Pages

Friday, September 08, 2017

பேசும் தெய்வம் - பெரியவா - 'அனுக்ரஹம்''


பேசும் தெய்வம் - பெரியவா -  'அனுக்ரஹம்''
                '
களத்தூர்  கண்ணம்மா என்று ஒரு படம்.  அந்த களத்தூரோ வேறேயோ தெரியாது. காவேரிக் கரை மண் உயிரூட்டம்  கொண்டது. மக்கள், மாடு, மனை, சகலமும் அமோக செழிப்பு அல்லவா?  கும்பகோணம், திருச்சி தஞ்சாவூர் பூலோகத்தில் ரம்மியமான பிரதேசங்கள், அதில் தான் எத்தனை  கிராமங்கள்..எங்கும் எதிலும் மக்கள் மனத்திலும் பசுமை. அதில் ஒன்று  களத்தூர்என்று வைத்துக் கொள்வோம்.!
அந்த ஊர் துர்க்கா பரமேஶ்வரி அழகானவள்.  சிறிய உருவம். அவள் கோவிலில் பூஜைக்கு குறைவில்லை. கோவில் தர்மகர்த்தா அம்பாள் பக்தர்.அவளுக்கு சேவையே  தன்  வாழ்வாககொண்டவர்.  நவராத்ரி சமயம்  அம்பாளுக்கு ஒன்பது நாளும்கோலாகலமாக  அலங்காரம், நைவேத்யம், என்று ஏகமாக செலவழிப்பார். அண்டா அண்டாவாக சுண்டலும், சக்கரை பொங்கல்  தயாராகி, நைவேத்யமாகி, ப்ரஸாதமாகி  அண்டை அசல் கிராமங்களில் இருந்தெல்லாம் கூட பசியோடு வருபவர்கள்  வயிறு நிறையும். .
தர்மகர்த்தாவுக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். ஐந்து பிள்ளைகள்; மூணு பெண்கள். ஒருத்தருக்கும் கல்யாணம் ஆகவில்லை. கடைக்குட்டியான ரமணி ரொம்பச் சின்னப் பையன். 
தர்மகர்த்தா  பொட்டென்று  ஒரு நாள் காலமாகி துர்க்கையின் மலரடியில் புஷ்பமாகப் போய்ச் சேர்ந்து விட்டார்.  குடும்பமே நிலைகுலைந்தது!  அவர் மனைவி, எட்டு குழந்தைகளை தன் பொறுப்பில், அந்த அம்பாளே விட்டிருப்பதாக நினைத்தாள்.  தர்மகர்த்தா உயிரோடு இருக்கும்போது, தேனாக பேசியவர்கள் இப்போது காணோம். வீட்டிலிருந்த அண்டான், குண்டான் கொஞ்ச நஞ்ச தங்கம், வெள்ளி, பித்தளை ஸாமான்களை விற்று  சக்திக்கு ஏற்றவாறு மூன்று பெண்களுக்கும் எளியமுறையில் கல்யாணம் செய்து வைத்தாள். பையன்கள் நாலு பேரையும் காலேஜ் வரை படிக்க வைத்தாள்.
மூத்த பையன் காலேஜ் முடிந்து  "அம்மா! இனிமே நீயும், தம்பிகளும் என்னோட பொறுப்பு!..." என்று தலையெடுத்து காப்பாற்றுவான் என கனவு கண்டாள்.  படிப்பை முடிக்கும் வரை பல்லைக் கடித்துக் கொண்டு, அந்த குச்சு வீட்டில், அம்மாவின்  ஏழைக் கைகள், போட்ட மோர் ஸாதத்தை,  அன்பின் ருசி அறியாமல், வேண்டா வெறுப்பாக சாப்பிட்டவன்  படிப்பு முடிந்ததும்  'நீயாச்சு! உன் பிள்ளைகளாச்சு !' என்று 'டாடா' காட்டிவிட்டு எங்கோ போய் விட்டான்.   அண்ணாவுக்கு ஏற்ற தம்பிகளாக  அடுத்து மூன்று பேரும்  'அண்ணாவின் வழியில்'  சென்றதால் , கடைசி தம்பி ரமணியும்  அம்மாவும் நிர்கதி!
ரமணி ஒன்பதாம் க்ளாஸ்.  தன்  புத்ர ரத்னங்களை படிக்க வைக்க, அம்மாக்காரி வாங்கிய கடனோ கழுத்தை நெரித்தது!  மாடி போர்ஷனை வாடகைக்கு விட்டு, ஸொல்ப பணத்தில் கஞ்சியோ கூழோ குடித்துக் கொண்டு, மீதியை கடனுக்கு செலுத்தி வந்தாள். சிறுவன் ரமணி, பேருக்கேற்றபடி ரமணீயமான குணம். படிப்பை நிறுத்திவிட்டு, உள்ளூர் மளிகைக் கடையில் வேலைக்கு சேர்ந்து, தன் ஸம்பாத்யத்தையும் அம்மாவின் கடனை அடைக்க குடுத்தான்!  இவர்கள் கொடுக்கும் பணம், கடலில் கரைத்த பெருங்காயம் போல், கடன் அடைக்க முடியாததால்   கடன்காரர்கள் நெருக்கினார்கள். அம்மா  மடியில் தலைவைத்து அழுதான் ரமணி.
அம்பாளுக்கு எவ்வளவு ஆசை ஆசையாய் செய்திருப்பார் தர்மகர்த்தா! கைவிடுவாளா அம்பிகை? கஷ்டத்தைக் குடுத்து, மிச்சம் மீதி இருக்கும் கர்மாவை [அதுவே கடைசி பிறவி என்பதால்] கழிக்கவிட்டு, தன்னுடைய அதிரடிக் காருண்யத்தை ஒரேயடியாக சொரிந்து விடுவாளே!
ரமணியின் அம்மாவுக்கு அன்று இரவு ஒரு ஸொப்பனம்.....அதில், கரும்புவில்லுக்கு பதில் கருணை தண்டமேந்திய  மகா பெரியவா .
" ஒன்னோட ஆத்துக்காரர் போனதுக்கு அப்றம் நீ......நவராத்ரி கொலுவையும் மறந்துட்டே!.....அதோட, என்னையும் மறந்துட்டே! ரமணியை  ஒடனே எங்கிட்ட அனுப்பு..."  யே மனஸ் படபடக்க எழுந்து உட்கார்ந்தவள்  தூங்கிக் கொண்டிருந்த ரமணியை எழுப்பினாள்.
"ரமணி....கண்ணா ..பெரியவா வந்தாடா ஸொப்பனத்ல ! நாம்  நவராத்ரி கொலு வெக்கணுமாம்.....ஒன்னை பெரியவா ஒடனே வரச் சொல்றாடா!.."
"அம்மா...பெரியவா இப்போ எங்கியோ வடக்குல இருக்கார்ம்மா..அங்க போக, வர செலவுக்கு நீ எங்கம்மா போவே?...."
வெறும் கனவுதானே என்று துளிகூட ஒதுக்காமல்   நம்பிக்கையோடு  "பெரியவாதானே கூப்டிருக்கா? கவலைப்படாத! அவரே வழி காட்டுவார்...."என்றாள்  அம்மா.
விடிந்ததும், மாடி போர்ஷனில் குடியிருக்கும் ஸர்மா வந்தார். மிகவும் நல்ல மனுஷ்யர். அவரும் அவர் மனைவியும் இவர்களிடம் மிகவும் ஆதரவோடும், அனுஸரணையோடும் இருப்பார்கள்.
