Pages

Tuesday, July 12, 2022

சிவகாமியின் செல்வன் 06

ஆகஸ்ட் போராட்டத்துக்கு முன் இந்தியாவுக்கு வந்த க்ரிப்ஸ் மிஷன் இந்தியத் தலைவர்களுடன் பேசி ஓர் உடன்பாட்டுக்கு வர எண்ணினார்கள்.  அந்த தூது கோஷ்டியின் முயற்சி வெற்றி பெறாததால், அவர்கள் தோல்வியுடன் திரும்பி சென்றார்கள்.  இந்த நேரத்தில்தான் ராஜாஜி முஸ்லீம் லீகின் பாகிஸ்தான் கோரிக்கையை ஒப்புக் கொள்ளலாம் என்றும், அவர்களையும் சேர்த்துக் கொண்டு தேசிய சர்க்கார் அமைக்கலாம் என்றும் ஒரு யோசனையை வெளியிட்டார்.  இந்த யோசனையைக் காங்கிரஸ் காரியக் கமிட்டீ ஏற்று கொள்ளவில்லை.  இதனால் ராஜாஜி காங்கிரஸிலிருந்து விலகித் தனி மனிதராக நின்று தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தைக் தொடங்கினார்.

இதற்குப் பிறகுதான் பம்பாயில் கூடிய காங்கிரஸ் காரியக் கமிட்டி அடுத்தாற்போல் காங்கிரசின் போராட்டம் எப்படி அமைய வேண்டும் என்பது பற்றி ஆலோசித்தது.  இந்த சரித்திர புகழ் வாய்ந்த கூட்டத்துக்கு நாட்டின் எல்லாத் திசைகளில் இருந்தும் காங்கிரஸ் தலைவர்களும், பிரமுகர்களும், தொண்டர்களும் போயிருந்தார்கள்.  

ஆகஸ்ட் 8 அன்று பம்பாய் நகரமே அல்லோல கல்லோலப்பட்டது.  காந்திஜி, படேல், நேருஜி போன்ற பெருந்தலைவர்கள் என்ன சொல்லப் போகிறார்கள் என்பதை நாட்டு மக்கள் எல்லோரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து தலைவர் சத்தியமூர்த்தி, காமராஜ், பக்தவச்சலம் முதலானோர் போயிருந்தார்கள்.

வெள்ளையரே, வெளியேறுங்கள், என்று பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து மஹாத்மா குரல் கொடுத்தார்.  அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் அப்படியே தீர்மானம் நிறைவேற்றியது.

அவ்வளவுதான் மறுநாளே, காந்தி, நேரு போன்ற பெருந்தலைவர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டார்கள்.  இதற்குள் யார் யாரை எங்கெங்கே கைது செய்ய வேண்டும் என்று பிரிட்டிஷ் ஆட்சி ஒரு பட்டியலை தயாரித்து வைத்திருந்தது. 

பம்பாய் கூட்டம் முடிந்து ரயில் ஏறி ஊருக்கு திரும்புவதற்குளளாகவே பல காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள்.  தமிழ் நாட்டில் இருந்து போன சத்திய மூர்த்தி முதலானவர்களும் கைது செய்யப்பட்டார்கள்.

உங்களை எப்ப கைது செய்தாங்க என்று காமராஜரைக் கேட்டேன்.

நான், முத்துராங்க முதலியார், பக்தவத்சலம், கோபாலரெட்டி எல்லோரும் ரயிலில் வந்துக்கிட்டிருந்தோம்.  எனக்கு ஒரு சந்தேகம்.  வழியிலேயே எங்காவது எஎன்னைப் பிடிச்சுடுவாங்களோன்னு.  ஜெயிலுக்குப் போறதுக்கு முன்னாலே தமிழ் நாடு பூராவும் சுற்றிப் போராட்டத்தை எப்படி நடத்தணும்கிறதை பற்றி அங்கங்கே உள்ளூர் காங்கிரஸ்காரங்கக்கிட்டே பேசிடனும்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே அரெஸ்ட் ஆயிடக்கூடாதுங்கிறது என்னுடைய பிளான். 

