வாழ்வாங்கு வாழ வரம் அருளும் வைகுண்ட ஏகாதசி
உலகம்
முழுவதும் கோடானு கோடி மக்கள் இருக்கிறார்கள். அதே அளவுக்குப்
பிரச்னைகளும் உள்ளன. பணக்காரர், ஏழை, படித்தவர், படிக்காதவர், உயரம்,
குள்ளம், சிவப்பு, கருப்பு, பருமன், ஒல்லி.. இவ்வாறு ஏராளமான
வித்தியாசங்கள். ஏன் இப்படி?
இதற்கான
விடையைக் கண்டுபிடிப்பதற்காக 2000 வருடங்களுக்கு முன்னாள் ஓர் ஆராய்ச்சி
நடந்தது. "திறமைசாலிகள் பலர் கூடி ஆராய்ந்தார்கள். அவர்கள் சொன்ன
விடைகளும் பலவாறாக இருந்தன.
இதற்கெல்லாம்
ஜாதகம் தான் காரணம். அவரவர் கைரேகை அமைப்பு தான் இப்படி. அவனவன் செய்த
பாவ-புண்ணியம். அதெல்லாம் கிடையாது. அவனவன் தலை எழுத்து தான் காரணம்."
இப்படி
ஆளாளுக்கு ஒவ்வொரு காரணம் சொன்னார்கள். ஒருத்தர் சொன்ன காரணத்தை
அடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. விவாதங்கள் வளர்ந்தனவே தவிர சரியான
தீர்ப்பு கிடைக்கவில்லை. கடைசியில் எல்லோரும் வள்ளுவரிடம் போய்
நின்றார்கள்.
"சுவாமி
உலகில் இல்லாமையுடனும், ஏற்றத் தாழ்வுகளுடனும் ஏராளமானோர் இருக்கிறார்களே,
அதற்கு என்ன காரணம்" என்று கேட்டார்கள். வள்ளுவர் தீர்ப்பு சொன்னார்:
"இவர் பலர் ஆகியகாரணம் நோற்பார்
சிலர் பலர் நோவாதவர்"
இந்த குறளுக்கு வாரியார் சுவாமிகள் அற்புதமாக விளக்கம் சொல்லியிருக்கிறார்:
"இல்லாதவங்க
பல பேரு. இல்லாதவங்கன்னா, காசு-பணம் இல்லாதவங்கன்னு அர்த்தம் இல்லை. நல்ல
கணவன் இல்லாதவர்கள்; நல்ல மனைவி இல்லாதவர்கள்; குழந்தை இல்லாதவர்கள்;
குழந்தை இருந்தும் அது நல்ல குழந்தையாக இல்லாதவர்கள்; எல்லாம் இருந்தும்
நிம்மதி இல்லாதவர்கள்; இப்படி நிறையச் சொல்லலாம். பல பேர்
அடுத்தவங்களுக்கு பூஜை போட்டுத் தொழில் ஆரம்பிச்சுக் கொடுப்பாங்க. அவங்க
நல்லா முன்னுக்கு வருவாங்க. ஆரம்பிச்சுக் கொடுத்தவங்க கைராசி அப்படி.
ஆனால், அடுத்தவங்களுக்காகச் செய்யும் இவங்களே தனக்குத் தானே ஏதாவது தொழில்
தொடங்குவாங்க. ஆனா, அது ஒண்ணும் இல்லாமப் போயிடும். அவர் கைராசி
அவருக்கு வேலை செய்யாது.
பல
பேருக்கு எல்லாம் இருக்கும். கூடவே எல்லா வியாதிகளும் இருக்கும். காசு,
பணம், படிப்புன்னு எல்லாம் இருந்தும் கல்யாணம் ஆகாத பிரச்னை பல பேருக்கு;
கொஞ்சம் பேரு எந்தப் பிரச்னையும் இல்லாம சௌக்கியமா இருப்பாங்க. இதுக்கு
என்ன காரணம்னு வள்ளுவர் சொல்றார்: "நாள் கிழமைன்னா கொஞ்சம் பேர் தான்
நோன்பு இருப்பாங்க. விரதம் இருப்பாங்க. பல பேர் இந்த நல்லதெல்லாம்
செய்யறதில்லை. அதனால்தான் கொஞ்சம் பேரு நல்லா இருக்காங்க; பல பேருக்குப்
பிரச்னை கூடாரம் அடிச்சு இருக்கு" என்பது வாரியார் சுவாமிகள் விளக்கம்.
இதன்படி, நோன்பு, விரதம் என்பவை மக்களுக்குப் பல்வேறு விதமான வளங்களை வழங்கக் கூடியவை என்பது புரியும்.
நோன்பு,
விரதமாகியவற்றில் நோன்பு என்பது அவரவர் குடும்ப வழக்கப்படி
அனுசரிக்கப்படுவது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு நோன்பு இருக்கும்.
ஆனால், விரதம் என்பது பொதுவானது. நோன்பை விட விரதத்துக்குக்
கட்டுபாடுகள் அதிகம். விரதங்கள் பல இருக்கின்றன எல்லாவற்றிலும்
உயர்ந்தது ஏகாதசி விரதம்.
கங்கையை விடச் சிறந்த தீர்த்தம் இல்லை.
விஷ்ணுவை விட உயர்ந்த தெய்வம் இல்லை.
காயத்ரியை விட உயர்ந்த மந்திரம் இல்லை.
தாயிற் சிறந்ததோர் கோயிலும் இல்லை.
ஏகாதசியை விடச் சிறந்த விரதம் இல்லை என ஞான நூல்கள் கூறுகின்றன.
தேய்பிறையில்
வரும் ஏகாதசி, வளர்பிறையில் வரும் ஏகாதசி என மாதத்துக்கு இரண்டாக ஒரு
வருடத்தில் 24 ஏகாதசிகள் வரும். ஒரு சில வருடங்களில் ஒரு ஏகாதசி அதிகமாகி
25 ஏகாதசிகளும் வருவதுண்டு.
ஏகாதசி
விரதம், வழிபாடு விஷ்ணுவுக்கு உரியது; அதனால் வைஷ்ணவர்கள் மட்டும் அதை
கடைப்பிடித்தால் போதும் என்ற எண்ணம் இல்லாமல் அனைவருமே கடைப்பிடிக்க
வேண்டிய உத்தமமான விரதம் அது.
அனைவரும் அனைத்துச் செல்வங்களும் பெற்று அமைதியான வாழ்வை அடைந்திட, 25 ஏகாதசிகளின் மகிமைகளையும் அறியலாம்.
1. உற்பத்தி ஏகாதசி
கிருத
யுகம் நடந்து கொண்டிருந்தது. அது நல்ல யுகம் தான். மென்மையானதுதான்;
இருந்தாலும் ஒளி வீசும் விளக்கின் அடியில் கொஞ்சம் இருள் இருப்பதைப்போல
கிருத யுகத்தில் முரண் என்று ஒரு அரக்கன் இருந்தான். இரக்கம் என்பதே அணு
அளவுகூட இல்லாத அவன், தேவர்களையும், தேவர்களின் தலைவனான இந்திரனையும்
தேவலோகத்தை விட்டு வெளியே விரட்டினான். வேத வல்லுனர்களை வாட்டி வதைத்தான்.
முரணின் பலம் கண்டு பயந்த தேவேந்திரன், கயிலாயம் சென்று "சிவபெருமானே, என்னைக் காப்பாற்றுங்கள்" என்று வேண்டினான்.
சிவபெருமானோ,
"தேவேந்திரா, நீ மகாவிஷ்ணுவிடம் போ, அவர்தான் இப்போது உன்னைக் காப்பாற்றக்
கூடியவர்" என்று வழிகாட்டினார். அதன்படி, பாற்கடலுக்குப் போய் பகவான்
திருவடிகளில் விழுந்தான் தேவேந்திரன். "கவலைப்படாதே" என்று அபயமளித்த
கருடத்வஜன் உடனே போர்க்கோலம் பூண்டு கிளம்பினார். தேவர்கள் அவரைப்
பின்தொடர்ந்தார்கள்.
