டில்லியில் காமராஜை நான் சந்தித்த போது அவர் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டார். பேச்சு முழுதும் ஒரே தமாஸும், வேடிக்கையும்தான். சில தலைவர்களை பற்றியும், பதவி மீதுள்ள பற்றுதல் காரணமாக அவர்கள் பயந்து வாழ்வதை பற்றியும் சொல்லிவிட்டு ஹோ ஹோ என்று சிரிக்கத் தொடங்கி விட்டார்.
காமராஜ் அந்த மாதிரி, அந்த அளவுக்கு சிரித்ததை நான் இதற்குமுன் கண்டதில்லை. அந்த சிரிப்பில் கேலி இருந்தது. ஐயோ இவர்களெல்லாம் இப்படிக் கோழைகளாக இருக்கிறார்களே என்ற பரிதாபம் இருந்தது. சிறிது நேரம் சிரித்துவிட்டு பிறகு, அவங்கதான் அப்படி இருக்காங்கன்னா நம்மைச் சுற்றி உள்ளவர்களும் சரியில்லையேன்னேன், எந்த சமயத்தில் எதை பேசுவது, எதை பேசக்கூடாதுன்னுகூடத் தெரியலையே, வாயை மூடிக்கிட்டுச் சும்மா இருந்தாங்கன்னா அதுவே போதுமே என்று மீண்டும் சிரிக்கிறார்.
ஜனசங்கம், சுதந்திரா இந்த கட்சிகளுடன் கூட்டுசசேரும் முயற்சிக்கு என்ன தடங்கல் என்று நான் கேட்டபோது நான் என்ன செய்யட்டும், குஜராத்துக்கும் மைசூரும் ஒத்துவரமாட்டேங்குதே, அவங்க ஊர்ப் பிரச்சினை அவங்களுக்கு, அவசரப்பட்டால் சில காரியங்கள் கெட்டுப் போகுமே. எனக்குள்ள கவலையெல்லாம் இந்த நாட்டைப் பற்றித்தான். நாம் தியாகம் செய்து பெற்ற சுதந்திரம் பறிபோயிடக்கூடாதேங்கிறதுதான்.
சிவப்புப் பணம் நம் நாட்டிலே நிறைய நடமாடுதுன்னு சொல்றாங்க. அப்படின்னா அது ஆபத்ததில்லையா? அந்த பணம் எப்படி இந்த நாட்டுக்குள்ளே வருதுன்னு விஷயம் தெரிஞ்சவங்களை விசாரிக்கணும்.
இந்திரா காந்தி ப்ரோ ரஷ்யாவா, ப்ரோ அமெரிக்காவா?
அவங்க ப்ரோ இந்திரா, அந்த அம்மாவுக்கு பதவி தான் முக்கியம்.
நீங்கதானே அவங்களை பிரதமராப் போட்டீங்க, இப்ப நீங்களே வருத்தப்படறீங்களே?
நேருவின் மகளாச்சே, நேருஜியுடன் கூடவே இருந்ததாலே இந்த நாட்டு அரசியலை நல்லா கவனிச்சுப் பக்குவப பட்டிருப்பாங்க, நல்ல முறையிலே நாட்டை ஆளுவாங்க, அதுக்கேத்த திறமையும், மனப்போக்கும் இருக்கும்னு நினைச்சுத்தான் போட்டேன். இப்படி ஆகும்னு கண்டேனா? நாட்டையே அடகு வச்சுடுவாங்க போலிருக்கே. கோபமும் எரிச்சலும் வருகின்றன அவருக்கு. பேச்சிலே ஒரு வேகம், தவிப்பு.
இடது கையால் பிடரியைத் தேய்க்கிறார். வலது கையால் தலையை தடவிக் கொள்கிறார். சட்டையின் விளிம்பை சுருக்கி மேலே தோள்பட்டைவரை தூக்கிக் கொண்டு போய் சேர்க்கிறார். "உம், இருக்கட்டும்" என்று மீண்டும் தாமாகவே பேசத் தொடங்குகிறார்.