சஞ்சீவ ரெட்டியுடன் குண்டக்கல் வரைக்கும் போய், அங்கிருந்து பெங்களூர் மார்க்கமா ஆந்திராவுக்குப் போய், சஞ்சீவ ரெட்டியோடு 2/3 நாட்கள் தங்கி, சரியானபடி திட்டம் போட்டு, அப்புறம் தமிழ் நாட்டுக்கு வரணும்னு முதல்லே நினைச்சேன்.  ரெட்டியும் அவங்க ஊருக்கு வரச் சொல்லிக் கூப்பிட்டாரு.  ஆனா எனக்கு ஒரு சந்தேகம், இந்த நிலையிலே சஞ்சீவ ரெட்டியை பாதி வழியிலேயே கைது பண்ணிடுவாங்க.  அப்ப என்னையும் போலீஸ் சும்மா விடாதுன்னு.

சரி நீங்க போங்க, நான் தமிழ் நாட்டுக்கே போயிடுறேன்னு சஞ்சீவ ரெட்டி  கிட்டே சொல்லிட்டு, அரக்க்கோணம் வரை வந்துட்டேன்.  அரக்கோணத்தில் எட்டிப் பார்த்தா பிளாட்பாரம் பூரா ஒரே போலீசாயிருந்தது.  வந்தது வரட்டும்னு தைரியமா பிளாட்பாரத்தில் இறங்கி நடந்தேன்.  நல்லவேளையா என்னை யாரும் கைது செய்யல்லே.  அவங்க லிஸ்டில் என்பேரு இருந்ததா, இல்லையான்னும் தெரியலை.  மளமளன்னு ஸ்டேஷனுக்கு வெளியே போய்  ஒரு வண்டியை பிடிச்சு சோளங்கிபுரம் போயிட்டேன்.  

அங்கே எதுக்குப் போனீங்க ?  அங்கே ஓட்டல் தேவராஜய்யங்கார்னு ஒரு காங்கிரஸ்காரர் இருந்தார். அவருக்கு 2 பிள்ளைங்க.  ஒருத்தர் ஏதோ சினிமா தியேட்டரோ, கம்பெனியோ நடத்திகிட்டுருக்கார்னு கேள்வி.  அவர் ஓட்டல்லே சாப்பிட்டுவிட்டு கார் மூலமா அன்னைக்கே ராணிப்பேட்டை போயிட்டேன்.  ராத்திரி 10 மணியிருக்கும்.  கல்யாணராமைய்யார் வீட்டுக்குப்போய் கதவை தட்டினேன்.  அவர் கதவை திறக்கல்லே.  அவருக்கு பயம், போலீசார் தன்னை கைது செய்ய வைத்திருப்பாங்கன்னு.  என் குரலைக் கேட்டப்புறம் தான் மெதுவாக கதவை திறந்து எட்டிப் பார்த்தார்.  அந்த நேரத்தில் என்னைக் கண்டது அவருக்கு ஆச்சரியமா போய்டுச்சு.

சரி நீங்க இங்கே தங்கினால் ஆபத்து.  போலீசார் கண்டு பிடித்து விடுவார்கள்.  வாங்க இன்னொரு இடம் இருக்குன்னு சொல்லி ராணிப்பேட்டைக்கு வெளியே ஒரு மைல்  தள்ளி ஒரு காலி வீட்டுக்கு அழைச்சிட்டுப் போனார்.  அது ஒரு முஸ்லீம் நண்பருக்கு சொந்தம்.  அந்த வீட்டிலேயே ராத்திரி படுத்து தூங்கினேன். மறுநாள் பகலிலே கல்யாணராமைய்யரிடம் பேசிட்டு இருக்கிறப்போ கொஞ்ச தூரத்தில்  யாரோ ஒரு சப்இன்ஸ்பெக்டர் வர மாதிரி தெரிஞ்சுது. சப்ன்ஸ்பெக்டரை கண்டதும் கல்யாணராமைய்யருக்கு மறுபடியும் பயம் வந்துட்டுது.  

