Pages

Sunday, January 16, 2022

முனியாண்டி சித்தர்

மதுரையை அடுத்த கல்லுப்பட்டிக்கு அருகே உள்ள கே. ரெங்கபாளையம் எனும் கிராமத்தில் வாழ்ந்து பல சித்தாடல்களும் அற்புதங்களும் நிகழ்த்திய ஸ்ரீ முனியாண்டி சித்தரைப் பற்றி தெரிந்து கொள்வோமா?

சாதாரண மனிதரைப் போன்றே இயல்பான அமைதியான முகத்துடன் சாந்த சொரூபியாக எப்பொழுதும் காட்சியளித்த சித்தர் உடலில் காவி உடையைச் சுற்றியிருப்பார். 

அவருக்கு எதிரே என்ன பிரச்சனைகளோடு யார் சென்று நின்றாலும், அவர்களின் ஆன்மாவிடம் பேசி அந்த அன்பர்களுக்குத் தெரியாமலே அவர்களின் பிரச்னைகளிருந்து அவர்களுக்கு விடுதலை வாங்கித் தருவார்.

அரிஜன வகுப்பைச் சேர்ந்த தாய் தந்தையருக்கு பிறந்த சித்தர் தனது இளம் வயதில் மாடு மேய்க்கும் சிறுவனாக வாழ்க்கையைத் துவங்கினார்.

அப்பொழுது ஒருநாள் மாடுகளை மேயவிட்டுவிட்டு அரசமரத்து பிள்ளையார் குளக்கரையில் தூங்க ஆரம்பித்தார்.  அப்போது மனதை மயக்கும் ரம்மியமான மணமும் மெல்லிய மணியோசையும் கேட்க மெல்ல கண்திறந்தவர் சட்டென எழுந்து உட்கார்ந்தார். காரணம், அவருக்கு எதிரே ஜடை முடியும் தீட்சண்ய பார்வையுமாய் வாட்ட சாட்டமான ஒரு உருவம் நிர்வாண நிலையில் நின்று இருந்தது. அந்த உருவத்தைக் கண்டு திடுக்கிட்ட சித்தர் பயத்தில் ஓடிச்சென்று தனக்கு அருகே இருந்த அரசமர பிள்ளையாரைத் தழுவிக் கொண்டார். அடுத்த நொடி அவருக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வாய் உடல் முழுதும் சிலிர்த்தது. சில நொடிகள் தன்னை மறந்த நிலையில் இருந்த சித்தர் கண்விழித்தபோது எதிரே இருந்த உருவம் மெல்ல சித்தரை நெருங்கி வந்து தலை உச்சியில் தன் கரம் பதித்து ஆசீர்வதித்து விட்டுச் சொன்னது: 

"ஐயா இனி நீர் சிறுவனல்ல, சித்த மஹா புருஷர்.  இதோ இப்பொழுது நீங்கள் தழுவியிருக்கிறீர்களே இந்த ஆனைமுகன் - இவரை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பிரதிஷ்டை செய்தது தாத்தா சித்தர் என்கிற புனித மஹான்.  அவர் வழிவந்தவன் நான்.  நீங்கள் எமது கையில் தீட்சை பெற்று வித்தகராக வேண்டும் என்பது இறை கட்டளை.  இனி நீங்கள் தவிர்த்தாலும் உங்களை தொடர்ந்து வருவேன்.  உங்களுக்கு உபதேசம் தருவேன்" என்று சொல்லிவிட்டு அந்த உருவம் மறைந்து விட்டது.

சிறுவனான முனியாண்டி சித்தர் இந்த நிகழ்ச்சியை தமது குடும்பத்தாரிடம் சொல்ல, அதை யாரும் நம்பவில்லை. ஆனால் தத்தா சித்தர் தினமும் சிறுவனான சித்தரின் முன்பு தோன்றி மாயமாய் மறைந்து போவார்.  மெல்ல மெல்ல முனியாண்டி எனும் சிறுவன் சித்தர் மகானுக்குரிய எல்லா யோகங்களும், தவங்களும் செய்து முடித்து சித்தரானார். 

அந்த சிறுவயதிலேயே அவர் பல அற்புதங்களை நிகழ்த்த ஆரம்பித்தார்.  சாதாரண மனிதராகவே தன்னை அடையாளம் காட்டிக்கொண்ட சித்தர் வயல் வேலைக்கும் செல்வாராம்.  அங்கே தன்னோடு பணிபுரிந்த நண்பர்களுக்கு மத்திய வேளையில் தனது அதிசய சக்தியால் உணவு வரவழைத்து நண்பர்களின் பசியைப் போக்குவாராம். 

