Pages

Thursday, November 16, 2023

அம்மாவின் வேதம்

மகன் கணேஷ் கூட்டிக் கொண்டு போன இடத்தைப் பார்த்ததும் கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வடிந்தது அலமேலு மாமிக்கு.  மனம் இன்பத்தால் திளைத்து பழைய ஞாபகங்களை அசை போட்டது.

பிறந்த வீட்டிலும் வைதீகம்...புகுந்த வீட்டிலும் வைதீகம்..காதுகள் வேத கோஷங்களைக் கேட்டு கேட்டு இனம் புரியா இன்பத்தில் ஆழ்ந்த தருணங்கள் அல்லவா?

கஷ்ட ஜீவனம்தான்...ஆனால்

வத்தக் குழம்பும் குமுட்டியில் சுட்ட அப்பளமும், மிளகு சீரக ரசமும் வாய்க்கு தேவாமிருதமாக இருந்தது...போக வர மாட்டு வண்டி...அழகான அக்ரஹாரம்....இதற்கு மேல் செவிக்கு அமுதமாக வேத கோஷங்கள்...அந்த கிராம வாழ்க்கை போல் வருமா?  அந்த இனிமையான நினைவுகள் அடிக்கடி வந்து வந்து போனது அலமேலு மாமிக்கு.

கணவர் சுப்புண்ணி எனப்படும் சுப்ரமணியன் கனபாடிகள்.....உள்ளூரில் அத்தனை சம்பாத்தியம் இல்லை.  எதையும் கேட்டு பெற மாட்டார்..கொடுத்ததை வாங்கிக் கொள்வார்..

பிறந்த வீட்டிலும் புகுந்த வீட்டிலும் வைதீக குடும்பமாக அமைந்ததால் தன்னுடைய ஒரே பையன் கணேஷை வேதம் படிக்க அனுப்ப ஆசைப்பட்டாள் அலமேலு.. அதுவும் குழந்தை ருத்திரமும், விஷ்ணு சகஸ்ரநாமமும் அழகாக கணீரென்ற குரலுடன் சொல்வதைக் கேட்க கேட்க அவனை வேதம் படிக்க அனுப்ப வேண்டும் என்ற வெறி அதிகமானது.

ஆனால் சுப்புண்ணி கனபாடிகளுக்கோ அதில் துளியும் இஷ்டம் இல்லை.  தான் கஷ்டப்படுவது போல் தன் குழந்தையும் கஷ்டப்படக் கூடாது என்று சொல்லி பள்ளியில் சேர்த்தார்.

"நாமளே இப்படி செய்தால் அப்புறம் வேதம் எப்படி வளரும்?" என்று மன்றாடிக் கேட்டும் பயனில்லை.  இதில் அவளுக்கு மிகுந்த வருத்தம்.

கணேஷும் மிக நன்றாக படித்து மிகப் பெரிய நிறுவனத்தில் அமெரிக்காவில் பணி புரிகிறான்.  கிராமத்தில் இருந்து காலி செய்து விட்டு சென்னைக்கு வந்தாகி விட்டது.  கணவரும் சில வருடங்களில் இறந்து போக தனிமையில் சென்னை வாசம்...கிராமத்து நினைவுகள் அடிக்கடி வந்து ஒரு வெறுமை சூழும் அலமேலு மாமிக்கு.

ஆறு மாதம் பையனுடன் அமெரிக்கா வாசம்..ஆறு மாதம் சென்னையில் தனிமை வாசம்.  அமெரிக்காவில் நல்ல வசதியுடன் பையனும் மாட்டுப் பெண்ணும் வேலை செய்கிறார்கள்.  இரண்டு குழந்தைகள்...அங்கு எங்கு சென்றாலும் கார் எடுத்துக் கொண்டு செல்வது வாடிக்கை..ஆனாலும் எங்கு நோக்கினும் வானுயர்ந்த கட்டிடங்கள்...கிராமத்தின் அழகிய சூழ்நிலையும், மாட்டு வண்டி பயணமும் அதிலும் குறிப்பாக காதுகளில் பாய்ந்த வேத கோஷங்களும் நினைவுக்கு வந்து மனதை வாட்டும்.

"ஏன் அம்மா ஏதோ பறிகொடுத்தது போல் இருக்கிறீர்கள்?  நான் சகல வசதிகளுடன் இருப்பது சந்தோஷம்தானே?" என்று மகன் கேட்கும் போது "குழந்தை நீ சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம்தான்" என்று புன்னகை புரிவாள்.

கடந்த ஆறு மாதமாக அமெரிக்காவுக்கு பிள்ளை அழைக்கவில்லை.  ஆனால் பிள்ளை அடிக்கடி ஏதோ வேலை விஷயமாக வந்து போனான்..  

இதோ இப்போது பையனும் மாட்டுப்பெண்ணும் வந்து தன்னை அழைத்துக் கொண்டு காட்டிய இடத்தைக் கண்டதும் கண்களில் கண்ணீர்.  வேத கோஷங்கள் முழங்க சுற்றிலும் பசுமையாக மரம், செடி, கொடிகளுடன் தன்னை வரவேற்ற சுப்ரமணிய கனபாடிகள் வேத பாடசாலையைக் கண்டதும் மகிழ்ச்சி, வியப்பு, அழுகை கலந்த பாவத்துடன் தன் மகனை பெருமையுடன் ஏறிட்டாள் அலமேலு மாமி.