சரி கைது செய்யத்தான் வர்றாங்க, இனி தப்ப முடியாது, இப்ப என்ன செய்யலாம் என்று என்னைக் கேட்டார். வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிட்டு நான் உள்ளே போய்  படுத்துட்டேன்.

வந்தவர் வீட்டை சுற்றிப் பார்த்துவிட்டு இந்த இடம் போதாது, அவ்வளவு வசதியாயும் இல்லை. டி.ஸ்.பி. வர்றார். அவருக்கு தங்கறதுக்கு இந்த இடம் பார்க்கத்தான் வந்தேன்னு சொல்லிட்டு போயிட்டார்.  அப்புறந்தான் கல்யாணராமைய்யருக்கு மூச்சு வந்தது.

அன்று மாலையே நானும் கல்யாணராமரும் கண்ணமங்கலம் ஸ்டேஷனுக்குப் போய் ரயிலேறிட்டோம்.  அங்கிருந்து வேலூர், தஞ்சாவூர், திருச்சி, மதுரை வரைக்கும் போலீசார் கண்ணில் அகப்படாமலேயே போயிட்டோம்.  அங்கங்கே பார்க்க வேண்டியவர்களை பார்த்து, சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிட்டேன்.  மதுரையில் குமாரசாமி ராஜாவை பார்த்துப் பேசினேன்.  அப்ப அவர் ஜில்லா போர்ட் ப்ரசிடெண்டாயிருந்தார்.  ஆனா மூவ்மெண்ட்லே அவ்வளவு தீவிரமா ஈடுபடல்லே. மதுரையில் என் வேலை முடிஞ்சதும் திருநெல்வேலி, ராமநாதபுரம் போயிட்டு அங்கிருந்து விருதுநகருக்கு போய்  அம்மாவைப் பார்த்துட்டு கடைசியா மெட்றாசுக்கு போயிடலாம்னு நினச்சேன்.  இதற்கிடையில், போலீஸ்காரங்க அரியலூருக்கு போய்  என்னை தேடிகிட்டு இருந்தாங்க. அப்ப காங்கிரஸ் மகாநாடு ஒன்று அங்கே ரகசியமா நடக்கப் போவதாய் போலீசுக்கு தகவல் கிடைச்சிருக்கு.  நான் எப்படியும் அங்கே வருவேன் பிடிச்சுடலாம்னு போலீசார் அங்கே போய்  உஷாரா காத்துக்கிட்டுருந்தாங்க.  நான் எல்லா இடத்துக்கும் போயிட்டு கடைசியா விருதுநகருக்குப் பக்கத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு போய்  சேர்ந்தேன்.  அங்கே ராமச்சந்திர ரெட்டியாரைப் பார்த்து அவர் வண்டியிலே விருதுநகருக்கு போனேன்.

வண்டியிலே எதுக்குப் போனீங்க? விருதுநகரிலே எங்க வீட்டுக்கு போற வழியிலே தான் போலீஸ் ஸ்டேஷன் இருக்குது. அந்த தெரு வழியில் போனால் போலீஸ்காரங்க பாத்துடுவாங்களேன்னு வண்டியிலே போனேன்.  அம்மாவைப் பாத்தீங்களா? ஆமாம், ராத்திரியிலே வீட்டிலே தான் இருந்தேன். அதுக்குள்ளே போலீசுக்கு எப்படியோ தகவல் தெரிஞ்சுடுத்து. அதனாலே, நான் வீட்டிலே தான் இருக்கேன், என்னை அரெஸ்ட் பண்ணுறதாயிருந்தால் அரெஸ்ட் பண்ணலாம்னு போலீசுக்கு சொல்லி அனுப்பிட்டேன்.  அப்புறம் என்னை அரெஸ்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. 