"அம்மா....நானும், எங்காத்துக்காரியும் நாளான்னிக்கி நார்த் இண்டியா யாத்ரை கெளம்பறோம். திரும்பி வரதுக்கு எப்டியும் ரெண்டு மாஸம் ஆகலாம். ஒன்னோட ரெண்டு மாஸ வாடகையை ஒங்கிட்ட அட்வான்ஸாவே குடுத்துடறேன்......இல்லேன்னா  பாவம் நீ இதையே  நம்பி இருக்கரவ, ரொம்ப ஸ்ரமப்படுவே. இந்தாத்துக்கு வந்தப்பறம் எங்களுக்கு மனஸ்ல ஒரு நிம்மதி கெடச்சிருக்கு. அதுனால, கடைசி வரைக்கும், ஒனக்கு வாடகை குடுத்துண்டு, இங்கியேதான் இருக்கப் போறோம்! செரியா?...."சிரித்துக் கொண்டே பணத்தைக் குடுத்தார்.
கரகரவென கண்ணீர் வழிந்தோட   "மாமா.....பெரியவா தன்னோட லீலையை ஆரம்பிச்சுட்டார்! இன்னிக்கி காலேலதான் பெரியவா கனவுல வந்து நவராத்ரி கொலு வெக்கச் சொல்லிட்டு, ரமணியை ஒடனே அவர்கிட்ட அனுப்பச் சொன்னா.....பணத்துக்கு என்ன பண்றதுன்னு யோசிச்சேன். பாருங்கோ! ஒங்க மூலமா, அதுக்கும் வழி பண்ணிட்டார்!...எனக்கு, பெரியவா எங்க தங்கியிருக்கான்னு கொஞ்சம் விஜாரிச்சு சொல்றேளா?...."
ஶர்மா மாடியை நோக்கி.."வேம்பு! சித்த கீழ எறங்கி வாப்பா....." என்றதும்   "இதோ வரேன் சித்தப்பா!..." என்றபடி ஒருவர் அங்கே ஆஜரானார்.
"அம்மா....இவன் என்னோட அண்ணா பிள்ளை! ரொம்ப வர்ஷமா, பெரியவாகிட்டயே இருக்கான். மடத்லேயே தங்கிண்டு பெரியவாளுக்கு ஸுஸ்ரூஷை பண்ணிண்டு இருக்கான். என்னிக்காவுது இப்டீ.....ஊர் பக்கம் வருவான். நேத்திக்கித்தான் வந்தான். இன்னிக்கி ஸாயங்காலம் அஞ்சுமணி ட்ரெயின்ல கெளம்பி, பெரியவா இருக்கற எடத்துக்குப் போறான். நீ வேணா...ரமணியை இவனோட அனுப்பி வை! பத்ரமா அழைச்சிண்டு போய் பெரியவாளை தர்ஶனம் பண்ணிவெச்சுட்டு, பத்ரமா திருப்பி அனுப்பி வெக்கச் சொல்றேன்"
இது, பெரியவாளின் அடுத்த அனுக்ரஹமா?!
" ரமணியை அனுப்பி வை! "என்றதோடு நிற்காமல், அதற்கான பணத்தை ஏற்பாடு பண்ணி, பந்தோபஸ்து பண்ணி, அழைத்துப் போக தகுந்த துணையையும் முன்னாடியே அனுப்பி வைத்து......என்னால் நம்பமுடியல்லையே  என்று ஆனந்த கண்ணீர் விட்டால் தர்ம கர்த்தா மனைவி.
"அதான் பெரியவா!..." என்றார் வேம்பு சிரித்துக் கொண்டே!
பூனா பக்கத்தில் ஒரு சின்ன ஊர்.  அங்கே  பெரியவாளுடைய முகாமுக்கு வேம்புவோடு போனான் ரமணி. நல்ல கூட்டம்! ஸ்நானத்தை முடித்துக் கொண்டு, அந்த 'க்யூ'வில் ரமணியை நிற்க வைத்துவிட்டு "இங்க பாரு ரமணி! இப்டியே கூட்டத்தோட போய்ண்டே இரு...ஒன்னோட டர்ன் வரும். பெரியவாகிட்ட, ஒன்னோட மனஸ்ல இருக்கற எல்லாத்தையும் கொட்டிடு! பயப்படாதே...எனக்கு உள்ள வேலையிருக்கு.....பெரியவாளை தர்ஶனம் பண்ணினதும், இங்கியே இரு. நா....வந்து ஒன்னை அழைச்சிண்டு போறேன். பயப்படாதே, என்ன?" என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார்.
சின்னப்பையனான ரமணிக்கோ அங்கிருந்த கூட்டத்தை கண்டதும், "இந்த 'க்யூ' எப்போ நகந்து, எப்போ நா...பெரியவாளைப் பாக்கறது!" என்ற மலைப்போடு, ஏதாவது இண்டு இடுக்கு வழியாக பெரியவாளைப் பார்க்க முடியுமா என்று முயற்சி பண்ணினான். ம்ஹூம்! இவன் குனிந்து, நிமிர்ந்து, குதித்ததுதான் மிச்சம்!
"சரி ....வேம்பு மாமா இங்கியே இருக்கச் சொல்லியிருக்கா. கட்டாயம் பெரியவாளை பாப்பேன்" என்று "ஹர ஹர ஶங்கர, ஜய ஜய ஶங்கர" என்று கண்களை மூடியபடி சொல்லிக் கொண்டிருந்தான்.   யாரோ அவனை லேஸாக தட்டவே  கண்களைத்  திறந்தான்.....
"நீ தானே ரமணி? வா....எங்கூட ! பெரியவா ஒன்னைக் கூப்பட்றா !....."  முழித்தான்!
"இந்த அலைமோதற கூட்டத்ல, பெரியவா என்னை மட்டும் கூப்ட்டாரா?.."  ரமணிக்கு இது "மூணாவது ஆனந்த அதிர்ச்சி "
"என்னடா முழிக்கிறே ? வேம்பு மாதிரி நானும் பெரியவாகிட்ட கைங்கர்யம் பண்றேன். பெரியவா சொல்லாம, நானா வந்து கூப்டுவேனா? வா....." என்று சொல்லி, அவனுடைய கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு, கூட்டத்தை விலக்கிக்கொண்டு, அவனை பெரியவா முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார், அந்த பாரிஷதர்.
ஒரு க்ஷணம்! குழந்தை த்ருவனுக்கு முன்னால் ஸாக்ஷாத் மஹாவிஷ்ணு ஶங்கு சக்ரதாரியாக நின்றபோது அவன் என்ன ஒரு ஸ்திதியில் இருந்தானோ, கிட்டத்தட்ட ரமணியும் பெரியவாளை அவ்வளவு அருகில் தர்ஶனம் பண்ணியதும், அப்படியொரு அநிர்வசநீயமான நிலைக்குத் தள்ளப்பட்டான்.
பெரிய கூட்டத்தில் அம்மாவின் கையைவிட்டு விட்டு, தொலைந்து போன குழந்தை, கதறி அழுது, மறுபடியும் தன் அம்மாவைப் பார்த்ததும், முதலில் சிரிக்காது, ஸந்தோஷப்படாது. மேலும் பலமாக அழும் ! அம்மா, அதைத் தன் கைகளில் தூக்கிக் கொண்டு, கட்டிக்கொண்டு, தட்டிக் கொடுத்து ஸமாதானம் பண்ணினாலும், அதன் அழுகை ஓய நேரமெடுக்கும்.  இப்போது ரமணி த்ருவனாகவும், கூட்டத்தில் தொலைந்து போன குழந்தை போலவும், இரண்டும் கலந்த மனநிலையில், பெரியவாளைப் பார்த்ததும், "பெரியவா!......ஓ!....என்னோட பெரியவா!" என்று வாய்விட்டு அலறிக்கொண்டு, ஸாஷ்டாங்கமாக அவர் முன் விழுந்து விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தான்.....
