Pages

Tuesday, July 26, 2022

சிவகாமியின் செல்வன் 07

இந்தி பிரசாரசபை வெள்ளி விழாவில் கலந்து கொள்ள 1946ம் ஆண்டு காந்திஜி தமிழ்நாட்டுக்கு வந்தார்.  அவர் ஒரு வார காலம் தியாகராய நகரில் தங்கி இருந்தபோது அவரை காண லட்சக்கணக்கான மக்கள் தமிழ் நாட்டில் மூலை முடுக்குகளில் இருந்தெல்லாம் வந்து கூடியிருந்தார்கள்.  ஆகஸ்ட் போராட்டத்துக்கு பின் காந்திஜியின் புகழும் காங்கிரசின் செல்வாக்கும் நாட்டு மக்களிடையே பெரும் அளவில் ஓங்கியிருந்தது. அப்போது காமராஜ்தான் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர்.  ஆனாலும் காந்திஜி எப்போது வருகிறார், எந்த ஸ்டேஷனில் அவரை சந்தித்து வரவேற்பு அளிக்க வேண்டும் என்பதெல்லாம் காமராஜுக்கு தெரியவில்லை.  எல்லா ஏற்பாடுகளும் போலிஸாருக்கு மட்டுமே தெரிந்திருந்தன.

எல்லா விவரங்களையும் போலீசார் மூடு மந்திரமாகவே வைத்திருந்தார்கள்.  ராஜாஜி, கோபாலசுவாமி அய்யங்கார், இந்தி பிரசார சபா காரியதரிசி சத்திய நாராயணன் போன்ற ஒரு சில முக்கிய தலைவர்களுக்கு மட்டுமே விவரம் தெரிந்திருந்தது.  தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் என்ற முறையில் மகாத்மாஜியை நேரில் சென்று வரவேற்கும் பொறுப்பு காமராஜிடம் இருந்தது.  ஆனாலும் ஆருக்கு எந்த விவகாரமும் தெரியாததால் நேராக இந்தி பிரசார சபைக்கு போய் விசாரித்தார்.

ராஜாஜி முதலியவர்கள் ஏற்கெனவே காந்திஜியை வரவேற்க புறப்பட்டு போய்விட்டார்கள் என்கிற தகவல் மட்டுமே காமராஜுக்கு கிட்டியது.  இன்னும் கொஞ்சம் நேரத்தில் காந்திஜி வந்து விடுவார்.  அதற்குள் அவர் இறங்கும் ஸ்டேஷனை கண்டுபிடித்து ஆக வேண்டும்.  இதற்கு என்ன செய்வது? காமராஜுக்கு ஒன்றும் புரியவில்லை.

இந்த சமயத்தில் காமராஜின் நண்பரும் பத்திரிக்கை நிருபருமான கணபதி அங்கே வந்து சேர்ந்தார்.  மகாத்மாஜி எந்த ஸ்டேஷனில் ரயிலை விட்டு இறங்க போகிறார் என்கிற ரகசியம் பத்திரிக்கைக்காரர் என்ற முறையில் அவருக்கு தெரிந்திருந்தது.  கணபதி தம்முடைய காரிலேயே காமராஜரை அழைத்துக் கொண்டு அம்பத்தூர் ஸ்டேஷனுக்கு பறந்து சென்றார். அந்த ஸ்டேஷனில்தான் மகாத்மாவை வரவேற்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.  

காந்திஜி ரயிலை விட்டு இறங்கியதும் காங்கிரஸ் தலைவர் காமராஜ் தம் கையேடு கொண்டு போயிருந்த பெரிய மாலையை போட்டு அவரை வரவேற்றார்.  இந்தி பிரசார சபையின் வெள்ளி விழா முடிந்ததும், காந்திஜி பழனிக்கும், மதுரைக்கும் ரயில் மார்க்கமாகவே யாத்திரையாக சென்றார். அந்த பயணத்தின் போது ராஜாஜியும் காமராஜும் போயிருந்தனர்.  காந்திஜியிடம் ராஜாஜிக்கு அதிக செல்வாக்கு இருந்த காரணத்தினாலே என்னவோ காமராஜ் அந்த பயணத்தின் போது சற்று ஒதுங்கியே இருந்தார்.

பழனி ஆண்டவர் சந்நிதியில் கூட ராஜாஜிக்கு, காந்திஜிக்கு தான் பரிவட்டம் கட்டி மரியாதை செய்தார்கள். பழனிமலை படிகளில் எரிக் கொண்டிருந்தபோது காமராஜும் கூடவே சென்றார்.  அப்போது ராஜாஜி காமராஜரை காட்டி, இவர்தான் காமராஜ், காங்கிரஸ் ப்ரெசிடெண்ட் என்று காந்திஜிக்கு அறிமுகப்படுத்தினார்.

