Pages

Thursday, November 28, 2013

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?


1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்! அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
நம்மை  படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக, முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, சக்தியை கொடுத்திருக்கிறார்.  கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80% தேவைக்கு அதிகமாக,கல்லீரலில் 60% தேவைக்கு கூடுதலாக!  இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது.
அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்து விடுகிறோம்.  ஆனால் முதுமை அப்படி அல்ல.  "மார்ஜின் ஆப் எர்ரர்" என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்து விடுகிறது.
உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும்.  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது "மைனர் ஸ்ட்ரோக்" எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும்.  அதனால் தான் சிலர் 5/6 தடவை அழைத்தபின்பு தான் சுதாரித்துக் கொண்டு "என்னையா அழைத்தீர்கள்"? என்று கேட்பார்கள்.  
ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைபாடு நோய் முதுமையில் தென்படும்.  பெண்களுக்கு மாதவிலக்கு நின்று மெனோபாஸ் ஆகும் காலக்கட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும்.  குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும்.  சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது.  மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாக்கி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும்.
60 வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக ஒட்டிக்கொள்ளப் பார்க்கும்.  சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது?  என்பதைவிட, சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது.  ஏன் என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும்.
ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புக்களும் நாம் இளமையாக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்றவைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும். முதுமையில் அந்த இரண்டு உறுப்புக்களின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்து எடுக்கப் படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்து விடும்.  அதனால் தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்க விளைவுகள் சிலருக்கு தோன்றுகிறது.
நோயாளிகளுக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, மிக குறைந்த அளவு, அதிகபட்ச அளவு என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள்.  இதை "தெரபூயிடிக் வின்டோ" என்பார்கள்.  அந்த இடை வெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.  தேவைக்கு அதிகமான டோஸ் கொடுத்துவிட்டால் பக்க விளைவுகள் அதிகரித்துவிடும்.
எல்லா வியாதிகளுக்கும் அறிகுறி உண்டு.  இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கி விடலாம்.  முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது.
சிறுநீர் பாதை அருகில் ப்ரோஸ்டேட் சுரப்பி உள்ளது. முதுமையில் அந்த சுரப்பி வீங்கும்.  அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.  முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு.  உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது.  பற்கள் விழுந்து விடுவதால் அவர்களால் மென்று சாப்பிட முடியாது.  அதனால்  பிரச்சினையும், ஜீரணக் கோளாறும் தோன்றுகிறது. புற்று நோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது.  கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ, இருமலில், வாந்தியில் சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிட வேண்டும்.  பெண்களைப் பொறுத்த வரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது.  இது போன்ற ஏராளமான உடல் பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
  • முதுமையை ஓய்வுக்கான பருவம் என்று நினைத்து முடங்கக் கூடாது. 
  • மனதுக்கும், உடலுக்கும் ஆக்டிவ்வாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.  டிவி பார்ப்பது, தூங்குவது போன்று பொழுதை கழித்தால் உடலும் மனதும் சோர்ந்து போகும். 
  • பேரக் குழந்தைகளிடம் தாத்தா, பாட்டி மாதிரி பழகாமல் நட்பாக பழகுங்கள, விளையாடுங்கள், இரவில் அவர்களோடு கதை பேசி தூங்குங்கள்.  
  • புகை, மது பழக்கம் இருந்தால், 50 வயதுக்கு முன்பே விட்டு விடுங்கள்.
  • 55 வயது கடக்கும்போது வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து, நோய்களை தொடக்கத்திலே கண்டறியுங்கள். 
  • முதுமை எல்லோர்ருக்கும் உண்டு என்பதால் இளமையிலேயே மருத்துவ காப்பீடு செய்து விடுங்கள்.  முதுமையில் அதிக நம்பிக்கையை அது உருவாக்கும்.
  • 50 வயது நெருங்கும் முன்பே உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து, உடற்பயிற்சியையும் தொடங்கிவிடுங்கள்.
  • மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
  • பெரும்பாலான முதியோர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, அடிபட்டு படுத்த படுக்கையாகித் தான் மரணத்தை நெருங்குகிறார்கள்.    அதனால் வழுக்காத வகையில், தண்ணீர் தேங்காத வகையில், கைப்பிடியோடு உட்கார்ந்து எழும் வசதியுடன் முதியோர்களுக்கான பாத்ரூமை அமையுங்கள்.  இரவில் அவசரமாக பாத்ரூம் போக, சுவிட்சை தேடித் பிடித்து லைட் போட முடியாது.  அதனால் இரவு முழுவது விளக்கு எரியட்டும்.  
  • தம்பதிகளில் யாராவது ஒருவர் இறந்து, இன்னொருவர் தனிமரம் ஆகும்போது தனிமை அவர்களை கடுமையாக வாட்டும். அதை போக்க அவர்களை, நட்பு, உறவு, ஆன்மிகம், பொழுதுபோக்கில் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
  • ஒவ்வொரு மனிதரும் சம்பாதிக்கும் சொத்து அவர்களது வாரிசுகளுக்குத்தான் போய்  சேர வேண்டும்.  ஆனால் முதுமையை இனிமையாக நீங்கள் கடக்க வேண்டும் என்றால் உங்கள் பெயருக்கு சொத்துக்களையும், பணத்தையும் வைத்துக் கொள்ளுங்கள்.  இதில் வாரிசுகளின் கவலை, கண்ணீர், நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து விடாதீர்கள். 
  • முதுமை இயற்கை தரும் சாபம் அல்ல; வரம்!  அதனால் அதை மனதார ஏற்று, நட்போடு கைகோர்த்துக் கொண்டால் மீதமுள்ள நாட்களிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.
                          "வாழ்க வளமுடன்"













Friday, August 09, 2013

ஹாத்திராம் ஆன பாவாஜி

தன்னுடைய வீட்டின்  தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தார் பாவாஜி.  முதன்முறையாக  பாவாஜியை பார்ப்பவர்கள், அவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தான் நினைப்பார்கள்.  ஏனெனில், தாயக்கட்டை விளையாடும்போது பாவாஜியின் செயல்பாடு அது மாதிரி இருக்கும்.  