அச்சுதனுக்கும்
அரக்கர் படைக்கும் கடும் போர் மூண்டது. சக்ரபாணியின் சக்ராயுதம், அரக்கர்
படைகளை அழித்தது. மூர்க்கனான முரண் கோபாவேசம் கொண்டு, தானே முன் நின்று
தேவர் படையை சிதறடித்தான்.
திடீரென்று,
மகாவிஷ்ணு பயந்தவர் போல தம்மைக் காட்டிக்கொண்டு போர்க்களத்தை விட்டு
அகன்று பத்ரிகா ஆசிரமம் சென்றார். அங்கே, சிம்ஹாவதி என்னும் குகையில் போய்
பள்ளி கொண்டார்.
தெய்வத்தை
உணராமல், அவர் தந்த சந்தர்ப்பத்தை நல்ல விதமாக உபயோகப்படுத்திக் கொள்ள
தெரியாத முரண், "பயந்து ஓடுகிறான் பார். விடப் போவதில்லை அவனை" என்று
அகங்காரத்துடன் கொக்கரித்துக் கொண்டு, வேதங்களாலும் தேடிக் கண்டுப்பிடிக்க
முடியாத பெருமாளைப் பின் தொடர்ந்தான்.
சிம்ஹாவதி குகையில் பகவான் பள்ளி கொண்டு இருப்பதை அறிந்து, "இவனை இப்போதே கொல்கிறேன்"
என்று
வாளை உருவினான் முரண். அப்போது எதிர்பாராத ஒன்று நடந்ததது பரம்பொருளான
பகவானின் திருமேனியில் இருந்து, அழகான பெண் ஒருத்தி தோன்றினாள். அவள்
கைகளை இருந்த ஆயுதங்கள் மின்னின. "முரனே வாடா போருக்கு" என்று அழைத்தாள்.
"ஒரே
அம்பினால் உன் கதையை முடிககிறேன்" என்று எகத்தாளமாக பேசிய முரண் அம்பை
எடுக்க முயன்றான். அதற்குள் அந்தப் பெண் "ஹூம்" என்று ஓர் ஒலி எழுப்பினாள்.
அச்சுதனையே அழிக்க நினைத்த முரன் , அந்த ஒலியால் அப்போதே சாம்பல் ஆனான்.
அதே நேரத்தில் மகாவிஷ்ணு இருந்து எழுந்தார். தன உடலில் இருந்து
வெளிப்பட்ட சக்தியையும், அவள் செயலையும் பாராட்டினார். அவளுக்கு "ஏகாதசி"
என்று திருநாமம் சூட்டினார். மேலும், "ஏகாதசியே, நீ தோன்றிய இந்த நாளில்
உபவாசம் இருந்து என்னை வழிபடுபவர்களுக்கு வைகுண்டவாசம் அளிப்பேன்.
வாழ்நாளில் அவர்களுக்கு ஆரோக்கியம், செல்வம் என எல்லா விதமான சுகங்களையும்
வழங்குவேன்" என்று வாக்களித்தார்.
ஏகாதசி
தேவி மார்கழி மாதம் தேய்பிறையில் உதித்ததால் அந்த நாளுக்கு உற்பத்தி
ஏகாதசி என்று பெயர் உண்டானது இந்த உற்பத்தி ஏகாதசி அன்று விரதம் இருந்து
விஷ்ணுவை வஜிபடுபவர்களுக்குக் கிடைக்கும் பலன்களைத்தான் பகவானே
சொல்லிவிட்டாரே!
2. மோட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)
மார்கழி
மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி மோட்ச ஏகாதசி எனப்படும் மாதங்களில் நான்
மார்கழியாக இருக்கிறேன் என ஸ்வாமியே சொன்ன மார்கழியில் வரும் இந்த ஏகாதசி
மிக மிக சிறப்பு வாய்ந்தது. வைகுண்ட ஏகாதசி என அளக்கப்படும் இந்த நாளில்
பெருமாளை வழிபடுபவர்களுக்கு வைகுண்டப் பேறும், அவர்களின் முன்னோர்களுக்கு
முக்தியும் கிடைக்கும்.
வைகுண்ட ஏகாதசியின் மகிமைகளைப் பற்றிய ஒரு சில தகவல்கள்:
கம்பம்
என்னும் நகரை மன்னர் வைகானாசர் ஆண்டு வந்தார். ஒரு நாள் இரவு மன்னர் ஒரு
கனவு கண்டார். அது அவருக்குத் துயரத்தை விளைவித்தது. பொழுது விடிந்ததும்
வேதத்தில் கரை கண்டவர்களை அழைத்தார்.
உத்தமர்களே!
நேற்று இரவு நான் ஒரு கெட்ட கனவு கண்டேன். என் முன்னோர்கள் நரகத்தில்
விழுந்து துயரப்படுகிறார்கள். என்னைப் பார்த்து, "மகனே, நாங்கள் படும்
துயரம் உன் கண்ணில் படவில்லையா? இந்த நரகத்தில் இருந்து எங்களை விடுவிக்க
ஏதாவது ஒரு வழி செய்யமாட்டாயா?" என்று கதறி அழுதார்கள். இதற்கு என்ன
அர்த்தம்? நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும்"
என்று வேண்டினார் மன்னர்.
"மன்னா!
பர்வதர் என்று ஒரு முனிவர் இருக்கிறார். உன் முன்னோர்கள் ஏன் நரகத்தில்
இருக்கிறார்கள், அவர்களை எப்படிக் கரை ஏற்றுவது என்பதெல்லாம்
அவருக்குத்தான் தெரியும், அவரிடம் போ" என்று வழி காட்டினார்கள்.
மன்னர்
உடனே பர்வதரை தேடிப் போனார். அவரிடம் தான் கண்ட கனவை சொல்லி, தன்
வருத்தத்தை நீக்குமாறு வேண்டினார். உடன் கண்களை மூடி சிறிது நேரம்
தியானித்த பர்வத முனிவர், பின் கண்களைத் திறந்து எதிரில் கை கூப்பி
நின்றிருந்த மன்னரிடம் சொல்லத் தொடங்கினார்.
"வைகானசா உன் தந்தை அரசன் என்ற பதவி போதையில் மனைவியை அலட்சியம் செய்தான்.
சேர
வேண்டிய காலங்களில் தன்னைச் சேரும்படி மனைவி வேண்டியும், அவளை
மதிக்கவில்லை. அவள் பார்வையில் இருந்தே விலகி போனான். இல்லற தர்மத்தில்
ஈடுபடுபவர்கள், நல்ல பிள்ளை பிறக்க வேண்டும் என்பதற்காக மனைவியுடன் சேர
வேண்டிய காலங்களில் சேர வேண்டும் என்பதை மறந்தான். அந்தப் பாவம்தான்
அவனுக்கு நரகம் கிடைத்திருக்கிறது.
நீ
உன் மனைவி மக்களுடன் மோட்ச ஏகாதசி விரதத்தை முறைப்படி கடைப்பிடித்து
பரவாசுதேவனான பகவானை பூஜை செய். அதன் பலனை உன் முன்னோர்களுக்கு அர்ப்பணம்
செய். அவர்களுக்கு நரகத்தில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று சொன்னார்
பர்வதார்.
மன்னனும்
விதிப்படி மோட்ச ஏகாதசி விரதம் இருந்து பலனை முன்னோர்களுக்கு
அர்ப்பணித்தார். அதன் பலனாக அவன் முன்னோர்கள் நரகத்தில் இருந்து விடுதலை
பெற்று மகனுக்கு ஆசி கூறினார்கள். அன்று முதல் மன்னர் மோட்ச எகாதசியைக்
கடைப்பிடித்துச் சிறப்படைந்தார்.