ஜெயில்லேயிருந்து எப்போ வெளியே வந்தீங்க?  3 வருஷம் கழிச்சு 1945 ஜூலை மாசம் வந்தேன்.  அதுவரைக்கும் நீங்கதான் தமிழ்நாட்டுக்கு காங்கிரஸ் ப்ரெசிடெண்டா? 

ஆமாம், எல்லோருமே ஜெயிலுக்குப் போயிட்டாங்க. காங்கிரசுக்கு சர்க்கார்லே வேறே தடை போட்டிருந்தாங்க.  ராஜாஜி காங்கிரசிலிருந்து விலகிப் பாகிஸ்தான் பிரசாரம் செய்துக்கிட்டிருந்தார். இதனாலே அவர் பேரில் காங்கிரஸ்காரர்களுக்கு அதிருப்தி ஏற்பட்டு, ராஜாஜி எதிர்ப்பு கோஷ்டின்னு ஒண்ணு தமிழ்நாட்டிலே பலாமா வளர்ந்துவிட்டது.

காந்திஜி தமிழ்நாட்டில் சுற்று பயணம் செய்துட்டு போறப்போ ராஜாஜிக்கு எதிரா இருந்தவங்களைக் கிளிக் என்று சொன்னாரே அது அப்பத்தானே ?  ஆமாம், ஹரிஜன் பத்திரியிலே அப்படி எழுதினார்.  நான் அதை ஆட்சேபித்து அறிக்கை விட்டேன். காந்திஜி அப்படி சொன்னது தப்புன்னு சர்வோதயம் ஜகந்நாதன் மதுரைக் கோயில்லே போய்  உட்கார்ந்துகிட்டு உண்ணாவிரதம் இருந்தார்.

காந்திஜி சொல்லிட்டாரே அதை எப்படிக் கண்டிக்கிறதுன்னு நான் பயப்படல.  இதே மாதிரி படேலுடன் கூட ஒரு சமயம் சண்டை போட்டிருக்கேன்.  1945ல் மத்திய அசெம்பிளிக்கு யார் யாரைப் போடணும் என்பதில் எனக்கும் படேலுக்கும் தகராறு வந்தது.  மைனாரிட்டி வகுப்பிலிருந்து யாராவது ஒருத்தரைப் போடலாம்னு நான் சொன்னேன்.  தூத்துக்குடி பால் அப்பாசாமிங்கிறவரைப் போடலாம், கிறிஸ்துவராயும் இருக்கிறார், படிச்சவராயும் இருக்கார்னு சொன்னேன்.  அவருக்கு வயசாயிட்டுதுன்னு சொல்லி மறுத்துட்டார் படேல்.  அவருக்கு பதிலா மாசிலாமணி என்பவரை ஏன் போடக்கூடாதுன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு உடல்நலம் சரியில்லை, அவர் வேண்டாம்னு நான் சொன்னேன். 

என்ன உடம்புன்னு என்னைக் கேட்டார்.  அவருக்கு லெப்ரசி இருக்குதுன்னு சொன்னேன்.  படேல் நம்பல்லே.  நான் பிடிவாதமாயிருந்தேன்.  நான் சொல்றதிலே உங்களுக்கு சந்தேகம் இருந்தால் மெடிக்கல் ரிப்போர்ட் மூலமா செக் பண்ணிக்கலாம்னு சொன்னேன்.  அப்புறம் தான் மாசிலாமணி பெரி அடிப்பட்டுப் போச்சு.  அம்மு சுவாமிநாதனை போட்டாங்க.  எண்ணெய் படேல் நேரில் வராகி சொல்லி போன் பண்ணினார்.  நான் அப்பா பம்பாயில் தான் இருந்தேன்.  லிஸ்டை முடிவு செய்யுங்க, அதுக்கப்புறம் நான் வந்து சந்திக்கிறேன்னு சொல்லிட்டேன்.

(தொடரும்)






















 









No comments:

Post a Comment