"ரமணி!....அழாதேப்பா...எந்திரு. ஒனக்கு என்னடா கொறை? என்னடா வேணும்?..."   தாயின் குரலைக் கேட்டதும் அழுகை ஜாஸ்தியாகி, திக்கித் திக்கி எல்லாவற்றையும் சொன்னான்.
"பெரியவா..எங்கப்பா தர்மகர்த்தா....அம்பாள்கிட்ட ரொம்ப பக்தியா இருப்பார். திடீர்னு செத்துப் போய்ட்டார்.....என்னோட நாலு அண்ணாக்களையும் அம்மா கஷ்டப்பட்டு படிக்க வெச்சாலும், எங்களை விட்டுட்டு அவாவா பிச்சிண்டு போய்ட்டா பெரியவா.....மூணு அக்காக்களும் கல்யாணம் ஆய்ட்டாலும், சீர், செனத்தி, ப்ரஸவம்ன்னு பிச்சு எடுக்கறா பெரியவா.....பாவம் அம்மா! எங்க போவா பணத்துக்கு? பத்தாததுக்கு பழைய கடனே 80,000 இருக்கு! எங்காத்தை வித்து கடனை அடைக்கலாம்-னா, கஷ்டத்ல விக்கறோம்-ன்னு தெரிஞ்சுண்டு, அடிமாட்டு வெலையா 10,000 த்துக்கு விலை பேசறா! நா.....படிப்பை நிறுத்திட்டு மளிகைக் கடேல வேலை பாக்கறேன்.....அம்மாவை என்னால ஸந்தோஷமா வெச்சுக்க முடியலியேன்னு இருக்கு பெரியவா......"
அத்தனை வர்ஷங்கள் குழந்தையிலிருந்தே பட்ட கஷ்டத்தை, கொட்டித் தீர்த்து கதறிவிட்டான்!  பொங்கும் பரிவோடு அவனைப் பார்த்த பெரியவா.....
"அழாதே......கண்ணைத் தொடச்சுக்கோ! நா.....சொல்றதக் கேளு.....நாலாவது "ஆனந்த அதிர்ச்சி "........
".....இப்போ ஒங்காத்ல நீங்க  கொலு வெக்கறதில்ல ; நவராத்ரி பூஜையும் பண்றதில்ல...அப்டித்தானே?"
"
அம்மாவுக்கு கனவுல வந்து சொன்னதை 'ஸத்யம்'-னு நிரூபிச்சுட்டாரே!" அதிர்ந்து போனான் ரமணி.
"ஆமா.......பெரியவா. அப்பா போனதுக்கப்றம் அம்மா எல்லாத்தையும் நிறுத்திட்டா! வஸதியும் இல்ல....."
"கொழந்தே!....ஒங்கப்பா பண்ணின மாதிரி தடபுடலா ஊரைக்கூட்டி, அண்டா அண்டாவா சுண்டலும், ஸொஜ்ஜியும் பண்ணி விநியோகம் பண்ண வேணாம். அழகா, சின்னதா கொலு வெச்சு, மனஸார ஒம்போது நாளும் அம்பாளுக்கு பூஜை பண்ணினாலே போறும்! சுண்டல் பண்ணனும்னு கூட அவஸ்யமில்ல...." என்று சொல்லிக்கொண்டே தன் முன்னால் மூங்கில் தட்டில் வைக்கப்பட்டிருந்த ஒரு பாக்கெட் கல்கண்டையும், பேரீச்சம் பழத்தையும் தொட்டுவிட்டு, பாரிஷதரை விட்டு ரமணியிடம் குடுக்கச் சொன்னார்.
"ரமணி.....இது ரெண்டையும் அம்மாகிட்ட குடுத்து, நவராத்ரிக்கு அம்பாளுக்கு நைவேத்யம்  பண்ணச் சொல்லு. நாளன்னிக்கி நவராத்ரி ஆரம்பிக்கறதே! நீ...இன்னிக்கி ஸாயங்காலம் பொறப்டாத்தான், நாளக்கி ஸாயங்காலம் ஊர் போய்ச் சேருவே! மறுநா...காலம்பர கொலு வெக்கறதுக்கு தோதா இருக்கும்..." என்று சொல்லிவிட்டு, பாரிஷதரிடம் ஏதோ சொன்னார். அவரும் ரமணியிடம்,
"ரமணி....பெரியவாளை நமஸ்காரம் பண்ணிக்கோ! இந்தா இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்தை எடுத்துக்கோ!..." என்றதும், சின்னப் பையன்தானே! அதே ஜோரில் பெரியவாளிடம்,
"என்ன பெரியவா இது! ஒங்கள பாக்கணும்ன்னு எவ்ளோவ் ஆசையோட வந்தேன்? நீங்க என்னடான்னா....இன்னிக்கே கெளம்பிப் போயி, ஆத்துல கொலு வெக்கச் சொல்றேளே ! இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரவழைச்சேள்?..." அழுகையும், ஏமாற்றமும் கலந்து லேஸாக ஒரு பாந்தவ்யமான கோபத்தின் ரேக்குகளை அதன் மேல் பரப்பி, கண்கலங்க கேட்டான்.
அவனைப் பார்த்து லேஸாக புன்னகைத்துவிட்டு, பாரிஷதரிடம் அவனை அழைத்துக் கொண்டு போகச் சொன்னார். ப்ரஸாதங்களை எடுத்துக் கொண்டு, அழுகையோடேயே வேம்பு ஐயரிடம் சென்றான். நடந்ததையெல்லாம் கேள்விப்பட்டதும் வேம்பு, ரமணியிடம்
"கொழந்தே ரமணி! பெரியவாகிட்ட இப்டியா கேக்கறது? 'இதுக்குத்தானா என்னை இவ்ளோ தூரம் வரச் சொன்னேள்?'-ன்னு கேட்டியாமே!   பெரியவா சொன்னதோட அர்த்தங்களை போகப் போக நீயே புரிஞ்சுப்ப.....செரி செரி ....ஸீக்ரம் ஸாப்ட்டுட்டு கெளம்பு....பாரு! பெரியவா ஒனக்கு ரெண்டு ஜோடி புது வேஷ்டி ஆஸிர்வாதம் பண்ணிக் குடுத்திருக்கா! "
பெரியவாளுடைய அன்பை, வேம்பு ஐயர் சொல்லச் சொல்ல, இப்பேர்ப்பட்ட பெரியவாளுடன் இருக்க முடியாமல், ஊருக்குப் போகணுமே! என்று அழுது கொண்டே ஸாப்பிட்டுவிட்டு கிளம்பியவனிடம்
"பெரியவா குடுத்த கல்கண்டு பேரீச்சம்பழம், வேஷ்டி எல்லாம் இந்தப் பையில வெச்சிருக்கேன். இந்தா....இதைக் கை செலவுக்கு வெச்சுக்கோ! [ஒரு கவரில் சில நூறு ரூபாய் நோட்டுக்களை போட்டுக் குடுத்தார்] ரயில்ல ஒன்னை ஏத்திவிட நானே வரேன். ரொம்ப பாக்யஸாலிடா நீ! பெரியவாளோட முழூ ஆஸீர்வாதத்தையும் அப்டியே அள்ளிண்டுட்டே! இனிமே ஒனக்கு ஒரு கொறையும் வராது. ஒன்னோட ரயில்ல வர்றவர் என்னோட ஸொந்தக்காரர்தான்.... பெரியவா ஒனக்கு எப்டி பந்தோபஸ்து பண்ணி அனுப்பறார் பாரு! ஒன்னை ஒங்காத்துல அவர் கொண்டு விட்டுடுவார். பெரியவா சொன்னபடி, ஒடன்னே அம்மாவை கொலு வெக்கச் சொல்லிடு...."
