Pages

Friday, June 17, 2022

சிவகாமியின் செல்வன் 05

நீங்கள் 1940ல் தமிழ்நாடு காங்கிரசின் தலைவரான பிறகுதானே தனிப்பட்டவர்கள் சத்தியாக்கிரகம் ஆரம்பமாயிற்று.  அப்போது எந்த இடத்தில் சத்தியாக்கிரகம் செய்தீர்கள்.  எப்போது கைது செய்யப்பட்டீர்கள்  என்று காமராஜைக் கேட்டேன்.  

நான் சத்தியாகிரகம் செய்யவில்லை.  அதற்குள்ளாகவே போலீசார் என்னை பாதுகாப்புக்கு கைதியாகக் கைது செய்து சிறைக்குள் கொண்டு போய்விட்டார்கள்.  காந்திஜியின் அனுமதி பெற்றவர்களே சத்தியாக்கிரகம் செய்யலாம் என்பது நிபந்தனை.  எனவே, தமிழ்நாட்டில் சத்தியாக்கிரகம் செய்ய விரும்புகிறவர்கள் லிஸ்ட் ஒன்றைத் தயாரித்து எடுத்துக் கொண்டு நான் காந்திஜியை நேரில் கண்டு பேசுவதற்காகச் சேவாகிராமம் போய்  கொண்டிருந்தேன்.  என்னுடன் நாகராஜனும் வந்து கொண்டிருந்தார்.  

எந்த நாகராஜன்.  அந்தக் காலத்தில் நாகராஜன் எனபர்தான் தங்களுக்கு அரசியல் ஆலோசகராக இருந்தார் என்றும், அவர் சொல்படிதான் நீங்கள் கேட்பீர்கள் என்றும் சொல்வார்களே அந்த நாகராஜனா ?

அதெல்லாம் சும்மா பேச்சு.  என்னோடு அவர் எப்போது சுற்றிக் கொண்டிருப்பார்.  அவரை முதல் முதல் இந்தியா பத்திரிக்கை ஆபீஸிலோ அல்லது வேறு எங்கேயோ சந்த்தித்தேன்.  அவருக்கு என்னிடத்தில் அக்கறையும் அன்பும் இருப்பதை அறிந்து கொண்டேன்.  அதனால் நானும் அவரும் சில விஷயங்ககளை சேர்ந்து ஆலோசிப்பதும் உண்டு.  அவர் எப்போதும் என்னுடன் இருந்தால் அவருடையல் பேச்சை கேட்டுத்தான் நான் எதுவும் செய்கிறேன் என்று அர்த்தமா என்ன என்றார் காமராஜ். 

தங்களை எதற்கு பந்தோபஸ்து கைதியாக்கி வேலூர் சிறைக்கு கொண்டு போனார்கள். அதுவா, அப்ப மெட்றாஸிலே ஆர்தர் ஹோப் என்னும் வெள்ளைக்காரன் கவர்னர் வேலை பார்த்துக்கிட்டிருந்தான்.  யுத்த நிதிக்கு பண வசூல் செய்யறதுக்காக அவன் தமிழ் நாட்டில் சுற்றுப் பயணம் செய்துக்கிட்டிருந்தான்.  நான் அவனுக்கு முன்னாடியே ஊர் ஊராய் போய் யுத்த நிதிக்கு பணம் கொடுக்கக்கூடாதுன்னு பிரசாரம் செய்துட்டு வந்துட்டேன்.  அதனாலே ஹோப்புக்கு பணம் வசூலாகால்லே.  இதுக்கு என்ன காரணம்னு விசாரித்தான் போல இருக்கு.  காரணம் தெரிஞ்சதும் என்னைப் பாதுகாப்பு கைதியாக்கி ஜெயில்லே கொண்டு வைக்கும்படி உத்தரவு போட்டிருக்கான். 

ஹோப்தான் உங்களை அரெஸ்ட் பண்ண சொன்னார்னு உங்களுக்கு எப்படி தெரிஞ்சது.

அப்போ பாத்ரோன்னு ஒரு போலீஸ் ஆபீசர் இருந்தார்.  நல்ல மனுஷன்.  தேச பக்தி உள்ளவர்.  தேச பக்தர்களுக்கு எல்லாம் தன்னால் முடிஞ்ச அளவு உதவி செய்வார்.  அவரை அப்போ ராமநாதபுரம் ஜில்லா சுப்பரின்டெண்ட்டாக மாத்திட்டாங்க.  போற வழியிலே அவர் விருதுநகரில் இறங்கி என் வீட்டுக்குப் போய் என் தாயாரை பார்த்து பேசிவிட்டு அம்மா என்னையும் உங்க மகன்னு நினச்சுக்குங்கம்மான்னு சொல்லிட்டு போனாராம்.  அப்புறந்தான் எனக்கு இந்த சங்கதியெல்லாம் தெரிஞ்சுது.

