ஆண்டுதோறும் திருவிசநல்லூர் ஐயாவாள் இல்லக் கேணியில், இன்றும் கங்கை பொங்கி வருவதைக் காணலாம்; நீராடலாம்.
கர்நாடக சமஸ்தானத்தில் திவானாகப் பணி புரிந்தவர் ஸ்ரீதர ஐயாவாள்.
இவர் தன் பதவி, சொத்துக்களைத் துறந்துவிட்டு தமிழக காவிரிக் கரையிலுள்ள திருவிசநல்லூரில் குடியமர்ந்துவிட்டார். தினமும் அருகேயுள்ள மத்யார்ஜூனமான திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரரை தரிசிப்பார்.
அர்த்தஜாம பூஜையும் காண்பார்.
சிவன்மேல் அபார பக்தி கொண்டவர்.
இவரது தந்தையார் மறைந்த திதி கார்த்திகை மாதத்தில் வரும்.
அத்தகைய ஒருநாளில் இவர் பிராமணர்களுக்கு சிரார்த்த சமையல் தயார்செய்ய ஏற்பாடு செய்துவிட்டு, காவிரியில் நீராடச்சென்றார்.
நீராடி இல்லம் திரும்பும்போது எதிரேவந்த வயதான ஏழை ஐயாவாளிடம், "சுவாமி, ரொம்ப பசிக்கிறது. ஏதாவது கொடுங்களேன் " என கேட்டார்.
அவர்மீது இரக்கம் கொண்ட ஐயா அவரை இல்லத்திற்கு அழைத்து வந்தபோது சிரார்த்த சமையல் மட்டுமே தயாராக இருந்தது.
பசி மயக்கத்தில் இருந்த ஏழைக்கு சிரார்த்த சமையல் உணவைக்கொடுத்து பசியாற்றினார்.
சிரார்த்த சமையலை திதி கொடுக்கும் அந்தணர்கள் மட்டுமே உண்ண வேண்டும்.
மீதம் உள்ளதை பசுவுக்குத்தான் தருவார்கள்.
அந்த நியதியை மீறினார் ஐயாவாள்.
அதனால் கோபமடைந்த அந்தணர்கள் வெளியேறி
"பரிகாரம் செய்தால் தான் நாங்கள் திதி கொடுப்போம்" என்றனர்
' ஒரேநாளில் காசியிலுள்ள கங்கையில் நீராடி விட்டு வா 'என்பதுதான் அவர்கள் சொன்ன பரிகாரம்.
ஒரேநாளில் எப்படி அவ்வளவு தூரத்திலுள்ள காசி சென்று கங்கையில் நீராடிவிட்டு அன்றே திரும்பமுடியும்?
இதை நினைத்து வருத்தத்துடன் படுத்தவர் அசதியில் உறங்க, கனவில் சிவன் காட்சி கொடுத்து, உன் இல்லக் கேணியில் நாளை கங்கையைப் பிரவேசிக்கச் செய்வேன் என உறுதியளித்து மறைந்தார்.
இக்கனவை ஐயா எல்லாரிடமும் சொன்னார்.
கார்த்திகை மாத அமாவாசை.
ஊரே திரண்டு ஐயா வீட்டுமுன் கூடிவிட்டது.
ஐயாவாள் கிணற்றடியில் நின்றபடி மனம் உருக கங்காஷ்டகம் பாடினார்.
ஐந்தாம் பாடல் பாடியவுடன் கேணியில் கங்கை பொங்கி வழிந்து,
திருவிச நல்லூர் சாலை முழுவதும் வெள்ளமாய்ப் பாய்ந்தோடினாள்!
அந்தணர்கள் ஐயாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு கங்கை நீராடினார்கள்.
இன்றளவும் கார்த்திகை அமாவாசையன்று,
300 ஆண்டுகளுக்குமுன் கங்கை பொங்கி வந்தது போல, ஐயாவாள் இல்லக் கேணியில் நீர் பொங்கி வருவதைக் காணலாம். நீராடலாம்.
கார்த்திகை மாதம் பத்து நாள் விழா நடக்கும்.
பத்தாம் நாள் கார்த்திகை அமாவாசையன்று காலை கிணற்றுக்கு பூஜை செய்வார்கள்.
முதலில் வேத விற்பன்னர்கள் நீராடியபின் பக்தர்கள் நீராடுவார்கள்.
அன்று முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் நீராடினாலும், கிணற்று நீர் குறையாமலேயே இருப்பது அதிசயம்!
No comments:
Post a Comment