Pages

Saturday, May 27, 2023

ராமர் பாதம் பட்ட குடிசை

 படிக்கும் போதே புல்லரிக்கிறது. 

ராம் ராம் கலியுகத்திலும் கூட ஆத்மார்த்த பக்திக்குப் பரந்தாமன் இறங்கி/இரங்கி வருவான் என்பதற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்.

ராமர் பாதம் பட்ட குடிசை

அம்மா..... அம்மா....

குழந்தைகளின் அலரல் அந்த தெருவையே திரும்பிப் பார்க்க  வைத்தது.

ஏன் இப்படி உயிர் போற மாதிரி தெருவில் நின்று கத்துறீங்க... உள்ளே வாங்களேன்.

பாம்பு இருக்குமா... பெரிய பாம்பு பயத்தில் குழந்தைகளுக்கு வார்த்தைகள் கூட வரவில்லை.

பாம்பு ஏற்கனவே தவளையை முழுங்கி சாப்பிட்டாச்சு... உங்களை ஒன்றும் செய்யாது,, வீட்டிற்குள் வந்து கைகால்களை அலம்பிட்டு, துணியை மாற்றி  தோசை  சாப்பிடுங்க.. பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்த அம்மா கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளவில்லை.

வீடு என்றால் ஏதோ பெரிதாக கற்பனை செய்து விடாதீர்கள்...

அது ஒரு குடிசை வீடு. பல்லாவரத்தில் பல குடிசைகளுக்கு நடுவில் ஸ்ரீனிவாச ஐயங்கார் அவர்களின் குடும்பம் வசிக்கும் இடம்.

நட்பு என்ற பெயரில் கூப்பிடாமல் பாம்பு,, பூரான், பல்லி, பெருச்சாளி, தேள், என்று பலதும் வீட்டிற்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும்.

காலையில் கண் விழிக்கும் போது குடிசையில் மேலே இருக்கும் குறுக்கு கட்டையில் பாம்பு தொங்கிக் கொண்டு நிற்கும்.... பயத்தில் அழுவோம்... அம்மா அப்போதும் பாம்பு ஒன்றும் செய்யாது.. கத்தாதே .. ராமா ராமா என்று சொல்லு என்பாள்..

ஸ்ரீனிவாச ஐயங்கார் குழந்தைகளுக்கு ராமநாம பக்தியை நன்கு ஊட்டி வளர்த்தார்.

ஏகாதசி, சனிக்கிழமை விரதம் என்று அம்மா அப்பா பட்டினி கிடந்தது எங்களை மூன்று வேளை வயிறார சாப்பாடு கொடுக்கத்தான் என்று இப்போது புரிகிறது. மனதால் அழுகிறோம் என்று மூத்த பெண் விஜயலட்சுமி கண்ணீருடன் நினைவுகூர்கிறார்.

மதுராந்தகம் ஏரிகாத்த ராமர் கோயில் எங்களுடைய தெய்வம். வருடத்தில் ஒரு நாள் கோயில் உற்சவத்தை பார்த்துவிட்டு வருவோம். அதுதான் குழந்தைகளான எங்களுக்கு வருடத்தில் கிடைக்கும் ஒரே ஒரு சந்தோஷமான நாள். மறுபடியும் அடுத்த வருடம் அந்த ஒரு நாளுக்காக தவம் கிடப்போம்.

ஸ்ரீனிவாச ஐயங்காருக்கு 150 ரூபாய் சம்பளம். அரசாங்க உத்தியோகம். சுத்தமான கை, பக்தி நிறைந்த மனசு, வாங்குகிற சம்பளத்தைவிட மூன்று மடங்கு உழைத்துவிட்டு இரவு ஒன்பது மணிக்குத்தான் வீட்டிற்கு வருவார்.

ஒரு வருடம்  மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு ஒரு நாள் நிகழ்ச்சிக்கு கஷ்டப்பட்டு பணம் கட்டினார். கோயிலில் இவர்களை முன்னிறுத்தி ஒவ்வொரு பூஜையும் செய்து முதல் மரியாதை செய்து இவர்களுக்கு பிரசாதம் கொடுக்கப்பட்டது.  குழந்தைகளுக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.

