குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள் மழலைச் சொல் கேளாதார்.
திருக்குறள்
அஃறிணைப் பொருள்களின் மகிழ்ச்சி அடையும் மனித மனம் உயர்திணையின் மாண்பை அறியாமல் போனதால்தானோ என்னவோ ஒரு மூங்கில் குழல் கொடுக்கும் ஒலியையும், ஒரு யாழ் கொடுக்கும் இசையையும் இனிதாக கருதுவதை விட ஒரு பிஞ்சு குழந்தையின் மழலை மிக உயர்வானது என்று வள்ளுவர் நினைவூட்டுகிறார்,
கொஞ்சிக் கொஞ்சி தேன் சிந்தும் மழலை செல்வத்தை பெறாதவர்களை என்ன செய்வது? மகப்பேறு மட்டும் மஹாதேவனுக்கும் கூட தெரியாது என்பார்கள். மக்கள் செல்வம் மனிதனின் கையில் இல்லையே. அதை தெய்வம் தான், அந்த சந்தான லட்சுமி தான் வழங்க வேண்டும்.
அபிராம பட்டர் தனது அபிராமி பதிகத்தில் 16 பேறுகளில் ஒன்றாக, தவறாத சந்தானம் எனக் கூறுகிறார்.
திருமணம் ஆனதும் சில மாதங்களில், ஏதாவது விஷேஷம் உண்டா என்று தானே கேட்கிறோம்.
மிருகண்டு மகரிஷிக்கு மகப்பேறு இல்லை. அது போல் சிவகுரு ஆர்யாம்பாள் தம்பதிக்கு மகப்பேறு இல்லை. இந்த சோதனையைக் கண்டு இவர்கள் எப்படி மனத்துன்பத்தை அடைந்தார்கள். இவர்கள் 100 வருஷம் வாழும் குழந்தை வேண்டாம், குறைவான ஆயுள் உள்ள குழந்தை வேண்டும் என்று தானே வேண்டினார்கள். விளைவு? அத்தகைய சத்தான குழந்தையாக மார்கண்டேயரும், ஆதிசங்கரரும் கிடைத்தார்கள். யாரும் ஊனமுள்ள குழந்தைகளை வேண்டுவதில்லை. சத்தான, மேதைத்தன்மை உள்ள குழந்தைகளையே விரும்புகிறார்கள். அன்னை பாசம் அளவிடமுடியாதது. லலிதா சஹஸ்ரநாமத்தில் கூட முதல் நாமமே ஸ்ரீ மாதா என்று அன்னையை அழைப்பதாக உள்ளது. குழந்தை இருந்தால் தானே அம்மா என்று அழைப்பார்கள். தெய்வத்தாயை அன்னை என்று பிரபஞ்சமே அழைக்கிறது. தன்னை அன்னை என்று அழைப்பவர்களுக்கு அன்னை என்று அழைக்கப்படும் பாக்கியத்தை தருபவள் சந்தான லட்சுமி.
உலக அன்னையாக இருப்பவளே சந்தான லட்சுமியின் அனுக்கிரகமாக புத்திர சந்தானத்தைக் கோரினாள் என்பது விந்தையான செய்திதானே?
சனத்குமாரர், பிரும்மாவின் மானசபுத்திரர். சகலமும் உணர்ந்த பிரம்மஜானி. ஒருநாள், அவர் ஒரு கனவு கண்டார். தேவா சேனாதிபதியாக இருந்து துஷ்டர்களை சம்ஹாரம் செய்வதாக கண்ட கனவை தந்தை பிரம்மாவிடம் சொன்னார். அறிஞன் உலகில் நடப்பதை சொல்வான். மஹான்கள் சொல்கிறபடி உலகம் நடக்கும். உன்கனவு இப்பிறவியில் நிறைவேறாது. அடுத்தப் பிறவியில் நடக்கும் நிச்சயமாக என்றார் ப்ரம்மா.
பிரம்மன் கூறியதை சனத்குமார் மறந்துவிட்டார். ஆனால் பரமன் மறக்கவில்லை. சனத்குமார் யோகத்தில் அமர்ந்த இடத்திற்கு சிவனும் பார்வதியும் வந்ததை கவனிக்காத அவரை சிவன் கடிந்து கொண்டார். நாங்கள் வந்ததை அறியாது இருக்கும் உனக்கு ஏன் சாபம் கொடுக்க கூடாது என்றார் சிவபெருமான். உங்கள் சாபம் என் உடலுக்கு தான் பாதிப்பு கொடுக்கும், ஆன்மாவுக்கு கிடையாது என்ற அவரிடம், சரி உனக்கு ஏதாவது வரம் கேள் என்றார் சிவபெருமான். அதற்கு, எனக்கு வரம் எதுவும் வேண்டாம், உங்களுக்கு ஏதேனும் வரம் வேண்டுமானால் கேளுங்கள் தருகிறேன் என்றார்.
அதற்கு, சரி, அடுத்த ஜென்மத்தில் எமக்கு குமாரனாக பிறக்க வேண்டும் நீ என்றார். சரி, உமக்கு பிள்ளையாக பிறப்பேன் என்றார் சனத்குமாரர்.
