மீரா
- இவரை பற்றி பலருக்கு தெரிந்திருக்கும். சிலருக்கு தெரியாமலும்
இருக்கும். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி என்று அழைக்கப்படும் தென்னகத்து
ஆண்டாளைப் போலவே கண்ணன் மீது கண்மூடித்தனமாக காதல் கொண்டிருந்த வடநாட்டு
மங்கைதான் இந்த மீரா. வடநாட்டில் இவரை அனைவரும் மீராபாய் என்றுதான்
அழைப்பார்கள்.
அரச
குடும்பத்தில் பிறந்து, அரச குடும்பத்தில் வாழ்க்கை பட்டிருந்தாலும் மீரா
என்றுமே பகட்டு வாழ்க்கையில் லயித்ததில்லை மாறாக பக்தியில் லயித்திருந்த
காரணத்தால் தான் இன்றும் அவரது பெயர் இவ்வுலகில் நிலைத்திருக்கிறது
கடவுளிடம் அன்பை செலுத்துங்கள், அவர் நம் துன்பங்களை களைந்து நமக்கு
நல்வாழ்வு காட்டுவார் என்று பலரையும் அழைத்துச் சென்றதன் காரணமாக பக்தர்கள்
அனைவருக்கும் மீரா மனம் கவர்ந்தவராக இருந்தார். ஆனால் அவரின் மனதை
கவர்ந்தவர் கண்ணனை தவிர வேறு எவருமில்லை.
பக்த மீரா
இந்திய
நாட்டில் ராஜஸ்தான் பகுதியில் ஆட்சி செலுத்திய ராஜபுதன வீரர்களுக்கு தனி
சிறப்பு உண்டு. வடநாட்டில் சில பகுதிகளை கைப்பற்றியதின் காரணமாக முகலாய
சாம்ராஜ்யத்தை நிலை நாட்டும் பொறுப்பு அக்பரிடம் வந்தது. வடமேற்கில்
இருந்து வெளிநாட்டினர் வருவதை தடுக்கவும் தெற்கில் முகலாய சாம்ராஜ்யத்தை
விரிவுபடுத்தவும் ராஜ புதனர்களுடன் பெரும்பாலும் இணக்கமாக செல்லவே அக்பர்
எண்ணம் கொண்டார். ஆனால் ராஜ புதனர்களுக்குள் இருந்த உள்கட்சி பூசலால்
சிலர் விரோத போக்கையே கடைப்பிடித்து வந்தனர்.
இதில் நவுகர் பகுதியில் உள்ள குர்கிக்கு மன்னராக இருந்தவர் ரத்தன்சிங். இவரது மகள்தான் மீரா. சிறுவயதிலேயே தந்த ரத்தன்சிங் காலமாகி விட்டதால், அன்னையின் அன்பிலும் தாத்தா துத்தா ராவ் ராதோர்ட் வளர்ப்பிலும்
தான் மீரா வளர்ந்து வந்தார். அரண்மனையில் பூஜைகளும், அதில் கலந்துகொள்ள
சாதுக்களின் வரவும் எப்போதும் இருக்கும். எனவே பக்தி மீது மீராவின் பற்று
எப்போதும் இருந்தது.
கண்ணன் மீது காதல்
அவருக்கு
கண்ணன் மீது பற்று வந்ததுதான் தனிக்கதை. சிறுவயதில் ஒரு நாள் அரண்மனை
மாடத்தில் நின்று அன்னையுடன் சேர்ந்து வீதியை வேடிக்கை பார்த்துக்
கொண்டடிருந்தார் மீரா, அப்போது வீதியில் சென்ற திருமண ஊர்வலத்தில்
குதிரையில் அமர்ந்திருந்த வாலிபரை கைகாட்டி சிறுமி மீரா, அது யார்? என்று
வினவினாள். அதற்கு மீராவின் தாய், "அவர் தான் மணப்பெண்ணை மணக்கவிருக்கும்
மணாளன்" என்றார்.
குழந்தைகளின்
கேள்விகள் புதியதாக இருக்கும். நாம் சொல்லும் பதிலில் இருந்தே பல
குழந்தைகள் சந்தேகத்துடன் பல கேள்விகளை கேட்பார்கள். அப்படித்தான் தனது
தாயாரிடம் மேலும் ஒரு கேள்வியை கேட்டார் சிறுமி மீரா. எனது மணாளன் யார்?