ஆம், நமக்கு மட்டுமல்ல, நம் முன்னோர்களுக்கும் நற்கதி வரக் கூடிய ஏகாதசி இது.
2. மோட்ச ஏகாதசி (வைகுண்ட ஏகாதசி)
ஆலிலை
மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபி (தொப்புள்) கமலத்தில் இருந்து
பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது.
அதே
வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள்.
அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றனர். பெருமாள் அவர்களை
தடுத்து "பிரம்மனை கொல்லாதீர்கள். உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே
தருகிறேன்" என்றார். கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும்
அலட்சியப்படுத்துவது அசுரர்களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள்
அலட்சியமாக, "நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம்
தருவோம்" என்றனர். சுவாமி சிரித்தார். "அப்படியா, சரி. இப்படி அகங்காரம்
கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு அரக்கர்களாகவே
பிறக்க வேண்டும்"என்றார். அசுரர்கள் திகைத்தார்கள். சுவாமி, தாங்கள்
இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம்
நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு நாங்கள் தங்களுடைய அருளினால்
சித்தி அடைய வேண்டும்" என்றார்கள். அவர்கள் வேண்டிய படியே ஒரு மாத காலம்
போரிட்டு பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள்.
இறுதியில்
மகாவிஷ்ணுவின் குணங்கள் அனைத்தையும் உணர்ந்த அசுரர்கள், "தெய்வமே தங்கள்
பரம பதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்" என வேண்டிக் கொண்டனர்.
ஒரு மார்கழி மாதம் வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு
நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில்
சேர்த்தார்.
அங்கே
ஆதிசேசன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்ய மங்கள வடிவம் கண்டு பரம
ஆனந்தம் அடைந்தனர், அசுரர்கள். "சுவாமி பிரம்மா முதலான எல்லோருக்கும்
பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரகமாக) பிரதிஷ்டை செய்து மார்கழி மாத
வளர்பிறை ஏகாதசி அன்று தாங்கள் எங்களுக்கு செய்த அனுக்கிரகத்தை உற்சவமாக
கடைப் பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக
வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும் தங்களுடன் வடக்கு நுழைவாயில்
வழியே வெளியே வருவார்கள். அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும்,
மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை" என்று வேண்டினார்கள்.
"அப்படியே ஆகும்" என அருள் புரிந்தார் அச்சுதன்.
வைகுண்ட
ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க
வேண்டும் என நமக்காக வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத பகவானும் அதற்கு
ஒப்புதல் தந்திருக்கிறார். எனவே அன்று வைகுண்டவாசனைத் தரிசித்து வளம்பெற
வேண்டியது நமது கடமை, பொறுப்பு, தேவையும் கூட.
3. ஸபலா ஏகாதசி
தை
மாத தேய்பிறையில் வரும் ஏகாதசி ஸபலா ஏகாதசி என்று கூறப்படும் இந்த நாளில்
உபவாசம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜை செய்து பழங்களை நைவேத்தியம் செய்ய
வேண்டும். மேலும் இந்த நாளில் தீப தானம் செய்வது மிகவும் விஷேசம்.
இரவெல்லாம் கண்விழித்து மகாவிஷ்ணுவின் வரலாற்றைக் கேட்க வேண்டும். கண்
விழித்தால் புண்ணியம் என்பதற்காக தாயக்கட்டை ஆடுவதோ, சினிமாப் படம்
பார்ப்பதோ கூடாது. அது பெரும் பாவம். லும்பகன் என்னும் இளவரசனும் இந்த
எகாதசியைக் கடைப்பிடித்து வைகுண்டத்தை அடைந்தான்.
4. புத்ரதா ஏகாதசி
தை
மாத வளர்பிறை ஏகாதசி புத்ரதா ஏகாதசி எனப்படும் ச்கேதுமான் என்ற அரசன்
பிள்ளை இல்லாதக் குறை நீங்க, இந்த ஏகாதசி விரதம் இருந்து, உத்தமமான மகனைப்
பெற்றான். தனது நாட்டில் இருக்கும் அனைவரையும் இந்த ஏகாதசி விரதம் இருக்க
செய்தான்.
5. ஷட்திலா ஏகாதசி
மாசி
மாத வளர்பிறை ஏகாதசியே, ஷட்திலா ஏகாதசி எனப்படும். பிரம்மஹத்தி, பசுவதை,
திருட்டு முதலானவற்றால் உண்டாகும் பாவங்களைப் போக்கும் விரதம் இது.
6. ஜயா ஏகாதசி
மாசி
மாத வளர்பிறை ஏகாதசி ஜயா ஏகாதசி ஆகும். இந்திரனின் சாபம் பெற்று,
மால்யவான் என்னும் கந்தர்வன் தன் மனைவியுடன் பேயாக அலைந்தான். இந்த
கந்தர்வன் தன்னை அறியாமலேயே, இந்த ஏகாதசி அன்று உண்ணாமலும், உறங்காமலும்
இருந்து சாப விமோசனம் அடைந்தான். பேய்க்கும் நற்கதி தரும் ஏகாதசி இது.
7. விஜயா ஏகாதசி
பங்குனி
மாத தேய்பிறை ஏகாதசி விஜய ஏகாதசி ஆகும். இது விருப்பங்களை பூர்த்தி
செய்து வெற்றியும் தரக்கூடியது. அவதார புருஷரான ஸ்ரீ ராமச்சந்திர
மூர்த்தியே இதை அனுஷ்டித்து ராவணனை வென்று, சீதையை மீட்டார் என்றால், இதன்
பெருமை சொல்லி முடியுமோ?
8. ஆமலகி ஏகாதசி
பங்குனி
மாத வளர்பிறை ஏகாதசி ஆமலகி ஏகாதசி எனப்படும். நெல்லி மரத்தின் அருகில்
இந்த ஏகாதசி விரத பூஜை செய்யப்படுவதால் (ஆமலகம்) - நெல்லி ஆமலகி ஏகாதசி
எனப்பெயர் பெற்றது. அனைத்துப் புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனையும்
கோதானப் பலனையும் கொடுக்கும் இந்த ஏகாதசி.
9. பாபமோசநிகா ஏகாதசி
சித்திரை
மாத தேய்பிறை ஏகாதசி பாபமோசநிகா ஏகாதசி எனப்படும். பாவங்கள் அனைத்தையும்
போக்கும். இந்த ஏகாதசியின் பெருமையை படிப்பவர், கேட்பவர் ஆகியோர்களின்
பாவங்கள் அனைத்தும் நீங்கும். மாந்தாதா என்ற மன்னருக்கு இந்த ஏகாதசியின்
பெருமையை லோமேசர் என்னும் முனிவர் விவரித்திருக்கிறார்.
10. காமதா ஏகாதசி
சித்திரை
மாத வளர்பிறை ஏகாதசிக்கு காமதா ஏகாதசி என்று பெயர். இதன் மகிமையை திலீப
மகாராஜாவுக்கு வசிஷ்டர் சொல்லியிருக்கிறார் தம்பதி இடையே ஒற்றுமையை
ஏற்படுத்தும் ஏகாதசி இது.
11. வரூதினி ஏகாதசி
வைகாசி
மாதம் வரும் தேய்பிறை ஏகாதசி வரூதினி ஏகாதசி ஆகும். சகல பாவங்களையும்
நீக்கி மங்களங்களை அருளக்கூடியது. இந்த ஏகாதசி, பிறவிப் பெருங்கடலை
கடக்கத் தோணியாக உதவுவது.
சிவபெருமான்,
மாந்தாதா, துந்துமாரன் ஆகியோர் இந்த எகாதசியைக் கடைப்பிடித்து நலம்
பெற்றார்கள். வித்யா (கல்வி) தானப் பலனைத் தரக் கூடிய இந்த ஏகாதசி நாளில்
செய்யும் தானம், எவ்வளவு சிறியதாக இருந்தாலும் சரி, ஆயிரம் மடங்கு பலனைத்
தரும்.
