Pages

Friday, August 09, 2013

ஹாத்திராம் ஆன பாவாஜி

தன்னுடைய வீட்டின்  தாயக்கட்டை விளையாடிக் கொண்டிருந்தார் பாவாஜி.  முதன்முறையாக  பாவாஜியை பார்ப்பவர்கள், அவரை மனநிலை பாதிக்கப்பட்டவராகத் தான் நினைப்பார்கள்.  ஏனெனில், தாயக்கட்டை விளையாடும்போது பாவாஜியின் செயல்பாடு அது மாதிரி இருக்கும்.  

சுவாமியுடன் விளையாட்டு
பாவாஜி திருமலையில்  குடில் அமைத்து வாழ்ந்து வந்தார்.  தினமும் அதிகாலையில் எழுந்திருந்து புஷ்கரணியில் நீராடி விட்டு வெங்கடாசலபதியை தரிசனம் செய்வார். பின்னர்  வீட்டில் அமர்ந்து தாயக்கட்டை விளையாடுவார். அவருடன் யாரும் விளையாட மாட்டார்கள, அவர் மட்டும் தான் விளையாடுவார்.  இதனால்தான், எல்லோரும் அவரை மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று நினைத்தனர்.   ஆனால், பாவஜியை பொருத்தவரை அவர் தனியாக விளையாட வில்லை, வேங்கடவனுடன் தான் விளையாடுகிறார்." இது என்னுடைய ஆட்டம், இது சுவாமியோட ஆட்டம்" என்று மாற்றி மாற்றி தாயக்கட்டையை உருட்டுவார்.

வேங்கடவன் தோற்றார்
ஒரு தடவை இதுபோல விளையாடிக் கொண்டிருந்தபோது ஒரு அற்புதம் நடந்தது.  வீட்டில் பிரகாசமான ஒளியும், நறுமணமும்  பரவியது. தொடர்ந்து அங்கு வெங்கடாஜலபதியின் விக்கிரகம் தோன்றியது.  அதில் இருந்து "என்ன பாவாஜி, என் விளையாட்டை நான் விளையாடலாமா ?" என்று ஒலி வந்தது.  வாய் அடைத்து போன பாவாஜி, விக்கிரகத்தை கையில் எடுத்தார், மான் தோலின் மீது வைத்தார். 
பின், அதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தார். "பாவாஜி, விளையாடப் போகிறாயா, இல்லை நான் போகட்டுமா? என்றார் பகவான். பாவாஜி, கவனம் சிதறி, ஆட்டத்தை தப்பும் தவறுமாக விளையாடினார்.  தன் பக்தனின் பக்தியை நினைத்து, பகவானின் நிலை அதைவிட மோசமாக இருந்தது.  

இரத்தின மாலை
"பாவாஜி, நீ ஜெயித்து விட்டாய்.  உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள், தருகிறேன்", என்றார் பகவான்.  ஆனால்,  பாவாஜியோ, "உமது குரலைக் கேட்பதைவிட பெரிய வரம் எனக்கு வேண்டுமா? இருப்பினும், தங்களின் விஸ்வரூபத்தை காண விரும்புகிறேன்" என்றார்.  அவரின் விருப்பப்படி பகவான் தரிசனம் கொடுத்தார்.  விளையாட்டு தினமும் தொடர்ந்தது.  ஒருநாள், பகவான் விளையாடி விட்டு செல்லும்போது தன் கழுத்தில் இருந்த இரத்தின மாலையை பாவாஜியின் வீட்டிலேயே விட்டுச் சென்றார்.
சிறிது நேரம் கழித்து இதை கவனித்த பாவாஜி, பகவானே வந்து எடுத்துச் செல்வார் என்று நினைத்தார்.  ஆனால், பகவான் வரவே இல்லை.   எனவே மறுநாள் அதிகாலையிலேயே மாலையுடன் கோவிலை நோக்கி ஓடினர்.  அதற்குள் நிலைமை எல்லை  கடந்திருந்தது. பகவானின் கழுத்தில் இருந்த இரத்தின மாலை காணவில்லை என்ற செய்தி கோவிலைத் தாண்டி ஊருக்குள் பரவியது.  கூட்டம் மொத்தமும் கோவிலுக்குள் வந்துவிட்டது.