எனக்கு ஒண்ணுமில்லே, இந்த தேசம் பாழாப் போகுதே, இதை எப்படிக் காப்பாத்தப் போறோம்னுதான் கவலையாயிருக்கு, நான் என்ன செய்வேன்?
இதற்குள் எதையோ நினைத்துக் கொண்டு சரி பார்ப்பம் என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டுக் குழந்தை போல சிரிக்கிறார். எளிமையும், தூய்மையும் நிறைந்த காந்திஜியின் கபடப்மற்ற சிரிப்பை நினைப்பூட்டுகிறது அந்த சிரிப்பு.
சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு நீங்களே பிரதமராக வருவதற்கு சந்தர்ப்பம் இருந்தும் நீங்க ஏன் வர நினைக்கல்லே? அப்படி நீங்கள் வந்திருந்தால் இந்த சங்கடம் இருந்திருக்காதே?வாஸ்தவம் தான். வேறே யாராவது பிரதமரா வந்தால், அவங்க நல்ல முறையிலே நாட்டை ஆளுவதற்கு நாம் உதவி இருக்கலாம். நாமே போயி பதவியில் உட்கார்ந்துக்கிட்டா சரியாகிடுமா? அப்பவே காரியக் கமிட்டீ அங்கத்தினர்களில் பெரும்பாலோரும் ராஜ்ய மந்திரிகளில் அநேகமாக எல்லோருமே நான்தான் பிரதமரா வரணும்னு கேட்டுகிட்டாங்க. அடுததாப்லே ஒரு வருஷத்துக்குள் தேர்தல் வர போகுது. தேர்தல் சம்பந்தமான கட்சி வேலைகளையெல்லாம் விட்டு விட்டு நான் பிரதம மந்திரிப் பதவியில் போயி உட்கார்ந்துக்கிட்டா கட்சி என்ன ஆகிறது? எனக்கு கட்சி முக்கியமா? பிரதம மந்திரிப் பதவி முக்கியமா?
இந்திரா காந்தியை எப்படி தேர்வு செய்தீர்கள்? அந்த விவரத்தை கொஞ்சம் சொல்ல முடியுமா?
நேருவுக்கு பிறகு நமக்கு மிஞ்சி இருந்த ஒரே தலைவர் சாஸ்திரி தான். நேருஜிக்கும் சாஸ்திரியிடத்தில் நல்ல மதிப்பும், நம்பிக்கையும் இருந்தன. சாஸ்திரி ரொம்ப சாது, காந்தீயவாதி, நேர்மையானவர், எளிய சுபாவம். அதே சமயத்தில் உறுதியான உள்ளம் படைத்தவர். இந்த நாட்டின் துரதிருஷ்டம் சாஸ்திரியும் சீக்கிரத்திலேயே நமமை விட்டுப் பிரிந்து விட்டார். தாஷ்கண்டில் அவர் இறந்தபோது நான் சென்னையில் இருந்தேன். ரேடியோவில் அந்த செய்தியைக் கேட்டு ரொம்ப துக்கப்பட்டேன். எனக்கு ஒண்ணுமே புரியவில்லை. நம்ம நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. ஆனால் சுதந்திரம் வாங்கித் தந்த தலைவர்களெல்லாம் வயதானவங்களாகப் போயிட்டாங்க. காந்தி, படேல், பிரசாத், ஆசாத், நேரு எல்லோருமே ரொம்ப நாளைக்கு இல்லாமல் போயிட்டாங்க. அப்பவே காந்திஜி சொன்னார. காங்கிரஸைக் கலைச்சுடலாம்னு. எனக்கு அப்போ அவர் எதுக்காக அப்படிச் சொல்றார்னு விளங்கல்லே, இப்போதுதான் புரியுது. அப்பவே கலைச்சு இருந்தால் இப்ப புதுசாவே இரண்டு பலம் வாய்ந்த கட்சிகள் தோன்றி வளர்ந்திருக்கும். அது நாட்டுக்கும் நல்லதாய் இருந்திருக்கும்.