12. மோகினி ஏகாதசி.
வைகாசி
மாத வளர்பிறை ஏகாதசி மோகினி ஏகாதசி எனப்படும். சகல விதமான பாவங்களையும்,
அறியாமையையும் நீக்கும். இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி அவதார
புருஷரான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி கேட்க, குலகுருவான வசிஷ்டர்
விவரித்திருக்கிறார்.
13. அபரா ஏகாதசி
ஆனி
மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசி, அபரா ஏகாதசி எனப்படும். இந்த
ஏகாதசி அன்று பெருமாளை திரிவிக்கிரமாக பூஜை செய்ய வேண்டும். இந்த ஏகாதசி,
பாவங்கள் பலவற்றை நீக்கி, புண்ணியங்கள் அருளும். பிரம்மஹத்தி, பொய்
சாட்சி, குருவைத் திட்டி அவமானப்படுத்தியது முதலான கொடிய பாவங்களை எல்லாம்
இந்த ஏகாதசி விரதம் போக்கும். மாசி மாதத்தில் பிரயாகையில் புனித நீராடல்,
காசியில் சிவராத்திரி விரதம் இருந்து சிவா பெருமானை பூஜை செய்வது, கயையில்
முன்னோர்களுக்காகப் பிண்டம் அளிப்பது, கேதாரேச்வரரைத் தரிசிப்பது,
பத்ரிகாசிரமத்துக்குப் புண்ணிய யாத்திரை போவது ஆகியவற்றால் எந்த அளவுக்குப்
புண்ணியம் கிடைக்குமோ, அவ்வளவு புண்ணியத்தையும் ஒரு சேர அளிப்பது அபரா
ஏகாதசி.
14. நிர்ஜலா ஏகாதசி
ஆனி
மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜலா ஏகாதசி. பாண்டவர்களில் மூத்தவரான
தர்மபுத்திரர் ஒரு முறை வியாசரை தரிசித்தபோது அவரை வணங்கி "குருதேவா,
துன்பங்கள் பலப்பல. அவை எப்போது எப்படி மனிதர்களை பாதிக்கும் என்பது
யாருக்கும் தெரியாது. கலியுகத்திலோ, கேட்கவே வேண்டாம். அடை மழை போல,
நேரம் காலம் பாராமல் அனைவரையும் படுத்தும். இந்த துன்பங்கள்
நீங்கும்படியான ஒரு சுலபமான வழியைச் சொல்லுங்கள்" என வேண்டினார்.
"தர்மபுத்திரா,
எல்லாத் துன்பங்களையும் நீக்கக் கூடியது ஏகாதசி விரதம் மட்டுமே.
ஏகாதசியன்று, உபவாசம் இருந்து பெருமானை பூஜிப்பதைத் தவிர சுலபமான வழி
வேறெதுவும் இல்லை. சகல விதமான சாஸ்திரங்களும் இதைத் தான் சொல்கின்றன"
என்று பதில் சொன்னார் வியாசர்.
அருகில்
இருந்து இதைக் கேட்ட பீமன், "உத்தமரான முனிவரே, என்னுடன் பிறந்தவர்கள்
எல்லாம் ஏகாதசி விரதம் இருக்கிறார்கள். என் தாயும் மனைவியும்கூட ஏகாதசி
விரதம் இருக்கிறார்கள். அவர்கள் எல்லோரும் என்னையும் ஏகாதசி விரதம் இருக்க
சொல்கிறார்கள் என்னால் செய்ய கூடியதா அது? ஒரு வேளை சாப்பிட்டுவிட்டு,
அடுத்த வேளை சாப்பிடாமல் இருப்பதே என்னால் முடியாது. என்னைப் போய்
முறையாக உபவாசம் இருந்து ஏகாதசி விரதம் இரு என்றால் நடக்கக் கூடியதா இது.
விருகம் என்னும் ஒரு தீ என் வயிற்றில் இருக்கிறது. (பீமனின் வயிற்றில்
அதிகமான பசியைத் தூண்டும் இந்தத் தீ இருந்ததால் தான் அவன் விருகோதரன் என
அழைக்கப்பட்டான்) ஏராளமான உணவைப் போட்டால் ஒழிய, என் வயிற்றில் இருக்கும்
நெருப்பு அடங்காது. வருடத்துக்கு ஒரே ஒரு நாள் என்னால் உபவாசம் இருக்க
முடியும். எனவே எனக்குத் தகுந்தாற்போல நான் எல்லா விதமான ஏகாதசிகளின்
பலனையும் பெரும் விதம் ஓர் ஏகாதசியை எனக்குச் சொல்லுங்கள்" என வேண்டினான்.
"கவலைப்படாதே
பீமா. உனக்காகவே அமைந்ததைப் போல ஒரு ஏகாதசி இருக்கிறது. ஆனி மாதத்தில்
வரும் வளர்பிறை ஏகாதசி அன்று, தண்ணீர்கூட அருந்தாமல் விரதம் இருக்க
வேண்டும். அதனாலேயே அது நிர்ஜல ஏகாதசி எனப்படுகிறது அந்த ஏகாதசி விரதத்தை
நீ கடைப்பிடி" என வழிகாட்டினார் வியாசர்.
வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான்.
அன்று
முதல் அந்த துவாதசி "பாண்டவ துவாதசி" என்றும், பீமன் விரதம் இருந்த அந்த
ஏகாதசி "பீம ஏகாதசி" என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும்
போக்கும் ஏகாதசி இது.
15. யோகினி ஏகாதசி
குபேரன்
சிவபூஜை செய்யும்போது, அவனுக்குப் பூக்களைக் கொண்டு வரும் வேலையை ஹேமமாலி
என்பவன் செய்து வந்தான். மனைவியிடம் மிகுந்த அன்பு கொண்ட ஹேமமாலி ஒரு
நாள், மனைவியுடன் மகிழ்ச்சியாகப் பேசிக் கொண்டிருந்ததால், குபேரனின்
பூஜைக்குப் பூக்களைக் கொண்டு போகவில்லை. பூஜையின்போது பூக்கள் இல்லாததைக்
கண்ட குபேரன் கோபத்தில் குதித்தான். "தவறு செய்த ஹேமமாலிக்குப் பதினெட்டு
விதமான குஷ்ட ராகங்கள் வரட்டும்" என்று சபித்தான். ஹேமமாலியைக் குஷ்ட
ரோகம் பீடித்தது. அவன் மனைவி விசாலாட்சி உள்ளம் உடைந்தாள். கணவன் மனைவி
இருவருமாக மேரு மலைக்குப் போய், அங்கே தவம் செய்து கொண்டிருந்த
மார்க்கண்டேயரின் திருவடிகளில் வீழ்ந்தார்கள். அவர் "யோகினி ஏகாதசி"யை
அவர்களுக்கு உபதேசித்தார். அதன்படியே விரதம் இருந்து மகாவிஷ்ணுவை பூஜித்த
ஹேமமாலி நோய் நீங்க பெற்றான். குபேரபுரிக்கே திரும்பினான். ஆடி மாத
தேய்பிறையில் வரும் ஏகாதசி யோகினி ஏகாதசி எனப்படும். குஷ்ட ரோகத்தை
நீக்கும் ஏகாதசி இது.
