இது ஒரு நீண்ட பகிர்வு பதிவு. பொறுமையாக படியுங்கள். உங்கள் கண்களில் நீர் கசியும்.
வெறும் பணம் !
அந்தப் பெண்ணைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்ளும்படியாக டாக்டரின் மனைவி வித்யா தான் சிபாரிசு செய்திருந்தாள். வித்யாவிற்கு அவளை எப்படித் தெரியும் எனத் தெரியவில்லை. வாசல்கதவை ஒட்டி நின்றிருந்த அந்தப் பெண்ணிற்கு ஐம்பது வயதிருக்கக் கூடும். ஆனால் தோற்றம் நடுத்தர வயது பெண்ணைப் போலவே இருந்தது. மெலிந்திருந்த போதும் களையான முகம். நீண்ட கூந்தல். கவலை படிந்த கண்கள். அந்தப் பெண்ணின் கையில் துணிப்பை ஒன்றிருந்தது.
`உன் பேரு என்னம்மா` எனக்கேட்டேன்
`கோகிலம்` என்றாள்
`கோகிலாவா` என மறுபடியும் கேட்டேன்.
`இல்லை சார் கோகிலம்` என அழுத்தமாகச் சொன்னாள். இப்படி ஒரு பெயரை முதன்முறையாக இப்போது தான் கேட்கிறேன்.
`எந்த ஊர்` எனக்கேட்டேன்.
`தெக்கே சார். பிள்ளைகுட்டிகள் யாருமில்லை. புருஷன் செத்துப்போயிட்டார். இரண்டு வருசமா தாம்பரத்துல ஒரு வீட்ல வேலைக்கு இருந்தேன். அவங்க இப்போது துபாய்க்கு வேலை மாறிப்போயிட்டாங்க`. என்றாள்
`எவ்வளவு சம்பளம் எதிர்பார்க்குறே `
`நீங்க குடுக்குறதை குடுங்க. ஆனா தங்க இடமும் சாப்பாடும் தரணும்`
இதுவரை எந்த வேலைக்காரியையும் என் வீட்டோடு தங்கியதில்லை. அப்படித் தங்கிக் கொள்ளும்படியான தனியாக அறை எதுவும் எனது வீட்டில் இல்லை.
`வீடு சின்னது, இதுல நீ எங்கம்மா தங்குவே` எனக்கேட்டேன்
`கிச்சன்லயே படுத்துகிடுவேன். இந்தப் பையை வைக்க இடம் இருந்தா போதும்`. என்றாள்
அவள் குரலில் இருந்த துயரம் அவளது இயலாமையைத் துல்லியமாக வெளிப்படுத்தியது
என் மனைவியும் அவளிடம் ஏதேதோ கேள்விகள் கேட்டாள். முடிவில் அவளைச் சமையல்வேலைக்கு வைத்துக் கொள்வது என முடிவானது.
சாப்பாட்டின் ருசி என்பது வீட்டுக்கு ஒரு மாதிரியானது. அதுவும் பலஆண்டுகளாக ருசித்துப் பழகிவிட்டால் வேற்று ஆளின் சமையலை சாப்பிட முடியாது. என் மனைவி மிகவும் நன்றாகச் சமைப்பாள். ஆகவே புதிய சமையற்காரியின் சாப்பாட்டினை எப்படிச் சாப்பிடுவது என யோசனையாக இருந்தது. ஆனால் என் மனைவி கால்முறிவு ஏற்பட்டுப் படுக்கையில் கிடந்து இப்போது தான் தேறி வருகிறாள். ஆகவே புதிதாகச் சமையலுக்கு ஆள் வைத்துக் கொள்ள வேண்டிய தேவை உருவாகியது
கோகிலம் சமைக்கத் துவங்கிய முதல்நாள் அவள் போட்டுக் கொடுத்த காபி. செய்து வைத்த சட்னி, சாம்பார் எதுவும் எனக்குப் பிடிக்கவில்லை. என் மனைவி அவளைக் கோபத்தில் திட்டவே செய்தாள்.
