Pages

Saturday, May 27, 2023

ராமர் பாதம் பட்ட குடிசை

 படிக்கும் போதே புல்லரிக்கிறது. 

ராம் ராம் கலியுகத்திலும் கூட ஆத்மார்த்த பக்திக்குப் பரந்தாமன் இறங்கி/இரங்கி வருவான் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

ராமர் பாதம் பட்ட குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க  வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு... உங்களை ஒன்றும் செய்யாது,, வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு, துணியை மாற்றி  தோசை  சாப்பிடுங்க.. பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

வீடு என்றால் ஏதோ பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.

நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு,, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

காலையில் கண் விழிக்கும் போது குடிசையில் மேலே இருக்கும் குறுக்கு கட்டையில் பாம்பு தொங்கிக் கொண்டு நிற்கும்.... பயத்தில் அழுவோம்... அம்மா அப்போதும் பாம்பு ஒன்றும் செய்யாது.. கத்தாதே .. ராமா ராமா என்று சொல்லு என்பாள்..

ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார்.

ஏகாதசி, சனிக்கிழமை விரதம் என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவுகூர்கிறார்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் எங்களுடைய தெய்வம். வருடத்தில் ஒரு நாள் கோயில் உற்சவத்தை பார்த்துவிட்டு வருவோம். அதுதான் குழந்தைகளான எங்களுக்கு வருடத்தில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தோஷமான நாள். மறுபடியும் அடுத்த வருடம் அந்த ஒரு நாளுக்காக தவம் கிடப்போம்.

ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட மூன்று மடங்கு உழைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்.

ஒரு வருடம்  மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு பணம் கட்டினார். கோயிலில் இவர்களை முன்னிறுத்தி ஒவ்வொரு பூஜையும் செய்து முதல் மரியாதை செய்து இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.  குழந்தைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம்.. பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும். 

வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் வெளியில் சென்று தங்கள் மானசீகமான ராமரை காண்பது... அதற்கும் இந்த வருடம் வழியில்லை. மனதிற்குள்ளேயே அழுதார்கள்.

ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான்.. எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை... என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு... 

பள்ளிக்கூடம் செல்லும் வழியெல்லாம் ராம நாமம் சொல்லிக்கொண்டே செல்வோம்.

அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது.. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள்.. அப்பாவிடம் மன வருத்தம்.. காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம்..

வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள்

குடிசையின் அளவை நோட்டம் விட்ட அவர்கள் சுவாதீனமாக உள்ளே வந்து அந்த அழுக்கு தரையில் அமர்ந்து விட்டார்கள்.

இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்..

இவர் என் அண்ணா ராமசாமி . நாங்கள் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு பணம் கட்ட போயிருந்தோம்., அந்த குறிப்பிட்ட தேதியை உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும், உங்கள் வரவை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உற்சவத்திற்கு கட்டிவிட்டு  அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்.

இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம், என்று கிளம்ப எழுந்து விட்டார்கள்.

பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக்கொண்ட விநயம்,... ராமசாமி அண்ணா என்பவர் அழகான புன்னகையுடன் கை கூப்பிக் கொண்டு எழுந்து கொண்டார்.

அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள் .

ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது,, தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில்  இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக்கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டுபோய் வைத்துவிட்டார். பல்லாவரத்தில் இருந்து தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது  திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார்.

பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி  மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விவரங்கள் கேட்க அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்..

மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.

அப்பொழுதுதான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.

சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம்பட்ட இடமாயிற்று....

குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது.

வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.

இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது.

சொன்னவர்.

சகுந்தலா தேவி

No comments:

Post a Comment