நன்றி : http://bhajagovindham.blogspot.inகாஞ்சி பெரியவர் ஊர் ஊராகச் சென்று சாதுர்மாஸ்ய விரதம் இருந்துவந்த ஒருநாள் அது. அப்படி ஒரு கிராமத்தில் அவர் தங்கியிருந்தபோது, ஒரு விவசாயி பெரியவரை மிகவும் பிரயாசைப்பட்டு வந்து சந்தித்தார். அவரிடம் துளியும் உற்சாகமில்லை. முகமும் இருளடைந்து போயிருந்தது. வாயைத் திறந்து தன் துன்பங்களைக் கூற அவசியமே இல்லாதபடி, பார்த்த மாத்திரத்தில் அவரின் துன்பம் பெரியவருக்கு விளங்கி விட்டது. இருந்தும் அந்த விவசாயி,
சாமி… ஏண்டா உயிரோட இருக்கோம்னு இருக்கு. பேசாம குடும்பத்தோட தற்கொலை பண்ணிக்கலா மான்னுகூட தோணுது. ஒரு மனுஷனுக்கு வாழ்க்கைல போராட்டம் இருக்கும். ஆனா, என் வரைல போராட்டமே வாழ்க்கையா இருக்கு” என்று துயரத்தைச் சொல்லி அழுதார்.
பெரியவர் அவரிடம், குலதெய்வத்துக்கு ஒழுங்கா பூஜை செய்யறியா?” என்று கேட்டார்.
குலதெய்வமா… அப்படின்னா?” – திருப்பிக் கேட்டார் அவர்.
சரிதான்… உங்க குலதெய்வம் எதுன்னே தெரியாதா?”
ஆமாம் சாமி… வியாபார விஷயமா எங்க முன்னோர்கள் பர்மா போயிட்டாங்க. பல காலம் அங்க இருந்துட்டு திரும்பிவந்த குடும்பம் எங்க குடும்பம். என் பாட்டன்ல ஒருத்தருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாததால, அவர் பிள்ளைகளும் அவரைப் பார்த்து அப்படியே வந்துட்டாங்க. நாங்கள்ளாம் அந்த வழில வந்தவங்கதான்” என்றார்.
உன் முன்னோர்கள் யாராவது இப்ப உயிரோட இருக்காங்களா?”
ஒருத்தர் கிராமத்துல இருக்கார். என் அப்பா வழி பாட்டனார் அவர்.”
அவர்கிட்ட போய் உங்க குலதெய்வத்தைப் பத்தி கொஞ்சம் கேட்டுண்டு வா.”
ஏன் சாமி… அந்த சாமி எதுன்னு தெரிஞ்சு கும்பிட்டாதான் என் பிரச்னை தீருமா?”
அப்படித்தான் வெச்சுக்கோயேன்…”
என்ன சாமி நீங்க… ஊர்ல எவ்வளவோ கோயில் இருக்கு. அங்க எல்லாமும் சாமிங்கதான் இருக்கு. அப்ப அதுக்கெல்லாம் சக்தி இல்லையா?”
நான் அப்படிச் சொல்லவே இல்லையே!”
அப்ப இந்த சாமில ஒண்ண கும்பிடச் சொல்லாம, குலதெய்வத்த தெரிஞ்சுக்கிட்டு வரச் சொல்றீங்களே!”
காரணமாத்தான் சொல்றேன். ஓட்டைப் பாத்திரத்துல எவ்வளவு தண்ணி பிடிச்சாலும் நிக்காது. நீ, என்ன மாதிரி எதுவும் வேண்டாம்கற சன்னியாசி இல்லை. வாழ்வாங்கு வாழ விரும்பற குடும்பம்தான். எனக்கு, பாத்திரமே கூட தேவையில்லை. ஆனா, உனக்கு பாத்திரம்தான் பிரதான தேவை. பாத்திரம் இருந்தாத் தானே எதையும் அதுல போட்டு வெக்க முடியும்? அப்படிப்பட்ட பாத்திரம் ஓட்டையா இருந்தா, அதுல எதைப் போட்டாலும் அந்த ஓட்டை வழியா வெளிய போகுமா போகாதா?”