மறுநாள் கோகிலம் சமைத்த போது முட்டைக்கோஸ் வேகவைத்த சட்டி கருகிப்போய்விட்டது.
`அடுப்பை கவனிக்காமல் என்னடி யோசனை `என என் மனைவி அவளிடம் சண்டையிட்டாள்
`இல்லம்மா. என்னை அறியாமல் ஏதோ நினைப்பு வந்துருது. அந்த நினைப்பு வந்தவுடன் அழுகை அழுகையாக வருது `என்றாள் கோகிலம்
`நீ ஒப்பாரி வைக்கிறதுக்கு என் வீடு தானா கிடைச்சது. கவனமா வேலை பாக்குறதா இருந்த இரு. இல்லே. வேற வீடு பாத்துக்கோ` என என் மனைவி அவளை விரட்டினாள்
கோகிலம் சேலை முந்தானையால் அழுகையைத் துடைத்தபடியே சரிம்மா என்று கரிபிடித்த சட்டியை கிழே இறக்கிவைத்தாள்.
கோகிலம் எப்போது சாப்பிடுவாள். எப்போது குளிப்பாள் என யாருக்கும் தெரியாது. நாங்கள் எழுந்து கொள்வதற்கு முன்பாக அவள் குளித்துத் தயராகிக் காபி டிக்காஷனை போட்டு வைத்திருப்பாள். சமையற்கட்டின் ஒரத்தில் எதையும் விரித்துக் கொள்ளாமல் வெறும் தரையில் தான் படுத்துக் கொள்வாள். சமையல் வேலையில்லாத நேரங்களில் டிவி பார்ப்பதோ, அரட்டை அடிப்பதோ எதுவும் கிடையாது. அவளாகவே கடைக்குச் சென்று காய்கறிகள் வாங்கி வருவாள். பைசா சுத்தமாகச் சில்லறை மீதம் தந்துவிடுவாள். சமையல் வேலைகள் தவிர்த்து வீட்டை சுத்தம் செய்வது. பூச்செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவது. படுக்கை விரிப்புகளைச் சுத்தம் செய்வது. செருப்பைக் கழுவி துடைத்து வைப்பது எனச் சகல காரியங்களையும் கர்மசிரத்தையாகச் செய்து கொண்டிருந்தாள்.
பத்து நாளில் அவளது சாப்பாடு எங்களுக்குப் பிடித்துப் போகத் துவங்கியது. வீட்டில் நானும் என் மனைவியும் மட்டுமே இருந்தோம். மூத்தமகன் மும்பையில் தன் மனைவி பிள்ளைகளுடன் இருந்தான். இளைய மகள் டெல்லியில் வசித்து வந்தாள். அவர்கள் விடுமுறைக்கு வருவதோடு சரி.
நான் வங்கிப்பணியில் ஒய்வு பெற்றவன் என்பதால் அடிக்கடி நண்பர்கள் என்னைப் பார்க்க வீடு தேடி வருவதுண்டு. அப்படி ஒருமுறை நாலைந்து நண்பர்கள் வந்திருந்த போது கோகிலம் கேரட் அல்வா செய்திருந்தாள்.
அப்படி ஒரு சுவையான அல்வாயை சாப்பிட்டதேயில்லை என நண்பர்கள் புகழாரம் செய்தார்கள். அல்வா எடுத்த ஸ்பூனை வழித்துத் தின்றான் ஒரு நண்பன்.
