Pages

Friday, January 31, 2025

வெந்த சோத்த திங்கணும்

வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்.

ஒரு ப்ராம்ஹணரின் அங்கலாய்ப்பு.......‌...Just a fun post ! 

எம்பாட்டுக்கு நன்னா சாப்ட்டு நன்னா தூங்கிண்டு ராமா க்ருஷ்ணான்னு நன்னா போய்ண்ட்ருந்த லைஃப்ல ஹெல்த்த பத்தி சொல்றேன்னு ஆளாளுக்கு கிளம்பி எல்லாரும் அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சா பாருங்கோ....அன்னிக்கு பிடிச்ச சனி..சனியன் தான்...

ஏழரை நாட்டு சனியாவது மனுஷாளுக்கு ஆயிஸ்ல 3 தரத்க்கு மேல வரவேமாட்டான், அப்படியே மூணு தரம் வந்தாலும் எழரை வருஷம் முடிஞ்சு போய்ட்டு முப்பது வருஷம் கழிச்சுதான் திரும்ப வருவன்.

ஜலதோஷமும் மூணே நாள் தான். 

ஆனா இந்த ஹெல்த் அட்வைஸ்ங்கிற பேர்ல ஆளாளுக்கு அடிக்கற கூத்து இருக்கே..... அப்பாப்பா அது ஆய்ஸ்ஸுக்கும் அக்கப்போர்தான் போங்கோ... 

ஒரு நா, பொழுது விடிஞ்சா அடையற வரைக்கும் நான் படற கஷ்டம் நாய்கூடப் படாது, (இதுவும் ப்டாதுதான்)... போங்கோ... நன்னா தெரிஞ்சுக்கோங்கோ...

சரி..கொஞ்சம் கேக்கறேளா, ரொம்ப தேங்க்ஸ்.

சரி, சொல்றேன் *சிரிக்காம கேளுங்கோ*, சரியா.

விடிகார்த்தாலே எழுந்தோடனே வெறும் வயத்லே முதல்ல ஒரு டம்ளர் ஜலம் குடிக்கணும்னு சொன்னா... சரி..குடிச்சேன்...அப்றம், இல்லே ரெண்டு டம்ளர் வெந்நீர் தான் குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், இல்லை வெறும் வெந்நீர் இல்லை.. அதிலே அரைமூடி எலுமிச்சம்பழத்தை பிழிஞ்சு, ரெண்டு சொட்டு தேன் விட்டு குடிக்கணும்னா...சரி..குடிச்சேன்...அப்றம், அதிலே ஒரு துண்டு  இஞ்சிய கொஞ்சம் தட்டி போட்டு குடிச்சா ரொம்ப நல்லதுன்னா... சரி...குடிச்சேன்...ஆக இப்போ கார்த்தால நான் ஜலம் குடிக்கறதையே நிறுத்தியாச்சு ..போங்கோ.

இது ஆச்சா - அப்றம்  வாக்கிங் போகலாம்னு பார்த்தா.... முதலேயே வேகமா நடக்கப்டாது... மெதுவா நடந்து.. அப்புறம் வேகத்தை கூட்டி 🤔 மறுபடியும் முடிக்கறச்சே மொள்ள மொள்ள மொள்ள (டவர்லேர்ந்து ஒரு மணிக்கு ஒரு தரம் ஊர் முழுக்க கேக்றமாதிரி சங்கு ஊதரமாதிரி ) நடக்கணும்னா... சரி நடந்தேன்....வெறும் வாக்கிங்பண்ணா போறாது... எட்டு போட்டு நடக்கச்சொன்னா..சரி.. நடந்தேன்...அதனாலே பலன் பல மடங்கு பெருகும்ன்னு சொல்லி ஒழுங்கா நேரா நடந்துண்டு இருந்தவனை கெடுத்துக் குட்டிச்சுவராக்கி எப்போதும் எட்டுப் போட்டு தலை சுத்த வெச்சு....இப்போ எப்போ எங்கே நடந்தாலும் எட்டுக் கால் பூச்சி மாதிரி வட்ட வட்டமா வளைஞ்சு நெளிஞ்சு நடக்கறதே வழக்கமாயி....அப்றம் எல்லாரும் கேலி பண்ணி... அதனால வாக்கிங்க்கும் ஒரு ஃபுல் ஸ்டாப் வச்சாச்சு...

இது ஆச்சா - காபி, டீ, தொடப்டாதாம்.. பால் நிறைய சேர்த்துக்கப்டா டாதாம்..நாம ஆரோக்யமா, ஆயுஸோட இருக்கணும்னா கண்ராவி கசப்பா கடுங்காஃபியோ, இல்ல க்ரீன் டீயோ, *சக்கரையே போடாம* குடிக்கலாமாம், அதுக்கு நான் வெறுமனே இருந்த்ருவேன்...

அப்புறம் ப்ரேக்பா ஃஸ்ட் இட்லி தோசை, ப்டாது. ப்ரவுன் பிரட், கார்ன் பிளாஃஸ் தான் பெஸ்ட்.. பொங்கல் மாதிரி ஹெவியா சாப்டப்டாது... பூரி படாது..

இன்னும் ஏதேதோ ப்டாது ப்டாதுன்னு சொல்லிச் சொல்லியே அந்த அல்ப ப்ரேக்பா ஃஸ்ட்க்கும் அல்பாயுஸுல சடன் ப்ரேக் போட்டு நிறுத்தியாச்சு ..

ஆச்சா...இப்போ மத்யான போஜனம். நிறைய சாதம் சாப்டாதைக்கு அரைகுறையா வேக வெச்ச கறிகாய், கீரை இல்லேன்னா மைல்டா பொரித்த கூட்டு, அதிகமா உப்பு, புளி, காரம், எண்ணெய் சேர்க்காம நிறைய சூப், "வெஜ்டபிள் ஸலாட்" சேர்த்துக்கலாம்னு சொன்னா சரி... அப்படியே செய்தேன்...  உருளக்ழங்கு ,வாழக்கா, சேனை, சேம்பு, ன்னு பூமிக்கு அடியில விளையற எந்த வஸ்த்வுமே ப்டாதாம்... 🤔.. தயிர் அதுவும் கெட்டியா ப்டாதவே ப்டாதாம்... ஐஸ் வாட்டர் ப்டாதாம்...

ஆச்சா, சரி சாயங்காலம் ஏதாவது "ஸ்நாக்ஸ்" சாப்டலாம்னா எல்லாருக்கும் பிடிச்ச கேசரி, பஜ்ஜி, போண்டா, ஆம/உளுந்து வடை வகைறா, முறுக்கு, தட்டை, உப்பு சீடை, தேங்குழல், ரிப்பன் பகோடா, அதிரசம், திராட்டுப்பால், அல்வா, வெல்லச்சீடை, "திருநவேலி தென்னமரவேர் பெரிய" மனோகரம், "பழைய மொறு மொறு மைசூர்ப்பா" (கோயமுத்தூர் கிருஷ்ணா ஸ்வீட்ஸ்  ப்ராண்ட் காபிரைட் மொளகாப்டி எண்ணெய் கொழச்சா மாதிரி இருக்ற பல்லில்லாதவா சாப்டற மைசூர்ப்பா இல்ல ), திருநவேலி "கடலப்பருப்பு மாலாடு" (பொட்டு/பொரி கடலை மாவு இல்லை), பூந்தி லட்டு, குஞ்சாலாடு, குலாப் ஜாமூன், ஜாங்ரி, ரஸகுல்லா, எள்ளுருண்டை, மோதகம், உப்மா, உப்மா கொழக்கட்டை இத்யாதி, கடலைமாவு, எண்ணெய் பக்ஷண ஸமாசாரமெல்லாம் ப்டாதாம். கலர் கலரா வித விதமான பழங்களை அழகா நறுக்கி ஒரு பெரிய பௌல்ல வெச்சிண்டு, கொரங்கு, அணில், கிளி மாதிரி கொறிச்சு, ரசிச்சு ருசிச்சு, கொஞ்ச கொஞ்சமா கொஞ்சி கொஞ்சி சாப்பிடணுமாம்... எப்டியிருக்கு?... உப்பு போடாம அல்லது ரொம்ப கொஞ்சமா போட்டு சுண்டல் வேணா திங்கலாமாம். 

ஆகமொத்தம் ஸாயங்கால நொறுக்குத்தீனிக்கும்  "கோவிந்தா கோவிந்தா" போட்டாச்சு..  திருப்தியாச்சா ...

அப்றம்,... ராத்ரி ரொம்ப பசிச்சா மட்டும் ஏதாவது லைட்டா சாப்டலாமாம்.. அதுவும் சாதம் ப்டாதவே ப்டாதாம்.. ஓய். (Not why ஓய்) சரியாப்போச்சுங்காணும்...  போனாப்போறது வேணுமானா ரெண்டு சுக்கா ரொட்டி, "தால்ல" (பருப்பு) முக்கி முக்கி சாப்டலாமாம்... எப்படியிருக்கு?. 

அப்றம்,....ராத்ரி பால் குடிக்கப்டாதாம்.. வேணும்னா ஒரு டம்ளர் வெந்நீர்/வெண்ணை எடுத்த மோர் குடிக்கலாமாம் எப்டியிருக்கு?

அதுக்கப்றம் தூங்றதுக்கும் தடா.. 

இடது பக்கம் தான் ஒருக்கிளுச்சு படுக்கணும்... அப்போதான் இதயம் இயல்பா இருக்கும்னு சொன்னா.. சரி.. படுத்தேன்... 

அப்றம் வலது பக்கம் ஒருக்கிளுச்சு படுத்தாத்தான் கொழுப்பு ஜீரணமாகும்னு சொன்னா..சரி.. படுத்தேன்... 

அப்றம்,... மல்லாக்கா படு அப்போதான் பார்கின்சன், அல்சைமர் எல்லாம் வராதுன்னா...சரி.. படுத்தேன்...

இல்லேயில்லே குப்ற படுத்தால்தான் நல்லது.. தொப்பை வராது.. ஒபிசிட்டி வராதுன்னு சொன்னா.. சரி.... படுத்தேன்.

ஆக மொத்தம் ஆறு மணிநேர அரகுற தூக்கமும் அப்படியே அம்போன்னு போயே போச்சு.

அடேய்ய்...! அடங்குங்கடா எல்லாரும்... 

இப்படி எதுவுமே சாப்டாம ஆரோக்யமா ஆய்ஸோட இருந்து ஒண்ணும் கிழிக்க வேணாம்.

வெந்த சோத்த திங்கணும், விதி முடிஞ்சா சாகணும்ன்னு எனக்கு  பிடிச்சதை எப்பவேணா, எவ்ளவு வேணா சாப்ட்டு.. சந்தோஷமா எப்போதும் போல 'ஜாலிலோ ஜிம்கானா' ன்னு ப்ரிய கானன சஞ்சரனா* தின்னு கெட்டானே திருநவேலிப்பாப் னேன்னு (எனக்குப் (பிடித்த பாட்டை பாடிக்கொண்டு திரிபவன் என்று  ப்ரிய கானன சஞ்சரனுக்கு தமிழ்ல நேர் அர்த்தம்) பாடிண்டு போயிண்டே இருக்கேன்டாப்பா .. 

போடா போ போக்கத்தவா...!

நீயும் உன்னோட உருப்படாத ஹெல்த் அட்வைஸும் யாருக்கு வேணும்?....

ராமராம🙏 ராமராம🙏 ராமராம 🙏

Tuesday, January 21, 2025

அம்பாள்

வெற்றி பெறச் சொல்ல வேண்டிய மூன்று ரதங்களின் பெயர்கள்

மூன்று ரதங்களின் பெயர்கள்

அம்பாளைப் பற்றிய சகல விவரங்களையும் லலிதா சஹஸ்ர நாமத்தில் வரும் 1000 நாமங்கள் தருகின்றன.

அதில் மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே நமக்கு வெற்றி கிடைக்கும் என்கின்ற ரகசிய செய்தி ஒன்றும் உண்டு.

யாருடைய ரதங்கள் அந்த  மூன்று?

அம்பாள், மந்த்ரிணீ மற்றும் வாராஹீ.

அம்பாளுடைய ரதம்- சக்ரராஜ ரதம்.

மந்த்ரிணீயுடைய ரதம் - கேய சக்ர ரதம்

வாராஹியினுடைய ரதம் - கிரி சக்ர ரதம்.

இந்த மூன்று ரதங்களின் பெயரைச் சொன்னாலேயே சொன்னவருக்கு வெற்றி தான்! கேட்டாலும் கேட்டவருக்கு வெற்றியே!

சக்ரராஜ ரதோயத்ர தத்ர கேய ரதோத்தம: |

யத்ர கேய ரதஸ் தத்ர  கிரி சக்ர ரதோத்தம: ||

ஏதத் ரத த்ரயம் தத்ர த்ரை லோக்யமிவ ஜங்கமம் |||

ஸம்பத்கரீ

66வது நாமமாக ஸஹஸ்ர நாமத்தில் வருவது இது:

ஸம்பத்கரீ சமாரூட சிந்துவ்ரஜ சேவிதா

இதன் பொருள்:

ஸம்பத்கரீ தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட யானைகளின் கூட்டத்தால் வணங்கப்படுபவள்.

ஸம்பத்கரீ தேவியானவள் அம்பாளின் சதுரங்க சேனை பலத்தில் யானை சைன்யத்திற்கு அதிகாரி.

அம்பாளின் ஆயுதங்களில் அங்குசத்திலிருந்து உருவானவள் இவ்ள்.

ஸம்பத்கரியின் வாகனமான யானைக்கு ரணகோலாஹலம் என்று பெயர்.

சுகசம்பத்யமான சித்த விருத்திக்கு ‘ஸம்பத்கரீ’ என்று பெயர். 

அதற்கு ஆதாரமான சப்தாதி விஷயங்களை யானைகளுக்கு சமமாக சொல்லப்பட்டிருக்கிறது.  அவைகளால் வணங்கப்படுபவள் என்பது பொருள்.

சுக சம்பத்கரீ என்றால் என்ன?

ஞானம் (அறிவு) ஞாத்ரு (அறிகின்றவன்), ஞேயம் (அறியப்படும் பொருள்)

 ஆகிய இந்த மூன்றுக்கும் த்ரிபுடீ என்று பெயர்.

இந்த மூன்றின் வித்தியாசங்களைத் தெரிந்து கொண்டு அவற்றை சம்பந்தப்படுத்தும் ஞான ரூபமான சித்தவிருத்திக்கு ‘‘சுக சம்பத்கரீ’ என்று பெயர்.

அஸ்வாரூடா

67வது நாமமாக வருவது இது:

அஸ்வாரூடாதிஷ்டிதாச்வ கோடி கோடிபிராவ்ருதா

அஸ்வாரூடா தேவியின் ஆக்ஞைக்கு உட்பட்ட கோடி கோடிக் கணக்கான குதிரைகளைக் கொண்டவள்.

அம்பாளுடைய சதுரங்க சேனா பலத்தில் அஸ்வாரூடா தேவி குதிரை சைனியங்களுக்கு அதிகாரியாக நியமிக்கப்பட்டவள்.

அம்பாளுடைய ஆயுதங்களில் பாசத்திலிருந்து ஆவிர்பவித்ததால் அஸ்வாரூடா தேவியின் குதிரைக்கு அபராஜிதம் என்று பெயர்.

மந்த்ரிணீ, தண்டிணீ

அம்பாளுடைய சக்திகளில் மிக முக்கியமாக அருகிலேயே இருப்பவர்கள் இருவர்.

1) மந்த்ரிணீ 

2) தண்டிணீ

மந்த்ரிணீ, தண்டிணீயைத் தாண்டி அவர்கள் உத்தரவு இல்லாமல் யாரும் அம்பாளை அணுக முடியாது.

இவர்களே மிக முக்கியமானவர்கள்.

ஸம்பத்கரீ, அஸ்வாரூடா போன்றவர்கள் இவர்களுக்கு உட்பட்டுத்தான் இருப்பர்.

இந்த இருவரும் எப்போதும் அம்பாளின் சந்நிதியில் இருப்பதாகவும் அம்பாளின் சேவையில் ஈடுபட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

மந்த்ரிணீ தேவதை அம்பாளுக்கு பிரதான மந்திரி ஸ்தானம் வகிப்பவர். சங்கீதத்திற்கு அதிஷ்டான தேவதை ராஜ ச்யாமலை மற்றும் ஸங்கீத ச்யாமலை என்று பெயர்.

மந்த்ரிணீயிடம் அம்பாள் தனது ராஜ்ய பொறுப்பு அனைத்தையும் தந்து விட்டதாக 786வது நாமத்தின் மூலமாக நாம் அறிய முடிகிறது. (மந்த்ர்ணீ ந்யஸ்த ராஜ்ய தூ:- 786)

சக்ரராஜ ரதம்

சக்ரராஜ ரதாரூட ஸ்ர்வாயுத பரிஷ்க்ருதா (68வது நாமம்)

இதன் பொருள்:

சக்ரராஜ ரதத்தில் ஆரூடமாயிருக்கும்படியான சம்ஸ்த ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டவள்.

யுத்த காலத்தில் தேவிக்கு சமீபத்தில் சகல விதமான ஆயுதங்களும் சக்ர ராஜ ரதத்தில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.

அம்பாளின் ரதத்தின் கொடிக்கு ‘ஆனந்த த்வஜம்’ என்று பெயர்.

இந்த ரதத்திற்கு 9 தட்டு உண்டு. 10 யோஜனை உயரம், 4 யோஜனை அகலம் கொண்ட ரதம் இது.

சக்ர ராஜ ரதம் என்பதற்கு இன்னொரு பொருளும் உண்டு. அதாவது இதுவே ஶ்ரீ சக்கரம் ஆகும்.

ஶ்ரீ சக்கரத்திலும் 9 பீரிவுகள் உண்டு.

1) த்ரைலோக்ய மோஹனம்

2) சர்வாசா பரிபூரகம்

3) சர்வசம்சேக்ஷாபணம்

4) சர்வ சௌபாக்யதாயகம்

5) சர்வார்த்தசாதகம்

6) சர்வரக்ஷாகரம்

7) சர்வரோகஹரம்

8) சர்வஸித்திப்ரதம்

9) சர்வானந்தமயம்

ஶ்ரீ சக்கரத்தில் உள்ள பிந்துவே அம்பாளின் இருப்பிடம்.

இதில் இருக்கும் ஆயுதங்கள் ஆத்ம ஞானம் அடைவதற்கான சாதனங்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.

ஆதமஞானம் அடைவது நிச்சயம். சக்தரஸித்தி ஏற்படுகிறது. அதுவே யோகம் என்று கூறப்படுகிறது.

சக்ர ராஜம் என்பது ஆறு அதாவது ஷட் சக்கரங்களை, ரத - ஆதாரமாகக் கொண்டது சக்ர ராஜ ரதம்.

இதை சக்ரேசத்வம் என்றும் கூறுவர்.

சகல ஆயுதங்களையும் கொண்டு அந்த ஷட் சக்கரங்களை அடக்க முடியும். இதை சுத்த வித்யா என்று கூறுவர்.

கேய சக்ர ரதம்

அடுத்து 69வது நாமம் இது:

கேய சக்ர ரதாரூட மந்த்ரிணீ பரிஸேவிதா

இதன் பொருள்:

கேய சக்ரம் என்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் மந்த்ரிணீ தேவியால் வலம் வந்து சேவிக்கப்பட்டவள்.

இந்த ரதத்திற்கு 7 தட்டுகள் உண்டு.

கேய - பிரசித்தமான

சக்ர - சக்கரத்தை உடைய

ரதம் - ரதமான சூர்ய மண்டலம்

இதில் ஆரூடர்களாக இருக்கும்படியான மந்த்ரிணீ ஶ்ரீ வித்யா உபாசகர்களால் வணங்கப்படுபவள்.

இன்னொரு பொருள்

கேய - முக்கியமான

சக்ர ரதா - சக்ராகாரமான ரதத்தில் வீற்றிருக்கும் அம்பாளை

ஆரூட - புத்தியில் அநுசந்தானம் செய்யும்

மந்த்ரிணீ - மந்திர சித்தி உடையவர்களால் வணங்கப்படுபவள்.

கிரி சக்ர ரதம்

அடுத்த 70வது நாமம் கிரி சக்ர ரதாரூட தண்டநாத புரஸ்க்ருதா

இதன் பொருள்:

கிரி சக்ரம் என்கின்ற ரதத்தில் ஆரோஹணம் செய்திருக்கும் தண்டநாதையை முன்னிட்டிருப்பவள்.

கிரி என்றால் வராஹம் என்று பொருள். தண்டநாதையின் ரதம் வராஹ வடிவத்தில் இருப்பதால் அதற்கு கிரி சக்ர ரதம் என்ற பெயர் ஏற்பட்டிருக்கிறது.

வாராஹிக்கு தண்டநாதை என்று பெயர்.

கிரி - கிரணங்கள் அதாவது சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றின்

சக்ரம் - சமூகமாகிய ரதத்தில்

ஆரூட - ஏறி இருந்தவளாக இருப்பினும்

தண்டநாத - யமனால்

அபரஸ்க்ருதா - ஸ்வாதீனம் செய்யப்படாதவள்.

அதாவது ஒரு யோகியானவன் சிருஷ்டி, ஸ்திதி, லயம் ஆகியவற்றில் அகப்பட்டிருந்தாலும் கூட அவன் யம வாதனைக்கு உட்பட்டவன் அல்ல என்பது பொருள்.

வெற்றிக்கு வழி :: 

அம்பாளின் ரதம் மற்றும் முக்கிய இரு தேவதைகளின் ரதம் ஆகியவற்றின் பெயரை தினமும் கூறுவோம்; வெற்றியைப் பெறுவோம்.

மேற்கண்ட வியாக்யானங்கள் திரு ஜி.வி.கணேச ஐயர் அவர்களால் ஆர்யதர்மம் பத்திரிகையில் எழுதப்பட்டவை.

லலிதா சஹஸ்ரநாமத்தை பாஸ்கரராயரின் பாஷ்யத்திற்கு இணங்க அவர் அற்புதமாக விரிவுரை ஒன்றை ஆயிரம் நாமங்களுக்கும் எழுதினார்.

இது 1938ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் தேதி புத்தகமாக வெளி வந்தது.

அதில் தரப்பட்ட விளக்கத்தையே இந்தக் கட்டுரை மாறுதலின்றி தற்கால நடையில் தருகிறது. ஶ்ரீ ஜி.வி. கணேச ஐயருக்கு நமது அஞ்சலியும் நன்றியும் உரித்தாகுக!

Friday, January 10, 2025

ஸ்ரீரங்கம் பரமபத வாசல்

வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் தகப்பனார் வேளுக்குடி வரதாச்சாரியரும் மிகச் சிறந்த வைஷ்ணவப் பேரறிஞர். இந்தியாவில் இவரது சொற்பொழிவு நடக்காத ஊரே இல்லை. 

இவரிடம் ஒரு விசேஷம்... என்ன பேச வேண்டும் என்று முன்கூட்டியே தலைப்பு கொடுக்க வேண்டிய அவசியமில்லை இவருக்கு. 

அந்தச் சமயத்தில் என்ன தலைப்பு கொடுக்கிறார்களோ, அதற்கேற்பச் சரளமாகவும், விஷய ஞானத்துடனும் சுவையாகப் பேசி அசத்துவதில் மன்னனாகத் திகழ்ந்தார் இவர். அத்தனைப் பாண்டித்யம்!

ஒரு முறை, "இப்போது வேளுக்குடி வரதாச்சாரியர் ஸ்வாமி அவர்கள், 'மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும்' என்பது பற்றிப் பேசுவார்கள்" என்று ஒரு மேடையில் எகிடுதகிடாக அறிவித்துச் சிக்கலில் மாட்டிவிட்டார் நிகழ்ச்சி அறிவிப்பாளர். 

ஆனாலும், அசரவில்லை வரதாச்சாரியர். மடை திறந்தது போல், அதே தலைப்பிலேயே சொற்பொழிவாற்றத் தொடங்கினார்.

"தலையை மொட்டை அடித்துக் கொள்வது எதற்குத் தெரியுமா? நான் துளியும் அகங்காரம் இல்லாதவன் என்று காண்பிப்பதற்காகத்தான். ஒருவன் ஒரு பந்தயத்தில் தோற்று விட்டால் மொட்டையடித்துக் கொள்வான். இவன் அவனிடத்தில் தோற்று விட்டான் என்பதற்கான அடையாளம் அது. 

திருப்பதிக்குச் சென்று மொட்டையடித்துக் கொள்கிறார்களே, எதற்கு? ‘என் அகங்காரம் அழிந்து விட்டது. நான் உனக்கு அடிமைப் பட்டவன்’ என்று பகவானிடம் தெரிவிப்பதற்கு.

அப்படிச் செய்து விட்டானானால், அவனுக்குப் பிறவிப் பெருங்கடல் முழங்கால் அளவுக்கு வற்றிவிடும். இதைத் தெரிவிக்கத்தான், 

திருப்பதியில் எழுந்தருளியுள்ள ஸ்ரீனிவாசன், வலது திருக் கரத்தால் தனது வலது திருவடிகளைச் சுட்டிக் காட்டி, ‘அகங்காரம் அற்றவனாக எனது திருவடிகளில் விழு’ என்றும், இடது திருக் கரத்தால் தனது முழங்காலைத் தொட்டு, ‘நீ அப்படிச் செய்தால், உனது பிறவியாகிய கடல் முழங்கால் அளவுக்கு வற்றி விடும்’ என்றும் குறிப்பால் உணர்த்துகிறார்...’ என்கிற ரீதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வெளுத்து வாங்கி விட்டார்.

இப்படி ஓர் அசாத்தியத் திறமை இருந்ததால்தான், அவருக்கு ‘வாகம்ருத வர்ஷீ’ (சொல் அமுதக் கடல்) என்கிற பட்டம் கிடைத்தது.

நம்மாழ்வார் பிறந்த தலமான ஆழ்வார் திருநகரியில், அவர் அருளிச் செய்த திருவாய்மொழியின் 1000 பாடல்களைப் பற்றியும் தொடர்ந்து ஒரு வருட காலத்துக்கு உபன்யாசம் செய்துள்ளார் வரதாச்சாரியர். 

இது ஒரு சாதனை!

இதிலேயே இன்னொரு சாதனையையும் செய்தார் அவர். ஒரே நாளில் இடைவிடாமல் 24 மணி நேரத்துக்கு, திருவாய்மொழியின் பொருளை உபதேசித்தார். அப்போது அவருக்கு வயது 60.

சொற்பொழிவின் இடையே, விடியற்காலை 3 மணிக்கு, வயதின் காரணமாக அவருக்குச் சற்றே தளர்ச்சி ஏற்பட்டது. ஆயினும் அதைப் பொருட்படுத்தாமல் தொடர்ந்து உபன்யாசம் செய்து கொண்டு இருந்தார். மேலே தொடர முடியாமல், தொண்டை கட்டிக் கொண்டது. உடனே மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள் வரதாச்சாரியரைப் பரிசோதித்து விட்டு, ‘உபன்யாசத்தை உடனே நிறுத்திvவிடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்’ என்று அறிவுறுத்தினார்கள்.

ஆனாலும், அவர் அதைப் பொருட்படுத்தாமல், உபன்யாசத்தைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி காலை 6 மணிக்குதான் நிறைவு செய்தார்.

1991-ஆம் ஆண்டு, சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில், மார்கழி 30 நாட்களும் திருப்பாவை உபன்யாசம் செய்தார் வரதாச்சாரியர். அதை முடித்து விட்டு நேரே ஸ்ரீரங்கம் போனார். அங்கே ஸ்ரீ ரங்கநாதனுக்குத் திருவாராதனம் நடந்து கொண்டு இருந்தது. அதை ஒரு மணி நேரம் போல் கண்டு களித்து விட்டு, பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு, கோயிலைப் பிரதட்சணம் வந்தார். ஸ்ரீரங்கம் பரமபத வாசலை அடைந்த போது, மயங்கி விழுந்தவர்தான்; அப்படியே ஸ்ரீரங்கனின் திருவடிகளை அடைந்து விட்டார்.