"அம்மா நானும் என் அமெரிக்க நண்பர்களும் சேர்ந்து கட்டிய பாடசாலை இது..வேதம் படிக்கும் குழந்தைகளின் உணவு, உடை,, தங்கும் இடம் மற்றும் வேதம் கற்பிக்கும் விற்பன்னர்களுக்கான சம்பளம் அனைத்தையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்...சமையலுக்கு இரண்டு மாமியும், சுத்து வேலைகளுக்கு ஆட்களும் போட்டிருக்கிறோம்... சுமார் ஐம்பது குழந்தைகள் தங்கி படிக்கும் வசதி உள்ளது..

உங்களுக்கு என்று தனி அறை...அதில் இருந்து கொண்டு நாள் பூராவும் நீங்கள் குழந்தைகள் வேதம் ஓதுவதை காது குளிர கேட்கலாம்.. இனி நீங்கள் தனிமையில் இருக்கப் போவது இல்லை..இங்கு படிக்கும் அத்தனை குழந்தைகளும் உன் குழந்தைகள்தான்...உங்களுக்கு இப்போது திருப்திதானே" என்று கேட்ட மகனை கண் குளிர பார்த்தாள் அலமேலு மாமி.

வேதம் படித்தால்தான் பெருமையா? அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வது உன்னத பணியன்றோ?  வேதங்கள் என்றும் அழியாது...இந்த பூமி இருக்கும் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று எண்ணி தன் மனதை படித்து  அதை செயல்படுத்திய தன் மகனை பெற்றதற்கு உவகை கொண்டாள் அலமேலு மாமி.


Monday, November 13, 2023

டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ்

நாங்கள் குடும்பத்தோட டெல்லியிலிருந்து பஞ்சாப் அமிர்தசஸ் ரயிலில் இரண்டாம் வகுப்பு ஸ்சிலீப்பர் கோச்சில் ஏறினோம்..(காரணம் ;- AC COACH FULL BOOKING ) அந்த ரயில் பல ஊர்களை கடந்து தான் டெல்லி வருகிறது.. வட மாநிலங்களில் புக் செய்திருந்தாலும் அவர்கள் படுத்து கொண்டு வரும் போது நம்மால் எழுப்பி நம் சீட் என கூறவே முடியாது.. நமக்கு மொழி பிரச்சனை வேற..ஹிந்தி எனக்கு சுத்தமா தெரியாது.. அவிய்ங்களுக்கு ஹிந்தி தவிர வேற எதுவும் தெரியாது.. இரவு 9 மணி குழந்தைகளோடு நானும் எவ்வளவோ போராடினேன்.. ஏற்கனவே மதுரையிலிருந்து 42 மணி நேரம் டிராவல் செய்து புதுடெல்லி வந்த அலுப்பு வேறு.. மதுரை டூ டெல்லி இரவு 7 மணிக்கு இறங்கி அடுத்து இந்த ரயிலில் ஏறி நிம்மதியாய் தூங்கலாம் என்றால் வடநாட்டுக்காரன் மனிதாபிமானமின்றி சிறிதும் இடம் தராமல் ஹிந்தியிலேயே எதேதோ பேசிட்டே இருக்கானுக.. .கொடுமை என்னன்னா டிடிஆர் அங்கே வரவே இல்லை... எனவே என்ன செய்வதென யோசித்த போது ரயில்வே புகார் வெப்சைட் ஞாபகத்திற்கு வர உடனே தாமதிக்காமல் நான் போனை எடுத்து வெப்சைட் உள்ளே போய் PNR நம்பரை பதிவிட்டு என்னோட இடத்தை தராமல் அராஜகம் செய்வதை பதிவிட்டேன்..அடுத்த மூன்று நிமிடத்தில் IRCTC யிலிருந்து போன் வந்தது. 

ஹிந்தி Or ஆங்கிலத்தில் பேசனும்..நாம் பேச நினைக்குற சொல்லும் விஷயத்தை உடனே பதிவிட்டு அடுத்த சில நிமிடத்தில் *RPF POLICE* உடனே நம் பெட்டியில் வந்து நம் குறையை கேட்டதுமே அவர்கள் உடனே செயலில் இறங்கியதும் அங்கே பெட்டியில் இருந்தவன் எல்லாம் எங்கிட்டு போறானே தெரியல.. Rpf police க்கு வட நாட்டான் செமையா பயப்படுறான். நமக்கு அடுத்து எந்த தொந்தரவு இல்லாம நம்ம பயணம் மிக சுமூகமாக அமையும்.

தொலை தூர பயணம் செய்வோர் நிச்சயமாக இதை தெரிந்து கொள்ளவே இப்பதிவு.

புகார் பதிவு மிக எளிது

குரோம்ல *RAILMADAD* என பதிவிட்டதும் உங்க மொபைல் நம்பரை என்டர் செய்யவும் மொபைல் நம்பருக்கு OTP வரும். அதை என்டர் செய்ததும் உங்க பயணம் செய்து கொண்டிருக்கும் TRAIN PNR NUMBER பதிவு செய்ததும் அதிலே உங்க ட்ரெயின் நம்பர் உங்க கோச் பெட்டி நம்பர் எத்தன பேர் நீங்க பயணிக்கிறீங்க என அனைத்து தகவலும் வரும்.. அதன் கீழே உங்க புகாரை பதிவிட COMMENT BOX இருக்கும்.. அதிலே ரத்ன சுருக்கமா நீங்க உங்க குறையை பதிவிட்டால் போதும்

உதாரணமாக *"MY SEATS OCCUPIED OTHERS* " என பதிவிட்டால் போதும்.

உடனே அடுத்த ஐந்து நிமிடத்திற்குள்ளே உங்க பிரச்சனை தீரும்.

நிம்மதியாக குடும்பத்தோடு பயணம் செய்யலாம்.

என் அனுபவத்தை பகிர்ந்தேன்.. உங்களில் பலருக்கு எப்போதாவது இது தேவைப்படும் . பதிவு செய்து வைத்துக் கொள்ளவும்.