Pages

Friday, October 15, 2021

இது கதை அல்ல நிஜம்

இந்த எழுபது வயதில் இதெல்லாம் தேவையா என்று உடல் கெஞ்சியது.  ஆனாலும் சிறு வயது தொட்ட நினைவுகள் பீறிட்டு எழ மனம் இருபது வயதாய் துள்ளியது.

அக்ரஹாரத்தில் ஒவ்வொரு வீடாக சென்று அழைத்து, பாட்டு பாடி, சுண்டல் வாங்கி சுவைத்த காலங்கள் மாறி, இல்லத்தரசியாக கொலு வைத்து மகிழ்ந்த நாட்கள் மனதில் மோத, ஆயிற்று இதோ எழுபது வருடங்கள்.

இரண்டு வருடம் வரை கணவரின் உதவியுடன் பொம்மைகளை இறக்கி படி அமைத்து வைத்தாகி விட்டது.  அவர் தவறியதால் போன வருடம் இல்லை.

இப்போது வைக்கலாமா? நான் அழைத்தால் வருவார்களா? என்கிற யோசனையும் வந்தது.  ஆனால் எதோ ஒரு சக்தி முடுக்கி விட ஆள் வைத்து பொம்மைகளை கீழ் இறக்கி, சுத்தம் செய்து படியும் அமைத்தாகி விட்டது. பொம்மைகளை வைக்கும் வேலை மட்டுமே பாக்கி.

வீட்டு வேலை செய்யும் அஞ்சலை "அம்மா என் பொண்ணை இட்டாரேன். உனக்கு ஒதவியா இருப்பா" என்று சொல்லி பெண்ணை அழைத்துக் கொண்டு வந்து விட்டாள்.

பெண் படு சுறுசுறுப்பு.  கிடு கிடுவென்று படிகளில் பொம்மைகளை அடுக்க நடுவில் அமர்ந்திருக்கும் அம்பாளின் சிலை பளபளப்பாக மின்ன கண்ணீருடன் அதன் நினைவுகளில் மூழ்கினார் காமாக்ஷி மாமி.

கல்யாணம் ஆன பின், முதல் வருட கொலுவுக்கு அவர் வாங்கி வந்தது. கொள்ளை அழகில் அம்பாள் ஜொலிக்க அதையே பார்த்துக் கொண்டு தன்னையே மெய்மறந்து நிற்பார் காமாக்ஷி மாமி.

மாமிக்கு நல்ல மனசு.  ஒவ்வொரு வருட கொலுவுக்கும் ஏழைகளுக்கு புடவையும் பணமும் கொடுத்து  அவர்கள் சந்தோஷப் படுவதைப் பார்த்து மனம் குளிர்வார்.

இந்த வருடமும் அஞ்சலைக்கும் அவள் பெண்ணிற்கும் வாங்கியாகி விட்டது.  புடவைகள் வாங்கும் போது அரக்கு கலரில் பச்சை நிற பார்டரில் இருந்த  பட்டுப் புடவையைக் கண்டதும் இதை வாங்கி யாருக்காவது வைத்துக் கொடுக்கலாமே என்ற எண்ணம் ஏற்பட அதையும் வாங்கிக் கொண்டு கிளம்பினார் காமாக்ஷி மாமி.

நான் கொலு வைக்கலாமா? நான் தாம்பூலம் கொடுத்தால் வாங்கிக் கொள்வார்களா? மனம் குழம்பி தவித்தது மாமிக்கு.

கொலுவுக்கு அஞ்சலையின் பெண் மூலம் தெரிந்தவர்கள் அனைவரையும் வரச் சொல்லி அழைத்தார்.  மேலும் போனிலும் பேசி அழைப்பு விடுத்தார்.

குளித்து மடியாக செய்து சுவாமிக்கு நிவேதனம் செய்த சுண்டலை அழகாக சிறு எவர்சில்வர் பாத்திரத்தில் போட்டு வைத்தாகி விட்டது.

வருபவர்களுக்கு கொடுக்க வெற்றிலை பாக்கு, குங்குமம், பூ, ரவிக்கைத் துணி, வளையல்கள் என்று தாம்பாளத்தில் அடுக்கி வைத்து காத்திருந்தார்.

