Pages

Monday, July 06, 2015

காயத்ரியின் மஹிமையும் அந்தண லக்ஷணமும்



புலன்களுக்கடிமையாக பூவுலகில் தோன்றும் மனிதன் ஞானக்கண் திறக்கப்பெற்று பரமாத்ம உருவை தன்னுள்ளே காண ஆன்ம ஒளிநிறைந்த தன் தந்தையாலோ வேறொரு பெரியாராலோ செலுத்தப்படும்போது இரண்டாம் பிறவியை எடுக்கிறான். ‘த்விஜன்ஆகிறான். ஊனக்கண்கள் இரண்டைக் கொண்டு எப்பேரொளியைக் காணமுடியாதோ அதைக்காண ஞானக்கண்ணை உபரியாக அடைவதாலேயே அப்பெருநிகழ்ச்சியைஉபநயனம்எனக்கூறுகிறோம். ‘உபநயனம்என்னும் சொல்லுக்குஅருகே அழைத்துப் போவதுஎன்றும் ஓர் அர்த்தமுண்டு. ஒரு தந்தையே தன் மகனுக்கு குருஸ்தானத்தில் இருந்து அவனைஅக்ஷர பிரஹ்மமென்றும்ஏகாக்ஷரிஎன்றும் போற்றப்படும் பிரணவத்தை ஆதாரமாகக் கொண்டு காயத்ரி மந்திரத்தை உபதேசிப்பதன் மூலம் வேதாரம்பத்தைச் செய்து, அவனை பரம்பொருளின் அருகில் அழைத்துப்போவதால் இந்த உபநயனத்தைபிரஹ்மோபதேசம்எனவும் கூறுவர். ‘காயந்தம் த்ராயதே இதிகாயத்ரிஎன்றபடி ஸுஸ்வரத்தில் காயத்ரியை எவன் அநுஸந்தானம் செய்கிறானோ அவனை காலமெல்லாம் அந்த காயத்ரி மந்திரமானது ரக்ஷையாக இருந்து காக்கிறது.

இந்த காயத்ரியின் பெருமை உபாசிப்பவனைக் காப்பதுடன், அவனுடைய நித்ய கர்மானுஷ்டானங்களை நம்பியிருக்கும் தேவர்களுக்கும் பலம் சேர்க்கிறது. பித்ரு பூஜனத்தின் போது படிக்கப்படும் ஒரு வேத பாகமானது இதை விளக்குகிறது. “ஸஹவை தேவானாம் ...” எனத் தொடங்கும் இந்தப் பாகமானது தேவர்களுடன் போரிட விழைந்து குருவின் அனுமதியுடன் தேவர்களில் சிறந்தவனென அவர்கள் தேர்ந்தெடுத்த சூரியபகவானுடன் அவனது கிரணங்கள் அதிகமான தீட்சண்யத்துடன் இல்லாத உதய, அஸ்தமனப் பொழுதுகளில் அவனை அசுரர்கள் தாக்கிப் போரிட, அதே வேளைகளில் விதிப்படி ஸந்த்யாவந்தன அனுஷ்டானம் புரிந்து அர்க்யம் சமர்ப்பிக்கும் வைதீகர்கள் காயத்ரியால் அபிமந்த்ரிக்கப்பட்ட ஜலத்தை உயரே விட்டெறிய அந்த ஜலமானது வஜ்ராயுதம் போல பலம் பொருந்தியதாக அந்த அசுரர்களை மந்தேஹாருணம் என்னும் தீவில் தூக்கியெறிந்து, மேலும் அவர்களை அப்பிரதக்ஷணமாக ஓடச்செய்கிறது. சூரியனுக்கும், அவன் மூலம் தேவர்களுக்கும் பலம் சேர்க்கிறது என விளக்குகிறது. இந்தக் காயத்ரியின் அருளால்தான் யாக்ஞவல்க்யர் சூரிய பகவானுக்கிணையாக ஆகாயவெளியில் சஞ்சரித்து ஸுக்ல, யஜுர் வேதத்தை அவரிடமிருந்தே கற்று உலகோருக்கு அளிக்க முடிந்தது. இந்த காயத்ரியானது பிராஹ்மண, க்ஷத்திரிய, வைஸ்யர்களுக்குப் பொதுவானது. பிராஹ்மணனாகப் பிறந்திருந்தாலும் மூன்று தலைமுறையாக காயத்ரியை இழந்தவன் பிராஹ்மணத்வத்தை இழந்தவனாகிறான் என நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. மூன்று தலைமுறை யக்ஞம் இல்லாவிட்டால் அவன்துர்பிராஹ்மணனென்றும், ‘பிரஹ்மபந்துஅதாவது பிராஹ்மணர்களை உறவினராகக் கொண்டவன் எனவும் அழைக்கப்படுவான். ஆனால் காயத்ரி போனால் பிராஹ்மணத்வம் போய்விடுகிறது.