அதேபோல் நின்ற இடத்திலிருந்து ஜிவ்வென்று மேலே கிளம்பி பறவையைப்போல் பறப்பாராம்.  இதை நேரில் கண்ட பாலசுப்ரமணியம் என்பவர் பிரமிப்பாய்ச் சொல்கிறார்:

அந்த இளம் வயதில் சித்தருக்கு பல தேவதைகள் தரிசனம் தருவார்களாம்.  சில சமயம் அவர் தவத்தில் உட்கார்ந்து இருக்கும்போது சில தேவதைகள் அதை தடுக்க முயலுமாம்.  ஆனால் எந்த தடங்கலுக்கு செவிசாய்க்காமல் சித்தர் தவத்தை மேற்கொள்வாராம்.  அதேபோல சித்தருக்கு பறக்கும் சக்தி இருந்ததால் வடநாட்டில் உள்ள மதுரா, பிருந்தாவனம் முதலிய இடங்களுக்கும், ஸ்ரீலங்காவில் உள்ள கதிர்காமம் கோவிலுக்கும் அடிக்கடி பறந்து சென்று இறைவனைத் தரிசித்துவிட்டுத் திரும்புவாராம். 

சித்தருக்கு பறக்கும் சக்தி போலவே காற்றாய் மறையும் சக்தியும் இருந்ததாம்.  ஒரு முறை சித்தர் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் வெளிப்பிரகாரத்தில் நின்று மீனாட்சி அம்மனைத் தொழுது கொண்டிருந்தாராம்.  ஒரு பித்தனைப்போன்ற நிலையிலிருந்த சித்தரைப் பார்த்த காவலர்கள் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்ய அவர் திமிறினாராம்.  உடனே காவலர்கள் அவர் கைகளில் விலங்கிட்டார்கள்.  சித்தர் அவர்களை பார்த்துச் சிரித்துக்கொண்டே "இந்த உலகத்தில் எனக்கு பூட்டா? இந்த உலகமில்லை, எல்லா உலகங்களுக்கும் சுதந்திரமாய்ச் சென்று வருபவன் நான், என்னை அடைக்க முடியுமா, முடியாது" என்று சொல்லிக் கொண்டே சட்டென்று மறைந்து போனாராம்.  அவரின் சக்தியை உணர்ந்து திடுக்கிட்ட காவலர்கள் தங்களை மன்னிக்கும்படியும் கைவிலங்குகளை திரும்பத் தரும்படியும் வேண்ட, அவர்கள் முன் கைவிலங்கு வந்து விழுந்துதாம். 

 அதேபோல் திண்டுக்கல்லில் ஒரு ஓட்டலின் முன்பு சித்தர் நிற்க, உள்ளே இருந்த சிப்பந்திகள் "அந்த பரதேசி கடைக்குள் வரக்கூடாது, அப்படியே விரட்ட வேண்டும்" என்று சொல்லிக்கொண்டே அவரை நெருங்கினார்களாம்.  ஆனால் என்ன அதிசயம்.  அவர்கள் சித்தரை நெருங்கிய நொடியில் அவர்களின் கண்களில் பளீர் என மின்னல் வெட்டியதுபோல் வெளிச்சம் தோன்றி மறைந்தது. அவர்கள் கண்களை திறந்தபோது அந்த சித்தர் இப்போது மிகப் பெரிய செல்வந்தர் போன்று கோட் சூட் சகிதமாக நின்று கொண்டிருக்கிறார். இதைக் கண்டு அதிர்ந்த சிப்பந்திகளும், சுற்றியிருந்தவர்களும் சித்தரை ஆச்சர்யமாகப் பார்க்க சித்தர் அவர்களிடம், "என்ன பண்றது, இப்படி மாறினால் தான் கடைகுள்ளே விடுவார்கள், அதான் இப்படி மாறிட்டேன், இனிமே உடையை மட்டும் பார்க்காதீங்க, மனிதனைப் பாருங்க, மனசைப் பாருங்க" என்று சொல்லி ஓட்டலுக்குள் வந்து சாப்பிடாமலே நகர்ந்துவிட்டாராம். 