முன் மாதிரி இல்லாமல் இரண்டு, மூன்று பேர் மட்டும் வந்தது சற்று வேதனையை கொடுத்தாலும் அதை புறம் தள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றார்.

தாம்பூலத்தை அஞ்சலையின் பெண்ணையே கொடுக்கச் செய்தார்.

அமெரிக்காவில் இருக்கும் பையனுக்கு வீடியோ எடுத்து அனுப்பினார்.

"ஏம்மா இந்த வயசுல பாடுபடறே, பேசாம இங்கே வந்துடேன்" என்று ஆசையாக மகன் அழைக்க "எனக்கு அங்கே ரொம்ப நாள் இருக்க பிடிக்கல.   இங்கே தான் மனசுக்கு நிறைவாய் இருக்கு" என்று மறுத்தார்.

இன்று வெள்ளிக் கிழமை.   சுவாமிக்கு சுண்டலோடு வடையும், சர்க்கரைப் பொங்கல் செய்யணும் என்று நினைத்துக் கொண்டு தலைக்கு குளித்து வடைக்கு ஊறப் போட்டு, சுண்டலும் சர்க்கரைப் பொங்கலையும் செய்யத் தொடங்கினார்.  ஒரு வழியாக பொங்கலும் வடையும் செய்து முடிப்பதற்குள் மூச்சு வாங்கியது.  ஆனால், ஏனோ மனம் மகிழ்ச்சியில் திளைத்தது.

மதிய நேரத்தில் தூறலாக பெய்த மழை மாலையில் கன மழையாக மாறி சக்கை போடு போட்டது.

"இனி எப்படி வருவார்கள்? அம்மா இதென்ன சோதனை?  செய்து வைத்த பிரசாதங்கள் எல்லாம் வீண்தானோ?" காமாக்ஷி மாமி தனக்குள்ளே புலம்பினார். சாப்பிடவும் பிடிக்கவில்லை.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து அஞ்சலையின் பெண்ணுக்கு சாப்பாடு போட்டு படுக்கச் சொன்னபோது யாரோ "மாமி, மாமி" என்று  கூப்பிட்டு வாசல் கதவை தட்டும் ஒலி கேட்டது, கதவை திறந்தால், அங்கே வயதான மாமி நிற்பதைக் கண்டு "யாரு நீங்க!" என்றார்.

"கொலுவுக்கு வந்திருக்கேன்.   உள்ளே வாங்கோன்னு கூப்பிடாம, வெளியிலே நிறுத்தி யாருன்னா கேட்பா?"

"உள்ளே வாங்கோ.  உங்களை இது வரைக்கும் பார்த்தது இல்லை.   அதான் அப்படி கேட்டுட்டேன், தப்புதான்."

"நான் அடுத்த தெரு மாலினியின் அம்மா.  காஞ்சிபுரத்தில் இருந்து வந்திருக்கேன். மாலினிக்கு கொலுவுக்கு வர முடியாத சந்தர்ப்பம்.  மாமி ஆசையா கூப்பிட்டிருக்கா.   நீ போய்ட்டு வந்துடேன்னு என்னை அனுப்பினா. மழையும் இப்ப நின்னிருக்கா அதான் வந்தேன்" என்று வந்த மாமி புன்னகையுடன் கூறினார்.

பெரிய குங்கும பொட்டும், தலையில் பூவும் சூட, காதுகளில் வைரத் தோடும்,. காசு மாலையும், மந்தஹாச புன்னகையுமாக எதிரில் நிற்கும் மாமியை நமஸ்கரித்து எழுந்தார் காமாக்ஷி மாமி.

பாட்டு பாடி கிளம்பும் சமயம் " எனக்கு கொடுக்க என்ன வெச்சுருக்கே" என்று வந்த மாமி கேட்டதும் பீரோவில் இருந்த அரக்கு கலர் பட்டுப் புடவையையும், ரவிக்கை துணியையும் தாம்பூலத்தில் வைத்து அஞ்சலையின் பெண்ணைக் கொண்டு கொடுக்கச் சொன்னார் காமாக்ஷி மாமி.

"ஏன் நீ கொடுத்தா வாங்கிக் கொள்ள மாட்டேனா? நீயே கொடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார்.  "சரி, சரி, இந்த புடவையை கட்டிக் கொண்டு வந்து காண்பிக்கிறேன்.உனக்கும் சந்தோஷமாக இருக்கும்" என்று சொல்லி பக்கத்து அறைக்கு சென்று புடவை மாற்றிக் கொண்டு வந்து நிற்கும் மாமியை "மடிஸாரில் மாமி எத்தனை தேஜஸ்" என்று வியந்து நோக்கினார் காமாக்ஷி மாமி.

