கி.

இரும்புச்சத்து – 4.58 மி.கி.

மெக்னீசியம் – 168.00 மி.கி.

மேங்கனீஸ் – 1.934 மி.கி.

பாஸ்பரஸ் – 376.00 மி.கி.

பொட்டாசியம் – 705.00 மி.கி.

சோடியம் – 18.00 மி.கி.

துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.

தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.

போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.

பாதாம், பிஸ்தாவை விட சிறந்தது:

நாம் எல்லாம் பாதாம், பிஸ்தா, முந்திரிப்பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று கருதுகிறோம். அது தவறு.

நிலக்கடலையில் தான் இவற்றை எல்லாம் விட அளவுக்கதிகமான சத்துக்கள் உள்ளன. நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

பகிருங்கள் பலரும் தெரிந்துகொள்ளட்டும்... கடலை அதிக கொலஸ்ட்ராலை உண்டுபண்ணும் என்ற வதந்தியை பரப்பிவிட்டு, தந்திரமாக நம் சத்தான நாட்டு நிலக்கடலையை வெளிநாட்டினர் அனைத்து உணவிலும் பயன்படுத்தி நலமோடு வாழுகின்றனர்.

Tuesday, March 15, 2022

மகிரிஷி காக புஜண்டர்

நற்பவி என்றால் என்ன?

நற்பவி என்பது மகிரிஷி காக புஜண்டர் அவர்களால் கொடுக்க பட்ட ஒரு அற்புத மூல ஜப மந்திரம்.

இதன் பொருள் 

நற் – நல்லது, 

பவி – பவிக்கட்டும் / உண்டாகட்டும்

என்பதே ஆகும். உலக மக்கள் யாவர்க்கும் நல்லது உண்டாகட்டும் என்ற கருத்தில் உண்டாக்கப்பட்டது.

சுலபமாக தீங்குகள் ஒழிக்கப்பட இது அஸ்திரமாக இருந்து வரும்.

புருவ மத்திக்கும் மேலே உள்ள ஏழு திரைகளை தாண்டி அழியா பேரின்ப நிலையை அடைய "நற்பவி" என்ற மந்திர ஜெபம்  பேருதவியாக இருக்கும் என மகரிஷி காக புஜண்டர் அருளுகின்றார்.

இதை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். கணக்கு கிடையாது. ஆனால் மனம் சலனமடையாமல் ஒருமுகமாக கூற வேண்டும்.

இந்த மந்திரம் ஓம் என்ற பிரணவ மந்திரத்திற்க்கு இணையானது என்பதால் இதை எல்லோரும் கார், வீடுகளில் எழுதி வைத்து பயன்பெற்று கொள்ளலாம்.

மேலும் இது பற்றி கீழே....

படத்திலுள்ள மூலிகை மணி புத்தகம் பக்கத்தில் கூறுப்பட்டுள்ள விளக்கத்தை கவனியுங்கள்.

கருணைமலை காகபுஜண்டர் அருள் வாக்கு " நற்பவி"

இது நிர்விகல்ப சமாதியிலிருந்து கிடைத்த ஒரு மோகன அஸ்திரம்.

இதை சப்தத்தோடு உச்சரிக்க எல்லா தீமைகளும் ஓடோடி போகும் அல்லது ஒடுங்கி போகும்.

இதன் அர்த்தம் நல்லது பலிக்கட்டும் அல்லது நல்லது உண்டாகட்டும் என்பதே!

ஆதலால் இதை உச்சரிப்பவர்களுடைய சொந்த கஷ்டங்கள் மட்டுமின்றி உலக மக்களுடைய கஷ்டங்களும் உடனடியாக விலகி எங்கெங்கும் எவ்வெவர்க்கும் நன்மையே உண்டாகும்.

மேலும் அவரவருடைய உஸ்வாசத்தை புருவ மத்தியிலுள்ள ஏழு சூஷ்ம திரைகளையும் கடந்து  செல்லுமாறு செய்து ஆங்கு பிரம்மரத்தித்திலுள்ள அழியாதனத்தை அடையச்செய்து அழியாததும் மாறததுமான இந்திர போகத்தையும் அளித்துதவும்.

இப்பக்கத்தை சிரமபட்டு தேடி கொடுத்துள்ளேன். இது நிச்சயம் பயன்கொடுக்க கூடியது, முயற்சி செய்து பாருங்கள்.

நற்பவி!நற்பவி!நற்பவி!!!  

என்று சொன்ன ஷணத்தில் இருந்து மகரிஷி காக புஜண்டர் நம் குறைகளை போக்கி அருள்வார் என்பது அவர் வாக்காலேயே அறியப்படுகிறது.

யுகங்கள் மறைந்தாலும், மகா பிரளயத்தினால் உலகமே அழிந்தாலும் தாம் மட்டும் என்றும் மறையாமல், அழியாமல் அனைத்தையும் சாட்சியாய் நோக்கிக் கொண்டிருக்கும் ஒரே மகரிஷி ஸ்ரீ காகபுஜண்ட மகரிஷி மட்டும் தான்.

பல கல்ப கோடி பிரம்மாக்களையும், சிவனையும், விஷ்ணுவையும் பார்த்த பெருமைக்குரியவர். 

