Pages

Thursday, August 19, 2021

அர்ச்சகர்கள் விஷயம்

அர்ச்சகர்கள் விஷயம்

இது பலருக்கு பிடிக்கமால் போகலாம். ஆனால் இது யதார்த்த நிலை.

எழுத்து பிடிக்காதவர்கள் என்னை மன்னிக்கவும்

நான் அந்த கோவிலுக்கு 25 வருடம் கழித்து போயிருந்தேன். 

பெரிய மாற்றம் அந்த கிராமத்தில் இல்லை. ஆனால் மண் சாலை இல்லாமல் தார் சாலை போடப்பட்டிருந்தது. 

நாகரீக வளர்ச்சியின் முழு அடையாளம் தெரியவில்லை என்றாலும் அலைபேசியை கையில் வைத்து பேசியபடி ஒரிருவர்  என்னை கடந்தனர்.

கோயிலுக்குள் நுழைந்தேன். கடைசியாக எப்பொழுது புதுப்பிக்கப்பட்டிருக்கிறது என்று தெரியவில்லை ஆனால் சுத்தமாக இருந்தது. பெருமாள் சன்னதியில் திரை போடப்பட்டிருக்க, பொறுமை இல்லாமல் மனம் தவித்தது. 

சிறிது நேரத்தில் உள்ளேயிருந்து பட்டாச்சாரியர் வெளியே வர, அவருக்கு வயது நிச்சயம் 70 ஆவது இருக்கும். கன்னத்தில் பழுதடைந்த தார் சாலைப் போல சிறு குழிகள், நெற்றியில் நீண்ட திருமண் சகிதம் வாங்கோ இதோ சித்த நேரம் முடிஞ்சுடும் அப்புறம் பெருமாளை சேவிக்கலாம்.

நடையில் தளர்வு இருந்தாலும் உறுதி இருந்தது. தனி ஒரு மனிதராக அந்த கோயில் நிர்வாகம் அவர் தானென்று புரிந்தது. 

மடப்பள்ளியில் இருந்து ப்ரசாதம் கொண்டு வந்து சாற்றுமறை முடித்து பெருமாள் சேவை முடிந்தது. 

தயிர்சாதம் ப்ரசாதமாக கொடுக்க, திவ்யமாக இருந்தது.

எங்கே இருந்து வரேள்? 

ஸ்வாமின் அடியேன் சென்னை, சொந்த ஊர் பக்கத்தில் இருக்கு, இந்த பெருமாளை சேவிக்கனுமென்று நீண்ட நாள் ஆசை, இன்னிக்குத்தான் நிறைவேறுச்சு.

ரொம்ப சந்தோஷம், ரொம்ப விஷேஷமான பெருமாள் இவர், இங்க வந்து போனாலே ஒரு பெரிய நிம்மதி கிடைக்கும் எல்லார்க்கும். ப்ரார்த்தனையே வேண்டாம். வரவா எல்லாருக்கும் நிம்மதியை கொடுக்கும் பெருமாள் இவர். 

அவரின் பேச்சில் ஒரு மகனை பாராட்டும் தந்தையின் நோக்கமும் பெருமையும் எனக்கு தெரிந்தது. 

நிச்சயம் பெருமாளை ஒரு குழந்தையை போல இவர் பார்த்துக்கிறவர் என்பது நன்றாக புரிந்தது. 

பெரிய கோயிலில் இருக்கும் பட்டாசாரியர் போல இவரிடம் பொருளாதார வளமை இருப்பதாக தெரியவில்லை.

நிறைய பேசினேன். நிறைய கேட்டேன், ஆழ்வார் அமுதம் கூடவே நிறைவான ப்ரசாதமாகவும் கிடைத்தது. 

எதாவது திருக்கோயிலுக்கு செய்யனும் என்று பிரியப்படறேன் என்று சொன்னேன். 

அவர் உடனே எதுவும் சொல்லவில்லை. சற்று கண்களை மூடிக் கொண்டார். பின் மெதுவாக சொன்னார்.

நேக்கு ஒரு ஒத்தாசை செய்யுங்கோ, தினம் பெருமாளுக்கு விளக்கு ஏற்ற எண்ணெய் வேண்டும். மளிகை கடைக்கு போய் வாங்கிண்டு வந்து கொடுக்கிறேளா?

எனக்கு பகீரென்று தூக்கி வாரி போட்டது. தினம் விளக்கேற்ற வேண்டும். அதற்கு எண்ணெய் வேண்டும். ஆனால் இது ஒரு கிராமக் கோயில், இவருக்கு பெரிய வருமானமும் கிடையாது. சம்பளம் என்ன வரும் இவருக்கு?

எனக்கு வர 3300 சம்பளத்தில் நான் தான் வாங்கிறேன் தினமும். ரொம்ப கஷ்டமா இருக்கு. நேக்கு வேறு சம்பாத்தியமும் இல்லை. பசங்க யாரும் நேக்கு கிடையாது. நேக்கும் என் ஆம்படையாளுக்கும் இந்த பெருமாள் தான் பிள்ளை. அவனுக்கு தினம் கொஞ்சம் ப்ரசாதம் , தினம் விளக்கேற்றனும். அதான் கேட்டுட்டேன் , தயவு செய்து தப்பா நினைக்காதீங்க.. அவர் குரல் கம்மிப் போய் என்னிடம் கேட்க என் கண்களில் நீர் முட்டி நின்றது. 