எந்த ஒரு தேவதையையும் தெரிந்து கொள்ள அல்லது வசப்படுத்த ஒரு மந்திரத்தை நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அது போல பரம்பொருளை அறிய அவரது அனுக்ரஹம் பெற அவை கூறுவது காயத்ரி மந்திரத்தை. இது ரிக்வேதத்தில் மூன்றாம் ஸூக்தத்தில் அறுபத்தியிரண்டாம் மண்டலத்தில் பத்தாவது மந்திரமாகக் கூறப்படுகிறது. காயத்ரியை பரத்வாஜ ஸ்மிருதிதன்னை ஜபிப்பவனைக் காப்பவள்எனப் போற்றுகிறது. சாவித்ரி மந்திரமானதத் ஸவிதுர் வரேண்யம், பர்கோ தேவஸ்ய தீமஹி, தியோ யோ : பிரசோதயாத்என்ற மூன்று பாதங்களைக் கொண்டதில்பூ: புவ: ஸுவ:’ என்ற வ்யாஹ்ருதிகளை பிரணவத்துடன் கூடியதாகச் சேர்த்தால் அப்போது அது காயத்ரி மந்திரமாகிறது. இருபத்திநான்கு அக்ஷரமுள்ள இந்த மந்திரம், மற்ற எல்லா மந்திரங்களிலும் தலையாய மந்திரமாகப் போற்றப்படுகிறது.

ஒவ்வொரு மந்திரத்தையும் உலகிலுள்ளோர் அறிந்து, நன்மைகள் யாவும் பெற்று உய்யப் பரப்பியவர் என்று ஒரு ரிஷியின் பெயரால் அந்த மந்திரத்தை அறிவது நம்மிடையே தொன்று தொட்டு உள்ள ஒரு நடைமுறை. அதன்படியே இந்த காயத்ரி மந்திரமானது விஸ்வாமித்ரரை ரிஷியாகக் கொண்டது.

