Pages

Thursday, September 26, 2024

ராம் ராம்

இப்படியும் நடக்குமா  என ஆச்சர்யமாக உள்ளது !!

நேற்று மாலை காய்கறி, பழம் வாங்க மார்க்கெட் போனேன். வழக்கமாக பழம் வாங்கும் கடையில் ஆளில்லை . ஆனால் அங்கிருந்த போர்டில்" என் தாய் உடல் நலமில்லாமல் இருப்பதால் வீட்டில் அவளை கவனித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம். அவளுக்கு மருந்து வாங்கி கொடுக்க வேண்டும். தராசில் உங்களுக்கு வேண்டிய அளவு பழங்களை அளந்து பணத்தை அருகிலுள்ள டப்பாவில் போடவும். பணம் இல்லாவிட்டால் நாளை கொடுக்கலாம்"

நான் எனக்கு தேவையான பணத்தை தராசில் நிறுத்து எடுத்துக் கொண்டு பணத்தை டப்பாவில் போட்டுவிட்டு கிளம்பினேன்.

மறுநாள் அதே கடைக்குச் சென்ற போது கடையில் கடையின் சொந்தக்காரன் அமர்ந்திருந்ததை கண்டேன்.

"ஐயா இன்று பழங்கள் விற்றுப் போய்விட்டது " என்றான்.

அவனை எதிரிலிருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றேன். டீ அருந்தியவாறு பேச்சுக் கொடுத்தேன்.

உன் பெயரை தெரிந்து கொள்ளலாமா ? என்றேன்

"சீதா ராம்" என்றான். " போர்ட் தொங்குவது எனக்கு புதிதாக படுகிறது. இதன் பின்னணியை விளக்க முடியுமா" என்று கேட்டேன்.

அவன் பேச ஆரம்பித்தான்,"நானும் அம்மாவும்தான் வீட்டில். மனைவி இறந்து விட்டாள். குழந்தைகள் இல்லை. அம்மா படுத்த படுக்கையாக விட்டாள். என்னால் வேலைக்கும் போக முடியவில்லை.

ஒருநாள் அம்மாவின் கால்களை நீவி விட்டவாறு சொன்னேன். அம்மா பணப்பற்றாக்குறை வந்து விட்டது. என்னால் உன்னை தனியாக விட முடியவில்லை. கடையில் ஆளில்லாவிட்டால் எவர் வாங்குவர்? நீயும் தனியாக இருக்க பயப்படுகிறாய்? என்ன செய்வது" என்றேன்.

சுருங்கிய கைகளால் என் தலையை வருடிக் கொடுத்த அம்மா சொன்னாள்," கடைக்கு சென்றவுடன் ராமனின் பெயரை மூன்று முறை சொல்லவும். பழங்கள் அடுக்கி விட்டு வா, அதன்பின் அவன் பொறுப்பு. பார்த்துக் கொள்வான். போர்டில் உன் நிலமையை சுருக்கமாக எழுதி பணம் போட ஒரு டப்பாவை வைத்து விடு .ஆனால் என்றாவது நஷ்டம் வந்தால் அந்த ராமனை தூஷிக்காதே" என்றாள்.

அதன்படியே செய்து வருகிறேன் 3 வருடங்களாக. தினமும் மாலையில் டப்பா நிரம்பி வழியும்!

சிலர் அம்மாவிற்கு மலர் கொத்து வைத்துவிட்டு போவர்.

நேற்று ஒரு சிறுமி அம்மாவிற்கு கேக் வைத்திருந்தாள்.

டாக்டர் ஒருவர் அம்மாவிற்கு தேவைபட்டால் தனக்கு போன் பண்ண சொல்லி நம்பர் எழுதி வைத்திருந்தார். 

ஸ்ரீராமன் அநுகிரஹத்தில் இன்றுவரை எல்லாம் நல்லபடியாக போகிறது என்கிறாள் அம்மா"

இதுதான் நான் போர்ட் எழுதின கதை என முடித்தான்!!!

கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!

Tuesday, September 24, 2024

வாழ்க்கை அனுபவம்

60 வயதைக் கடந்து 70ஐ நோக்கி வாழ்க்கையை நகர்த்தும் என்னுடைய நண்பர் ஒருவரிடம், "உங்கள் வாழ்க்கை அனுபவத்தில் உங்களுக்குள் நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?" என்று கேட்டேன். 

