Pages

Thursday, May 26, 2022

சிவகாமியின் செல்வன் 03

அந்தக் காலத்தில்  சத்தியமூர்த்திக்கும் காமராஜுக்கும் இருந்த அன்புக்கும் பிணைப்புக்கும் இணையாக இன்னொரு நட்பை சொல்லிவிட முடியாது.  காமராஜின் அரசியல் குரு சத்தியமூர்த்தி என்று தான் எல்லாரும் சொல்வார்கள்.  ஆனால் பொதுவான நிலை அதுவல்ல. காமராஜரே சில சமயங்களில் சத்தியமூர்த்திக்கு ஆசானாக இருந்ததுண்டு.  சத்தியமூர்த்தி வெள்ளை உள்ளம் படைத்தவர்.  ஆகையால் யாரையும் எளிதில் நம்பிவிடக் கூடியவர்.  அரசியலுக்கே உரித்தான சூழ்ச்சிகள், தந்திரங்கள், எதுவும் அறியாதவர்.  அதனால் சத்தியமூர்த்தியை யாருடைய சூழ்ச்சி வலையிலும் சிக்க விடாமல் எச்சரிக்கையோடு இருந்து காப்பாற்றிய பெருமை காமராஜுக்கே உண்டு.  அது மட்டுமல்ல, சாத்தியமூர்த்தியின் புகழ் அரசியல் உலகில் சுடர் விட்டுப் பிரகாசிப்பதற்கும் காமராஜே காரணமாயிருந்தார். 

காமராஜ் தம்மிடம் கொண்டுள்ள அன்பும், அக்கறையும் எந்தக் காலத்திலும் மாறாதவை, மாற்ற முடியாதவை என்பதை அறிந்து கொண்ட சத்தியமூர்த்தி, தம்முடைய அரசியல் வாழ்க்கையில் நெருக்கடி தோன்றிய நேரத்தில் காமராஜின் ஆலோசனையைக் கேட்டே எதையும் செய்து வந்தார்.

சத்தியமூர்த்திதான் காமராஜுடைய அரசியல் தலைவர் என்று காமராஜ் சொல்லிக் கொண்ட போதிலும், சத்தியமூர்த்தி தவறு செய்கின்ற போதும் திசை தப்பித் போகின்ற நேரங்களிலும் காமராஜ் அவருடைய ஆசானாக மாறி யோசனை கூறவோ, மீறிப் போனால் கண்டிக்கவோ ஒருபோதும் தவறியதில்லை. ஒரு சின்ன உதாரணம்: 

1940ல் சத்தியமூத்தி சென்னை நகரின் மேயராக இருந்த போது பூண்டி நீர்த் தேக்கத்துக்கு அப்போது சென்னை கவர்னராக இருந்த ஆர்தர் ஹோப் அஸ்திவாரக் கல் நாட்டினார்.  மேயர் என்ற முறையில் சத்தியமூர்த்தி அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அச்சமயம் காமார்ஜ் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைலைவராக இருந்தார்.

வெள்ளைக்காரர்கள் பங்கு கொள்ளும் எந்த விழாவிலும் காங்கிரஸ்காரர்கள் கலந்து கொள்ளக் கூடாது என்று மேலிடம் அப்போது ஒரு கட்டுப்பட்டு விதித்திருந்தது.  சத்தியமூர்த்தியை நேரில் சந்தித்து இது பெரிய தவறு இல்லையா என்று கேட்டார் காமராஜர்.

ஆமாம் அதற்காக என்னை என்ன செய்ய சொல்கிறாய்.  நான் மேயர் என்ற முறையில் போயிருந்தேன் என்றார். செய்தது தவறு என்று ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுங்கள் என்றார் காமராஜ். வேறு வழி இல்லமால் தான் செய்தது தவறுதான் என்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்தார் சத்தியமூர்த்தி.

அண்மையில் இந்த செய்தியை என்னிடம் கூறிய போது,  அப்புறம் என்ன செய்தீர்கள் என்று நான் கேட்டேன்.

