Pages

Friday, September 05, 2014

Sankshepa Sundara Kaandam



"சுந்தரகாண்டம்" 

ஸ்ரீ ராம பக்தர்களுக்கு மட்டும் அல்லாமல் எல்லோருக்கும் பிடித்த ஒரு இனிய, எளிய வரப்பிரசாதம். 

இது நம் வாழ்க்கையில் ஏற்படும் எல்லா விதமான சங்கடங்களையும் போக்கவல்லது.

இதனை நித்தமும் பாராயணம் செய்து வாழ்வில் எல்லா செல்வங்களையும், நிம்மதியையும்  அடைந்து பயன் பெற்றவர்கள் கோடி.

நேரமின்மையால், நித்தமும் பாராயணம் செய்ய முடியாதவர்கள், தினம் ஒரு தடவை இந்த ஸ்லோகத்தை கேட்டால் நன்மைகள் பல உண்டாகும் என்பதை அனுபவத்தில் உணரலாம். (கீழே கொடுத்திருக்கும் வீடியோ லிங்க்கை க்ளிக் செய்யவும்)  

 http://youtu.be/y5BQuwvsF9M


பாராயணம் செய்ய:












Saturday, March 08, 2014

திருப்தியா

அமுதனார் என்பவர் திருவரங்கத்துக் கோயில் அதிகாரி.  கோயில் சாவிகள் அவரிடம் இருந்தன.  திருவரங்கம் வந்தார் ராமானுஜர்.  ஊர் மக்கள் எல்லோரும் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.  ஆனால் அமுதனார் கோயிலை அவரிடம்  ஒப்படைக்கவில்லை.  திருக்கோயிலை யாரிடமும் தர மனமில்லாதவராய் இருந்தார்.  யாரும் அமுதனாரிடம் சென்று சாவிகளைத் தரும்படி சொல்லவும் முடியவில்லை.
இந்த நிலையில் அமுதனாரின் அம்மா ராமானுஜரிடம் மிகுந்த பக்தி கொண்டார்.  அந்த அம்மையார் இறக்கும் போது “என் ஈமச் சடங்குகளில் ராமானுஜருடைய சீடர்களுக்குக் கால் அலம்பிச் சாதம் போடு, அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்” என்று சொல்லிக் கண் மூடிவிட்டார்.
எனவே, அமுதனாரும் ராமானுஜரிடம் அவருடைய சீடர்களை அனுப்பும்படி வேண்டினார்.  ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்.  சிரார்த்தங்களில் பிராமணர்கள் உணவு உண்டபின் “திருப்தியா”? என்று சிரார்த்தம் செய்பவர் கேட்பார்.  பிராமணார்த்தமாகச் சாப்பிட்டவர் “திருப்தி” என்று பதில் சொன்னாலே சிரார்த்தம் பலிதமாகும், ஆன்மா நிறைவு அடையும் என்பது நம்பிக்கை.
எனவே கூரத்தாழ்வார் சாப்பிட்டு முடித்ததும் அமுதனாரும் வழக்கப்படி, திருப்தியா என்று கேட்க, இல்லை என்றார் கூரத்தாழ்வார்.  இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டார் அமுதனார்.  திருவரங்கத்துத் திருக்கோவிலின் சாவிகள் வேண்டும் என்றார் கூரத்தாழ்வார்.  அமுதனார் மறுக்காமல் சாவிகளை எடுத்து வந்து கூரத்தாழ்வாரிடம் கொடுக்க, அவர் அவற்றைத் தம் குரு ராமானுஜரிடம் கொடுத்து வணங்கினார்.
இவ்வாறு திருவரங்கம் கோயில் ராமானுஜரிடம் வந்தது.

பொன்பரப்பியில் நாதமுனிகள்


பொன்பரப்பியில் நாதமுனிகள்
நாதமுனிகள்  உய்யக் கொண்டாரைத் தம் வாரிசு என நியமித்து அதனை அறிவித்த பின் தம் இல்லப் பணிகளில் மூழ்கினார்.

ஒருநாள் வேடன் ஒருவன் தன் மனைவியையும் குரங்கு ஒன்றையும் கூட்டிக்கொண்டு நாதமுனிகளைத் தேடிக் கொண்டு  வந்தான்.   அவன் முனிவரை சேவித்துச் செல்ல விரும்பி அவருடைய  திருமாளிகை வந்தான். ஆனால், முனிகள் அப்போது ஊரில்  இல்லை.  வேடன் அவரைக் காண முடியாமல் மேற்குப் பக்கம் திரும்பிச் சென்றான்.
அவர்கள் சென்ற சில நேரத்தில் முனிகள் வீடு  திரும்பினார். 