அதற்கு அவர் " உங்களுடைய கேள்விக்கான பதிலை நான் வீட்டிற்குப் போய் உங்களுக்கு அனுப்புகிறேன்" என்றார். அவ்வாறே அவர் ஒரு நீண்ட பட்டியலை வாட்ஸ்அப் மூலம் அனுப்பினார். அவர் ஆங்கிலத்தில் அனுப்பியதை அப்படியே தமிழில் மொழிபெயர்த்துக் கீழே தந்துள்ளேன். 

1) என் பெற்றோரிடம், என் உடன்பிறந்தோரிம், என் இணையரிடம், என் குழந்தைகளிடம், என் நண்பர்களிடம் அன்பும், பாசமும், காதலும் கொண்டிருந்த நான், இப்போது என்னை நானே விரும்பத் தொடங்கியுள்ளேன். 

2) இந்த உலகத்தை நான் என் தோள்களில் தாங்கிப் பிடித்திருக்க வில்லை என்பதை உணர்கிறேன். 

3) இப்போதெல்லாம் காய்கறிக்காரரிடம், பூக்காரியிடம், தள்ளுவண்டிப் பழ வியாபாரியிடம் பேரம் பேசுவதை நிறுத்தியுள்ளேன். பேரம் பேசாமல் நான் தரும் உபரித் தொகை அவருடைய குடும்பத்திற்கு ஏதாவது ஒருவகையில் உதவும் என்று கருதுகிறேன். 

4) நாள் முழுதும் உழைக்கும் டாக்சி டிரைவரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டு மீதிச் சில்லறைக் காசுக்காகக் காத்திராமல் திரும்புகிறேன். இதனால் அவர் முகத்தில் அரும்பும் புன்னகையை விரும்புகிறேன். 

5) என்னைவிட முதியவர்கள் ஒரு செய்தியை - நிகழ்வை - கதையைத் திரும்பத்திரும்பக் கூறினாலும், 'இதை நீங்கள் முன்பே கூறிவிட்டீர்கள்' என்று முகத்தில் அடித்தால் போல் கூறாமல், முதல்முறை கூறுவதாகவே கருதிக் கேட்டுக்கொள்கிறேன். 

6) நமக்காக உழைக்கும் வீட்டு வேலையாட்களிடம் விவாதம் செய்வதையோ சத்தம் இடுவதையோ முற்றிலுமாக நிறுத்திவிட்டேன். நிறைவைவிட அமைதியே விலைமதிப்பற்றது (Peace is more precious than perfection) என்பதை உணர்ந்துகொண்டேன். 

7) ஒவ்வொருவரையும் அவர்களின் செயற்பாடுகளில் மனமுவந்து பாராட்டுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். என் சட்டையில் காணப்படும் சிறுசிறு கறைகளையெல்லாம் இப்போது நான் பொருட்படுத்துவது இல்லை. 

8) தோற்றத்தைவிட ஆளுமையே சிறந்தது என்பதை உணர்ந்துள்ளேன். (personality speaks louder than appearances.) 

9) என்னை மதிக்காதவர்களை விட்டு நானே விலகிச் சென்று விடுகிறேன். 

10) தேவையற்ற - முடிவற்ற தொடர் ஓட்டத்தில் என்னை முந்துபவர்களைப் பற்றி நான் கவலை கொள்வதில்லை. நான் பந்தயத்தில் இருப்பதாகவே என்னை நினைத்துக் கொள்வதில்லை. 

11) இப்போதெல்லாம் நான் எந்தவித உணர்ச்சிக்கும் ஆட்படுவதோ அடிமையாவதோ இல்லை. 

12) உறவுகளை முறித்துக் கொள்வதைவிட என்னுடைய egoவைக் கைவிடுவதே சிறந்தது என்னும் முடிவுக்கு வந்துள்ளேன். 

13) இந்த நாள்தான் வாழ்வின் இறுதிநாள் என்ற நினைப்பிலேயே ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறேன். 

14) எனக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையிலும், மற்றவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்கும் வகையிலும் முடிந்தவரை என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டுள்ளேன். 

15) மற்றவர்களைக் குறைசொல்வதையும், புறங்கூறுவதையும் முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன். 