இதை பற்றி மேலிடத்தில் அப்போது சத்தியமூர்த்தியின் பேரில் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று என்னைக் கேட்டார்கள்.  மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கி வைத்திருக்கிறேன் என்று அவர்களிடம் சொன்னேன் என்றார் காமராஜ்.  சரி அந்த கடிதம் இப்போது எங்கே இருக்கிறது என்று கேட்டேன்.  என் வீட்டில் இருக்கிறது. எங்காவது பெட்டிக்குள் இருக்கும் தேடிப் பார்க்கணும் என்றார்.

சத்தியமூர்த்தியை நீங்கள் முதன் முதலாக சந்தித்தது எப்போது, நினைவில் இருக்கிறதா என்று கேட்டேன்.

1919ல் அவர் விருதுநகருக்குப் பொதுக் கூட்டத்தில் பேச வந்திருந்தார்.  அப்போது நான் ஒரு சாதாரண தொண்டன்.  அவரோடு அப்போது பேசவே முடியவில்லை.  அப்புறம் 4 வருஷம் கழித்துத்தான் அவரோடு நெருங்கிப் பழகவும், பேசவும் எனக்கு சந்தர்ப்பம் உண்டானது.

1923ல் திரு சி.ஆர். தாஸ் தலைமையில் சுயராஜ்ய பார்ட்டி ஆரம்பிச்சாங்க இல்லையா?  அப்பா அந்தக் கட்சியின் கொள்கைப் பற்றி விவாதிக்கிறதுக்காக முக்கிய தலைவர்கள் எல்லோரும் மதுரையில் கூடினாங்க. கே.ஆர். வெங்கட்ராமைய்யர் இல்லத்தில் அந்த கூட்டம் நடைபெற்றது.  இப்போது அவர் இல்லை.  நானும் அந்தக் கூட்டத்துக்குப் போனேன். சத்தியமூர்த்தி சுயராஜ்ய கட்சியின் கொள்கையை விளக்கி ரொம்பத் தெளிவாகப் பேசினார்.  காங்கிரஸ் சட்டசபைக்குப் போக வேண்டும் என்பதுதான் சுயராஜ்ய கட்சியின் கொள்கை.  அதுதான் சத்தியமூர்த்தியின் விருப்பமாகவும் இருந்தது.  அந்தக் கூட்டத்தில் பலர் சட்டசபைப் ப்ரவேசத்துக்கு எதிரான கருத்தை தெரிவித்தார்கள்.  நான்கூட அப்போது சட்டசபைக்குப் போகக்கூ டாது என்ற கட்சியைச் சேர்ந்தவனாகத்தான் இருந்தேன்.  

அப்புறம் சத்தியமூர்த்தியுடன் அடிக்கடி தமிழ்நாட்டில் சுற்றுப் பயணம் செய்வதும், காங்கிரஸ் பிரசாரம் செய்வதுமே என் முழு வேலை ஆயிற்று. 

அந்த காலத்தில்  திரு.ரங்கசாமி அய்யங்கார், திரு எஸ். சீனிவாச அய்யங்கார் இவர்களெல்லாம் ரொம்ப பிரபலமாயிருந்தாங்க.  காரணம் திரு ரங்கசாமி ஐய்யங்காருக்கு சொந்தத்தில் பத்திரிகை இருந்தது.  அதனால் பிரபலமடைய சுலபமாயிருந்தது. சத்தியமூர்த்திக்கு அத்தகைய வசதி எதுவும் இல்லாததால் அவர்களையெல்லாம் மீறிக் கொண்டு முன்னுக்கு வர முடியல.

