காசியில் திதி கொடுப்பது எப்படி ?
முழுமையாக தந்திருகின்றேன் , பொறுமையாக படித்து பாருங்கள் .
அன்பின் உள்ளங்களே, உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வணக்கங்கள்.
நமது மூதாதையருக்கு தலைமுறை தாண்டி திதி கொடுக்காமல் அல்லது திதி கொடுக்க மறந்திருந்தால் வாழ்வில் எல்லாம் இருந்தும் எதுவும் இல்லாமையான ஒரு சூழல் அதாவது காரணமின்றி தொடர் நஷ்டங்களும், கஷ்டங்களும் வந்து அதனை சரி செய்யமுடியாத நிலையும் ஏற்படும்.
இந்த நிலை அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றாற்போல் பல்வேறு, மாறுபட்ட, வெவ்வேறு விஷயங்களாக வெளிப்படும்.
இதனை பித்ரு தோஷம், பித்ரு சாந்தி என்று சொல்வார்கள்.
திதி என்பது மூதாதையரின் ஆன்மா சாந்தி அடைய கொடுக்கபடுவது.
காசி யாத்திரை புறப்படும் நாளுக்கு பத்து நாட்கள் முன்னதாக ராமேஸ்வரம் செல்ல வேண்டும்.
அங்குள்ள அக்னி தீர்த்தத்தில் ஒரு ஐயரிடம் சென்று அவரிடம்,ஐயா, நான் காசிக்கு சென்று எனது மூதாதையருக்கு திதி கொடுக்கப் போகிறேன், எனக்கு மூதாதையரின் சாம்பல் வேண்டும் அதனால் இங்கு அவர்களுக்கு திதி கொடுத்து மண் வாங்க வந்துள்ளேன் என்று சொல்லி திதி தர வேண்டும்.
அவர்கள் சம்பிரதாயப்படி எல்லாம் செய்து அக்னி தீர்த்தக் கடலிலிருந்து மூன்று கை மண் எடுத்து அதனை ஒன்றாக்கி
பிறகு அதனை மூன்று சம பாகமாக்கி ஒன்று மகாவிஷ்ணு, ஒன்று மகாசிவன், ஒன்று நமது மூதாதையர் என பிரித்து அதற்கு பூஜை செய்து
மகாவிஷ்ணு, சிவன் எனும் இரு பாகங்களை அங்கேயே அக்னி தீர்த்தத்திலேயே விட்டு விட்டு நமது மூதாதையர் பாகமான மணலை மட்டும் ஒரு துணியில் நீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவேண்டும்.
இந்த மணலை வீட்டுக்கு கொண்டு சென்று காசிக்கு புறப்படும் நாள்வரை மலர் (பூ) வைத்து பூஜை செய்யவேண்டும்.
2. காசி யாத்திரை தொடங்கும் நாளில் நீங்கள் திதி கொடுக்க இருக்கும் நாளின் நட்சத்திரம், திதி, நாம் திதி கொடுக்க இருப்பவர் பெயர், அவருக்கு நாம் என்ன உறவு என்பது போன்ற விபரங்களுடன் இந்த மணல், தேன் 50Ml , பச்சரிசி மாவு 250g, எள் Rs.3.00 ஆகியவற்றையும் எடுத்துக் கொள்ளவும்.
இப்போது நாம் திதி கொடுக்க தயார்.
முதலில் அலகாபாத் செல்ல வேண்டும் அங்குள்ள த்ரிவேணி சங்கமத்தில்தான் இந்த மணலை விடவேண்டும்.
திதி கொடுப்பவர் இங்கே முடியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
(மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்).
பின்னர் குளித்து விபூதி சந்தனம் பூசிக்கொண்டு ஒரு படகில் ஏறி கங்கை,யமுனா,சரஸ்வதி சங்கம இடத்திற்கு சென்று அங்கு மிக ஆழமாக இருக்கும் அதனால் படகுகளை இணைத்துக்கட்டி ஒரு திறந்தவெளி பாத்ரூம் போல அமைத்திருப்பார்கள்.