பத்ரமாக ஊர் வந்து சேர்ந்தான். போன ஜோரில் திரும்ப வந்த குழந்தையைக் கண்டதும் அம்மாவுக்கு ஒரே பதைபதைப்பு!
"என்னடா ஆச்சு? பெரியவாளைப் பாத்தியா? என்ன சொன்னார்?....." இப்படியாக ஒரே கேள்வி மயம்!
"அம்மா...அம்மா! பயங்கரக் கூட்டம்! அத்தனை கூட்டத்லயும் என்னை அழைச்சிண்டு வரச் சொல்லி, நன்னா கிட்டக்க தர்ஶனம் பண்ணினேன். நம்மளோட கஷ்டம் எல்லாத்தையும் அவர்கிட்ட கொட்டித் தீத்துட்டேன்! பெரியவாளோடேயே இருந்துட மாட்டேனான்னு இருந்துது...ஆனா, ஆஸ்சர்யம் பாரேன்! ஒனக்கு வந்த கனவு நெஜந்தாம்மா ! பெரியவாளே "நீ ஒடனே ஊருக்கு போயி, அம்மாகிட்ட நா சொன்னேன்னு, கொலு வெக்கச் சொல்லு ! ஒங்கப்பா இருந்தப்போ பண்ணின மாதிரி, பெருஸ்ஸா ஊரைக் கூட்டி தடபுடல் பண்ணாம, ஆத்துமட்டோட சின்னதா, அழகா பொம்மைகளை வெச்சு, சுண்டல் கூட வேணாம்...இந்த கல்கண்டு, பேரீச்சம்பழத்த தெனோமும் கொஞ்சமா அம்பாளுக்கு நைவேத்யம் பண்ணினாப் போறுன்னுட்டார்'-ம்மா!.."
"பெரியவா சொல்லிட்டான்னா வேற என்ன வேணும்? ஒடனே பரண் மேல வெச்சிருக்கே! அந்த கொலுபொம்மைப் பொட்டியை கீழ எறக்கு....அப்டியே அந்த சின்ன கொலுப்படியையும் எறக்கு... வேற என்னடா சொன்னா? நம்ம கஷ்டத்துக்கு எதாவுது விடிவு பொறக்குன்னாரா ?...
"பெரியவாளை பாத்ததுமே ரொம்ப அழுதுட்டேம்மா! எனக்குத் தாங்கல....இத்தனை வர்ஷமா நீயும், நானும் மட்டுந்தான் வாய்விட்டு பேசிண்டோம்...நமக்கு சொல்லி அழறதுக்குக் கூட யாருமே இல்லியேம்மா! அவர் எல்லாத்தையும் கேட்டுண்டு, என்னை அழாதேப்பா-னார்ம்மா! கொலு வெச்சுட்டு ஒம்போது நாளும் அம்பாளுக்கு ஶ்ரத்தையா பூஜை பண்ணச் சொல்லுன்னு மட்டும் சொன்னார்......"
மனம் ஆனந்தத்தில்  திளைக்க அம்மாவும், பிள்ளையும் பெரியவாளைப் பற்றி இரவெல்லாம் பேசினார்கள். பரணில் இருந்து பொம்மைகள் இறக்கப்பட்டு, பெரியவா சொன்ன மாதிரி, நவராத்ரி ஆரம்பித்ததும், வீட்டில் மாக்கோலம் போட்டு, மாவிலைத் தோரணம் கட்டி, விளக்கை ஏற்றி வைத்து, அம்பிகையை ஶ்ரத்தையாக பூஜித்தாள். கல்கண்டு, பேரீச்சம்பழம் நைவேத்யம். என்னவோ, அத்தனை வர்ஷங்கள் இல்லாத நிம்மதியும், லக்ஷ்மிகரமும் அவர்கள் வீட்டிலும், மனஸிலும் புகுந்தது.
"ரமணி, பெரியவா சொன்னதைப் பண்ண ஆரம்பிச்சதுமே நமக்குள்ள ஒரு அமைதி வந்துடுத்து பாத்தியா....!"
அம்மாவுக்கு கிடைத்த நிம்மதி ரமணிக்கு முழுமையாக கிடைக்கவில்லை. காரணம்?
"நேத்திக்கி பரண்ல ஏறி கொலுப் பொட்டியை எடுக்கறச்சே.....வேறே எதையோ பாத்தேனே......"
இதே சிந்தனைதான் நிம்மதிக்கு குறுக்கே வந்தது. கிடுகிடுவென்று ஏணியைப் போட்டு, பரணில் ஏறினான்....மூலையில் ஒரு நசுங்கிப் போன தகரப் பொட்டி!
"அம்மா! இங்க இன்னொரு பொட்டி இருக்கும்மா! அதையும் எறக்கறேன்....எதாவுது பொம்மை இருந்தா அதையும் கொலுல சேத்துக்கலாம்" அம்மா அதை வாங்கி கீழே வைத்து திறந்தால் அதில் பொம்மை இல்லை! ஆனால் ஏதோ பட்டுத் துணியில் சுத்தியிருந்தது! பயமும் பக்தியும் ஒருசேர, அந்தப் பட்டுத் துணியை மெல்ல பிரித்தால், உள்ளே நாலைந்து ஓலைச்சுவடிக் கட்டுகள்! மஹா அரதப்பழஸு என்பதைப் பார்த்தாலே புரிந்தது.
"என்னடா ரமணி இது! அப்பா, இத இவ்ளோ பத்ரமா பட்டுத் துணில உங்கப்பா  சுத்தி வெச்சிருக்காருன்னா...இது ஏதோ ரொம்ப முக்யமான விஷயமா இருக்குமோ?"
"அம்மா! நா......இன்னிக்கி ஸாயங்கால டிரெயின்ல போயி, பெரியவாகிட்ட இந்த சுவடிகளை பட்டுத் துணியோட குடுத்துட்டு வந்துடறேன்..."
"ஓடு! பெரியவாளிடம்!..".   சுவடிகளோடு மறுநாளே பெரியவா முன் ஆஜராகிவிட்டான்! முதல்முறை வந்தபோது இருந்த அழுகையும், குழப்பமும், பயமும், ஸந்தேஹமும் இப்போது ரமணியிடம் இல்லை!  ரெண்டு நாளைக்கு முன்பிருந்த அதே பணமுடைதான் இப்போதும். பிறகு எப்படி இந்த அமைதி? தெளிவு?  இது பெரியவா அவனுக்குத் தராமல் தந்த ஸர்வகால ஸஹவாஸ வாக்குறுதியால் வந்த த்ருட விஶ்வாஸம்!    பெரியவா எல்லாருக்குமே இப்படியொரு பாக்யத்தை அருளிக் கொண்டிருக்கிறார். ரமணி பிடித்துக் கொண்டான்! நாம்...?
ரமணி போனபோது , தனியான ஒரு இடத்தில் பெரியவா அமர்ந்திருந்தார். சில பாரிஷதர்களைத் தவிர, ஜாஸ்தி கூட்டமே இல்லை!   பெரியவா முன்னால் ஸுமார் 60 வயஸு மதிக்கத்தக்க ஒரு பெரியவர் பவ்யமாக கைகளைக் கட்டிக் கொண்டு பெரியவாளிடம் ஏதோ ஸீரியஸ்ஸான விஷயத்தை ப்ரஸ்தாபித்துக் கொண்டிருந்தார்.
"ஸரஸ்வதி மஹால்...அங்கெல்லாம் விஜாரிச்சியோ?.."பெரியவா அவரிடம் கேட்டார்.
"எல்லா எடமும் சல்லடை போட்டு சலிச்சாச்சு பெரியவா! இந்தியால இருக்கற famous ஜோஸ்யக்காரா, உபன்யாஸக்காரா, ஏன்?ஆர்க்கியாலஜிகாராளைக் கூட விடலை பெரியவா! எங்கியாவுது, யார் மூலமாவுது, எதாவுது, தெரியாதான்னு அலைஞ்சாச்சு பெரியவா.....அதை யாரு, எங்க ஒளிச்சு வெச்சிருக்காளா, இல்லே, அதோட அருமை தெரியாம எரிச்சோ, தூக்கியோ போட்டுட்டாளோன்னு ரொம்ப பதட்டமா இருக்கு....எங்கியாவுது அது இருக்கற சின்ன clue கெடச்சாக்கூட போறும்! எப்டியாவுது அவா கைல கால்ல விழுந்தாவுது கெஞ்சிக் கூத்தாடி வாங்கிண்டு வந்துடுவேன்.....எத்தன லக்ஷங்கள் ஆனாலும் பரவாயில்ல பெரியவா! ஆனா, அதோட மதிப்புத் தெரியாம, எங்கியோ ஒரு மூலேல அது மக்கிப் போய்டக்கூடாது......இதான் என்னோட ப்ரார்த்தனை!...."
வந்த பண்டிதர்  கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டிருக்கும்போதுதான், ரமணி உள்ளே எட்டிப் பார்த்தான். பெரியவா அவனைத் திரும்பிப் பார்த்து,
"வாடா! கொழந்தே! வா....வா" என்றதும், தகரடப்பாவும், கையுமாக குதித்துக் கொண்டு ரெண்டே எட்டில் பெரியவா முன்னால் நின்றான். தகரடப்பாவை ஒரு பக்கம் வைத்துவிட்டு, ஸாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தான்.
"பெரியவா! நீங்க சொன்னமாரியே அம்மா ஆத்துல கொலு வெச்சுட்டா!  மேல பரண்ல கொலுப் பொட்டியோட, இந்த தகரடப்பாவும் இருந்துது  பெரியவா! பிரிச்சா....."
என்று பேசிக்கொண்டே அவன் தக ரடப்பாவை திறந்ததும்,
"ம்ம்....நல்லதாச்சு போ! அந்த டப்பால இருக்கறதை அப்டியே பட்டுத்துணியோட அந்த மாமாகிட்ட குடுத்துடு!" இது ஐந்தாம் ஆனந்த அதிர்ச்சி !
"இதுக்குள்ள ஏதோ ஓலைச்சுவடி இருக்கு பெரியவா......நீங்க படிக்க வேணாமா?..." பட்டுத்துணியோடு அந்த ஓலைச்சுவடியை  அங்கே நின்று கொண்டிருந்த அந்த பெரியவரிடம் குடுத்தான். பணிவோடு வாங்கிக் கொண்டார்.
"நீ...இத்தன வர்ஷமா இந்தியா முழுக்க தேடி அலஞ்சுண்டு இருந்தியே! இதான்.....அது! "  பெரியவா அவரிடம் கேட்டதும் அவர்   ஒ வென்று  அழுதேவிட்டார்!
"ஓ ....பெரியவா! என் தெய்வமே! க்ருபா ஸாகரா! பெரியவாகிட்ட இதப்பத்தி பேசி பத்து நிமிஷம் கூட ஆகல......அதுக்குள்ள இப்டியொரு கருணா வர்ஷமா? இது கெடைக்கும்னு கனவுல கூட நா.....நெனைக்கல பெரியவா!....இந்தக் கொழந்தைக்கு நா....வயஸ்ல பெரியவங்கறதால நமஸ்காரம் பண்ண முடியாத நெலேல இருக்கேன்......"
என்று சொல்லிக்கொண்டே, தன் bag ஐ திறந்து உள்ளேயிருந்ததை அப்படியே எடுத்து பெரியவா முன் இருந்த மூங்கில் தட்டில் வைத்தார், கனகதாரா மாதிரி கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்கள்!
"பெரியவா.....மஹாப்ரபோ! இன்னதுதான் வெலை-ன்னு நிர்ணயிக்க முடியாத இந்த அபூர்வமான பொக்கிஷத்துக்கு, என்னால முடிஞ்ச சின்ன ஸமர்ப்பணம்.....அனுக்ரஹம் பண்ணி ஸ்வீகரிச்சுக்க சொல்லணும்...."
அழகாக சிரித்துக் கொண்டேபெரியவா அவரிடம் ." ஏது?  ஊருக்கு போய்ச்சேர நடராஜா ஸர்வீஸ்தானா? காலணா வெச்சுக்காம, எல்லாத்தையும்  பையன் கிட்டே  குடுத்துட்டியே!..." என்று சொல்லிவிட்டு, ரமணியிடம்,
"இதோ பாருடா! நீ குடுத்த ஓலைச்சுவடிக்காக, இந்த மாமா ஒனக்கு ரெண்டுலக்ஷ ரூவா குடுத்திருக்கார்!.....இப்போ நீதான் இவருக்கு ஊருக்குத் திரும்பிப் போறதுக்கு, டிக்கெட் காஸு குடுக்கணும்! இந்தக் கட்டுலேர்ந்து ஒரு அம்பது ரூவா எடுத்து அந்த மாமாகிட்ட குடுத்துட்டு, அவரை நமஸ்காரம் பண்ணிக்கோ!......"
"ஹா......!! பெரியவா...! நா...ரெண்டுலக்ஷ ரூவா கொண்டுவந்திருக்கேன்னு எப்டி கரெக்டா சொல்லிட்டேள் பெரியவா?..."என்று அதிர்ந்து போனார் அந்த பண்டிதர்.
ரமணியும் "அதான! எப்டி பெரியவா? எண்ணிப்பாக்காம சொன்னேள்?..."  பெரியவாளிடமிருந்து வெறும் புன்னகைதான் இதற்கு பதிலாக வந்தது!
"சரி சரி ஊருக்கு கெளம்பற வழியைப் பாரு! ஒங்கூட இந்த பணத்தை எடுத்துண்டு துணையாக  வேம்பு மாமாவும் ஊருக்கு வருவார். எல்லாத்தையும் அவர் பாத்துப்பார். ரெண்டு பேரும் ஸாப்ட்டுட்டு கெளம்புங்கோ!..."  அனுக்ரஹம் பண்ண மட்டுமே தெரிந்த கரங்களை உயர்த்தி ஆஸிர்வாதம் பண்ணி, ப்ரஸாதம் குடுத்தார்.
ஊருக்கு வந்த மறுநாளே, வேம்பு ஐயரிடம் பெரியவா குடுத்திருந்த instruction படி, 80,000 ரூபாய் கடன், "ப்பூ!..." என்று ஊதித் தள்ளப்பட்டது! நவராத்ரி ஆரம்பித்த நாலாம் நாளே, துர்க்கையாக அவர்களுடைய துக்கத்தைப் போக்கி, மஹாலக்ஷ்மியாக செல்வத்தையும் அருளிவிட்டாள் அம்பிகையான "ஸ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர" ஸரஸ்வதி ! 
ஶர்மா தம்பதி நல்லபடி யாத்ரை முடித்துக் கொண்டு வந்ததும், ரமணியின் க்ருஹமும் "ஶங்கரா" என்ற நாமத்தைத் தாங்கியபடி புனர்ஜன்மாவை பெற்றது!
வாஸலிலேயே ஒரு பக்கத்தில் நல்ல தரமான மளிகைப் பொருட்களை, ஞாயமான விலையில் விற்க ஆரம்பித்தான் ரமணி! அவ்வீட்டில், எந்தக் கார்யமுமே, பெரியவா அனுக்ரஹம் என்ற பிள்ளையார் சுழியோடுதான் ஆரம்பிக்கும்!  நல்ல வருமானம்! நல்ல பேர்! பின்னாளில், பெரியவா சொன்னபடியே, ஶர்மாவின் பெண்ணை ரமணி கல்யாணம் பண்ணிக்கொண்டான்.