காந்திஜி தெரியுமே எனக்கு என்று பதில் கூறினார். மதுரைக்கும், பழனிக்கும்  போய்வந்த பிறகு தான் காந்திஜி கிளிக் (ஒரு சிறு கும்பல்) என்று காமராஜ் குழுவை குறிப்பிட்டார்.  காந்திஜி தங்களை பார்த்து இப்படிச் சொன்னது காமராஜுக்கும் அவரை சேர்ந்த காங்கிரஸ்காரர்களுக்கும் பெரும் வேதனையை அளித்தது.  அதை தொடர்ந்து மதுரையில் ராஜாஜிக்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டமும் கலவரமும் நடந்தன.

காந்திஜியை கண்டிக்கும் வகையில் காமராஜ் ஒரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை வருமாறு:

"ஹரிஜனில் தம் கையெழுத்துடன் எழுதியுள்ள காந்திஜியின் கட்டுரை எனக்கு மிகுந்த திகைப்பை உண்டாக்கியது.  நான் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்.  சட்டப்படி காரிய கமிட்டியை அமைத்தது நான்தான்.  ஆகவே, காந்திஜியின் குறிப்பு எனக்குத்தான் பொருந்த முடியும்.  சென்னையிலும், தமிழ்நாட்டிலும் காந்திஜி போகுமிடங்களுக்கெல்லாம் நானும் போய்க் கொண்டிருந்தேன்.  எப்பொழுதும் அவர் கூப்பிடும் தூரத்தில் தான் நான் இருந்தேன்.  காரியக் கமிட்டி அங்கத்தினர்கள் பலரும் கூடவே இருந்தனர்.  தமிழ் நாட்டு காங்கிரஸ் விவகாரங்கள் பற்றி காந்திஜி இங்கிருந்தபோது எங்களிடம் எதுவும் பேசவில்லை.  அங்கே போனபின் கும்பல் என்ற வார்த்தையை அவர் உபயோகித்துள்ளது எனக்கு மிகுந்த வருத்தத்தை தருகிறது. 

சட்டசபை வேலைத் திட்டம் தேச சுதந்திர போராட்டத்தை பலப்படுத்துவதற்கு ஒரு சாதனம் என்பதை தவிர அதில் எனக்கோ, என் சகாக்களுக்கோ அதிக நம்பிக்கை கிடையாது.  என் நிலையை விளக்கி நான் பல மேடைகளில் பேசியுள்ளேன். எது என்னவாயினும் நான் சட்டசபை வேலைத்திட்டத்தில் எவ்வித பதவியும் பெற ஆசைப்படவில்லை.

காந்திஜியின் கட்டுரைக்குப் பின் பார்லிமெண்டரி போர்டிலிருந்து நான் ராஜினாமா செய்வதை தவிர எனக்கு வேறு வழியில்லை.  ஏனென்றால் இந்த சண்டை முழுவதும் சட்டசபை திட்டத்தால் ஏற்பட்டதுதான்.

டி.எஸ். அவினாசிலிங்கம், சி.என்.  முத்துரங்க முதலியார், ராமசாமி ரெட்டியார், ருக்மிணி லட்சுமிபதி ஆகிய நால்வரும், தாங்களும் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை என்று கருதினார்.  ஆனால் தேர்தலுக்கு முன் நமக்குள்ள அவகாசம் மிக குறுக்கியதாயிருப்பதால் அனைவரும் மொத்தமாக ராஜினாமா செய்ய வேண்டாம் என்று அவர்களை நான் கேட்டுக் கொண்டுள்ளேன்.  என் வேண்டுகோளுக்கு இணங்கி அவர்கள் போர்டில் இருக்க சம்மதித்தனர்.

என்னை பொறுத்தவரை நான் ராஜினாமா செய்வதை தவிர வேறு வழியில்லை.  20 ஆண்டுகளாக நான் விசுவாசத்துடன் பின்பற்றி வந்துள்ள தலைவர் காந்திஜி, அவரிடம் என் பக்தி இன்றும் குறையவில்லை. என்னால் அவருக்கு வருத்தம் ஏற்பட வேண்டிய நிலை வந்ததேயென்ற காரணத்தால் தான் நான், ராஜினாமா செய்ய தீர்மானித்தேன்.  தேசிய போர்டும், மத்திய போர்டும் எந்த முடிவுகளை செய்தாலும் அவற்றை நான் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வேன் என இதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் உறுதி கூறுகிறேன்".  

