Pages

Saturday, October 17, 2020

அப்பா எக்ஸாம் பீஸ்

 என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே  உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு !

பகிர்வு:

அப்பா, நேத்து கேட்டேனே, எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 

அம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத் தெரியாதா...?ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...

ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?

காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...

இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...

இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...

தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 

என்ன ராஜா...

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

கண்ணீர அதற்குள் கழுத்தை தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 

சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள்  ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...

அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.

என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.

சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 

எப்படி அழறான், பாரு.

அவனை பேச வை.

எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று

ஆண்டுகளுக்கு முன்னால்... 

மகா போனபோதே அவனும் போயிட்டான்.

நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"

என்று கேட்க கூட யாரும் இல்லாத நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான்  கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 

என்று தம் காதுபடவே -  மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 

தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'

என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 

வாழும்நிலை வந்தபோதே 

அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது"  என்று மகன் அமில வார்த்தையை வீசிய போதே அவன் போயிட்டான்;

நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 

அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்... அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!

என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.

நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது..

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்

பார்க்கும் எல்லாவற்றிலும் அவன் மகாவோடு வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும் இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 

நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 

உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 

புரிந்து கொள்ள முயலுங்கள்...

வாழ்க்கை என்பது... 

வாழ்வது மட்டுமல்ல...! 

வாழ வைப்பதும்தான்...

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 

பலர் உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 

புதைக்கத்தான்... 

சில ஆண்டுகள் ஆகின்றன...!

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.

நம்புகிறேன்...

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்றும் வேண்டுகிறேன்.

நிச்சயமாக உங்களிடமிருந்து ஏதோ ஒரு பிரதிபலிப்பை எதிர்பார்க்கிறேன்.

அதுவே என்னை மேலும் முயற்சிக்கத் தூண்டும்.

No comments:

Post a Comment