சுவாமியுடன் விளையாட்டு
பாவாஜி திருமலையில்  குடில் அமைத்து வாழ்ந்து வந்தார்.  தினமும் அதிகாலையில் எழுந்திருந்து புஷ்கரணியில் நீராடி விட்டு வெங்கடாசலபதியை தரிசனம் செய்வார். பின்னர்  வீட்டில் அமர்ந்து தாயக்கட்டை விளையாடுவார். அவருடன் யாரும் விளையாட மாட்டார்கள, அவர் மட்டும் தான் விளையாடுவார்.  இதனால்தான், எல்லோரும் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நினைத்தனர்.   ஆனால், பாவஜியை பொருத்தவரை அவர் தனியாக விளையாட வில்லை, வேங்கடவனுடன் தான் விளையாடுகிறார்." இது என்னுடைய ஆட்டம், இது சுவாமியோட ஆட்டம்" என்று மாற்றி மாற்றி தாயக்கட்டையை உருட்டுவார்.

வேங்கடவன் தோற்றார்
ஒரு தடவை இதுபோல விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது.  வீட்டில் பிரகாசமான ஒளியும், நறுமணமும்  பரவியது. தொடர்ந்து அங்கு வெங்கடாஜலபதியின் விக்கிரகம் தோன்றியது.  அதில் இருந்து "என்ன பாவாஜி, என் விளையாட்டை நான் விளையாடலாமா ?" என்று ஒலி வந்தது.  வாய் அடைத்து போன பாவாஜி, விக்கிரகத்தை கையில் எடுத்தார், மான் தோலின் மீது வைத்தார். 
பின், அதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். "பாவாஜி, விளையாடப் போகிறாயா, இல்லை நான் போகட்டுமா? என்றார் பகவான். பாவாஜி, கவனம் சிதறி, ஆட்டத்தை தப்பும் தவறுமாக விளையாடினார்.  தன் பக்தனின் பக்தியை நினைத்து, பகவானின் நிலை அதைவிட மோசமாக இருந்தது.  

இரத்தின மாலை
"பாவாஜி, நீ ஜெயித்து விட்டாய்.  உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள், தருகிறேன்", என்றார் பகவான்.  ஆனால்,  பாவாஜியோ, "உமது குரலைக் கேட்பதைவிட பெரிய வரம் எனக்கு வேண்டுமா? இருப்பினும், தங்களின் விஸ்வரூபத்தை காண விரும்புகிறேன்" என்றார்.  அவரின் விருப்பப்படி பகவான் தரிசனம் கொடுத்தார்.  விளையாட்டு தினமும் தொடர்ந்தது.  ஒருநாள், பகவான் விளையாடி விட்டு செல்லும்போது தன் கழுத்தில் இருந்த இரத்தின மாலையை பாவாஜியின் வீட்டிலேயே விட்டுச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து இதை கவனித்த பாவாஜி, பகவானே வந்து எடுத்துச் செல்வார் என்று நினைத்தார்.  ஆனால், பகவான் வரவே இல்லை.   எனவே மறுநாள் அதிகாலையிலேயே மாலையுடன் கோவிலை நோக்கி ஓடினர்.  அதற்குள் நிலைமை எல்லை  கடந்திருந்தது. பகவானின் கழுத்தில் இருந்த இரத்தின மாலை காணவில்லை என்ற செய்தி கோவிலைத் தாண்டி ஊருக்குள் பரவியது.  கூட்டம் மொத்தமும் கோவிலுக்குள் வந்துவிட்டது.

திருட்டுப்பட்டம்
இந்த நிலையில், கோவிலுக்குள் மாலையுடன் வந்த பாவஜியை பார்த்த  ஒருவர், "திருடன்" என்று கூக்குரலிட்டார்.  மாலையை ஏன் திருடினாய்? என்ற கேள்வியால் பாவாஜியின் இதயம் நின்று விட்டதைப் போல் உணர்ந்தார்.  நடந்த உண்மையை பாவாஜி எடுத்துக்  கூறியும், அதை நம்ப தயாரில்லை யாரும்.  விசாரணை, கிருஷ்ண தேவராயர் மன்னரிடம் சென்றது.   மன்னரால் பாவாஜி சொல்வதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.  ஆனால் அவரைப் பார்க்கும்போது பொய் சொல்பவராக தெரியவில்லை மன்னருக்கு.   தன் மனதில் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பாவாஜியிடம் கூறினார் மன்னர்.   "பாவாஜி,  எமது நிலவறையில் ஒரு வண்டி கரும்பு இருக்கிறது.  அதை  இன்று இரவுக்குள் நீ தின்று  விடவேண்டும்.  அப்படிச் செய்தால் நீ  நிரபராதி.  இல்லையேல் உனக்கு தண்டனை நிச்சயம்"என்றார் மன்னர்.

யானையாக வந்த பகவான்
இது முடியாத காரியமாக இருந்தாலும், பாவாஜி கூறுவது உண்மையாக இருந்தால், அந்த வேங்கடவனே பவாஜிக்கு உதவிப் புரியட்டும் என்பது மன்னரின் எண்ணம்.  பாவாஜி மனம் கலங்கவில்லை.   
சிறையில் அடைக்கப்பட்டதும், சிறிது நேரம் தியானித்து விட்டு, "நான் நிரபராதி என்பது உனக்குத் தெரியும், இனி என்ன நடந்தாலும் அது உன் பாரம்" என்று கூறிவிட்டு தூங்கி விட்டார்.   சிறிது நேரத்தில் யானை உருவத்தில் நிலவறைக்குள் நுழைந்தார் பகவான்.  அங்கிருந்த கரும்பை ஒவ்வொன்றாக சுவைக்க தொடங்கினார்.  அறைக்குள் யானை பிளிறும் சத்தம் கேட்டு காவலர்கள், "பூட்டிய நிலவறைக்குள் யானை எப்படி நுழைந்தது" என்று  அதிர்ச்சி அடைந்தனர்.   கரும்பு எல்லாம் தீர்ந்து போனபின் யானை, கதவை உடைத்துக்கொண்டு மன்னர் இருக்கும் ராஜ சபை வரை சென்று விட்டு பின் திடீரென்று மறைந்து விட்டது.  