முன்னுக்கு வந்தபோது அரசியல் தலைமையில் அவருக்கும், ராஜாஜிக்கும் இடையே போட்டி இருந்தது. போராட்டம், சிறைவாசம் என்ற போதெல்லாம் சற்றும் தயங்காமல் உற்சாகத்தோடு முன் வந்து நின்ற சத்தியமூர்த்தி பதவி என்று வரும் பொது மட்டும் அதைத் தானே அடைய வேண்டும் என்று எண்ணாமல் மற்றவர்களுக்கு வீட்டுக் கொடுக்கும் மனப்பான்மை கொண்டிருந்தார். பதவி மீது சத்தியமூர்த்திக்கு ஆசை இல்லை என்பது அர்த்தமில்லை.  அவருக்கு விருப்பம் இருந்தும், தகுதி இருந்தும், சந்தர்ப்பங்கள் இருந்தும் அவ்வப்போது ஏற்பட்ட போட்டி காரணமாக அவருக்கு கிடைக்க வேண்டிய பதவிகள் கிடைக்காமல் போனது.  காங்கிரஸ் காரிய கமிட்டியில் அங்கம் வகிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டதுண்டு.  ஆனால் இது கிடைக்காமலே போய் விட்டது.  மந்திரி சபையில் இடம் பெற வேண்டுமென்ற அவருடைய விருப்பமும் நிறைவேறாமல் போனது.

1927ல் நடைபெற்ற சென்னை அசெம்பிளி தேர்தலில் காங்கிரஸ்காரர்கள் எதிர்பார்க்காத அளவுக்கு காங்கிரசுக்கு வெற்றி கிடைத்தது.  இதற்கு காரணம் சத்தியமூர்த்தி ஓய்வு இல்லாமல் இரவு பகலாகக் காரிலே சுற்றுப்பயணம் செய்து ஊர் ஊராகப் பிரசாரம் செய்ததுதான்.  அவருடைய பிரசாரந்தான் காங்கிரசின் வெற்றிக்கு முக்கிய காரணம்னு சொல்லணும்.  அந்த சமயம் ராஜாஜி காங்கிரசில் இருந்து விலகி இருந்தார்.

ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பது சத்தியமூர்த்தியின் ஆசை.  ராஜாஜி முதல் மந்திரியாக வரவேண்டும் என்பதில் இந்து சீனிவாசனும், இன்னும் சிலரும் குறியாக இருந்தார்கள். இந்து சீனிவாசன் சத்தியமூர்த்தியை அணுகி, அவர் நிற்பதாக இருந்த சர்வகலாசாலைத் தொகுதியை ராஜாஜிக்கு வீட்டுக் கொடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.  சத்திய மூர்த்தி ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தார்.

ஆனால் ராஜாஜி தேர்ந்து எடுக்கப்பட்டதும் அவருடைய மந்திரி சபையில் சத்தியமூர்த்திக்கு இடம் தரவில்லை.  கடைசி வரைக்கும் சத்தியமூர்த்திக்கு மந்திரி சபையில் இடம் உண்டு என்று சொல்லிக்கொண்டிருந்த ராஜாஜி அவரை மந்திரியாகப் போடாமலே மழுப்பி விட்டார்.

பத்திரிகையில் அந்திரிகள் பெர்த் பட்டியல் வந்தபோது அந்தப் பட்டியலில் சத்தியமூர்த்தியின் பெயரைக் காணாமல் எங்களுக்கெல்லாம் மிகுந்த வருத்தமாயிருந்தது. வருத்தப்பட்டு என்ன செய்வது.  பாவம், சத்தியமூர்த்தி ஒண்ணும் தெரியாத அப்பாவி.  அவருக்கு இது பெரிய ஏமாற்றம்.

எந்த போலீஸ்காரர்கள் காங்கிரஸ்காரர்களைத் தடியால் அடித்தார்களோ அதே போலிஸாரைக் கதர் குல்லாய்க்கு சலாம் போடும்படி வைக்கிறேன்னு சத்தியமூர்த்தி அடிக்கடி மீட்டிங்கில் பேசுவார்.  பேசியபடி தடியால் அடித்த போலீஸ்காரர்களை காங்கிரஸ்காரர்களுக்கு சலாம் போடவும் வைத்தார்.  ஆனால் அந்த போலீஸ்காரங்க கதர்க் குல்லாய் அணிந்த சத்தியமூர்த்திக்கு மட்டும் சலாம் போடவில்லை.  அந்த கவுரவத்தை சத்தியமூர்த்தி அடையாமல் போனது எங்களுக்கெல்லாம் பெரிய வருத்தம்தான்.

