ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்தின் அதிபர் சிவகணேஷ் அவர்களை சந்திக்க இரவு 10.30 மணிக்கு அவரின் ஜவுளி சாம்ராஜ்ஜியத்திற்கு சென்றிருந்தோம்.
தீபாவளி சமயம் என்பதால் மிக பிஸியாக காணப்பட்டார். ஒருவழியாய் பணிகளை முடித்து இரவு 11.30க்கு நம்மோடு பேசத் தொடங்கினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் பேசியிருப்போம்.
கோவை நகரில் இருந்து தொலைதூர புறநகர் பகுதியான நரசிபுரத்தில் இருக்கும் அவரின் கோசாலைக்கு செல்ல தற்போது தார்சாலை வசதி உள்ளது. ஆனால் ஐந்தாறு ஆண்டுகள் முன்பு வெறும் மண்சாலைதான். சிவகணேஷ் அவர்கள் நகரில் இருக்கும் தன் ஜவுளிக்கடை பணிகளை முடித்துவிட்டு இரவு 11 மணிக்கு 30 கிலோமீட்டர் பயனித்து நரசிபுரம் கோசாலை பணிகளை பார்வையிட புறப்படுவாராம். நள்ளிரவு வரை மாடுகளின் நலனை பார்வையிட்டு விட்டுதான் வீடு திரும்புவாராம்.
பசுக்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர். கொல்லப்பட இருந்த பசுக்களை மீட்பதற்கு இவர் சந்தித்த சவால்களையும், எதிர்கொண்ட வழக்குகளையும் விவரிக்க ஒரு திரைப்படமே எடுக்கலாம். இத்தனை அசாத்தியமான செயலை சாதித்துள்ள சிவகணேஷ் அவர்களை, இது குறித்து கேட்ட போது...."நான் என்ன செய்தேன் ? எல்லாம் அந்த வெள்ளியங்கிரி ஆண்டவன் போட்ட பிச்சை" என்கிறார். தன்னுடைய ஆசானாக சத்திரபதி சிவாஜி மகாராஜை கருதுகிறார் கர்மயோகி சிவகணேஷ். அடுத்த ஜென்மத்தில் கால பைரவராக பிறப்பெடுத்து அதர்மத்தை வேரறுக்க வேண்டும் என்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் பகிர்ந்த பலவற்றை பொதுவெளியில் பகிர்ந்திட இயலாது.
வெள்ளியங்கரி ஆண்டவர் மீது அத்தனை பக்தி. அவர்தான் எனக்கு அம்மா, அப்பா, நண்பன் ஏன் மகன் கூட என்கிறார். காசிக்கு கிட்டத்தட்ட இருநூறு முறை சென்று வந்து விட்டாராம்.
கிட்டத்தட்ட மூவாயிரம் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கின்றார்.
இத்தனை அசாத்தியமான செயலை புரிந்து வரும் தனியொருவன் சிவகணேஷ் அவர்களை, அவரின் மிகப்பெரும் ஜவுளிக்கடையில் மிக எளிமையான ஒரு கடைநிலை ஊழியராகதான் நாம் பார்க்க இயலும். அத்தனை எளிமை. அதுவும் செயற்கைதன்மை இல்லாத இயல்பான எளிமை.
மிக ஏழ்மையான இளமைப் பருவத்தை கடந்து வந்தவர். சிறுவயதில் அவரின் வீடு மழை பெய்தால் ஒழுக வேக வேகமாய் சென்று பாத்திரம் எடுத்து வந்து வைப்பார்களாம். நேர்மையாலும், கடின உழைப்பாலும் மேலே வந்தவர். இன்றும் கூட தன் சட்டை அழுக்காகாமல் வீடு திரும்புவதில்லை அந்த கர்ம யோகி.
இதில் ஹைலைட் என்னவென்றால், பளபளக்கும் அதிநவீன 75000 சதுர அடி பரப்பளவில் உள்ள ஸ்ரீதேவி டெக்ஸ்டைல்ஸ் வளாகத்தின் உரிமையாளர் சிவகணேஷ் வசிப்பது பசுக்களோடு பசுக்களாக, ஷீட் போட்ட ஒரு கொட்டகையில் தான். பல்லாயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு விதவிதமான புத்தாடைகளை விற்பனை செய்பவர், தன் அறையில் அணிவதற்கு பயன்படுத்துவது ஒரு சில காவி வேட்டிகளைதான். அவரின் சாதாரண இரும்பு கட்டிலை சுற்றியும் பசுக்கள்தான் அமர்ந்திருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால் வாங்க என் பேலஸுக்கு என்று அவர் கூட்டிப் போனதுதான்.
துறவிகளும், மகான்களும், பற்றற்ற துறவு நிலையில் எங்கோ இமயமலையில் மட்டும் வசிப்பது இல்லை. நம்மோடு ஒருவராகவும் வாழ்கிறார்கள் என்பதற்கு கர்மயோகி சிவகணேஷ் அவர்கள் ஒரு சிறந்த உதாரணம்.
அவரின் கோசாலை குறித்து விரிவாக பார்க்க விரும்பினால்
கீழ்கண்ட வீடியோவை பார்க்கவும்.
https://youtu.be/X7Lw0Dha9b0
சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
No comments:
Post a Comment