ஹாத்திராம்
சிறைக்குள் சென்ற காவலர்கள், பாவாஜி நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதையும், கரும்பு காணமல் போயிருப்பதையும் கண்டு அதிசயித்து மன்னரிடம் விஷயத்தை கூறினார்கள்.    அனைவரும் வேங்கடாஜலபதியின் விளையாட்டை நினைத்து மெய்சிலிர்த்துபோனார்கள். பாவாஜியை அனைவரும் கொண்டாடினார்கள்.   அதுமுதல் ஹாத்திராம்என்று அவரை அழைத்தனர். ஹாத்தி என்றால் யானை என்று பொருள்.
திருமலை கோவிலில் தெற்கு புறத்தில் ஒரு மண்டபம் ஹாத்திராம் நினைவாக கட்டபட்டிருப்பதை இன்றும் பக்தர்கள் காணலாம்.

(நன்றி: தினத்தந்தி - 06/08/2013)


Friday, May 03, 2013

சரணாகதியில் ஒரு நாள்


அருள்... பொருள்... இன்பம்...

கடந்த வாரம் ஒரு உறவினர்  திருமண நிகழ்ச்சிக்காக திருப்பதிக்கு சென்று இருந்தேன். திருச்சானூரில் நவஜீவன் என்னும் ஒரு சேவை அமைப்பின் மூலமாக "சரணாகதி" என்கிற ஒரு முதியோர் இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது. திருமணமும் அந்த முதியோர் இல்லத்த்தில் வாழும் முதியோர்களுக்கு நடுவில்தான் நடைப்பெற்றது.

கிட்டத்தட்ட அறுபது முதியோர் தனியாகவும் தம்பதிகளாகவும் இந்த சரணாகதியில் வசித்து வருகின்றனர்.  மிகக்குறைந்த அளவிலான ஒரு பராமரிப்புச் செலவுத்தொகை இவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
தனித்தனியே அறை உள்ளே டிவி, வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அடுப்பு என்கிற வசதிகள். தேவைப்பட்டவருக்கு ஏசி பொருத்தப்பட்ட அறைகள்.   ஒரு முதிய கணவன்-மனைவி பசி குறித்த அச்சமோ, வியாதி குறித்த பயமோ இன்றி தங்கள் அந்திமக் காலத்தை கழித்திட இங்கே திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
ஸ்ரீதர் ஆச்சார்யர் என்பவர் மிகுந்த சேவை மனப்பான்மையோடு வெகு நேர்த்தியாக இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார்.

வேளாவேளைக்கு உணவு, சூடான காபி, வாசிக்க நாளிதழ்கள், தினம்தோறும் பஜனைகள், பூஜை வழிபாடுகள் என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திட்டமிடல் இருக்கிறது.

சரணாகதியில் நான் சந்தித்த சில முதியோர்கள் என் கண்களை குளமாக்கி விட்டனர். அந்த நாளில் தமிழ் சிறுகதை எழுத்தாளராக திகழ்ந்த திருமதி கஸ்தூரி பஞ்சுவை அங்கே சந்தித்து அதிர்ந்தேன்.

என் இளம்வயதில் நான் வியந்து வாசித்த எழுத்தாளரில் கஸ்தூரி பஞ்சுவும் ஒருவர். இன்று முதுமை அவரை பஞ்சாகவே ஆக்கி, படுத்த படுக்கையாகக் கிடத்தியிருந்தது. நேராக நிமிரிந்து அமரக்கூட முடியாது.  சரிந்த நிலையில் தலையணைகள் மேல் சாய்ந்தபடி கிடக்கிறார். அவருக்கு உறுதுணையாக அவர் கணவர் பஞ்சாபகேசன் இருந்தார்.  தொண்ணூறு வயதைக் கடந்துவிட்ட அவரிடம் சிறு மனபாதிப்பு. இதனால் குழந்தை போல சிரிப்பதும், திரும்பத் திரும்ப பேசியதையே பேசுவதுமாக இருந்தார்.  பத்து வருடத்துக்கு முன்புவரை அவர்கள் இருவரும் சமூகத்தில் மிகுந்த கௌரவத்தோடு பிள்ளை, பேரன், பேத்தி என்ற உறவு வட்டத்தில் சந்தோஷமாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள்.  பொல்லாத முதுமை அவர்களை நடைப்பிணங்களாக ஆக்கிவிட்டது.

மனித உறுப்புகளில் கண் பார்வை இழந்தால் கூட சமாளித்துவிட முடிகிறது. ஆனால் கால்களுக்குப் பிரச்னை வரும்போதுதான் வாழ்வே ஆட்டம் காணத் தொடங்கிவிடுகிறது.  பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் உருவாகிறது.

எழுத்தாளர் கஸ்தூரியையும் கால்கள்தான் கட்டிப்போட்டு சரணாகதியை அவர் சரணடைய செய்திருந்தது.  அவரை சந்தித்து திரும்பிய சில நாட்களிலேயே பஞ்சாபகேசன் இறந்த செய்தி அறிந்தேன்.  கஸ்தூரிக்கு முடமைக்கு நடுவில் இப்படி ஒரு கொடுமையா என மனம் பதைத்தது. படுக்கையில் விழுந்தவர்களை பக்குவமாய் பார்த்துக் கொள்ளும் ஒரு வாழ்க்கைமுறை இன்று நம் சமூகத்தில் இல்லை  ஆம், கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு போனால்தான் குடும்பம் நடத்த முடியும் என்கிற நிலை.  நடமாட முடியாத முதியவர்கள் வீடுகளில் இருக்க நேரிட்டால் அவர்கள் அந்த வீட்டின் அசையாத மேஜை நாற்காலிகள் போலத்தான் கிடக்க வேண்டியுள்ளது. மேசைக்கோ நாற்காலிக்கோ பசி, தாகம் எடுக்கப் போவதில்லை. ஆனால், நடமாட முடியாத முதியவர்கள் அப்படியா? அவர்களை அப்போது யார் பார்த்துக்கொள்வது? இப்படிப்பட்டவர்களுக்கு சரணாகதி கை கொடுக்கிறது.

அங்கே ஒரு பெரியவர் சொன்னது என்னை மேலும் மிரட்டியது.  "எனக்கு இரண்டு பிள்ளைகள். நன்றாக படிக்க வைத்தேன்.  அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்து போனார்கள்.  நானும் போய் அவர்களோடு வாசித்தேன்.  அமெரிக்காவில் யாராயினும் மிகக் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு வீடு, ஒரு கார் என்று அடிப்படை வசதிகளோடு வாழ முடியும்.  கடவுளே நம்மை சந்திக்க விரும்பினாலும், சனி-ஞாயிறுகளில்தான் வரச் சொல்வார்கள்.  மற்ற நாட்களில் நேரம் கிடையாது.
அவ்வளவு பரபரப்பான நாட்கள்!  அப்படி பிள்ளைகள் போய்விட்டால், வீட்டில் தனியாக கிடப்பதை போல ஒரு கொடுமையை, அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும். புத்தகம் டீவி எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். அருமையான கலாசார சூழலில், தினம் ஒரு பண்டிகை நாள்-கிழமை விஷேசங்களை அனுபவித்து கோயில், குளம் என்று போய் வந்தவர்களால், அமெரிக்காவில் ஆறு மாதம் கூட இருக்க முடியாது.  எனவே என்னாலும் அங்கே இருக்க முடியாமல் இந்தியா திரும்பி விட்டேன்.  வயதும் ஆகிவிட்டது.  நான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதை வெற்றி என்பேனா இல்லை தோல்வியா? இந்நிலையில் மனைவியும் இறந்து போனாள். அப்போதுதான் எனக்கு நானே எவ்வளவு பெரிய பாரம் என்பது  தெரிந்தது. உண்மையில் மனிதப் பிறப்பெடுத்ததற்காக வேதனைப்பட்டேன்.  எனக்கு 80 வயது.  நினைவு தெரிந்த நாள் முதலாக நான் எதற்கும் கலங்காதவன்.  ஆனால், மனைவி இறந்த அன்று, பிள்ளைகளும் வர இயலாத நிலையில், அன்று நான் என் வாழ்நாள் அழுகையை அழுது தீர்த்துவிட்டேன். காலம்தான் எவ்வளவு பெரிய ரணங்களையும் ஆற்றிவிடுமே. நானும் மெல்லத்  தேறி, இந்த சரணாகதியை சரணடைந்து காலத்தை கடத்தி வருகிறேன்  இங்கே என்னைப் போல எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களே எனக்கு உற்ற துணை.  இது உண்மையான அன்புக்கும் பண்புக்குமான உலகம்.  ஒவ்வொரு நாளும் இன்று மரணம் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
இடையில் இங்கு எவராவது மரணித்தால் நாங்கள் துளிகூட வருந்துவதில்லை.  அப்பாடா அவருக்கு ஒரு வழி பிறந்து விட்டது என்று சந்தோசப்படுகிறோம்".

அவர்  பேச்சு என்னை   கலங்கடித்து விட்டது.  நம் வாழ்க்கை அமைப்பின் மேலேயே ஒரு கோபமும் வெறுப்பும் ஏற்பட்டன.   

மாத்திரைகளால் மட்டுமே தன்  வலிகளில் இருந்து தப்பித்து வாழும் ஒரு பெண்மணி பேசியதும் எனக்குள்ளே ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
"ஆர்.டி., எப்.டி. என்று எதிலே பணம் சேர்க்கலாம்,  யார் அதிகம் வட்டி தருவார்கள் என்று பார்க்காதீர்கள். அதெல்லாம் வெறும் காகிதம்தான். உடம்பை ஆரோக்யமாக வைத்துக்கொள்வதில் கவனமாக இருங்கள்.  சதா டிவி பார்த்துக் கொண்டு உடம்பை பூசணி போல ஆக்கிக் கொண்டு விடாதீர்கள்.  
உண்மையில் பெரிய செல்வம் ஆரோக்கியம்தான்.
ஒரு மனிதன் 120 வயது வரை, நல்ல கண் பார்வையோடும் ஜீரண சக்தியோடும் வாழ அத்தனை யோகாசனங்களும், உணவு முறைகளும் சிறப்பாக இருப்பது நம் நாட்டில் தான்.  அலட்சியமாக பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்றும், நமக்கு ஒன்றும் ஆகிவிடாது என்றும்  வாழபோய்தான்  நானெல்லாம் இன்று நோய்களின் கூடாரமாக உள்ளேன்".

அந்த ஒரு நாள் அனுபவம் நூறு புத்தகங்களை நான் படித்தற்கு சமமாக்கியது.

நாம் ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்துக்குக் கட்டாயம் செல்ல வேண்டும். என் உறவினர் அங்கே திருமணம் நடத்தியதற்கு காரணமே, அவர்களின் மன வெறுமையை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தத்தான்.   ஏன் ஒவ்வொருவரும் அப்படி நடந்து கொள்ளக்கூடாது என்றும் தோன்றியது.  குறைந்தபட்சம் நம் பிறந்த நாளை அவர்களுக்கு நடுவில் கொண்டாடி, அவர்களின் ஆசிகளை மூட்டைக் கட்டிக் கொள்ளலாமே?

திருமண நிகழ்வு முடிந்து திருப்பதி ரயில் நிலையம் நோக்கி திரும்பும் வழியில் ஒரு நாடோடிக் கூட்டம் சாலை ஓரமாக கூடாரம் போட்டு அங்கேயே சோறு பொங்கி சமைத்துக் கொண்டிருந்தது. வானம், பூமி சொந்தமில்லை.  கண் விழிப்புத்தான் அவர்களைப் பொறுத்தவரை பிறப்பு; இரவு தூக்கமே மரணம்.  நம் பார்வையில் அவர்கள் அர்த்தமே இல்லாமல் வாழ்பவர்கள்; கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என இருப்பவர்கள்.

ஆனால் அவர்களில் 90 வயது பாட்டி ஒருவர் தெம்பாக ஓடியாடி பேரப்பிள்ளைகளை கொஞ்சிக் கொண்டிருந்தாள்.  இவள் கெட்டிக்காரியா, இல்லை படித்து பட்டமெல்லாம் வாங்கி, நிறைய சொத்தும் சேர்த்துவிட்டு அதை அனுபவிக்க துப்பில்லாதபடி முதியோர் இல்லத்தை சரணடையும் நாம் கெட்டிக்காரர்களா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

புராணத்திலும் இது தொடர்பாய் ஒரு சம்பவம்.  சிரவணனின் பெற்றோர் பார்வை இழந்த முதியவர்கள். சிரவணன்தான் அவர்களுக்கு எல்லாம்.  காட்டில் சிரவணன் பெற்றோரின் தாகம் தீர்க்க நீர் கொண்டுவரச் சென்றான்.  வேட்டைக்கு வந்திருந்த தசரத சக்கரவர்த்தி, அவன் நீர்நிலையில் குடத்தில் நீர்முகந்தபோது உண்டான சப்தத்தை, எதோ ஒரு மிருகம் நீர் அருந்துவதாக கருதி, தன் பாணத்தை செலுத்த, அது சிரவணனின் உயிரை பறித்து விடுகிறது.
பிறகே உண்மை தெரிந்து தசரதனும் அவன் தாய்-தந்தையிடம் மன்னிப்பு கோருகிறான் அவர்களோ, "எங்களுக்கு இருந்த ஒரே ஆதரவையும் கொன்றுவிட்டு மன்னிப்பா கேட்கிறாய். இப்போது நாங்கள் பிள்ளையை பிரிந்து தவிப்பதை போல நீயும் தவிப்பாய்" என சபித்துவிட அதுவே தசரதனை விட்டு ராம-லட்சுமணர் பிரிய காரணமாகி தசரதர் உயிரும் பிரிந்தது. முதியவர் சாபம் தசரதனையே விடவில்லை,  நாம் எம்மாத்திரம்!

நம் வீட்டு முதியவர்களின் சாபத்துக்கு பயந்தாவது அவர்களை அன்போடு போற்றுவோமே! நமக்கும் முதுமை வரும் என்கிற உண்மையை நாம் உணர்ந்து இன்று நாம் முதுமையை போற்றினால் தானே நாளை நமக்கும் அது நிகழும்?

கொடுப்பதுதானே எப்போதும் திரும்பக் கிடைக்கிறது.

-----------------------------------------------OoO------------------------------------------------

(நன்றி: தினகரன் 02.03.2013 ஆன்மீக மலர், மும்பை.)

(கட்டுரையாளர் - இந்திரா சௌந்தர்ராஜன்)

Thursday, May 02, 2013

நீங்கள் கெளசிக கோத்திரமா?



ஸ்ரீ விச்வாமித்ர மகரிஷியின் சிலா ரூபம் இடம் பெற்றுள்ள திருக்கோவில் பற்றிய விவரம் இது:


திருநெல்வேலி மாவட்டத்தில் விஜயாபதி என்னும் இடத்தில் மகரிஷி தவம் செய்து, யாகம் வளர்த்து, ஸ்ரீ மகாதேவர், ஸ்ரீ மகாலிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து பூஜித்த தலம் உள்ளது. 
கோவிலுக்குப் பக்கத்திலேயே மகரிஷியின்  சிலா உருவம்.
நான்கு பக்கமும் சரவிளக்கு தொங்க, பழைய கட்டிடமாக உள்ளது.  
எதிரிலேயே தாமிரவருணி ஆறாக  ஓடுகிறது. 
அதில் ஸ்ரீ மகரிஷி ஸ்நானம் செய்து பெரிய யாக குண்டம் அமைத்து அவர் தவம் செய்த இடம். 
ஆஹா!  அற்புதம்!

பாக்கியம் உள்ளவர்களுக்குத்தான் தரிசனம்   கிடைக்கும்.
தியானம் செய்து பழக்கம் உள்ளவர்கள், சிலா  முன் அமர்ந்து தியானம் செய்தால் சூஷ்மமாக மகரிஷியின் தரிசனம் கிடைக்கும். 
நான் அதை ஆனந்தமாக அனுபவித்தேன்.   இந்த கோவிலைப் பற்றி வெளிஉலகிற்குத் தெரியவில்லை.   ஆடம்பரம், ஆரவாரமின்றி அமைதியாக உள்ளது. 
ஸ்ரீ  மகரிஷியை தரிசித்து விட்டு வந்த பின், நம் வாழ்வில் அற்புதங்கள் நடப்பதை உணர்வீர்கள்.

வள்ளியூர் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ, கார் ஏதேனும் ஒன்றைப் பிடித்து (பஸ் வசதி கிடையாது), விஜயாபதி என்று சொல்லி  (25கி.மீ) போகவும். 
பக்கா கிராமம்.  இருபுறமும் வயல்வெளி.  ஆள் நடமாட்டமே கிடையாது. 
மனம் பதற்றப்படாமல், அமைதியாக மகரிஷியிடம், "உம்மை தரிசனம் செய்ய வருகிறேன்,  அருள்புரிவீர்" என்று வேண்டிக் கொண்டு செல்லுங்கள்.

போகும்போது சிறிய கிராமம் வரும்.  அங்கு குருக்கள் வீடு எங்கு உள்ளது என்று கேட்டால் சொல்வார்கள். வெளியூரிலிருந்து வருவது தெரிந்தால் கட்டாயம் உதவுவார்கள். 
கோவில் மூடி விடுவார்கள் என்று யாரேனும் சொன்னாலும் அதைரியப்பட வேண்டாம்.
கோவிலை நமக்காக அர்ச்சகர் திறப்பார்.
கோவிலுக்கு போகும்போது, அகல், எண்ணெய், விளக்குத்திரி, தீப்பெட்டி, கோலமாவு, கல்கண்டு, திராட்சை (நைவேத்யம் செய்ய) எடுத்துப் போய் சரவிளக்கிலும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, கோலம் போட்டு, நைவேத்யம் செய்து சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்யவும்.

அங்கு பக்கத்தில் கடை ஹோட்டல் எதுவும் கிடையாது.  பக்கத்தில் வீடுகளும் இல்லை.
தேவையான பழம், பிஸ்கட், தண்ணீர் எல்லாம் கொண்டு செல்லவும்.

கெளசிக கோத்திரக்காரர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

(உபயம்: அகிலா கோபாலகிருஷ்ணன், சென்னை-88)

ஞான ஆலயம் / பிப்ரவரி 2008 வெளியீடு.

மேற்சொன்ன இடத்திற்கு சென்று ஸ்ரீமகரிஷியை தரிசனம் செய்தவர்கள் தயவு செய்து உங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்துகொண்டால், எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.  நன்றியுடன் - முரளிதரன்.

Monday, March 18, 2013

மீரா





மீரா -  இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கும்.  சிலருக்கு தெரியாமலும் இருக்கும்.   சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படும் தென்னகத்து ஆண்டாளைப் போலவே கண்ணன் மீது கண்மூடித்தனமாக காதல் கொண்டிருந்த வடநாட்டு மங்கைதான் இந்த மீரா. வடநாட்டில் இவரை அனைவரும் மீராபாய் என்றுதான் அழைப்பார்கள்.
அரச குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்க்கை பட்டிருந்தாலும் மீரா என்றுமே பகட்டு வாழ்க்கையில் லயித்ததில்லை  மாறாக பக்தியில் லயித்திருந்த காரணத்தால் தான் இன்றும் அவரது பெயர் இவ்வுலகில் நிலைத்திருக்கிறது  கடவுளிடம் அன்பை செலுத்துங்கள், அவர் நம் துன்பங்களை களைந்து நமக்கு நல்வாழ்வு காட்டுவார் என்று பலரையும் அழைத்துச் சென்றதன் காரணமாக பக்தர்கள் அனைவருக்கும் மீரா மனம் கவர்ந்தவராக இருந்தார்.  ஆனால் அவரின் மனதை கவர்ந்தவர் கண்ணனை தவிர வேறு எவருமில்லை.  


பக்த மீரா
இந்திய நாட்டில் ராஜஸ்தான் பகுதியில் ஆட்சி செலுத்திய ராஜபுதன வீரர்களுக்கு தனி சிறப்பு உண்டு.  வடநாட்டில் சில பகுதிகளை கைப்பற்றியதின் காரணமாக முகலாய சாம்ராஜ்யத்தை நிலை நாட்டும் பொறுப்பு அக்பரிடம் வந்தது.  வடமேற்கில் இருந்து வெளிநாட்டினர் வருவதை தடுக்கவும் தெற்கில் முகலாய சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தவும் ராஜ புதனர்களுடன் பெரும்பாலும் இணக்கமாக செல்லவே அக்பர் எண்ணம் கொண்டார்.  ஆனால் ராஜ புதனர்களுக்குள் இருந்த உள்கட்சி பூசலால் சிலர்  விரோத போக்கையே கடைப்பிடித்து வந்தனர்.
இதில் நவுகர் பகுதியில் உள்ள குர்கிக்கு மன்னராக இருந்தவர் ரத்தன்சிங். இவரது மகள்தான் மீரா.  சிறுவயதிலேயே தந்த ரத்தன்சிங் காலமாகி விட்டதால், அன்னையின் அன்பிலும் தாத்தா துத்தா ராவ் ராதோர்ட்  வளர்ப்பிலும் தான் மீரா வளர்ந்து வந்தார்.  அரண்மனையில் பூஜைகளும், அதில் கலந்துகொள்ள சாதுக்களின் வரவும் எப்போதும் இருக்கும்.  எனவே பக்தி மீது மீராவின் பற்று எப்போதும் இருந்தது.


கண்ணன் மீது காதல்
அவருக்கு கண்ணன் மீது பற்று வந்ததுதான் தனிக்கதை.  சிறுவயதில் ஒரு நாள் அரண்மனை மாடத்தில் நின்று அன்னையுடன் சேர்ந்து வீதியை வேடிக்கை பார்த்துக் கொண்டடிருந்தார் மீரா, அப்போது வீதியில் சென்ற திருமண ஊர்வலத்தில் குதிரையில் அமர்ந்திருந்த வாலிபரை கைகாட்டி சிறுமி மீரா, அது யார்? என்று வினவினாள்.   அதற்கு மீராவின் தாய், "அவர் தான் மணப்பெண்ணை மணக்கவிருக்கும் மணாளன்" என்றார்.
குழந்தைகளின் கேள்விகள் புதியதாக இருக்கும்.  நாம் சொல்லும் பதிலில் இருந்தே பல குழந்தைகள் சந்தேகத்துடன் பல கேள்விகளை கேட்பார்கள்.  அப்படித்தான் தனது தாயாரிடம் மேலும் ஒரு கேள்வியை கேட்டார் சிறுமி மீரா.  எனது மணாளன் யார்? என்பது தான் அந்த கேள்வி.  குழந்தையின் கேள்விக்கு ஏதாவது பதில் கூறியாக வேண்டுமே.  அந்த தாயும் வீட்டிற்குள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த ரவிதாசர் என்ற சாது கொண்டு வந்திருந்த கிருஷ்ணரின் விக்ரஹத்தைக் காட்டி, "இவர் தான் உன் மணாளன்" என்று கூறினார்.  அந்த விக்ரஹத்தின் அழகில் மயங்கிய மீராவின் மனது, இன்னது என்று சொல்ல முடியாத ஒருவித பாசத்துடன் விக்ரஹமாக நின்ற விஷ்ணுவிடம் ஒட்டிக் கொண்டது.   பூஜை முடிந்ததும் தனது அரண்மனையில் இருந்து கண்ணனின் விக்ரஹத்தை, ரவிதாசர் எடுத்துச் சென்று விடுவார் என்று எண்ணிய சிறுமி மீரா, அந்த சிலையை உடனடியாக தனது அறைக்கு கொண்டு சென்று வைத்து விட்டார்.    ஆனால் மறுநாள் சிலையை காணாது தேடிய ரவிதாசர் இறுதியில் அதனை மீராவின் அறையில் இருந்து எடுத்துச் சென்றார்  
கண்ணீர் வடித்த கண்ணன்
தனது இருப்பிடம் சென்ற ரவிதாசர், கிருஷ்ண விக்ரஹத்துக்கு பூஜை செய்ய தொடங்கினார்.  அப்போது விக்ரஹத்தின் கண்களின் இருந்து கண்ணீர் வழிவது கண்டு திடுக்கிட்டார் அந்த சாது.  மீராவைப் பிரிந்தது தான் கண்ணனின் கண்ணீருக்குக் காரணம் என்பதை சாதுவின் உள்மனம் உணர்த்தியது.  மீண்டும் மீராவிடமே அந்த விக்ரஹத்தை கொடுத்தார் சாது ரவிதாசர்.  அதனை கண்டதும் கிருஷ்ணரே தனக்கு கிடைத்ததுபோல் மகிழ்ச்சியில் ஆடினாள்  மீரா.  கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் வடிவது நின்று முகத்தில் புதுப்பொலிவு வந்திருந்தது.  அது மீராவின் ஆனந்த கூத்தாட்டத்தை கண்டதாலா? அல்லது தான் மீண்டும் மீராவிடமே வந்து விட்டோம் என்பதாலா? தெரியவில்லை.


ஆண்டுகள் பல சென்றது. மீராவின் பேச்சுத் துணையாகவும் விளையாட்டு துணையாகவும், கவலையை இறக்கி வைக்கும் துணையாகவும், இன்பத்தை பகிர்ந்து கொள்ளும் துணையாகவும் கண்ணன் ஒருவனே இருந்தான்.  சிறு வயதில் மகிழ்ச்சியை தந்த மீராவின் இந்த செய்கை, அவள் வளர்ந்த பின்னரும் இருந்ததைக் கண்டு அவரது தாய்க்கு கவலையை கொடுத்தது.  தாயும், உறவினர்களும் மீராவின் செய்கையை கண்டு அவரை கடிந்து கொண்டனர்.  பொம்மையுடன் தனிமையில் பேசும் மீரவுக்கு புத்தி பேதலித்து விட்டதோ என்று கூட எண்ணத் தொடங்கினர்.  பேச்சு வழக்கில் சொன்னால் பைத்தியமோ என்று நினைத்தனர். ஒரு பெண்ணுக்கு தனது அன்புக்குரியவர் மீது அதீத பற்று இருப்பதற்கு, அன்பு இருப்பதற்கு பெயர் பைத்தியமா என்ன?


விஷம் பருகினார்
தாய், உற்றார், உறவினரின் பேச்சுக்களை கேட்டு மீராவின் மனம் துவளவில்லை.  தூய்மையான அன்பை சுமந்து நிற்கும் மனதை எந்த
பேச்சுகளும் துவள செய்ய முடியாது.  அனால், மீராவை துடி துடிக்க வைக்கும் செய்தி ஒன்று நடைபெற இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை.  அந்த செய்தி அவர் காதல்  எட்டியதும் அவர் மனம் துவளவில்லை, மாறாக துண்டுத் துண்டாகச் சிதறி விட்டது.


சித்தூர் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்த ரணாசங்கா என்பவரது மகன் போஜராஜனுக்கு, மீராவை மணம் முடித்து வைக்க நடந்த ஏற்பாடுதான் அவரின் மன வேதனைக்கு காரணம்.  கண் துகிலும் நேரத்திலும் காண நேரம் கூட மறக்க முடியாத கண்ணனே தனது மணாளன் என்று வாழ்ந்து வரும் தனக்கு திருமணமா?  என்ன கொடுமையான விஷயம்?  எப்படி என்னால் கண்ணனை விடுத்து வேறொரு மன்னனை மணக்க முடியும் என்று நினைத்தவாறே அழுது அழுது மீராவின் அங்கம் முழுவதும் நனைந்துவிட்டது.
மற்றொருவனை மணப்பதை விட மரணத்தை தழுவுவதே உத்தமம் என்று நினைத்த மீரா, விஷத்தை எடுத்து சாப்பிட்டு விட்டார்.  ஒருநாளில் ஒரு முறை நினைக்கும் பக்திக்கே பலனளிக்கும் போது, பக்தியை வெறியாக மாற்றிக் கொண்ட மீராவை மரணம் தழுவிக் கொண்டு செல்ல விட்டு விடுவாரா அந்த மாதவன்.  விஷம் கொண்ட நஞ்சானது, மீராவின் நாவினை தொட்டதுமே துவண்டு விட்டது.  பிறகு எப்படி உடலுக்குள் இறங்கி உயிரை பருகுவது.  மீராவை, விஷத்தால்  வெல்ல முடியவில்லை.


ஆடிப்பாடி மகிழ்ந்தார்
மீராவின் ஆழ்கடலின் ஆழத்தையும் தாண்டிச் செல்லும் அன்பை மெச்சிய கண்ணபிரான், அவரது கனவில் தோன்றி போஜராஜனை மணமுடிக்கப் பணித்தார்.  கண்ணனின் சொல்லை தட்ட முடியாத மீரா திருமண பந்தத்தில் நுழைந்து, தணலில் விழுந்த நிலையை அடைந்தார். போஜராஜனுக்கு அன்பான மனைவியாக இருந்து அனைத்து பணிவிடைகளையும் செய்த மீரா, அதன்பின்னர் தன் கண்ணனுக்கு பணிவிடைகள் செய்வதையும் எந்த நிலையிலும் கைவிட்டு விடவில்லை.
ஆனால், போஜராஜனின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும், மீரா கண்ணனே கதி என்பதுபோல் கிடப்பது பிடிக்க வில்லை.
போஜராஜனை தூண்டி விட்டு அவரை சித்ரவதை செய்யும் முடிவில் இறங்கினர்  ஆரம்பத்தில் உறவினர்களின் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்த போஜராஜன், அதன் பின்னர் தனது மீராவின் உண்மையான பக்தியை நினைத்து அவனும் கண்ணனால் கவரப்பட்டான். மனைவிக்காக அரண்மனை வளாகத்தில் ஒரு கோவிலை கட்டிக்கொடுத்தான்.  அந்த கோவிலில் இருந்த கண்ணனுக்கு பூமாலையுடன், தினமும் பாமாலையும் சூட்டி வழிப்பட்டாள் மீரா.   அவளது பக்தியை அறிந்து அந்தப் பகுதியில் இருந்த சாதுக்களும், மக்களும் திரண்டு வந்து கண்ணன் வழிபாட்டில் கலந்து கொண்டனர்  அவர்களிடம் மீரா, அன்பையே வலியுறுத்தினார்.  அன்பால் அகிலத்தையும் ஆளலாம் என்ற கருத்தை ஆழப்பதியச் செய்தார்.