சாஸ்திரியின் காரியங்கள் எல்லாம் முடிஞ்ச இரண்டு நாளைக்கெல்லாம் இந்திரா காந்தி என்னிடம் பேச வந்தாங்க. தான் பிரதமரா வரமுடியும் என்கிற நம்பிக்கை அவருக்கே இல்லை அப்போது. இருந்தாலும், மனசுக்குள்ளே ஓர் ஆசை இருந்திருக்கும். விஷயத்தைத் தெரிஞ்சுக்கிட்டுப் போவோம்னு வந்தாங்க போலிருக்கு. எப்படி இருக்கு தலைமை, என்ன செய்யப் போறீங்கன்னு பொதுவா பேச்சை ஆரம்பிச்சாங்க. என் மனசிலே இருக்கிறதை நான் சொல்லலை.
நீங்க பேசாமல் வீட்டிலே போயி உட்காருங்க, நான் கூப்பிட்டு அனுப்பிச்சா அப்ப வாங்க, அதுவரைக்கும் நீங்க யார்கிட்டேயும் எதுவும் பேசாதீங்க, உங்ககிட்டே யாரவது வந்து ஏதாவது கேட்டாங்கன்னா காங்கிரஸ் பிரசிடெண்டைப் போயி கேளுங்கன்னு சொல்லி அனுப்பிடுங்கன்னேன்.
அடுத்தாப்பலே பத்திரிக்கைக்காரங்க போயி அந்த அம்மாவைக் கேட்டப்போ எனக்கு ஒன்னும் தெரியாது, காமராஜ் என்னை பேசாமல் வீட்டிலே போய் உட்கார்ந்திருக்க சொல்லிட்டார், அவரைப் போய்க் கேளுங்கன்னு பதில் சொல்லியிருக்காங்க. அது பேப்பர்லேகூட வந்ததா நினைவு என்றார்.
இந்திராவை போடலாம்னு ஏன் நினைச்சீங்க, மொரார்ஜி தேசாய் வந்திருக்கலாமே என்றேன்.
நமக்குள்ளே போட்டியில்லாமல் ஒற்றுமையயாக ஒரு முடிவு எடுக்கணும்னு என் ஆசை, அப்ப சில பேர் போட்டி போடணும்னு நினைச்சாங்க. காரியக் கமிட்டீ அங்கத்தினர்களும் அப்படித்தான் அபிப்பிராயப்பட்டாங்க. எம்.பி.க்கள், முதலமைச்சர்கள், பிரதேசக் காங்கிரஸ் தலைவர்கள் எல்லாரையும் தனித்தனியாக கலந்து பேசினேன். என் மனசிலே இந்திரா காந்தியைப் போடலாம்னு ஓர் அபிப்பிராயம் இருந்தது. ஆனால் நான் அதைக் கொஞ்சங்கூட வெளியிலே காட்டிக்கல்லே. ரொம்ப பேர் இந்திராவை வேண்டாம்னு சொன்னாங்க. ஆனாலும் அவர்களோடு எல்லாம் நான் ரொம்ப நேரம் டிஸ்கஸ் பண்ணினேன். அப்புறம் அவர்கள் அபிப்பிராயத்தை மாத்திக்கிட்டாங்க. ஆனால் மொரார்ஜி ரொம்ப பிடிவாதமா இருந்தார். எம்.பி.க்கெல்லாம் லெட்டர் எழுதினார். நான் அவர் வீட்டுக்குப் போய் போட்டி போட வேண்டாம், வாபஸ் வாங்கிக்குங்கன்னு கேட்டுக்கிட்டேன். அவர் பிடிவாதமா வாபஸ் வாங்க மறுத்துட்டார். வேறு வழியில்லாமல் மறுநாள் பார்ட்டியில் வைத்து வோட்டெடுத்தோம். இந்திராவுக்குத் தான் மெஜாரிட்டி கிடைச்சுது.
சரி, இந்திராவை பிரதமராக்கினீர்களே அதுக்கப்புறம் முக்கியமான பிரச்சினைகளில் உங்களைக் கலந்துக்கிட்டுத் தானே இருந்தாங்க?