நம்பி கை தொழ நம் பாவங்கள் அனைத்தையும் நசிக்க வைப்பவர்.

இதோ அவரை வழிபடும் சில ஸ்லோகங்கள்....

தினம்தோறும் காக்கைக்கு உங்கள் கையால் உணவிட்டு வாருங்கள்.

பாவங்கள் தொலையும். 

நன்மைகள் விளையும்.

நற்பவி! 

நற்பவி! 

நற்பவி!

ஓம் ஸ்ரீ காகபுஜண்டீசுவர சுவாமிநே நம:

ஸ்ரீ காகபுஜண்டர் காயத்ரி.

*******************

  1. ஓம் புஜண்ட தேவாயச

   வித்மஹே,

   த்யான ஸ்தீதாய தீமஹி,

   தந்நோ பகவான்

   ப்ரசோதயாத்.

  2. ஓம் காக ரூபாய

      வித்மஹே

      தண்ட ஹஸ்தாய   

      தீமஹி,

      தந்நோ புஜண்ட           

      ப்ரசோதயாத்.

  3.  ஓம் காக துண்டாய

        வித்மஹே

        சிவசிந்தாய தீமஹி,

        தந்நோ யோகி 

        ப்ரசோதயாத்..

   ஓம் ஸ்ரீ பஹூளாதேவி

   சமேத ஸ்ரீ காக புஜண்ட

   தேவாய நம

ஸ்ரீ காக புஜண்டரின் அருளால் இதனை உள்ளன்போடும் பக்தியோடும் படிப்பவர்கள் அனைவருக்கும் எல்லா நன்மையும் விளையட்டும்!

நற்பவி!நற்பவி! நற்பவி!

இறைவனின் பரிபூரண அருளை பெறுவீர்.

Wednesday, March 02, 2022

மனித உடல்-அதிசய விஷயங்கள்

நம் உடலில் உள்ள அதிசயக்கத்தக்க விஷயங்கள் யாவை?

உடலிலேயே பெரிய செல் பெண்களின் கருமுட்டை. சிறிய செல் ஆண்களின் விந்தணு.

ஒருவர் வயிறு நிறைய சாப்பிட்ட பின், அவரது கேட்கும் திறன் சற்று குறையும். வேண்டுமானால் முயற்சித்துப் பாருங்களேன்.

மாலை வேளையை விட, காலையில் அனைவரும் ஒரு செ.மீ உயரமாக இருப்போம்.

பிறக்கும் போது ஆரம்பத்தில் அனைத்துமே கருப்பு மற்றும் வெள்ளையாகத் தான் தெரியும்.

அனைவருக்குமே ஒரு கண் வலிமையாகவும், ஒரு கண் பலவீனமாகவும் இருக்கும்.

நமது உடலில் உள்ள எலும்புகளானது 10 வருடங்களுக்கு ஒருமுறை தானாகவே புதுப்பித்துக் கொள்ளும்.

ஒவ்வொருவருக்கும் விரல் ரேகைகள், நாக்கில் உள்ள ரேகைகள் மற்றும் வாசனை மாறுபடும்.

இரவில் படுக்கும் போது, படுக்கை அறையானது மிகவும் குளிர்ச்சியாக இருந்தால், கெட்ட கனவுகள் வரக்கூடும்.

ஒரு மனித முடியின் வாழ்நாளானது சராசரியாக 3-7 வருடங்கள் ஆகும். அதன் பின் அந்த முடியானது உதிர்ந்து, அவ்விடத்தில் புதிய முடி வளரும்.

மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்றுவிடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானையின் காது அளவிற்கு வளர்ந்திருக்கும்.

ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. 

பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.

உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். 

விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.

நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும். காரணம் ஒரு சதுர அடியில் வெறும் மூன்றில் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன.

இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.

நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சோப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

மனிதனின் மூளையானது பகல் நேரத்தை விட, இரவில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும். இதற்கான காரணம் இதுவரை சரியாக யாராலும் சொல்ல முடியவில்லை.

உடலில் மற்ற இடங்களை விட, முகத்தில் வரும் முடியின் வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கும்.

மற்ற விரல்களில் வளரும் நகங்களின் வளர்ச்சியை விட, நடுவிரலில் நகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும்.

இரைப்பையில் சுரக்கப்படும் அமிலமானது மிகவும் சக்தி வாய்ந்தது. ஆனால் அந்த அமிலத்தால் இரைப்பை அழியாது மாறாக இரைப்பையின் சுவரானது தானாக புதுப்பித்துக் கொள்ளும்.

ஆண்களின் இதயத்துடிப்பை விட பெண்களின் இதயம் வேகமாக துடிக்கும்.

ஆண்களை விட பெண்கள் இரு மடங்கு வேகமாக கண்களை சிமிட்டுவார்கள்.

பெண்களை விட ஆண்களுக்கு தான் விக்கல் அடிக்கடி வரும்.

கால் விரலில் வளரும் நகங்களை விட, 4 மடங்கு அதிகமாக கைவிரலில் நகங்களானது வேகமாக வளரும்.

