Pages

Friday, May 20, 2022

சிவகாமியின் செல்வன் (காமராஜரின் அரசியல் வாழ்க்கை) 01

ஆறு, ஏழு ஆண்டுகளுக்கு முன்னாள் நான் டில்லிக்குப் போயிருந்தபோது காமராஜ் டில்லியில் முகாம் போட்டிருந்தார்.  அவரைப் பற்றி வேறுஒரு வார பத்திரிகையில் கட்டுரைகள் எழுதுவதற்காக அவருடனேயே சில நாட்கள் தங்கி இருந்தேன்.  காமராஜ் அப்போது முதலமைச்சர் பதவியில் இல்லை.  ஆனால் காமராஜ் திட்டம் காரணமாக நேருஜி, லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய் போன்ற தலைவர்களிடம் அவருடைய செல்வாக்கு இமயமலை போல் வளர்ந்திருந்தது. 

டி.டி.கே., அதுல்யகோஷ், எஸ். கே. பாட்டில் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள்.  

டி.டி.கே இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது.  காமராஜ் கர்மா வீரர் என்றும், தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்றாஸ் ஸ்டேட் ரொம்ப காமராஜ் மயமாகிறதென்றும்  அவர்கள் பாராட்டி பேசிக் கொண்டிருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோசத்துடன் கேட்டுக் கொண்டு மௌனமாக உட்கார்ந்து இருந்தார்.

டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களை போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிருந்தேன். நடராஜன் காமராஜுக்கு நீண்ட நாட்களாக அறிமுகமானவர்.  காமராஜ் போகும் இடங்களுக்கு அவரைப் பின்பற்றி நானும் நடராஜனும் போய்க்கொண்டிருந்தோம்.

அந்த காலத்தில் காமராஜின் வலது கரம் என்று சொல்லக்கூடிய திரு. ராஜகோபாலன் ஒரு நாள் காலை ஆகாரத்துக்குத் தம் இல்லத்துக்கு வரும்படி காமராஜையும் கூடவே எங்களையும் அழைத்திருந்தார்.  அன்று நாங்கள் சாப்பிட்டு முடிக்கும்போது மணி 9 ஆகிவிட்டது. 

அன்று காலை 9 மணிக்கு நேரு வீட்டில் காமராஜர் கலந்து கொள்ள வேண்டிய முக்கியமான கூட்டம் ஒன்று இருந்தது.  காமராஜுக்கு அது தெரியாது.  கூட்டம் பத்தரை மணிக்கு என்றுதான் அவரிடம் யாரோ தகவல் கொடுத்திருந்தார்கள்.  அதனால் அவர் சாவகாசமாக ராஜகோபாலன் வீட்டில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தார்.  

திடீரென்று நேரு வீட்டில் இருந்து ராஜகோபாலனை இந்திரா காந்தி டெலிபோனில் அழைத்து காமராஜ் அங்கே இருக்கிறாரா 9 மணிக்கு மீட்டிங்  இருக்கிறதே இங்கே எல்லாத் தலைவர்களும் வந்து காத்திருக்கிறார்கள்.  நேருஜி காமராஜுக்காகக் கூட்டத்தை ஆரம்பிக்காமல் உட்கார்ந்திருக்கிறார் என்றார்.  இந்த செய்தியை ராஜகோபால் காமராஜிடம் சொன்னபோது அவர் பதறிப் போனார்.  நேற்று என்னிடம் பத்தரை மணிக்கு கூட்டம் என்று தானே சொன்னார்கள். 9 மணிக்கு மாற்றிய செய்தி எனக்கு தெரியாதே, சரி சரி வண்டியை எடுக்க சொல்லு என்று வேகமாக எழுந்து வாசலுக்கு விரைந்தார்.

நேருஜியையும், மற்றவர்களையும் வீணாக  காக்க வைத்து விட்டோமே. தன்னைப் பற்றி நேரு என்ன நினைத்துக் கொள்வாரோ என்ற கவலையும், வேதனையும் காமராஜ் பேச்சில் வெளிப்பட்டன.