கஷ்டமில்லாத, கடனில்லாத வாழ்க்கை, அடிக்கடி பெரியவா தர்ஶனம்! 
வேறு என்ன வேண்டும்? 

பெரியவா சொன்னபடி, தங்கள் வாழ்க்கையின் தேவைகளை எளிமையாக 
ஆக்கிக்கொண்டு, எதையும் அபரிமிதமாக சேர்த்து வைத்துக் கொள்ளாமல், 
பல பேருக்கு  அன்னதானம் செய்யும் அளவு, ரமணியின் வாழ்க்கை என்னும் 
கப்பலுக்கு பெரியவாளே மாலுமியாகவும், கப்பலாகவும், 
ஸமுத்ரமாகவும் இருந்தார்.    

இதைப் படித்துவிட்டு, பெரியவா! பெரியவா!" என்று அரற்றி புலம்பி அழுவதைத் 
தவிர நம்மால் ஒண்ணுமே செய்ய முடியாது! 
....



Wednesday, April 19, 2017

16 வகை பூஜைகள்

பூஜையில் இறைவனுக்கு செய்யயப்படும் 18 உபசாரங்கள், ஷோடச உபசாரங்கள் எனப்படும்.  அவை:

1. ஆவாஹனம்: இறைவனை வரவேற்று கொடியேற்றம் செய்தல்.

2. ஸ்தாபனம்: இறைவனை விக்ரகத்தில் எழுந்தருள வேண்டுமென பிரார்த்தித்தல்.

3. சன்னிதானம்: விக்கிரகமாக பூஜிக்கப்படும் மூர்த்தி நமக்கு அனுக்கிரகம் செய்யும் முறையும் பூஜை செய்பவர்கள் அருள் பெரும் முறையாகும்.

4. சந்நிரோதனம்: பூஜை முடியும்வரை சாந்நித்யம் செய்யுமாறு இறைவனைப் பணிந்து கேட்டுக் கொள்ளுதல்.

5. அவகுண்டனம்: விக்ரகத்தைச் சுற்றிக் கலச மந்திரத்தால் மூன்று அகழ் உண்டாக்கி தடைகள் வராமல் அம்மந்திரத்தாலேயே அதனை மூடுதல். 

6. அபிஷேகம்: எண்ணெய், மாப்பொடி, நெல்லிமுள்ளி, மஞ்சள்பொடி, பஞ்சகவ்யம், பஞ்சாமிர்தம், பால், தயிர், தேன், கரும்பு, வாழைப்பழம், எலுமிச்சை சாறு, இளநீர், அன்னம், விபூதி, சந்தனம் , பத்ரோதகம், கும்போதகம், ஆகியவற்றால் அபிஷேகம் செய்தல்.  

7. பாத்யம்: சந்தானம், அருகு, வெண்கடுகு, விளாமிச்சை, இந்த நான்கு பொருள்களையும் நீரில் கலந்து இறைவன் திருப்பாதத்தில் விடல்.

8. ஆசமநீயம்: நீரில் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம், நாவற்பழம், ஜாதிக்காய், குங்குமப்பூ போன்ற பொருள்களை இட்டு சம்ஹிதா மந்திரம் சொல்லுதல்.

9. அர்க்கியம்: இறைவனுக்குரிய மூலமந்திரம் கூறி, தர்ப்பை நுனி, பால், அரிசி, புஷ்பம் முதலியவை கலந்த நீரால் அர்க்கியம் கொடுத்தல்.

10. மாலை சாத்தல்: புஷ்பமாலைகளை சாத்துதல்.

11. தூபம்: அகில், கீழாநெல்லி, சாம்பிராணி, குங்கிலியம் முதலியவற்றால் தூபமிடுதல்.

12. தீபம்: மணி அடித்து மந்திரங்கள் கூறி கிரீடம் முதல் பாதம் வரை நெய் தீபம் காட்டுதல்.

13. நைவேத்தியம்: சுத்த அன்னம், சக்கரைப் பொங்கல், வெண்பொங்கல் இவற்றில் ஏதாவது ஒன்றினை நைவேத்தியம் செய்தல்.

14. பாநீயம்: வாசனை உள்ள நீரை சமர்ப்பித்தல்.

15. ஜப சமர்ப்பணம்: மூல மந்திரத்தை 108 தடவை சொல்லுதல்.

16. தீபாராதனை: இது 16 வகைப்படும். தூபம் காட்டுவதில் இருந்து கண்ணாடி காட்டுவது, விசிறி வீசுவது வரை.
தீபாராதனையின் தத்துவம்: பஞ்ச பூதங்கள் ஒன்றில் ஒன்று ஒடுங்கி இறுதியில் கற்பூர தீபம் போல் எரிந்து எவ்வித மிச்சமும் இன்றி இறைவனோடு ஒன்றி விடுதல் ஆகும்.



 




 
  


சந்தானலட்சுமி




குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார்.
திருக்குறள் 

அஃறிணைப்  பொருள்களின் மகிழ்ச்சி அடையும் மனித மனம் உயர்திணையின் மாண்பை அறியாமல் போனதால்தானோ என்னவோ ஒரு மூங்கில் குழல் கொடுக்கும் ஒலியையும், ஒரு யாழ் கொடுக்கும் இசையையும் இனிதாக கருதுவதை விட ஒரு பிஞ்சு குழந்தையின் மழலை மிக உயர்வானது என்று வள்ளுவர் நினைவூட்டுகிறார்,  
கொஞ்சிக் கொஞ்சி தேன் சிந்தும் மழலை செல்வத்தை பெறாதவர்களை என்ன செய்வது? மகப்பேறு மட்டும் மஹாதேவனுக்கும் கூட தெரியாது என்பார்கள்.   மக்கள் செல்வம் மனிதனின் கையில் இல்லையே.   அதை தெய்வம் தான், அந்த சந்தான லட்சுமி தான் வழங்க வேண்டும்.

அபிராம பட்டர் தனது அபிராமி பதிகத்தில் 16 பேறுகளில் ஒன்றாக, தவறாத சந்தானம் எனக் கூறுகிறார். 
திருமணம் ஆனதும் சில மாதங்களில், ஏதாவது விஷேஷம் உண்டா என்று தானே கேட்கிறோம்.  
மிருகண்டு மகரிஷிக்கு மகப்பேறு இல்லை.  அது போல் சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகப்பேறு இல்லை. இந்த சோதனையைக் கண்டு இவர்கள் எப்படி மனத்துன்பத்தை அடைந்தார்கள்.  இவர்கள் 100 வருஷம் வாழும் குழந்தை வேண்டாம், குறைவான ஆயுள் உள்ள குழந்தை வேண்டும் என்று தானே வேண்டினார்கள்.   விளைவு?  அத்தகைய சத்தான குழந்தையாக மார்கண்டேயரும், ஆதிசங்கரரும் கிடைத்தார்கள். யாரும் ஊனமுள்ள குழந்தைகளை வேண்டுவதில்லை. சத்தான, மேதைத்தன்மை உள்ள குழந்தைகளையே விரும்புகிறார்கள்.  அன்னை பாசம் அளவிடமுடியாதது. லலிதா சஹஸ்ரநாமத்தில் கூட முதல் நாமமே ஸ்ரீ மாதா என்று அன்னையை அழைப்பதாக உள்ளது.   குழந்தை இருந்தால் தானே அம்மா என்று அழைப்பார்கள். தெய்வத்தாயை அன்னை என்று பிரபஞ்சமே அழைக்கிறது. தன்னை அன்னை என்று அழைப்பவர்களுக்கு அன்னை என்று அழைக்கப்படும் பாக்கியத்தை தருபவள் சந்தான லட்சுமி. 
உலக அன்னையாக இருப்பவளே சந்தான லட்சுமியின் அனுக்கிரகமாக புத்திர சந்தானத்தைக் கோரினாள் என்பது விந்தையான செய்திதானே?
சனத்குமாரர், பிரும்மாவின் மானசபுத்திரர்.  சகலமும் உணர்ந்த பிரம்மஜானி.  ஒருநாள், அவர் ஒரு கனவு கண்டார்.  தேவா சேனாதிபதியாக இருந்து துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதாக கண்ட கனவை தந்தை பிரம்மாவிடம் சொன்னார்.  அறிஞன் உலகில் நடப்பதை சொல்வான்.  மஹான்கள் சொல்கிறபடி உலகம் நடக்கும்.  உன்கனவு இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்தப் பிறவியில் நடக்கும் நிச்சயமாக என்றார் ப்ரம்மா. 

