Pages

Saturday, February 19, 2022

வாழ்த்தட்டும் தலைமுறை

நம் ஊரில் உள்ள சின்ன ஹோட்டல் ஒன்றில், கையில் தூக்கு வாளியுடன் ஒரு 10 வயது சின்னக் குழந்தை, அண்ணா ! அம்மா 10 இட்லி வாங்கி வரச் சொன்னாங்க. காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றது.

ஹோட்டல் நடத்துபவர், ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு. அம்மாக்கிட்டே சொல்லுமா.

இப்போ வாங்கிட்டுப்போ. தூக்கு வாளியை தா, சாம்பார் ஊத்தி தாரேன் என்றார்.

இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த குழந்தையிடம் தருகிறார்.

குழந்தை, சரி அம்மாட்ட சொல்றேன். போயிட்டு வரேன் அண்ணே என்றபடியே கிளம்பிவிட்டாள்.

அந்தக் கடையில் நான் வாடிக்கையாய் சாப்பிடுவது வழக்கம். ஆதலால் நான் கேட்டேன். நிறைய பாக்கி இருந்தா ஏன் மறுபடியும் குடுக்குறீங்க?

ஹோட்டல் முதலாளி, "அட சாப்பாடு தானே சார். நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல சார்.

அதெல்லாம் குடுத்துடுவாங்க.  என்ன கொஞ்சம் லேட் ஆகும்.... எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது?

குழந்தை பசியால் கேட்டிருக்கும். அதான் சார், அந்த  குழந்தையை அனுப்பி இருக்காங்க.

நான் கொடுத்தனுப்புவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார்.

நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும் சார்.  ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் சார் முக்கியம்

நான் உணவு தரவில்லை என்றால் ,அந்தக் குழந்தை, தன் தாய்க்காக திருடப் போகும், அல்லது அந்தத் தாய், தன் குழந்தையின் பசிக்காக, தவறான பாதைக்கு செல்வாள்.

ஆனால், என்னால் நான் நஷ்டப்பட்டாலும், இப்பொழுது நம் சமுகத்தில் நடக்க இருந்த, இரண்டு தவறுகளைத் தடுக்க முடிந்திருக்கிறது என்றார்.

மேலும் ஹோட்டல் முதலாளி கூறினார்.

எனக்கும் இந்த அனுபவம் உண்டு.

நான் கும்பகோணத்தில்,  என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்று இருக்கின்றது. 

புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதே போல கடன் சொல்லி  அவ்வப்போது என் பசியை ஆற்றிக் கொள்வேன். அப்பொழுது அந்தப் பாட்டியிடம், ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால் என்ன செய்வாய் என்று  கேட்டேன். 

அதற்கு அந்தப் பாட்டியும் அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு லாபக் கணக்கு.  பணம் தராமல் ஓடிப் போய் விட்டால் அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று  சொல்லி மெய்மறக்க சிரித்தார். 

இதுதான் இந்தியா இதுதான் நமது  நம்பிக்கை, பண்பாடு!

வாழ்வது ஒருமுறை வாழ்த்தட்டும் தலைமுறை.

இதுவரை இல்லை என்றாலும் பரவாயில்லை, இனி அன்னதானம் செய்வோம்.



Monday, February 14, 2022

கல் கருடன் உருவான கதை

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன் என்றும், காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன் என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழனின் அந்த சாம்பல் நிறப்பட்டத்துப் புரவி, அரசலாற்றங்கரையில் வந்து நின்றபோது மாலைப்பொழுது முற்றத் தொடங்கியிருந்தது.

கரையோரத்து மரங்களிலிருந்து கூடு திரும்பிய பறவைகள் எழுப்பிய கூச்சல் எந்த இசைக் கருவியும் எழுப்ப முடியாத இன்னிசையை எழுப்பிக் கொண்டிருக்க, அந்த இரைச்சலை ரசித்தபடியே புரவியை விட்டு இறங்கினான் மன்னன் செங்கட்சோழன்.

நெடுநெடு’வென்ற உயரத்துடனும் ஆஜானு பாகுவான தேகத்துடனும், புரவியிலிருந்து இறங்கியவனின் பெயருக்கேற்றபடி சிவந்து கிடந்த விழிகளில் அரசலாற்றங்கரையிலிருந்து வடக்கே பிரிந்த பாதையில் சற்றுத் தொலைவில் இரண்டொரு பந்தங்களும் பத்துப் பதினைந்து குடில்களும் புலப்பட்டன.

புரவியைப் பிடித்தபடி மெல்ல நடந்தவன், குடில்களை நெருங்க நெருங்க, பாதை நன்றாகச் செப்பனிடப்பட்டிருப்பதையும், இரு புறங்களிலும் மலர்ச்செடிகளும் கொடிகளும் நேர்த்தியாகப் பராமரிக்கப்பட்டிருப்பதையும் கவனித்தான்.

அதுமட்டுமின்றி, பாதையின் இரு புறங்களிலும் கல் இருக்கைகள், உடைக்கப்பட்ட சில பாறைகள், யானைகள், குதிரைகள் பறவைகளின் கற் சிற்பங்கள் மட்டுமின்றி, அழகிய பெண்களின் சிற்பங்களும், ஓரிரு மன்னர்களின் சிற்பங்களும் கூடத் தென்பட்டன.

அந்தத் தமிழகத்து மன்னர்களின் சிற்பவரிசையில் தனது சிற்பமும் கூட நிற்பதைக் கவனித்தவன், முகத்தில் முறுவல் ஒன்று நெளிந்தது.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயில வட நாட்டிலிருந்தும்கூட சீடர்கள் வருகிறார்கள் என்றால் அதற்குக் காரண மிருக்கவே செய்கிறது" என்று முணுமுணுத்துக் கொண்டவன், பிரதான மாகத் தெரிந்த குடிலை நெருங்க முற்பட்டான்.

பிரதானக் குடிலின் முன்பாக தரையில் கருங்கல்லால் தளமிடப்பட்டு நடுவில் உயரமான கம்பமொன்றும் நிறுத்தப்பட்டிருந்தது.

மன்னன் அந்தக் கல்தளத்தில் கால்களைப் பதித்து இரண்டொரு அடிகள் நடக்கு முன்பாக, குடில்களின் கதவுகள் திறக்கப்பட்டு ஏந்திய பந்தங்களுடன் சிற்பியாரின் சீடர்கள் வெளிவந்தனர்.

மன்னனை நெருங்கிய சீடர்கள், வந்திருப்பவர் மன்னர் என்பதைக் கண்டு கொண்டதும் அவர்களில் ஒருவன் குடில்களின் வரிசையில் பின்னால் சற்றுத் தள்ளி தெரிந்த பெரும் குடிலை நோக்கிப் பறந்தான்.

சற்று நேரத்தில் சிற்பியார் வெளெரென்ற உடையும், அதைவிட வெளுத்து நீண்டுக் கிடந்த தாடி மீசையும் அரசலாற்றுக் காற்றில் வேகமாக அசைய, அரை ஓட்டமாகவே மன்னனை நோக்கி வந்தார்.

வர வேண்டும், வர வேண்டும் மன்னா என்று வரவேற்றவர், முன்னறிவிப்போ உடன் காவலரோ இன்றி தாங்கள் இப்படித் தனித்து வரலாமா" என்று கடிந்துகொள்ளவும் செய்தார்.

மன்னன் முகத்தில் மந்தகாசம் விரிந்தது. ஆசார்யரே, நான் இங்கு மன்னனாக வர வில்லை, உமது பழைய சீடனாகத் தான் வந்திருக்கிறேன்.

அதுவும் உம்மிடம் ஏற்கெனவே நான் கேட்டிருந்தபடி உதவி கேட்டு" என்றான்.

தமது சீடர்களை நோக்கிய சிற்பி, சீடனே,சென்று கனிகளையும் பாலையும் எடுத்துக் கொண்டு எனது குடிலுக்கு வந்து சேர்" என்று உத்தரவிட்டு மன்னனின் கரத்தைப் பிடித்து அழைத்துக் கொண்டு தமது குடிலை நோக்கி நடந்தார்.

சீடன் கொண்டு வந்த கனிகளையும் பாலையும் அருந்திய மன்னன், சிற்பியை ஏறெடுத்தான்.

மன்னனின் சிவந்த விழிகளில் புலப்பட்ட கேள்வியைப் புரிந்துகொண்ட சிற்பியாரின் முகத்தில் முறுவல் விரிந்தது.

மன்னவா, நீ கேட்டபடி என் சீடனொருவனை உனக்குப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன்.

நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர்,

சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார்.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பி யையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது.

கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி,

முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப் போகிறாய்?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது '' திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது.

பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும், குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.

மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செய்துக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வியாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்தி வைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை.

இவற்றுள் சிலவற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும்.

அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும்.

காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு.

காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது.

நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திரகாந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும்.

பின்னர், யந்திரசர்வாஸ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்.

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான்.

மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள்.

மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும்.

அதே பாறைகளைக் கொண்டு வெளிப் பிராகாரம் வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின.

மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும்.

ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறைவாகவே இருக்கும்.

கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும்.

மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும்.

எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார்.

அப்போது தூக்குபவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும்.

மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே நாச்சியார் கோயில் என்று அழைக்கப்படும் திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது.

கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்டபத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது.

அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது.

நமது ஆன்மிகமும் , அறிவியலும் எவர்க்கும் குறைந்தது இல்லை என்பது மீண்டும், மீண்டும் உணர்த்துகிறது.

Thursday, February 10, 2022

நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது


கழுகுகள் நமக்கு கற்றுதரும் பாடம்!!!

பறவைகளில் கழுகுகள் மிக சக்தி வாய்ந்தவை. அவை மிக உயரமாகப் பறக்கக் கூடியவை. அவற்றை வலிமை மற்றும் தைரியம் ஆகியவற்றின் சின்னமாகக் கருதுகின்றோம். ஆனால் அந்தக் கழுகுகளின் பறக்கும் சாகச சக்திகளும், வலிமையும், தைரியமும் பிறப்பிலேயே வருபவை அல்ல. அவை கழுகுகளால் ஒரு கட்டத்தில் கற்றுக் கொள்ளப்படுபவை தான்.

குஞ்சுகளாகக் கூட்டில் சுகமாக, பாதுகாப்பாக இருக்கும் போது கழுகுகள் பலவீனமாகவே இருக்கின்றன. அவை அப்படியே சுகமாகவும், பாதுகாப்பாகவுமே இருந்து விட்டால் வலிமையாகவும், சுதந்திரமாகவும் மாறுவது சாத்தியமல்ல.

எனவே குஞ்சுகளாக இருக்கும் போது வேண்டிய உணவளித்து, பாதுகாப்பாக வைத்திருக்கும் தாய்ப்பறவை குஞ்சுகள் பறக்க வேண்டிய காலம் வரும் போது மாறி விடுகின்றது.

முதலில் கூடுகளில் மெத்தென இருக்கும் படுக்கையினைக் கலைத்து சிறு குச்சிகளின் கூர்மையான பகுதிகள் வெளிப்படும்படி செய்து கூட்டை சொகுசாகத் தங்க வசதியற்றபடி செய்து விடுகின்றது. பின் தன் சிறகுகளால் குஞ்சினை அடித்து இருக்கும் இடத்தை விட்டுச் செல்லத் தூண்டுகின்றது.

தாய்ப் பறவையின் இம்சை தாங்க முடியாத கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்புவரை வந்து நிற்கின்றது. அது வரை பறந்தறியாத குஞ்சு கூட்டின் வெளியே உள்ள உலகத்தின் ஆழத்தையும் உயரத்தையும் விஸ்தீரணத்தையும் பார்த்து மலைத்து நிற்கின்றது.

அந்தப் பிரம்மாண்டமான உலகத்தில் தனித்துப் பயணிக்க தைரியமற்று பலவீனமாக நிற்கின்றது.

அது ஒவ்வொரு குஞ்சும் தன் வாழ்க்கையில் சந்தித்தாக வேண்டிய ஒரு முக்கியமான தவிர்க்க முடியாத கட்டம்.

அந்த நேரத்தில் அந்தக் குஞ்சையே தீர்மானிக்க விட்டால் அது கூட்டிலேயே பாதுகாப்பாகத் தங்கி விட முடிவெடுக்கலாம். ஆனால் கூடு என்பது என்றென்றைக்கும் பாதுகாப்பாகத் தங்கி விடக் கூடிய இடமல்ல. சுயமாகப் பறப்பதும் இயங்குவதுமே ஒரு கழுகுக்கு நிரந்தரப் பாதுகாப்பு என்பதைத் தாய்ப்பறவை அறியும்.

அந்தக் கழுகுக்குஞ்சு கூட்டின் விளிம்பில் என்ன செய்வதென்று அறியாமல் வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டு இருக்கும் அந்தக் கட்டத்தில் தாய்ப்பறவை அந்தக் குஞ்சின் உணர்வுகளை லட்சியம் செய்யாமல் குஞ்சை கூட்டிலிருந்து வெளியே தள்ளி விடுகிறது.

அந்த எதிர்பாராத தருணத்தில் கழுகுக்குஞ்சு கஷ்டப்பட்டு சிறகடித்துப் பறக்க முயற்சி செய்கின்றது. முதல் முறையிலேயே கற்று விடும் கலையல்ல அது.

குஞ்சு காற்றில் சிறகடித்துப் பறக்க முடியாமல் கீழே விழ ஆரம்பிக்கும் நேரத்தில் தாய்க்கழுகு வேகமாக வந்து தன் குஞ்சைப் பிடித்துக் கொள்கிறது.

குஞ்சு மீண்டும் தாயின் பிடியில் பத்திரமாக இருப்பதாக எண்ணி நிம்மதியடைகிறது. அந்த நிம்மதி சொற்ப நேரம் தான். தன் குஞ்சைப் பிடித்துக் கொண்டு வானுயரப் பறக்கும் தாய்க்கழுகு மீண்டும் அந்தக் கழுகுக்குஞ்சை அந்தரத்தில் விட்டு விடுகிறது.

மறுபடி காற்று வெளியில் சிறகடித்துப் பறக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு அந்தக் குஞ்சு உள்ளாகிறது.

இப்படியே குஞ்சை வெளியே தள்ளி விடுவதும், காப்பாற்றுவதுமாகப் பல முறை நடக்கும் இந்தப் பயிற்சியில் கழுகுக் குஞ்சின் சிறகுகள் பலம் பெறுகின்றன. காற்று வெளியில் பறக்கும் கலையையும் விரைவில் கழுகுக்குஞ்சு கற்றுக் கொள்கிறது.

அது சுதந்திரமாக, ஆனந்தமாக, தைரியமாக வானோக்கிப் பறக்க ஆரம்பிக்கிறது.

கழுகுக் குஞ்சு முதல் முறையாக கூட்டுக்கு வெளியே உள்ள உலகத்தின் பிரம்மாண்டத்தைக் கண்டு பயந்து தயங்கி நிற்கும் .

அந்தத் தருணத்தில் தாய்க்கழுகு அதனை முன்னோக்கித் தள்ளியிரா விட்டால் அந்த சுதந்திரத்தையும், ஆனந்தத்தையும், தைரியத்தையும் அந்தக் கழுகுக்குஞ்சு தன் வாழ்நாளில் என்றென்றைக்கும் கண்டிருக்க முடியாது.

பறக்க அறியாத அந்தக் குஞ்சை கூட்டினை விட்டு வெளியே தாய்ப்பறவை தள்ளிய போது அது ஒருவிதக் கொடூரச் செயலாகத் தோன்றினாலும் பொறுத்திருந்து விளைவைப் பார்க்கும் யாருமே அந்தச் செயல் அந்தக் குஞ்சிற்குப் பேருதவி என்பதை மறுக்க முடியாது...

ஒவ்வொரு புதிய சூழ்நிலையும் யாருக்கும் ஒருவித பதட்டத்தையும், பயத்தையும் ஏற்படுத்தக் கூடும். ஆனால் அந்தக் காரணத்திற்காகவே அந்த சூழ்நிலைகளையும், அனுபவத்தையும் மறுப்பது வாழ்வின் பொருளையே மறுப்பது போலத் தான்.

கப்பல் துறைமுகத்தில் இருப்பது தான் அதற்கு முழுப்பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் கப்பலை உருவாக்குவது அதை துறைமுகத்தில் நிறுத்தி வைக்க அல்ல. கப்பலின் உபயோகமும் அப்படி நிறுத்தி வைப்பதில் இல்லை.

கழுகிற்கும், கப்பலுக்கும் மட்டுமல்ல, மனிதனுக்கும் இந்த உண்மை பொருந்தும்.

தாய்க்கழுகு தான் குஞ்சாக இருக்கையில் முதல் முதலில் தள்ளப்பட்டதை எண்ணிப்பார்த்து "நான் பட்ட அந்தக் கஷ்டம் என் குஞ்சு படக்கூடாது. என் குஞ்சிற்கு அந்தப் பயங்கர அனுபவம் வராமல் பார்த்துக் கொள்வேன்" என்று நினைக்குமானால் அதன் குஞ்சு பலவீனமான குஞ்சாகவே கூட்டிலேயே இருந்து இறக்க நேரிடும்.

ஆனால் அந்த முட்டாள்தனத்தை தாய்க்கழுகு செய்ததாக சரித்திரம் இல்லை

அந்த தாய்க்கழுகின் அறிவுமுதிர்ச்சி பல பெற்றோர்களிடம் இருப்பதில்லை. "நான் பட்ட கஷ்டங்கள் என் குழந்தைகள் படக்கூடாது" என்று சொல்லக்கூடிய பெற்றோர்களை இன்று நாம் நிறையவே பார்க்கிறோம்

ஒரு காலத்தில் கூட்டுக் குடும்பமும் அதில் கும்பலாகக் குழந்தைகளும் இருந்த போது பெற்றோர்களுக்குத் தங்கள் ஒவ்வொரு குழந்தை மீதும் தனிக்கவனம் வைக்க நேரம் இருந்ததில்லை. அதற்கான அவசியம் இருப்பதாகவும் அவர்கள் நினைத்ததில்லை.

ஆனால் இந்தக் காலத்தில் ஓரிரு குழந்தைகள் மட்டுமே உள்ள நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிக நல்ல வாழ்க்கை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்கள். அதில் தவறில்லை.

ஆனால் தான் பட்ட கஷ்டங்கள் எதையும் தங்கள் குழந்தைகள் படக்கூடாது என்று நினைக்கும் போது பாசமிகுதியால் அவர்கள் அந்தக் கஷ்டங்கள் தந்த பாடங்களின் பயனைத் தங்கள் பிள்ளைகளுக்கு அளிக்கத் தவறி விடுகிறார்கள்.

அதற்காக "நான் அந்தக் காலம் பள்ளிக்கூடம் செல்ல பல மைல்கள் நடந்தேன். அதனால் நீயும் நட" என்று பெற்றோர்கள் சொல்ல வேண்டும் என்று சொல்லவில்லை. வசதிகளும், வாய்ப்புகளும் பெருகி உள்ள இந்தக் காலத்தில் அப்படிச் சொல்வது அபத்தமாகத் தான் இருக்கும்.

இன்றைய நவீன வசதி வாய்ப்புகளின் பலனை பிள்ளைகளுக்கு அளிப்பது மிகவும் அவசியமே.

தேவையே இல்லாத கஷ்டங்களை பிள்ளைகள் படத் தேவையில்லைதான். ஆனால் 'எந்தக் கஷ்டமும், எந்தக் கசப்பான அனுபவமும் என் பிள்ளை படக்கூடாது' என்று நினைப்பது அந்தப் பிள்ளையின் உண்மையான வளர்ச்சியைக் குலைக்கும் செயலே ஆகும்.

வாழ்க்கையில் சில கஷ்டங்களும், சில கசப்பான அனுபவங்களும் மனிதனுக்கு அவசியமானவையே...

அவற்றில் வாழ்ந்து தேர்ச்சி அடையும் போது தான் அவன் வலிமை அடைகிறான்.

அவற்றிலிருந்து பாதுகாப்பளிப்பதாகப் பெற்றோர் நினைப்பது அவனுக்கு வாழ்க்கையையே மறுப்பது போலத் தான்.

சில கஷ்டங்கள் பிள்ளைகள் படும் போது பெற்றோர்களுக்கு மனம் வருத்தமாக இருக்கலாம்.

ஆனால் ...

கஷ்டங்களே இல்லாமல் இருப்பது வாழ்க்கை அல்ல.

வாழ்க்கையின் அர்த்தமும் அல்ல.

அது சாத்தியமும் அல்ல.

கஷ்டம் காணாத மனிதர்கள் சாதித்ததாக வரலாறும் இல்லை.

கஷ்டம் அனுபவிக்காத பிள்ளைகள் தந்தைக்கு பின் நிற்கதியில் நிற்பதை நாம் நம் வாழ்வில் அன்றாடம் கண்டு கொண்டே இருக்கிறோம்.

நம்ம பிள்ளைகளுக்கு நாம் நல்லது செய்யணும்னா?!

நீந்த கற்று கொடுப்போம்...

நீந்துவது அவர்கள் கடமை..

மனதைத் தொட்ட வரிகள்

ஒரு தகப்பனார் பத்துக் குழந்தைகளைக் காப்பாற்றலாம். ஆனால் பத்துக் குழந்தைகள் ஒரு தகப்பனாரைக் காப்பாற்றும் என்று உறுதியாகச் சொல்ல முடியாது.

தெரிந்து மிதித்தாலும் தெரியாமல் மிதித்தாலும் மிதிபட்ட எறும்பிற்கு இரண்டுமே ஒன்றுதான்.

பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லா விட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

அதிர்ஷ்டத்திற்காகக் காத்திருப்பதும் சாவுக்காக காத்திருப்பதும் ஒன்றே!.

மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது தடைகளற்ற வாழ்க்கை அல்ல, தடைகளை வெற்றி கொண்டு வாழும் வாழ்க்கை.

ஒரு கதவு மூடப்படும் போது மற்றொரு கதவு திறக்கிறது. ஆனால், நாம் மூடப்பட்ட கதவையே பார்த்துக் கொண்டு திறக்கப்படும் கதவை தவறவிடுகிறோம்.

மனிதன் தான் செய்த தவறுக்கு வக்கீலாகவும், பிறர் செய்த தவறுக்கு நீதிபதியாகவும் செயல்படுகின்றான்.

வெள்ளை என்பது அழகல்ல..நிறம் ! ஆங்கிலம் என்பது அறிவல்ல .. மொழி

வாழும்போது சரியான சமூக அந்தஸ்து வழங்காத உலகம்......வாழ்ந்து முடித்த பின் சிலை வைக்கிறது

நம்பிக்கை நிறைந்தஒருவர், யாரிடமும் மண்டியிடுவதுமில்லை...கையேந்துவதுமில்லை....

நேசிப்பவர்கள் எல்லாம் நம்மோடு நிலைத்து விட்டால்...!!!

நினைவின் மொழியும் பிரிவின் வலியும் ௨ணராமலே போய்விடும்.

Tuesday, February 01, 2022

பிணி நீங்க மகாபெரியவர் சொல்லித் தந்த மந்திரம்

காஞ்சி மகாபெரியவர் திவ்ய யாத்திரைகள் முடித்துவிட்டு மீண்டும் காஞ்சி மடத்திற்கு வந்து அங்கேயே முகாமிட்டிருந்த காலகட்டம் அது..

அந்த சமயத்தில் ஒருநாள் பரமாச்சார்யாளை தரிசிக்க வந்த கூட்டத்தில், நடுத்தர வயதுள்ள ஒரு தம்பதியரும் இருந்தார்கள். அந்த மனைவிக்கு ஏதோ உடல்நலக் குறைபாடு என்பது சாதாரணமாகப் பார்த்தவர்களுக்கே தெரிந்தது. தாங்க முடியாத வலியின் காரணமாக தவித்துக்கொண்டிருந்தார்.

இப்போது வெளியில் வரட்டுமா? அல்லது இன்னும் கொஞ்சம் கழித்து வழியட்டுமா? என்று கேட்பதுபோல் அவரது கண்களில் நீர் திரண்டு கொண்டிருந்தது. உடன் வந்திருந்த அவளது கணவர் மெதுவாகப் பேசி, அவருக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார். மனைவியின் தவிப்பில் அவரது மனம் எவ்வளவு சங்கடப்படுகிறது என்பதை அவரது முகத்தோற்றமே படம்பிடித்துக் காட்டியது.

மெதுவாக நகர்ந்த வரிசையில் தங்களுடைய முறை வரும்வரை பொறுமையாக நகர்ந்த அவர்கள், மகாபெரியவா முன் சென்று நின்றார்கள்.

இருவரும் ஒரு வார்த்தைகூட பேசுவதற்கு முன், "என்ன, ரொம்ப வலிக்கறதா? இதுக்கெல்லாம் மருந்து மாத்திரை மட்டும் போதாது. கொஞ்சம் மந்திரமும் வேணும்!" சொன்ன மகாபெரியவா, தன் பக்கத்தில் இருந்த அணுக்கத் தொண்டரைக் கூப்பிட்டு, ஏதோ சொன்னார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சீடர் ஒரு பேப்பரில் எதையோ எழுதி எடுத்துக் கொண்டுவந்து மகாபெரியவா முன் நீட்டினார். அதை அப்படியே பார்த்த மகாபெரியவா, "சரியா எழுதி இருக்கியா? ஒரு தரம் படிச்சுக்காமி!" என்றார்.

காகிதத்தில் எழுதிக் கொண்டு வந்ததை அந்த சீடர், சத்தமாகப் படித்தார்.

"அஸ்மின் பிராத்மன் நநூ பாத்ம கல்பே தவம் இத்தம் உத்தாபித பத்மயோனி

அநந்தபூமா மம ரோகராசிம் நிருந்த்தி வாதாலய வாச விஷ்ணோ "

சீடர் படித்து முடித்ததும், "இது, ஸ்ரீமந் நாராயணீயத்துல இருக்கற ஸ்லோகம்!" சொன்ன மகாபெரியவா, "இதோட அர்த்தம் தெரியுமா உனக்கு? எங்கே சொல்லு பார்க்கலாம்!" என்று கேட்டார்.

"பெரியவா, உங்களுக்குத் தெரியாததில்லை. இது குருவாயூரப்பனைப்பத்தினை துதி. 'பரமாத்மாவாக எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பனே, பத்ம கல்பத்தில் ப்ரம்மதேவனைத் தோற்றுவித்தவன் நீ. அளவற்ற மகிமையுடையவனாகிய நீயே எனது உடல் மனம் சார்ந்த எல்லா பிணிகளையும் நீக்கி ஆரோக்யம் அளிக்க வேண்டும்!' அப்படின்னு அர்த்தம்!"

பவ்யமாகச் சொன்னார், சீடர்.

"என்ன, ஸ்லோகத்தை நன்னா கேட்டுண்டேளா? இதை நூத்தியெட்டுத் தரம் நம்பிக்கையோட சொல்லு..நல்லதே நடக்கும்!" சொல்லி மாதுளம் பழம் ஒன்றைக் கொடுத்து அனுப்பினார், மகாபெரியவா.

அந்தத் தம்பதியும் ஆசார்யாளை நமஸ்காரம் செய்துவிட்டு பிரசாதத்தை வாங்கிக் கொண்டு சென்றார்கள். ஆசார்யாளோ, அங்கே இருந்த வேற யாருமோ அந்தப் பெண்மணிக்கு என்ன உபாதைன்னு கேட்கவே இல்லை.

இந்த சம்பவம் நடந்து நாலஞ்சு மாசம் இருக்கும். அந்தத் தம்பதியர் மறுபடியும் மகாபெரியவாளை தரிசிக்க காஞ்சிபுரத்துக்கு வந்தார்கள். இந்த முறை அந்தப் பெண்மணியின் முகத்தில் வலியின் ரேகை கொஞ்சம்கூட இல்லை. அவள் கணவரது முகமும் தெளிவாகவே இருந்தது.

அமைதியாக வரிசையில் நடந்து, மகாபெரியவர் முன் சென்று நின்றார்கள். "என்ன நோய் போய்டுத்துன்னு டாக்டர்கள் சொல்லிட்டாளா? இனிமே ஒன்னும் பிரச்னை இல்லை. க்ஷேமமா இருங்கோ!" ஒன்றும் கேட்காமலே ஆசிர்வதித்தார் மகான்.

அவ்வளவுதான், கண்ணில் இருந்து நீர் பெருகி வழிய அப்படியே நெடுஞ்சாண் கிடையாக அவரது திருப்பாதத்தில் விழுந்தார் அந்தப் பெண்மணியின் கணவர்.

"தெய்வமே...என் மனைவிக்கு மார்புல புற்று நோய் இருக்கு. அதை குணப்படுத்துவது கஷ்டம். ஆபரேஷன் பண்ணினாலும் ரொம்ப முத்திட்டதால பலன் இருக்குமான்னு தெரியாது! னு டாக்டர்கள் எல்லோரும் கைவிட்டுட்டா. மன அமைதியாவது கிடைக்குமேன்னுதான் போனதடவை இங்கே வந்தோம். ஆனா, என்ன பிரச்னைன்னே கேட்காம, அது தீர்ந்து இவளோட உடல்நிலை சீராகறத்துக்கு ஒரு வழியையும் காட்டின உங்க கருணையை என்னன்னு சொல்றது!" என்று உரத்த குரலில் சொல்லிக் கதறி அழுதார் அவர்.

"இதெல்லாம் நான் ஒன்னும் பண்ணலை. அந்த நாராயண மந்திரத்தை நீங்க நம்பிக்கையோட சொன்னதுக்குக் கிடைச்சிருக்கிற பலன்..க்ஷேமமா இருங்கோ...ஒரு குறையும் வராது!" மென்னகையோடு சொல்லி ஆசிர்வதித்த ஆசார்யா, குங்கும பிரசாதத்தை அவர்களிடம் கொடுத்தபோது, கூடியிருந்த பக்தர்கூட்டம், மகாபெரியவாளின் மகிமையைப் புரிந்து கொண்டு, கோரஸாகக் குரல் எழுப்பியது.