வாசலில் மழை கொட்டுக் கொட்டென்று கொட்டிக் கொண்டிருந்தது.  காருக்குள் ஏறி உட்காருவதற்குள்ளாகவே தெப்பலாக மூழ்கிவிடக்கூடிய பேய் மழை.  ராஜகோபாலன் சட்டென்று குடையைக் கொண்டு வந்து காமராஜரைக் காரில் ஏற்றி விட்டார்.

எனக்கும், நடராஜனுக்கும் ஒன்றும் புரியவில்லை.  காமராஜுடன் போக வேண்டியதுதானா  இல்லையா என்பதை யோசிக்காமலேயே நாங்களும் காரில் ஏறிவிட்டோம்.  காமராஜ் அப்போது ஒன்றும் சொல்லவில்லை. அவர் நினைப்பெல்லாம் தீன்மூர்த்தி பவனிலேயே  இருந்தது.

மழையில் டில்லிப் பாதைகளெல்லாம் மூழ்கிப் போயிருந்தன.  பத்தடிக்கு அப்பால் என்ன இருக்கிறது என்பது கண்ணுக்குப் புலனாகவில்லை.

கார் போய்க் கொண்டிருந்தது.  கண்ணாடி கதவுகளையெல்லாம் மூடிக் கொண்டோம்.  நடராஜன் முன் சீட்டில் உட்கார்ந்திருந்தார். நானும், காமராஜும் பின் சீட்டில் இருந்தோம்.  ஒரே மௌனம்.

ஏற்கெனவே கூட்டத்துக்கு லேட்டாகப் போகிறோமே என்ற வேதனை காமராஜின் உள்ளத்தில் குழம்பிக் கொண்டிருந்தது.  இந்த சமயத்தில் அவருடைய அனுமதியின்றி நானும், நடராஜனும் வண்டியில்  ஏறிக் கொண்டது அவருக்குத் தர்ம சங்கடத்தை உண்டாக்கி விட்டது.  நடராஜனும், நானும் அந்தக் கூட்டத்துக்குப் போவது கொஞ்சம் கூடப் பொருத்தமில்லாத காரியம். இங்கிதம் தெரியாமல் நாங்கள் வண்டிக்குள் ஏறிவிட்டோம்.  கொட்டுகிற மழையில் எங்களை நடுரோட்டில் இறக்கவும் அவருக்கு மனமில்லை.  நேரமோ ஓடிக் கொண்டிருக்கிறது. என்ன செய்வதென்று புரியாத நிலை.  இதுதான் அவருக்கு கோபம். திடீரென்று இடி முழக்கம் போல் காமராஜ் நடராஜனைப் பார்த்துக் கர்ஜிக்க ஆரம்பித்து விட்டார். 

உனக்கு கொஞ்சமாவது யோசனை இருக்கிறதா? இப்போது எதற்கு காரில் ஏறினாய்? கேமராவும் கையுமாக நீ என்னோடு அங்கே வந்தால் அங்குள்ளவர்கள் என்னைப்  பற்றி என்ன நினைப்பார்கள்?

நாங்கள் நடு நடுங்கி போனோம்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை. காமராஜரை இப்படி ஒரு நிலையில் வைத்து விட்டோமே என்று எண்ணி வருத்தப்பட்டேன்.  கார் போய்க் கொண்டே இருந்தது.  சட்டென்று காமராஜ் அதோ அதோ நிறுத்து என்றார்.  அவர் சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு டாக்ஸி நின்று கொண்டிருந்தது.  எங்களை கண  நேரத்தில் அங்கே இறக்கி விட்டு அந்த டாக்ஸியில் எறிக் கொள்ளும்படிச் சொன்னார்.   நாங்கள் தப்பினோம் பிழைத்தோம் என்று ஓடி அதில் ஏறிக் கொண்டோம்.  நடராஜனுக்கு  இது சகஜம் போலிருக்கிறது.  காமராஜர் கோபத்தை அவர் பொருட்படுத்தவில்லை.  அவர் என்னைத் திட்டினால் தான் எனக்கு திருப்தி.  அவரிடம் திட்டு வாங்குவதில் உள்ள சந்தோசம் எனக்கு வேறு எதிலும் இல்லை என்று ஜாக்பாட்டில் பணம் கிடைத்தவர் போல் சிரித்துக் கொண்டே சொன்னார்.

