Pages

Friday, October 30, 2020

மறைக்கப்பட்ட வரலாறு

 ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு  நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை, உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.

காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.

இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்.

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? 

இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

திருச்செந்தூர் முருகப்பெருமானின் விக்கிரகம்

ஒருமுறை டச்சுக்காரர்கள் திருநள்ளாறு என்னும் திருத்தலத்திற்குச் சென்று அங்குள்ள நடராஜர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு கப்பல்மூலம் கடல் வழியாகத் திருச்செந்தூர் வந்தனர். திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து சண்முகர் விக்கிரகத்தை எடுத்துக்கொண்டு தங்கள் நாட்டுக்குக் கப்பல்மூலம் செல்ல ஆரம்பித்தனர்.

அந்த நேரம் - மிகப்பெரிய அளவில் காற்று வீசியதால் கடல் கொந்தளித்தது. கடல் கொந்தளிப்பால் அவர்களால் மேலும் பயணம் செய்ய இயலவில்லை.

கப்பல் கடலில் மூழ்கும் அளவுக்கு ஆபத்து அதிகமானது. அப்போது கப்பலில் பயணம் செய்த ஒருவர் “நாம் இந்த திருச்செந்தூர் முருகப்பெருமானின் விக்கிரகத்தை திருடி எடுத்துக்கொண்டு வருவதால்தான் கடல் கொந்தளிக்கிறது. எனவே என்ன செய்ய வேண்டும்” - என பதட்டத்தோடு கேட்டார். பின்னர், கப்பலில் பயணம் செய்த அனைவரும் “இந்தச் சிலைகளை கடலில் போட்டுவிடுவோம்“ என்ற முடிவுக்கு வந்தனர்.

முதலில் நடராஜரை எடுத்து அந்தச் சிலைகளை அதை கயிற்றில் கட்டி இறக்கினார்கள். அப்போதும் கடல் கொந்தளிப்பு அடங்கவில்லை. பின்னர் முருகன் சிலையை எடுத்து கயிற்றினால் கட்டி கடலில் போட்டார்கள். அதன் பின்னரும் கொந்தளிப்பு தொடர்ந்து இருந்தது.  கப்பலில் பயணம் செய்த அனைவரும் பயந்து நடுங்கினார்கள். “இது தெய்வ குற்றம்....” என்று நினைத்து கப்பலின் பயணத்தை வேறு திசைக்கு மாற்றிக்கொண்டு சென்றுவிட்டனர்.

முருகன் விக்கிரகம் திருடப்பட்டுவிட்டது என்ற செய்தி அறிந்ததும் திருச்செந்தூர் நகரிலுள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள்.  இந்தநிலையில் செய்தி அறிந்த திருநெல்வேலியை ஆட்சி செய்த வடமலையப்ப பிள்ளை மனம் வருந்தினார். திருச்செந்தூரில் முருகன் சிலை இல்லை என்பதால் மனம் கலங்கி சாப்பிடாமல் பல நாட்கள் இருந்தார். மேலும் புதிதாக முருகன் விக்கிரகம் ஒன்றையும் செய்து அதனைத் திருச்செந்தூர் கோவிலில் வைக்கவும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார்.

அப்போது வடமலையப்ப பிள்ளையின் கனவில் முருகப் பெருமான் தோன்றினார். “என்மீது பக்தி கொண்ட வடமலையப்பரே... என்னைக் காணவில்லை என நீர் வருத்தப்பட வேண்டாம். நான் திருச்செந்தூர் கோவிலுக்குச் சற்று தொலைவில் கடலுக்குள்தான் உள்ளேன். நீர்... படகின்மூலம் கடலில் பயணம் செய்தால் கடலில் ஓர் எலுமிச்சம்பழம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். அந்த இடத்தில் கடலுக்கடியில் நான் இருக்கிறேன். எலுமிச்சம்பழம் மிதக்கும் இடத்திற்குமேல் ஒரு கருடன் வட்டமிடும். அந்தக் கருடன் பறக்கும் இடத்தை வைத்தே நீர் என்னைக் கண்டுகொள்ளலாம்” - எனக் கூறினார்.

முருகப் பெருமான் தனது கனவில் கூறியவற்றை நினைவில் வைத்துக்கொண்டு வடமலையப்பர் சிறிய படகில் புறப்பட்டார். கடலில் முத்தெடுக்கும் திறன்கொண்டவர்களையும் தன்னுடன் அழைத்துக்கொண்டு புறப்பட்டார். முருகப் பெருமான் கூறியபடி கருடன் வானத்தில் வட்டமடித்தது. அந்தக் கருடன் பறக்கும் இடத்திற்குக் கீழே கடலில் ஒரு எலுமிச்சம்பழம் மிதந்தது.

எனவே, - அடையாளம் கண்டுகொண்ட வடமலையப்ப பிள்ளை உடன் வந்தவர்களை கடலில் மூழ்கி முருகப் பெருமான் விக்கிரகத்தை எடுத்துவரச் சொன்னார்.  கடலில் மூழ்கியவர்கள் கையில் முதலில் திருநள்ளாறு நடராஜர் விக்கிரகம் கிடைத்தது. ஆனால் முருகப்பெருமான் விக்கிரகம் கிடைக்கவில்லை.

வடமலையப்பப் பிள்ளை மிகவும் மனம் வருந்தினார். “முருகப்பெருமானே! நீர் எம் கனவில் வந்தீர்! உம்மைக் கடலில் காணலாம் என்று சொன்னீர். இப்போது உம்மைக் காணவில்லையே” - எனக் கவலையோடு கடலில் குதித்தார் வடமலையப்பப் பிள்ளை. கடலில் முருகப்பெருமானைத் தேடினார். சிறிதுநேரத்தில் முருகப்பெருமான் விக்கிரகம் வடமலையப்பப் பிள்ளை கையில் கிடைத்தது. அந்த விக்கிரகத்தை படகில் ஏற்றி கரைக்குக் கொண்டு வந்தார்கள்.  பின்னர் 1653ஆம் ஆண்டு தை 29ஆம் தேதி முருகப்பெருமான் சிலைக்கு பிரதிஷ்டை செய்தார்கள்.

கடலில் சிலகாலம் இருந்ததால் சண்முகரின் முகத்தில் கடல்நீர் அரித்துவிட்டதாக ஆன்மீக அன்பர்கள் கூறுவார்கள். கடல்நீர் அரித்த நிலையை இன்றும் சண்முகரின் முகத்தில் காணலாம். (நெல்லை கவிநேசன் கட்டுரையிலிருந்து)

Thursday, October 29, 2020

மதுரை மீனாட்சிக்கு காணிக்கை

 நீங்க என்ன பெரிய பீட்டரா...?? 

எப்படி வந்தது இந்த வழக்கு சொல்...???