அதற்கு அடுத்த வருடம் சீனிவாச ஐயங்கார் தன்னால் முடியாது என்று சொல்லிவிட்டார். குழந்தைகளுக்கு ஏகமான வருத்தம்.. பெற்றவர்கள் மீதும் அதைவிட அந்த மதுராந்தகம் கோயில் ராமர் மீதும். 

வருடத்தில் ஒரே ஒரு நாள் தான் வெளியில் சென்று தங்கள் மானசீகமான ராமரை காண்பது... அதற்கும் இந்த வருடம் வழியில்லை. மனதிற்குள்ளேயே அழுதார்கள்.

ராமா நாங்கள் கேட்பது உன்னுடைய தரிசனம் தான்.. எந்த ஒரு பொருளையும் எங்களுக்காக கேட்கவில்லை. உன்னுடைய உற்சவத்தில் கலந்து கொள்ள அப்பாவிடம் இந்த வருடம் பணம் இல்லை... என்ன பாவம் செய்தோம் இந்த நிலைமைக்கு... 

பள்ளிக்கூடம் செல்லும் வழியெல்லாம் ராம நாமம் சொல்லிக்கொண்டே செல்வோம்.

அந்த குழந்தைகளுக்கு ராம நாமம் தவிர வேறு ஒன்றும் தெரியாது.. அன்று உற்சவத்திற்கு பணம் கட்ட கடைசி நாள்.. அப்பாவிடம் மன வருத்தம்.. காலையிலிருந்து இன்னும் பேசவில்லை. பள்ளிக்கூடத்திற்கு கிளம்பும் நேரம்..

வேகமாக ஒரு கார் வந்து இவர்கள் குடிசையின் முன் நின்றது. காரிலிருந்து இறங்கிய இரு வாலிபர்கள் இது சீனிவாச ஐயங்கார் வீடு தானே என்று பவ்யமாக கேட்டார்கள்

குடிசையின் அளவை நோட்டம் விட்ட அவர்கள் சுவாதீனமாக உள்ளே வந்து அந்த அழுக்கு தரையில் அமர்ந்து விட்டார்கள்.

இரு வாலிபர்களும் நல்ல உயரம், தலையை நன்றாக படிய வாரி விட்டிருந்தார்கள், பெரிய ஊடுருவும் கண்கள் சாந்தமான முகம், நெற்றியில் சந்தனத்தை அழகாக வைத்திருந்தார்கள்.

வந்தவர்களில் ஒருவர் பேசத் தொடங்கினார்..

இவர் என் அண்ணா ராமசாமி . நாங்கள் மதுராந்தகம் கோயில் உற்சவத்திற்கு பணம் கட்ட போயிருந்தோம்., அந்த குறிப்பிட்ட தேதியை உங்கள் குடும்பத்திற்கு ஒதுக்கி இருப்பதாகவும், உங்கள் வரவை அவர்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்கள்.

என்னுடைய அண்ணி சீதா தான் கொண்டு வந்த பணத்தை அந்த உற்சவத்திற்கு கட்டிவிட்டு  அன்றைக்கு உங்கள் குடும்பத்தையே உற்சவத்தில் கலந்து கொள்ள சொல்லியிருக்கிறார்.

இதைச் சொல்லிவிட்டு போகத்தான் நாங்கள் வந்தோம், என்று கிளம்ப எழுந்து விட்டார்கள்.

பேச்சில் தெளிவு, புன்னகை மாறாமல் பேசியது, கைகூப்பி வேண்டிக்கொண்ட விநயம்,... ராமசாமி அண்ணா என்பவர் அழகான புன்னகையுடன் கை கூப்பிக் கொண்டு எழுந்து கொண்டார்.

அய்யங்கார் தம்பதிகளுக்கு கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது, பேச்சே வரவில்லை, மந்திரத்திற்கு கட்டுண்டவர்கள் போல் கைகூப்பி நின்றிருந்தார்கள் .

ராமசாமி அண்ணாவாக வந்தவர் குழந்தைகள் பள்ளிக்கூடம் போகும் நேரம் போலிருக்கிறது,, தாங்கள் அவர்களை எங்கள் வண்டியில்  இறக்கி விட்டுப் போகிறோம், என்று சொல்லிக்கொண்டே புத்தக பைகளை காரினுள் கொண்டுபோய் வைத்துவிட்டார். பல்லாவரத்தில் இருந்து தியாகராய நகரில் உள்ள சாரதா வித்யாலயா பள்ளிக்கூடம் வரை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவுக்கு காரில் எதுவும் பேசாமல் அவ்வப்போது  திரும்பிப் பார்த்து குழந்தைகள் பக்கம் ஒரு தெய்வீகமான புன்னகையை காட்டுவார்.

பள்ளிக்கூட வாசலில் குழந்தைகளை இறக்கிவிட்டு நன்றாக படியுங்கள் என்று சொல்லி  மனதைக் கவரும் அழகான புன்னகையுடன் விடைபெற்றுக் கொண்டார்கள்.

மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் தங்களுக்காக பணம் கட்டியவர்கள் பற்றிய விவரங்கள் அர்ச்சகர்களுக்கு தெரிந்திருக்கும் என்று நினைத்து விவரங்கள் கேட்க அவர்கள் தங்களுக்கு எதுவுமே தெரியாதென்றும் பணம் மட்டும் ஸ்ரீனிவாச ஐயங்கார் பெயரில் கட்டியிருக்கிறார்கள் என்று சொன்னார்கள்..

மேலும் அர்ச்சகர்கள் நீங்கள் சொல்லும் ராமசாமி அண்ணாவும் அண்ணி சீதாவும் என்ற பெயர்களைப் பார்த்தால் வந்தவர்கள் சாட்சாத் ராம லட்சுமணன் தான் என்று அடித்துக் கூறி விட்டார்கள்.

அப்பொழுதுதான் சீனிவாச ஐயங்கார் குடும்பத்தாருக்கு உடலில் மின்சாரம் பாய்ந்தது போல் இருந்தது, கால்கள் தள்ளாடின, கண்களில் தாரை தாரையாக கண்ணீர் வழிந்தோடியது. வந்தவர்கள் எல்லாம் இதை ஏகமனதாக ஆமோதித்தார்கள்.

வீட்டிற்கு திரும்பிய குடும்பத்தினர் ராமர் படத்தின் முன்பு விளக்கேற்றி ராமா ராமா என்று பக்தியில் உருகினார்கள்.

சீனிவாச ஐயங்காரின் குடிசை ராமர் பாதம்பட்ட இடமாயிற்று....

குழந்தைகளின் படிப்பு அமோகமாக வளர்ந்தது சீரும் சிறப்புமாக வாழ்க்கை துணைகள் அதே பகுதியில் சொந்த வீடுகள் கட்டிக்கொண்டு இன்றைக்கு பேரன் பேத்திகள் உடன் ராமநாமத்தை விடாமல் சொல்லிக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். 

மகாலட்சுமி ஆக விளங்கும் அன்னை சீதா தேவி கொடுத்த பணம் அட்சயம் ஆக வளர்ந்து கொண்டிருக்கிறது.

வருடந்தோறும் இன்றும் குடும்பமாக மதுராந்தகம் ராமர் கோயில் உற்சவத்தில் கலந்து கொண்டு கைங்கரியம் செய்து கொண்டு வருகிறார்கள்.

ஐயங்காரின் புதல்வியான விஜயலட்சுமி அவர்கள் இதை நம்மிடம் விவரிக்கும்போது அவர்களின் பழைய வாழ்க்கையையும் மறக்கவில்லை அவர்களின் ராம பக்தியும் சிறிதளவும் குறையவில்லை.

இவரிடம் நாம் விடை பெறும்போது சீதா தேவி சமேத ராம லட்சுமணர்கள் உருவம் உயிரோட்டமாக நம் கண் முன்னே விரிகிறது.

சொன்னவர்.

சகுந்தலா தேவி

Friday, May 26, 2023

உள்ளம் உருகுதையா

திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள் பாடிப் பிரபலமாகிய ‘உள்ளம் உருகுதையா, முருகா உன்னடி காண்கையிலே, அள்ளி அணைத்திடவே எனக்கோர் ஆசை பெருகுதப்பா’ போன்ற உள்ளத்தை உருக்கும் எண்ணற்ற பாடல்களைப் பாடிய ஆண்டவன்  பிச்சி அம்மா, முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தார்.

ஆண்டவன் பிச்சி - இவ்விளம்பர யுகத்தில் தன்னை அதிகம் வெளிப்படுத்திக்கொள்ளாமல் குடத்திலிட்ட விளக்காக வாழ்ந்து மறைந்தவர். ‘ஆண்டவன் பிச்சி’ என்று மகா பெரியவாளால் பிரியமுடன் அழைக்கப்பட்ட மரகதவல்லி அம்மாள். 

(ஆண்டவன் பிச்சை என்றும் குறிப்பிடப்படுவதுண்டு) இரண்டு வயதிலேயே தாயை இழந்து, படிப்பு, பாட்டு ஏன் விளையாட்டிலும்கூட நாட்டமில்லாதிருந்த எட்டு வயது மரகதத்திற்குக் குடும்பத்தினர் திருமணம் செய்வித்துப் புகுந்த வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். அவரது தந்தைவழிப் பாட்டி சுந்தரி அம்மாள் மட்டும் “இப்பெண்ணிற்கு நல்ல அறிவைக் கொடுப்பாயாக’’ என்று இடைவிடாமல் முருகனை வேண்டிக் கொண்டிருந்தார்.

பத்து வயதிருக்கும்போது, பிறந்த வீட்டிற்கு வந்திருந்த மரகதத்தின் வாழ்க்கையைத் திசை மாற்றிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. முருகப் பெருமான், குழந்தை மரகதத்தின் கனவில் தோன்றி, ஆடும் பரிவேல், அணி சேவலுடன் வந்து அவள் நாவில் பிரணவத்தைப் பொறித்தான். பள்ளிக்கே சென்றிராத, படிப்பறிவு சிறிதுமில்லாத மரகதத்தின் வாக்கில், மடை திறந்த வெள்ளம்போல் பக்திப் பாடல்கள் பெருக்கெடுத்தன. ஷடாக்ஷர மந்திரத்தை அவளுக்கு உபதேசித்து, எப்போதும் ஜபம் செய்யும் படிக் கூறி மறைந்தான் முருகன்.

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. அடுத்தடுத்து ஒன்பது குழந்தைகளுக்குத் தாயானாள் மரகதம். ஐந்தாவது பிரசவம் மிகக் கடுமையாக இருந்தது. கந்த சஷ்டிக்கு இரண்டு நாட்கள் முன்பு ஆண் குழந்தை பிறந்தது. கந்த சஷ்டி நாளன்று மாலை, வீட்டிலிருந்த மற்றவர்கள் சூரசம்ஹார விழாவைக் காணச் சென்று விட்டனர். இரவு ஜுர வேகத்தில் அரற்றிக் கொண்டிருந்த மரகதத்திற்கு ஒரு கனா வந்தது. அதீத அழகுடன் தோன்றிய முருகன் ஒன்றரை வயதுக் குழந்தையாய் மரகதத்திடம் வந்து ‘என்னை எடுத்துக் கொள்’ என்று கெஞ்சினான். 

வாரி அணைத்துக் கொண்ட மரகதம் ‘நீ யார்’ என்றதும் ‘மால் மருகன்’ என்றான் குழந்தை. ‘எனக்கு ஒரு தாலாட்டுப் பாடேன்’ என்று குழந்தை கூறியதுதான் தாமதம், ஆனந்த சாகரத்தில் மூழ்கிய மரகதம், இருநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை முருகன் மேல் பாடினாள். பிரசவ அறையில் உதவிக்கிருந்த பெண் ஓடிச்சென்று பென்சிலும் காகிதமும் கொண்டு வந்து அப்படியே அவற்றை எழுதி எடுத்துக் கொண்டாள்.

உணர்ச்சி வசப்பட்டு மரகதம் நடுநிசியில் உரக்கப் பாடியது மாமியார் செவிக்கு எட்டியது. கோபத்துடன் உள்ளே எட்டிப் பார்த்தவர், இரண்டுநாளே ஆன குழந்தை அழுது கொண்டிருந்த¬

தக்கூட கவனிக்காமல் பாடிக் கொண்டிருந்த மருமகளைக் கண்டு ‘குழந்தை அழுறதுகூடத் தெரியாமல் அப்படி என்ன பாட்டு, ஆண்டிமேல்! ஆண்டியைப் பாடும் உன்னால் இந்தக் குடும்பமே பிச்சை எடுக்கப் போகிறது. 

இனிமேல் முருகனைப் பற்றிப் பாடவோ எழுதவோ ஏன் பேசவோகூட மாட்டேன் என்று உன் கணவர், குழந்தைகள் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்’’ என்று கோபத்துடன் கூறியதும் பயந்துபோன மரகதம் அப்படியே செய்தாள். அதே வேகத்துடன் மாமியார், அப்பாடல்கள் அடங்கிய புத்தகத்தை ஒரு பெட்டியில் போட்டுப் பெரிய பூட்டையும் மாட்டி விட்டார்.

இந்நிகழ்ச்சிக்குப்பின் 24 வருடங்கள் ஓடிய பின்னரே மரகதத்தின் மாமியார் இறைவனடி சேர்ந்தார். இவ்வளவு காலமும், மனது துடித்த போதிலும் மரகதம் வாய் திறந்து முருகனைப் பற்றி பேசவோ, வாய் திறந்து பாடவோ செய்யவில்லை. ஆனால், இறைவன் சித்தம் வேறு விதமாக இருந்தது. உறவுப் பெண்மணி ஒருவர் வந்து தான் நடத்தும் பத்திரிகைக்கு ஒரு பாட்டு எழுதித் தருமாறு மரகதத்திடம் கேட்டார்.

“நான் பாடியே எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டனவே’’ என்று கூறிய மரகதம்மாள், மாமியார் பூட்டி வைத்த பெட்டியைத் திறந்து பார்த்தார். உள்ளே பெரும் அதிசயம் காத்திருந்தது. ஒரு அட்டைப் பெட்டிக்குள் மாமியார் வைத்திருந்த ரூபாய் நோட்டுகள் செல்லரித்துப்போயிருந்தன. ஆனால், ஆண்டியின் மேல் மரகதம்மாள் பாடிய பாடல்கள் அடங்கிய புத்தகம் மட்டும் அப்படியே இருந்தது! 


1949 ஜனவரி 21. விடியற்காலையில் அம்மா அருகில் குழந்தையாகத் தோன்றினான் முருகன். “எல்லாப் பாடல்களையும் எடுத்துக்கொடுத்துவிட்டாயே! மீண்டும் என்மேல் பாட ஆரம்பி.’’ என்றான். 

கணவர் மீதும் குழந்தைகள் மீதும் ஆணையிட்டிருந்தபடியால் அவர்களுக்கு ஏதும் பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாதே என்று பயந்தாள் மரகதம். “பேனாவைப் பிடித்திருப்பது உன் கை; எழுதுவது என் செயல்’’ என்று கூறி மறைந்தான் முருகன். அன்று அவன் எடுத்துக்கொடுத்த அடியை வைத்து “அருணோதய சூர்யபிம்பமதுபோல் முகமும்“ என்று துவங்கி 108 பாடல்களை எழுதினார் மரகதம்மாள். அதுவே ‘ஆத்ம போதம்’ என்ற பாடல் தொகுப்பாக வெளிவந்தது.

உள்ளம் உருகுதய்யா...

உள்ளம் உருகுதய்யா - முருகா 

உன்னடி காண்கையிலே 

அள்ளி அணைத்திடவே - எனக்குள் 

ஆசை பெருகுதப்பா 

பாடிப் பரவசமாய் - உன்னையே 

பார்த்திடத் தோணுதய்யா 

ஆடும் மயிலேறி - முருகா 

ஓடி வருவாயப்பா 

பாசம் அகன்றதய்யா - பந்த 

பாசம் அகன்றதய்யா - உந்தன்மேல் 

நேசம் வளர்ந்ததய்யா 

ஈசன் திருமகனே - எந்தன் 

ஈனம் மறைந்ததப்பா

ஆறுத் திருமுகமும் - உன் அருளை 

வாரி வழங்குதய்யா 

வீரமிகுந்தோளும் கடம்பும் 

வெற்றி முழக்குதப்பா 

கண்கண்ட தெய்வமய்யா - நீ இந்தக் 

கலியுக வரதனய்யா 

பாவி என்றிகழாமல் - எனக்குன் 

பதமலர் தருவாயப்பா 

உள்ளம் உருகுதய்யா - முருகா 

உன்னடி காண்கையிலே 

அள்ளி அணைத்திடவே - எனக்குள் 

ஆசை பெருகுதப்பா

“உள்ளம் உருகுதய்யா ..!”

டி.எம்.எஸ். பாடிய இந்தப் பாடலைக் கேட்டு , 

உருகாத உள்ளங்களே இருக்க முடியாது.

ஆனால் , இசைத்தட்டுக்காக இந்தப் பாடலை பாடி ஒலிப்பதிவு செய்யும்போதும் , அதற்குப் பல காலத்திற்குப் பிறகும் கூட .... இதை எழுதியவர் யார் என்று டி.எம்.எஸ்.சுக்கே தெரியாது.

பலகாலம் முன் பழனிக்கு சென்று இருந்தார் டி.எம்..எஸ்.! வழக்கமாக தங்கும் லாட்ஜில் தங்கி இருந்தார். அங்கு வேலை செய்த பையன் ஒருவன் , அடிக்கடி ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டே இருந்தான்.. அந்தப் பாடல்தான் “உள்ளம் உருகுதடா”

பாடலின் சொல்லிலும் பொருளிலும் சொக்கிப் போனார் டி.எம்.எஸ். ! அதை விட டி.எம்.எஸ். ஆச்சரியப்பட்டுப் போன இன்னொரு விஷயம்... முருகன் பாடலைப் பாடிய அந்தச் சிறுவன் - ஒரு முஸ்லிம் சிறுவன்.

டி.எம்.எஸ். அன்போடு அந்தச் சிறுவனை அருகே அழைத்தார். “தம்பி..இங்கே வாப்பா..”

வந்தான்.

பாடலை எழுதியது யார் என்று விசாரித்தார் டி.எம்.எஸ்.

 எதுவும் விவரம் சொல்லத் தெரியவில்லை அந்தப் பையனுக்கு.

“பரவாயில்லை.முழு பாடலையும் சொல்லு..” என்று ஒவ்வொரு வரியாக அந்தப் பையன் சொல்ல சொல்ல , அதை அப்படியே எழுதிக் கொண்டார் டி.எம்.எஸ்.

பழனியிலிருந்து சென்னை வந்ததும் , அந்த “உள்ளம் உருகுதடா” பாடலை “அடா” வரும் இடங்களை மட்டும் “அய்யா” என்று மாற்றி , பாடி பதிவு செய்து விட்டார் டி.எம்.எஸ்.

அதன் பின் , கச்சேரிக்குப் போகிற இடங்களில் எல்லாம் இந்தப் பாடலைப் பாடும்பொழுது , மேடையிலேயே இந்த விஷயத்தை சொல்லுவாராம் டி.எம்.எஸ்..!

எப்படியாவது இந்தப் பாடலை எழுதியவர் யார் என்ற உண்மை தெரிந்து விடாதா என்ற ஆசை டி.எம்.எஸ்சுக்கு..!

ஆனால் ... எந்த ஊரிலும் , யாரும் அந்தப் பாடலுக்கு உரிமை கொண்டாடவில்லை.

பல வருஷங்கள் கடந்த பின் .. தற்செயலாக சென்னை, தம்புச்செட்டித் தெருவில் உள்ள காளிகாம்பாள் கோயிலுக்குச் செல்கிறார் டி.எம்.எஸ்.

கும்பிட்டபடியே கோவிலைச் சுற்றி வந்தவர் , குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்ததும் ... அசையாமல் அப்படியே திகைத்து நிற்கிறார் .

காரணம் .. அங்கே இருந்த ஒரு கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பாடல்.

 “உள்ளம் உருகுதடா...”

உடலெல்லாம் பரவசத்தில் நடுங்க , எழுதியவர் யார் என்று பாடலின் அடியில் பார்க்கிறார் டி.எம்.எஸ்.

அந்தக் கல்வெட்டில் செதுக்கப்பட்டிருந்த பெயர் ..'‘ஆண்டவன் பிச்சி’’ !

 யார் அந்த '‘ஆண்டவன் பிச்சி’’ ? 

டி.எம்.எஸ்.சின் தேடல் தொடங்கியது... நாளுக்கு நாள் அது தீவிரமானது. அதற்கு நல்லதொரு பதிலும் சீக்கிரத்திலேயே கிடைத்தது.

அந்த ‘ஆண்டவன் பிச்சி’ – ஒரு பெண். 

பெற்றோர் வைத்த பெயர் மரகதவல்லி .

பள்ளிக்கு செல்லாதவள். படிப்பறிவு இல்லாதவள். பத்து வயது முதல் முருகன் பாடல்களை பாடிக் கொண்டே இருப்பவள்.

ஒன்பது குழந்தைகளுக்குத் தாயான மரகதம் , வாழ்வில் எல்லா சோதனைகளையும் சந்தித்தவர்.. முதுமையில் துறவறம் பூண்டு, பின் இறைவனடி சேர்ந்தவர்.

இறப்பதற்கு முன் , கோயில் கோயிலாக போய் பாடி வந்து கொண்டிருந்தார்.

அப்படி காஞ்சி மடத்தில் அமர்ந்து ஒருமுறை பாடிக் கொண்டிருந்தபோது , அங்கே இருந்த சிலர் இவரது எளிய தோற்றத்தைக் கண்டு “பிச்சைக்காரி” என நினைத்து துரத்த ... காஞ்சி மஹா பெரியவர் இந்தப் பெண்ணை அருகே அழைத்து , பிரசாதமும் கொடுத்து .. “இன்று முதல் உன் பெயர் ‘ஆண்டவன் பிச்சி’ ” என்று ஆசீர்வதித்து அனுப்ப ...அன்று முதல் கோயில் கோயிலாகச் சென்று, தெய்விகப் பாடல்களைப் பாட ஆரம்பித்தார் மரகதவல்லி என்ற ‘ஆண்டவன் பிச்சி’.. 

சிலர் 'ஆண்டவன்பிச்சை’ என்றும் சொல்வதுண்டு. 

அப்படி அவர் காளிகாம்பாள் கோயிலுக்கு சென்றபோது பாடியதுதான், அந்த 'உள்ளம் உருகுதடா’ ..!

அது அங்கே கல்வெட்டிலும் பொறிக்கப்பட்டு விட்டது.

சரி ... இநதப் பாடல் பழனி ஹோட்டலில் வேலை செய்து வந்த இஸ்லாமிய சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது ?

டி.எம்.எஸ். காதுகளில் அது ஏன் விழுந்தது..?

இந்த மாதிரி சில கேள்விகளுக்குப் பதில்  எந்தக் கல்வெட்டிலும் கிடைக்கப் போவதில்லை. காகிதங்களிலும் இருக்கப் போவதில்லை. 

கம்பியூட்டரும் கூட பதில் தரப் போவதில்லை.

பாசம் அகன்றதய்யா - பந்த 

பாசம் அகன்றதய்யா 

உந்தன்மேல் நேசம் வளர்ந்ததய்யா 

ஈசன் திருமகனே 

எந்தன் ஈனம் மறைந்ததப்பா

உள்ளம் உருகுதய்யா.

