Pages

Saturday, March 08, 2014

திருப்தியா

அமுதனார் என்பவர் திருவரங்கத்துக் கோயில் அதிகாரி.  கோயில் சாவிகள் அவரிடம் இருந்தன.  திருவரங்கம் வந்தார் ராமானுஜர்.  ஊர் மக்கள் எல்லோரும் அவரைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர்.  ஆனால் அமுதனார் கோயிலை அவரிடம்  ஒப்படைக்கவில்லை.  திருக்கோயிலை யாரிடமும் தர மனமில்லாதவராய் இருந்தார்.  யாரும் அமுதனாரிடம் சென்று சாவிகளைத் தரும்படி சொல்லவும் முடியவில்லை.
இந்த நிலையில் அமுதனாரின் அம்மா ராமானுஜரிடம் மிகுந்த பக்தி கொண்டார்.  அந்த அம்மையார் இறக்கும் போது “என் ஈமச் சடங்குகளில் ராமானுஜருடைய சீடர்களுக்குக் கால் அலம்பிச் சாதம் போடு, அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும்” என்று சொல்லிக் கண் மூடிவிட்டார்.
எனவே, அமுதனாரும் ராமானுஜரிடம் அவருடைய சீடர்களை அனுப்பும்படி வேண்டினார்.  ராமானுஜரின் சீடர் கூரத்தாழ்வார் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொண்டார்.  சிரார்த்தங்களில் பிராமணர்கள் உணவு உண்டபின் “திருப்தியா”? என்று சிரார்த்தம் செய்பவர் கேட்பார்.  பிராமணார்த்தமாகச் சாப்பிட்டவர் “திருப்தி” என்று பதில் சொன்னாலே சிரார்த்தம் பலிதமாகும், ஆன்மா நிறைவு அடையும் என்பது நம்பிக்கை.
எனவே கூரத்தாழ்வார் சாப்பிட்டு முடித்ததும் அமுதனாரும் வழக்கப்படி, திருப்தியா என்று கேட்க, இல்லை என்றார் கூரத்தாழ்வார்.  இன்னும் என்ன வேண்டும் என்று கேட்டார் அமுதனார்.  திருவரங்கத்துத் திருக்கோவிலின் சாவிகள் வேண்டும் என்றார் கூரத்தாழ்வார்.  அமுதனார் மறுக்காமல் சாவிகளை எடுத்து வந்து கூரத்தாழ்வாரிடம் கொடுக்க, அவர் அவற்றைத் தம் குரு ராமானுஜரிடம் கொடுத்து வணங்கினார்.
இவ்வாறு திருவரங்கம் கோயில் ராமானுஜரிடம் வந்தது.

No comments:

Post a Comment