கோகிலம் அந்தப் பாராட்டுகளைக் கேட்டுக் கொண்டதோடு சரி. அதை நினைத்து பெருமைப்பட்டதாகவோ, சந்தோஷம் கொண்டதாகவே தெரியவில்லை. விதவிதமான சிற்றுண்டிகள், காய்கறி வகைகள், துவையல்கள், இனிப்பு வகைகள் எனச் செய்து கொடுத்தபடியே இருந்தாள். மாத சம்பளத்தை அவளிடம் தந்த போது நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், தேவைப்படும்போது வாங்கிக் கொள்கிறேன் என்றாள்
உண்மையில் அவள் வந்த ஒரு மாத காலத்தில் நானும் என் மனைவியும் ஒரு கிலோ எடை அதிகமாகியிருந்தோம். கோகிலம் என் மனைவியின் தங்கையைப் போலவே ஆகியிருந்தாள். ஒரு நாளில் ஆயிரம் முறை கோகிலம், கோகிலம் என என் மனைவி அவளை அழைத்தபடியே இருந்தாள். அவளும் சுணக்கமின்றி ஒடியோடி வந்து உதவிகள் செய்தாள்.
சில நேரம் நாங்கள் சினிமாவிற்குப் போகும்போது அவள் வீட்டில் தனியாக இருப்பாள். ஒருமுறை நாங்கள் திருப்பதி போய்வந்த போது இரண்டு நாட்கள் அவள் மட்டுமே வீட்டிலிருந்தாள். வீடே காலியாக இருந்தாலும் அவள் சமையற்கட்டில் தான் உறங்கினாள். ஒரு பைசாவை எடுத்து செலவழிக்கவில்லை. சுவையான எந்த உணவையும் சாப்பிடுவதில்லை.
ஒருமுறை கோகிலம் சாப்பிடும் போது மறைந்திருந்து பார்த்துக் கொண்டிருந்தேன்
வெறும்சோறு. அதில் கொஞ்சம் தண்ணீர். தொட்டுக் கொள்ள ஊறுகாய்.
ஏன் இந்தப்பெண் இப்படிப் பிடிவாதமாகயிருக்கிறாள் என ஆத்திரமாக வந்தது. என் மனைவியிடம் சொல்லி அவள் விரும்பியதை சாப்பிடும்படியாகச் சொன்னேன்.
அதைக்கேட்டு என் மனைவி சொன்னாள்,
`நானும் சொல்லிப்பார்த்துட்டேன். அவ கேட்கமாட்டாள் `
மும்பையில் இருந்து என் மகனும் மருமகளும் பேரப்பிள்ளைகளும் வந்திருந்த போது கோகிலத்தின் விருந்தை சாப்பிட்டு மயங்கிப் போனார்கள். தன்னோடு அவளை மும்பைக்கு அழைத்துப் போய்விடுகிறேன் என மகன் சொல்லிக் கொண்டேயிருந்தான். மருமகளும் கூடக் கூப்பிட்டாள். ஆனால் கோகிலம் மறுத்துவிட்டாள். கோகிலம் எதற்கும் ஆசைப்படவில்லை. பூ வைத்துக் கொள்ளக் கூட அவள் விரும்பியதில்லை.
கோகிலத்திற்காக நாங்கள் வாங்கிக் கொடுத்த புடவைகள் எதையும் அவள் கட்டிக் கொள்ளவில்லை. அப்படியே ஒரு பையில் போட்டு வைத்திருந்தாள். ஒரு நாள் கூட உடல்நலமில்லாமல் ஒய்வெடுக்கவோ, சலித்துக் கொள்ளவோயில்லை.
கோகிலத்தின் வேலை பிடித்துப்போகவே அவளுக்கு மாத சம்பளம் ஆறாயிரத்திலிருந்து எட்டாயிரம் தரலாம் என்ற யோசனையை என் மனைவி தான் சொன்னாள். அதைப்பற்றி அவளிடம் சொன்ன போது உங்க இஷ்டம் என்று மட்டும் தான் சொன்னாள்
என்ன பெண்ணிவள். எதற்காக இப்படிப் பகலிரவாக வேலை செய்கிறாள். சம்பளத்தைப் பற்றிப் பெரிதாக நினைப்பதேயில்லை. யாரைப்பற்றியும் ஒரு வார்த்தை தவறாகப் பேசியதில்லை. தன் கஷ்டங்களைச் சொல்லி புலம்பியதில்லை. இவளைப் போல வேலையாள் கிடைப்பது கஷ்டம் என நினைத்துக் கொண்டேன்.
