Pages

Thursday, May 02, 2013

நீங்கள் கெளசிக கோத்திரமா?



ஸ்ரீ விச்வாமித்ர மகரிஷியின் சிலா ரூபம் இடம் பெற்றுள்ள திருக்கோவில் பற்றிய விவரம் இது:


திருநெல்வேலி மாவட்டத்தில் விஜயாபதி என்னும் இடத்தில் மகரிஷி தவம் செய்து, யாகம் வளர்த்து, ஸ்ரீ மகாதேவர், ஸ்ரீ மகாலிங்கம், அம்பாளை பிரதிஷ்டை செய்து பூஜித்த தலம் உள்ளது. 
கோவிலுக்குப் பக்கத்திலேயே மகரிஷியின்  சிலா உருவம்.
நான்கு பக்கமும் சரவிளக்கு தொங்க, பழைய கட்டிடமாக உள்ளது.  
எதிரிலேயே தாமிரவருணி ஆறாக  ஓடுகிறது. 
அதில் ஸ்ரீ மகரிஷி ஸ்நானம் செய்து பெரிய யாக குண்டம் அமைத்து அவர் தவம் செய்த இடம். 
ஆஹா!  அற்புதம்!

பாக்கியம் உள்ளவர்களுக்குத்தான் தரிசனம்   கிடைக்கும்.
தியானம் செய்து பழக்கம் உள்ளவர்கள், சிலா  முன் அமர்ந்து தியானம் செய்தால் சூஷ்மமாக மகரிஷியின் தரிசனம் கிடைக்கும். 
நான் அதை ஆனந்தமாக அனுபவித்தேன்.   இந்த கோவிலைப் பற்றி வெளிஉலகிற்குத் தெரியவில்லை.   ஆடம்பரம், ஆரவாரமின்றி அமைதியாக உள்ளது. 
ஸ்ரீ  மகரிஷியை தரிசித்து விட்டு வந்த பின், நம் வாழ்வில் அற்புதங்கள் நடப்பதை உணர்வீர்கள்.

வள்ளியூர் என்ற ரயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து ஆட்டோ, கார் ஏதேனும் ஒன்றைப் பிடித்து (பஸ் வசதி கிடையாது), விஜயாபதி என்று சொல்லி  (25கி.மீ) போகவும். 
பக்கா கிராமம்.  இருபுறமும் வயல்வெளி.  ஆள் நடமாட்டமே கிடையாது. 
மனம் பதற்றப்படாமல், அமைதியாக மகரிஷியிடம், "உம்மை தரிசனம் செய்ய வருகிறேன்,  அருள்புரிவீர்" என்று வேண்டிக் கொண்டு செல்லுங்கள்.

போகும்போது சிறிய கிராமம் வரும்.  அங்கு குருக்கள் வீடு எங்கு உள்ளது என்று கேட்டால் சொல்வார்கள். வெளியூரிலிருந்து வருவது தெரிந்தால் கட்டாயம் உதவுவார்கள். 
கோவில் மூடி விடுவார்கள் என்று யாரேனும் சொன்னாலும் அதைரியப்பட வேண்டாம்.
கோவிலை நமக்காக அர்ச்சகர் திறப்பார்.
கோவிலுக்கு போகும்போது, அகல், எண்ணெய், விளக்குத்திரி, தீப்பெட்டி, கோலமாவு, கல்கண்டு, திராட்சை (நைவேத்யம் செய்ய) எடுத்துப் போய் சரவிளக்கிலும் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, கோலம் போட்டு, நைவேத்யம் செய்து சிறிது நேரம் உட்கார்ந்து தியானம் செய்யவும்.

அங்கு பக்கத்தில் கடை ஹோட்டல் எதுவும் கிடையாது.  பக்கத்தில் வீடுகளும் இல்லை.
தேவையான பழம், பிஸ்கட், தண்ணீர் எல்லாம் கொண்டு செல்லவும்.

கெளசிக கோத்திரக்காரர்கள் அவசியம் தரிசிக்க வேண்டும்.

(உபயம்: அகிலா கோபாலகிருஷ்ணன், சென்னை-88)

ஞான ஆலயம் / பிப்ரவரி 2008 வெளியீடு.

மேற்சொன்ன இடத்திற்கு சென்று ஸ்ரீமகரிஷியை தரிசனம் செய்தவர்கள் தயவு செய்து உங்கள் எண்ணங்களை இங்கு பகிர்ந்துகொண்டால், எல்லோருக்கும் உதவியாக இருக்கும்.  நன்றியுடன் - முரளிதரன்.

No comments:

Post a Comment