Pages

Tuesday, May 17, 2022

காணாமல் போகும் உறவுகள்.

அவர் இறந்து விட்டார். அடக்கம் செய்யணும் சொல்லிக் கொண்டே சென்றார்கள்.

மெல்ல எட்டிப் பார்த்தேன் மூச்சு இல்லை ஆனால் இப்போதுதான் இறந்திருந்தார் என்பதை மட்டும் நம்ப முடியவில்லை.

இருபது வருடங்கள் முன்னாடி அவர் மனைவி இறந்த பிறகு, சாப்பிட்டாயா என்று யாரும் கேட்காத நேரத்தில்.. அவர் இறந்திருந்தார், யாருமே கவனிக்கவில்லை.

பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே என்று காதுபட மருமகள் பேசியபோது அவர் இறந்திருந்தார் அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

தாய்க்குப் பின் தாரம் தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம் என்று வாழ்ந்த போது அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

காசு இங்கே மரத்திலேயா காய்க்குது என்று மகன் அமிலவார்த்தையை வீசிய போது. அவர் இறந்திருந்தார் யாருமே கவனிக்க வில்லை.

என்னங்க ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டு தலை முழுகிட்டு வந்திடுங்க என்று காதிலே விழுந்த போதும் அவர் இறந்திருந்தார். யாருமே கவனிக்க வில்லை.

உனக்கென்னப்பா, பொண்டாட்டி தொல்லை இல்லை என்று வாழ்த்துவது போல கிண்டலடிக்கப் பட்ட போது அவர் இறந்திருந்தார்..!!!அப்போதும் யாருமே கவனிக்க வில்லை.

இப்போதுதான் இறந்தாராம் என்கிறார்கள்.

எப்படி நான் நம்புவது ??

நீங்கள் செல்லும் வழியில்இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்.

ஒரு வினாடியாவது நின்று பேசி விட்டுச் செல்லுங்கள்.

இல்லையேல்

உங்கள் அருகிலேயே இறந்து கொண்டிருப்பார்கள் புரிந்து கொள்ளுங்கள்.

வாழ்க்கை என்பது வாழ்வது மட்டுமல்ல வாழ வைப்பதும் தான் 

பலர் இறந்து விடுகிறார்கள். புதைக்க தான் சில ஆண்டுகள் ஆகிறது. இன்றைய நவீன உலகத்தில் மனித உறவுகள் சிதைந்து விஞ்ஞானத்தோடு உறவு வளர்ந்து வருகிறது. இன்றைய உலகில் மனிதர்களுக்கு உறவுகள் தேவையில்லை... மாறாக திறன்பேசி (SMART PHONE) இருந்தால் போதும் என்ற மன நிலையில் வாழ்ந்து வருகிறோம்... ஆக!, மனித உறவுகள் இன்று ஊதாசினப்படுத்தப் பட்டு வருகின்றன என்பதே உண்மை.

பெற்ற பிள்ளைகளோடும், உற்றார் உறவினர்களோடும், சிரித்து மகிழ்ந்து உறவாடிய நாட்கள் போய், இன்று உறவுகள் களைந்து, குடும்பங்கள் சிதைந்து, பிள்ளைகளை மறந்து, கணிணியும், அலைபேசியும் இருந்தால் போதும் என்று நிலையில் வாழ்ந்து வருகிறோம்.

இது ஒருபுறம் இருக்க, இனி வரும் காலங்களில் அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, சின்ன அண்ணன், பெரிய அண்ணன், சின்ன அக்கா, பெரிய அக்கா, சித்தப்பா, பெரியப்பா, அத்தை, மாமா, மச்சான், மச்சினி, அண்ணி, கொழுந்தனார், நாத்தனார், தாய்மாமன், சித்தப்பா பையன், சித்தப்பா பொண்ணு, பெரியப்பா பையன், பெரியப்பா பொண்ணு, அத்தை பையன், அத்தை பொண்ணு, மாமன் பொண்ணு, மாமன் பையன்... இது போன்ற வார்த்தைகள் எல்லாம் 2050 மேல் யாருடைய காதிலும் விழாது.

எவரும் அப்படிக் கூப்பிடவும் மாட்டார்கள், அகராதியில் இருந்து கூட கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும்... காரணம்., நகரவாழ் பெரியோர்கள் கூறுவது போல இந்த உறவுகள் எல்லாம் எப்படி வரும் ?

கட்டிக் கொடுத்த பெண்ணுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அண்ணனும் தம்பியும் பறந்து செல்வார்கள், இனி யார் போவார்கள் ? ஒவ்வொரு பெண்ணும், சொந்த பந்தம் ஏதுமின்றி ஆறுதலுக்கு ஆள் இன்றி தவிக்கப் போகிறார்கள்.

ஒவ்வொரு ஆணும் தன் இன்ப துன்பங்களில் பங்கு கொள்ள அண்ணன், தம்பி யாருமின்றி அவதிப் பட போகிறார்கள், அப்பா அம்மாவைத் தவிர எந்த உறவுகளும் இருக்கப் போவதில்லை.

அந்த குழந்தையும் வெளியூருக்கோ, இல்லை தனிக் குடித்தனமோ சென்று விட்டால் ?

வளர்த்தவர்கள் எல்லாம் வயதான காலத்தில், ஏனென்று கேட்க நாதியற்று முதியோர் இல்லத்திலோ, இல்லை!, அந்த  குழந்தைக்காக கட்டிய வசதியான வீட்டிலோ அனாதையாக கிடந்து சாவார்கள்.

உறவுகளின் உன்னத மதிப்பை உணராமல் பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் அத்தனை பேருக்கும் இதே நிலை தான். 

உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டால் ஓடோடி வந்து இனி யார் வரப் போகிறார்கள் ? வாகனங்கள், வீட்டு வசதி வாய்ப்புகளுடன்  உறவுகளற்ற ஒரு அனாதையை வளர்ப்பதற்கும், வயதான காலத்தில் நாதியற்று சாவதற்குமா ? இவ்வளவு பாடு பட்டு ஓடி ஓடி செல்வம் ஈட்டுகிறீர்கள் ?

ஒரே ஒரு முறை நம் கடைசி காலத்தை நினைத்துப் பார்ப்போம்.

பணமில்லாத ஒருவனை அனாதை என்று யாரும் சொல்வதில்லை, ஆனால் உறவுகள் இல்லாத ஒருவன் எத்தனை கோடி வைத்திருந்தாலும் அனாதை தான் என்பதை மறந்து விடாதீர்கள்.

இந்த உண்மை‌‌ இன்றைய பரபரப்பான சூழ்நிலையில் யாருக்கும் தெரியவில்லை, தெரிந்தாலும் புரிவதில்லை.

இதன் தாக்கம் இனி வரும் பல தலைமுறைகளை மிகவும் பயங்கரமாக பாதிக்கும் என்பதுதான் யதார்த்தம்.

யாராலும் மாற்ற இயலாத காலத்தின் கட்டாயம்.

No comments:

Post a Comment