Pages

Thursday, January 20, 2022

காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே

காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்த சிவநேசன், நானகலை தம்பதியருக்கு மகனாக பிறந்தவர் பட்டினத்தார்.  இளம் வயதில் மிகுந்த சிவ பக்தி கொண்டவராக வாழ்ந்த அவரிடம் ஒரு நாள் ஒரு யோகி ஒரு பேழையில் சிவலிங்கமும், பிள்ளையார் விக்கிரகமும் கொண்டு வந்து கொடுத்துவிட்டுச் செல்ல மேலும் அவருக்கு சிவபக்தி அதிகமாகியது.  சர்வசதா காலமும் இறைவனின் நினைவாகவே வளர ஆரம்பித்தார்.  வாலிப வயதிலும் அவர் தினம் அவ்விரு விக்கிரகங்களையும் ஆகம விதிப்படி பூஜித்து வந்தார்.  அவருக்கு ஏற்ற குணநலன்களோடு சிவகலை என்கிற மனைவி அமைய, அவர் வாழ்க்கை ஆன்மீக மனத்தோடு நகர ஆரம்பித்தது.  மருதவாணர் அவருக்கு மகனாக பிறந்ததும், மேலும் அவர் வாழ்வில் ஏற்றமாகியது.  மகன் இனிதே வளர்ந்ததும் தனது வணிகத்துக்கு பெருமை சேர்க்கும் விதமாக வெளிநாட்டிற்கு அனுப்பிவைத்தார்.  ஆனால் மருதவாணர் சென்ற கப்பல் நடுக்கடலில் பயணிக்கும்போது சூறாவளி காற்றும் பேய் மழையும் தாக்க கடுங்குளிரில் எல்லோரும் வேதனை அடைந்தனர்.  அப்போது மருதவாணனுடன் பயணித்த சிலர் அவரிடம் இருந்த அவலையும், எருவிராட்டியையும் தரும்படி கேட்க அவர் இதை நான் உங்களுக்கு தருகிறேன்.  ஆனால் கரை சேர்ந்ததும் நீங்கள் இதே மாதிரி எருவிராட்டியை திரும்பத்தருகிறேன் என்று எழுதி கொடுங்கள் என்று கேட்க அவர்களும் எழுதிக் கொடுத்தார்கள். 

கரைக்கு திரும்பிய மருதவாணர் பட்டினத்தாரிடம் நடந்ததைச் சொல்லி அவர்கள் எழுதிக்கொடுத்த சீட்டையும் மீதமிருந்த மூன்று எருவிராட்டிகளையும் தர கோபம் அடைந்த பட்டினத்தார் மருதவாணனிடம் இருந்து அந்த மூன்று எருவிராட்டிகளையும் பிடுங்கி ஆவேசமாய் தூக்கி எறிந்தார்.  அடுத்த நொடி அந்த எருவிராட்டிகள் கீழே உடைந்து சிதற அதற்குள் இருந்து விலை உயர்ந்த வைர, வைடூரியங்கள் கீழே சிதறி கண்ணை பறித்தன.

தன மகன் மருதவாணர் இவ்வளவு விலை உயர்ந்த பொருட்களை கொண்டு வந்ததை உணராமல் கோபத்தில் திட்டிவிட்டோமே என்று கலங்கிய பட்டினத்தார் தனது மனைவியிடம் நடந்ததை சொல்ல அந்த நொடி திக் பிரமை பிடித்தவர் போன்று சிவகலை நின்று கொண்டிருந்தாள், கையில் ஒரு பெட்டியுடன். அது தனது மகன் மருதவாணன் அப்பாவிடம் கொடுக்கச் சொன்னது என்று சிவகலை சொல்ல, திரும்பிய பட்டினத்தார் அதிர்ந்தார்.  அங்கேய் அவன் இல்லை, எப்போதோ காணாமல் போயிருந்தான் மருதவாணன்.  பெட்டியை திறந்தார் பட்டினத்தார் உள்ளே காதில்லா ஊசியும், ஒரு ஓலையும் இருந்தது. அதில் காதற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்று எழுதப்பட்டிருந்தது. நொடியில் பட்டினத்தாருக்குள்  ஏதோ மாற்றம் நிகழ தன்னுடைய ஆடை அணிகலன்கள் எல்லாவற்றையும் களைந்து விட்டு இடுப்பில் ஒரு துண்டு மட்டுமே கட்டிக்கொண்டு துறவி ஆனார்.  இதைக்கண்டு அவர் மனைவியும், குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைய அவர் புன்னகை முகமாய் நகர்ந்து அவ்வூர் மண்டபத்தில் தங்க ஆரம்பித்தார்.  பெரும் செல்வந்தரான அவர் இப்படி துறவுக் கோலம் பூண்டு விட்டதில் அவரது உறவினர்களுக்கு அவர் மீது கோபத்தை உண்டு பண்ணியது.  அதனால் அவரது சகோதரி பட்டினத்தாரை அழைத்து விஷம் தடவிய அப்பத்தை கொடுத்து சாப்பிடச் சொன்னாள்.  அதை தனது திருஷ்டியால் உணர்ந்த பட்டினத்தார் தன்வினை தன்னைச் சுடும், வீட்டப்பம் ஓட்டைச்ச்சுடும் என்று சொல்லி வீட்டுக் கூரையில் அதை சொருகி விட்டு போக அந்த வீடு குபீரென தீப்பற்றி எறிந்த சாம்பலானது.   அதனால் திடுக்கிட்ட அவர் சகோதரி பட்டினத்தாரிடம் மன்னிப்பு கேட்க அவர் சிரித்தபடி மௌனமாக நகர்ந்தார்.  அதேபோல் ஒரு நாள் பட்டினத்தார் தாயார் இறந்துபோக, அவர் மீதுள்ள கோபத்தால் அதைக் கண்டு அஞ்சிடாத பட்டினத்தார் வாழை மட்டையில் கிடத்தி பாடல் ஒன்று பாட ஆரம்பிக்க அந்த பச்சை மட்டை குபீர் என தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. தன் தாயாரின் ஈமக்கிரியையை முடித்துவிட்ட  பட்டினத்தார் இனி இந்த ஊரில் இருப்பது நலமல்ல என்று திருவாரூர் சென்றார்.  அங்கே அவரது புகழ் தெரிய ஆரம்பிக்க தினமும் பல நூறு பக்தர்கள் அவரை நெருங்கி அவரிடம் அருளாசி பெற்று சென்றனர்.  

