Pages

Tuesday, November 26, 2024

மீனாக்ஷி

"அம்மாடி!! மீனாக்ஷி!! ராஜ உத்தரவு!! மடப்பள்ளில நிறைய நைவேத்யம் பண்ணனும்!! முடியல்லே!! சித்த தூங்கிக்கறேன்!! மறக்காத நேரத்துக்கு எழுப்பிடுடீ!! மறந்துடாதே" மீனலோசனையின் மீதுள்ள அதீதமான உரிமையால் ஶ்ரீநிவாஸர் *தேவிக்கே உத்தரவிட்டு*, மடப்பள்ளியை உள்பக்கமாய் தாழ் போட்டுக்கொண்டு உறங்கிப்போனார்.

தடதடவென சத்தம்!! "யார் மடப்பள்ளி கதவை இப்படி உடைக்கறது!!" கோபத்துடன் எழுந்த ஶ்ரீநிவாஸர் கதவைத் திறந்து பார்த்தால் ராஜ ஸேவகர்கள்!!

"என்னங்கானும்!! நீர் கதவை அடைச்சுண்டு உள்ள என்ன பண்றீர்!! காலத்துக்கு அம்பாளுக்கு நைவேத்யம் ஆக வேண்டாமா!! குருக்கள் காத்துண்ட்ருக்கார்!! நைவேத்யம் எடுத்துண்டு வாங்கோ!!" ராஜ ஸேவகர்களோடு வந்த பட்டரின் குரல்.

"ஐயோ!! மீனாக்ஷி!! கைவிட்டுட்டியேடீ!! எழுப்பி விடுன்னு சொன்னேனே!! ஒரு நைவேத்யமும் தயாராகலையே!! நான் என்ன பண்ணுவேன்!! அம்மா!! ராஜ தண்டனை தான் எனக்கு இன்னிக்கு!!" பயத்திலும் அதிர்ச்சியிலும் உறைந்தார் ஶ்ரீநிவாஸர்.

"நகருங்காணும்!!" பட்டரொடு நான்கைந்து பேர் நுழைந்தனர் உள்ளே!!

"ஆஹா!! சக்கரைப் பொங்கல்!! தேங்காய் சாதம்!! புளியஞ்சாதம்!! எலுமிச்சை சாதம்!! போளி!! வடை!! பால் பாயசம்!! ஒன்னு பாக்கியில்லையே ஓய்!! இத்தனையும் தனியாவா பண்ணேள்!! ஒன் சிஷ்யாள்ல்லாம் “அண்ணா கதவை சாத்திண்டார்!! எப்படி திறக்கறதுன்னு தெரியல்லேன்னு புலம்பிண்ட்ருந்தாளே!!" சொன்னவரின் கண்கள் சர்க்கரை பொங்கலிலும், போளியிலுமே இருந்தது.

மீனாக்ஷிக்கு நைவேத்யம் ஆனதும் ஸோமசுந்தரன் இதை சாப்டறானோ இல்லையோ, நாம சாப்டுடனும். அவர் மனது துடித்துக் கொண்டிருந்தது.

ஶ்ரீநிவாஸருக்கு ஒரே குழப்பம்!! "என்னதிது!! நாம தான் எழுந்துக்கவே இல்லையே!! யார் இதெல்லாம் பண்ணிருப்பா!!" நிகழ்வின் ப்ரமிப்பில் ஶ்ரீநிவாஸர் விலகவில்லை.

"உம் கைக்கு தங்க மோதரம் போடணும் ஓய்!! வாரும்!! மீனாக்ஷிக்கு தீபாராதனை ஆகப்போறது!! பார்ப்போம்!!" எல்லோரும் சிவ ராஜமாதங்கியின் ஸந்நிதிக்கு விரைந்தனர்.

குருக்கள் அம்பாளுக்கு நைவேத்யம் செய்து பின் தீபாராதனைக்கு திரையை விலக்கினார்.

"ஐயோ!! மாணிக்க மூக்குத்தி காணுமே!! அம்மா!! மீனாக்ஷி!! என்னடி சோதனை இது!!" குருக்களின் கதறல் மீனாக்ஷி கோவிலுக்கு வெளி வரை எதிரொலித்தது.