மீராவுக்கு வந்த சோதனை
இறைவன் தன்பால் பக்தர்கள் கொண்டுள்ள பக்தி எவ்வளவு ஆழமானது என்பதை அறிந்து கொள்ளும் ஆசையினால் சந்தோஷத்தை அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்க விடுவதில்லை . மீராவுக்கும் அப்படித்தான்.  பல காரணங்ககளை கூறி மீராவின் மீது போஜராஜனுக்கு வெறுப்பு வர வைக்க முயன்ற உறவினர்கள், இறுதியில் எடுத்த அஸ்திரம் மீராவை களங்கப்படுத்துவது என்பதைத்தான். சந்தோசத்திற்கு முதல் எதிரி சந்தேகம்தான்.  அந்த சந்தேகத்தை போஜராஜனுக்குள் எரிய வைத்தனர்.  இதற்கு ஏற்றாற்போல் ஒரு சம்பவம் நடைப்பெற்றது.


மீரா கண்ணன் மேல் கொண்ட பக்தியும், அதன் வாயிலாக அவர் வலியுறுத்தும் அன்பு மார்க்கமும் வானளாவ வளர்ந்து முகலாய அரசர் ஒருவரை அடைந்தது.  தன் வாழ்நாளில் மீரா பாடுவதையும், அதன் வாயிலாக அவர் கூறும் அன்பு மார்க்கத்தையும் ஒரு முறையாவது கேட்டிட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.  சாதுவைப் போல மாறுவேடத்தில், மீரா தினமும் தொழும் கண்ணன் கோவிலுக்கு வந்தார் அந்த முகலாய அரசர்.   தான் பிருந்தாவனத்தில் இருந்து வருவதாக கூறி, மீராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பிருந்தாவனத்தின் பெயரைக் கேட்டதும் மீராவின் மனம் கண்ணனிடம் கரையத் தொடங்கி விட்டது.
பின்னர் பூஜை முடிந்ததும் கண்ணன் காலடியில் முத்து மாலை ஒன்றை வைத்து சென்றான் அந்த அரசன்.  தங்கள் நாட்டின் எதிரியான முகலாய அரசரின் வருகையும் அவரிடம் மீரா வெகு நேரம் பெசிக்கொண்டுருந்ததும் இறுதியில் முகலாய அரசன், மீராவுக்கு முத்து மாலை பரிசளித்ததாகவும் அரண்மனை ஒற்றர்களால் போஜராஜனிடம் திரித்து கூறப்பட்டது.  


மரண தண்டனை
சந்தேகம் போஜராஜனை முழுவதுமாக சாய்த்து விட்டது.  மீராவால் தனது வம்சத்திற்கு இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும், அதனை துடைக்கும் நிமித்தமாக நதியில் விழுந்து உயிர்விடும்படியும் உத்தரவிட்டான் போஜராஜன்.   கண்ணனின் கணக்கு அதுதான் என்றால் சம்மதம் என்று கூறிய மீராவும் நதி நீரில் விழுந்தார்.  ஆனால் தண்ணீரால் அந்த தங்க மகளை அடியில் தாழ்த்த முடியவில்லை.  மறுகரையை அடைந்தார் மீரா.  அப்போது, "நீ இங்கிருந்து நடந்து பிருந்தாவனத்திற்கு செல்.  உன் ஆன்மிக பணி தொடரட்டும்.  உரிய நேரத்தில் உன்னை அழைத்து கொள்வேன்" என்று அசரீரியாக கண்ணனின் குரல் ஒலித்தது.  நதியில் விழுந்ததும் பிழைத்தது இறைவனின் அருள்.  இது ஒரு புதுப்பிறவி போன்றது  அவன் மீது அன்பு கொண்டு இருப்பதே உத்தமம் என்ற எண்ணத்தில் பிருந்தாவனத்தை நோக்கி சென்றார் மீரா.


பிருந்தாவனத்தில்...
பிருந்தாவனத்தில் மீராவின் புகழ் மேலும் மேலும் வளர்ந்தது  இந்நிலையில் மீரா இல்லாததால் சித்தூர் ராஜ்ஜிய மக்கள் பசி பஞ்சத்தால் அல்லாடினர்.  மீராவை இழந்ததே இதற்கு காரணம் என்று அனைவரும் வருந்தினர்.  மக்களின் கருத்து மன்னன் போஜராஜனுக்கும் தெரிய வந்தது.  அவர் மீராவை தேடி பிருந்தாவனத்திற்கு வந்தார்.  தன் தவறுக்காக மனம் வருந்தினார்.  மீண்டும் சித்தூர் வரும்படி பணிந்தார்.  மனமிரங்கிய மீரா, தான் அங்கு வருவதாகவும் ஆனால் கண்ணன் குடியிருக்கும் கோவிலில் தான் தங்குவேன் என்றும் நிபந்தனையுடன் சம்மதம் தெரிவித்தார்.  சிறிது காலம் அங்கிருந்த மீரா, துவாரகை செல்ல விரும்பினார்.  துவாரகை தான் கிருஷ்ணனை அடைய ஒரே வழி என்று அவர் நினைத்தார்  அதன் படி துவாரகை சென்று கோகுலாஷ்டமி தினத்தன்று கண்ணனை நினைத்து காணம் பாடினார்.


கண்ணனுடன்  கலந்தாள்
பாடிக் கொண்டு இருந்த மீரா, திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்தார்.  அப்போது ஒரு ஒளிக்கீற்று மின்னலாக கோவிலின் கருவறையை மூடியது.  சிறிது நேரம் கழித்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கருவறை கதவை திறந்தபோது, கண்ணனின் சிலை மீது மீராவின் ஆடை மட்டுமே இருந்தது.  மீரா சிறுவயதில் இருந்து தன் கணவனாக எண்ணி காதலித்து வந்த கண்ணனுடன் கலந்திருந்தாள் .