16) என்னால் மற்றவர்களுக்குச் சிரமம் ஏற்படாத வகையில் முடிந்தவரை வாழ்ந்து வருகிறேன். 

17) தேவையின்றிப் பிறர் விஷயங்களில் தலையிடுவதை முற்றிலுமாகத் தவிர்த்துள்ளேன். 

18) யாரும் என்னை அணுகிக் கேட்டாலொழிய வலியச் சென்று ஆலோசனை வழங்குவதை நிறுத்தியுள்ளேன். 

19) என்னுடைய தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் முடிந்தவரை குறைத்துக்கொண்டுள்ளேன். 

20) அரசியல், ஆன்மீகம், மதம் தொடர்பான செய்திகளைப் பகிர்வதையோ, அவை தொடர்பாக மற்றவர்களிடம் விவாதிப்பதையோ முற்றிலுமாகத் தவிர்த்துவிட்டேன்.

ஏன் வயதாகும் வரை காத்திருக்க வேண்டும்? எந்த வயதினராயினும் இவற்றைப் பின்பற்றலாமே! அமைதியான - பயனுள்ள - வெற்றி வாழ்க்கைக்குக் கைகொடுக்குமே.

அனைவருக்கும் பகிருங்கள். டாக்டர் நர்மதா . நன்றி!

Thursday, September 05, 2024

மஹாளய பித்ரு பக்ஷ கேள்விகள்

மஹாளய பித்ரு பக்ஷ கேள்விகள்

18/09/24 - 03/10/24

தர்ம ஶாஸ்த்ரம்

கேள்வி 1: தினமும் செய்யும்பொழுது மஹாளய தர்பணம் 15 நாட்களா அல்லது 16 நாட்களா?

பதில் 1 : ஶாஸ்த்ரங்கள்  இரண்டையுமே ஒத்துக் கொண்டுள்ளது. தங்களின் குடும்பப் பழக்கப்படி 15 அல்லது 16 நாட்கள் செய்யலாம். நீங்கள் புதிதாக ஆரம்பிப்பதாக இருந்தால், குடும்பப் பழக்கம் தெரியாத நிலையில் 16 நாட்கள் செய்வது உத்தமம். மஹாளயத்தில் 16 நாட்கள் மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. 

கேள்வி 2: என்னால் எல்லா நாளும் தொடர்ந்து தர்பணம் செய்ய முடியவில்லை என்றால் என்ன செய்வது? 

பதில் 2 : ஒரு நாள் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்யவும். மஹாளயத்தில் ஒரே ஒரு நாள் செய்யும் ஶ்ராத்தத்தை ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் என்று கூறுவார்கள்.  “ஸக்ருத்” என்றால் “ஒன்று” என ஸம்ஸ்க்ருதத்தில் பொருள். 

கேள்வி 3: நான் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வதென்றால் அதைச் செய்வதற்கு ஏதாவது முக்கியமான நாட்கள் உண்டா ?

பதில் 3 : முக்கியமான நாட்கள்

1) பரணி நக்ஷத்ரம் உள்ள நாள் (மஹாபரணி) - 21/09/24

2) வ்யதீபாத யோகம் உள்ள நாள் (மஹாவ்யதீபாதம்) - 24/09/24

3) அஷ்டமி திதி  (மத்யாஷ்டமி) - 25/09/24

4) த்ரயோதசி உள்ள நாள் (கஜச்சாயை) - 30/09/24

இந்த நாட்களில் ஶ்ராத்தமும் தர்பணமும் செய்தால், இதை கயா க்ஷேத்திரத்தில் செய்ததற்குச் சமம். 

கேள்வி 4: அனைத்து 15 அல்லது 16 நாட்களில் தர்பணம் செய்வதற்குப் பதிலாக ஏதாவது 2 அல்லது 3 முக்கியமான நாட்களில் செய்யலாமா?

பதில் 4: மஹாளயத்தில் இரண்டு வகையான தர்பண முறைகள்தான் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.  ஒன்று ப்ராம்ஹணர்களை வீட்டுக்கு ஒரு நாள் அழைத்து ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்வது . இரண்டாவது, அனைத்து 15 அல்லது 16 நாட்களும்  தொடர்ந்து தர்பணம் செய்து, மற்றும் ஏதாவது ஒரு நாளில் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஶ்ராத்தம் செய்வது.  உங்கள் விருப்பப்படி சில முக்கியமான நாட்களில் மட்டும் தர்பணம் செய்யக்கூடாது. 