அன்று பகல் 12 மணிக்கு மொரார்ஜி தேசாய், ஜெகஜீவன்ராம், காமராஜ் மூன்று பேருக்கும் காங்கிரஸ் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சம்பந்தமான கமிட்டீ கூட்டம் ஒன்று இருந்தது.  நானும், நடராஜனும் அங்கே போய்  காத்திருந்தோம். காமராஜ் அங்கே எங்களை பார்த்து விட்டு சிரித்து கொண்டே என்ன இங்கே வந்திருக்கிறீர்களா சரி இங்கேயே உட்கார்ந்திருங்கள் இதோ வந்து விடுகிறேன் என்று ரொம்ப சாந்தமாக சொல்லிவிட்டு போனார். 

இரண்டு மணி நேரத்துக்கு முன்னால் எரிமலையாக வெடித்த காமராஜர் இப்போது இப்படி பச்சை வாழைப்பட்டையாக மாறியிருக்கிறார் என்று வியந்தேன் நான். 

நேருஜியிடம் அவருக்குள்ள மதிப்பும், மரியாதையும் எவ்வளவு அழுத்தமானது ஆழமானது என்பதை நான் அன்றுதான் புரிந்து கொண்டேன். 

அன்று பகல் சாப்பாட்டின் போது தம்முடைய தர்ம சங்கடமான நிலையை அவர் எங்களுக்கு விளக்கியபோது தான் காரில் நாங்கள் இருவரும் ஏறிக் கொண்டது எத்தனை பைத்தியக்காரத்தனம் என்று புரிந்தது.

7 ஆண்டுக்கு பிறகு அவரை இப்போது மீண்டும் திருமலைப் பிள்ளை ரோடில் உள்ள இல்லத்தில் சந்தித்தேன். 

என்ன வாங்க என்ன சங்கதி? சொல்லுங்க என்றார்.

தாங்கள் சுயசரிதை எழுத வேண்டும் என்றேன்.

வேண்டாம். அது எதுக்கு என்று மொட்டையாக பதில்  சொல்லி மறுத்துவிட்டார்.

தங்கள் சுயசரிதை என்றால் அதில் தமிழ் நாட்டின் சரித்திரம் இருக்கும், காங்கிரசின் சரித்திரம் இருக்கும் என்று வாதாடி வற்புறுத்தினேன். வேண்டுமானால் நீங்கள் பயாக்ரபியா எழுதுங்க எனக்கு ஆட்சேபமில்லை என்றார்.

நான் எழுத்துவதானால் தங்களுடைய உதவி இல்லாமல் முடியாது. எனக்குப் பல தகவல்கள் தேவைப்படும்.  தங்களை அடிக்கடி வந்து தொந்திரவு செய்வேன் என்றேன்.  வாங்க வாங்க என்றார். சொல்றீங்களா என்றது கேட்டேன்.  சொல்றேண்ணேன் என்று கூறி விட்டு டில்லிக்குப் புறப்பட்டுப் போனார்.

நான் விடவில்லை, டில்லிக்குப் போய்  அவரைப் பிடித்துக் கொண்டேன். அங்கே தினமும் பார்லிமெண்டுக்குப் போகவும், நிஜலிங்கப்பாவுடன் பேசவும் அவருக்கு நேரம் சரியாக இருந்தது,  இதற்கிடையில் விசிட்டர்கள் வேறு. இவ்வளவுக்கும் இடையில் எனக்கும் நேரத்தை ஒழித்து வைத்துக் கொண்டிருந்தார் அவர்.