என்பது தான் அந்த கேள்வி. குழந்தையின் கேள்விக்கு ஏதாவது பதில் கூறியாக
வேண்டுமே. அந்த தாயும் வீட்டிற்குள் பூஜைக்காக வைக்கப்பட்டிருந்த ரவிதாசர்
என்ற சாது கொண்டு வந்திருந்த கிருஷ்ணரின் விக்ரஹத்தைக் காட்டி, "இவர் தான்
உன் மணாளன்" என்று கூறினார். அந்த விக்ரஹத்தின் அழகில் மயங்கிய மீராவின்
மனது, இன்னது என்று சொல்ல முடியாத ஒருவித பாசத்துடன் விக்ரஹமாக நின்ற
விஷ்ணுவிடம் ஒட்டிக் கொண்டது. பூஜை முடிந்ததும் தனது அரண்மனையில் இருந்து
கண்ணனின் விக்ரஹத்தை, ரவிதாசர் எடுத்துச் சென்று விடுவார் என்று எண்ணிய
சிறுமி மீரா, அந்த சிலையை உடனடியாக தனது அறைக்கு கொண்டு சென்று வைத்து
விட்டார். ஆனால் மறுநாள் சிலையை காணாது தேடிய ரவிதாசர் இறுதியில் அதனை
மீராவின் அறையில் இருந்து எடுத்துச் சென்றார்
கண்ணீர் வடித்த கண்ணன்
தனது
இருப்பிடம் சென்ற ரவிதாசர், கிருஷ்ண விக்ரஹத்துக்கு பூஜை செய்ய
தொடங்கினார். அப்போது விக்ரஹத்தின் கண்களின் இருந்து கண்ணீர் வழிவது கண்டு
திடுக்கிட்டார் அந்த சாது. மீராவைப் பிரிந்தது தான் கண்ணனின்
கண்ணீருக்குக் காரணம் என்பதை சாதுவின் உள்மனம் உணர்த்தியது. மீண்டும்
மீராவிடமே அந்த விக்ரஹத்தை கொடுத்தார் சாது ரவிதாசர். அதனை கண்டதும்
கிருஷ்ணரே தனக்கு கிடைத்ததுபோல் மகிழ்ச்சியில் ஆடினாள் மீரா. கண்ணனின்
கண்களில் இருந்து கண்ணீர் வடிவது நின்று முகத்தில் புதுப்பொலிவு
வந்திருந்தது. அது மீராவின் ஆனந்த கூத்தாட்டத்தை கண்டதாலா? அல்லது தான்
மீண்டும் மீராவிடமே வந்து விட்டோம் என்பதாலா? தெரியவில்லை.
ஆண்டுகள்
பல சென்றது. மீராவின் பேச்சுத் துணையாகவும் விளையாட்டு துணையாகவும்,
கவலையை இறக்கி வைக்கும் துணையாகவும், இன்பத்தை பகிர்ந்து கொள்ளும்
துணையாகவும் கண்ணன் ஒருவனே இருந்தான். சிறு வயதில் மகிழ்ச்சியை தந்த
மீராவின் இந்த செய்கை, அவள் வளர்ந்த பின்னரும் இருந்ததைக் கண்டு அவரது
தாய்க்கு கவலையை கொடுத்தது. தாயும், உறவினர்களும் மீராவின் செய்கையை கண்டு
அவரை கடிந்து கொண்டனர். பொம்மையுடன் தனிமையில் பேசும் மீரவுக்கு புத்தி
பேதலித்து விட்டதோ என்று கூட எண்ணத் தொடங்கினர். பேச்சு வழக்கில் சொன்னால்
பைத்தியமோ என்று நினைத்தனர். ஒரு பெண்ணுக்கு தனது அன்புக்குரியவர் மீது
அதீத பற்று இருப்பதற்கு, அன்பு இருப்பதற்கு பெயர் பைத்தியமா என்ன?
விஷம் பருகினார்
தாய், உற்றார், உறவினரின் பேச்சுக்களை கேட்டு மீராவின் மனம் துவளவில்லை. தூய்மையான அன்பை சுமந்து நிற்கும் மனதை எந்த
பேச்சுகளும்
துவள செய்ய முடியாது. அனால், மீராவை துடி துடிக்க வைக்கும் செய்தி ஒன்று
நடைபெற இருப்பதை அவர் அறிந்திருக்கவில்லை. அந்த செய்தி அவர் காதல்
எட்டியதும் அவர் மனம் துவளவில்லை, மாறாக துண்டுத் துண்டாகச் சிதறி
விட்டது.
சித்தூர் ராஜ்ஜியத்தை ஆட்சி செய்து வந்த ரணாசங்கா என்பவரது மகன் போஜராஜனுக்கு, மீராவை
மணம் முடித்து வைக்க நடந்த ஏற்பாடுதான் அவரின் மன வேதனைக்கு காரணம். கண்
துகிலும் நேரத்திலும் காண நேரம் கூட மறக்க முடியாத கண்ணனே தனது மணாளன்
என்று வாழ்ந்து வரும் தனக்கு திருமணமா? என்ன கொடுமையான விஷயம்? எப்படி
என்னால் கண்ணனை விடுத்து வேறொரு மன்னனை மணக்க முடியும் என்று நினைத்தவாறே
அழுது அழுது மீராவின் அங்கம் முழுவதும் நனைந்துவிட்டது.
மற்றொருவனை
மணப்பதை விட மரணத்தை தழுவுவதே உத்தமம் என்று நினைத்த மீரா, விஷத்தை
எடுத்து சாப்பிட்டு விட்டார். ஒருநாளில் ஒரு முறை நினைக்கும் பக்திக்கே
பலனளிக்கும் போது, பக்தியை வெறியாக மாற்றிக் கொண்ட மீராவை மரணம் தழுவிக்
கொண்டு செல்ல விட்டு விடுவாரா அந்த மாதவன். விஷம் கொண்ட நஞ்சானது,
மீராவின் நாவினை தொட்டதுமே துவண்டு விட்டது. பிறகு எப்படி உடலுக்குள்
இறங்கி உயிரை பருகுவது. மீராவை, விஷத்தால் வெல்ல முடியவில்லை.
ஆடிப்பாடி மகிழ்ந்தார்
மீராவின்
ஆழ்கடலின் ஆழத்தையும் தாண்டிச் செல்லும் அன்பை மெச்சிய கண்ணபிரான், அவரது
கனவில் தோன்றி போஜராஜனை மணமுடிக்கப் பணித்தார். கண்ணனின் சொல்லை தட்ட
முடியாத மீரா திருமண பந்தத்தில் நுழைந்து, தணலில் விழுந்த நிலையை
அடைந்தார். போஜராஜனுக்கு அன்பான மனைவியாக இருந்து அனைத்து பணிவிடைகளையும்
செய்த மீரா, அதன்பின்னர் தன் கண்ணனுக்கு பணிவிடைகள் செய்வதையும் எந்த
நிலையிலும் கைவிட்டு விடவில்லை.
ஆனால், போஜராஜனின் தாய் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும், மீரா கண்ணனே கதி என்பதுபோல் கிடப்பது பிடிக்க வில்லை.
போஜராஜனை
தூண்டி விட்டு அவரை சித்ரவதை செய்யும் முடிவில் இறங்கினர் ஆரம்பத்தில்
உறவினர்களின் பேச்சை கேட்டு மனைவியை துன்புறுத்தி வந்த போஜராஜன், அதன்
பின்னர் தனது மீராவின் உண்மையான பக்தியை நினைத்து அவனும் கண்ணனால்
கவரப்பட்டான். மனைவிக்காக அரண்மனை வளாகத்தில் ஒரு கோவிலை
கட்டிக்கொடுத்தான். அந்த கோவிலில் இருந்த கண்ணனுக்கு பூமாலையுடன், தினமும்
பாமாலையும் சூட்டி வழிப்பட்டாள் மீரா. அவளது பக்தியை அறிந்து அந்தப்
பகுதியில் இருந்த சாதுக்களும், மக்களும் திரண்டு வந்து கண்ணன் வழிபாட்டில்
கலந்து கொண்டனர் அவர்களிடம் மீரா, அன்பையே வலியுறுத்தினார். அன்பால்
அகிலத்தையும் ஆளலாம் என்ற கருத்தை ஆழப்பதியச் செய்தார்.
மீராவுக்கு வந்த சோதனை
இறைவன்
தன்பால் பக்தர்கள் கொண்டுள்ள பக்தி எவ்வளவு ஆழமானது என்பதை அறிந்து
கொள்ளும் ஆசையினால் சந்தோஷத்தை அவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு நீடிக்க
விடுவதில்லை . மீராவுக்கும் அப்படித்தான். பல காரணங்ககளை கூறி மீராவின்
மீது போஜராஜனுக்கு வெறுப்பு வர வைக்க முயன்ற உறவினர்கள், இறுதியில் எடுத்த
அஸ்திரம் மீராவை களங்கப்படுத்துவது என்பதைத்தான். சந்தோசத்திற்கு முதல்
எதிரி சந்தேகம்தான். அந்த சந்தேகத்தை போஜராஜனுக்குள் எரிய வைத்தனர்.
இதற்கு ஏற்றாற்போல் ஒரு சம்பவம் நடைப்பெற்றது.
மீரா
கண்ணன் மேல் கொண்ட பக்தியும், அதன் வாயிலாக அவர் வலியுறுத்தும் அன்பு
மார்க்கமும் வானளாவ வளர்ந்து முகலாய அரசர் ஒருவரை அடைந்தது. தன்
வாழ்நாளில் மீரா பாடுவதையும், அதன் வாயிலாக அவர் கூறும் அன்பு
மார்க்கத்தையும் ஒரு முறையாவது கேட்டிட வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.
சாதுவைப் போல மாறுவேடத்தில், மீரா தினமும் தொழும் கண்ணன் கோவிலுக்கு
வந்தார் அந்த முகலாய அரசர். தான் பிருந்தாவனத்தில் இருந்து வருவதாக கூறி,
மீராவிடம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். பிருந்தாவனத்தின் பெயரைக்
கேட்டதும் மீராவின் மனம் கண்ணனிடம் கரையத் தொடங்கி விட்டது.
பின்னர்
பூஜை முடிந்ததும் கண்ணன் காலடியில் முத்து மாலை ஒன்றை வைத்து சென்றான்
அந்த அரசன். தங்கள் நாட்டின் எதிரியான முகலாய அரசரின் வருகையும் அவரிடம்
மீரா வெகு நேரம் பெசிக்கொண்டுருந்ததும் இறுதியில் முகலாய அரசன், மீராவுக்கு
முத்து மாலை பரிசளித்ததாகவும் அரண்மனை ஒற்றர்களால் போஜராஜனிடம் திரித்து
கூறப்பட்டது.
மரண தண்டனை
சந்தேகம்
போஜராஜனை முழுவதுமாக சாய்த்து விட்டது. மீராவால் தனது வம்சத்திற்கு
இழுக்கு ஏற்பட்டு விட்டதாகவும், அதனை துடைக்கும் நிமித்தமாக நதியில்
விழுந்து உயிர்விடும்படியும் உத்தரவிட்டான் போஜராஜன். கண்ணனின் கணக்கு
அதுதான் என்றால் சம்மதம் என்று கூறிய மீராவும் நதி நீரில் விழுந்தார்.
ஆனால் தண்ணீரால் அந்த தங்க மகளை அடியில் தாழ்த்த முடியவில்லை. மறுகரையை
அடைந்தார் மீரா. அப்போது, "நீ இங்கிருந்து நடந்து பிருந்தாவனத்திற்கு
செல். உன் ஆன்மிக பணி தொடரட்டும். உரிய நேரத்தில் உன்னை அழைத்து
கொள்வேன்" என்று அசரீரியாக கண்ணனின் குரல் ஒலித்தது. நதியில் விழுந்ததும்
பிழைத்தது இறைவனின் அருள். இது ஒரு புதுப்பிறவி போன்றது அவன் மீது அன்பு
கொண்டு இருப்பதே உத்தமம் என்ற எண்ணத்தில் பிருந்தாவனத்தை நோக்கி சென்றார்
மீரா.
பிருந்தாவனத்தில்...
பிருந்தாவனத்தில்
மீராவின் புகழ் மேலும் மேலும் வளர்ந்தது இந்நிலையில் மீரா இல்லாததால்
சித்தூர் ராஜ்ஜிய மக்கள் பசி பஞ்சத்தால் அல்லாடினர். மீராவை இழந்ததே
இதற்கு காரணம் என்று அனைவரும் வருந்தினர். மக்களின் கருத்து மன்னன்
போஜராஜனுக்கும் தெரிய வந்தது. அவர் மீராவை தேடி பிருந்தாவனத்திற்கு
வந்தார். தன் தவறுக்காக மனம் வருந்தினார். மீண்டும் சித்தூர் வரும்படி
பணிந்தார். மனமிரங்கிய மீரா, தான் அங்கு வருவதாகவும் ஆனால் கண்ணன்
குடியிருக்கும் கோவிலில் தான் தங்குவேன் என்றும் நிபந்தனையுடன் சம்மதம்
தெரிவித்தார். சிறிது காலம் அங்கிருந்த மீரா, துவாரகை செல்ல விரும்பினார்.
துவாரகை தான் கிருஷ்ணனை அடைய ஒரே வழி என்று அவர் நினைத்தார் அதன் படி
துவாரகை சென்று கோகுலாஷ்டமி தினத்தன்று கண்ணனை நினைத்து காணம் பாடினார்.
கண்ணனுடன் கலந்தாள்
பாடிக்
கொண்டு இருந்த மீரா, திடீரென்று கோவில் கருவறைக்குள் நுழைந்தார். அப்போது
ஒரு ஒளிக்கீற்று மின்னலாக கோவிலின் கருவறையை மூடியது. சிறிது நேரம்
கழித்து அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் கருவறை கதவை திறந்தபோது,
கண்ணனின் சிலை மீது மீராவின் ஆடை மட்டுமே இருந்தது. மீரா சிறுவயதில்
இருந்து தன் கணவனாக எண்ணி காதலித்து வந்த கண்ணனுடன் கலந்திருந்தாள் .
This is Very Good article
ReplyDelete