கேள்வி 5: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் தாய் அல்லது தந்தை இறந்த திதியில்தான் செய்யவேண்டும் என்று கட்டாயம் உண்டா? 

பதில் 5 : இந்த 15 நாட்களில் ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும் என்பது கட்டாயம். மற்றும் அதை தாய், தந்தை இறந்த திதியில் பண்ணலாம். ஆனால் அது கட்டாயமல்ல.  நீங்கள் மூன்றாவது பதிலில் சொல்லியபடி ஏதாவது ஒரு சுப அதிகத் தகுதிகள் உள்ள நாட்களை எடுத்துக் கொள்ளலாம். 

கேள்வி 6: ஏதாவது ஒரு நாளில் ஸக்ருன்மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மறுபடியும் மஹாளய தர்பணம் செய்யவேண்டுமா?

பதில் 6 : ஒரு நாள் ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தமும் தர்பணமும் செய்த பிறகு அமாவாசை அன்று மஹாளய தர்பணம் செய்யவேண்டாம்..அமாவாசை தர்பணம் செய்தால் மட்டும் போதுமானது.  அனைத்து 15 அல்லது 16 நாட்கள்  மஹாளய தர்பணம் செய்பவர்கள் அமாவாசை அன்றும் மஹாளய தர்பணமும் மற்றும் அமாவாசை தர்பணமும் செய்யவேண்டும்.  இவர்கள் முதலில் அமாவாசை தர்பணம் முடித்துவிட்டு மஹாளய தர்பணத்தைச் செய்யவேண்டும். 

கேள்வி 7: ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம் செய்ய உசிதமான நாட்களைத் தேர்ந்தெடுக்க வரைமுறைகள் உள்ளதா?

பதில் 7: நீங்கள் ஒரு நாள் ஸக்ருன் மஹாளயம் செய்வதற்குப் ப்ரதமை முதல் சதுர்த்தி வரை உள்ள திதிகளைத் தவிர்க்க வேண்டும். உங்கள் பெற்றோரின் இறந்த நாட்கள் ப்ரதமை அல்லது சதுர்த்தி திதிகளில் இருந்தால் மற்றும் பதில் 3ல் கொடுத்துள்ள நாட்களில் இருந்தால் தவிர்க்கவேண்டியதில்லை.   கட்டாயமாகச் சதுர்த்தசியில் செய்யக் கூடாது. 

கேள்வி 8: ஏன் சதுர்த்தசியில் செய்யக் கூடாது?

பதில் 8 : இயற்கைக்கு மாறான மரணம் எய்தியவர்கள், ஆயுதத்தாலோ, விபத்திலோ, தற்கொலையிலோ, விஷத்திலோ துர்மரணம் அடைந்தவர்கள், ஆகிய இவர்களுக்காக சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது. 

கேள்வி 9: என்னுடைய பெற்றோர்கள் பஞ்சமியிலோ, சஷ்டியிலோ அல்லது மற்ற திதிகளிலோ இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்திருந்தால் (பதில் 8ன் படி) என்று நான் மஹாளய ஶ்ராத்தம் செய்யவேண்டும்?

பதில் 9 : நீங்கள் சதுர்த்தசி அன்றுதான் செய்யவேண்டுமே தவிர அவர்கள் இறந்த திதியில் செய்யக் கூடாது.  இது போன்ற இயற்கைக்கு மாறான துர்மரணம் அடைந்தவர்களுக்காகவே சதுர்த்தசி ஒதுக்கப்பட்டுள்ளது.  ஆகவே இறந்த திதியைப் பொருட்படுத்த வேண்டாம். 

கேள்வி 10: இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்திவர்களுக்குச் சதுர்த்தசியில் மஹாளய ஶ்ராத்தம் செய்வதற்கு முன் ஏதாவது முக்கியமான விஷயங்களை மனதில் கொள்ள வேண்டுமா? 