புவனேசுவர் காங்கிரஸுக்கு பிறகு சில நாட்களுக்கெல்லாம் நேரு காலமாகி விட்டாரே, அதற்கு முன்னாள் நேருஜியை தாங்கள் சந்தித்துப் பேசினீர்களா நேரு தங்களிடம் அப்போது ஏதாவது சொன்னாரா என்று என் முதல் கேள்வியை தொடங்கினேன்.

புவனேஸ்வருக்கு நேருஜி வந்திருந்த போது அவருக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. சீன ஆக்கிரமிப்புக்கு பிறகே அவர் உடல் நிலையில் தளர்ச்சி கண்டிருந்தது.  நேருஜி புவனேசுவருக்கு வந்திருந்த போதிலும் காங்கிரஸ் மாநாட்டு நடவடிக்கைகளில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. நேருஜி வராமல் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு அதுதான்.  மாநாட்டுப் பந்தலில் அவருக்காகப் போடப்பட்டிருந்த ஆசனம் காலியாக இருந்ததால் மாநாட்டில் அவ்வளவு பெரிய கூட்டம் இருந்துங்கூடப் பந்தல் முழுதும் வெறிச்சோடிக் கிடப்பது போலவே தோன்றியது.  அப்புறம் அவரால் விமான கூடத்துக்கு காரில் போவது கூடச் சிரமமாகி விட்டது.  அதனால் ஏர்போர்ட்டுக்கு ஹெலிகாப்டரில் போய் அங்கிருந்து டில்லிக்கு விமானத்தில் பயணமானார்.  அதற்குப் பிறகு நானும், சாஸ்திரியும் விசாகப்பட்டணத்தில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போயிருந்தோம்.  அங்கிருந்து சாஸ்திரி டில்லி போய் விட்டார்.  நான் சென்னைக்கு திரும்பி விட்டேன். 

அப்புறம் சில நாட்களுக்கெல்லாம் நேரு என்னை கூப்பிட்டு அனுப்பினார்.  மந்திரி பதவியில் இருந்து விலகியிருந்த லால்பகதூர் சாஸ்திரியை மீண்டும் காபினெட்டில் எடுத்துக் கொள்வது பற்றி என்னை கலந்து ஆலோசித்தார்.  அப்போது வேறு சில மந்திரிகளும் விலகி இருந்ததால் சாஸ்திரியை மட்டும் சேர்த்துக் கொள்வது பற்றிச் சிலருக்கு ஆட்சேபம் இருந்தது.  நான் அச்சமயம் இந்திரா காந்தியின் பெயரைப் பிரஸ்தாபித்தேன்.

இந்திராவைப் பற்றி பினனால் பார்த்துக் கொள்ளலாம் என கூறி விட்டார் நேரு.

அப்போது அவர் சொன்னது என் மனத்திலே இருந்துகொண்டிருந்தது. தமக்குப் பிறகு ஒரு வேளை இந்திரா மந்திரியாக வரட்டும் என்ற எண்ணம் அவர் மனத்தில் இருந்திருக்குமோ என்னவோ?  அப்படி அவர் வெளிப்படையாகவும் சொல்லவில்லை.  நானாகவே ஊகித்துக் கொண்டேன்.

நேரு இறக்கும்போது தாங்கள் எங்கே இருந்தீர்கள்? கிராமங்களில் சுற்றுப் பயணம் செய்து கொண்டிருந்தீர்களா ?

இல்லை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. திடீரென்று டில்லியில் இருந்து சாஸ்திரி கூப்பிடுவதாகச் சொன்னார்கள்.  எழுந்து போயிப் பேசினேன்.  நேருவின் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனே புறப்பட்டு வருபடி சாஸ்திரி என்னிடம் சொன்னார்.  நான் அடுத்த விமானத்தில் உடனே டில்லி பறந்தேன். போகும்போது விமானத்திலேயே பகல் 2 மணிக்கு நேரு இறந்து விட்டார் என்று செய்தி சொன்னார்கள்.  நான் டில்லி விமான நிலையத்தில் இறங்குவதற்கு முன்பே பிரசிடெண்ட் ராதாகிருஷ்ணன் நந்தாவைத் தாற்காலிகாப் பிரதமராக நியமித்திருப்பதாகத் தகவல் கிடைத்தது.  ஜே. ராஜகோபாலனும், வேறு சில நண்பர்களும் எனக்காக விமான கூடத்தில் காத்திருந்தார்கள். 