மீனலோசனையின் அழகையே மெருகூட்டும் மூக்குத்தி தொலைந்த துக்கம் ராஜாவிற்கும், மற்ற அனைவருக்கும்!! ஶ்ரீநிவாஸருக்கோ நடப்பதைக் கண்டு பயம்!! அபசாரம் நிகழ்ந்ததோ என்று!!

அசரீரி கேட்டது...

"அஞ்சற்க!! என் பிள்ளை ஶ்ரீநிவாஸன் சரீர களைப்பால் என்னை எழுப்பிவிடச் சொல்லி உறங்கிப்போனான்!! காலத்தில் எழுப்பிடத் தான் நானே சென்றேன்!! அயர்ந்து அவன் உறங்குவதைக் கண்ட நான் அவனை எழுப்ப மனமில்லாது மடப்பள்ளிக்குள் சென்றேன். துளி வெளிச்சமும் இல்லாத இம்மடப்பள்ளியில் சமைப்பதற்கு வெளிச்சம் வேண்டுமே என்று எனது மூக்குத்தியை கழற்றி வைத்து, அதன் ஒளியில் நானே எனது நைவேத்யங்களை சமைத்தேன்!! குழந்தை உறங்குவதைக் கண்ட தாய் அதனை எழுப்புவாளோ!! அவனால் செய்ய வேண்டிய பணி என்னால் முடிக்கப்பட்டது!! மடப்பள்ளிக்கு சென்று பாருங்கள் !! மூக்குத்தி இருக்கும் !!" சட்டென நின்றது அசரீரீ.

நடப்பது கனவா நினைவா என யோசிப்பதற்க்குள் மீனாக்ஷி மூக்குத்தி மடப்பள்ளியிலிருந்து வந்தது.

"அம்மா!! மீனாக்ஷீ!!" ஶ்ரீநிவாஸர் கண்களில் ஜலம் பெருக கதறி மீனாம்பாளின் பாதத்தில் விழுந்தார். "அம்மா!! அம்மா!!ன்னு ஸதா கூப்பிட்டதற்கு நீயே எனக்காக நைவேத்யம் சமைச்சிருக்கியே!! தாயே!! நான் என்ன பாக்யம் பண்ணேன்!!" கண்ணீர் கண்களை மறைக்க கதறினார் ஶ்ரீநிவாஸர்.

"தாயே!! மீனாக்ஷீ!! தாயே!! மீனாக்ஷீ!!" லக்ஷக்கணக்கான ஜனங்கள் நடந்த அதிசயத்தைக் கண்டு திரண்டனர் கோவிலில்!!

ராஜனும் அமைச்சரும் ஶ்ரீநிவாஸரை ஸாஷ்டாங்கமாய் நமஸ்கரித்தனர் "ஸ்வாமீ!! நீரே மீனாக்ஷி!! மீனாக்ஷியே நீங்க!!" வேறொன்றும் சொல்லத் தோணவில்லை யார்க்கும்!!

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" திக்கெட்டும் அம்மையின் நாமம் ஒலித்தது.

ராஜராஜேச்வரியான மாதங்கிக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

"பாகம் செய்து என் நாவை பாடவும் செய்தாய் தாயே

ஊகமிலார்க்கு இன்னும் உதவினாய் சோகந்தீர் நாதநலம் நாட்டுகின்ற நான்மறையாம் தண்டை சேர்பாதநிழல் யான் தங்கப்பண்"

ஶ்ரீநிவாஸரின் நா பாடத்தொடங்கியது!! ஆம் கல்வியறிவு இல்லாத ஶ்ரீநிவாஸர் கவிஶ்ரீநிவாஸர் ஆனார்.

காமாக்ஷி பட்டாரிகை மூககவிக்கருளியது போல், அகிலாண்டநாயகி காளமேகத்திற்கு அருளியது போல், மீனாக்ஷம்மை ஶ்ரீநிவாஸர்க்கு அருளி விட்டாள்.

படிப்பறிவில்லா ஶ்ரீநிவாஸர் பராசக்தி கடாக்ஷத்தால் கவிமாரி பொழிந்தார்.

"மீனாக்ஷி!! மீனாக்ஷி!!" நாமம் ஒன்று போதாதோ!! மோக்ஷமே கைமேல்!!

ஶ்ரீமாத்ரே நம:

வக்த்ரலக்ஷ்மீ பரிவாஹ சலன்மீனாப லோசனாயை நம:

காமாக்ஷ்யை நம:

லலிதாம்பிகாயை நம:

No comments:

Post a Comment