ஒரு நாள் கோகிலம் என்னிடம் தயக்கத்துடன் கேட்டாள்
`நாளைக்குக் காலையில பூந்தமல்லி வரைக்குப் போயிட்டு வரணும். அரை நாள் லீவு வேணும் சார் `
`என்ன வேலை` என்று கேட்டேன்
பதில் சொல்லவில்லை. பேசாமல் நின்று கொண்டிருந்தாள்
`சரி போயிட்டு வா `என்றேன்
`டிபன் செஞ்சிடும் போதே மதிய சமையலும் சேத்து வச்சிட்டு போயிடுறேன். வர்றதுக்கு மூணு மணி ஆகிடும்` என்றாள்
`அதையெல்லாம் நாங்க பாத்துகிடுறோம். நீ போயிட்டு வா`
`அம்மாவுக்குத் தைலம் தேய்ச்சி குளிக்க வைக்கணும். அதைச் சாயங்காலம் செய்துரலாம் `
`அதெல்லாம் பிரச்சனையே இல்லை கோகிலம்` என அனுப்பி வைத்தேன்
அவள் மறுநாள் காலை எட்டுமணிக்கு வெளியே கிளம்பி போனாள். என் வீட்டிற்கு வந்த ஆறுமாதங்களில் முதன்முறையாக அப்போது தான் வெளியே கிளம்பி போயிருக்கிறாள்
யாரைப்பார்க்க போகிறாள். என்ன வேலையாக இருக்கும். என யோசித்துக் கொண்டேயிருந்தேன்.
என் மனைவி கோகிலம் சில சமயம் காசை முடிந்து வைத்து சாமி கும்பிடுவதைக் கண்டிருப்பதையும். ஒருவேளை கோவிலுக்குப் போய்வரக்கூடும் என்றும் சொன்னாள்
`கோவிலுக்குப் போவதற்குச் சொல்லிக் கொண்டு போகலாம் தானே` என்று கேட்டேன்
`அது அவ சுபாவம். எதையும் யார்கிட்டயும் சொல்லமாட்டா` எனச் சிரித்தாள் மனைவி
அன்று மாலை கோகிலம் நாலு மணிக்கு திரும்பி வந்தாள். அவள் முகம் இறுகிப்போயிருந்தது. தன்னை நம்பியவர்களை அப்படியே போட்டுவிட்டு போய்விட்டோம் என்பது போல அவள் மன்னிப்பு கேட்டுக் கொண்டாள். வந்த வேகத்தில் அடுப்பை பற்றவைத்து சுவையான உளுந்தவடையும் காபியும் கொடுத்தாள். எங்கே போனாள் யாரை பார்த்து வந்தாள் என எதையும் சொல்லிக் கொள்ளவில்லை
மறுநாள் என் மனைவி சொன்னாள் `கோகிலம் ராத்திரி பூரா அழுதுகிட்டே இருந்தா. கேட்டா அதெல்லாமில்லேங்கிறா`
`யாராவது செத்துப் போயிருப்பாங்களா` எனக்கேட்டேன்
`தெரியலை. ஆனா அவளைப் பாக்க பாவமா இருக்கு`.
கோகிலம் மறுநாள் முதல் இயல்பாகிப் போனாள். நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. பத்துநாட்களுக்குப் பிறகு ஒரு மதியம் காலிங் பெல் அடிக்கும் சப்தம் கேட்டு நான் கதவை திறந்தேன். வாசலில் முப்பது வயதுள்ள ஒரு ஆள் நின்று கொண்டிருந்தான்
`என்ன வேணும்` எனக்கேட்டேன்
`எங்க அம்மாவை பாக்கணும்` என்றான்
`உங்க அம்மாவா. யாரு` எனக்கேட்டேன்
`கோகிலம்` என்றான்
கோகிலத்திற்கு யாருமில்லை என்றாளே என்ற குழப்பத்துடன் சமையலறைக்குப் போய் அவளை அழைத்தேன்
வெளியே வந்தவளின் முகம் அவனைப் பார்த்தவுடன் மாறியது
`இங்க எதுக்கு வந்தே` எனக்கேட்டாள்
`உன்னை யாரு இங்க வந்து வீட்டுவேலை செய்யச் சொல்லி கட்டாயப்படுத்தினா. உன் தலைவிதியா` எனக்கேட்டான் அந்தப் பையன்
`நான் உழைச்சி சாப்பிடுறேன். உன்னை என்னடா பண்ணுது. அதான் எல்லாத்தையும் குடுத்துட்டேனே. இன்னும் என்ன வேணும்` என முறைத்தபடியே கேட்டாள்
`யம்மா. நான் செஞ்சது தப்பு தான். அதுக்காக நீ யாரோ வீட்ல வந்து எதுக்கு வேலை செய்ற. சும்மா உட்கார்ந்து சாப்பிட்டா கூட முப்பது வருஷம் சாப்பிடலாம். சொத்த வித்த பங்குல உனக்குச் சேர வேண்டியது இரண்டு கோடி வந்துருக்கு. அது உனக்குத் தான் `
`அது ஒண்ணும் என் பணமில்லை. காசு காசுனு நீ தானே அலையுறே. நீயே வச்சி அனுபவி` என்றாள் கோகிலம்
`உனக்கு வேணாம்னா போ. ஆனா நாளைக்கு உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா கொள்ளி போட நான் தான் வந்தாகணும். அதை மறந்துராத` என்றான் மகன்
`ஏன் நான் செத்தா இவங்க எடுத்து போட மாட்டாங்களா `எனக்கேட்டாள்
அதைக் கேட்டதும் எனக்குச் சிலீர் என்றது. அந்தப் பையன் சொன்னான்
`உனக்குக் காசோட அருமை தெரியலை. இரண்டு கோடியை வேணாம்னு சொல்லுறே, பெத்த தாயேனு தான் திரும்ப வந்து நீயே வச்சிக்கோனு குடுக்குறேன். வேற யாராவது இருந்தா முழுங்கி ஏப்பம் விட்ருப்பான்`
`நீயும் வேணாம். உன் கோடி ரூபாயும் வேணாம். கிளம்பு. இனிமே என்னைத் தேடிகிட்டு இங்க வந்தா செருப்பாலே அடிப்பேன். போடா `எனச் சொல்லிவிட்டு சமையல் அறைக்குள் போய்விட்டாள்
அந்தப் பையன் என்னை முறைத்தபடியே வெளியே போனான். கோகிலம் பேசியதை எல்லாம் கேட்டதும் எனக்குத் திகைப்பாக இருந்தது. கோகிலம் வெறும் வேலைக்காரியில்லை. இரண்டு கோடி பணமுள்ளவள். அதை விடவும் வசதியாக வாழ்ந்தவள். ஏதோ ஒரு பிடிவாதம் காரணமாக வீட்டை விட்டு வெளியேறி வந்து வேலைக்காரியாக இருக்கிறாள்.
கோகிலத்திடம் நாங்கள் எதையும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் அன்றிரவு அவளாகவே வந்து சொன்னாள்
“எங்க வீட்டுக்காரு பெரிய டிராவல்ஸ் வச்சிருந்தாரு. பூந்தமல்லியில பெரிய வீடு. நாலு கார் இருந்துச்சி. நல்லா சம்பாதிச்சி மெயின்ரோட்ல ஒரு கல்யாண மண்டபம் கட்டி வாடகைக்கு விட்டிருந்தாரு. பம்மல்ல இரண்டு ஏக்கர் விவசாய நிலமும் இருந்துச்சி.எங்க வீட்லயும் ரெண்டு பேரு வேலைக்காரிகள் இருந்தாங்க. எங்க வீட்டுக்காரருக்கு தினமும் சாப்பாடு ருசியா இருக்கணும். விதவிதமா ஆக்கி போடுவேன்.
திடீர்னு ஒரு நாள் பெங்களுர் போயிட்டு வந்துகிட்டு இருந்த என் புருஷன் ரோடு ஆக்சிடெண்டில் செத்துப்போயிட்டாரு. கண்ணைக் கட்டி காட்டுல விட்டது மாதிரி ஆகிருச்சி. என் மகனே என்னை ஏமாத்த ஆரம்பிச்சிட்டான். அவனுக்குச் சேர்க்கை சரியில்லை. ஒரு வருசத்துக்குள்ளே ஊர்பட்ட கடன். அவனுக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சேன். வந்தவ இன்னும் மோசம். ரெண்டு பேரும் சேந்துகிட்டு என்னை வீட்டை விட்டு துரத்தி அடிச்சிட்டாங்க.
அப்புறம் வீட்டுவேலை செய்து பிழைச்சிகிட்டு இருக்கேன். எப்படி வாழ்ந்த நாம இப்படி ஆகிட்டோம்னு நினைச்சி தான் வெறும் சோத்தை சாப்பிடுறேன். அதுலயும் உப்புப் போடுறது கிடையாது.
பெத்து வளர்ந்த மகனை அடிச்சி விரட்டிட்டான். ஆனாலும் மனசு கேட்க மாட்டேங்குது. அவன் நல்லா இருக்கணும்னு காசு முடிச்சி போட்டு சாமி கும்பிட்டுகிடுவேன். எனக்குனு யாருமேயில்லை. அதான் இருக்கிற காலத்தை உங்கள மாதிரி யார் வீட்லயாவது ஒடிட்டு முடிச்சிரலாம்னு நினைச்சிட்டு இருந்தேன்.
முந்தநாள் பஜார்ல என் மகனை பார்த்தேன். கல்யாண மண்டபத்தை விக்கப் போறேன். உன் கையெழுத்து வேணும். பத்திர ஆபீஸ்க்கு வந்துருனு சொன்னான்
அதைப் போட தான் நேத்து போனேன். எட்டு கோடி ரூபாய் வந்துச்சி. அதுல என் பங்கு ரெண்டு கோடி வச்சிக்கோனு குடுத்தான். உன் பிச்ச காசு எனக்கு வேணாம் போனு உதறிட்டு வந்துட்டேன். நான் செஞ்சது சரி தானே சார் “
எனக்கு அவள் பேசியதை கேட்க கேட்க மனதில் பாரமேறியது. தொண்டை வலித்தது.
“இதை முன்னாடியே சொல்லியிருக்கலாம்லே“
“வசதியா இருந்த ஆளை யாரு வேலைக்கு வச்சிகிடுவா`
“அதுக்கா ஏன் வீட்டுவேலை செய்து கஷ்டப்படுறே. அந்தப் பணத்தை வாங்கிப் பேங்கிலப் போட்டுட்டு காலாட்டிகிட்டு வாழலாம்லே“ எனக்கேட்டாள் என் மனைவி
“நம்மாலே அப்படி வாழ முடியாதும்மா. நமக்கெல்லாம் உழைச்சி சாப்பிடணும். அது அநாமத்தா வந்த பணம். அதை வச்சிருந்தா ஆயிரம் பிரச்சனை கூட வரும். அந்தக் கருமம் எனக்கு வேணாம். சோறு போடுறதுக்கு நீங்க இருக்கீங்க. படுக்க இடம் இருக்கு இது போதும்மா“
அவள் சொல்வது உண்மை. ஆனால் இவளை போன்ற துணிவும் மனவுறுதியும் எங்களுக்கு இருக்குமா என யோசனையாக இருந்தது. என் மனைவி அவளிடம் திரும்பத் திரும்பப் பணம் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தாள். கோகிலம் அது தன்னுடைய பணமில்லை. தன்னைப் பெற்ற மகனே ஏமாற்றியபிறகு யாரையும் நம்பத் தயராகயில்லை“ என உறுதியாகச் சொல்லிக் கொண்டிருந்தாள்.