"எனக்கு பசிக்குது, என்ன செஞ்சிருக்கே? கொண்டு வா சாப்பிடலாம்" என்று மாமி கேட்டவுடன் வடையையும், சர்க்கரைப் பொங்கலையும், சுண்டலையும் கொண்டு வந்து கொடுத்தார் காமாக்ஷி மாமி.

சாப்பிட்டு விட்டு முடிந்ததும் "சரி நான் கிளம்பறேன். பொண்ணு தேடுவா, உன் ஆத்துக்கு வந்தது ரொம்ப சந்தோஷம்" என்று சொல்லி கிளம்பி போன மாமியை நினைத்து மனதில் இனம் புரியாத சந்தோஷம் ஏற்பட்டது காமாக்ஷி மாமிக்கு.

நிம்மதியாக கண்ணயர்ந்து தூங்கினார்.

காலையில் எழுந்ததும் முதல் வேலையாக மாலினிக்கு போன் செய்து "நீ நல்லா இருப்பேடி குழந்தே. உன்னால வர முடியாவிட்டாலும் உன் அம்மாவை அனுப்பி எனக்கு சந்தோஷத்தை கொடுத்து விட்டாய். அம்மா கிட்டே போனை கொடு" என்று காமாக்ஷி மாமி கூற, "அம்மாவா? என்னோட அம்மா இறந்து பத்து வருஷமாறது. நீங்க யாரையோ நினைச்சு இங்கே போன் செய்யறேள்"  என்று சொல்லி மாலினி போனை வைக்கவும் குழம்பி தலையை சுற்றுவது போல் இருந்தது காமாக்ஷி மாமிக்கு.

"அப்ப இங்கே வந்தது யார்? கொட்டும் மழையிலும் வந்து என்னை பரவசப்படுத்தியது யார்?" விடை தெரியாமல் கொலுவை நோக்க அங்கே அம்பாள் சிலை மந்தகாஸப் புன்னகையுடன். குளித்து தெளித்து பூக்கூடையுடன் கோவிலுக்கு புறப்பட்டாள் காமாக்ஷி மாமி. அன்று கோவிலில் கூட்டம் லைனில் நின்று, கால்வலி வேறு. அம்மன் சன்னிதி வந்ததும் காமாட்சி மாமியின் முகத்தில் அதிர்ச்சி. அப்படியே சரிந்து விழுந்து விட்டாள் மயக்கமடைந்து. அருகிலுள்ளவர்கள் மாமியைத் தூக்கி வெளி மண்டபத் தூணில் சாய்த்து தண்ணீர் கொடுத்தனர். சிறிது நேரத்தில் எழுந்து மறுபடியும் அம்மன் சன்நிதியில், அதே புடவை, நேற்றிரவு யாரோ ஒரு மாமிக்கு தான் வைத்துக் கொடுத்த புடவையில் அம்மன் ஜொலித்துக் கொண்டிருந்தாள்.  தன் ஆத்துக்கு நேற்று இரவு வந்தது அம்பாள் தான் என்று புரிந்தது. இப்படித்தான் உண்மையான பக்தி கொண்டுள்ள பலருக்கு யாரோ போல் காட்சி கொடுப்பா காமாக்ஷி.

Thursday, October 14, 2021

தெரிந்து கொள்ளலாம் (Swachhta @PetroPump App)


இந்தியாவில் ஹோட்டல்கள் மட்டுமல்லாது ஓவ்வொரு பெட்ரோல் பங்க்களும் சரியான பராமரிப்புள்ள குடிநீர் மற்றும் கழிவறை வசதியை பொது மக்களின் உபயோகத் திற்காக கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது மத்திய அமைச்சகத்தின் விதியாகும். 

நாம், அந்த பங்கிலோ வேறு பங்கிலோ ஒவ்வொரு முறையும் பெட்ரோல் மற் றும் டீசல் வாங்கும்போது முறையே ஒவ்வொரு லிட்டருக்கு 6 பைசாவும் 4 பைசாவும் கழிவறை பராமரிப்பு செலவுக்காகக் நம் கையிலிருந்து கொடுக்கி றோம்.அதனால் அடுத்த முறை அவசரம் எனில், உங்கள் கூகிள் மேப்பில் பக்கத்தி லுள்ள பெட்ரோல் பங்ககளை கண்டுபிடியுங்கள்.இந்த இலவசமாக  கழிவறை உபயோகப்படுத்தும் வசதி அங்கு இல்லை என்றாலோ, இருந்தும் நம்மை உபயோகப் படுத்த தடுத்தாலோ, பூட்டி வைத்து சாவி ஓனரிடம் உள்ளது என்று சிப்பந்திகள் மறுத்தாலோ, கழிப்பறை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இல்லையென்றாலோ, உங்கள் மொபைல் போனில் அந்த  பங்க்  மற்றும் கழிப்பறையின் புகைப்படத்தை எடுத்துக்கொண்டு, பங்கின் பெயர், முகவரியுடன் தேதி குறிப்பிட்டு கூகிள் பிளே ஸ்டோரில் (Google Play Store) - ல்  உள்ள ஸ்வஸ்தா மொபைல் ஆப் (Swachhta @PetroPump App) மூலம் புகார் பதிவு செய்யலாம்.

பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம், இந்திய அரசு (Ministry of Petroleum and Natural Gas, Government of India) மூலம் 3 நாள்களுக்குள் நேரடி நடவடிக் கை எடுக்கப்பட்டு உங்களுக்கு குறுந்தகவல் மற்றும் மின்னஞ்சல் அனுப்பப்படும்.

பொதுமக்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள் கின்றோம்..

Thursday, October 07, 2021

ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு

 ஸ்ரீரங்கம் 7-இன் சிறப்பு.

1. ஏழு உலகங்களை உள்ளடக்கிய பொருளில் ஏழு பிரகாரங்களைக் கொண்டுள்ளது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில்.

2. (1) பெரிய கோவில் (2) பெரிய பெருமாள் (3) பெரிய பிராட்டியார் (4) பெரிய கருடன் (5) பெரியவசரம் (6) பெரிய திருமதில் (7) பெரிய கோபுரம் இப்படி அனைத்தும் பெரிய என்ற சொற்களால் வரும் பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில்.

3. ஸ்ரீரங்கம் ரெங்கனாதருக்கு 7 நாச்சிமார்கள் (1) ஸ்ரீதேவி (2) பூதேவி (3) துலுக்க நாச்சியார் (4) சேரகுலவல்லி நாச்சியார் (5) கமலவல்லி நாச்சியார் (6) கோதை நாச்சியார் (7) ரெங்கநாச்சியார் ஆகியோர்.

4. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளுவார். (1) விருப்பன் திருநாள் (2) வசந்த உத்சவம் (3) விஜயதசமி (4) வேடுபரி (5) பூபதி திருநாள் (6) பாரிவேட்டை (7) ஆதி பிரம்மோத்சவம்.

5. ஸ்ரீரங்கம் கோவிலில் வருடத்திற்கு ஏழு முறை நம்பெருமாள் திருக்கோவிலை விட்டு வெளியே எழுந்தருளுவார். (1) சித்திரை (2) வைகாசி (3) ஆடி (4) புரட்டாசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

6. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் உற்சவத்தில் 7ம் திருநாளன்று வருடத்திற்கு 7 முறை நம்பெருமாள் நெல்லளவு கண்டருலுவார். (1) சித்திரை(2) வைகாசி (3) ஆவணி (4) ஐப்பசி (5) தை (6) மாசி (7) பங்குனி.

7. ஸ்ரீரங்கம் கோவிலில் நடைபெறும் நவராத்ரி உற்சவத்தில் 7ம் திருநாளன்று ஸ்ரீரெங்க நாச்சியார் திருவடி சேவை நடைபெறும்.

8. தமிழ் மாதங்களில் ஏழாவது மாதமான ஐப்பசி மாதத்தில் மட்டும் 30 நாட்களும் தங்க குடத்தில் புனித நீர் யானை மீது எடுத்து வரப்படும்.

9. ராமபிரானால் பூஜிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீரங்கம் கோவில். ராமாவதாரம் 7வது அவதாரமாகும்.