காமராஜின் அறிக்கையை படித்துப் பார்த்த காந்திஜி மீண்டும் ஹரிஜன் பத்திரிகையில் விளக்கம் எழுதினார்.  கிளிக் என்ற சொல்லுக்கு ஆங்கில அகராதியில் தவறான அர்த்தம் எதுவுமில்லை என்று சமாதானம் கூறி, காமராஜ் தம்முடைய ராஜினாமாவை வாபஸ் வாங்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.  ஆனாலும் காமராஜ் தம்முடைய முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.

அந்த ஆண்டு நடக்கவிருந்த அசெம்பிளி தேர்தலுக்கான பார்லிமெண்டரி போர்டில் காமராஜ் இல்லை.  பார்லிமெண்டரி போர்டார் ராஜாஜியின் உதவியுடன் அபேட்சகர்களை தேர்ந்தெடுத்தார்கள்.  ஆனாலும், சில நாட்களுக்கெல்லாம் சூழ்நிலை சரியில்லை என்பதை அறிந்த ராஜாஜி, தாம் காங்கிரஸ் விவகாரங்கள் எதிலும் கலந்து கொள்ள விரும்பவில்லை என்று அறிக்கை வெளியிட்டு விட்டு விலகிக் கொண்டார். 

அப்போது டாக்டர் வரதராஜுலு நாயுடு காந்திஜிக்கு ஒரு கடிதம் எழுதினார்:

"காந்தி தர்மத்தைப் பரப்புவதிலும், காங்கிரஸ் திட்டங்களை செயல்படுத்துவதிலும் காமராஜ் தென்னாட்டிலேயே முதன்மையானவர்.  அவரைக் குறித்து தாங்கள் தவறாக எழுதியது சரியல்ல.  இதில் தாங்கள் தலையிடாமல் இருப்பது நல்லது என்பதை தங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்." 

உடனே காந்திஜி, நாயுடுவுக்கு பதில் எழுதினார்:

"உங்கள் இஷ்டப்படியே நடந்து கொள்கிறேன்.  இந்த தகராறில் இனி நான் ஈடுபடுவதில்லை" என்பதே அந்த பதில்.

ராஜாஜியை ஒரு சிறு கும்பல் எதிர்ப்பதாக காந்திஜி எழுதியதும், தமிழ் நாட்டில் ஒரு பெரிய கொந்தளிப்பே ஏற்பட்டுவிட்டது.  ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் தோன்றின.

1942ல் அலகாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ராஜாஜி பாகிஸ்தான்  பிரிவினை குறித்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.  அதற்கு சாதகமாக 15 வோட்டுக்களே கிடைத்ததால் தீர்மானம் தோற்று போனது.  இதனால் ராஜாஜி அகில இந்திய காங்கிரஸ் கமிட்டீயில் இருந்தும், காரியாக் கமிட்டியில் இருந்தும் ராஜினாமா செய்து விட்டு தம்முடைய பாகிஸ்தான் பிரசாரத்தாய் சுதந்திரமாக நின்று நடத்தினார்.  ராஜாஜியின் இந்த போக்கு தமிழக காங்கிரசுக்குப் பிடிக்கவில்லை.  அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் போவதாக நோட்டீஸ் கொடுத்தது.  

இந்த சமயத்தில் காந்திஜி ராஜாஜிக்கு ஒரு யோசனை கூறினார்.  காங்கிரஸ் அங்கத்தினர் பதவி, அசெம்பிளி பதவி இரண்டையும் அவர் ராஜினாமா செய்து விட வேண்டும் என்பதே அந்த யோசனை.  காந்திஜியின் யோசனைப்படியே அந்த இரண்டு பதவிகளையும் ராஜினாமா செய்து விட்டு ஆகஸ்ட் போராட்டத்தையும் எதிர்க்க தொடங்கினார் ராஜாஜி.  இவை எல்லாம் தான் காங்கிரஸ்காரர்களுக்கு ராஜியின் மீது கோபம் உண்டாக காரணங்கள் ஆயின.  

இதை தொடர்ந்து 1946ல் தென்னாட்டுக்கு வந்த காந்திஜி கிளிக் என்று சொன்னதும் காங்கிரஸ்காரர்களின் கோபம் எரிமலையாக வெடித்தது.

(தொடரும்)



 







 

No comments:

Post a Comment