பதில் 10: ஆமாம். இந்த ஶ்ராத்தத்தை “ஏகோதிஷ்ட விதானம்” முறைப்படி செய்யவேண்டும்.  இந்த  மஹாளயம்  இயற்கைக்கு மாறான துர்மரணம் எய்தியவர்களுக்கு மட்டுமே செய்யவேண்டும். இதில் மற்ற மூதாதையர்கள், காருணிக பித்ருக்கள் (அவர்களுடைய தந்தை, தாத்தா, தாய், ஆகியோர்) பங்கு ஏற்க மாட்டார்கள். மேலே குறிப்பிட்ட மூதாதையர்களுக்கு மற்ற வேறொரு நாளில்தான் மஹாளயம் செய்யவேண்டும். 

கேள்வி 11: நான் அனைத்து 15 அல்லது 16 நாட்கள் தர்பணம் செய்யும்பொழுது ஏதாவது திதிகளைத் தவிர்க்கவேண்டுமா? 

பதில் 11 : இந்த சிறப்பு வரைமுறைகள் அல்லது சில நாட்களைத் தவிர்ப்பது போன்றவை ஒரு நாள் ப்ராம்ஹணர்களை வீட்டிற்கு அழைத்து ஹிரண்ய ஶ்ராத்தமும் தர்பணமும் (ஸக்ருன் மஹாளய ஶ்ராத்தம்) செய்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.  அனைத்து நாட்களிலும் மஹாளய தர்பணம் மட்டும் செய்பவர்கள் எல்லா 15 அல்லது 16 நாட்களும் செய்யவேண்டும் 

கேள்வி 12: நான் மஹாளயத்தில் ஹிரண்ய ஶ்ராத்தம் செய்வதற்கு எத்தனை ப்ராம்ஹணர்களை அழைக்கவேண்டும்.

பதில் 12: ஆறு ப்ராம்ஹணர்கள் மிகவும் ஏற்றதாகும் 

அவர்கள்:

1. விஶ்வே தேவர் (இந்த தேவதைகள் நமது பித்ருக்களை அவர்களுடன் பூமிக்கு அழைத்து வருகிறார்கள்)

2. தந்தை வழி (3 தலைமுறை)

3. தாய் வழி (3 தலைமுறை)

4. தாயின் தாய் மற்றும் தந்தையர் வழி (3+3 தலைமுறை)

5. காருணிக பித்ருக்கள் (நெருங்கிய உறவினர்கள்)

6. மஹாவிஷ்ணு (ஶ்ராத்தத்தைப் பாதுகாப்பவர்) 

தற்பொழுது பல இடங்களில் 5 ப்ராம்ஹணர்கள் மட்டுமே வருவது பழக்கமாக உள்ளது. இந்த மஹாளய நேரத்தில் ப்ராம்ஹணர்கள் கிடைக்காத காரணத்தினால் மஹாவிஷ்ணுவுக்குப் பதிலாக விஷ்ணு பாதம்/ஶாலிக்ராமம் அல்லது கூர்ச்சம் வைக்கிறார்கள். 

கேள்வி 13: யாரெல்லாம் காருணிக பித்ருக்கள்?

பதில் 13: இறந்துபோன உங்கள் தந்தை மற்றும் தாய் வழி உறவினர்கள் – மாமா, தந்தை , தாய் சகோதரர்கள், சகோதரிகள், ஆகியோர்.  இவர்களுக்குத் தர்பணம் செய்து, த்ருப்திப்படுத்தி அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கு இந்த மஹாளயம் ஒரு சிறப்பான நேரமாகும். 

கேள்வி 14: என் தந்தை உயிரோடு இருந்து என் தாய் உயிரோடு இல்லை என்றால் மஹாளயம் எனக்கு பொருந்துமா?* 

பதில் 14 : இல்லை.  உங்களது தந்தைக்குத்தான் அதைச் செய்யும் உரிமை உள்ளது. 

அவிதவா நவமி (மஹாளய பக்ஷத்தில் வரும் நவமி-26/09/24) அன்று சுமங்கலிகளை அகத்திற்கு வரவழைத்துப் புடவை வாங்கி கொடுத்துச் சாப்பிடச் செய்யலாம்.

கேள்வி 15: எனது தாய் உயிரோடு இருந்து தந்தை இல்லை என்றால் நான் என்ன செய்யவேண்டும்?