ஒருநாள் அவரால் திருமணம் நடத்திவைக்கப்பட்ட ஒரு இளைஞன் திடீரென இரண்டு[போக அவனது மனைவியும் குடும்பத்தாரும் கண்ணீருடன் பட்டினத்தாரை அணுக, ஐயா நீங்கள் தான் இவனுக்கு கல்யாணம் செஞ்சுவச்சீங்க. இப்ப நீங்க தான் இவனை பிழைக்க வைக்கணும் என்று கதற, ஒரு நொடி அவர்களை அமைதி படுத்திவிட்டு தனது இறைவன் ஈசனிடம் வேண்டி பட்டினத்தார் மனமுருகி பாட ஆரம்பித்தார்.  என்ன ஆச்சரியம், அடுத்த சில நிமிடங்களில் இறந்து போன அவன் தூங்கி எழுவது போல கண் திறந்து எழுந்து உட்கார்ந்தான்.  அவன் குடும்பத்தார் பட்டினத்தாரை வணங்க அவர் லேசாக புன்னகைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்து பேரையூர் என்ற இடத்திற்கு சென்றார். அங்கே மௌன விரதம் இருந்தவர் மீண்டும் நகர்ந்து உஜ்ஜயினி எனும் நகரத்திற்கு சென்று அங்குள்ள பிள்ளையார் கோவிவிலில் தியானத்தில் அமர்ந்தார்.  அப்போது அரண்மனையில் கொள்ளை அடித்த கொள்ளையர் அந்த கொள்ளையின் ஒரு பங்கை பிள்ளையார் கோயில் உண்டியலில் போடும் விதமாக தூக்கி எரிய அதில் இருந்த ஒரு தங்க பதக்கம் தியானத்தில் இருந்த பட்டினத்தாரின் கழுத்தில் விழுந்தது.  இதை அறிந்த பட்டினத்தார் தவ நிலையிலேயே இருக்க அப்போது திருடர்களை தேடியபடி வந்த அரண்மனை காவலாளிகள் பட்டினத்தாரின் கழுத்தில் அரண்மனை பதக்கம் இருப்பதை பார்த்து அவர் தான் திருடன் என்று முடிவு செய்து அவரை அந்நாட்டு மன்னன் பத்திரகிரியிடம் அழைத்து சென்றனர்.

மன்னன் எதுவுமே விசாரிக்காமல் அவர் தான் அரண்மனையில் கொள்ளை அடித்தவர் என அவரை கழுவில் ஏற்ற உத்தரவிட்டான்.  பட்டினத்தாரை கழுவில் ஏற்றும் நேரத்தில் என் செயாலாவது ஒன்றுமில்லை  என பாட ஆரம்பித்தார்.  உடனே அந்த கழுமரம் தானே தீப்பற்றி எரிந்து சாம்பலானது.  