ஓம்காரமான பிரணவமாக (மனிதர்கள் வாழும்) பூலோகம், (பித்ருக்கள் வாழும்) புவர்லோகம், (தேவர்கள் வாழும்) ஸ்வர்க்க லோகம் ஆகியவற்றிலெல்லாம் நிறைந்து விளங்கி, எந்த லோகங்களுக்கெல்லாம் (ஸக்தியளிப்பதனால்) படைப்பவனாய்பிரத்யக்ஷ பிரஹ்மமாக ஸூர்யன் விகங்குகிறானோ அப்படிப்பட்ட ஸூர்யனுக்கு மிகவும் பிரியமானதாகவும், அந்த ஸூர்யமண்டலத்தில் நித்யவாசம் செய்யும் மஹேஸ்வரனின் பெருமைகளை எடுத்துரைக்கும் எந்தப் பேரொளியானது (பரமாத்ம தத்துவம்) நம் அறிவினைத் தூண்டுகிறதோ, அந்தச் சிறந்த ஒளியாகிய பரமாத்மாவின் ஜோதி ஸ்வரூபத்தை தியானிப்போம் என்ற பொருளையுடைய இந்த காயத்ரி மந்திரமானது, துரீய ஸந்த்யையினை உடைய ஸ்ரீவித்யோபாசகர்களுக்கு மட்டுமே உபதேசிக்கப்படும். நான்காவது பாதமானபரோ ரஜஸி ஸாவதோம்’ (யாவற்றிலும் சிறந்ததான அந்தப் பேரொளியில் நிலைப்போமாக) என்பதுடன் முழுமை பெறுகிறது. இப்படி நான்கு பாதங்களை உடைய காயத்ரிஓம்என்னும் பிரணவத்தில் தொடங்கிஓம்என்னும் அதே பிரணவத்தில் முடிவடைவதனால் ஸப்தபிரஹ்மமாகவே திகழ்கிறது. ஏனெனில் பரம்பொருளைக் குறித்து வேதமும், ‘யோ வேதாதௌ ஸ்வர ப்ரோக்தோ, வேதாந்தே பிரதிஷ்டித: தஸ்ய பிரக்ருதிலீனஸ்ய...’ என வேதத்தின் தொடக்கமான பிரணவத்தாலும், இறுதியான பிரணவத்தாலும் நிலை நாட்டப்படுபவன், எவ்வுயிரிலும் மறைந்துள்ளவன் எனக் கூறுகிறதல்லவா?