பதில் 15 : தந்தை இறந்த ஒரு வருஷம் வரை மஹாளயமோ, அமாவாசை தர்பணமோ கிடையாது.  இறந்து ஒரு வருஷம் முடிந்த பிறகு மஹாளயம் அல்லது அமாவாசை தர்பணம் ஆரம்பிக்கவேண்டும். எனவே ஒரு வருஷம் கழித்து நீங்கள் ஆரம்பிக்கலாம். 

கேள்வி 16: சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் இந்த 15 நாட்களில் செய்யமுடியவில்லை என்றால் என்ன செய்வது?

பதில் 16: சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மஹாளய ஶ்ராத்தம்/தர்பணம் செய்யத் தவறிவிட்டால் நமது ஶாஸ்திரங்கள் மற்றுமொரு காலத்தையும் கொடுத்திருக்கிறது..  இது வரும் மாதத்தில் உள்ள அடுத்த க்ருஷ்ண பக்ஷத்தில் , அதாவது, தமிழில் ஐப்பசி மாதம், சாந்த்ரமான நாட்காட்டிபடி ஆஶ்வீனம் அல்லது ஸௌரமான நாட்காட்டிப்படி துலா மாதத்தில் செய்யவேண்டும். 


Monday, September 02, 2024

யுகங்களின் கணக்கு

இந்து மத சாஸ்திரங்களில் காலத்தை மிக சிறிய அளவாகிய பரம மகா காலம் முதல் மிகப்பெரிய அளவாகிய பிரம்மாவின் ஆயுள் ஆன இரு பரார்தங்கள் வரை கணக்கிட்டுள்ளனர்.

இதற்கிடையே உள்ள காலத்தை பல்வேறு யுகங்களாகவும் , மன்வந்திரங்களாகவும் பிரித்துள்ளனர். அவற்றின் கால அளவு பற்றிய விவரங்கள் கீழே..  

 பரம மகா காலம் முதல் வருடம் வரை : 

பிரபஞ்சத்தில் சிறுதுளி அவத்தையின் காலமே ஒரு பரமாணு அல்லது ஒரு பரம மகா காலமாகும்.

மூன்று பரமாணுக்களின் காலமே ஒரு திரேசிரேணு ஆகும்.

மூன்று திரேசிரேணுகளின் காலம் ஒரு துருடி ஆகும்.

நூறு துருடிகளின் காலம் ஒரு வேதகாலம் எனப்படும்.

மூன்று வேதகாலம் கூடினால் ஒரு லவம் ஆகும்.

மூன்று லவ காலம் ஒரு நிமிஷம் .

மூன்று நிமிஷம் ஒரு ஷணம் ஆகும்.

ஐந்து ஷணம் ஒரு காஷ்ட்டை .

பதினைந்து காஷ்ட்டை ஒரு இலகு.

பதினைந்து லகுக்கள் ஒருநாழிகை.

இரண்டு நாழிகை ஒரு முகூர்த்தம்.

ஏழு நாழிகை ஒரு ஜாமம் .

மனிதருக்கு இரவு நாலு ஜாமம் ஆகும்.

எட்டு ஜாமம் ஒரு நாள் ஆகும்.

பதினைந்து நாள் ஒரு பஷம் ஆகும்.

இரண்டு பஷம் ஒரு மாதம் ஆகும்.

இது பிதுர்களின் ஒரு நாளாகும்.

இரண்டு மாதங்கள் ஒரு ருது.

ஆறு மாதங்கள் ஒரு அயனம் ஆகும்.

தட்சிணாயனம், உத்திராயணம் என்ற இரு அயனங்கள் சேர்ந்தது ஒரு வருடம் ஆகும்.

இது தேவர்களின் ஒரு நாளாகும். 

யுகங்கள், மன்வந்திரம், கல்பம், பரார்த்தம்  

1728000 ஆண்டுகள் கிருத யுகத்தின் காலமாகும்.

1296000 ஆண்டுகள் த்ரேதா யுகத்தின் காலமாகும்.

864000 ஆண்டுகள் துவாபர யுகத்தின் காலமாகும்.

432000 ஆண்டுகள் கலி யுகத்தின் காலமாகும்.

இந்த நான்கு யுகங்களும் சேர்த்து ஒரு மகா யுகம்(சதுர் யுகம்) எனப்படும்.

இது போல 71 சதுர் யுகங்கள் சேர்ந்தது 

ஒரு மன்வந்திரம் எனப்படும்.

ஒவ்வொரு மன்வந்திரத்திலும் ஒரு இந்திரன்  ஆட்சியை செய்து கொண்டிருப்பார்.

அந்த மன்வந்திரம் முடிந்ததும் அடுத்த இந்திரன் ஆட்சிக்கு வருவார்.

மன்வந்திரம் பற்றிய சிறு குறிப்பு இடையில்..

இந்து மத சாஸ்திரங்களில் ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்த காலம் ஒரு கல்பம் என்று கூறப்படுகிறது.

இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்கள்

தங்கள் ஆட்சியை நடத்துவர் என்று கூறப்படுகிறது.

ஒரு மனு தன் ஆட்சியை நடத்தும் காலம் ஒரு மன்வந்திரம் ஆகும்.

ஒரு மன்வந்திர காலம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட்டு உலகம் அழிந்து விடும்

 என்றும் பின் புதிய மனு(மனு என்பவர் மனித குலத்தின் முதல் மனிதர் ஆவார்.)

 தோன்றி மானிட குலம் மீண்டும் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது நடைபெறும் கல்பத்தில் 6 மன்வந்திரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இப்போது நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்தில் வைவஸ்த மனு மனுவாகவும் புரந்தரன் இந்திரனாகவும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன.

இப்போது நடைபெறும் கல்பத்தில் ஆட்சி செய்யும் மனுக்கள் மற்றும் இந்திரர்கள் பெயர்கள் பாகவத புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 

மன்வந்திரம் / மனு இந்திரர் 

1 சுயம்பு / இந்திரன் 

2 . ச்வாரோசிஷன் / ரோசன்

3 . உத்தமன்/ சத்யஜித்

4 . தபாசன்/ திரிசிகன் 

5 . ரைவதன், விபு 

6. சாசூசன்/ மந்திரதுருமன் 

7 . வைவஸ்த மனு/ புரந்தரன் 

8 . சாவர்ணி/ மகா பலி

9 . தசாசாவர்ணி/ சுரதன் 

10 . பிரம்மா சாவர்ணி / சம்பு 

11 . தர்மசாவர்ணி / வைதிருதி 

12 . ருத்ர சாவர்ணி / ருது சாமவே 

13 . தேவ சாவர்ணி / திவஸ்பதி 

14 . இந்திரசாவர்ணி / சுகி ]

இவ்வாறு 14 மன்வந்திரங்களும் அதன் சந்திகளும் சேர்ந்தது ஒரு கல்பம் ஆகும்.

ஒரு கல்பம் ஆயிரம் சதுர் யுகங்கள் கால அளவை கொண்டிருக்கும்.

இந்த ஒரு கல்பம் பிரம்மாவின் ஒரு பகல் ஆகும். அதே கால அளவு அவரின் இரவாகும்.

இது போல 720 கல்பங்கள் அவரின் ஒரு ஆண்டாகும்.

பிரம்மாவின் 50 ஆண்டுகள் ஒரு பரார்த்தம் ஆகும்.

பிரம்மாவின் வயது நூறு ஆண்டுகள் ஆகும்

இந்த நூறு ஆண்டுகள் முடிந்ததும் மகா பிரளயம் ஏற்பட்டு பிரம்மா முதல் அனைத்து தேவர்கள், உயிரினங்களும் பரமாத்மாவில் கலந்து விடுவர்.

இதே கால அளவு பரமாத்மா சயனத்தில் இருப்பார். பின் புதிய பிரம்மாவை தோற்றுவித்து படைப்புகளை தொடர்வார். 

ஒரு சதுர் யுகம் 4320000 வருடங்கள் 

71 சதுர் யுகம் 306720000 வருடங்கள்

சந்தி 1728000 வருடங்கள் 

சந்தியுடன் ஒரு மன்வந்திரம் 308448000 வருடங்கள்

 ஒரு கல்பம் 4320000000 வருடங்கள்

பிரம்மாவின் ஒரு வருடம் 3110400000000 வருடங்கள் 

 பிரம்மாவின் ஆயுள் 311040000000000 வருடங்கள்

என்ன தலை சுற்றுகிறதா..?

இணையத்தில் படித்தது..

நீங்களும் அறிந்திருக்க இங்கே பகிர்கிறேன்..