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்

மதுரையில் எப்போதும் அம்மாவின் ஆட்சிதான். மற்ற ஆலயங்கள் போலில்லாமல் மீனாட்சி கோவிலில் பெண் தெய்வம் அம்மன்தான் முதலில் வணங்கப்படுகிறார். சுந்தரேஸ்வரர் பக்கத்து சன்னதியில் பொறுமையாக இருந்து அன்புடன் அருள்பாலிக்கிறார்.

மீனாட்சிக்கு நகைகள், பொக்கிஷங்கள், தான பட்டா நிலங்கள் என்று அளவிட முடியாத சொத்துக்கள் இருக்கின்றன. இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்தது, விரிவானது இந்த நகை கலெக்ஷன். இந்த நகைக்குவியலில் உள்ள ஒவ்வொரு நகைக்கும் ஒரு கதை இருக்கிறது.

அயல் தேசத்து மன்னர்கள், கொள்ளையர்களின் படையெடுப்பு காலங்களில், அம்மனின் நகைகள் ராமேஸ்வரம் போன்ற தூரதேசக் கோயில் லாக்கர்களில் டெபாசிட் பண்ணப் பட்டிருக்கிறது.

1837 முதல் இந்தியாவை ஆண்ட விக்டோரியா மகாராணிக்கு வைர நகைகள் என்றாலே தனி காதல். தனது கணவரிடம் சொல்லி உலகில் உள்ள பிரபல வைர நகைகளை கைப்பற்றித் தனது அலமாரியில் சேர்த்து வைப்பார்.

மீனாட்சி தேவியின் நகைகளில் பத்துப் பெரிய சபையர் (Sapphire) கற்கள் பதித்த ஒரு நீலப் பட்டயம் உலகப் பிரசித்தம். அதன் ஆபூர்வ அழகு கண்களை பறிப்பதாக இருக்கிறது என்பதை மகாராணியும் கேள்விப்பட்டார் . அதன் மேல் காதல் கொண்டார்; "காண" விரும்பினார். கம்பெனிக்காரர்கள் ஏற்பாட்டில் பதக்கம் லண்டனுக்குக் கப்பலில் சென்றது.

பதக்கத்தை பார்த்ததுமே, மனிதக் காதல் கொள்ள அது சாதாரண நகையல்ல; மகாராணியாக இருந்தாலும் தான் அணிந்து கொள்ள ஏற்புடையதல்ல என்று உணர்ந்தார். மறு கப்பலில் பத்திரமாக அனுப்பப்பட்ட அந்தப் பதக்கம் மீனாட்சியை அலங்கரிக்க மீண்டும் மதுரைக்கு வந்து சேர்ந்திருக்கிறது.

மீனாட்சிக்கு அழகு சேர்க்க இப்படிப் பல வைர, வைடூரிய நகைகள் இருந்தாலும், ஒரு ஆங்கிலேயே முரட்டு பக்தன் இருநூறு வருடங்களுக்கு முன்னால் அம்மனுக்கு காணிக்கையளித்த ஷூக்கள் பற்றித்தான் இந்த பதிவு.

தங்கத்தால் இழைக்கப்பட்ட விலை மதிக்க முடியாத மாணிக்கங்கள் பதித்த ஒரு ஜோடிக் காலணிகளைத் தன் பக்தியின் காணிக்கையாக வழங்கியவர் அப்போதைய மதுரை கலெக்டர் ரவுஸ் பீட்டர்.

யார் இந்த ரவுஸ் பீட்டர்? (நாமள்லாம் கேப்பமே "என்ன ரவுஸ்" விட்றியான்னு அதுக்கு மூலமே இவருதாங்க)_

பீட்டர் துரை 1812ல் ஒருங்கிணைந்த மதுரை ஜில்லாவுக்குக் கலெக்டராக ஆங்கிலேயே அரசால் நியமிக்கப்பட்டவர்.

பீட்டர் துரை பதினாறு நீண்ட வருடங்கள் அதாவது 1828 வரை மதுரை மாவட்டத்தின் கலெக்டராக இருந்தவர்.

அப்போதெல்லாம் மதுரை கலெக்டர்தான் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் தக்கார். கோயில் தக்கார் என்றால் கோயிலுக்கு தக்கவர் (Fit Person) மரியாதைக்குரியவர் என்று அர்த்தம்.

கோவில் தக்காரின் பணி என்னவென்றே தெரியாமல் முதலில் திணறிப் போனார் பீட்டர் துரை. பின்னர் அம்மனின் மகிமைகளை ஒவ்வொன்றாகக் கேட்டறிந்து, அவள் மேல் மரியாதையும், பக்தியையும் செலுத்த ஆரம்பித்தார்.

தினமும் தன்னுடைய குதிரையில் ஏறி மீனாட்சி அம்மன் கோயிலை வலம் வருவார். அதன் பிறகே தன்னுடைய அன்றாடப் பணிகளைத் தொடங்குவார்.

கிழக்கு கோபுரத்துக்கு முன்பகுதிக்கு வந்ததும் குதிரையில் இருந்து இறங்கி விடுவார். தன் ஷூக்களை அகற்றிவிட்டு அனலாய் சுடும் அந்த கற்தரையில் வெறும் பாதங்களில் நின்று மீனாட்சியை வணங்குவார்.

தினமும் கோவில் கோபுர வாயிலில் நின்று மனமுருக வணங்கும் இந்த முரட்டு பக்தனை பார்த்து மதுரை மக்களுக்கு மட்டுமல்ல, அந்த மீனாட்சிக்கே மனசுருகிப் போயிருக்கும்.

பீட்டர் ஆங்கிலேயராக இருந்தாலும்கூட, நம்முடைய கலாசாரத்தையும், ஆன்மிக உணர்வுகளையும் பெரிதும் மதிப்பவராக இருந்தார். மக்களுக்கு எந்த ஒரு கஷ்டமும் வராமல், அம்மனின் வழிகாட்டுதலின்படி ஆட்சி செய்தார்.

மதுரை மக்கள், தங்களுக்கு யாரையாவது பிடித்துப் போனால் எல்லையில்லா அன்பும் நன்றியும் செலுத்துவார்கள். தங்களிடம் மிகுந்த பரிவு காட்டிய இந்தக் கலெக்டரை ஒரு மன்னனுக்கு நிகராக நினைத்த மதுரை மக்கள் அவரைப் பீட்டர் பாண்டியன் என்றே அழைத்தனர். ("நீ என்ன பெரிய பீட்டரா" அதுக்கும் இவருதாங்க மூலம்)

சம்பவத்துக்கு வருவோம்.

ஒருநாள் இரவு மதுரையில் இடியும் மின்னலுமாகப் பெருமழை பெய்தது. பெருத்த காற்றுடன் மழை கொட்டோ கொட்டென்று கொட்டியது.