குழந்தைகள் பிறக்கும் போது, கண்கள் நீல நிறத்தில் இருக்கும். பின் உடலில் மெலனின் உற்பத்தி அதிகரிக்க அதிகரிக்க கருவிழியானது உண்மையான நிறத்தைப் பெறும்.

குழந்தைகள் பிறக்கும் போது நுரையீரல் பிங்க் நிறத்தில் இருக்கும். சுவாசிக்க, சுவாசிக்க, காற்றில் இருந்து கலந்து வரும் மாசு காரணமாக தான் நுரையீரல் நிறம் கருமையாக மாறிவிடுகிறது.

சராசரியாக ஒரு பெண் அறுபது வயதை எட்டும் போது, 450 குழந்தைகளை பெற்றெடுக்க தேவையான முட்டைகளை வெளியிட்டிருப்பாள்.

Saturday, February 19, 2022

வாழ்த்தட்டும் தலைமுறை

நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை, அண்ணா ! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க. காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது.

ஹோட்டல் நடத்துபவர், ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு. அம்மாக்கிட்டே சொல்லுமா.

இப்போ வாங்கிட்டுப்போ. தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தி தாரேன் என்றார்.

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, சரி அம்மாட்ட சொல்றேன். போயிட்டு வரேன் அண்ணே என்றபடியே கிளம்பிவிட்டாள்.

அந்தக் கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டேன். நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க?

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார். நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்.

அதெல்லாம் குடுத்துடுவாங்க.  என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?

குழந்தை பசியால் கேட்டிருக்கும். அதான் சார், அந்த  குழந்தையை அனுப்பி இருக்காங்க.

நான் கொடுத்தனுப்புவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும் சார்.  ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

நான் உணவு தரவில்லை என்றால் ,அந்தக் குழந்தை, தன் தாய்க்காக திருடப் போகும், அல்லது அந்தத் தாய், தன் குழந்தையின் பசிக்காக, தவறான பாதைக்கு செல்வாள்.

ஆனால், என்னால் நான் நஷ்டப்பட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்றார்.

மேலும் ஹோட்டல் முதலாளி கூறினார்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

நான் கும்பகோணத்தில்,  என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கின்றது. 

புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி  அவ்வப்போது என் பசியை ஆற்றிக் கொள்வேன். அப்பொழுது அந்தப் பாட்டியிடம், ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய் என்று  கேட்டேன். 

அதற்கு அந்தப் பாட்டியும் அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு லாபக் கணக்கு.  பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று  சொல்லி மெய்மறக்க சிரித்தார். 

இதுதான் இந்தியா இதுதான் நமது  நம்பிக்கை, பண்பாடு!

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி அன்னதானம் செய்வோம்.



Monday, February 14, 2022

கல் கருடன் உருவான கதை

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன் என்றும், காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன் என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழனின் அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது.

கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் செங்கட்சோழன்.

நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப்பட்டன.

புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன.

அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான்.

பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர்.

மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான்.

சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார்.

வர வேண்டும், வர வேண்டும் மன்னா என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார்.

மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை, உமது பழைய சீடனாகத் தான் வந்திருக்கிறேன்.

அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான்.

தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார்.

சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான்.

மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது.

மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன்.

நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர்,

சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது.

கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி,

முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறாய்?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது '' திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும், குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.

மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வியாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை.

இவற்றுள் சிலவற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.

அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.

காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு.

காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது.

நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திரகாந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.

பின்னர், யந்திரசர்வாஸ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

அதே பாறைகளைக் கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின.

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும்.

ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும்.

கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.

மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும்.

எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார்.

அப்போது தூக்குபவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும்.

மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்டபத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.

நமது ஆன்மிகமும் , அறிவியலும் எவர்க்கும் குறைந்தது இல்லை என்பது மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது.

Thursday, February 10, 2022

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது


கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.

எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.

மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.

அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .

அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.

தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.

அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.

ஆனால் ...

கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல.

வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.

அது சாத்தியமும் அல்ல.

கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.

நம்ம பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?!

நீந்த கற்று கொடுப்போம்...

நீந்துவது அவர்கள் கடமை..

மனதைத் தொட்ட வரிகள்

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும், பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.

வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி

வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது

நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை....

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!

நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்.

Tuesday, February 01, 2022

பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்

காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..

அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார்.

இப்போது வெளியில் வரட்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா? என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.

மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.

இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், "என்ன, ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்!" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, "சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி!" என்றார்.

காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார்.

"அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி

அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ "

சீடர் படித்து முடித்ததும், "இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்!" சொன்ன மகாபெரியவா, "இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு பார்க்கலாம்!" என்று கேட்டார்.

"பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்!' அப்படின்னு அர்த்தம்!"

பவ்யமாகச் சொன்னார், சீடர்.

"என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா? இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்!" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா.

அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.

இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது.

அமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். "என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ!" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான்.

அவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.

"தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது! னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது!" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்.

"இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது!" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது.