அருள்... பொருள்... இன்பம்...
கடந்த
வாரம் ஒரு உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக திருப்பதிக்கு சென்று
இருந்தேன். திருச்சானூரில் நவஜீவன் என்னும் ஒரு சேவை அமைப்பின் மூலமாக
"சரணாகதி" என்கிற ஒரு முதியோர் இல்லம் பராமரிக்கப்பட்டு வருகிறது.
திருமணமும் அந்த முதியோர் இல்லத்த்தில் வாழும் முதியோர்களுக்கு
நடுவில்தான் நடைப்பெற்றது.
கிட்டத்தட்ட
அறுபது முதியோர் தனியாகவும் தம்பதிகளாகவும் இந்த சரணாகதியில் வசித்து
வருகின்றனர். மிகக்குறைந்த அளவிலான ஒரு பராமரிப்புச் செலவுத்தொகை
இவர்களிடம் வசூலிக்கப்படுகிறது.
தனித்தனியே
அறை உள்ளே டிவி, வாஷிங்மெஷின், மைக்ரோவேவ் அடுப்பு என்கிற வசதிகள்.
தேவைப்பட்டவருக்கு ஏசி பொருத்தப்பட்ட அறைகள். ஒரு முதிய கணவன்-மனைவி பசி
குறித்த அச்சமோ, வியாதி குறித்த பயமோ இன்றி தங்கள் அந்திமக் காலத்தை
கழித்திட இங்கே திட்டமிட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீதர் ஆச்சார்யர் என்பவர் மிகுந்த சேவை மனப்பான்மையோடு வெகு நேர்த்தியாக இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருகிறார்.
வேளாவேளைக்கு
உணவு, சூடான காபி, வாசிக்க நாளிதழ்கள், தினம்தோறும் பஜனைகள், பூஜை
வழிபாடுகள் என்று ஒவ்வொரு நாளுக்கும் ஒரு திட்டமிடல் இருக்கிறது.
சரணாகதியில் நான் சந்தித்த சில முதியோர்கள் என் கண்களை குளமாக்கி விட்டனர். அந்த நாளில் தமிழ் சிறுகதை எழுத்தாளராக திகழ்ந்த திருமதி கஸ்தூரி பஞ்சுவை அங்கே சந்தித்து அதிர்ந்தேன்.
என்
இளம்வயதில் நான் வியந்து வாசித்த எழுத்தாளரில் கஸ்தூரி பஞ்சுவும் ஒருவர்.
இன்று முதுமை அவரை பஞ்சாகவே ஆக்கி, படுத்த படுக்கையாகக் கிடத்தியிருந்தது.
நேராக நிமிரிந்து அமரக்கூட முடியாது. சரிந்த நிலையில் தலையணைகள் மேல்
சாய்ந்தபடி கிடக்கிறார். அவருக்கு உறுதுணையாக அவர் கணவர் பஞ்சாபகேசன்
இருந்தார். தொண்ணூறு வயதைக் கடந்துவிட்ட அவரிடம் சிறு மனபாதிப்பு. இதனால்
குழந்தை போல சிரிப்பதும், திரும்பத் திரும்ப பேசியதையே பேசுவதுமாக
இருந்தார். பத்து வருடத்துக்கு முன்புவரை அவர்கள் இருவரும் சமூகத்தில்
மிகுந்த கௌரவத்தோடு பிள்ளை, பேரன், பேத்தி என்ற உறவு வட்டத்தில்
சந்தோஷமாகத் தான் வாழ்ந்திருக்கிறார்கள். பொல்லாத முதுமை அவர்களை
நடைப்பிணங்களாக ஆக்கிவிட்டது.
மனித
உறுப்புகளில் கண் பார்வை இழந்தால் கூட சமாளித்துவிட முடிகிறது. ஆனால்
கால்களுக்குப் பிரச்னை வரும்போதுதான் வாழ்வே ஆட்டம் காணத்
தொடங்கிவிடுகிறது. பிறரைச் சார்ந்து வாழ வேண்டிய கட்டாயம் உருவாகிறது.
எழுத்தாளர்
கஸ்தூரியையும் கால்கள்தான் கட்டிப்போட்டு சரணாகதியை அவர் சரணடைய
செய்திருந்தது. அவரை சந்தித்து திரும்பிய சில நாட்களிலேயே பஞ்சாபகேசன்
இறந்த செய்தி அறிந்தேன். கஸ்தூரிக்கு முடமைக்கு நடுவில் இப்படி ஒரு
கொடுமையா என மனம் பதைத்தது. படுக்கையில் விழுந்தவர்களை பக்குவமாய்
பார்த்துக் கொள்ளும் ஒரு வாழ்க்கைமுறை இன்று நம் சமூகத்தில் இல்லை ஆம்,
கணவன்-மனைவி இருவருமே வேலைக்கு போனால்தான் குடும்பம் நடத்த முடியும் என்கிற
நிலை. நடமாட முடியாத முதியவர்கள் வீடுகளில் இருக்க நேரிட்டால் அவர்கள்
அந்த வீட்டின் அசையாத மேஜை நாற்காலிகள் போலத்தான் கிடக்க வேண்டியுள்ளது.
மேசைக்கோ நாற்காலிக்கோ பசி, தாகம் எடுக்கப் போவதில்லை. ஆனால், நடமாட
முடியாத முதியவர்கள் அப்படியா? அவர்களை அப்போது யார் பார்த்துக்கொள்வது?
இப்படிப்பட்டவர்களுக்கு சரணாகதி கை கொடுக்கிறது.
அங்கே
ஒரு பெரியவர் சொன்னது என்னை மேலும் மிரட்டியது. "எனக்கு இரண்டு
பிள்ளைகள். நன்றாக படிக்க வைத்தேன். அவர்களுக்கு அமெரிக்காவில் வேலை
கிடைத்து போனார்கள். நானும் போய் அவர்களோடு வாசித்தேன். அமெரிக்காவில்
யாராயினும் மிகக் கடுமையாக உழைத்தால் மட்டுமே ஒரு வீடு, ஒரு கார் என்று
அடிப்படை வசதிகளோடு வாழ முடியும். கடவுளே நம்மை சந்திக்க விரும்பினாலும்,
சனி-ஞாயிறுகளில்தான் வரச் சொல்வார்கள். மற்ற நாட்களில் நேரம் கிடையாது.
அவ்வளவு
பரபரப்பான நாட்கள்! அப்படி பிள்ளைகள் போய்விட்டால், வீட்டில் தனியாக
கிடப்பதை போல ஒரு கொடுமையை, அனுபவித்தவர்களால் மட்டுமே உணர முடியும்.
புத்தகம் டீவி எல்லாம் கொஞ்ச நேரத்துக்குத்தான். அருமையான கலாசார சூழலில்,
தினம் ஒரு பண்டிகை நாள்-கிழமை விஷேசங்களை அனுபவித்து கோயில், குளம் என்று போய் வந்தவர்களால், அமெரிக்காவில் ஆறு மாதம் கூட இருக்க முடியாது. எனவே
என்னாலும் அங்கே இருக்க முடியாமல் இந்தியா திரும்பி விட்டேன். வயதும்
ஆகிவிட்டது. நான் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியதை வெற்றி என்பேனா இல்லை
தோல்வியா? இந்நிலையில் மனைவியும் இறந்து போனாள். அப்போதுதான் எனக்கு நானே
எவ்வளவு பெரிய பாரம் என்பது தெரிந்தது. உண்மையில் மனிதப்
பிறப்பெடுத்ததற்காக வேதனைப்பட்டேன். எனக்கு 80 வயது. நினைவு தெரிந்த நாள்
முதலாக நான் எதற்கும் கலங்காதவன். ஆனால், மனைவி இறந்த அன்று, பிள்ளைகளும்
வர இயலாத நிலையில், அன்று நான் என் வாழ்நாள் அழுகையை அழுது
தீர்த்துவிட்டேன். காலம்தான் எவ்வளவு பெரிய ரணங்களையும் ஆற்றிவிடுமே.
நானும் மெல்லத் தேறி, இந்த சரணாகதியை சரணடைந்து காலத்தை கடத்தி வருகிறேன்
இங்கே என்னைப் போல எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாதவர்களே எனக்கு உற்ற
துணை. இது உண்மையான அன்புக்கும் பண்புக்குமான உலகம். ஒவ்வொரு நாளும்
இன்று மரணம் வராதா என்று எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.
இடையில்
இங்கு எவராவது மரணித்தால் நாங்கள் துளிகூட வருந்துவதில்லை. அப்பாடா
அவருக்கு ஒரு வழி பிறந்து விட்டது என்று சந்தோசப்படுகிறோம்".
அவர் பேச்சு என்னை கலங்கடித்து விட்டது. நம் வாழ்க்கை அமைப்பின் மேலேயே ஒரு கோபமும் வெறுப்பும் ஏற்பட்டன.
மாத்திரைகளால்
மட்டுமே தன் வலிகளில் இருந்து தப்பித்து வாழும் ஒரு பெண்மணி பேசியதும்
எனக்குள்ளே ஒரு புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சியது.
"ஆர்.டி.,
எப்.டி. என்று எதிலே பணம் சேர்க்கலாம், யார் அதிகம் வட்டி தருவார்கள்
என்று பார்க்காதீர்கள். அதெல்லாம் வெறும் காகிதம்தான். உடம்பை ஆரோக்யமாக
வைத்துக்கொள்வதில் கவனமாக இருங்கள். சதா டிவி பார்த்துக் கொண்டு உடம்பை
பூசணி போல ஆக்கிக் கொண்டு விடாதீர்கள்.
உண்மையில் பெரிய செல்வம்
ஆரோக்கியம்தான்.
ஒரு
மனிதன் 120 வயது வரை, நல்ல கண் பார்வையோடும் ஜீரண சக்தியோடும் வாழ அத்தனை
யோகாசனங்களும், உணவு முறைகளும் சிறப்பாக இருப்பது நம் நாட்டில் தான்.
அலட்சியமாக பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்றும், நமக்கு ஒன்றும்
ஆகிவிடாது என்றும் வாழபோய்தான் நானெல்லாம் இன்று நோய்களின் கூடாரமாக
உள்ளேன்".
அந்த ஒரு நாள் அனுபவம் நூறு புத்தகங்களை நான் படித்தற்கு சமமாக்கியது.
நாம்
ஒவ்வொருவருமே ஏதேனும் ஒரு முதியோர் இல்லத்துக்குக் கட்டாயம் செல்ல
வேண்டும். என் உறவினர் அங்கே திருமணம் நடத்தியதற்கு காரணமே, அவர்களின் மன
வெறுமையை போக்கி அவர்களை உற்சாகப்படுத்தத்தான். ஏன் ஒவ்வொருவரும் அப்படி
நடந்து கொள்ளக்கூடாது என்றும் தோன்றியது. குறைந்தபட்சம் நம் பிறந்த நாளை
அவர்களுக்கு நடுவில் கொண்டாடி, அவர்களின் ஆசிகளை மூட்டைக் கட்டிக்
கொள்ளலாமே?
திருமண
நிகழ்வு முடிந்து திருப்பதி ரயில் நிலையம் நோக்கி திரும்பும் வழியில் ஒரு
நாடோடிக் கூட்டம் சாலை ஓரமாக கூடாரம் போட்டு அங்கேயே சோறு பொங்கி சமைத்துக்
கொண்டிருந்தது. வானம், பூமி சொந்தமில்லை. கண் விழிப்புத்தான் அவர்களைப்
பொறுத்தவரை பிறப்பு; இரவு தூக்கமே மரணம். நம் பார்வையில் அவர்கள் அர்த்தமே
இல்லாமல் வாழ்பவர்கள்; கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என இருப்பவர்கள்.
ஆனால்
அவர்களில் 90 வயது பாட்டி ஒருவர் தெம்பாக ஓடியாடி பேரப்பிள்ளைகளை கொஞ்சிக்
கொண்டிருந்தாள். இவள் கெட்டிக்காரியா, இல்லை படித்து பட்டமெல்லாம்
வாங்கி, நிறைய சொத்தும் சேர்த்துவிட்டு அதை அனுபவிக்க துப்பில்லாதபடி
முதியோர் இல்லத்தை சரணடையும் நாம் கெட்டிக்காரர்களா என்ற கேள்வி என்னுள்
எழுந்தது.
புராணத்திலும்
இது தொடர்பாய் ஒரு சம்பவம். சிரவணனின் பெற்றோர் பார்வை இழந்த முதியவர்கள்.
சிரவணன்தான் அவர்களுக்கு எல்லாம். காட்டில் சிரவணன் பெற்றோரின் தாகம்
தீர்க்க நீர் கொண்டுவரச் சென்றான். வேட்டைக்கு வந்திருந்த தசரத
சக்கரவர்த்தி, அவன் நீர்நிலையில் குடத்தில் நீர்முகந்தபோது உண்டான
சப்தத்தை, எதோ ஒரு மிருகம் நீர் அருந்துவதாக கருதி, தன் பாணத்தை செலுத்த,
அது சிரவணனின் உயிரை பறித்து விடுகிறது.
பிறகே
உண்மை தெரிந்து தசரதனும் அவன் தாய்-தந்தையிடம் மன்னிப்பு கோருகிறான்
அவர்களோ, "எங்களுக்கு இருந்த ஒரே ஆதரவையும் கொன்றுவிட்டு மன்னிப்பா
கேட்கிறாய். இப்போது நாங்கள் பிள்ளையை பிரிந்து தவிப்பதை போல நீயும்
தவிப்பாய்" என சபித்துவிட அதுவே தசரதனை விட்டு ராம-லட்சுமணர் பிரிய
காரணமாகி தசரதர் உயிரும் பிரிந்தது. முதியவர் சாபம் தசரதனையே விடவில்லை,
நாம் எம்மாத்திரம்!
நம்
வீட்டு முதியவர்களின் சாபத்துக்கு பயந்தாவது அவர்களை அன்போடு போற்றுவோமே!
நமக்கும் முதுமை வரும் என்கிற உண்மையை நாம் உணர்ந்து இன்று நாம் முதுமையை
போற்றினால் தானே நாளை நமக்கும் அது நிகழும்?
கொடுப்பதுதானே எப்போதும் திரும்பக் கிடைக்கிறது.
-----------------------------------------------OoO------------------------------------------------
(நன்றி: தினகரன் 02.03.2013 ஆன்மீக மலர், மும்பை.)
(கட்டுரையாளர் - இந்திரா சௌந்தர்ராஜன்)