16. சயினி ஏகாதசி
மூன்றடி
மண் கேட்டு மகாபலியின் கர்வத்தை அடக்கிய வாமணர் திரிவிக்கிரம அவதாரம்
எடுத்து மகாபலியை பாதாள உலகத்துக்கு அனுப்பினார். அங்கே பக்தனான மகாபலியின்
மீது (அமர்ந்தார்) தன் திருமேனியை வைத்தார். (மகாபலிக்கு காவலாகத் தானே
இருந்தார் பகவான் என்றும் சொல்வதுண்டு). மற்றொரு திருமேனி கொண்டு
பாற்கடலில் பாம்பணையில் படுத்து உறங்கிய நாள், ஆடி மாத வளர்பிறை ஏகாதசி,
சுவாமி சயனித்த இந்த ஏகாதசி சயனி ஏகாதசி எனப்படும். இந்த ஏகாதசி அன்று தீப
தானம் செய்வது சிறந்த தர்மம் ஆகும்.
பாற்கடலில்
பாம்பணையில் பெருமாள் உறங்கும் ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை எனும்
நான்கு மாதங்களும் சாதுர்மாஸ்யம் எனப்படும். ஆவணியில் காய்கறிகள்,
புரட்டாசியில் தயிர், ஐப்பசியில் பால், கார்த்திகையில் பருப்பு வகைகள்
ஆகியவற்றைச் சாப்பிடக் கூடாது என ஏகாதசி மகாத்மியம் கூறுகிறது.
17. காமிகா ஏகாதசி
ஆவணி
மாத தேய்பிறை ஏகாதசி காமிகா ஏகாதசி எனப்படும். இந்த நாளில் துளசியால்
பெருமாளை பூஜை செய்வதால் ஸ்வர்ணத்தைத் தானம் செய்த பலன் கிடைக்கும். இந்த
ஏகாதசி அன்று நெய் தீபம் ஏற்றுவது, தீப தானம் செய்வது ஆகியவை மிகுந்த
புண்ணியத்தை அளிக்கும்.
18. புத்ர(ஜா)தா ஏகாதசி
ஏகாதசியின்
மகிமை எல்லா யுகங்களிலும் வெளிப்பட்டு இருக்கிறது. ஆவணி மாத வளர்பிறை
ஏகாதசி புத்ர(ஜா)தா ஏகாதசி எனப்படும். என்ன கோளாறாக இருந்தாலும் சரி..
அந்தக் கோளாறை நீக்கிப் புத்திர பாக்கியத்தை அளிக்கக் கூடியது இந்த ஏகாதசி.
இதன் மகிமையை விளக்கும் வரலாறு:
துவாபர
யுகத்தில் மாகிஷ்மதி நாட்டை ஆண்டு வந்த மன்னர் மகீஜித், குழ்ந்தை
இல்லாமல் வாடினார். வயதிலும், அனுபவத்திலும் முதிர்ந்த பெரியோர்களை
அழைத்துத் தன் குறையைச் சொல்லி காரணத்தை கேட்டார். அவர்கள், "மன்னா,
அதற்கான வழியை நாங்கள் தெரிந்து வருகிறோம்" என்று சொல்லி காட்டுக்குச்
சென்றார்கள். அங்கு லோமசர் என்ற முனிவரிடம், "முனிவரே, எங்கள் மன்னருக்கு
மகவு ஒன்று பிறக்க வழி செய்ய வேண்டும்" என்று வேண்டினார்கள்.
ஒரு
நிமிடம் கண்களை மூடி திறந்த லோமசர், "அன்பர்களே, உங்கள் மன்னர் போன
பிறவியில் ஒரு வியாபாரியாக இருந்ததால், வியாபர விஷயமாக வெளியூர் போகும்போது
நடுவழியில் தாகம் தாங்காமல் ஒரு குளத்துக்குத் தண்ணீர் குடிக்கப் போனான்.
அங்கு ஒரு பசு தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தது. இந்த பசு தண்ணீரை
கலக்கிவிடும் என்று எண்ணிய வியாபாரி, அதை விரட்டி விட்டுத் தான் மட்டும்
தண்ணீரைக் குடித்தான். அந்தப் பாவத்தின் காரணமாக உங்கள் மன்னனுக்குக்
குழ்ந்தை இல்லை. ஆவணி மாத வளர்பிறை ஏகாதசி அன்று உங்கள் மன்னனை விரதம்
இருந்து விஷ்ணு பூஜை செய்யச் சொல்லுங்கள். புத்ரஜாத என்னும் அந்த ஏகாதசி
புத்திரனை அளிக்கும்" என்று சொல்லி வழி காட்டினார்.
அவர்
சொல்படியே மன்னன் மகீஜித் முறைப்படி விரதம் இருந்தார் அவருக்கு
புத்திரனும் பிறந்தான். பிள்ளை பிறக்காது என மருத்துவர்களாலேயே
சொல்லப்பட்டவர்களுக்குக்கூட நல்ல புத்திர பாக்கியத்தை அளிக்கக் கூடியது
இந்த புத்ரஜாதா ஏகாதசி விரதம்.
19. அஜா ஏகாதசி
ஒவ்வொருவரும்
ஏதாவது ஒரு வகையில் துன்பப்பட்டுக் கொண்டு இருக்கிறோம் இதற்குக் காரணம்
நாம் செய்த பாவங்களே. இந்தப் பிறவியில் நாம் செய்த பாவங்களை ஓரளவுக்கு
கணக்கிட்டு விட முடியும் ஆனால் போன பிறவிகளில் என்னென்ன பாவம் செய்தோம்?
அவை எவ்வளவு என யாராலும் கணக்கிட முடி.யாது. தவறாமல் அவை நமக்குத்
துன்பங்ககளைத் தந்து கொண்டுதான் இருக்கும். அப்படிப்பட்ட போன பிறவிப்
பாவங்களையும் சேர்த்தே அழித்து, நமக்கு உயர்வை அளிக்கக் கூடியது புரட்டாசி
மாதத் தேய்பிறையில் வரும் அஜா ஏகாதசி.
இதற்குச்
சான்று அரிச்சந்திரன். ராஜ்ஜியம் இழந்து மனைவியையும் மகனையும் விலைக்கு
விற்று, தானும் அடிமையாக இருந்து சுடுகாட்டைக் காவல் காத்தான்
அரிச்சந்திரன். இவ்வளவுக்கும் காரணம் அவனது முன் வினையே.
அரிச்சந்திரனின்
துயரத்தை அறிந்த கௌதம முனிவர் "அரிச்சந்திரா புரட்டாசி மாதத் தேய்பிறையில்
வரும் அஜா ஏகாதசி அன்று நீ இருந்து வழிபாடு செய்.உன் துயரங்கள் எல்லாம்
நீங்கும்" என்று உபதேசம் செய்தார் அதை அப்படியே செய்து அரிச்சந்திரன்
உயர்வு பெற்றது நம் அனைவருக்குமே தெரியும்.
20. பத்மநாபா ஏகாதசி
சூரிய
வம்சத்தைச் சேர்ந்த மன்னர் மாந்தாதா தர்மம் தவறாமல் ஆட்சி செய்து வந்தார்,
இருந்தாலும் ஒரு முறை அவரது நாட்டில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து மழையே
பெய்யவில்லை. பஞ்சத்தால் மக்கள் படும் துயர் தாங்காத மன்னர் ஆங்கீரச
முனிவரைத் தரிசித்து துயரம் நீங்க வழி கேட்டார்.
"மன்னா,
உனது ராஜ்யத்தில் ஒருவன் தன் தர்மத்தைச் செய்யாமல், அடுத்தவன் தர்மத்தைச்
செய்து கொண்டிருக்கிறான். அதனால்தான் உனது தேசத்தில் மழையே இல்லை. அவனைக்
கொன்றுவிடு. உன் நாட்டில் மழை கொட்டும், துயரம் இருக்காது" என்றார்
ஆங்கீரசர். மன்னர் மறுத்தார்.
"வேறு
ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள். கொலை பாதகம் செய்ய என் மனம் இடம்
தரவில்லை முனிவரே" என்றான். "மன்னா, உன் கருணை உள்ளத்தைத் தொடுகிறது.