அவருடைய மகள் வேடுவத் தம்பதிகள் வந்து தேடிவிட்டு மேற்குத் திசை நோக்கிச் சென்றுவிட்டதைக் கூறினாள்.  வந்தவன் ராமபிரானே என்று முனிகள் உணர்ந்தார்.   துணுக்குற்று அந்த வேடன் சென்ற திசை நோக்கித் தேடி பொன்பரப்பி எனும் ஊர் வரை போய்   விட்டார்.

வேடுவத்தம்பதிகளைக்  காணவில்லை. யாரும் கண்டதாகக் கூறவும் இல்லை.  அலைந்த களைப்பும், காண முடியவில்லையே என்ற சோர்வும் ஏற்பட்டு மண் மேல் தடாலென மயங்கி  விழுந்தார்.   தலையில் பலமாக அடிபட்டது.

அவரைச் சீடர்கள் இல்லம் கொண்டு வந்தனர்.  இரெண்டொரு நாளாக மயக்கம் தெளியவே இல்லை.  ஏகாதசி அன்று அவருடைய உயிர் பிரிந்தது.

பொன்பரப்பியில் அவரை அடக்கம் செய்வித்தனர்.





UYYAKONDAR’S THANIAN:
நம: பங்கஜ நேத்ராய நாத: ஸ்ரீ பாத பங்கஜே
ந்யஸ்த ஸர்வ பராய அஸ்மத் குல நாதாய தீமதே

விஷ்ணு விநாயகர்

விஷ்ணு விநாயகர்
 
திருமாலின் நரசிம்ஹ அவதாரத்திற்குக் கருத்துரை கூறியவர் விநாயகப் பெருமான்.
காசிப பெருமாளின் இரு மனைவியர்கள் அதிதி – திதி ஆவர்.  திருமாலே தமக்கு மகனாகப் பிறக்க வேண்டும் எனத் திதி பெருந்தவம் புரிந்து வந்தாள்.  அதிதியோ, தேவர்களையும் மூவர்களையும் கூடி வலிமை உள்ள மகனை வேண்டினாள்.  அவள் காசிப முனிவரைக் கூடியதால் இரணியன், இரணியாட்சன் எனும் இரு பிள்ளைகள் பிறந்தார்கள்.
இரணியன் தன்னையே சர்வ வல்லமை படைத்த கடவுளாக அனைவரும் போற்ற வேண்டும் என்று கட்டளை இட்டான்.  சிவபெருமானிடம் இரணியன் சாகாவரம் பெற்றிருந்தான். அவனைச் சாய்க்கும் வழி காணத் திருமால் வன்னி மரத்தடியில் விநாயகரை வழிபாட்டு வந்தார்.
நரசிம்ஹ அவதாரம் விநாயகர் கூறிய வழிதான்.
உயர்திணை, அஹ்ரினை இரண்டாலும் தனக்குச் சாவு வரக்கூடாது என வரம் பெற்றிருந்தான் இரணியன்.  பகலிலும் இரவிலும், உள்ளேயும், வெளியேயும் தனக்குச் சாவு நேரக்கூடாது என வேண்டியிருந்தான். அந்த இரணியனை நரசிம்ஹ அவதாரம் எடுத்துப் பகலும்-இரவும் இல்லாத அந்த நேரத்தில், இருப்பிடத்தில் உள்ளேயும்-வெளியேயும் இல்லாமல், வாயிற்படியில் வானமும்-பூமியும் இல்லாத மடியில், ஆயுதத்தாலும், சசுத்திரத்திரத்தாலும் இல்லாமல் கூரிய நகங்களால் மார்பினைப் பிளந்து குருதியைத் தரையில் சிந்தவிடாமல் உறிஞ்சிக் குடித்து உயிரைக் குடிக்கத் திருமாலுக்கு வழி காட்டியவர் விநாயகர்.

அந்த விநாயகர் விஷ்ணு விநாயகர் எனப்பட்டார்.