ஆமாம், கலந்துக்க கிட்டு தான் இருந்தாங்க. ஆனால் நம்ம நாட்டைப் பாதிக்கிற ஒரு முக்கியமான விஷயத்திலே என்னை கலந்துக்காமல் அவசரப்பட்டுட்டாங்க. திடீர்னு நாணய மதிப்பைக் குறைக்கப் போறதா முடிவு எடுத்தது பெரிய தப்பு. நான் அப்ப சென்னையில் இருந்தேன். இந்திரா எனக்குப் போன் பண்ணி டில்லிக்கு வரச் சொன்னாங்க. நானும் போனேன். என்கிட்டே விஷயத்தைச் சொன்னாங்க.
அப்படிச் செய்யக் கூடாது, ரொம்பத் தப்பு. வெளிநாட்டு வியாபாரம் கெட்டுப் போகும். வெளிநாட்டில் கோடிகோடியா கடன் வாங்கி இருக்கோம், அதை இரண்டு மடங்கா திருப்பிக் கொடுக்க வேண்டியிருக்கும். டீவேல்யூவேஷன் அவசியந்தான்னு நினச்சா அதை பற்றி பொருளாதார நிபுணர்களைக் கலந்து பேசி முடிவு எடுங்க. அவசரப்படாதீங்க, ஆறு மாசம் கழிச்சு செய்யலாமேன்னுகூடச் சொல்லிப் பார்த்தேன்.
அதுக்கு என்ன சொன்னாங்க?
இல்லே, காபினெட் மெம்பெர்ஸ் ஒத்துக்கிட்டாங்கன்னு சொன் னாங்க. காபினெட் ஒத்துக்கிட்டா மட்டும் போதாது. எக்ஸ்பர்ட்டுங்ககிட்டே டிஸ்கஸ் பண்ண சொன்னேன். என் பேச்சைக் கேட்கல்லே. அப்பத்தான் இந்த அம்மாவைப் பற்றி எனக்குப் பயம் வந்துட்டுது. நாட்டை இவங்க கிட்டே ஒப்படைச்சிருக்கோமே, எங்கேயாவது தடுமாறிப் போயிடப் போறாங்களேன்னு கவலை வந்துட்டுது.
ஏன் நீங்கே அப்புறம் கூப்பிட்டு கேட்கிறதுதானே?
கேட்டேன். டிவேல்யூவேஷன் மேட்டரை பப்ளிக்கா டிஸ்கஸ் பண்ண முடியலை. ரகசியமா செய்ய வேண்டிய காரியம் அது, இதுன்னாங்க. அப்புறம் காங்கிரஸ் கமிட்டியில் இதை பத்தி பேசினோம். என்ன லாபம்? காரிய கமிட்டியில் இதை திருத்த முடியுமா? கண்டிக்கத்தான் முடியும். கண்டிச்சுத் தீர்மானம் போட்டா கட்சிக்குத் தானே பலக்குறைவு? எங்கே போய்ச் சொல்லிக் கொள்வது? அன்றுதான் எனக்கு கவலை வந்தது. இந்த அம்மாவிடம் நாட்டை விட்டு வைத்தால் ஆபத்துனு நினச்சேன். நான் என்ன செஞ்சுத் தொலைப்பேன்னேன்.
சிரிப்பு, பலத்த சிரிப்பு, எக்காளச் சிரிப்பு. தேசம் பாழாய்ப் போகிறதே என்று அடிவயிறு காந்தி வரும் சிரிப்பு, அந்தச் சிரிப்பு அடங்கக் கொஞ்ச நேரம் ஆகிறது.
பார்ப்பம், பொறுமையா இருந்துதான் காரியத்தை சாதிக்கணும். மணிக்கட்டைப் பிடித்துக் கொள்கிறார், பிடரியைத் தேய்க்கிறார், தவிக்கிறார். மீண்டும் அந்தகக் குழந்தைச் சிரிப்பு.
(தொடரும்)
No comments:
Post a Comment