"குலதெய்வம் காட்டிய வழியில் வந்த காஞ்சி தெய்வம்! ஸ்ரீ பாலாஜியாய் இறங்கி வந்த மஹா பெரியவா!"*
திருப்பதிக்கு என்று வேண்டிக்கொண்டால், அதை அந்த வெங்கடாசலபதியிடம் சென்றுதான் தீர்க்க வேண்டும் என்று சொல்வார்கள்.
ஒரு சமயம் பக்தர் ஒருவர், திருப்பதிக்கு என்று வேண்டிக் கொண்டார். தினமும் உண்டியலில் பணம் சேர்த்தார். ஓரளவு தொகை சேர்ந்தது. அந்த சமயத்தில் திருப்பதியில் பக்தர்கள் தங்குவதற்கான அறைகள் கட்டிக் கொண்டிருந்ததால், தான் சேர்த்த பணத்தை எடுத்துக் கொண்டு திருப்பதிக்குச் சென்றார், பக்தர். ஓர் அறை கட்டுவதற்கு உரிய செலவாக அவர்கள் சொன்னதைக் கொடுத்தார். அதன் பிறகும் ஆறாயிரமோ ஏழாயிரமோ மீதி இருந்தது. அதை என்ன செய்வது? என்று யோசித்த பக்தருக்கு, மனதிற்குள் ஓர் எண்ணம் தோன்றியது.
தான் எப்போதும் மனதார ஆராதிக்கும் காஞ்சி மஹானை தரிசித்து, அவரது ஆணைப்படி இந்தத் தொகையை செலவிடலாம் என்ற யோசனை தோன்றியதும், அங்கேயிருந்து காஞ்சி மடத்துக்குப் புறப்பட்டார்.
அதே சமயம் அங்கே காஞ்சிபுரத்தில் ஒரு சம்பவம் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய மகளின் கல்யாணத்துக்கு ஏதாவது உதவி செய்ய முடியுமா? என்று மஹா பெரியவாளைக் கேட்பதற்காக ஏழைப் பெண்மணி ஒருவர், தன் மகளோடு மடத்துக்கு வந்திருந்தார்.
நீண்ட வரிசையில் நின்று கொண்டிருந்த அவர்கள், மெதுவாக நகர்ந்து மஹான் முன் வந்து நமஸ்கரித்து தங்களின் குறையைச் சொன்னார்கள்.
ஆதூரத்தோடு அந்தப் பெண்மணியின் மகளுடைய முகத்தைப் பார்த்தார், மஹான்.
"இப்போ மடம் இருக்கிற நிலைமைல பெருசா ஒண்ணும் பண்ண முடியாது. ஆனா, தாலி வேணும்னா தரமுடியும். அதுலயும் ஒரு பிரச்னை இருக்கு. நீங்க வைஷ்ணவான்னு நினைக்கிறேன். இங்கே இருக்கிறதெல்லாம் சைவர்கள் திருமாங்கல்யம்! அதை எப்படி உங்களுக்குத் தரமுடியும்னுதான் யோசிக்க வேண்டியிருக்கு!" மென்மையாகச் சொன்னார், மஹான்.
ஒரு விநாடி திகைத்து நின்ற அவர்கள், "சுவாமி, நீங்க தர்றேன்னு சொல்ற மாங்கல்யமே எங்களுக்குப் பரவாயில்லை. நாங்க வைணவர்களா இருந்தாலும், இவளுக்குப் பார்த்திருக்கிற வரன், சைவர்தான். அதனால, அந்த மாங்கல்யத்தையே குடுங்க!" தழுதழுப்பாகச் சொன்னார்கள்.
பக்கத்தில் நின்ற அணுக்கத் தொண்டரை அழைத்து, ஸ்ரீகார்யத்திடம் சொல்லி திருமாங்கல்யம் வாங்கிவரச் சொன்னார், பெரியவா. அவர் சென்று வாங்கி வந்த தாலியை அந்தப் பெண்மணியிடம் தந்து ஆசிர்வதித்தார், மஹான். அதை வாங்கிக் கொண்டு அவர்கள் மெதுவாக நகர, அதேசமயம் இன்னொரு அற்புதம் நிகழ்ந்தது அங்கே.
திருப்பதியில் இருந்து மஹா பெரியவாளை தரிசிக்க வந்த பக்தர், அப்போதுதான் மடத்துக்குள் நுழைந்தார். அவர் அடிக்கடி வரக்கூடியவர் என்பதால், கொஞ்சம் தொலைவில் வரும்போதே அவரைப் பார்த்துவிட்ட மஹான், இங்கே வா! என்பதுபோல் சைகை காட்டி அவரை அழைத்தார்.
வேகமாக வந்து மஹாபெரியவா முன் அவர் பவ்யமாக நிற்க, "அதோ திருமாங்கல்யம் வாங்கிண்டு போறாளே... அந்தப் பெண்ணோட கல்யாணத்துக்கு உன் கிட்டே இருக்கிற தொகை எதையாவது குடுத்து உதவி பண்ணு!" சொன்னார் மஹான்.
வாடிய முகத்தோடு நடந்து கொண்டிருந்த அந்தப் பெண்மணியையும் அவரது மகளையும் அவசர அவசரமாக அழைத்தார்கள், அணுக்கத் தொண்டர்கள். திருப்பதிக்குச் செலுத்தியதுபோக மீதமிருந்த பணத்தை அவர்களிடம் கொடுத்தார், பக்தர். வாங்கிக் கொண்டவர்கள் தழுதழுப்பாக, "பாலாஜி எங்களைக் கைவிடலை" என்றபடியே பெரியவாளின் திருவடிகளில் விழுந்து நமஸ்கரித்தார்கள்.
"அது என்ன? மஹானை பாலாஜின்னு சொல்றீங்க?" கேட்டார் பக்தர்.
"எங்களுக்கு திருப்பதி பாலாஜிதான் குலதெய்வம். அவரைத் தவிர வேற சுவாமியையே தெரியாது. மஹா பெரியவரைப்பத்தி கூட எங்களுக்கு நிறையத் தெரியாது. கல்யாணச் செலவுக்கு கஷ்டப்படறதைச் சொன்னா , உதவி செய்வார்ன்னு ஒருத்தர் சொன்னதாலதான் இங்கே வந்தோம். ஆனா, இங்கே வந்து மஹான் முன்னால நின்னப்போ எங்களுக்கு இவர் அந்தத் திருப்பதி பாலாஜியாகத்தான் தெரிஞ்சார்.
தாலியை வாங்கிக்கிட்டு நகர்ந்த சமயத்துல, "பகவானே உன்னைத்தானே நம்பி வந்தேன்... இப்போ இதை மட்டும் தந்து அனுப்பறியே... செலவுக்கு என்ன செய்வேன்!" னு அந்த பாலாஜியைத்தான் மனசுல நினைச்சேன். இதோ இப்போ கூப்பிட்டுப் பணம் தந்து அனுப்புறார்.
"அந்த பாலாஜிக்கிட்டே வேண்டினதை இவர் நிறைவேத்தி வைக்கிறார்னா, அவரும் இவரும் ஒன்று என்றுதானே அர்த்தம்!" அந்தப் பெண்மணி சொல்லச் சொல்ல, சிலிர்த்துப் போனார்கள் அங்கே இருந்தவர்கள்.