இப்படிப்பட்ட காயத்ரியை அதன் அதிதேவதையான சூரியனாலேயே உபதேசிக்கப்பட்டவராக வாமனரை ஸ்ரீமத் பாகவதம் வர்ணிக்கிறது. அந்த மந்திரம் தந்த பலத்தாலன்றோ அவரால் மூவுலகையும் ஈரடியால் அளந்து திரிவிக்ரமராகத் திகழமுடிந்தது? இப்படி வேதத்தின் சுருக்கமாக விளங்குவதாலேயே இதை உபதேசிக்கும் சடங்கினைபிரஹ்மோபதேசம்எனக் கூறுகிறார்கள். ஆகவே இதை உபதேசிப்பதன் மூலம் வேதாரம்பத்தைச் செய்துவிட்ட தந்தையானவர் தன் மகனை, தகுந்ததொரு பிரஹ்மஞானியான குருவிடம், வேதமோதுவதில் நிபுணரிடம், ‘அஹம் பிரஹ்மோஸ்மிஎன்னும் ஞானம் உதித்தவரிடம், பூரணமாக அத்யயனம் செய்து திறமை எய்தி பிரஹ்மஞானமடைய, கொண்டு சேர்க்கிறார். அந்த குருவும் வேதப்பொருளை உணர்ந்தவராக அந்த மாணவனை படிப்படியாக உயர்த்தி, ‘தத் துவமஸி’ (அந்த பரம்பொருள் நீயேயன்றி வேறில்லை ஆகவே அதனை உன்னுள் உணர்) என போதித்து பிறகுஸர்வம் கல்விதம் பிரஹ்ம’ (நீ காண்பவை, உணர்பவை யாவுமே பரம்பொருள்தான். ஆகவே நீ உன்னுள் கண்ட பரம்பொருளை இவை யாவற்றிலும் காண்பாயாக) என மஹா வாக்யங்களால் பிரஹ்மஞானி யாக்குகிறார்.
இப்படி உயர்த்தப்பட்ட அந்த சிஷ்யன் பிரஹ்மத்தை அனைத்திலும் காண்பவனாக பிராஹ்மணனாகிறான். அனவரதம் தான் கற்ற வேத மந்திரங்களால் யாகத் தணலின் அருகிலிருந்து எவ்வுயிரும் நலமாய் வாழ வேண்டுவதால் அந்தணனாகிறான். வேதத்தை அனவரதம் அனுஸந்தானம் செய்து பிறருக்கும் கற்றுத்தருவதால் வைதிகனாகவும், வேதியனாகவும் வேத வழி வாழ்கிறான். எவ்வுயிரிலும் பரம்பொருளைப் பார்த்து, எவ்வுயிரின் துயரையும் தன் துயராகப் பார்ப்பதனால் பார்ப்பானாகிறான். காயத்ரியினை உபதேசிக்கப்படுவதால் பிறிதொரு பிறவி அடைகிறான் என்பதால் மட்டுமின்றி, காமம், க்ரோதம், த்வேஷம் முதலியவற்றைக் கொன்று, தன் இந்திரியங்களையும் வெல்வதனாலேயே த்விஜனாகிறான். இப்படி எவ்வுயிரையும் தன்னுயிராய்க் கண்டு, எவ்வுயிரிலும் பிரஹ்மத்தைக் கண்டு, அதனாலேயே பேதம் பாராட்டாது சேதன, அசேதன வஸ்துக்களிடமும் அன்பு கொண்டவனே, தான் கற்ற வேதத்தினை இந்த உயிர்களை யாவும் நலம் வாழ பிரயோகிப்பவனே தன்னை பிராஹ்மணனாக, வேதியனாக, அந்தணனாக, பார்ப்பானாகக் கூறிக்கொள்ளத் தகுந்தவன். அதனாலேயேகர்மணா ஜாயதே பிராஹ்மண:” என கூறுகிறோம். ஆகாரநியமங்களால், நித்ய கர்மனானுஷ்டானங்களால் தன் நடவடிக்கைகளினால், மனோபாவத்தினால்தான் ஒருவன் உயர்வதோ தாழ்வதோ நிகழ்கிறது. இதையே பகவான் ஸ்ரீகிருஷ்ணரும்குண, கர்ம விபாகஸ:” என்னும்போது உணர்த்துகிறார்.
கோபத்தை அடக்காதவன், அந்தணன் என்ற நிலயினின்றும் கீழிறங்கிவிடுகிறான் என்பதை பாணனின்ஹர்ஷசரிதமும் நன்கு விளக்குகிறது. கணவரான பிரஹ்மாவின் பணிவிடையில் தன் மனம் ஈடுபட்டதால், சபையினுள் நுழைந்த துர்வாச முனியை கவனிக்காத ஸரஸ்வதியை மனித உலகில் சென்று ஜனிக்கும்படி அவர் சபித்துவிட, அருகிலிருந்த சாவித்ரி தேவி அவரைபிரஹ்மபந்தோஎனத் திட்டினாள். அதாவதுபிறப்பினால் மட்டுமே பிராஹ்மணன் நீ, பிராஹ்மணர்களுக்கு உறவினனாக மட்டுமே நீ உன்னைக் குறிப்பிட முடியுமே தவிர பிராஹ்மணனாக இருக்கும் தகுதியை இந்த உன் கோபத்தால் இழந்துவிட்டாய்என்றாள். மாமுனியான துர்வாசருக்கே இந்த நிலை.

அனைத்து ஜீவராசிகளிலும் பரம்பொருளைக் காண்பதில் தனித்து விளங்கியவர்களும் உண்டு. நாமதேவர் சிறந்த பாண்டுரங்க பக்தர். ஒவ்வொரு புனித ஸ்தலங்களுக்கும் சென்று இறைவனைத் தரிசித்து வரும் வழக்கத்தை உடையவர். ஒரு சமயம் தன் புனித யாத்திரையில் ஒரு சத்திரத்தில் தங்கி ரொட்டிகளைச் செய்து வாட்டிக்கொண்டிருந்தார். இறைவனுக்குப் படைத்து பின் தான் உண்பதற்காக, இறுதியில் ரொட்டியில் தடவ வெண்ணெயை எடுத்து வர உள்ளே சென்றார். இதற்கிடையில் அங்கு வந்த ஒரு நாய் ரொட்டிகளில் ஒன்றைக் கவ்விக்கொண்டு ஓடியது. வெண்ணெயை எடுத்துக் கொண்டு வெளியே வந்த நாமதேவர், பகவானே! வெண்ணெயைத் தடவி உனக்குத் தர இருந்தேனே, உன் தொண்டையில் அடைத்துக் கொள்ளுமே; இரு, வெண்ணெயைத் தடவித் தருகிறேன்.” எனக் கூறிக்கொண்டு அந்த நாயின் பின்னால் ஓடினார். பலருக்கும் அந்தக் காட்சி வேடிக்கையாக இருந்தது. பகவானைக் கண்ட நாமதேவருக்கு அது நாயாக அன்றி பரம்பொருளாகக் காட்சியளித்தது. நாயாகவே அதை கண்டவருக்கு பரம்பொருள் தெரியவில்லை.

