மகன் கணேஷ் கூட்டிக் கொண்டு போன இடத்தைப் பார்த்ததும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது அலமேலு மாமிக்கு. மனம் இன்பத்தால் திளைத்து பழைய ஞாபகங்களை அசை போட்டது.
பிறந்த வீட்டிலும் வைதீகம்...புகுந்த வீட்டிலும் வைதீகம்..காதுகள் வேத கோஷங்களைக் கேட்டு கேட்டு இனம் புரியா இன்பத்தில் ஆழ்ந்த தருணங்கள் அல்லவா?
கஷ்ட ஜீவனம்தான்...ஆனால்
வத்தக் குழம்பும் குமுட்டியில் சுட்ட அப்பளமும், மிளகு சீரக ரசமும் வாய்க்கு தேவாமிருதமாக இருந்தது...போக வர மாட்டு வண்டி...அழகான அக்ரஹாரம்....இதற்கு மேல் செவிக்கு அமுதமாக வேத கோஷங்கள்...அந்த கிராம வாழ்க்கை போல் வருமா? அந்த இனிமையான நினைவுகள் அடிக்கடி வந்து வந்து போனது அலமேலு மாமிக்கு.
கணவர் சுப்புண்ணி எனப்படும் சுப்ரமணியன் கனபாடிகள்.....உள்ளூரில் அத்தனை சம்பாத்தியம் இல்லை. எதையும் கேட்டு பெற மாட்டார்..கொடுத்ததை வாங்கிக் கொள்வார்..
பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் வைதீக குடும்பமாக அமைந்ததால் தன்னுடைய ஒரே பையன் கணேஷை வேதம் படிக்க அனுப்ப ஆசைப்பட்டாள் அலமேலு.. அதுவும் குழந்தை ருத்திரமும், விஷ்ணு சகஸ்ரநாமமும் அழகாக கணீரென்ற குரலுடன் சொல்வதைக் கேட்க கேட்க அவனை வேதம் படிக்க அனுப்ப வேண்டும் என்ற வெறி அதிகமானது.
ஆனால் சுப்புண்ணி கனபாடிகளுக்கோ அதில் துளியும் இஷ்டம் இல்லை. தான் கஷ்டப்படுவது போல் தன் குழந்தையும் கஷ்டப்படக் கூடாது என்று சொல்லி பள்ளியில் சேர்த்தார்.
"நாமளே இப்படி செய்தால் அப்புறம் வேதம் எப்படி வளரும்?" என்று மன்றாடிக் கேட்டும் பயனில்லை. இதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.
கணேஷும் மிக நன்றாக படித்து மிகப் பெரிய நிறுவனத்தில் அமெரிக்காவில் பணி புரிகிறான். கிராமத்தில் இருந்து காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தாகி விட்டது. கணவரும் சில வருடங்களில் இறந்து போக தனிமையில் சென்னை வாசம்...கிராமத்து நினைவுகள் அடிக்கடி வந்து ஒரு வெறுமை சூழும் அலமேலு மாமிக்கு.
ஆறு மாதம் பையனுடன் அமெரிக்கா வாசம்..ஆறு மாதம் சென்னையில் தனிமை வாசம். அமெரிக்காவில் நல்ல வசதியுடன் பையனும் மாட்டுப் பெண்ணும் வேலை செய்கிறார்கள். இரண்டு குழந்தைகள்...அங்கு எங்கு சென்றாலும் கார் எடுத்துக் கொண்டு செல்வது வாடிக்கை..ஆனாலும் எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டிடங்கள்...கிராமத்தின் அழகிய சூழ்நிலையும், மாட்டு வண்டி பயணமும் அதிலும் குறிப்பாக காதுகளில் பாய்ந்த வேத கோஷங்களும் நினைவுக்கு வந்து மனதை வாட்டும்.
"ஏன் அம்மா ஏதோ பறிகொடுத்தது போல் இருக்கிறீர்கள்? நான் சகல வசதிகளுடன் இருப்பது சந்தோஷம்தானே?" என்று மகன் கேட்கும் போது "குழந்தை நீ சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான்" என்று புன்னகை புரிவாள்.
கடந்த ஆறு மாதமாக அமெரிக்காவுக்கு பிள்ளை அழைக்கவில்லை. ஆனால் பிள்ளை அடிக்கடி ஏதோ வேலை விஷயமாக வந்து போனான்..
இதோ இப்போது பையனும் மாட்டுப்பெண்ணும் வந்து தன்னை அழைத்துக் கொண்டு காட்டிய இடத்தைக் கண்டதும் கண்களில் கண்ணீர். வேத கோஷங்கள் முழங்க சுற்றிலும் பசுமையாக மரம், செடி, கொடிகளுடன் தன்னை வரவேற்ற சுப்ரமணிய கனபாடிகள் வேத பாடசாலையைக் கண்டதும் மகிழ்ச்சி, வியப்பு, அழுகை கலந்த பாவத்துடன் தன் மகனை பெருமையுடன் ஏறிட்டாள் அலமேலு மாமி.
"அம்மா நானும் என் அமெரிக்க நண்பர்களும் சேர்ந்து கட்டிய பாடசாலை இது..வேதம் படிக்கும் குழந்தைகளின் உணவு, உடை,, தங்கும் இடம் மற்றும் வேதம் கற்பிக்கும் விற்பன்னர்களுக்கான சம்பளம் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்...சமையலுக்கு இரண்டு மாமியும், சுத்து வேலைகளுக்கு ஆட்களும் போட்டிருக்கிறோம்... சுமார் ஐம்பது குழந்தைகள் தங்கி படிக்கும் வசதி உள்ளது..
உங்களுக்கு என்று தனி அறை...அதில் இருந்து கொண்டு நாள் பூராவும் நீங்கள் குழந்தைகள் வேதம் ஓதுவதை காது குளிர கேட்கலாம்.. இனி நீங்கள் தனிமையில் இருக்கப் போவது இல்லை..இங்கு படிக்கும் அத்தனை குழந்தைகளும் உன் குழந்தைகள்தான்...உங்களுக்கு இப்போது திருப்திதானே" என்று கேட்ட மகனை கண் குளிர பார்த்தாள் அலமேலு மாமி.
வேதம் படித்தால்தான் பெருமையா? அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது உன்னத பணியன்றோ? வேதங்கள் என்றும் அழியாது...இந்த பூமி இருக்கும் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று எண்ணி தன் மனதை படித்து அதை செயல்படுத்திய தன் மகனை பெற்றதற்கு உவகை கொண்டாள் அலமேலு மாமி.
No comments:
Post a Comment