அப்போது என்னைப் பலர் அடுத்த பிரதமர் யார் என்பதைப் பற்றியே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.  நேருஜியின் இறுதிச் சடங்குகள் முடியும்வரை நான் யாரிடமும் பேசவில்லை. பிறகு எல்லோரையும் தனித்தனியே அழைத்து பேசினேன்.  என் மனதில் சாஸ்திரியே பிரதமராக வரலாம் என்று இருந்த போதிலும் அந்த அபிப்பிராயத்தை நான் யாரிடமும் வெளிப்படையாகச் சொல்லவில்லை.  தாம் பிரதமராக வரவேண்டும் என்ற எண்ணம் மொரார்ஜி தேசாய்க்கு இருந்தது.  அவரிடமும் நான் பேசினேன்.  எல்லோரும் சாஸ்திரியைத்தான் போட வேண்டும் என்று சொல்கிறார்கள்.  ஆகையால் நீங்கள் போட்டி போடாமல் இருப்பது நல்லது என்றேன்.  அவர், இருக்கும் நிலைமையைப் புரிந்து கொண்டு என் பேச்சை ஒப்புக் கொண்டுவிட்டார். அதனால் சாஸ்திரியையே எல்லோரும் ஏகமனதாக தேர்ந்தெடுப்பது சுலபமாயிற்று.

பார்லிமென்டரி காங்கிரஸ் கட்ச்சிக்குத் தலைவர் தேர்தல் நடைபெற்ற போது நான் எழுந்து பேசினேன். அன்று ஜூன் மாதம் 2ம் தேதி பார்லிமென்ட் சென்ட்ரல் ஹாலில் கூட்டம் நடைபெற்றது.  பார்லிமென்ட் மெம்பர்கள், முதல் அமைச்சர்கள் தவிர வெளிநாட்டுப் பிரமுகர்களும் தூதவர்களுங்கூட அந்தக் கூட்டத்துக்கு வந்தார்கள்.  அவர்கள் விசிட்டர் காலரியில் உட்கார்ந்து இருந்தார்கள்.

நேருஜியை போன்ற ஒரு தலைவர் இனிக் கிடப்பது அசாத்தியம்.  இனி தனிப்பட்ட முறையில் யாரும் அந்தப் பொறுப்பை நிர்வகிக்கவும் முடியாது.  கூட்டாகப் பொறுப்பேற்று, கூட்டுத்தலைமையின் கீழ் கூட்டாக அணுகித்தான் இந்தக் கஷ்டமான பணியை மேற்கொள்ள முடியும்.  கடந்த காலத்தில் நாம் பல தவறுகள் செய்து இருக்கிறோம்.  நேருஜி நமது மாபெரும் தலைவராயிருந்ததால், அவரிடம் இருந்த நம்பிக்கை காரணமாக மக்கள் நம்மை மன்னித்தார்கள்.  இனி நாம் சிறிய தவறுகள் செய்தாலும் மக்கள் பொறுக்க மாட்டார்கள் என்றேன்.

சாஸ்திரிக்குப் பிறகு இந்திரா காந்தியை பிரதமாராக்கியதும் தாங்கள் தானே என்று கேட்டேன்.  ஆமாம், நேருவின் மகளாயிற்றே, தப்பாக நடக்கமாட்டார் என்ற நம்பிக்கையில் போட்டு விட்டேன்.  அது ஒரு கதை, அப்புறம் சொல்கிறேன் என்றார். 

(தொடரும்) 


No comments:

Post a Comment