இதோ வரேன் ஸ்வாமி என்று சொல்லி வெளியே வந்தேன், அருகில் இருக்கும் மளிகை கடைக்கு போய்….

இந்தாங்கோ, இரண்டு லிட்டர் எண்ணெய், வாங்கிண்டு வந்திருக்கேன், 

அவர் முகத்தில் பெரிய திருப்தி. ரொம்ப சந்தோஷம் ,நீங்க நன்னா பேஷா இருப்பேள் என்று மனமார வாழ்த்தினார்.

நான் சொன்னேன் அவரிடம், அந்த மளிகை கடைக்காரிடம் சொல்லி இருக்கேன். மாதம் இரண்டு லிட்டர் அல்லது எத்தனை லிட்டர் எண்னெய் வேண்டுமென்று நீங்க கேட்டாலும் கொடுக்கச் சொல்லியிருக்கேன். பத்து கிலோ அரிசி மாதம் கொடுக்கச் சொல்லியிருக்கேன் மாதா மாதம் ப்ரசாத நேவித்யத்துக்கு. ஒரு வருடத்துக்கு தேவையான பணம் அவர்கிட்ட கொடுத்துட்டேன் ஸ்வாமின். என் போன் நம்பரையும் கொடுத்திருக்கேன், பணம் தேவையென்றால் என்னிடம் கேக்கச் சொல்லியிருக்கேன், நீங்க கோயில் கைங்கரியத்துக்கு தேவையான எதுவும் அவரிடம் வாங்கிக்கோங்க!!

மனிதர் எழுந்து நின்னுட்டார், அவருக்கு பேச்சே வரலை. பெருமாளே என்று அரற்றினார். 

கண்ணீர் மல்க, என் கையை பிடித்து என் கண்ணை வெகு அருகில் பார்த்து நல்லா இருப்பேள் என்று தன் கைகளால் என் தலை மீது வைத்து, 

“ நீங்காத செல்வம் நிறைந்தேளோர் எம்பாவாய்” என்றார்.

இது தான் யதார்த்தம், எத்தனை கோயில்கள் இப்படி பராமரிக்கப்படுகின்றன என்று அரசுக்கு தெரியுமா? 

இப்படி இருக்கும் கோயிலை தேர்ந்தெடுத்து, அங்கு புது அர்ச்சகர்களை அனுப்ப வேண்டும்.

 அவர்களுக்கும் அப்படி ஒரு பக்தி வர வேண்டும். நிச்சயம் வரும். அப்பொழுது தான் இறை நம்பிக்கை அதிகம் உணரப்பட, ஒரு பெரும் ஒற்றுமை இந்த சமுதாயத்தில் ஏற்படும். 

இப்படி 3300 ரூ சம்பளம் வாங்கி ப்ராமணர்கள் என்ன பெரிதாக சுகம் கண்டார்கள்? 

வாழ்க்கையை அனுபவிக்க முடியாமல் என்றும் இறைப்பணியில் இருந்து குடும்பத்துக்கு பெரிதாக எதுவும் சம்பாதித்து வைக்க முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே?

எல்லா ஜாதியினரும் அர்ச்சகராக வருவது என்பதும் வரவேற்க வேண்டிய ஒன்று தான். 

ஆனால் இந்த தியாகம் பொறுமை பக்குவம் நேர்த்தி, ஆகம விதிகள் அனைத்தும் சரியாக அமைவர்களை தேர்ந்தெடுத்தால், ஆலயம் இருக்கும் இறைவன் ஜாதி பார்த்தா தன் பூஜையை நிறைவேற்றிக் கொள்ளப் போகிறான். 

சோ சாரின் "எங்கே ப்ராமணன்" கதை படித்தவர்களுக்கு நிச்சயம் வாழ்வியல் முறை தெரிந்திருக்கும். இதை ப்ராமணர்களுக்கு எதிராக நடத்தப்படும் விஷயம் என்பதைச் சொல்லுவதையே நான் எதிர்க்கிறேன், அப்படிச் சொல்லுவதால் இன்னமும் விரோதம் தான் வளரும். 

இந்து மதம் என்பது ப்ராமணர்கள் என்ற எண்ணம் தான் திராவிட சித்தாந்த அரசியல்வாதிகளுக்கு அடிப்படை.. அதை தகர்க்க இது வளர்க்கப்பட வேண்டும். 

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆக இறை பக்தி வளர, இந்து மத ஒற்றுமை ஒங்க, அதில் ப்ராமணர்களுக்கான அங்கம் இருக்கவே இருக்க, எதற்காக இதற்கு பெரும் கூச்சல் போட வேண்டும்?

விடுங்கள். இறைவன் அனைவருக்கும் பொதுவானவன் தான், வம்சாவழி தொழில் செய்ய எத்தனை குருக்கள் அல்லது பட்டாசாரியார் வாரிசுகள் தயாராக இருக்கிறார்கள்?

 இப்படி அரசு நேரிடையாக அர்ச்சகர் நியமிக்க, அப்படியாவது கோயில் விளக்குக்கு எண்ணெய் கிடைக்குதா என்று பார்க்கலாம்? 

வரக்கூடியவர் எந்த ஜாதியாக இருந்தாலும், மேலே சொன்ன கதையில் அமைந்த பெரியவர் போன்ற மன நிலை உடையவராக அமைந்தால், அது தான் இறை நம்பிக்கைக்கும் இந்த மத ஒற்றுமைக்கும் இந்த அரசு செய்திருக்கக் கூடிய ஒரு பெரிய உதவியாகும்.

No comments:

Post a Comment