அப்ப குலதெய்வம்தான் பாத்திரமா… அது தெரியாததால ஓட்டைப் பாத்திரமாயிடிச்சுங்கறீங்களா?”
நீ, கேள்வி கேட்காம உன் குலதெய்வம் எதுங்கறத தெரிஞ்சு அந்தக் குலதெய்வத்தைத் தேடிப்போய் சாஷ்டாங்கமா உடம்பு தரைலபட நமஸ்காரம் பண்ணிட்டு வா. உனக்கு அப்புறமா விளக்கமா சொல்றேன்” என்று அவரை அனுப்பி வைத்தார்.
அவரும் ஒரு பத்து நாள் கழித்து, சாமி! நீங்க சொன்னதைச் செய்துட்டேன். எங்க குலதெய்வம் பேச்சாயிங்கற ஒரு அம்மன். அதோட கோயில் ஒரு மலை அடிவாரத்துல இடிஞ்சுபோய் கிடந்துச்சு. யாருமே போகாம விட்டதால, கோயிலை புதர் மூடிடுச்சு. நானும் என் மக்களும் போய் புதரை எல்லாம் வெட்டி எறிஞ்சோம். அங்க, ஒரு நடு கல்தான் பேச்சாயி! ஏதோ எங்களால முடிஞ்ச அளவுக்கு அதுமேல பால ஊத்தி அபிஷேகம் செஞ்சு, கற்பூரம் காட்டி கும்பிட்டுட்டு வரேன்” என்றார்.
சபாஷ்… அந்தக் கோயிலை நல்லபடியா எடுத்துக்கட்டு. தினசரி அங்க விளக்கு எரியும்படியா பார்த்துக்கோ! உன் கஷ்டங்கள் தானா நீங்கிவிடும். பேச்சாயி பூவும் பொட்டுமா ஜொலிச்சா, உன் குடும்பமும் ஜொலிக்கும்” என்றார் பெரியவர்!
சாமி! நிறைய விளக்கமெல்லாம் சொல்றதா சொன்னீங்களே… எதுவுமே சொல்லலியே?”
அடுத்த வருஷம் இதே தேதிக்கு வா! அப்ப சொல்றேன். நான் சொன்னதை மறந்துடாதே… பேச்சாயியை விட்டுடாதே!”
அவரும் அவ்வாறே செய்தார். ஒரு வருடமும் ஓடியது. அவரும் பெரியவரைக் காண திரும்ப வந்தார். இந்த முறை அவரிடம் ஒரு செல்வச் செழிப்பு தெரிந்தது. பெரியவரை ஒன்றும் சும்மா பார்க்க வரவில்லை. தட்டு நிறைய பூ, பழம் இவற்றோடு கொஞ்சம் பணம் என்று தான் முன்னால் வந்து நின்றார். பெரியவரும் ஏறிட்டார்.
சாமி… நான் இப்ப நல்லா இருக்கேன். பேச்சாயி புண்ணியத்துல பிள்ளைகளும் நல்லா இருக்காங்க. இதுக்கு வழிகாட்டின பெரியசாமி நீங்கதான்! ஆனா, எனக்கு விளக்கத்த மட்டும் இன்னும் தராமலே இருக்கீங்க… இந்த அதிசயம் எப்படி நடந்தது?” – என்று திரும்ப அவர் கேட்டார். பெரியவரும் திருவாய் மலரத் தொடங்கினார். அது…?
ஒரு வருடம் கழித்து திரும்ப வந்த பர்மாக்காரரிடம் ‘குலதெய்வம்’ என்பது குறித்து பெரியவா சொன்னது மிகவும் கவனமாய் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாகும்.