10. இராப்பத்து 7ம் திருநாளன்று நம்பெருமாள் திருகைத்தல சேவை நடைபெறும்.

11. ஸ்ரீரங்கம் தாயார் சன்னதியில் வருடத்திற்கு ஏழு உற்சவங்கள் நடைபெறும். (1) கோடை உத்சவம் (2) வசந்த உத்சவம் (3) ஜேஷ்டாபிஷேகம், திருப்பாவாடை (4) நவராத்ரி (5) ஊஞ்சல் உத்சவம் (6) அத்யயநோத்சவம் (7) பங்குனி உத்திரம்.

12. பன்னிரண்டு ஆழ்வார்களும் 7 சன்னதிகளில் எழுந்தருளி இருக்கிறார்கள். (1) பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார் பேயாழ்வார் (2) நம்மாழ்வார், திருமங்கை ஆழ்வார், மதுரகவி ஆழ்வார் (3) குலசேகர ஆழ்வார் (4) திருப்பாணாழ்வார் (5) தொண்டரடிபொடி ஆழ்வார் (6) திருமழிசை ஆழ்வார் (7) பெரியாழ்வார், ஆண்டாள்

13. இராப்பத்து 7ம் திருநாளில் நம்மாழ்வார் பராங்குச நாயகியான திருக்கோலத்தில் சேவை சாதிப்பார்.

14. பெரிய பெருமாள் திருமுக மண்டலம் உள்ள இடமான தென் திசையில் 7 கோபுரங்கள் உள்ளன. (1) நாழிகேட்டான் கோபுரம் (2) ஆர்யபடால் கோபுரம் (3) கார்த்திகை கோபுரம் (4) ரெங்கா ரெங்கா கோபுரம் (5) தெற்கு கட்டை கோபுரம்-I (6) தெற்கு கட்டை கோபுரம்-II (7) ராஜகோபுரம்.

15. ஏழு உற்சவத்தில் குறிப்பிட்ட மண்டபங்களை தவிர மற்ற மண்டபங்களுக்கு பெருமாள் எழுந்தருள மாட்டார். (1) வசந்த உத்சவம் (2) சங்கராந்தி (3) பாரிவேட்டை (4) அத்யயநோத்சவம் (5) பவித்ரா உத்சவம் (6) உஞ்சல் உத்சவம் (7) கோடை உத்சவம்.

16. ஏழு சேவைகள் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே கண்டுகளிக்கும் சேவைகளாகும். (1) பூச்சாண்டி சேவை (2) கற்பூர படியேற்ற சேவை (3) மோகினி அலங்காரம், ரத்னங்கி சேவை (4) வெள்ளி கருடன் மற்றும் குதிரை வாஹனம் (5) உறையூர், ஸ்ரீரங்கம் மற்றும் ராமநவமி சேர்த்தி சேவை (6) தாயார் திருவடி சேவை (7) ஜாலி சாலி அலங்காரம்.

17. திருக்கோயில் வளாகத்தில் உள்ள ஏழு மண்டபங்களில் நம்பெருமாள் ஒரு நாள் மட்டுமே எழுந்தருள்வார். (1) நவராத்ரி மண்டபம் (2) கருத்துரை மண்டபம் (3) சங்கராந்தி மண்டபம் (4) பாரிவேட்டை மண்டபம் (5) சேஷராயர் மண்டபம் (6) சேர்த்தி மண்டபம் (7) பண்டாரம் ஆஸ்தான மண்டபம்

18. திருக்கோவிலில் உள்ள ஏழு பிரகாரங்களிலும் பெருமாளின் ஏழு திருவடிகள் உள்ளன.

19. ஏழு பிரகாரங்களிலும் ஏழு திருமதில்கள் அமையப்பெற்றுள்ளன.

20. திருக்கோயில் வளாகத்தில் ஏழு ஆச்சார்யர்களுக்கு தனி சன்னதி உள்ளது. (1) ராமானுஜர் (2) பிள்ளை லோகாச்சாரியார் (3) திருக்கச்சி நம்பி (4) கூரத்தாழ்வான் (5) வேதாந்த தேசிகர் (6) நாதமுனி (7) பெரியவாச்சான் பிள்ளை

21. சந்திர புஷ்கரிணியில் ஆறு முறையும், கொள்ளிடத்தில் ஒருமுறையும் இப்படியாக ஏழு முறை சின்ன பெருமாள் தீர்த்தவாரி கண்டருள்வார். (1) விருப்பன் திருநாள், சித்திரை மாதம் (2) வசந்த உற்சவம் வைகாசி மாதம், (3) பவித்ரோத்சவம் ஆவணி மாதம், (4) ஊஞ்சல் உற்சவம் ஐப்பசி மாதம், (5) அத்யயன உற்சவம் மார்கழி மாதம், (6) பூபதி திருநாள் தை மாதம், (7) பிரம்மோத்சவம். பங்குனி மாதம்.

22. நம்பெருமாள் மூன்று முறை எழுந்தருளும் வாகனங்கள் (1) யானை வாஹனம் – தை, மாசி, சித்திரை (2) தங்க கருடன் வாஹனம் – தை, பங்குனி சித்திரை (3) ஆளும் பல்லக்கு – தை, பங்குனி சித்திரை (4) இரட்டை பிரபை – தை, மாசி, சித்திரை (5) சேஷ வாஹனம் – தை, பங்குனி, சித்திரை (6) ஹனுமந்த வாஹனம் – தை, மாசி, சித்திரை (7) ஹம்ச வாஹனம் – தை, மாசி, சித்திரை

23. மாசி மாதம் நடைபெறும் திருப்பள்ளியோடம் திருவிழாவில் நம்பெருமாள் ஏழு வாகனங்களில் மட்டும் உலா வருவார்.

24. கற்பக விருட்சம், ஹனுமந்த வாஹனம், சேஷ வாஹனம், சிம்ம வாஹனம், ஒற்றை பிரபை ஆகிய இந்த ஐந்து வாகனங்கள் தங்கத்திலும் யாளி வாஹனம், இரட்டை பிரபை ஆகிய இந்த இரண்டு வாகனங்கள் வெள்ளியிலும் – ஆகிய ஏழு வாகனங்களை தவிர மற்ற அனைத்து வாகனங்கள் வெள்ளி மற்றும் தங்கத்திலும் உள்ளன.

25. மற்ற கோவில்களில் காண முடியாதவை (1) தச மூர்த்தி (2) நெய் கிணறு (3) மூன்று தாயார்கள் ஒரே சன்னதியில் (4) 21 கோபுரங்கள் (5) நெற்களஞ்சியம் (6) தன்வந்தரி (7) நான்கு திசைகளிலும் ராமர் சன்னதி

கொடுக்கப்பட்டுள்ள 25ல் 2 மற்றும் 5 இரண்டையும் கூட்டினால் வருவது 7.

பொம்மைக்கார தெரு

இப்படி ஒரு இடம் காஞ்சிபுரத்தில் இருக்கிறது என்று இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது.

ஒரு தெரு முழுதும் கொலு பொம்மை தயாரிக்கும் வீடுகள் இருக்கிறது.

புது இடம்,ஊரில் இருந்து கொலு பொம்மைகளை கொண்டு வரவில்லை அதனால் வேலூர் அல்லது வாலாஜாவில் சில பொம்மைகள் வாங்கிக் கொள்ளலாம் என எங்கு கிடைக்கும் என சக ஊழியரிடம் விசாரித்தேன்.

காஞ்சிபுரத்தில் இதற்கான தனி தெருவே இருக்கிறது.அங்கு கிடைக்காத பொம்மைகளே இல்லை சார் டிரை பண்ணி பாருங்களேன் என்றார்.

அஸ்தகிரி என்று அந்த வீதிக்கு பெயர். பொம்மை கார தெரு எனில் யாரும் சின்ன காஞ்சிபுரத்தில் வழி காட்டுவார்கள்.

குறுகலான வீதி.இரண்டு புறங்களிலும் வீதிகளில் வீட்டு வாசலில் எல்லா பொம்மைகளும் மாதிரி காட்சிக்கு அடுக்கப்பட்டு இருக்கிறது. விசாரித்தால் உள்ளே போங்கள் எல்லா பொம்மையும் இருக்கிறது என அனுப்பி வைக்கிறார்கள். சில இல்லங்களில் வீட்டின் உள்ளே, சில இல்லங்களில் வீட்டின் மாடி அறையில், என அடுக்கப் பட்டிருக்கும் அட்டை பெட்டிகள், கிடத்தப் பட்டிருக்கும் பொம்மைகளை சர்வ ஜாக்கிரதையாக தாண்டி போகிறோம்.