வெள்ளத்தினால் மதுரைக்கும், மக்களுக்கும் பெரிய இடையூறு வருமே என்று கவலையுடன் உறக்கம் வராமல் கட்டிலில் புரண்டு கொண்டிருந்தார் பீட்டர் துரை.

நள்ளிரவாகிவிட்டது. பங்களாவுக்கு வெளியே ஒரு சிறுமி அழைப்பது போல பீட்டருக்குக் கேட்டது. எழுந்து வெளி வராந்தாவுக்கு வந்தார்.

அந்த இடத்தில் அவரை நெருங்கி வந்த மூன்று வயது மதிக்கும் சிறுமி ஒருத்தி தன்னுடைய தளிர்க் கரங்களால் அவருடைய கைகளைப் பிடித்து இழுத்து மாளிகைக்கு வெளியில் அழைத்துப் போனாள்.

சிறுமியும் கலெக்டரும் வெளியில் வந்ததுதான் தாமதம், அந்த மாளிகை அப்படியே இடிந்து விழுந்தது. மிரண்டு போனார் பீட்டர். தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றிய அந்த சிறுமிக்கு நன்றி சொல்லத் தேடினார். சிறுமியைக் காணவில்லை. 

பின்னர் கொட்டும் மழையில் சற்றுத் தொலைவில் அந்தச் சிறுமி சென்று கொண்டிருப்பதைப் பார்த்த கலெக்டர் பின்தொடர்ந்து ஓடினார். பிடிக்க முடியவில்லை. இறுதியில் அந்தச் சிறுமி மீனாட்சியின் திருக்கோயிலுக்குள் சென்று மறைந்தே போனாள்.

தன்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது அம்மன் மீனாட்சிதான் என்று கலெக்டர் ரவுஸ் பீட்டர் உறுதியாக நம்பினார்.

கொட்டும் மழையில் வெறும் காலோடு தன்னைக் காப்பாற்ற ஓடோடி வந்த அம்பிகையின் பாதங்களுக்கு அணியும்படி ஏதாவது அணிகலன் செய்து தரவேண்டும் என்று ஆலோசனை செய்தார். அவை தான் மேலே சொன்ன அந்தக் காணிக்கைக் காலணிகள்.

நன்றியுணர்வின் அடையாளமாக அவர் மீனாட்சிக்கு காணிக்கை அளித்த இந்த ஒவ்வொரு தங்க ஷூவின் எடை 28 டோலாக்கள் (ஒரு டோலா தங்கம் தோராயமாக 12 கிராம்).

இதுபோக 412 சிவப்பு கற்கள், 72 மரகதங்கள், 80 வைரங்கள் மற்றும் பூனை கண், முத்துக்கள், சபையர் என்று நவரத்தினங்கள் காலணிகளை அலங்கரிக்கின்றன.

அத்துடன் விட்டாரா?

அம்மனைத்தவிர அந்த நாட்களில் மதுரையில் குதிரை வலம் வருபவர் பீட்டர் மட்டும்தான். குதிரை சவாரி எவ்வளவு சிரமம் என்று அவருக்குத்தான் தெரியும். விழாக் காலங்களில் குதிரையில் வலம் வரும் அம்மன், சேணம் இல்லாததால் பேலன்ஸ் பண்ண சிரமபடுவதாக அவரின் பக்திக்கண்களுக்கு பட்டது.

வெள்ளைக்காரர்கள் எதையும் மிஸ் பண்ண மாட்டார்கள். "எடுறா தங்கத்தை, அடிறா சேணத்தை" என்று நவரத்தினங்களால் இழைக்கப்பட்ட இரண்டு தங்க சேணங்களையும் செய்து, அவற்றையும் அம்மனுக்கு காணிக்கையாகச் சமர்ப்பித்தார்.

இன்றைக்கும் சித்திரை திருவிழாவின் ஐந்தாவது நாளில், மீனாட்சி தேவி தங்கக் குதிரையில் இந்த விசித்திரமான அணிகலங்களை பூட்டி, புன்னகையுடன் மாசி வீதிகளைச் சுற்றி வருகிறாள்.

பக்தியில் திளைத்த அவர், மீனாட்சி நடக்கும்போது அவள் திருப்பாதங்கள் தன் மேல் நடந்து போவதாக இருக்கட்டும் என்று சொல்லி, அவள் காலணிகளுக்கு அடிப்பாகத்தில் தன் பெயரை எழுத சொல்லிவிட்டார்.

பணி ஓய்வுக்குப் பின்னரும் பீட்டர் இங்கிலாந்துக்குத் திரும்பவில்லை. தனது கடைசி நாட்களை மீனாட்சிப் பட்டிணத்திலேயே கழித்தார்.

மதுரையிலேயே காலமான அவர் மதுரை, மேல ஆவணி மூல வீதி் செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டார்.

பீட்டரின் கல்லறை, தேவாலயத்தின் பலிபீடத்தின் அடியில் ஒரு பாதாள அறையில் அமைந்துள்ளது.

கிருஸ்துவ தேவாலயத்தின் அறையில் அவரது இறுதி விருப்பப்படி, அவர்தம் முகம் மீனாட்சி கோயிலை நோக்கி இருக்குமாறு அடக்கம் செய்யப்பட்டார்.

மதுரையின் முதல் புலம் பெயர் தொழிலாளி  திரு. பீட்டர் பாண்டியன்! உங்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகள்...!!

Saturday, October 24, 2020

தாயின் கடைசி காலம்

 காசி கயா போன்ற புண்ணிய ஷேத்திரங்களில் ப்ரோகிதர் தாய்க்காக பிண்டம் வைக்கும் போது விளக்கத்துடன் சொல்லியது

அப்போது அங்கிருந்த ஒவ்வொருவரும் அழுதேவிட்டனர்...

சிறிது நிதானமாகப் படியுங்களேன் .. உங்கள் கண்களில் கண்டிப்பாக ஒரு சொட்டு கண்ணீராவது வரும்.. உங்கள் தாயை நினைத்து..

கயா கயா கயா. என்று சொல்வது ஆதி சங்கரர் தனது தாயின் கடைசி காலத்தில் தான் வாக்கு கொடுத்தபடி அவளருகே வந்து அவள் மரணத்திற்கு பிறகு அவளது அந்திம கிரியைகளை செய்து இயற்றிய மனம் நெகிழும் மாத்ரு பஞ்சகம் 5 ஸ்லோகங்கள்

விஷ்ணு பாதம்

பித்ரு ஸ்ரார்தம் கயாவில் செய்வது உசிதம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அக்ஷயவடத்தருகே பிண்ட பிரதானம் செய்வது ஒரு வழக்கம்.

''கயா கயா கயா. என்று சொல்வது நமது பித்ருக்களுக்கு ஸ்ரத்தையோடு அவர்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் நாம் செய்யும் கடமை சம்பந்தப்பட்டது. . ஒவ்வொரு ஹிந்துவும் வாழ்வில் ஒரு தடவையாவது செல்ல வேண்டிய இடம் கயா. குடும்பம் சகல சம்பத்துகளும் ச்ரேயஸும் பெறும்.

ஒரு 16 ஸ்லோகங்கள் கொண்டது மாத்ரு .ஷோடசி. தாய்க்கு மகன் அளிக்கும் 16 பிண்டங்கள் பற்றியது. அதன் அர்த்தம் புரிந்துகொண்டால் அவசியம் புரியும். தாயின் அருமை தெரியும்.

ஜீவதோர் வாக்ய கரணாத்

ப்ராத்யாப்தம் பூரி போஜணாத் கயாயாம் பிண்ட தாணாத்த்ரிபி: புத்ரஸ்ய புத்ராய

'' அடே பயலே, அம்மா அப்பா உயிரோடு இருக்கும்போதே அவர்கள் சொல்படி நட. அவர்களை சந்தோஷமாக வைத்துக்கொள். அவர்கள் ஆசீர்வாதம் தான் உன் படிப்பு மூலம் கிடைக்கும் சர்டிபிகேட்டை விட உன்னை நன்றாக வைக்கும். அவர்கள் காலம் முடிந்த பிறகு அந்தந்த திதியில் அவர்கள் பசியை போக்கு. அவர்களுக்கு தேவை அல்வா, ஜாங்கிரி,கீ ரோஸ்ட் அல்ல. வெறும் எள்ளும் தண்ணீரும் தான். முடிந்தால் ஒரு தடவை கயாவுக்கு குடும்பத்தோடு போ. அங்கு நீ அளிக்கும் பிண்ட ப்ரதானம் அவர்களுக்கு தேவை. ''புத்'' என்ற நரகத்திலிருந்து பெற்றோரை காப்பற்றுகிறவன் தான் 'புத்ரன்' என்று சாஸ்திரம் சொல்கிறது. நான் சொல்லவில்லை. .

“அக்ஷய வடம், அக்ஷய வடம்” என்று ஒரு வார்த்தை காதில் விழுகிறதே. அது என்ன? கயாவில் நாம் 64 ஸ்ரார்த்த பிண்டங்களை அங்கு தான் இடுகிறோம்.

ஸ்ராத்தம் பண்ணுபவர்கள் கயாவில் பித்ருக்களுக்கு, நமது முன்னோர்களுக்கு மட்டுமல்ல, தெரிந்தவர்கள் அறிந்தவர்களுக்கும் 'திருப்தியத', திருப்தியத' என்று மனமுவந்து அளித்து அவர்களை வேண்டுகிறோமே. அக்ஷய வடம் என்பது ஒரு மஹா பெரிய வ்ருக்ஷம். 'வடம்' (தமிழில் சின்ன 'ட") ஆல மரம். சென்னைக்கருகே திரு ஆலம் காடு (திருவாலங்காடு - வடாரண்யம் என்று பெயர் கொண்டது.)

இந்த அக்ஷய வடத்தின் கீழே நிழலில் தான் பிண்ட பிரதானம் இடுவார்கள். இதில் முக்யமாக 64 பிண்டங்களில் பெற்ற தாய்க்கு மட்டுமே 16 பிண்டங்கள். அந்த 16 பிண்டங்களை அம்மாவுக்காக ஒவ்வொரு வாக்யமாக சொல்லி இடுகிறோம். அந்த பதினாறு தான் “மாத்ரு ஷோடஸி”.

1. கர்பஸ்ய உத்கமநே துகம் விஷமே பூமி வர்த்மநி |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''கொஞ்சமா நஞ்சமா நான் உன்னை படுத்தியது. ஒரு பத்து மாத காலம் எப்படியெல்லாம் உன்னை உதைத்திருக்கிறேன். என்னையும் சுமந்தபடி மேடும் பள்ளமுமாக நீ அலைந்தாயே. நான் கொடுத்த கஷ்டத்தை துளி கூட நீ பொருட்படுத்த வில்லை. என்னை திட்டவில்லையே. சந்தோஷமாக என்னை உள்ளே அடக்கிய உன் வயிறை எண்ணற்ற முறை ஆசையாக தடவி கொடுத்தாயே. இதோ நான் செய்த பாவங்களுக்காக உனக்கு இந்த முதல் பிண்டம். பரிகாரமாக ஏற்றுக்கொள்வாயா?

2. மாஸி மாஸி க்ருதம் கஷ்டம் வேதநா ப்ரஸவே ததா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏன் சோர்ந்து போயிருக்கிறாய். உன் பிள்ளை உள்ளே படுத்துகிறானா? பிரசவ காலம் கஷ்டமானது தான். மாசா மாசம் நான் வளர வளர உனக்கு துன்பத்தை தானே அதிகமாக கொடுத்துக் கொண்டே வந்தேன். இந்தா அதற்கு பரிகாரமாக நான் இடும் இந்த இரண்டாவது பிண்டம். ஏற்றுக்கொள் அம்மா.

3. பத்ப்யாம் ப்ரஜாயதே புத்ரோ ஜநந்யா: பரிவேதநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

அம்மா, நான் அளித்த வேதனையில் நீ பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்ட தாங்கமுடியாத துன்பம் நான் உன்னை வயிற்ருக்குள் இருந்தபோது உதைத்தது தானே. அதற்காக ப்ராயச்தித்தமாக இந்த 3வது ஸ்பெஷல் பிண்டம் உனக்கு. என் தாயே.

4. ஸம்பூர்ணே தசமே மாஸி சாத்யந்தம் மாத்ருபீடநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''அம்மா, இந்த 4 வது பிண்டம் உனது பூரண கர்ப காலத்தில் நீ என்னால் பட்ட வேதனைக்காக -- ஒரு பரிசு -- என்றே ஏற்றுக்கொள். என்னைப் பொருத்தவரை எனது பிராயச்சித்தம் என்று நான் இடுகிறேன்.

5. சைதில்யே ப்ரஸவே ப்ராப்தே மாத விந்ததி துஷ்க்ருதம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஏண்டி மூச்சு விடறது கஷ்டமாக இருக்கா. கொஞ்ச காலம் தான் பொறுத்துக்கோ'' .என்று உன் உறவுகள், நட்புகள் கேட்குமே. அவ்வாறே மனமுவந்து நான் விளைத்த துன்பத்தை, வேதனையை நீ தாங்கினாயே. அதற்கு பரிகாரம் தான் இப்போது என் கையில் நான் தாங்கும் இந்த ஐந்தாவது பிண்டம். ஏற்றுக்கொள் என் அருமைத் தாயே.''

6. ' பிபேச்ச கடுத்ரவ்யாணி க்வாதாநி விவிதா நி ச|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''குழந்தை வயித்திலே இருக்கும்போது இதெல்லாம் எனக்கு வேண்டாம். அப்புறமா சாப்பிடறேன்'' என்று உனக்கு பிடித்ததை எல்லாம் கூட வேண்டாமே என்று உதறினாயே. எனக்காகவே பத்தியம் இருந்தாயல்லவா. நான் நோயற்று வளர, வாழ எத்தனை தியாகம் செய்தாய். நான் உனக்கு செய்த பாவத்திற்கு தான் இந்த ஆறாவது பிண்டம். அம்மா இதற்கு மேல் என்னால் என்ன செய்ய முடியும் சொல்?'

7. அக்நிநா சோஷயேத்தேஹம் தரிராத்ரோ போஷணேந |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் குவா குவா என்று பேசி பிறந்து சில நாட்கள் தான் ஆகிறது. அப்போது நீ பசியை அடக்கி வெறும் வயிற்றோடு எத்தனை நாள் சரியான ஆகாரம் இன்றி தூக்கமின்றி வாடினாய். எனக்கு மட்டும் பால் நேரம் தவறாமல் கிடைத்ததே. அந்த துன்பத்தை நான் உனக்கு கொடுத்ததற்கு பரிகாரம் தான் இந்த 7வது பிண்டம்..\

8. ராத்ரௌ மூத்ரபுரீஷாப்யாம் க்லிந்ந: ஸ்யாந்மாத்ரு கர்பட |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

இப்போது நினைத்தாலும் சிரிப்பு வருகிறது. கண்ணில் நீரும் சுரக்கிறது. எத்தனை இரவுகள் அசந்து தூங்கும் உன் புடவையை ஈரம் பண்ணியிருக்கிறேன். படவா என்று செல்லமாக தானே சிரித்துக்கொண்டே வேறு துணி எனக்கும் மாற்றினாய். இதற்கு நான் உனக்கு இடும் கைம்மாறு தான் இந்த 8 வது பிண்டம். இதையாவது ஈரமில்லாமல் தருகிறேனே. \

9. தயா விஹ்வலே புத்ரே மாதா ஹ்யந்தம்ப்ரயச்சதி|

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''நான் சுகவாசி. எனக்கு எப்போது தாகம், பசி, தூக்கம், எதுவுமே தெரியாது.நீ தான் இருந்தாயே, பார்த்து பார்த்து அவ்வப்போது, எனக்காக நீ இதெல்லாம் செய்தாயே. இந்த பெரிய மனது பண்ணி என்னை வளர்த்த உனக்கு நான் எவ்வளவு துன்பம் தந்திருக்கிறேன். அதற்காக பிராயச் சித்தமாக இந்த 9வது பிண்டம்.

10. திவாராத்ரௌ ஸதா மாதா ததாதி நிர்பரம் ஸ்தநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''ஒரு சின்ன செல்ல தட்டு என் மொட்டை மண்டையில். ''கடிக்காதேடா..'' . நான் பால் மட்டுமா உறிஞ்சினேன். என் சிறு பல்லால் உன்னை கடித்தேனே. வலித்ததல்லவா உனக்கு. இந்தா அதற்காக ப்ளீஸ் இந்த பிண்டத்தை ஏற்றுக்கொள் அம்மா

11. மாகே மாஸி நிதாகே சசிரேத்யந்த து கிதா |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

''வெளியே பனி, குழந்தைக்கு ஆகாது. இந்த விசிறியை எடு. குழந்தைக்கு உள்ளே வியர்க்கும். வாடைக்காத்து. ஜன்னலை மூடு. எனக்கு காத்து வேண்டாம். குழந்தையைப் போர்த்தவேண்டும். கம்பளி கொண்டுவா. குழந்தைக்கு குளிருமே.'' காலத்திற்கேற்றவாறு என்னை கருத்தில் கொண்டு காத்த என் தாயே, நான் பிரதியுபகாரமாக கொடுப்பதெல்லாம் இந்த சிறு பிண்டம், 11வதாக எடுத்துக்கொள்.'

12. புத்ரே வ்யாதி ஸமாயுக்தே மாதா ஹா க்ரந்த காரிணி

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

எத்தனை இரவுகள், எத்தனை மனவியாகூலம். குழந்தை நெற்றி எல்லாம் சுடறதே, சுவாசம் கஷ்டமாயிருக்கே. சளி உபாதையாக இருக்கிறதே என்று வருந்தி, நாமக் கட்டி, மஞ்சள், விபூதி, பத்து எல்லாம் தடவி மடியில் போட்டு ஆட்டி, தட்டி, என்னை வளர்த்தாயே, கண்விழித்து உன் உடல் . அதற்காகத்தான் இந்த 12வது பிண்டம் தருகிறேன்.

13. யமத்வாரே மஹாகோரே மாதா சோசதி ஸந்ததம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இந்த பூலோகத்தில் இப்போது கார், பங்களா வசதிகளோடு கை நிறைய காசோடு . ஆனால் இதெல்லாம் அனுபவிக்காமல் நீ யமலோகம் நடந்து சென்று கொண்டிருக்கிறாயே. என் கார் அங்கு வராதே. வழியெல்லாம் எத்தனை இடையூறு. அவை எதுவுமே உனக்கு துன்பம் தராமல் இருக்க நான் தர முடிந்தது இந்த 13வது பிண்டம் தான் அம்மா.

14. யாவத்புத்ரோ ந பவதி தாவந்மாதுச்ச சோசநம் |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் இப்போது, பெரிய டாக்டர், எஞ்சினீயர், வக்கீல், ஜட்ஜ், ஹெட்மாஸ்டர், கம்ப்யூடர் ஸ்பெஷலிஸ்ட் -- நீ இல்லாவிட்டால் நானே எது.? ஏது? ஆதார காரணமே, என் தாயே, இந்த 14வது பிண்டம் தான் அதற்கு பரியுபகாரமாக உனக்கு என்னால் தர முடிந்தது.

15. ஸ்வல்ப ஆஹாரஸ்ய கரணீ யாவத் புத்ரச்ச பாலக: |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

திருப்பி திருப்பி சொல்கிறேனே. நான் வளரத்தானே நீ உன்னை வருத்திக்கொண்டாய். நீ வேண்டியதை திரஸ்கரித்தாய். நான் புத்தகத்தில் தான் ''தன்னலமற்ற'' தியாகம் என்று படிக்கிறேன். நீ அதை பிரத்யக்ஷமாக புரிந்து அனுபவித்தவள். எனக்காக நீ கிடந்த பட்டினி, பத்தியம் எல்லாவற்றிற்கும் உனக்கு நான் தரும் பிரதிஉபகாரம் இந்த 15வது பிண்டம் ஒன்றே.