Sunday, May 14, 2023

பவித்ரம்

தர்ப்பையினால்  செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம்  என்று அழைக்கிறோம்.

பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்.

இந்த பவித்ரம்  செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது.

அவை :-

1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை

2) சுப கர்மாவில் 2 தர்ப்பை

3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை

4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை

5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை

தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப்படுகிறது.

ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவைகளிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன. ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால்தான் செய்யப்படுகின்றன.

குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) பித்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது.

கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது.

கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.

உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத்  தவிர மற்றதுக்கு  உபயோகப் படுவதில்லை.

தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.

க்ரஹண காலங்களில் ( சூர்ய மற்றும் சந்திர ) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால் எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.

பிராமணனுக்கு தர்பை புல் ஓர் ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர்.

வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர்.

பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.

குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:

ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:

கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாவங்களை அழிக்கவல்லான்.

தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி.!

அது ஆற்றலையும் கடக்க வல்லது.!

தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன் அளிக்கும்.!

Thursday, May 04, 2023

யார் கடவுள்?

மணி இரவு 8.

பசி வயிற்றைக் கிள்ளியது.

இன்றைக்கு வேலைக்காரி வரவில்லை. சமையல்காரியும் வரவில்லை.

எனக்கு சமைக்க மூடும் இல்லை.

இது மாதிரி நேரங்களில்.

ஸ்விக்கி அல்லது ஜூமாட்டோவை துணைக்கு அழைப்பதுண்டு.

இன்று அதற்கும் மூடு இல்லை.

வெளியே வீசிய குளிர் காற்று, என்னோடு சற்று உறவாடு, என்று என்னை அழைக்க.... 

டூ வீலர் ஸ்டார்ட் செய்து பார்த்தேன்.

மூன்று நாட்கள் டூவீலரை எடுக்கவில்லை... 

என் மேல் அதற்கு கோபம் போல...

எனது உதை...

பயனற்று போனது.

ஒரு நல்ல டிபன் சாப்பிட வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்... 

சின்னதாக ஒரு உரத்த சிந்தனை....

 பிறகு...

ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்?

வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?

இரவு 8  மணிக்கு ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.

சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம்.

அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும்.

எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது.

இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?

கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது. 

அருகில் சென்றதும் தான் தெரிந்தது.

அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று.

4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை. அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது. 

கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்.

இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது என் மனதில் தோன்றியவைகளைத் தான், நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 

உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன்.

உனக்குள்ளே இவ்வுலகம் ஆனால் நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே.

எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. 

கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்? 

நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்? 

சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.

என்னைப் பற்றி பேசுகிறேன்.

இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?

இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?

என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.

அந்த மதில் சுவரின் மூலையில் பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். 

அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.

பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.

யாரைப் பெற்ற தாயோ.

ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார்.

அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது.

உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது.

என்னமா வேணும்?

பணிவுடன் நான். 

ஐயா சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா

அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. 

அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது.

இந்த  மழையில்.

இந்த இரவில்.

ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன்) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது.

இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி. 

இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு.

நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன். 

கிருஷ்ணா  நல்லாருப்பா

என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள். 

என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள்.

அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும். ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்.

இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது.

எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று  நான் உன்னை கேட்டேன். 

இப்பொழுது புரிகிறது.

உதவி தேவைப்பட்டது எனக்கல்ல.

அந்த மூதாட்டிக்கு என்று.

உதவியதும் நான் அல்ல.

 என் ரூபத்தில் நீ என்று. 

இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்.

இத் தருணத்தில் மூதாட்டிக்கு  நீ தான் நான்.

கம்பிக்குள் இருக்கிற நான்

கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா* என்று அவர் கேட்பது போல் இருந்தது..

யார் கடவுள் புரிகிறதா?