\உப்பு சத்தியாகிரகத்தின் போது திருச்சி, வேலூர், அலிபுரம் ஆகிய மூன்று சிறைச்சாலைகளில் தேசபக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.  அப்போது சிறையில் உள்ள தொண்டர்கள் ஒன்றுகூடி ஒரு தீர்மானம் செய்தோம்.

விடுதலையாகி வெளியே போனதும், சத்தியமூர்த்தி அவர்களையே தலைவராக வேண்டும் என்று நான் வெளியிட்ட யோசனையைத் தொண்டர்கள் அனைவரும் ஆமோதித்தனர்.

வெளியில் சென்றவுடன் மதுரையில் அரசியல் மகாநாடும் மாகாண காங்கிரஸ் கமிட்டி தேர்தலும் நடைபெற்றன.  சத்தியமூர்த்தியிடம் எங்கள் முடிவை சொன்னபோது அவர் சரி என்று சொன்னார்.  ஆனால் தலைவர் தேர்தல் நடைபெறுவதற்கு அரை மணி நேரம் முன்னதாக ராஜாஜியும் போட்டியிடுகிறார் என்று தெரிந்ததும் சத்தியமூர்த்தி போட்டியில் இருந்து விலகிக் கொண்டார்.  அகில இந்திய சூழ்நிலையில் அது தவறான கருத்தை உண்டாக்கும் என்று சத்தியமூர்த்தி கருதியதே அதற்கு காரணம்.  சத்தியமூர்த்தி அப்போது தலமைப் பதவியை ராஜாஜிக்கு விட்டுக் கொடுத்தது மட்டும் இன்றி, ராஜாஜி தலைவராகத் தேர்ந்து எடுக்கப் பட்டதும் தாமே உபதலைவராக இருந்து வேலை செய்யவும் ஒப்புக் கொண்டார்.

1936ல் பொது தேர்தல் வந்த போது தேர்தல் பிரசாரத்துக்காக சத்யமூர்த்தியும் நானும் திருவண்ணாமலைப் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தோம்.  அதே சமயம் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் நடைபெற இருந்தது.  திரு.குமாரசாமி ராஜா தலைமைப் பதவிக்குப் போட்டியிட்டதை காங்கிரஸ் கட்சியில் யாரும் விரும்பாததால் அவருக்கு எதிராக இன்னொருவரை இருத்த ஏற்பாடு செய்தனர்.  இந்த பிரச்சினையைத் தீர்த்து வைக்க உடனே மதுரைக்கு புறப்பட்டு வரும்படி தலைவர் சத்யமூர்த்திக்குத் தந்தி கொடுத்திருந்தனர்.  அதை கண்ட சத்தியமூர்த்தி என்னை பார்த்து, குமாரசாமி ராஜாதான் விட்டுக் கொடுக்கட்டுமே.  அவர் போட்டியிடவில்லை என்றால் பிரச்னை தீர்ந்துவிடும் அல்லவா.  நீ என்ன சொல்கிறாய்.  ராஜாவுக்கு தந்தி கொடுத்து ஓதுங்கிக் கொள்ள சொல்லலாமா என்று கேட்டார்.

அப்போதிருந்த நிலைமையில் குமாரசாமி ராஜா தலைவராக இருப்பதுதான் நல்லது என்று எனக்கு தோன்றியது.  ஆகையால், நாம் இருவரும் மதுரைக்கு சென்று ராஜாவையே மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்க ஏற்பாடு செய்யலாம் என் யோசனை கூறினேன்.  ஆனாலும் அது அவ்வளவு எளிதில் நடந்துவிடக் கூடிய காரியம் அல்ல என்கிற பயம் என் மனத்தில் இருந்தது.  தலைவரும், நானும் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்று கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தோம்.  சத்தியமூர்த்தி, அங்கத்தினர்கள் எல்லோரையும் அழைத்து என்னிடம் உங்களுக்கு பூரண நம்பிக்கை இருக்கிறதா என்று கேட்டார். இருக்கிறது என்று அவர்கள் பதில் கூறியும் சத்தியமூர்த்திக்குத் திருப்தி ஏற்படாததால், இப்படிச் சொன்னால் போதாது மீனாட்சி சுந்தரேசுவரர் சாட்சியாக என்னிடம் நம்பிக்கை இருக்கிறது என்று கூறினால் தான் நம்புவேன் என்றார். சத்தியமூர்த்தியின் விருப்பப்படி குமாரசாமிராஜாவையே தேர்ந்தெடுத்தார்கள்.