16. காத்ரபங்கா பவேந்மாதா ம்ருத்யு ஏவ ந ஸம்சய |

தஸ்ய நிஷ்க்ரமணார்தாய மாத்ருபிண்டம் ததாம்யஹம் ||

நான் சுய கார்யப் புலி. சுயநல விஷமி. உன்னில் நான் உருவாகி, கருவாகி, சிறுவனாகி, பெரியவனாகி, இப்போது உன் மரண வேதனையை சற்றே உணர்ந்தவனாக கண்ணில் நீரோடு தரும் இந்த 16வது கடைசி கடைசி பிண்டத்தை ஏற்றுக்கொள் என் தாயே. தெய்வமே. என்னை மன்னித்து ஆசிர்வதி.

மஹா பூதாந்தரங்கஸ்தோ

மஹா மாயா மயஸ்ததா

ஸர்வ பூதாத்மகச்சைவ

தஸ்மை ஸர்வாத்மனே நமஹ

( எவர் எல்லா உயிரினங்களில் உள்ளுறைபவராகவும் மஹா மாயையை உடையவராகவும் ஸர்வ பூதாத்மகமாகவும் இருக்கிறாரோ அந்த ஸர்வாத்மனை நமஸ்கரிக்கிறேன் )...

Saturday, October 17, 2020

அப்பா எக்ஸாம் பீஸ்

 என்னை மிகவும் பாதித்த பதிவு !

படிக்கும்போதே  உயிர் பிரிவதைப் போன்றவோர் உணர்வு !

பகிர்வு:

அப்பா, நேத்து கேட்டேனே, எக்ஸாம் பீஸ் எடுத்துக்கவா...?

கேட்டுக் கொண்டே அப்பா நேற்று போட்டிருந்த சட்டைப் பாக்கெட்டில் கை விடுகிறான்.

டேய், அப்பா வந்து எடுத்து தருவாங்க, பாக்கெட்டில் கை விடறது என்ன பழக்கம்...? 

அம்மாவின் அதட்டலுக்கு...

என் அப்பா பாக்கெட்டில் நான் கை விடறேன், உனக்கு ஏம்மா வயிறு எரியுது...?

அம்மாவிற்கு பதில் சொல்லிக் கொண்டே, எடுத்ததை தன் பாக்கெட்டில் நுழைத்தவாறு, தேங்க்ஸ்பா, பாய்... சொன்னவாறு ஓடிப் போனான், மூன்றாமாண்டு பொறியியலில் இயந்திரவியல் படிக்கும் ராஜா.

எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம். எதுக்கும் ஒரு அளவு இருக்குதுங்க, பொறிந்தாள் அப்பளம் பொறித்தபடி.

சிரித்தபடியே தலைதுவட்டிக் கொண்டு வெளியே வந்த குமாரசாமி, 

நேத்து ஒரு ஃப்ரெண்ட் கேண்டீன்ல செலவு பண்ணியிருப்பான், இவன் ஒருநாள் செலவு பண்ண ஆசைபடுவான், இதுக்கெல்லாம் உங்கிட்ட கணக்கு சொல்லமுடியுமா?

அதுவுமில்லாம நீ பயப்படற மாதிரிலாம் தப்பா நீ வளர்க்கலய மகா...! காலையிலய கோபப்படாதடா, டாக்டர் சொன்னாரில்லையா... என்றபடி மனைவியின் கன்னத்தில் செல்லமாய் தட்டியபடி... ரூமிற்குள் நுழைந்து புறப்பட தயாரானார் அலுவலகத்திற்கு.

யாரு டாக்டரு, உங்க ஃப்ரெண்ட் தானே...

நீங்க சொல்லிக் கொடுக்கறத, அப்படியே வந்து ஒப்பிப்பாரு, எனக்குத் தெரியாதா...?ஒங்க ரெண்டு பேர பத்தியும்...

சொல்லிக் கொண்டே காபியுடன் வெளிவந்த மகாவை...

என்னம்மா, காலையிலயே என்னை போட்டுட்ட மிக்ஸியில... சொல்லியபடி உள்ளே நுழைந்தார் பக்கத்து வீட்டு டாக்டரும் குமாரசாமியின் பால்ய நண்பருமான ரத்னவேல்.

மகா, நாக்கை கடித்துக்கொண்டு அசடு வழிந்தபடி, இந்தாங்கண்ணா, உங்களுக்குத்தான் காபி, என்றாள்.

நம்பாதடா, நம்பாதடா, இவ்ளோ நேரம் அவ்ளோ திட்டு திட்டினாள் உன்னை, சிரித்தபடி வெளியே வந்த குமாரசாமியிடம், 

என் தங்கை என்னை திட்டினா, திட்டட்டும், என்னைத் தானே திட்டறா, உனக்கென்ன என்றார் ரத்னவேல் சிரித்துக்கொண்டே.

ஒன்னு அசடு வழியுது...

ஒன்னு வெட்கமே இல்லாம பேசுது...

ஆளை விடுங்க சாமி, என்றபடி தன்னிடம் தந்த காபியை வாங்கி குடிக்கத் தொடங்கினார். 

திடீரென அரண்டு எழுந்தார் குமாரசாமி.

கனவு.

திரும்பி செல்போனை எடுத்து நேரம் பார்த்தார்.

5:20.

பத்து நிமிடம் கழித்து எழுந்து கொள்ளலாம் என நினைத்தபடி, ஈரமான கண்களை துடைத்தபடி திரும்பி படுக்கிறார். 

தன் மருமகள் மகனிடம் பேசுகிறாள்...

என்னங்க, நான் சொல்றது கேட்பீங்களா, கேட்க மாட்டீங்களா...? 

என்ன ஷீலா, நீ சொல்லி நான் எதை கேட்கல...?

காலையிலயே கோபப்படற‌. 

பின்ன என்னங்க, நானும் மூனு மாசமா சொல்றேன், செய்யறீங்களா...?

எதை சொல்ற...?

ஹூம்... அது மட்டும் மறந்துடுமே...

உங்கப்பாவை எங்கயாவது தூரமான ஊருல முதியோர் இல்லத்தில சேருங்கனு சொல்லிக்கிட்டு இருக்கேனே... அதைத்தான்.

இந்த மாசம் ஏற்பாடு பண்றேன் ஷீலா, கொஞ்சம் பொறுத்துக்கோடா.... என்கிறான்.

குமாரசாமியின் கண்களின் பக்கவாட்டில் நீர் வழிந்து, காதுகளை தொடுகிறது. 

துடைத்துக் கொண்டே நினைத்துக் கொள்கிறார்.