புரட்டாசி மாத வளர்பிறை ஏகாதசி பத்மநாபா ஏகாதசி. அந்த ஏகாதசி விரதத்தை
கடைப்பிடி. மழை பெய்யும்" என்றார் முனிவர். மன்னர், பத்மநாப விரதம்
இருந்தார். வானம் திறந்து வளம் தரும் மழை பொழிந்து தேசத்தையே வளமாக்கும்
ஏகாதசி இது.
21. இந்திரா ஏகாதசி
ஏகாதசியின்
மகிமை யுகங்கள் தோறும் வெளிப்படும் என்று சொல்லி, அது துவாபர யுகத்தில்
வெளிப்பட்டதைப் பற்றி ஏற்கெனவே பார்த்தோம். இதோ, கிருத யுகத்தில்
வெளிப்பட்ட ஓர் ஏகாதசியின் மகிமையை பார்ப்போம்.
மாஹிஷ்மதி
நாட்டு மன்னர் இந்திரசேனனின் அரண்மனைக்கு நாரதர் வந்தார். "மன்னா, நான்
இப்போது எமலோகத்தில் இருந்து வருகிறேன். அங்கே உன் தந்தை நரகத்தில்
கிடந்து, துயரங்களை எல்லாம் அனுபவித்து வருகிறார். 'என் மகனிடம் சொல்லி
ஏகாதசி விரதம் இருக்கச் சொல்லுங்கள். என்னைக் கரையேற்றச் செய்யுங்கள்"
என்று என்னிடம் சொன்னார். அதற்காகத்தான் நான் வந்தேன். ஐப்பசி மாதத்
தேய்பிறையில் வரும் ஏகாதசி இந்திரா ஏகாதசி எனப்படும். நீ அந்த ஏகாதசி
அன்று விரதம் இருந்து வழிபாடு செய். உன் தந்தைக்கு நரகத்தில் இருந்து
விடுதலை கிடைக்கும்" என்றார்.
திரிலோக
சஞ்சாரியான நாரதரே வழிகாட்டி இருக்கிறார் என்றால், மன்னர் மறுப்பாரா?
இந்திரா ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்து, தந்தைக்கு சிரார்த்தம்
செய்தார். அவருடைய தந்தையும் நரகத்தில் இருந்து விடுதலை அடைந்து மகனை
ஆசீர்வதித்தார். பித்ருக்களின் சாபத்தை நீக்கும் ஏகாதசி இது.
22. பாபாங்குசா ஏகாதசி
ஒவ்வொருவருமே
ஏராளமான வேதனைகளையும் வாதனைகளையும் அனுபவித்து வருகிறோம் கண்ணுக்குத்
தெரியாமல் நம்மைப்படுத்தும் துயரம் வேதனை எனப்படும். கண்ணுக்குத் தெரிந்தே
நம்மைத் துயரங்களில் ஆழ்த்துபவை வாதனை எனப்படும். வேதனைகளையும்,
வாதனைகளையும் ஒட்டுமொத்தமாக நீக்கும் ஏகாதசி இது.
அதுமட்டுமில்லாமல்
கங்கை முதலான புண்ணிய தீர்த்தங்கள், யாகங்கள், தானங்கள் முதலியவற்றால்
உண்டாகும் பலன்களையும் இந்த ஏகாதசியே கொடுக்கும். விதிமுறை தெரியாமலோ
அல்லது பெருமைக்காகவோ இந்த விரதம் இருந்தாலும், மேற்சொன்ன பலன்கள் எல்லாம்
தரக்கூடியது இந்த ஏகாதசி. ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் இந்த ஏகாதசி
பாபாங்குசா ஏகாதசி எனப்படும். பாவங்களை நீக்கும் அங்குசமாக இது இருப்பதால்
பாபாங்குசா எனப்பட்டது.
23. ரமா ஏகாதசி
கார்த்திகை
மாதத்தேய்பிறையில் வரும் ஏகாதசி ரமா ஏகாதசி எனப்படும். அதன் மகிமை
ஏராளம். முசுகுந்த சக்ரவர்த்தியின் மகள் சந்திராபாகா. அவள் கணவன் சோபணன்.
ஒரு சமயம் சந்திரபாகா தன கணவனுடன், தந்தை வீட்டுக்கு வந்தாள். அப்போது
ஏகாதசி காலம். அரச சேவகர்கள் "இன்று ஏகாதசி. யாரும் சாப்பிடக்கூடாது.
விரதம் இருக்க வேண்டும். விஷ்ணுவை வழிபட வேண்டும்" என்று முரசுகொட்டி
அறிவித்தார்கள். அதைக் கேட்ட சோமன், "நான் மிகவும் பலவீனமானவன். ஒரு நாள்
முழுவதும் என்னால் என்னால் எப்படிச் சாப்பிடாமல் இருக்க முடியும்" என்று
புலம்பினான். அவன் மனைவி சந்திரபாகா, "என் தந்தை எந்தக் குற்றத்தை
வேண்டுமானாலும் மன்னிப்பார். ஆனால் ஏகாதசியன்று சாப்பிடுபவர்களை
மன்னிக்கவே மாட்டார். கடுமையாகத் தண்டிப்பார் நான் என்ன செய்வேன்" என்று
அவளும் புலம்பினாள்.
வேறு
வழியில்லாத சோமன் எதையும் சாப்பிடாமல் இருந்தான். அவன் உயிர்
போய்விட்டது. துக்கம் தாங்காமல் அவன் மனைவி சந்திரபகாவும் உயிர் நீத்தாள்.
இருவரும் வைகுண்டத்தை அடைந்தார்கள்.
மறு
பிறவியில் இவர்கள் இருவரும் சோமசர்மா என்பவரின் ஆலோசனைப்படி, ரமா ஏகாதசி
விரதம் இருந்து, மந்திர மலைச் சாரலில் இருந்த ஒரு நகருக்கு
அதிபதியானார்கள்.
24. ப்ரபோதினி ஏகாதசி
கார்த்திகை
மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசி ப்ரபோதினி ஏகாதசி. இந்த ஏகாதசி அன்று
பகவான் தன் உறக்கத்தை விட்டு எழுந்திருப்பதால், இந்தப் பெயரைப் பெற்றது என
ஏகாதசி மகாமித்யம் கூறுகிறது.
இந்த
ஏகாதசி அன்று பல விதமான பூக்களால் பெருமாளை அர்ச்சித்து, பல விதமான
பழங்களையும் அவருக்கு நைவேத்தியம் செய்து பூஜிப்பது சிறப்பு. இந்த நாளில்
துளசியால், பெருமாளை பூஜை செய்பவர்கள் வைகுண்டம் செல்வார்கள்.
துளசியைத்
தரிசிப்பது, துளசியைத் தொடுவது, துளசியின் பெயரைச் சொல்வது, துளசியைத்
துதிப்பது, துளசியை நட்டு வளர்ப்பது, துளசிக்குத் தண்ணீர் விடுவது, துளசியை
பூஜை செய்வது என எதைச் செய்தாலும், பல யுகங்கள் வைகுண்ட வாசத்தை அளிக்கும்
ஏகாதசி இது.
25. கமலா ஏகாதசி
மாதத்துக்கு
இரண்டு ஏகாதசிகள் எனும் கணக்குப்படி, வருடத்துக்கு இருபத்து நான்கு
ஏகாதசிகள் வரும். சில வருடங்களில் இருபத்தைந்து ஏகாதசி வரும். அதிகமாக
வரும் அந்த ஓர் ஏகாதசி கமலா ஏகாதசி எனப்படும். இதன் மகிமையை
லட்சுமிதேவியே சொல்லி இருக்கிறார்:
அவந்தி
தேசத்தில் சிவசர்மா என்பவர் இருந்தார். அவருக்கு ஐந்து பிள்ளைகள்
அவர்களில் கடைசிப் பையன் ஜெயசர்மா (இவன் பெயர் சிவநேசன், தந்தை பெயர்
சிவபாதயோகி என்றும் சொல்வதுண்டு). சிவசர்மாவின் குடும்பத்தில், தரித்திரம்
கூடாரம் அடித்துத் தங்கி இருந்தது. பிள்ளைகளில் ஜெயசர்மா தீமைகள்
செய்வதில் சிறந்தவனாக இருந்து "பாவி" என்று பட்டப்பெயரே பெரும் அளவுக்கு
இருந்தான். வறுமையின் பிடியில் இருந்த சிவசர்மா, ஜெயசர்மாவின் தீமைகளைப்
பொறுக்க முடியாமல் அவனை வீட்டைவிட்டு விரட்டி அடித்தார்.