1936ல் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் செய்த போதும், அதற்கு முந்திய வருஷங்களில் படேலும், ராஜேந்திர பிரசாத்தும் இங்கு வந்திருந்த போதுதான் சத்தியமூர்த்திக்குத் தமிழ் நாட்டில் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பதை மேலிடத்தார் அறிந்து கொண்டார்கள்.

படேலும் அவருடைய மகள் மணிபென் படேலும் இங்கே வந்திருந்த சமயம், சத்தியமூர்த்தியும் அவர்களுடன் ரயிலில் பிரயாணம் செய்ய வேண்டி இருந்தது.  சத்தியமூர்த்திக்கு அப்போது உடல்நிலை சரியில்லாமல் இருந்தும் பயணத்தை ரத்து செய்யவில்லை.  அவர்கள் மூவரும் பயணம் செய்த ரயிலில் படேலுக்கு, அவர் மகளுக்கும் கீழ் பர்த்தை ரிசர்வ் செய்து விட்டு, சத்தியமூர்த்திக்கு மட்டும் மேல் பர்த்தில் இடம் போட்டிருந்தார்கள்.  அதைக் கண்ட படேல் தம் மகளை அப்பர் பர்த்தில் படுத்துக் கொள்ளச் சொல்லி, சத்தியமூர்த்திக்கு கீழே இடம் தரும்படி கேட்டுக் கொண்டார்.

அப்புறம் 1939 கடைசியில் மாகாண காங்கிரஸ் தலைமைப் பதவிக்கு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரும், சத்தியமூர்த்தியும் போட்டியிட்டாங்க  இல்லையா?  அந்தப் போட்டியில் வகுப்பு வாதம் காரணமாக சத்தியமூர்த்தி தோல்வி அடைந்தார்.  அதனால் மனமுடைந்து போயிருந்த சத்தியமூர்த்தி, அன்று இரவு என்னைப்  பார்த்து காமராஜ் அடுத்த வருஷம் உன்னைத்தான் காங்கிரஸ் தலைவனாகத் தேர்தலுக்கு நிறுத்தப் போகிறேன்.  முள்ளை  முள்ளால்தான் எடுக்க வேண்டும்.  வகுப்பு வாதத்தைப் போக்க அது ஒன்றுதான் வழி.  நீ தலைவனாக இரு.  நான் உனக்கு காரியதரிசியாக இருந்து வேலை செய்கிறேன் என்றார்.

அதற்கு இப்போது என்ன அவசரம்? அப்போது பார்த்துக் கொள்ளலாம் என்று நான் பதில் கூறினேன்.

அடுத்த வருஷம் உன்னையேதான் நிறுத்தப் போகிறேன்.  இந்த முடிவு நிச்சயமானதுதான் என்று உறுதியாகக் கூறினார் சத்தியமூர்த்தி.  தாம் கூடியபடியே அடுத்த வருஷம் நடைபெற்ற தலைவர் தேர்தலில் என்னை நிறுத்தவும் செய்தார்.  பலத்த போட்டி இருந்தபோதிலும், சத்தியமூர்த்தியின் தலைமையில் ஊழியர்களின் ஆதரவுடன் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.  என்னுடைய வெற்றி சத்தியமூர்த்திக்குப் பெரு மகிழ்ச்சியை அளித்தது.  அந்த ஆண்டு நான் தலைவராக இருந்த போது, அவரே காரியதரிசியாக இருந்து, எனக்கு ஆலோசனை கூறி, என்னை பெருமைப்படுத்தியதை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்றார் காமராஜ்.

அப்போதுதானே சி.பி. சுப்பையா உங்களை எதிர்த்து நின்று தோற்றுப் போனார் என்று கேட்டேன்.  ஆமாம், அந்த கதையை அப்புறம் சொல்கிறேன் என்றார் காமராஜ்.

(தொடரும்)















No comments:

Post a Comment