பிரம்மன் கூறியதை சனத்குமார்  மறந்துவிட்டார்.  ஆனால் பரமன் மறக்கவில்லை.  சனத்குமார் யோகத்தில் அமர்ந்த இடத்திற்கு சிவனும் பார்வதியும் வந்ததை கவனிக்காத அவரை சிவன் கடிந்து கொண்டார்.  நாங்கள் வந்ததை அறியாது இருக்கும் உனக்கு ஏன் சாபம் கொடுக்க கூடாது என்றார் சிவபெருமான்.  உங்கள் சாபம் என் உடலுக்கு தான் பாதிப்பு கொடுக்கும், ஆன்மாவுக்கு கிடையாது என்ற அவரிடம், சரி உனக்கு ஏதாவது வரம் கேள் என்றார் சிவபெருமான்.  அதற்கு, எனக்கு வரம் எதுவும் வேண்டாம், உங்களுக்கு ஏதேனும் வரம் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறேன் என்றார்.
அதற்கு, சரி, அடுத்த ஜென்மத்தில் எமக்கு குமாரனாக பிறக்க வேண்டும் நீ என்றார். சரி, உமக்கு பிள்ளையாக பிறப்பேன் என்றார் சனத்குமாரர்.

அன்னை உமையவளுக்கு சனத்குமார்  தன்னை ஒதுக்குவதாக தோன்றியது.  சனத்குமாரா , உங்கள் இருவருக்கும் பிள்ளையாக பிறப்பேன் என்று கூறவில்லையே ?  என்றாள்.  பரமேஸ்வரன் கேட்டார், அதனால் அவருக்கு மட்டும் பதில் அளித்தேன் என்றார்.  உன்னைப்போல் ஒரு பிள்ளை என் வயிற்றில் உதிக்க வேண்டும்.  பதி வரம் கேட்டால் அது சதிக்கும் பொருந்தும் அல்லவா?
நான் சொன்னபடி அவருக்குத்தான் பிள்ளையாக பிறக்க முடியும்.  அன்னையே பிறந்த பின்பு உனக்கும் நான் பிள்ளையாக இருப்பேன்.  நான் கர்ப்ப வாசம் செய்ய விரும்பவில்லை, சிவகுமாரனாக பிறப்பேன், ஆனால் உமாகதானாக , மலைமகள் பாலனாக வளர்வேன் என்றார்.
அன்னையின் ஆசை நிறைவேற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது.  பஸ்மாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தான். அவன் யாரை தொட்டாலும் அவர்கள் பஸ்மாமாகி  விடவேண்டும் என்ற வரத்தையும் பெற்றான்.  அந்த வரத்தின் மூலம் சிவா பெருமானையே தொட்டு பார்க்க வந்ததால் சிவனார் ஓடி ஓடி மறைந்தார்.  சிவனாரின் பிரிவை உமையவளால் தாங்க முடியவில்லை. ஈசன் இல்லாத சக்தி வெறும் சாமான்ய பெண்ணாகிப் போனாள். அவள் உடம்பில் நீர் ஒன்றைத் தவிர மற்ற நான்கும் - தேயு, வாயு, ப்ருத்வி, ஆகாசம் - மறைந்து போயிற்று.  உடம்பு மட்டும் நீர் நிலையாகிவிட்டது.  அதுவே சரவண பொய்கை ஆனது.  அதில் தான் சனத்குமாரரின்  பிறப்புக்கு உறைவிடமாக ஆக்கினாள் உமையவள். 

தேவர்களை சூரபத்மனின் கொடுமையில் இருந்து காக்க, சிவனார் தனது நெற்றி கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார்.  அதில் இருந்து சனத்குமாரர் முருகனாக ஜனித்தார்.  அந்த பொறிகளை வாயுவின் மூலம் கங்கையில் சேர்க்க உத்தரவிட்டார்.  அத்தீப்பொறிகளின் சூட்டை கங்கையினால் தாங்கமுடியாமல் போகவே, அதனை சரவண பொய்கையில் சேர்க்கும்படி சொன்னார் சிவனார்.  அம்பாள் அந்த தீப்பொறிகளை ஒன்றாக்கினாள், சிவகுமாரன் சரவணபவன் ஆனான் - உமாகதனும் ஆனான்.

அகிலத்தை காக்கும் அன்னையின் பாசம் வென்றது.  
ஆறு குழந்தைகளையும் இணைத்து கந்தன் என்று பெயர் சூட்டினாள்.
தாய்ப் பாசத்தை கொடுத்து நிறைவேற்றுபவள் தான் சந்தான லட்சுமி.

சந்தான லட்சுமியை பற்றி இரண்டு விதமான தியான சுலோகங்கள் உள்ளன.

ஜடையும், மணிமுடியும் தரித்து, நிலையான பீடத்தில் வீற்றிப்பவள், அபய வரத்தை காட்டும் கரங்கள், கங்கணமும்  பூரண கும்பமும் கொண்ட கரங்கள், மார்புக் கச்சம், இடையில் உறையில் இட்ட பெரிய கத்தி, இருபுறங்களிலும் தீபம் ஏந்திய பணிப்பெண்கள், சாமரம் வீசும் பணிப்பெண்கள், சந்தான லட்சுமியை அடையாளம் காட்ட ஒரு குழந்தையும் தாயின் கருணையை தேக்கி வைத்துள்ள கண்கள் - இத்தகைய சந்தான லட்சுமி,யை துதிக்கிறேன் என் விருப்பம் நிறைவேத்த அருள்புரிவாய் தாயே என்கிறது ஒரு சுலோகம்.

இன்னொரு சுலோகம் 
பச்சை நிறமும், பாற்குடமும், சங்கும் ஏந்திய கைகளை உடையவள் என்கிறது. 

சென்னை பெசண்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் சந்தான லட்சுமி தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறாள்.  இத்தகைய பாசமிகு அன்னையின் தாள்தொழுது பயனை அடையலாம். 
















எங்கெங்கு நோக்கினும் லிங்கம்






தொடரும்...

கிருஷ்ணரும் அர்ஜுனனும்





தொடரும்...