உத்தராயண புண்ணிய காலம்
சூரியன் இல்லாவிடில் அப்படியென்ன நடந்துவிடும் ?
யாராவது இவ்விதம் கேட்பார்களா? கேட்டால் ஊர் சிரிக்குமே, இப்படியும் ஒரு கேள்வியை என்று !
ஆனால் இந்தக் கேள்வியைக் கேட்டவர் சாதாரண மனிதரல்ல. ஒரு மஹரிஷியின் தவவலிமை மிகுந்த ரிஷிகுமாரர், பெயர் உத்கலன். மாமுனிவர்களும், நவக்கிரஹ நாயகர்களும், தேவர்களும், ரிஷிகளும் நிறைந்திருந்த இந்திரனின் சபையில்தான் இக்கேள்வியைக் கேட்டார்.
அங்கு கிரகங்களின் நடுவே சூரியனும் நின்றிருந்தார் நடுங்கியவாறு. சூரியனே நடுங்கும்படியான தவவலிமை பெற்ற ரிஷிகுமாரர் உத்கலன். அக்கினியை வளர்த்து அதன் மத்தியில் அமர்ந்து பல வருடங்கள் தவம் செய்து பல விரதங்களினால் உடலை வருத்தி மகத்தான தவவலிமை பெற்றவர் உத்கலனின் தந்தை. அவரை ஒரு தருணத்தில் அவமதித்துவிட்டார் சூரியன். தர்மத்தின் சூஷ்மங்களை அறிந்த உத்கலனின் தந்தை சூரியனை மன்னித்து விட்டுவிட்டார். ஆனால் உதகலனுக்கு மூவுலகங்களும் போற்றி வணங்கும் தன்தந்தையை அவமதித்த சூரியனைத் தண்டிக்காமல் விடக்கூடாது என்ற கோபம்.
ஆதலால் வானவெளியில் தங்கமயமான தேரில் வலம் வந்து கொண்டிருந்த சூரியனைத் தன் தபோசக்தியினால் நிறுத்தினார் உத்கலன். தன்னை காப்பாற்றும்படி வேண்டி தேவேந்திரனைச் சரணமடைந்தார் சூரியன்.
சூரியனை மன்னிக்கும்படி தேவேந்திரன் சொல்ல, சூரியனே இல்லாமல் செய்துவிடுகிறேன் என்று கோபத்துடன் வந்த உத்கலனுக்கு தேவேந்திரனின் உபசரிப்பு கோபத்தை குறைத்தது. இருந்தாலும், முன்று நாட்கள் சூரியன் ஒளியிழந்து வானவெளியில் உலாவர இயலாமல் போகக்கடவது என்று சாபம் கொடுத்தார் உத்கலன்.
இந்த சாபத்தினால் எவ்வித சலனமுமின்றி மூன்று தினங்கள் சூரியனொளியிழந்தார். இதன்விளைவாக உலகங்கள் அனைத்தும் இருளில் மூழ்கின. ஏராளமானவர்கள் உயிர் இழந்தனர். நதிகள் திசை மாறின. தேவதா சக்திகள் தமது சக்திகளை இழந்து சோர்வுற்றன.
சூரியனுக்கு சாபத்தைக் கொடுத்தபின்பு அமைதியானார் உத்கலன். தன சீற்றத்தினால் உலகம் அனைத்திற்கும் மிகப் பெரிய துன்பம் ஏற்பட்டதைக் கண்டு அளவற்ற வேதனை அடைந்தார் உத்கலன். இனி உலகில் எவருக்கும் அளவுக்கு மீறிய கோபம் ஏற்படாமல் இருக்கட்டும் என்று உலக மக்களை ஆசீர்வதித்து தன் ஆசிரமத்திற்குத் திரும்பி சென்றார் அந்த ரிஷிகுமாரர். உத்கலனின் சாபத்தினால் மூவுலகிற்கும் சூரியன் ஒளி கிடைக்காததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை மிகப் புராதனமான நூல்கள் விளக்கியுள்ளன.
சமீபத்தில் தமிழகமே வெள்ளத்தில் மூழ்கியபோது எப்போது மழை நிற்கும், எப்போது சூரியனின் கிரணங்கள் வெளிப்படும் என்று மக்கள் ஏங்கினர். நமது ஆரோக்கியத்திற்கும் சுற்றுப்புற சூழ்நிலை நல்லபடி இருப்பதற்கும் சூரியபகவானின் அருள் நமக்கு வேண்டும். ஆதலால் தான் வேதகாலத்தில் இருந்தே நாம் சூரிய பகவானைத் தினமும் பூஜித்து வருகிறோம். சில நூற்றாண்டுகளுக்கு முன்புவரை ஆப்கானிஸ்தானத்தில் இருந்து மலேஷியா, சுமத்ரா, கம்போடியா, ஈரான் வரை சூரிய வழிபாடு பரவி இருந்தது.
பாரத புண்ணிய பூமியின் மகரிஷிகள் சூரியனின் அளவற்ற சக்தியைப் பற்றி போற்றி அருளியுள்ளார்கள். இத்தகைய அளவற்ற சக்தியும், புனிதப் பெருமையும் பெற்றுள்ள சூரிய பகவான் வானமண்டலத்தில் குருபகவானின் ராசியான தனுர் ராசியில் இருந்து சனி பகவானின் ராசியான மகர ராசியில் பிரவேசிக்கும் மகத்தான புண்ணிய காலத்தை உத்தராயண புண்ணியகாலம் என பாரத மக்கள் சூரியனை வழிபடுகின்றனர். தேவர்களின் உலகில் இரவு நேரம் முடிந்து பகல் நேரம் ஆரம்பிக்கும் முகூர்த்த நேரமும் இந்த உத்தராயண தினத்தில் தான்.
இறைவன் எழுந்தருளியிருக்கும் பரமபதத்தின் வாயில் திறக்கும் நன்னாளும் உத்தராயணம் பிறக்கும் தினத்தில்தான். பரமபவித்திரமான உத்தராயண புண்ணிய காலத்தின் பெருமையை இதிகாச ரத்தினமான ஸ்ரீமத் மஹாபாரதம் அற்புதமாக விவரித்துள்ளது.
No comments:
Post a Comment