RANCHOD RAI - இரண்சோட்ராய்


இரண்சோட்ராய்
தக்கோர் என்னும் டங்காபுரத்தில் கோயில் கொண்டு இருப்பவர் துவாரகையில் உள்ள கண்ணனே ஆவார். இது எப்படி? கண்ணன் மீது பக்தி கொண்ட விஜயசிம்மன் என்பவரும் அவர் மனைவி கங்காபாய் என்பவரும் துவாரகையில் ராமபக்தர் என்று அழைக்கப்பட்ட அவர் ஆண்டுக்கொரு முறை துவாரகை சென்று கண்ணனைத் தொழத் தவறமாட்டார். விஜயசிம்மர் எண்பது வயது ஆன போதிலும் அந்நியமத்தை விடவில்லை.
அவருடைய கனவில் தோன்றி துவாரகநாதன் தன்னை அழைத்துச் செல்லக் கூறினார். இரவில் விஜயசிம்மன் துவாரகை சென்றபோது கருவறைத் திறந்தது. அவர் கண்ணனை எடுத்துக் கொண்டு டங்காபுரம் சென்றார். தம் வீட்டிலேயே எழுந்தருளச் செய்தார்.
துவாரகனாதனிடம் தமக்கு ஏற்பட்ட துன்பத்தை அவர் கூறத் தம்மைப் புஷ்கரணியில் போட்டுவிட்டு அங்கு வரும் வீரர்களுடன் வைகுண்டம் வரச் செய்தார் துவாரகநாதன். ஆனால் விஜயசிம்மரைத் துவாரகை வீரர்கள் குத்திக் கொன்றனர். விஜயசிம்மரின் மனைவி தம் கணவருக்கு ஈமக்கடன் செய்தாள். புஷ்கரணியில் போடப்பட்ட துவாரகநாதன் வெளியே கிளம்ப மறுத்தார். விஜயசிம்மரின் மனைவி கங்காபாயே வெளிக் கொணர்ந்தார்.  வெளி வந்த துவாரகைநாதனைப் பார்த்தால், அவர் திருமேனி எல்லாம் இரத்தக் காயமாக இருந்தது. விஜயசிம்மரைக் குத்திய காயங்கள் எல்லாம் துவாரகைநாதன் உடம்பில் இருந்தன. துவாரகைநாதனின் எடைக்குத் தங்கம் தரச் சொல்லி எல்லோரும் கங்காபாயை வற்புறத்த, மூக்குத்தியைத் தவிர வேறு எதுவுமில்லாமல் போனதால் துலாக்கோலின் ஒருதட்டில் மூக்குத்தியை வைத்து மற்றறொரு தட்டில் துவாரகைநாதனை வைக்க, மூக்குத்தி தட்டு உயர்ந்த்தது. எல்லோரும் பெருமாளை வேண்டினர். இதனால் ஒரு நாளில் ஐந்து நாழிகை மட்டும் துவாரகையில் இருப்பேன், மற்ற நேரமெல்லாம் டங்காபுரத்தில் இருப்பேன் என்றார்.
 
இதனால் அவருக்கு இரண்சோட்ராய் என்ற பெயர் ஏற்பட்டது.

Thursday, November 28, 2013

முதுமையிலும் இனிமையாக வாழ்வது எப்படி?


1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்! அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
நம்மை  படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக, முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, சக்தியை கொடுத்திருக்கிறார்.  கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80% தேவைக்கு அதிகமாக,கல்லீரலில் 60% தேவைக்கு கூடுதலாக!  இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது.
அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்து விடுகிறோம்.  ஆனால் முதுமை அப்படி அல்ல.  "மார்ஜின் ஆப் எர்ரர்" என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்து விடுகிறது.
உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும்.  மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது "மைனர் ஸ்ட்ரோக்" எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும்.  அதனால் தான் சிலர் 5/6 தடவை அழைத்தபின்பு தான் சுதாரித்துக் கொண்டு "என்னையா அழைத்தீர்கள்"? என்று கேட்பார்கள்.  
ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைபாடு நோய் முதுமையில் தென்படும்.  பெண்களுக்கு மாதவிலக்கு நின்று மெனோபாஸ் ஆகும் காலக்கட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும்.  குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும்.  சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது.  மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாக்கி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும்.
60 வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக ஒட்டிக்கொள்ளப் பார்க்கும்.  சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது?  என்பதைவிட, சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது.  ஏன் என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும்.
ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புக்களும் நாம் இளமையாக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்றவைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும். முதுமையில் அந்த இரண்டு உறுப்புக்களின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்து எடுக்கப் படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்து விடும்.  அதனால் தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்க விளைவுகள் சிலருக்கு தோன்றுகிறது.
நோயாளிகளுக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, மிக குறைந்த அளவு, அதிகபட்ச அளவு என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள்.  இதை "தெரபூயிடிக் வின்டோ" என்பார்கள்.  அந்த இடை வெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்க வேண்டும்.  தேவைக்கு அதிகமான டோஸ் கொடுத்துவிட்டால் பக்க விளைவுகள் அதிகரித்துவிடும்.
எல்லா வியாதிகளுக்கும் அறிகுறி உண்டு.  இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கி விடலாம்.  முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது.
சிறுநீர் பாதை அருகில் ப்ரோஸ்டேட் சுரப்பி உள்ளது. முதுமையில் அந்த சுரப்பி வீங்கும்.  அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும்.  முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு.  உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது.  பற்கள் விழுந்து விடுவதால் அவர்களால் மென்று சாப்பிட முடியாது.  அதனால்  பிரச்சினையும், ஜீரணக் கோளாறும் தோன்றுகிறது. புற்று நோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது.  கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ, இருமலில், வாந்தியில் சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிட வேண்டும்.  பெண்களைப் பொறுத்த வரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது.  இது போன்ற ஏராளமான உடல் பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.

கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
  • முதுமையை ஓய்வுக்கான பருவம் என்று நினைத்து முடங்கக் கூடாது. 
  • மனதுக்கும், உடலுக்கும் ஆக்டிவ்வாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும்.  டிவி பார்ப்பது, தூங்குவது போன்று பொழுதை கழித்தால் உடலும் மனதும் சோர்ந்து போகும். 
  • பேரக் குழந்தைகளிடம் தாத்தா, பாட்டி மாதிரி பழகாமல் நட்பாக பழகுங்கள, விளையாடுங்கள், இரவில் அவர்களோடு கதை பேசி தூங்குங்கள்.  
  • புகை, மது பழக்கம் இருந்தால், 50 வயதுக்கு முன்பே விட்டு விடுங்கள்.
  • 55 வயது கடக்கும்போது வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து, நோய்களை தொடக்கத்திலே கண்டறியுங்கள். 
  • முதுமை எல்லோர்ருக்கும் உண்டு என்பதால் இளமையிலேயே மருத்துவ காப்பீடு செய்து விடுங்கள்.  முதுமையில் அதிக நம்பிக்கையை அது உருவாக்கும்.
  • 50 வயது நெருங்கும் முன்பே உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து, உடற்பயிற்சியையும் தொடங்கிவிடுங்கள்.
  • மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
  • பெரும்பாலான முதியோர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, அடிபட்டு படுத்த படுக்கையாகித் தான் மரணத்தை நெருங்குகிறார்கள்.    அதனால் வழுக்காத வகையில், தண்ணீர் தேங்காத வகையில், கைப்பிடியோடு உட்கார்ந்து எழும் வசதியுடன் முதியோர்களுக்கான பாத்ரூமை அமையுங்கள்.  இரவில் அவசரமாக பாத்ரூம் போக, சுவிட்சை தேடித் பிடித்து லைட் போட முடியாது.  அதனால் இரவு முழுவது விளக்கு எரியட்டும்.  
  • தம்பதிகளில் யாராவது ஒருவர் இறந்து, இன்னொருவர் தனிமரம் ஆகும்போது தனிமை அவர்களை கடுமையாக வாட்டும். அதை போக்க அவர்களை, நட்பு, உறவு, ஆன்மிகம், பொழுதுபோக்கில் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
  • ஒவ்வொரு மனிதரும் சம்பாதிக்கும் சொத்து அவர்களது வாரிசுகளுக்குத்தான் போய்  சேர வேண்டும்.  ஆனால் முதுமையை இனிமையாக நீங்கள் கடக்க வேண்டும் என்றால் உங்கள் பெயருக்கு சொத்துக்களையும், பணத்தையும் வைத்துக் கொள்ளுங்கள்.  இதில் வாரிசுகளின் கவலை, கண்ணீர், நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து விடாதீர்கள். 
  • முதுமை இயற்கை தரும் சாபம் அல்ல; வரம்!  அதனால் அதை மனதார ஏற்று, நட்போடு கைகோர்த்துக் கொண்டால் மீதமுள்ள நாட்களிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.
                          "வாழ்க வளமுடன்"