நம் முன்னோர்கள் வணங்கி வந்த தெய்வம்தான் குலதெய்வமாகும். முன்னோர்கள் என்றால், நமக்கு முன்பிறந்த எல்லோருமே முன்னோர்கள்தான். ஆனால் இங்கே முன்னோர்கள் என்றால், நாம் நம் தந்தைவழி பாட்டன் பாட்டிமார்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தத் தந்தைவழி பாட்டன்மார் வரிசையில், மிகப்பெரிய ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்து கவனித்தால் உணரலாம். அதுதான் ‘கோத்திரம்’ என்னும் ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த வழிவழிப் பாதையில் நம் தாத்தாக்களின் வாழ்க்கைத் துணையாகக் கை பிடித்திருப்பார்கள். எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண் சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால், ரிஷி பரம்பரையானது சங்கிலிக் கண்ணி போல அறுபடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம் இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த விஷயமாகும்.
அடுத்து, இவர்கள் அவ்வளவு பேருக்குமே நட்சத்திரம் வேறாக, உடலமைப்பு வேறாக, குணப்பாடுகள் வேறாகவும் இருக்கும். அதுதான் இயற்கையும்கூட! ஆனால், கோத்திர வழி மாறாதபடி இவர்கள் நம் குலதெய்வம் என்னும் தெய்வ சான்னித்தியத்தில் கைகூப்பி நின்றிருப்பார்கள். தலைமுடி கொடுத்திருப்பார்கள். காது குத்துவது போன்ற வழிவழிச் செயல்பாடுகளும் நடந்துமிருக்கும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன. அந்தக் கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்; போகாமலும் இருக்கலாம். அதற்கு உத்தரவாதமில்லை. ஆனால், குலதெய்வக் கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால் அங்கு கொண்டு செல்லப்பட்டு, வணங்க வைக்கவும் படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம் பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம். இந்த வரிசைத் தொடர்பை வேறு எங்காவது, எந்த விதத்திலாவது உருவாக்க முடியுமா?”
- பெரியவர் சொல்லச் சொல்ல, பர்மாக்காரரிடம் பரவசம்!
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின் பிறப்புக்குப் பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை இருப்பதை நினைக்கக்கூட தெரியாமல், அதிகபட்சம் இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல் அல்லவா நம் வாழ்க்கைப் போக்கு உள்ளது?
ஒரு குடும்பத்தைப் பொருத்தவரையில் அந்த இறைசக்தி குலதெய்வமாக, அவர்களுக்கான ஒரு பெயரில் வெளிப்படுகிறது. இப்படிச் சொல்வதுகூட தவறு. வெளிப்பட, வழிவகை செய்யப்பட்டது! அதுவும் யாரால்? நம் முன்னோர்களால்! அவர்கள் யார்? நம்முடைய தொடக்கங்கள்… நாம் யார்? அந்தத் தொடக்கத்தின் தொடர்ச்சி! மொத்தத்தில், நாம் வேறு அவர்கள் வேறு இல்லை.
இந்த வழிவழிப் போக்கில் ஒருவர் மூட்டை மூட்டையாகப் புண்ணியத்தைக் கட்டியிருக்கலாம். இன்னொருவர் பாவமேகூட பண்ணியிருக்கட்டுமே! நாம் அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக வெளிப்படும் அந்த இறைசக்தியைத் தொழும் போது, அவர்களும் பித்ருக்களாக விண்ணில் இருந்து பார்க்கிறார்கள். நாமும் ஆசீர்வதிக்கப்படுகிறோம். இது எத்தனை தூரப் பார்வையோடு, வடிவமைக்கப்பட்ட ஒரு விஷயம்?”
பெரியவர் விளக்கி முடிக்க, வந்திருந்த கூட்டம் சிலிர்த்துப் போனது. இந்தக் குலதெய்வ வழிபாட்டில் மிகப்பெரிய நல்ல சமாச்சாரம் ஒன்றும் அடங்கியுள்ளது. சந்தர்ப்ப சூழல்களால் அல்லது பூர்வ கர்மத்தால், அதுவுமல்லாது பல்வேறு காரணங்களால் ஒருவருக்கு பக்தி உணர்வு இல்லாமல் போகிறது என்று வையுங்கள். அதாவது, கண்ணுக்குப் புலப்படாத இந்தக் கடவுளை நாம் நம்பத் தயாரில்லை.
நான் ஒன்றும் முட்டாளில்லை என்று அவர் வீராப்பா பேசி, நாத்திகத்தில் நம்பிக்கை ஏற்பட்டு அதிலேயே அவர் போகும் நிலை வந்தாலும் பெரிதாய் தோஷமில்லை. ஏனென்றால், அவர் இவ்வாறு ஒரு நாத்திக நிலைப்பாடு கொள்ளும் முன்பே, இந்தப் பரம்பரை வரிசையில் பெற்றோர்களால் வணங்க வைக்கப்பட்டு ஆசீர்வதிக்கவும் பட்டிருப்பதால், அவர் ஒருநாள் நிச்சயம் மனம் மாறி அருள் தொடர்புக்கு ஆட்படுவார் என்பது தான் இதிலுள்ள மிகச்சிறந்த ஒரு விஷயமாகும்.
இப்படி நம்பிக்கையற்றுப் போனவர், தன் பிள்ளைகளை அழைத்துவர மாட்டாரே! அவர்கள், இதனால் இந்தப் பரம்பரை தொடர்புக்கு ஆட்படாமல் போய் விடுவார்களே என்று ஒரு கேள்வி எழலாம். பெரும்பாலும் ஒரு வழியில், ஒரே கோத்திரத்தில் திருமணங்கள் புரிந்து கொள்ளாமல், முன்னோர் காட்டிய வழியில் போகும் பட்சத்தில், வாழ்வில் நமக்கு பெரிய கஷ்டங்கள் வருவது இல்லை என்பதுதான் இம்மட்டில் புரிந்து கொள்ள வேண்டிய விஷயமாகும். உடம்புக்கு உணவுப் பொருளால் சக்தி ஏற்படுவது போல், மனதுக்கு இறை அருளால் சக்தி ஏற்படுகிறது.
ஒரு குலதெய்வத்தின் பின்னால், இப்படியான பிரத்யேக சிறப்புகள் நிறையவே உள்ளது. குல தெய்வத்தைப் பக்தியோடு கொண்டாடும்போது, பெரிய தோஷங்களுக்கு இடமில்லாமல் போய் நம் வாழ்வும் சிறப்பாகிறது. பர்மாக்காரர் வரையிலும் அதுதான் நிகழ்ந்தது.
எனக்கும் இந்தக் குலதெய்வ விஷயம் மனசுக்குள் பெரும் உற்சாகத்தைத் தந்தது. நான் எங்கள் குலதெய்வக் கோயிலுக்குப் போனபோது என் பார்வையே மாறிப்போனது. அந்தக் கோயிலில் உள்ள ஒவ்வொரு தூண்களையும் தொடும்போது, என் தாத்தன் தொட்ட தூண்.. என் தாத்தன் நின்று மூச்சுவிட்ட இடம்.. என் முப்பாட்டன், அதற்கும் முற்பட்ட பாட்டன் நடந்து திரிந்த தரைப் பரப்பு.. அவர்களைப் பார்த்த பெருமாள் என்னையும் பார்க்கிறார் என்பதா? இல்லை, அவர்கள் பார்த்த பெருமாளை நான் பார்க்கிறேன் என்பதா?
ஒன்று உறுதி. அந்தப் பெருமாளை வணங்கிய வம்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதுவே எத்தனை பெரிய அனுக்ரகம்! இந்தக் குலதெய்வ விளக்கமும், இதன் பின்புலமும் எனக்குள் நம் முன்னோர்கள் மேல் பெரும் மரியாதையை ஏற்படுத்திற்று.
Friday, December 05, 2014
குலதெய்வம் எதுன்னே தெரியாதா? (காஞ்சி பெரியவா விளக்கம்)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment