சித்த மகா புருஷர்கள் நமது மனித உயிர்களின் நலனுக்காக கூறிய மூலிகைகளில் வேம்பு மிகவும் முக்கியமானது. இன்றும் பெண்களால் வணங்கப்படும் வேப்பமரத்தின் சக்தியையும் வேப்பிலையின் மருத்துவ குணத்தையும் கருவூரார் சித்தர் மிக ஆராய்ந்து தனது கருவாத காவித்தில் குறிப்பிட்டுள்ளார்.
தானவானாம் வேம்பினுடை கற்பந்தன்னை தாரணியில் சித்தர்களே சாற்றக்கேளும் ஆனதொரு கார்த்திகையாம் மாதந்தன்னில் வாழ்மிருக சீரசமும் பூசந்தன்னில் என முதற்ஜலமிக்க கொழுந்தைக் கிள்ளி இன்பமுடன் தின்றுவர இருபத்தேழு நாள் ஆனதொரு சர்ப்பங்கள் தீண்டினாலும் அதுபட்டுப் போகுமப்பா அறிந்து கொள்ளே
இப்பாடலில் கருவூரார் கூறியுப்பதுபோல் கார்த்திகைத் திங்கள் மிருகச்சிரீடம் அல்லது பூசநாளில் ஆரம்பித்து வேம்பின் கொழுந்தைக் கிள்ளி 27 நாட்கள் தின்றால் பாம்பு கடித்தாலும் உடலில் விஷம் ஏறாது. ஒருமாதம் தின்றால் குஷ்ட நோய் விலகும். வேப்பிலையின் கொழுந்தை நிழலில் உலர்த்திப் பொடி செய்து வெருகடி - 3 விரல்களால் எடுக்கும் அளவு வீதம் - தேனில் குழைத்துத் தின்று வந்தால் நரை திரைகள் மாறும், குன்றாத இளமையுடன் 100 வயது வாழலாம்.
அடுத்து வேப்பமரத்தின் ஒரு திருகு ஆணியை அடித்து அதில் இருந்து பால் வரும் விதமாக ஒரு சிலாகையை அடித்து அந்த பாலை ஒரு பழகிய மண்பாண்டத்தில் விழும்படியாக வைத்து மூடி விடவேண்டும். 48 நாட்கள் சென்றதும் அந்த மண்பாண்டத்தில் இருக்கும் தைலத்தை எடுத்து 3 கழஞ்சு தைலம், 3 கழஞ்சு தேன் சேர்த்து 48 நாட்கள் உட்கொண்டால் முதுமை வராது. அதையே 6 மாதங்கள் உட்கொண்டால் உடல் வச்சிர காயமாகிவிடும்.
உமிழ்நீர் வேதனை உடையதாகிவிடும். காயசித்தி ஏற்படும். விண்வெளி சஞ்சாரமும் சாத்தியமாகும் என்கிறார் கருவூரார்.
ஸ்ரீராம பரதேசி சித்தர், கலைந்த கேசமும் கூர்மையான விழிகளும் ஒல்லியான தேகமும் கொண்வர். 1791 - 1868 வரை நம் தமிழ் மண்ணில் வாழ்ந்தவர். இவரது சமாதி பாண்டிச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான்பேட்டையின் திருப்பத்தில் வலப்புறத்தில் சிறிய மண்டபம் போல் இருக்கிறது.
இவர் 20 வயது இளைஞனாக ஆந்திராவில் இருந்து புதுவைக்கு வந்தவராம். அப்பொழுது அங்கு நடந்து கொண்டிருந்த இராமாயண சொற்பொழிவைக் கேட்டுவிட்டு ராமநாமத்தை உச்சரித்தபடியே நடந்துவிட்டு வில்லியனுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதியில் ஒரு மரம் நிழலில் உட்கார்ந்து ராம் ராம் என்று உச்சரித்துக் கொண்டே இருக்க ஆரம்பித்தாராம். பல நாட்களாக உணவு உறக்கம் இன்றி ராம் என்ற மந்திரத்தை உச்சரித்தபடியே தியான நிலையில் இருப்பதை பார்த்து ஆச்சரியப்பட்ட அப்பகுதி மக்கள் அவருக்கு உணவு வகைகளை கொண்டு வந்து அவர் முன் வைத்து சாப்பிடும்படி வற்புறுத்த அவர் சாப்பிட மறுத்துவிட்டு தியான நிலையிலே இருந்தாராம்.
அப்போது அந்த ஊரில் ஒரு சிறுவனின் தந்தை பாம்பு கடித்து இறந்துபோக தந்தையின் இறப்பில் அதிர்ந்து போன சிறுவன் அதைவிடவும் சித்தர் பசியோடு தியானத்தில் இருக்கிறாரே என சாப்பாடு கொண்டு வந்தான்.
தந்தை இறந்த சோகத்தை விடவும் தனது பசியை பெரிதாக நினைத்து அச்சிறுவன் உணவு கொண்டு வந்திருப்பதை தனது ஆன்ம சக்தியால் உணர்ந்த சித்தர் சட்டென்று கண் திறந்து புன்னகை முகமாய் அந்த சிறுவனைப் பார்த்தபடியே உணவை சாப்பியோட ஆரம்பித்தார். சுற்றிலும் இருந்தவர்கள் ஆச்சர்யமாக பார்க்க சாப்பிட்டு முடித்த சித்தர் உங்கப்பாவுக்கு என்னாச்சு என்று கேட்க அந்த சிறுவன் அழுதுகொண்டே அவன் தந்தை இறந்த விஷயத்தை சொன்னான். அவர் உடனே கைகளை பற்றியபடி அவனுடன் அவன் வீட்டுக்கு சென்று இறந்து கிடந்த அந்த சிறுவனின் அப்பாவின் உடலை பார்த்து ராம ராம என உச்சரிக்க ஆரம்பித்தார். அடுத்த சில நிமிடங்களில் அங்கே இந்த மனிதரை கடித்த நாகம் தவழ்ந்து வந்து இறந்து கிடந்தவரின் மீது படமெடுத்து ஆடியது. சுற்றிலும் இருந்தவர்கள் ஆச்சரியத்தின் உச்சிக்கு செல்ல அந்த நாகம் அவர் உடலை தீண்டிய இடத்தில கொத்தி விஷத்தை உறிஞ்சிவிட்டு மெல்ல நகர்ந்தது. அடுத்த சில நிமிடங்களில் இறந்து கிடந்த மனிதர் தூங்கி எழுபவர்போல் எழுந்திருக்க அச்சிறுவன் சித்தரை கண்ணீரோடு வணங்க ஆரம்பித்தான். அவன் மட்டுமல்ல, சுற்றிலும் இருந்தவர்கள் அவரின் மகிமை உணர்ந்து ஆச்சர்யமாய் வணங்க ஆரம்பித்தனர்.
இதேபோல் விபத்தில் கால் உடைந்து நடக்கமுடியாமல் போனவரையும், வாத நோயில் கைகால்கள் வீழ்ந்தவரையும், கண் பார்வையில் குறைபாடு உள்ளவர்களையும், அதிசயத்தக்க வகையில் தனது கரத்தை அவர்கள் உடலில் பதித்து ராம் என்கிற மந்திர சொல்லினால் குணப்படுத்தி இருக்கிறார் சித்தர்.
சித்தரின் மகிமையும் அற்புதங்களும் பல ஊர்களுக்கு தெரிய வந்ததில் அவரைத் தேடி தினமும் நூற்றுக்கணக்கானோர் வர ஆரம்பிக்க அவர் அவர்களிடம் இருந்து விலகிச் சென்று தனிமையில் தவநிலையை மேற்கொள்ள ஆரம்பித்தார். 1840ம் வருஷம் ஏப்ரல் மாதம் 10 தேதி விடியற்காலையில் சித்தர் ராம் என்கிற மந்திரத்தை மிகவும் உச்சமான குரலில் நடுக்கத்துடன் சொல்ல அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சித்தரை நெருங்கி அவரது அமானுஷ்ய சப்தத்திற்கு விளக்கம் கேட்டனர். கண்விழித்த சித்தர் அடுத்தமாதம் பெரும் சூறாவளியும் பேய் மழையும் பொழிந்து இங்கே பெரும் பிரளயம் ஏற்படப்போகிறது. அதனால் வேறு ஊருக்கு குடிமாற்றி செல்லுங்கள் என்று சொல்ல யாரும் நம்பவில்லை. காரணம் மே மாதத்தில் வெயில் காலம் என்பதால் சூறாவளியும் மழையும் வராது என்று நம்பினார்கள். ஆனால் சித்தர் சொன்னது போலவே மே மாதம் சூறாவளியும் பேய் மழையும் பெய்து அந்த ஊர் மக்களை ஆச்சர்யப்படுத்தியது. அதுமட்டுமல்லாது தொடர்ந்து 3 நாட்கள் கனமழை பொழிந்ததில் சங்கராபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓட கிராமத்தில் ஏராளமான உயிர் பலிகள், சித்தர் சொல் மீறியதால் பாதிப்புக்கு உள்ளான. ஆனாலும் சித்தர் இருந்த இடமும் மழை வெள்ளத்தில் மூழ்கி வெள்ளக்காடாகி இருந்தது.
நாம் எல்லோரும் சித்தரின் வார்த்தையை மீறியதால் ஊரில் பல உயிர்களை இழந்ததோடு, சித்தரையும் இழந்து விட்டோமே என மக்கள் மனா இருக்கத்தோடு திரும்பினார். அவரது உடல் எங்காவது கிடைக்குமா என தேடி அலைந்தன. ஆனால் மண்ணில் புதைந்துபோன சித்தரின் உடலை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. சுமார் 28 ஆண்டுகள் கழித்து 1968ஆம் ஆண்டு வில்லியனூரில் ரயில்வே ஸ்டேஷன் கட்டுவதற்காக அக்கால பிரெஞ்சு அரசு அடிக்கல் நாட்டுவதற்காக பூமியைத் தோண்ட அப்பொழுது கடப்பாரையை இரத்தம் படிந்து வருவதை பார்த்து சற்று அகலமாக மண்ணை கிளற உள்ளே இருந்து ரத்தம் பீறிட்டு அடித்தது. பயந்துபோன மண் வெட்டும் தொழிலாளிகள் மண்வெட்டி கடப்பாரையை தூரமாக எறிந்துவிட்டு கைகளால் மண்ணை அப்புறப்படுத்த உள்ளே தியான நிலையில் சித்தரின் உடல் இருப்பதை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அங்கே இருந்த சில முதியவர்கள் இது 28 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் வெள்ளத்தில் மறைந்துபோன சித்தரின் உடலை வெளியே எடுத்தனர். அந்த உடல் சாதாரண உடலின் சீதோஷ்ண நிலையில் இருப்பதும் நாடி துடிப்பதும் லேசாக மூச்சு வந்து செல்வதையும் பார்த்து அத்தனை பெரும் ஆச்சரியத்தின் விளிம்பிற்கு சென்றனர்.
28 ஆண்டுகளாக மண்ணுக்குள் ஒரு மனித உடல் எப்படி இந்த உயிர் நிலையோடு இருக்கமுடியும் என்று வியப்பாக ஒருவரை ஒருவர் பார்த்தனர். உடனே பிரெஞ்சு அதிகாரிகளுக்கும் மருத்துவர்களுக்கும் தகவல் சொல்லப்பட்டு எல்லோரும் வந்து பார்த்தனர். சித்தர் மீண்டும் கண் திறப்பார் என காத்திருந்தனர். ஆனால் 3 நாட்கள் வளர சித்தர் கண் திறக்காததால் அவர் உடல் ஜீவா சமாதி அடைந்துவிட்டதை உணர்ந்து அவரின் உடலை திருமஞ்சனத்தில் மாட்டி பெரிய மண்சால் ஒன்றினுள் அமரச் செய்து இப்போது அவரது ஜீவசமாதி மண்டபம் உள்ள சுல்தான்பேட்டையில் சமாதி செய்தனர். இன்றைக்கும் அங்கே ஜீவசமாதியில் வாழ்ந்துகொண்டிருக்கும் சித்தரை அணுகி அவரது மண்டபத்தில் தங்களது குறைகளை சொன்னால் அத்தனை குறைகளையும் தீர்த்து நல்வாழ்வு அளிக்கிறார் அந்த மகாசித்தர்.
நீங்களும் உங்கள் மனக்குறைகளை அவரிடத்தில் சொல்லுங்கள், உங்களுக்கும் நலம் பல வழங்கி நல்வாழ்வு அளிப்பார் ஸ்ரீராம பரதேசி சித்தர்.
No comments:
Post a Comment