சித்தர் தன்னை நாடி வரும் அன்பர்களின் வியாதிகளையும் தனது அற்புத சக்தியால் குணப்படுத்தி இருக்கிறார்.  அவரின் அற்புதங்களை பற்றி அவரது சீடர், ஓய்வுபெற்ற டெபுடி கலெக்டர் கொ.வே. விஸ்வநாதன் சொல்கிறார்:

முனியாண்டி சித்தர் ஒரு மஹான்.  அவரால் நல்ல வாழ்க்கையும் நோய்களில் இருந்து விடுதலை அடைந்தவர்களும் ஏராளமான பேர் இருக்கிறார்கள .  அதில் நானும் ஒருவன். 

ஒருமுறை நான் சேடப்பட்டி வட்டாரத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தேன்.  அப்போது அது ஒரு பின் தங்கிய வட்டமாக இருந்தது.  அந்தச் சூழலில் ஐந்து மைல் நீளமுள்ள தும்மக்குண்டு - சின்னக்கட்டளை சாலை மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதாக மக்கள் மறியலில் ஈடுபட மாவட்ட ஆட்சியர் அந்தச் சாலையை ஸ்தல மான்ய திட்டத்தின் கீழ் எடுத்து உடனே சாலையை சீர் செய்யும்படி சொன்னார்.  உடனே நான் பதிவு செய்த ஒப்பந்தக்காரரிடம் அப்பணியை ஒப்படைத்தேன்.  வேலையும் ஆரம்பித்தது.  அந்த சூழலில் மாவட்ட ஆட்சியர் அங்கே வந்திருக்கிறார்.  நான் அங்கு இல்லை.  முனியாண்டி சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தேன்.  சாலையில் ஜல்லி மட்டுமே போடப்பட்டு அப்போதுதான் வேலை அரம்பித்து இருந்தது. 

அவசர கதியில் முடிக்கச் சொன்ன வேலையை மெத்தனமாகச் செய்கிறேன் என கலெக்டர் என் மீது நடவடிக்கை எடுப்பதாக சொல்லிவிட்டுச்சென்று இருக்கிறார்.  நான் அங்கு சென்றபோது ஒப்பந்தக்காரர் இந்த தகவலை சொல்லி, விடிவதற்குள் இதே வேலை முடித்திருக்க வேண்டும்.  அப்பொழுதுதான் மந்திரியை நான் இவ்வழியே அழைத்துச் செல்ல முடியும் என்று கலெக்டர் சொன்னதாகக் கூறினார்கள்.   

அது ஒரு பொட்டல்வெளி, கும்மிருட்டு நேரம். எப்படி ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய சாலையை அமைக்க முடியும்? அந்த நேரத்தில் அங்கே வேலை பார்த்த ஒரு இளைஞனுக்கு அடிபட்டுவிட அவனை மருத்துவமனைக்கு கொண்டுபோக வேண்டிய சூழல்.  அவ்வளவுதான்.  நாம் மெமோ வாங்கப்போகிறோம், மானம் போகப் போகிறது என்ற வேதனைப்பட்டபோது என் காதில் முனியாண்டி சித்தர், கவலைப்படாதே, நான் பார்த்துக்கறேன் என்று சொல்வதுபோல் கேட்க அப்படியே அயர்ந்து தூங்கிவிட்டேன்.  விடிந்தபோது என் முன்னே கார் வந்து நிற்கிறது.

அதிலிருந்து இறங்கிய கலெக்டரும் மந்திரியும் பிரமாதமாக சொன்ன நேரத்திற்கு வேலையை முடித்துவிடீர்கள்.  நன்றி எனப் பாராட்டினார்கள். எனக்கு ஒன்றும் புரியவில்லை இது எப்படி நிகழ்ந்தது என்றும் தெரியவில்லை.  ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு மிக நேர்த்தியாக தார்ச்சாலை அமைத்தது எப்படி என வியந்தேன்.  எல்லாம் அந்த சித்தரின் மகிமை என்று புரிய அவரிடம் ஓடிச்சென்று நன்றி செலுத்தினேன்.