ஆனந்த விகடனில் அப்போது துணை ஆசிரியராயிருந்த கல்கி, சத்தியாக்கிரகம் செய்யணும்னு உங்ககிட்ட வந்தாரா?

ஆமாம், வந்தார். நல்லா நினைவு இருக்கு.  வாசன் கூட அவருக்கு சத்தியாக்கிரகம் செய்யப் பெர்மிஷன் கொடுக்கல்லேன்னு சொன்னதாக நினைவு.   கல்கியைப் பற்றி உங்க அபிப்பிராயம் என்ன?

நல்ல எழுத்தாளர். அந்த காலத்திலேயே திரு வி. கல்யாணசுந்தர முதலியார் நவசக்தின்னு ஒரு பேப்பர் நடத்திக்கிட்டிருந்தார்.  அதிலேதான் கிருஷ்ணமூர்த்தி எழுத்தை நான் முதல்லே படிச்சேன்.  தேனியோ, தமிழ்த் தேனியோ - ஏதோ ஒரு பேர்லே எழுதுவார்.  ரொம்ப தெளிவா, வேடிக்கையா எழுதுவாக.  ஆனந்த விகடனில் அவர் எழுதிய தலையெங்கமெல்லாம் காங்கிரசுக்கு பெரிய பலம் தேடிக் கொடுத்தது.  ஏ.என்.சிவராமன் கூட என்னோட ஜெயிலிலே இருந்தவர் தான்.  1930ல் அலிபுரம் ஜெயில்லே நான், சிவராமன், சடகோபன், கிருஷ்ணசாமி, வெங்கட்ராமன் எல்லோரும் ஒருபக்கம்.  லாகூர் வழக்கிலே ஈடுபட்டவங்க இன்னொரு பக்கம்.  சிவராமன் பெரிய பெரிய சிக்கலான பிரச்னைகளையெல்லாம் எடுத்து அலசி ஆராய்ந்து கோர்வையா எழுதுவார்.  பாமரர்களை விட படிச்சவங்க அவர் தலையங்கத்தை ரொம்ப விரும்பிப் படிப்பாங்க.  சொக்கலிங்கமும், கல்கியும் பாமரர்களுக்கு புரியும்படி எழுதுவாங்க.

பின்னால் ராஜாஜி வேண்டுமா வேண்டாமா என்று தமிழ் நாட்டிலே ஒரு பெரிய கிளர்ச்சி நடந்ததே.  அப்பா கல்கி தங்களை ரொம்ப தாக்கி எழுதினார், அதை பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

அவருக்கு என் பேரில் உள்ள கோபத்தினால் அப்படி எழுதினாருங்கிறதை விட, ராஜாஜியின் பேரில் உள்ள பக்தியினால் எழுதினாருங்கறதுதான் என் அபிப்பிராயம்.  எப்படி எழுதினாலும் ரொம்ப தெளிவான எழுத்து.  காங்கிரசை வளர்க்கிறதுக்கு அவரும் வாசனும் ரொம்ப உதவி செஞ்சிருக்காங்க.

இப்போ சத்தியமூர்த்தி பவன் இருக்கும் இடத்தில் தான் அப்பா காங்கிரஸ் ஆபீஸ் இருந்தது.  அது 30 வருஷத்துக்கு முன்னாலே தீப்பிடிச்சு எரிஞ்சு போச்சு.  அப்பா காங்கிரஸ் கட்டடட நிதிக்கு பணம் வசூல் செய்ய ஆரம்பிச்சதும் முதல் முதல் வாசன்தான் 10,000/- ரூபாய் கொடுத்தார்.  மொத்தம் 67,000/- ரூபாய் சேர்த்து வச்சிருந்தேன்.  தேனாம்பேட்டையில் இப்ப இருக்கிற காங்கிரஸ் கிரவுண்ட், இந்து சீனிவாசனுக்கு  சொந்தமாயிருந்தது. அவருக்கும் காங்கிரசில் ரொம்ப  பற்றுதல்.  அது 10 ஏக்கர் நிலம்.  அதில் ஒரு பில்டிங்கும் இருந்தது. அந்த இடத்தை அவர் ஆக்க்ஷனில் எடுத்திருந்தார். அந்த விலைக்கே காங்கிரசுக்கு கொடுத்துடுறேன்னு சொன்னார்.  ஆனால் அதை வாங்குவதற்கு 15,000/- குறைஞ்சது. வாசனை போய் பார்த்து விஷ;யத்தை சொல்லி 15,000/- கடனாக கேட்டேன்.  காதும் காதும் வெச்சாப்பல உடனே  ஒரு செக் எழுதி அப்பவே கொடுத்டுட்டார்.  அதுக்கப்புறம் கொஞ்ச நாளைக்கெல்லாம் அந்த கடனை திருப்பி கொடுத்துட்டேன்.  

அவரை ஏன்  எந்த எலெக்ஷனிலும் நீங்க நிற்க வைக்கல்லே.

அவரை நான் பல முறை கேட்டுக்கிட்டேன், அவர் பிடிவாதமா முடியாதுன்னுட்டார்.  கடைசியாக  வற்புறுத்தி, ராஜ்ய சபாவுக்கு போட்டோம்.

பாதுகாப்பு கைதியா எத்தனை மாசம் ஜெயில்லே இருந்தீங்க.

நவம்பர் 1949ல் வெளியில் வந்துட்டேன்.  மொத்தம் எத்தனை மாசம்னு கவனத்தில் இல்லே. 

உங்களை விருதுநகர் முனிசிபல் சேர்மனாக தேர்ந்தெடுத்தது அப்பதானே ?. 

ஆமாம், நான் ஜெயிலில் இருந்து வந்ததும் விருதுநகர் போனேன்.  நான் ஜெயில்லே இருந்தபோது என்னை சேர்மனாக தேர்ந்தெடுத்துட்டாங்க.  நான் போனதும் என்னை கூப்பிட்டு சேர்மன் நாற்காலியில் உட்கார சொன்னாங்க.  நான் கொஞ்ச நேரம் உட்கார்ந்து விட்டு சேர்மன் பதவி எனக்கு வேண்டாம் பார்ட்டி வேலை, கெட்டுப் போய்விடும்.  சேர்மன் வேலை சரியாக செய்ய முடியாது.  எப்பவுமே கட்சி வேலை செய்வதில் தான் பிரியம்.  இந்த கவுரவத்தை எனக்கு கொடுத்ததற்காக உங்களுக்கெல்லாம் ரொம்ப நன்றின்னு சொல்லி ராஜினாமா எழுதிக் கொடுத்துட்டு எழுத்து வந்துட்டேன்.  

ஒரு நாள் கூட பதவியில் இல்லையா?

கொஞ்ச நேரம் தான் இருந்தேன்.  எனக்கு பார்ட்டி முக்கியமா பதவி முக்கியமா?

சத்தியமூர்த்தி உங்களோடு சிறையில் இருந்தாரா?

அம்ரோட்டி ஜெயில்லே இருந்தார்.  ஆகஸ்ட் 1942 போராட்டத்தில் அவரை கைது பண்ணி அமராவதிக்கு கொண்டு போயிட்டாங்க. அப்புறம் நான், திருவண்ணாமலை அண்ணாமலைப்பிள்ளை எல்லோரும் அங்கே போனோம்.  சத்தியமூர்த்திக்கு உடல் நலம் சரியில்லாமல் ஜெயில் ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார்.  அவரைப் பார்க்கணும்னா ஜெயில்லே விடமாட்டாங்க.  அதுக்காக ஏதாவது ஒரு வியாதியை சொல்லிக்கிட்டு அங்கேய் போய்  வருவோம்.  என்ன செய்யறது.  ஏதோ சொல்லிட்டு போய்  சத்தியமூர்த்தியை பார்த்துட்டு வருவோம்.  அம்ரோட்டி ஆஸ்பத்திரியில் அவர் ரொம்ப கஷ்டப்பட்டுக் கிடந்தார்.  வெய்யில் தாங்காது.  ரொம்ப  கடுமை. மண்டை வெடிச்சிடும் போல இருக்கும்.  நானும் அண்ணாமலையும் தொட்டியில் நீரை நிரப்பி தொட்டியிலேயே ராத்திரியெல்லாம் உட்கார்ந்திருப்போம்.  அண்ணாமலைப்பிள்ளை ஏதாவது பாடிக்கிட்டு இருப்பார்.

அவர் நல்ல பாடுவாரா?

சுமாராப்பாடுவார்.  ஏதாவது லாவணி கீவாணி பாடிக்கிட்டிருப்பார், நான் கேட்டுக்கிட்டுருப்பேன்.  என்ன செய்யறது.  ஜெயிலுக்குள்ளே பொழுது போவணுமில்லையா?

பாவம், சிறைத் துன்பங்களோடு பாட்டுக் கேட்கிற கஷ்டம் வேறா என்று எண்ணிக்கொண்டேன் நான்.  

(தொடரும்)



















No comments:

Post a Comment