அதனைக் கண்ட  மன்னன் பத்திரசிரியர் பட்டினத்தார் மகா சித்தர் என்று உணர்ந்து அவர் காலில் விழுந்து மன்னிக்கும்படி அழுதான்.  பட்டினத்தார் அவன் கரம் பற்றி தூக்க அவனது உடலில் மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட்டு உடல் சிலிர்த்தான்.  அடுத்த நொடி உலக  மாயை வாழ்க்கையை உணர்ந்த பத்ரிசிரியர் தானும் துறவறம் பூண்டு உங்களுடன் வந்துவிடுகிறேன் என்று பட்டினத்தாரிடம் கேட்க அவர் நீர் முதலில் திருவிடை மருதூர் செல்லுங்கள் என்று சொல்ல்லிவிட்டு நகர ஆரமபித்தார்.  அதன் பிறகு பல்வேறு திருத்தலங்களுக்குச் சென்று தரிசித்தட்டுவிட்டு திருவிடை மருதூருக்கு வந்த போது அங்கே மேற்கு கோபுர வாயிலில் கையில் திருவோட்டுடனும் ஒரு நாயுடனும் பத்திரிசிரியர் தங்கியிருப்பதை தனது திருஷ்டியால் உணர்ந்தார். அப்போது ஒரு முதியவர் பசி என்று பட்டினத்தாரிடம் கேட்க, நீ மேற்கு கோபுர வாசலுக்குப் போ அங்கே ஒரு குடும்பஸ்தன் இருக்கிறான், அவனிடம் கேள், சாப்பிட தருவான் என்று சொன்னார்.  அந்த முதியவர் அப்படியே சென்று கேட்க, பட்டினத்தார் வந்திருப்பதை உணர்ந்த பத்திரசிரியர் உடனே பட்டினத்தாரை நெருங்கி ஐயா நான் தான் துறவறம் பூண்டுவிட்டேனே என்னை ஏன் குடுபஸ்தான் என்று சொன்னீர்கள் என்று கேட்க நீ தான் திருவோடும் அதை காவல்காக்க ஒரு நாயும் சொந்தமாக வைத்திருக்கிறாய் நீ அப்பொழுது குடும்பஸ்தன் தானே என்று பட்டினத்தார் சொல்ல உடனே தன் தவறை உணர்ந்த பத்திரசிரியர் அந்த திருவோட்டை நாயின் தலையில் அடிக்க, ஓடு உடைந்தது, நாயின் மண்டை பிளந்து இறந்தது.  அந்த நாய் மறுபிறப்பாக காசி மன்னனுக்கு புதல்வியாக ஜானவல்லியாக பிறந்தது.  அவள் வளர்ந்து பருவம் அடைந்ததும் தனது முற்பிறவியின் நினைவு வர, தனது தந்தையுடன் திருவிடை மருதூருக்கு வந்தவுடன் அங்கே பத்திரசிரியை வணங்கி தனது முற்பிறவியின் நினைவுகளை சொல்ல, அவர் அதிர்வாய் அவளை பார்த்தார். உடனே அவள் தாங்கள் தான் எனக்கு முக்தி தர வேண்டும் என்று சொல்ல, அவர் பட்டினத்தாரை பார்க்க உடனே உள்ளே உள்ள கடவுளின் கருவறைக்குள் செல்லுங்கள் என்று பட்டினத்தார் சொல்ல அவர்கள் இருவரும் இறைவனின் சந்நிதிக்குள் சென்றனர்.   அப்பொழுது மிகப்பெரிய ஜோதி பிரகாசமாய் தோன்ற அதற்குள் இருவரும் ஐக்கியமாகி நொடியில் மறைந்து போனார்கள். பட்டினத்தார் அவர்களின் மாயையை உணர்ந்து புன்னகைத்தபடியே சென்னைக்கு வந்தார்.  

திருவொற்றியூரில் சில காலம் தங்கி எண்ணற்ற அற்புதங்களை நிகழ்த்தினார்.  ஒரு நாள் கடற்கரை மணலில் சிறுவர்கள் சிலர் மணல் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருக்க தாமும் அவர்களோடு சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்.  அப்போது பட்டினத்தார் ஓரிடத்தில் படுத்துக்கொள்ள, குழந்தைகள் விளையாட்டாக மணலில் அவரை மூட மற்றோரு இடத்திலிருந்து வெளியே வந்தார்.  இப்படியே பல இடங்களில் புதைந்து வேறொரு இடத்தில வெளிவந்துக் கொண்டிருந்தார்.  குழந்தைகள் ஆச்சர்யத்தோடும், திகைப்போடும் விளையாடிக் கொண்டிருக்க முடிவில் ஓரிடத்தில் தோன்றியவர் வேறெங்கும் வெளிவராமல் போக, சிறுவர்கள் தாங்கள் மணல் போட்டு மூடிய இடத்தை கிளறிப்பார்க்க அங்கே பட்டினத்தார் இல்லை, அங்கே மட்டுமில்லை அந்த மணல் பரப்பில் எங்குமே அவர் இல்லை.  மாயமாய் மறைந்து விட்டார். முடிவாக அவர் மணலில் புதைந்த இடத்தில் கண்களை பளிச்சென்று கூசுமளவிற்கு ஒளிவெள்ளம் தோன்ற அங்கே ஒரு சிவலிங்க தெய்வீகமாக காட்சியளித்தார்.  ஒவ்வொரு நொடிப்பொழுதும் தன் வாழ்நாளில் ஈசனையே நினைத்து வாழ்ந்த பட்டினத்தார் அன்று சிவலிங்க ரூபமயமாகிவிட்டார். 

இன்றும் சென்னை திருவொற்றியூரில் சிவலிங்க வடிவமாய் தன்னை நாடி வருபவர்களின் துயர் தீர்த்து ஆனந்தமும் மனத்தெளிவும் செல்வமும் அருளி நல்லருள் புரிந்து கொண்டிருக்கிறார் அந்த மகா சித்தர் பட்டினத்தார்.


No comments:

Post a Comment