ஏங்க, எனக்கு ஒங்கள நெனச்சாதாங்க கவலையா இருக்கு...?

இவுங்ககிட்ட உங்களால தாக்கு பிடிக்க முடியுமானு தெரியலையே...?

உங்கள அனாதையா விட்டுட்டு போறேனே... 

ஏங்க, சீக்கிரம் வந்துடுங்க... நான் உங்களுக்கா காத்துகிட்டு இருப்பேன், சரியா...!

எல்லாரையும் உள்ளங்கையில வைச்சித் தாங்கனீங்க, ஆனால் ...

மேற்கோண்டு பேச முடியாமல் தேம்பும் மனைவியின் கண்ணைத் துடைத்தபடி, 

உனக்கு ஒன்னும் இல்லையாம்டா...

இப்போதான் ரத்னம் சொல்லிட்டுப் போறான்...

நீ இன்னும் ஒரு வாரத்துல எழுந்து அவனுக்கு காபி போட்டு கொடுப்பியாம், சொன்னான்.

அழுகையை அடக்கிய படி ஆறுதல் சொல்ல, 

எல்லாத்தையும் நானும் கேட்டுட்டேங்க...!

எனக்கு நான் போவதை பத்திலாம் கவலையே இல்லங்க... உங்கள நெனச்சாதான். 

தன் மடியில் மனைவி தன்னை விட்டுப் போனதை நினைத்துப் பார்த்தபடி படுத்திருக்கிறார்.

ஏங்க, மணி 7:20 ஆகுது, உங்கப்பாவை எழுப்புங்க, நியூஸ் போயிடுச்சினா, உலகமே இரண்ட மாதிரி ஆயிடுவாரு உங்கப்பா.

என்னவோ இவர கேட்டுதான் உலகமே இயங்கற மாதிரி...

சொல்லிக்கொண்டே மனைவி தந்த காபியை வாங்கிக் கொண்டு போய்... அப்பா, காஃபி... என்றவாறே அவர் அருகிலிருந்த டீப்பாயின் மீது வைத்து விட்டு உள்ளே போய்விட்டான்.

அய்ந்து நிமிடம் கழித்து வெளியே வந்தவன், காபி எடுக்காததை கண்டு, 

அப்பா, அப்பா...

இரண்டு தடவை கூப்பிட...

பதில் வரவில்லை.

ஒரே குரலுக்கு பதில் தரும் அப்பாவிற்கு என்ன ஆயிற்று...?

உடம்பு சரியில்லையோ...?

மெல்ல குனிந்து அப்பாவின் கையை தொட்டு உலுக்குகிறான் அப்பா, அப்பா...!?!?!

சற்றே அதிர்ச்சியோடு தற்போது கன்னத்தை இருபுறமும் பிடித்து...

தலையை ஆட்டுகிறான், அப்பா, அப்பா...

இவன் கத்தும் சத்தம் கேட்டு ரத்னவேல் உள்ளே வருகிறார், 

என்ன ராஜா...

தெரியல அங்கிள், நாலஞ்சு தடவை கூப்பிட்டும் எந்திரிக்கவே மாட்டேங்கிறாரு...?

ரத்னவேல் மெல்ல உட்கார்ந்து...

கையைத் தூக்கி பல்ஸ் பார்க்கிறார்.

கையை கீழே வைத்தபடி...

தன் நண்பனை மெல்ல குனிந்து முகத்தைப் பார்க்கிறார்.

மேலும் குனிந்து குமார், குமார் என குரல் கொடுத்தபடி...

இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு விட்டு எழுகிறார்.

என்ன அங்கிள்...

திரும்பி கண்ணாடியை கழட்டுகிறார். 

கண்ணீர அதற்குள் கழுத்தை தொடுகிறது.

அவன் தோளை தட்டியபடி, அவன் மகாகிட்ட போயிட்டாம்பா... 

சொல்லிக் கொண்டே வெளியேறுகிறார்.

மாலை 4 மணி.

இறுதி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகளை கவனித்துக் கொண்டிருந்த ரத்னவேலுவை நோக்கி, 

பால்ய நண்பர்கள்  ஆறேழு பேர் வருகின்றனர்.

டேய், நீ ஒரு டாக்டரு, இவ்ளோ நாளா அவனை செக் பண்ணாமயாட இருந்த...? எரிச்சலோடு சேகர் கேட்கிறார்.

நிமிர்ந்து ஒரு பார்வை. அவ்வளவுதான்.

ஒட்டிப்பிறந்த ரெட்டையனுங்க மாதிரியே சுத்தித் திரிஞ்சிங்களேடா...

அவனுக்கு ஹார்ட்ல பிராப்ளம் இருக்கிறது உனக்குத் தெரியாமலா இருந்தது...? பாலாவின் கேள்வி.

அவன்கிட்ட கூட காசை எதிர்பார்த்தியோ...? சம்பத்.

எதற்கும் பதிலில்லை.

சிவா அவரைப் பிடித்து திருப்புகிறார்.

என்னடா, நாங்க கேட்டுகிட்டே இருக்கோம், அவனை அனுப்பற வேலையிலயே இருக்க...? 

அவர் கண்கள் முழுக்க கண்ணீர்...!

சிவாவின் தோளை பாலா தொட்டார்.

சிவா அமைதியாயிருடா. 

அவன், அவங்கம்மா செத்ததுக்கே கலங்காதவன். 

எப்படி அழறான், பாரு.

அவனை பேச வை.

எனக்கு பயமாயிருக்கு... பாலா தவிப்போடு சொல்ல,

பேசுடா, என்ன நடந்ததுன்னு சொல்லுடா... உலுக்குகிறார் சிவா.

அவன் செத்து மூனு வருஷமாச்சு.

நாமதான் லேட்டா கண்டுக்குறோம்... என்கிறார் ரத்னவேல்.

எல்லோரும் அதிர்ச்சியாகி பார்க்க...

ஆமாம்டா... அவன் செத்து மூனு வருஷமாச்சு.

மூன்று

ஆண்டுகளுக்கு முன்னால்... 

மகா போனபோதே அவனும் போயிட்டான்.

நாமதான் கவனிக்கல...!

அதுக்கப்புறம், "சாப்பிட்டியா?"

என்று கேட்க கூட யாரும் இல்லாத நேரத்திலேயே அவன் செத்துட்டான்; ஆனால் நாமதான்  கவனிக்கல...!?!

"பொண்டாட்டி போனதுமே போய்த் தொலைய வேண்டியதுதானே" 

என்று தம் காதுபடவே -  மருமகள் பேசியபோதே அவன் போயிட்டான்; அப்போதும் நாமதான் கவனிக்கல...!

'தாய்க்குப் பின் தாரம்... 

தாரத்துக்குப் பின் வீட்டின் ஓரம்...!'