திருட்டுப்பட்டம்
இந்த நிலையில், கோவிலுக்குள் மாலையுடன் வந்த பாவஜியை பார்த்த  ஒருவர், "திருடன்" என்று கூக்குரலிட்டார்.  மாலையை ஏன் திருடினாய்? என்ற கேள்வியால் பாவாஜியின் இதயம் நின்று விட்டதைப் போல் உணர்ந்தார்.  நடந்த உண்மையை பாவாஜி எடுத்துக்  கூறியும், அதை நம்ப தயாரில்லை யாரும்.  விசாரணை, கிருஷ்ண தேவராயர் மன்னரிடம் சென்றது.   மன்னரால் பாவாஜி சொல்வதை ஒப்புக்கொள்ள முடியவில்லை.  ஆனால் அவரைப் பார்க்கும்போது பொய் சொல்பவராக தெரியவில்லை மன்னருக்கு.   தன் மனதில் திடீரென்று தோன்றிய எண்ணத்தை பாவாஜியிடம் கூறினார் மன்னர்.   "பாவாஜி,  எமது நிலவறையில் ஒரு வண்டி கரும்பு இருக்கிறது.  அதை  இன்று இரவுக்குள் நீ தின்று  விடவேண்டும்.  அப்படிச் செய்தால் நீ  நிரபராதி.  இல்லையேல் உனக்கு தண்டனை நிச்சயம்"என்றார் மன்னர்.

யானையாக வந்த பகவான்
இது முடியாத காரியமாக இருந்தாலும், பாவாஜி கூறுவது உண்மையாக இருந்தால், அந்த வேங்கடவனே பவாஜிக்கு உதவிப் புரியட்டும் என்பது மன்னரின் எண்ணம்.  பாவாஜி மனம் கலங்கவில்லை.   
சிறையில் அடைக்கப்பட்டதும், சிறிது நேரம் தியானித்து விட்டு, "நான் நிரபராதி என்பது உனக்குத் தெரியும், இனி என்ன நடந்தாலும் அது உன் பாரம்" என்று கூறிவிட்டு தூங்கி விட்டார்.   சிறிது நேரத்தில் யானை உருவத்தில் நிலவறைக்குள் நுழைந்தார் பகவான்.  அங்கிருந்த கரும்பை ஒவ்வொன்றாக சுவைக்க தொடங்கினார்.  அறைக்குள் யானை பிளிறும் சத்தம் கேட்டு காவலர்கள், "பூட்டிய நிலவறைக்குள் யானை எப்படி நுழைந்தது" என்று  அதிர்ச்சி அடைந்தனர்.   கரும்பு எல்லாம் தீர்ந்து போனபின் யானை, கதவை உடைத்துக்கொண்டு மன்னர் இருக்கும் ராஜ சபை வரை சென்று விட்டு பின் திடீரென்று மறைந்து விட்டது.  

ஹாத்திராம்
சிறைக்குள் சென்ற காவலர்கள், பாவாஜி நன்றாக தூங்கிக் கொண்டிருப்பதையும், கரும்பு காணமல் போயிருப்பதையும் கண்டு அதிசயித்து மன்னரிடம் விஷயத்தை கூறினார்கள்.    அனைவரும் வேங்கடாஜலபதியின் விளையாட்டை நினைத்து மெய்சிலிர்த்துபோனார்கள். பாவாஜியை அனைவரும் கொண்டாடினார்கள்.   அதுமுதல் ஹாத்திராம்என்று அவரை அழைத்தனர். ஹாத்தி என்றால் யானை என்று பொருள்.
திருமலை கோவிலில் தெற்கு புறத்தில் ஒரு மண்டபம் ஹாத்திராம் நினைவாக கட்டபட்டிருப்பதை இன்றும் பக்தர்கள் காணலாம்.

(நன்றி: தினத்தந்தி - 06/08/2013)


No comments:

Post a Comment