காணக்கிடைக்காத செட் பொம்மைகள் எல்லாம் அங்கு கொட்டிக் கிடக்கிறது. பேப்பர் மேஷ் பொம்மைகள் அளவில் பெரிதாகவும் நல்ல பினிஷிங் உடனும் இருந்தாலும் இவளுக்கு மண் பொம்மை மீது தான் அலாதி ஆர்வம்.

திருவிழாவுக்கு வந்த குழந்தைகள் போல எல்லா வீடுகளிலும் ஏறி இறங்கினோம்.

ரொம்ப நாளாக தேடிக்கொண்டிருந்த கைலாய செட் கிடைத்தது. 

விலை என்னுடைய அனுபவத்தில் மிக மிக சகாயம். மேலும் பேரம் பேசினால் நிறைய குறைக்கிறார்கள். நமக்குத்தான் பேச மனம் வரவில்லை. நீங்களே பார்த்து சொல்லுங்க என சொன்னால் சட்டென 200 , 300 குறைத்துக் கொள்கிறார்கள்.

தெருவெங்கும் திருவிழா போல இருக்கிறது  கார்களின் அணிவகுப்பால் மிளிர்கிறது. 

காவடி செட் இருக்கிறதா? பீமன் கர்வ பங்கம் செட் இருக்கா? ஶ்ரீரங்கம் விஸ்வரூப தரிசனம் செட் இருக்கிறதா? என நாங்கள் இருக்கும் போதே பலர் சொல்லித் தேடுகின்றனர். இருந்தால் எடுத்துக் கொடுக்கிறார்கள், இல்லையெனில் நாலாவது வீடு புளூ கலர் பெயிண்ட் அடிச்சிருக்கும் அங்கு கேளுங்க என வழி காட்டுகிறார்கள்.

இந்த தெரு நூறாண்டு களுக்கு மேலாக இந்த தொழிலை மேற்கொண்டு வருகிறது. குலாளர்கள் வம்சம் பெரும்பான்மை. இப்போது தொழில் கற்றுக்கொண்ட பலரும் இதை மேற்கொள்ள துவங்கியுள்ளனர்.

பொம்மைகளை மடியில் சாய்த்து நாகாஸ் வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை பார்த்தேன். ஒரு குழந்தையை போல அதனை கைகளில் பிடித்துள்ளார்.என்ன ஒரு அழகு.

வாய்ப்புள்ளவர்கள் , பொம்மை பிரியர்கள், அவசியம் தரிசிக்க வேண்டிய புனித பூமி சின்ன காஞ்சிபுரம் , பொம்மைகார தெரு.

இராமாயணம், மகாபாரதம், பாகவதம், போன்ற புராண செட் பொம்மைகள் கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.கிரிக்கெட், கல்யாணம், கடைவீதி, டான்ஸ் பொம்மைகள், தேசத் தலைவர்கள், போன்ற பொம்மைகளும் உள்ளன.

நான் பொம்மை வாங்கிய சில கடைகளின் உரிமையாளர்கள் கடந்த இரண்டு வருடமாக தொழில் முடங்கிப் போனது குறித்து மிகுந்த கவலை தெரிவித்தனர்.

ஒரு கடையில் பேசிக்கொண்டு இருந்த போது பிரபல ஓவியர் வேதா அவர்களின் மகளும் மருமகனும் தான் கடை உரிமையாளர்கள் என தெரிய வந்தது. கலைக்குடும்பம். கனடா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக கூறினார் திரு.பத்மநாபன்.

பயன்படுமே என்று நான் பொம்மை வாங்கிய கடையின் செல்போன் நம்பர்கள் கொடுக்கிறேன்.இது விளம்பரத்திற்கு அல்ல. நேரில் செல்ல முடியாதவர்கள் போனில் பேசி அனுப்ப முடியுமா என கேட்டுக் கொள்ளலாம். கனடாவுக்கு அனுப்புபவர்கள் இந்தியாவுக்குள் அனுப்ப மாட்டார்களா என்ன? 

srimathi art works 

(ஓவியர் வேதா அவர்களின் மருமகன் ) 9443690141

குருநாதன், 9994044065

ஜெயபால் 8870017300