Pages

Thursday, October 07, 2021

பொம்மைக்கார தெரு

இப்படி ஒரு இடம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்று இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது.

ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் இருக்கிறது.

புது இடம்,ஊரில் இருந்து கொலு பொம்மைகளை கொண்டு வரவில்லை அதனால் வேலூர் அல்லது வாலாஜாவில் சில பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம் என எங்கு கிடைக்கும் என சக ஊழியரிடம் விசாரித்தேன்.

காஞ்சிபுரத்தில் இதற்கான தனி தெருவே இருக்கிறது.அங்கு கிடைக்காத பொம்மைகளே இல்லை சார் டிரை பண்ணி பாருங்களேன் என்றார்.

அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள்.

குறுகலான வீதி.இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள், கிடத்தப் பட்டிருக்கும் பொம்மைகளை சர்வ ஜாக்கிரதையாக தாண்டி போகிறோம்.

காணக்கிடைக்காத செட் பொம்மைகள் எல்லாம் அங்கு கொட்டிக் கிடக்கிறது. பேப்பர் மேஷ் பொம்மைகள் அளவில் பெரிதாகவும் நல்ல பினிஷிங் உடனும் இருந்தாலும் இவளுக்கு மண் பொம்மை மீது தான் அலாதி ஆர்வம்.

திருவிழாவுக்கு வந்த குழந்தைகள் போல எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கினோம்.

ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கைலாய செட் கிடைத்தது. 

விலை என்னுடைய அனுபவத்தில் மிக மிக சகாயம். மேலும் பேரம் பேசினால் நிறைய குறைக்கிறார்கள். நமக்குத்தான் பேச மனம் வரவில்லை. நீங்களே பார்த்து சொல்லுங்க என சொன்னால் சட்டென 200 , 300 குறைத்துக் கொள்கிறார்கள்.

தெருவெங்கும் திருவிழா போல இருக்கிறது  கார்களின் அணிவகுப்பால் மிளிர்கிறது. 

காவடி செட் இருக்கிறதா? பீமன் கர்வ பங்கம் செட் இருக்கா? ஶ்ரீரங்கம் விஸ்வரூப தரிசனம் செட் இருக்கிறதா? என நாங்கள் இருக்கும் போதே பலர் சொல்லித் தேடுகின்றனர். இருந்தால் எடுத்துக் கொடுக்கிறார்கள், இல்லையெனில் நாலாவது வீடு புளூ கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் அங்கு கேளுங்க என வழி காட்டுகிறார்கள்.

இந்த தெரு நூறாண்டு களுக்கு மேலாக இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறது. குலாளர்கள் வம்சம் பெரும்பான்மை. இப்போது தொழில் கற்றுக்கொண்ட பலரும் இதை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

பொம்மைகளை மடியில் சாய்த்து நாகாஸ் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தேன். ஒரு குழந்தையை போல அதனை கைகளில் பிடித்துள்ளார்.என்ன ஒரு அழகு.

வாய்ப்புள்ளவர்கள் , பொம்மை பிரியர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய புனித பூமி சின்ன காஞ்சிபுரம் , பொம்மைகார தெரு.

இராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள், போன்ற பொம்மைகளும் உள்ளன.

நான் பொம்மை வாங்கிய சில கடைகளின் உரிமையாளர்கள் கடந்த இரண்டு வருடமாக தொழில் முடங்கிப் போனது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.

ஒரு கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பிரபல ஓவியர் வேதா அவர்களின் மகளும் மருமகனும் தான் கடை உரிமையாளர்கள் என தெரிய வந்தது. கலைக்குடும்பம். கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறினார் திரு.பத்மநாபன்.

பயன்படுமே என்று நான் பொம்மை வாங்கிய கடையின் செல்போன் நம்பர்கள் கொடுக்கிறேன்.இது விளம்பரத்திற்கு அல்ல. நேரில் செல்ல முடியாதவர்கள் போனில் பேசி அனுப்ப முடியுமா என கேட்டுக் கொள்ளலாம். கனடாவுக்கு அனுப்புபவர்கள் இந்தியாவுக்குள் அனுப்ப மாட்டார்களா என்ன? 

srimathi art works 

(ஓவியர் வேதா அவர்களின் மருமகன் ) 9443690141

குருநாதன், 9994044065

ஜெயபால் 8870017300

No comments:

Post a Comment