சரி அவள் இஷ்டம். எப்போதும் போல அவள் இந்த வீட்ல் இருக்கலாம். இனி அவளுக்கு எந்த ஆலோசனையும் சொல்ல மாட்டோம் என நாங்கள் முடிவு செய்தோம்
மறுநாள் விடிகாலையில் நாங்கள் எழுந்து வந்த போது கோகிலம் சமையல் அறையில் இல்லை. சிறிய கடிதம் மட்டுமே இருந்தது
அன்பு மிக்க நடராஜன் அய்யா, அம்மாவிற்கு,
இத்தனை நாட்கள் எனக்குச் சாப்பாடு போட்டு தங்க இடம் கொடுத்ததிற்கு நன்றி. நான் யார் என்று தெரிந்தபிறகு முன்பு போல என்னை வேலை சொல்ல உங்களுக்கு மனம் வராது. ஒவ்வொரு முறை என்னைப் பார்க்கும் போதும் இரண்டு கோடி ரூபாய் உங்கள் நினைவில் வந்து போகும். அது எனக்கும் சிரமம். உங்களுக்கும் சிரமம். ஆகவே வேறு ஊருக்கு வேலைக்குப் போகிறேன். இதுவரை நீங்கள் சேர்த்து வைத்துள்ள என் சம்பள பணத்தை அம்பத்தூரில் உள்ள அநாதை காப்பகத்திற்குக் கொடுத்துவிடவும்.
அம்மாவிற்குத் தைலம் தேய்த்துவிட முடியாமல் போய்விடுகிறதே என்று மட்டும் தான் எனக்குக் கவலை
என் சாப்பாடு உங்கள் இருவருக்கும் பிடிந்திருந்தது என்பது மகிழ்ச்சி. பலசரக்கு கடைக்காரன் 26 ரூபாய் பாக்கி தர வேண்டும். பால் பாக்கெட் ஒன்று கூடுதலாகப் போட வேண்டும்.
உங்கள் இருவரின் நினைவாக ஒரேயொரு டம்ளரை எடுத்துப் போகிறேன். அதில் தண்ணீர் குடிக்கும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்
உங்கள் வேலைக்காரி கோகிலம் என எழுதியிருந்தாள். அந்தக் கடிதத்தைப் படித்து முடிந்தவுடன் வேதனைபீறிட்டது
என் மனைவி படித்துவிட்டு வாய்விட்டு அரற்றினாள்
“நமக்கு தான் புத்தியில்லை. ஆள பாத்து தப்பா எடைபோட்டுட்டோம். விதவிதமா நமக்குச் சமைச்சி போட்டு கவனிச்சிட்டா. அவளுக்கு நாம ஒண்ணுமே பண்ணலே. இந்தப் பாவத்துக்கு என்ன பரிகாரம் பண்ணப்போறோம் சொல்லுங்க“
எனக்கும் என்ன செய்வதெனத் தெரியவில்லை
சமையல்கட்டின் ஒரம் நாங்கள் கொடுத்த புதுப்புடவைகள் அத்தனையும் ஒரு பையில் அப்படியே இருந்தன. அதைக் கையில் எடுத்துப் பார்த்தபோது என் மனைவி வெடித்து அழத்துவங்கியிருந்தாள்.