அதேபோல்  ஒரு நாள் சித்தரை தரிசிக்கச் சென்று இருந்தபோது சதுரகிரிக்குப் போகலாமா என்று கேட்டார். அதற்கு நான் சாமி இப்பொழுதோ இருட்டிவிட்டது. இங்கிருந்து கிருஷ்ணன் கோவிலுக்கு பஸ்ஸில் செல்ல வேண்டும். பிறகு அங்கிருந்து மலையடிவாரம் சென்று மலைக்குச் செல்ல நேரமாய்விடும்.  எப்படியும் இங்கிருந்து எழுபது கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.  அங்கிருந்து நாலாயிரம் அடி  உயரத்திற்கு மேலே எறிச் செல்ல வேண்டும் என்று நான் சொல்லிக் கொண்டே இருக்க, சித்தர் என்னை பார்த்து அதற்கு நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள், நான் உங்களை உடனே அழைத்துச் செல்கிறேன், கண்களை ஒரு நொடி மூடி திறக்கவும் என்றார்.  நானும் கண்களை மூடித்திறந்தேன்.  அடுத்த நொடி என்ன ஆச்சர்யம், நாங்கள் இருவரும் சதுரகிரி மலை மீது இருக்கிறோம்.  ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் என் உடல் சிலிர்க்க நான் சித்ததரைப் பார்த்தேன்.  அவர் மெல்ல சிரித்துக்கொண்டே என்ன சதுரகிரியை பார்த்துவிடீர்களா என்று கேட்டார்.  நான் அவர் கரங்களை பற்றி என் கண்களில் ஒற்றிக்கொண்டேன்.  மறுநாள் நாங்கள் அங்கிருந்து மீண்டும் கே.ரெங்கபாளையத்திற்கு வந்தோம்.  இந்த அற்புதம் மட்டுமல்ல. இதுபோல் நிறைய அனுபவம்.

ஒருநாள் சித்தர் என்னை ஒரு மயானத்திற்கு அழைத்துச் சென்றார். அது இரவு வேளை .  சித்தர் என்ன பார்த்து உங்களுக்கு பயமாக இருக்கிறதா என்று கேட்டார். உடனே நான் நீங்கள் என்னுடன் இருக்கும்போது எனக்கென்ன பயம் என்றேன். 

சித்தர் மயானத்தில் அமர்ந்து தியானத்தில் மூழ்கினார்.  சிறிது நேரத்தில் அவரது உடலில் இருந்து கை , கால், தலை எல்லாம் தனித்தனியாக வெவவேறு இடங்களில் விழ, எனக்குள் ஆச்சர்யம் அதிகமானது.  இது எப்படி, உயிருள்ள ஒரு மனிதனின் உடல் பாகங்கள் தானே உதிர்வதுபோல் கீழே பிரிந்து விழுமா என்று யோசித்தேன்.  அதற்குள் மீண்டும் அவரது உடல்பாகங்கள் ஒவ்வொன்றாக ஒன்று சேர ஆரம்பித்தது.  சிறிது நேரத்தில் சித்தர் முழு உருவமாகி தியான நிலையில் இருந்து கண் திறந்தார்.  என்னைப் பார்த்து புன்னகைத்தவாறு என்ன வேடிக்கை பார்த்தீர்களா என்று கேட்டார்.  எவ்வளவு மனோதைரியம் உள்ளவரென்றாலும் மயானத்தில் அதுவும் இரவு நேரத்தில் இப்படி ஒரு காட்சியைப் பார்த்தால் ஆடிப் போவார்கள்.   ஆனால் எனக்குள் எந்த பயமோ, அச்சமோ இல்லாமல் சித்தரின் சித்து வேலையைப் பார்க்க முடிந்தது.

சித்தருக்கு எல்லா மூலிகைகளும் தெரிந்திருந்தது.  காசநோய், மேகநோய், கேன்சர், தீராத வயிற்றுவலி என பல நோயாளிகளுக்கு கண்ணில்பட்ட மூலிகை இலைகளை கொடுத்து குணமாக்கி இருக்கிறார்.  மஞ்சள் காமாலை முற்றி டாக்டர்களால் கைவிடப்பட்ட சிறுமியை ஒரு எலுமிச்சம் பழத்தால் குணப்படுத்தி இருக்கிறார்.   

எனது வாழ்க்கையில் சித்தர் பல அற்புதங்களை செய்து இருக்கிறார்.  ஒருமுறை நாங்கள் குடும்பத்தோடு சென்ற கார் இருபது அடி பள்ளத்தில் உருண்டு விழ எங்களுக்கு ஒரு சிறு அடிகூட இல்லாமல் காப்பாற்றியது சித்தர்தான் என்று பெருமிதமாய் கூறுகிறார் ஓய்வு பெற்ற டெப்டி கலெக்டர் கொ. வே. விஸ்வநாதன்.

No comments:

Post a Comment