இப்படி உயிருள்ளவற்றில் பரம்பொருளைக் கண்ட நாமதேவரினும் உயர்ந்து அசேதனமான தூணிலும் துரும்பிலும் கூட பரம்பொருளைக் காணும் 
நிலைக்குப் போய் பிரஹ்மஞானியாகத் திகழ்ந்த பிரஹலாதனுக்கு சாக்ஷாத் யோக நரசிம்ஹரே குருவாக அமர்ந்து யோகநிலையில் அவனை உயர்த்தினார்.
இந்த ஓர் ஆன்மிக யாத்திரையின் முதற்படிதான் காயத்ரி மந்திர உபதேசம். அதனாலேயே அது எல்லா மந்திரங்களுக்கும் தாயாககாயத்ரீம் சந்தஸாம் மாதாஎனக் குறிப்பிடப்படுகிறது. இந்த காயத்ரியை ஜபிக்காதவன் வேறு மந்திரங்களை எவ்வளவு ஜபித்தாலும், அஸ்திவாரமின்றி எழுப்பப்பட்ட கட்டடம் போல் அது பலமற்றது ஆகிவிடும். இதையே பஹ்வ்ருசோ பநிஷத் என்னும் தேவி உபநிஷதமானது, “யோஹமஸ்மி, ஸோஹமஸ்மி, யோஸௌ ஸோஹமஸ்மிஎன்றெல்லாம்எவள் (உபாஸகர்களால்) பாவிக்கப்படுகிறாளோ அவளே ஷோடசி, ஸ்ரீவித்யா, பஞ்சதஸாக்ஷரி, மஹாத்ரிபுர ஸுந்தரி, பாலா, அம்பிகா, பகலா, மாதங்கி, ஸ்வயம்வர-கல்யாணி, புவனேஸ்வரி, சாமுண்டா, வாராஹி, திரஸ்கரிணி, ராஜமாதங்கி, ஸுகஸ்யாமளா, லகுஸ்யாமளா அஸ்வாரூடா, பிரத்யங்கிரா, தூமாவதி, சாவித்ரி, காயத்ரி, சரஸ்வதி, பிரஹ்மானந்தகலா எனப் பலவாறாக பிரகாசிப்பவள்.” எனக் கூறுவதுடன், “பரமாகாஸ வடிவான எந்த அக்ஷர பிரஹ்மத்தில் வேதங்களும் நிலை பெறுகின்றனவோ, தேவர்களும் நிலைபெறுகின்றனரோ அந்தப் பொருளை எவன் அறிந்து கொள்ளவில்லையோ அவன் வேதத்தைக் கண்டு என்ன செய்யப்போகிறான்?” என்கிற தன் வாக்யங்களால் இதனையே மேலும் வலியுறுத்துகிறது. அதனாலேயே ஸ்ரீவித்யோபாஸனையிலும் பஞ்சதஸியின் மூன்று பாதங்களைக் காயத்ரியின் மூன்று பாதங்களுடனும் ஷோடஸியில் காணும் நான்காம் பாதத்தை பூர்ண காயத்ரியின் நான்காம் பாதத்துடனும் ஒப்பிடுவர்.
வால்மீகி மஹாமுனியும் காயத்ரியின் மகிமையினை உணர்த்த அதில் காணும் ஒவ்வோர் அக்ஷரத்துக்கும் ஓராயிரம் ஸ்லோகமென்னும் அடிப்படையில் இருபத்திநான்காயிரம் ஸ்லோகங்களில் தன் இராமாயணத்தை இயற்றினார்.

பாரதப்போருக்கு முன் ஸ்ரீகிருஷ்ணர் துர்க்கா தேவியைப் பிரார்த்திக்கும்படி அர்ஜுனனுக்குக் கூற, அவனும்

வேதஸ்ருதி மஹாபுண்யே ப்ரஹமண்யே ஜாத வேதஸி |
த்வம் ப்ரஹ்மவித்யா வித்யானாம் மஹாநித்ரா தேஹினாம் |
ஸாவித்ரீவேதமாதா ததா வேதாந்த உச்யதே |
ஸ்துதாஸி த்வம் மஹாதேவி விஸுத்தேனாந்தராத்மனா |
ஜயோபவது மே நித்யம் த்வத் ப்ரஸாதாத் ரணாஜிரே ||”


என துதித்ததாக மஹாபாரதம் கூறுகிறது.


இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த காயத்ரி மந்திரத்துக்கு அக்னியானது வாயாக விளங்குகிறது. இந்த மந்திரசக்தியான அக்னியானது ஒரு ஜீவனின் தேகமாகிய தேவாலயத்தில் (தகப்பனார் கர்ப்பாதானம் செய்யும் போதே) கர்ப்பத்திலேயே சம்பந்தப்பட்டு அசுத்தம் விளைவிக்கக்கூடிய சகலவிதமான பாபங்களையும், கெட்ட சக்திகளையும் எரிக்கிறது. அதை மேன்மையுறுத்தும் வகையில் புண்யாஹ வசனம், ஜாதகரணம், நாமகரணம், அன்னப் பிராசனம், சௌனம், உபநயனம் ஆகியவை யாவும் அக்னியைச் சாட்சியாகக் கொண்டே செய்யப்படுகிறன்றன. உபநயனத்தின் போது தகப்பனாரால் ஔபாஸன அக்னியிலிருந்து பிரித்துத் தரப்பட்ட அக்னியை அணையாது பாதுகாத்து ஸமிதாதானம் இருபோதும் அனுதினம் செய்து அந்த அக்னியையே சாட்சியாகக் கொண்டு மணமுடித்த அந்த மனிதன் தொடர்ந்து அதிலேயே ஔபாஸன, அக்னிஹோத்ரங்களைச் செய்து இறுதியில் அந்த அக்னியைக் கொண்டே பிரேதஸம்ஸ்காரம் செய்யப்படுகிறான். இதையேஸௌகர்ப்பே அந்த:” என்னும் அக்னியைக் குறித்த வேதவாக்யம் விளக்குகிறது.

இப்படிப்பட்ட பெருமை பொருந்திய காயத்ரி ஜப யக்ஞத்தை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாக ஸாதகம் செய்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம் சரீரம் புனிதமான தேவாலயமாகி விடுகிறது. “சிச்சக்தி: சேதனாரூபா, ஜடஸக்திர் ஜடாத்மிகா, காயத்ரிர் வ்யாஹ்ருதிஸ் ஸந்த்யா, த்விஜ விருந்த நிஷேவிதா,” என லலிதா ஸஹஸ்ரநாமத்தில் கூறியது போல தேவியே வந்து வசிக்கும் மஹாமேருவாக, ஸ்ரீபுரமாகவே நம் சரீரத்தை ஆக்கி தேவியுடன் நிஜஸாயுஜ்யம் அடைவோமாக.

Sandhya Vandhanam (Sengalipuram Sri Anantharama Dikshithar)
https://www.youtube.com/playlist?list=PLdsCxcK2f0Z2JPuDPAaPBHtGBIu-0wwXm

Posted by:  
Saravanan Subramaniam (http://srigurubhyonamaha.blogspot.in/2014/12/blog-post.html)

Shared via Google+ by:

No comments:

Post a Comment