அன்னை உமையவளுக்கு சனத்குமார் தன்னை ஒதுக்குவதாக தோன்றியது. சனத்குமாரா , உங்கள் இருவருக்கும் பிள்ளையாக பிறப்பேன் என்று கூறவில்லையே ? என்றாள். பரமேஸ்வரன் கேட்டார், அதனால் அவருக்கு மட்டும் பதில் அளித்தேன் என்றார். உன்னைப்போல் ஒரு பிள்ளை என் வயிற்றில் உதிக்க வேண்டும். பதி வரம் கேட்டால் அது சதிக்கும் பொருந்தும் அல்லவா?
நான் சொன்னபடி அவருக்குத்தான் பிள்ளையாக பிறக்க முடியும். அன்னையே பிறந்த பின்பு உனக்கும் நான் பிள்ளையாக இருப்பேன். நான் கர்ப்ப வாசம் செய்ய விரும்பவில்லை, சிவகுமாரனாக பிறப்பேன், ஆனால் உமாகதானாக , மலைமகள் பாலனாக வளர்வேன் என்றார்.
அன்னையின் ஆசை நிறைவேற ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. பஸ்மாசுரன் எனும் அசுரன் சிவனை நோக்கி தவம் இருந்தான். அவன் யாரை தொட்டாலும் அவர்கள் பஸ்மாமாகி விடவேண்டும் என்ற வரத்தையும் பெற்றான். அந்த வரத்தின் மூலம் சிவா பெருமானையே தொட்டு பார்க்க வந்ததால் சிவனார் ஓடி ஓடி மறைந்தார். சிவனாரின் பிரிவை உமையவளால் தாங்க முடியவில்லை. ஈசன் இல்லாத சக்தி வெறும் சாமான்ய பெண்ணாகிப் போனாள். அவள் உடம்பில் நீர் ஒன்றைத் தவிர மற்ற நான்கும் - தேயு, வாயு, ப்ருத்வி, ஆகாசம் - மறைந்து போயிற்று. உடம்பு மட்டும் நீர் நிலையாகிவிட்டது. அதுவே சரவண பொய்கை ஆனது. அதில் தான் சனத்குமாரரின் பிறப்புக்கு உறைவிடமாக ஆக்கினாள் உமையவள்.
தேவர்களை சூரபத்மனின் கொடுமையில் இருந்து காக்க, சிவனார் தனது நெற்றி கண்ணில் இருந்து ஆறு தீப்பொறிகளை வெளியிட்டார். அதில் இருந்து சனத்குமாரர் முருகனாக ஜனித்தார். அந்த பொறிகளை வாயுவின் மூலம் கங்கையில் சேர்க்க உத்தரவிட்டார். அத்தீப்பொறிகளின் சூட்டை கங்கையினால் தாங்கமுடியாமல் போகவே, அதனை சரவண பொய்கையில் சேர்க்கும்படி சொன்னார் சிவனார். அம்பாள் அந்த தீப்பொறிகளை ஒன்றாக்கினாள், சிவகுமாரன் சரவணபவன் ஆனான் - உமாகதனும் ஆனான்.
அகிலத்தை காக்கும் அன்னையின் பாசம் வென்றது.
ஆறு குழந்தைகளையும் இணைத்து கந்தன் என்று பெயர் சூட்டினாள்.
தாய்ப் பாசத்தை கொடுத்து நிறைவேற்றுபவள் தான் சந்தான லட்சுமி.
சந்தான லட்சுமியை பற்றி இரண்டு விதமான தியான சுலோகங்கள் உள்ளன.
ஜடையும், மணிமுடியும் தரித்து, நிலையான பீடத்தில் வீற்றிப்பவள், அபய வரத்தை காட்டும் கரங்கள், கங்கணமும் பூரண கும்பமும் கொண்ட கரங்கள், மார்புக் கச்சம், இடையில் உறையில் இட்ட பெரிய கத்தி, இருபுறங்களிலும் தீபம் ஏந்திய பணிப்பெண்கள், சாமரம் வீசும் பணிப்பெண்கள், சந்தான லட்சுமியை அடையாளம் காட்ட ஒரு குழந்தையும் தாயின் கருணையை தேக்கி வைத்துள்ள கண்கள் - இத்தகைய சந்தான லட்சுமி,யை துதிக்கிறேன் என் விருப்பம் நிறைவேத்த அருள்புரிவாய் தாயே என்கிறது ஒரு சுலோகம்.
இன்னொரு சுலோகம்
பச்சை நிறமும், பாற்குடமும், சங்கும் ஏந்திய கைகளை உடையவள் என்கிறது.
சென்னை பெசண்ட்நகரில் உள்ள அஷ்டலட்சுமி ஆலயத்தில் சந்தான லட்சுமி தெற்கு நோக்கிய சந்நிதியில் காட்சி தருகிறாள். இத்தகைய பாசமிகு அன்னையின் தாள்தொழுது பயனை அடையலாம்.
No comments:
Post a Comment