"யாராவது
நல்லவர்கள் இருக்க மாட்டார்களா? ஏதாவது கிடைக்காதா"? என்று நினைத்து
வெளியே போன ஜெயசர்மா, ஹரிமித்ரர் என்னும் மகிரிஷியின் ஆசிரமத்துக்குள்
நுழைந்தான். அங்கே மகிரிஷி "கமலா ஏகாதசியை"ப் பற்றிச் சொல்லி, அதன்
பெருமைகளையும் விவரித்துக் கொண்டிருந்தார்.
அதை
முழுவதுமாக கேட்ட ஜெயசர்மா, "சே, என்ன மனிதன் நான். இவ்வளவு காலமாக
நல்லதைத் தெரிந்து கொள்ளாமல், தீமைகளை செய்வதிலேயே காலத்தை கழித்து
விட்டேனே, போகட்டும் இப்போதாவது நல்லதைத் தெரிந்து கொள்ளும் பாக்கியம்
கிடைத்ததே. எப்படியாவது இந்தக் கமலா ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்" என்று
தீர்மானித்தான்.
அடிக்கடி
வராமல், எப்போதோ வரும் கமலா ஏகாதசி, அந்த ஆண்டு வந்தது. அபூர்வமான
அந்தச் சந்தர்ப்பத்தை ஜெயசர்மா விடவில்லை. ஹரிமித்ரர் மகரிஷியின்
உபதேசப்படி கமலா ஏகாதசி விரதம் இருந்து விஷ்ணுவை பூஜை செய்தான்.
அன்று
இரவு ஜெயசர்மாவின் எதிரில் மகாலட்சுமி தோன்றினாள் . கண்ணெதிரே காட்சி
அளித்த கமலையைக் கைகள் கூப்பி வணங்கித் துதித்தான் ஜெயசர்மா. "தாயே, நீ
எனக்கு தரிசனம் தரக் கூடிய அளவுக்கு, நான் என்ன புண்ணியம் செய்தேன்" என்று
கேட்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தான். "ஜெயசர்மா, நீ செய்த கமலா ஏகாதசி
விரதமே, கமலையான என்னை உன் கண்களுக்கு முன்னாள் நிறுத்தியது. உனக்கு
ஏராளமான செல்வம் உண்டாகும்" என்று ஆசி கூறிய அன்னை மகாலட்சுமி மறைந்தாள்.
தீயவனாக
வீட்டை விட்டு விரட்டப்பட்ட ஜெயசர்மா, திருந்தியவனாக திருமகள் அருளுடன்
வீடு திரும்பினான். லட்சுமேதேவியின் வாக்குப்படி அவன் வீட்டில்
அளவில்ல்லாத செல்வங்கள் சேர்ந்தன.
இந்த
காலத்தில், யாராவது இளைய தலைமுறையினர் ஏகாதசி விரதம் இருந்தால் "இதெல்லாம்
வயதானவர்களுக்கு, நீ என்ன கிழவனா" என்று சொல்பவர்களும் உண்டு.
அப்படிப்பட்டவர்களுக்கு விளக்கம் சொல்வதே இந்த கமலா ஏகாதசி.
ஜெயசர்மா
என்ற ஒருவன் இருந்த விரதம், அவன் குடும்பத்தில் இருந்த தரித்திரத்தை
வெளியே விரட்டி, அங்கே திருமகளைக் குடியேற்றியது ஒருவன் செய்யும் விரதம்
அவன் குடும்பத்தையே உயர்த்தும் என்பதையும் தெளிவாக விளக்குகிறது. கமலா
ஏகாதசி அபூர்வமாக எப்போதாவது வரும். இந்த ஏகாதசி விரதத்தைக்
கடைப்பிடித்தால், அனைவரும் உயரலாம்.
தானம் பெற்ற தேவகன்னி
ஏகாதசி விரதத்துக்காக தன்னையும் தன் மகனையும் பறி கொடுக்கத் துணிந்த ஓர் உத்தமரின் வரலாறு இது:
விதர்ப்ப
நாட்டின் மன்னர் ருக்மாங்கதன் - அவர் மனைவி சந்தியாவளி. அவர்களின் அன்பு
இல்லறத்தின் பயனாகப் பிறந்த மகன் தர்மான்கதான். நாட்டை நல்ல முறையில்
நிர்வாகம் செய்துவந்த மன்னர், தன் மகனையும் நல்ல முறையில் வளர்த்து
வந்தார்.
அமைதியாகப் போய்க் கொண்டிருந்த அவர்கள் வாழ்வில் ஒரு மாபெரும் திருப்பத்தை உண்டாக்கியது அவரது
நந்தவனம்.
அந்த நந்தவனத்தில் மணம் வீசி மனதை மயக்கும் வண்ண மலர்கள் ஏராளமாக
இருந்தன. தவம் செய்யும் முனிவர் ஒருவரும் அங்கு தங்கியிருந்தார்.
ஒரு
நாள், தேவலோகக் கண்ணிகள் சிலர் பூஜைக்குப் பூப்பறிக்க வேண்டி,
பூலோகத்துக்கு வந்தார்கள் அவர்களின் கண்களில் ருக்மாங்கதனின் நந்தவனம்
தென்பட்டது. அப்புறம் என்ன?
எங்கும்
அலைந்து திரியாமல் தினந்தோறும் அந்த நந்தவனத்துக்கு வந்து பூக்களை
பறித்துக் கொண்டு போவது தேவகன்னிகைகளின் அன்றாட வாடிக்கையாகிவிட்டது
மலர்கள்
திருட்டு போவது தெரிந்ததும் நந்தவனத்துக் காவலாளி பொறுப்பாக இரவெல்லாம்
கண் விழித்துப் பார்த்தான். தேவ கன்னிகைகள் அவன் கண்களில் அகப்படவில்லை. காவலாளிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நந்தவனத்தில் தவம் செய்து
கொண்டிருந்த முனிவரைக் கண்டு, "யாரும் வராத, வர முடியாத நந்தவனத்தில்
இருந்து, இவர்தான் பூக்களைத் திருடி இருக்க வேண்டும்" என்று தீர்மானித்து
முனிவரைக் கொண்டு போய் மன்னர் முன்னால் நிறுத்தி விவரங்களைச் சொன்னான்.
மன்னர் பதறிப் போய் முனிவரின் கால்களில் விழுந்து, "தெரியாமல் செய்து விட்டான், மன்னித்து விடுங்கள்" என்று வேண்டினான்.
முனிவரோ,
"மன்னா, அவனிடம் கோபிக்காதே. உன் நந்தவனத்தில் இருந்து பூக்களை எல்லாம்
திருடு போவதற்கான காரணம் எனக்குத் தெரியும். தேவலோகக் கன்னிகைகள்,
மகாவிஷ்ணுவைப் பூஜை செய்வதற்காக உன் நந்தவனத்தில் இருந்து பூக்களைப்
பறித்துப் போகிறார்கள். அவர்கள் சாதரணமாக யார் கண்ணிலும்
தென்படமாட்டார்கள். அவர்களைப் பிடிக்க வேண்டுமானால் உன் நந்தவனத்தில்
கொ(ம்)மாட்டி விதைகளை விதைக்கச் சொல். கொ(ம்)மாட்டிக் கொடி காலில்
பட்டால், தேவகன்னிகைகள் தங்கள் சக்தியை இழந்து விடுவார்கள். அவர்களால்
மேல் உலகம் போக முடியாது. நீயும் அவர்களைப் பார்க்கலாம்" என்றார்.