என்று அனைவராலும் புறக்கணிக்கப்பட்டு 

வாழும்நிலை வந்தபோதே 

அவன் போயிட்டான்; நாமதான் யாருமே கவனிக்கல...!

"காசு இங்கே மரத்திலேயா காய்க்குது"  என்று மகன் அமில வார்த்தையை வீசிய போதே அவன் போயிட்டான்;

நாமதான் கவனிக்கல...!

நேத்து விடிகாலம் வாக்கிங் போகறதுக்காக, 

அவனை எழுப்ப கதவை தட்டப் போனேன்... அப்போ...

"என்னங்க... ரொம்ப தூரத்திலே இருக்குற முதியோர் இல்லத்திலே விட்டுவிட்டுத் தலைமுழுகிட்டு வந்திடுங்க...!" என்று மருமகளின் சுடுசொற்கள் 

என் காதில் விழுந்தது போல் அவனும் கேட்டிருப்பானு நெனைக்கிறேன்.

அதான் போயிட்டான், தூரமா...!

என்று கதறிய ரத்னவேலை...

பாலா தழுவிக்கொண்டே தட்டிக் கொடுத்தார்.

நேத்து பழைய ரிமோட்ட கையில வச்சிகிட்டு உட்கார்ந்திருந்தான், சேனலை மாத்துடா, என்னடா இந்தி பாட்டு கேட்கிற...? என்றபோது... 

அதோ இருக்கு பாரு ரிமோட்டு, மாத்திக்கோ என்றான்.

நீ வச்சிருக்கயே அது என்னடா? என்றபோது..

இது போயிட்டிச்சி, ஆனா மகா யூஸ் பண்ணது என்றான்

பார்க்கும் எல்லாவற்றிலும் அவன் மகாவோடு வாழ்ந்தான்.

ஒருவேளை மகன் நம்மை முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டால்....? என்று நினைக்கும்போதே செத்துட்டிருப்பான்...!

அவனுக்கு ஒரு பிராப்ளமும் இல்லடா...! என்று கதறும் ரத்னத்தை ஆற்றுப்படுத்த வழியின்றி....

எல்லோரும் அழுகின்றனர்...!

தோழர்களே...!

நீங்கள் செல்லும் வழியிலும் இப்படி யாராவது இறந்து கொண்டிருப்பார்கள்... 

ஓரிரு மணித் துளிகளாவது 

நின்று பேசிவிட்டுச் செல்லுங்கள்...! 

இல்லையேல்...

உங்கள் அருகிலேயே - 

உங்கள் வீட்டிலேயே இறந்து கொண்டிருப்பார்கள்... 

புரிந்து கொள்ள முயலுங்கள்...

வாழ்க்கை என்பது... 

வாழ்வது மட்டுமல்ல...! 

வாழ வைப்பதும்தான்...

சுடுசொற்களால், புறக்கணிப்பால்... 

பலர் உயிருடனேயே இறந்து விடுகின்றனர். 

புதைக்கத்தான்... 

சில ஆண்டுகள் ஆகின்றன...!

இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் ஒரு வேண்டுகோள்...

நிச்சயம் இது உங்களுக்கான கதை அல்ல.

நம்புகிறேன்...

உங்களுக்கானதாக மாறிவிடக் கூடாது என்றும் வேண்டுகிறேன்.

நிச்சயமாக உங்களிடமிருந்து ஏதோ ஒரு பிரதிபலிப்பை எதிர்பார்க்கிறேன்.

அதுவே என்னை மேலும் முயற்சிக்கத் தூண்டும்.

Wednesday, October 14, 2020

மாமியாருக்கு 10 மடங்கு

தனது மாமியாரை பிடிக்காத ஒரு இளம் பெண் அழுது புரண்டு தன் கஷ்டம் எல்லாம் தீர்த்திட வேண்டி சிவனை நோக்கி விரதமிருந்தாள்.  தவமாய் தவம் கிடந்து மெய் வருத்தி நாள்தோறும் பூஜை செய்தாள்.

அவளது தவத்தால் மனம் இரங்கிய சிவபெருமான் ஒரு நாள் அவன் முன் தோன்றி மகளே உனது மனவலிமையை மெச்சி மகிழ்ந்தேன்! ஏதாவது ஒரு வரம் கேட்டு பெற்றுக்கொள் என்றார்.

அப்பனே...எனக்கு ஒரு வரம் போதாது மூன்று வரம் வேண்டும் என்று  பெண் கெஞ்சினாள்.

பெண் புத்தி பின் புத்தி ! 

உள்ளுக்குள் நகைத்தார் சிவபெருமான்.

சரி குழந்தாய் !

ஒரு கண்டிஷனுடன் உனக்கு மூன்று வரங்கள் அளிக்கப்படும்.

கண்டிஷனை ஏற்றுக் கொள்கிறாயா என்று கேட்டார்.

அவளோ அழகாய் சம்மதித்தாள்.

பகவான் கண்டிஷனை கூறினார்.

இதோ பார் மகளே நீ எது கேட்டாலும் கிடைக்கும்!  ஆனால்  உனக்கு கிடைப்பதுபோல் உன் மாமியாருக்கு பத்து மடங்கு அதிகமாக கிடைத்துவிடும்! என்ன சொல்கிறாய்?

மிக்க மகிழ்ச்சியுடன் முகம்குளிர சம்மதித்தாள் மருமகள்.

விதி யாரை விட்டது என்று எண்ணியபடி அவள் கேட்கும் வரத்தை கொடுக்க தயாரானார் சிவபெருமான்.

முதல் வரம்

எனக்கு 100 கோடி ரூபாய் வேண்டும்.

மாமியாருக்கு ஆயிரம் கோடி கிடைத்தது!

இரண்டாவது வரம்

இந்திய கண்டத்திலேயே  மிக அழகிய பெண்ணாக நான் மாறவேண்டும்.

உலகிலேயே அதீத அழகான பெண்ணாக மாமியார் மாறினார்!

மூன்றாவது

எனக்கு மைல்டாக ஒரு ஹார்ட் அட்டாக் வேண்டும்.

மாமியார் இதயம் வெடித்து செத்தாள்.

சிவபெருமான் மூர்ச்சையானார்.

யாருகிட்ட..என்கிட்டயா..


Sunday, October 11, 2020

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க வாழ்க 

30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். 

(கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான்

 (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).

50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான்.

 (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).

60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான்.

 (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).

70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான்

 (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).

80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான்.

 (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).

90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான்

 (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).

100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான்

 (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).

அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..

என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டு விடுவோம்.

மனித வாழ்வில் நாற்பது வயதுக்குள் நாம் என்ன மாதிரியான வாழ்க்கையை வாழப்போகிறோம் என்பது முடிவு செய்யப்பட்டு விடுகிறது...