அதன்படியே
கொ(ம்)மாட்டி விதைகள் விதைக்கப்பட்டு நன்கு வளர்ந்தன. தேவலோக கண்ணிகள்
வழக்கம் போல பூப்பறிக்க வந்தார்கள். அவர்களுள் ஒரு பெண்ணின் காலில்
கொ(ம்)மாட்டி கொடி பட்டுவிட்டது. அவள் மேல் உலகம் போகும் சக்தியை
இழந்தாள். மற்றவர்கள் தேவலோகம் திரும்பினார்கள்.
முனிவர்,
மன்னனை அழைத்து வரச்செய்து, நந்தவனத்தில் இருந்த தேவகன்னியைக் காட்டினார். தேவகன்னியின் அருகில் போய், அவள் கால்களில் விழுந்து வணங்கினான்
ருக்மாங்கதன்.
"மன்னா,
மகாவிஷ்ணுவின் பூஜைக்காக உன் நந்தவனத்தில் இருந்து பூக்களைப் பறித்தது
தேவகன்னியான நானும் என் தோழிக்களும்தான். நாங்கள் முனிவர்களின் கண்களில்
மட்டும் தென்படுவோம். உன் புண்ணிய பலன் காரணமாக இன்று உன் கண்களில்
தென்படுகிறேன். கொமட்டிகொடி என் காலில் பட்டதால் சக்தி இழந்து விட்டேன்.
நான் மேலுலகத்துக்கு திரும்பிச் செல்வது உன் கையில் தான் உள்ளது" என்றாலள்
தேவ கன்னி.
"தாயே,
நான் என்ன செய்ய வேண்டும், கூறுங்கள்" எனக் கேட்டான் மன்னன். "மன்னா,
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் அதன் பலனை எனக்குத் தானம் செய்தால் போதும்
இழந்த சக்தியை நான் மீண்டும் பெற்று தேவலோகம் போய் விடுவேன்" என்றாள்.
"அம்மா,
நீங்கள் சொல்லும் விரதத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டது கூடக் கிடையாதே,
அப்படி இருக்க, தங்கள் விருப்பத்தை நான் எப்படி நிறைவேற்ற முடியும்"
என்றான் மன்னன்.
தேவலோகப் பெண்ணல்லவா? அவளே வழியைக் காட்டினாள்.
"மன்னா,
அரண்மனையில் உன் மனைவிக்காக உணவு சமைத்துப் போடுபவள் ஒரு நாள் சரியாக
சமைக்கவில்லை என்று கோபம் கொண்டு, அவளைச் சிறையில் அடைத்தாள் உன் மனைவி.
தசமி திதி நாளான அன்று அவள் ஒரு வேலை மட்டும் உணவு உண்டிருந்தாள். அடுத்த
நாளான ஏகாதசி அன்றும் சிறையிலிருந்தாள். அந்த சமையல்காரி எதுவும்
குடிக்க, சாப்பிடவில்லை. மறுநாள், துவாதசி அன்று உன் மனைவி, அவளை
மன்னித்து விடுதலை செய்து உணவு உண்ணச் செய்தாள். தெரிந்தோ தெரியாமலோ
ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்தாலும் பலன் உண்டு. அந்த முறையில் உன் அரண்மனை
சமையல்காரியிடம் ஏராளமான பலன் இருக்கிறது. அதை அவள் எனக்கு தானம் செய்தால்
போதும். நான் மேலுலகம் போவேன்", என்றாள் . மன்னன் அரண்மனைக்கு
விரைந்தான். தேவகன்னி குறிப்பிட்ட அந்த சமையல்காரியை அழைத்து அவள்
பெற்றிருந்த ஏகாதசி விரத பலனைத் தேவகன்னிகைக்குத் தானம் செய்ய ஏற்பாடுகளைச்
செய்தான்.
தானம்
பெற்றதும் தேவகன்னி, மறுபடியும் தேவலோகம் செல்லும் சக்தியை பெற்றால்.
"மன்னா, துர்வாசரின் சாபத்தால் அனைத்து செல்வங்களையும் இழந்த தேவர்கள்,
அன்னம், ஆகாரம், தூக்கம் இல்லாமல் பாற்கடலைக் கடைந்தார்கள். துவாதசியன்று உதயத்தில் பாற்கடலில் இருந்து மகாலட்சுமி தோன்றினாள்.
மகாவிஷ்ணு அவளைத் திருமணம் செய்து, தேவர்களுக்கு அருள் புரிந்தார்.
தேவர்களும்
முனிவர்களும் கூட அன்று முதல் ஏகாதசி விரதத்தை கடைப்பிடித்து உயர்ந்த
நிலையை அடைந்தார்கள் நீயும் ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடி. உன்னத நிலை
அடைவாய்" என்று சொல்லி விட்டு தேவகன்னி மேலுலகம் சென்றாள்.
பிறகு,
ருக்மாங்கதன், நந்தவனத்தின் காவலாளியை அழைத்து, "இங்குள்ள கொ(ம்)மட்டிக்
கொடிகளை எல்லாம் முழுவதுமாக அப்புறப்படுத்து. இனி இந்த நந்தவனத்தில் உள்ள
பூக்கள் எல்லாம் தேவகன்னிகளின் உபயோகத்துக்காகவே இருக்கட்டும்" என்று
சொல்லி அரண்மனை திரும்பினான். மேலும் அவன், "இன்று முதல் நம் நாட்டில்
உள்ள அனைவரும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டும்" என உத்தரவிட்டு அதற்குண்டான
ஏற்பாடுகளையும் செய்தான்.
அதன்படி
ஒவ்வொரு மாதமும் தசமி அன்றே முரசம் அறைந்து ஏகாதசி விரதம்
அறிவிக்கப்பட்டது. அனைவரும் ஏகாதசி விரதம் இருந்து அல்லல்கள் நீங்கப்
பெற்றார்கள்.
ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய முறை:
- தசமி அன்றும், துவாதசி அன்றும் ஒரு வேளை தான் உணவு உண்ண வேண்டும்.
- ஏகாதசி அன்று அதிகாலையிலேயே எழுந்து, நித்திய கர்மாக்களை (காலை வழிபாடு) செய்ய வேண்டும்.
- ஏகாதசி அன்று துளசியைப் பறிக்கக் கூடாது. முதல் நாளே எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- மகாவிஷ்ணுவை முறைப்படி பூஜை செய்ய வேண்டும். முடிந்தவர்கள் தண்ணீர் கூட அருந்தாமல் விரதம் இருக்க வேண்டும்.
முடியாத பட்சத்தில் சுவாமிக்கு பழங்களை நைவேத்தியம் செய்து விட்டு உண்ணலாம்.
- ஏகாதசி அன்று பகலில் தூங்கக் கூடாது. இரவில் பஜனை அல்லது மகாவிஷ்ணுவின் கதைகளைக் கேட்பது முதலியவற்றில் ஈடுபட்டு கண்விழிக்க வேண்டும்.
- கோபம், அடுத்தவர்களைத் திட்டுவது, கலக்கம் அலங்காரம், காமம் முதலியவற்றை விட்டுவிட வேண்டும்.
- துவாதசி அன்று காலையில் சுவாமியைப் பூஜை செய்துவிட்டுப் பிறகே உண்ண வேண்டும்.
- ஓர் ஏழைக்காவது உணவு தந்து, அதன் பிறகே நாம் உண்பது நல்லது.
- அன்று அகத்திகீரை, நெல்லிக்காய், சுண்டைக்காய் ஆகியவற்றறை உண்பது நல்லது.
No comments:
Post a Comment