தாசி குலப் பெண்ணான "கண்டகி" என்னும் அழகான பெண்ணிடம் ஒரு விசித்திரமான குணம் இருந்தது.
அது என்ன வென்றால், தன்னை நாடி வரும் ஒவ்வொரு ஆணையும் தன் மணாளனாகவே பாவித்து, ஒரு தர்ம பத்தினியைப் போல் அவனிடம் நடந்து கொண்டு அவனுடைய எல்லாத் தேவைகளையும் முழு மனத்துடன் செய்து வந்தாள்.
இதைப் பார்த்த ஊரார் அவளை எள்ளி நகையாடினர். இருந்தாலும் அவள் தன் குணத்தில் இருந்து மாறவில்லை.
ஒருநாள் ஒரு கட்டழகு வாலிபன் மாலைப் பொழுதில் அவளிடம் வந்து பொன்னும், மணியும் கொடுத்துவிட்டு அவளை ஏறிட்டுக் கூடப் பாராது சென்று விட்டான்.
வருந்திய கண்டகி செய்வதறியாது திகைக்க, அதே வாலிபன் அன்று நடுநிசியில் திரும்ப அவளிடம் வருகிறான்.
உற்சாகத்துடன் அவனை உபசரித்த கண்டகி அன்றிரவு அவனைத் தன் பதியாக மனத்தால் வரித்து அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்ய முற்பட்டாள். அப்போது அவன் உடல் வியர்வையால் நனைந்திருப்பது கண்டு நறுமணத்தைலம் தடவி அவனைக் குளிக்க ஆயத்தம் செய்ய யத்தனித்தவளுக்கு அவன் ஒரு குஷ்டரோகி எனத் தெரிய வருகிறது.
அதிர்ச்சி அடைந்தாலும் அவனைத் தன் பதியாக வரித்த காரணத்தால் வெறுக்காமல் அவனைத் தொட்டு வேண்டிய உதவிகள் செய்து அவனுக்கு வேண்டிய சிசுருஷைகள் புரிந்தாள்.
உண்மை தெரிந்த அவள் வீட்டார் அவனை அப்போதே விலக்கச் சொல்ல மறுத்தாள் கண்டகி. அன்றிரவை அவனுடன் கழிக்க, மறுநாள் பொழுது விடிகிறது. அவனை எழுப்புகிறாள் கண்டகி. வாலிபன் உயிரோடு இல்லை.
இதைக் கண்டு வருந்திய கண்டகி, அவன் தன் பதி என்று சொல்லி அவனுடைய இறுதிச் சடங்குக்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து விட்டுப் பின் அந்நாளைய வழக்கப்படி தானும் அவனுடன் உடன்கட்டை ஏறுகிறாள்.
திகைத்த உறவினர் செய்வதறியாமல் விழிக்க சிதைக்குத் தீ மூட்டும் நேரம்அற்புதம் நிகழ்கிறது.
இறந்த வாலிபன் உடல் மறைய அங்கே சங்கு , சக்ர கதாபாணியான ஸ்ரீமந்நாராயாணன் காட்சி அளிக்கிறார்.
கண்டகி ஒவ்வோர் இரவிலும் ஒரு ஆணைத் தன் கணவனாக வரித்து வந்த போதிலும் அந்த ஆணுக்கு உண்மையான பத்தினியாக அவள் அனுஷ்டித்த பதிவிரதா தர்மத்தை உலகுக்கு எடுத்துக் காட்டவே இவ்வாறு நடந்ததாய் ஸ்ரீமந்நாராயணன் சொல்லிக் கண்டகிக்கு மூன்று வரங்கள் அளிப்பதாய் சொல்கிறார்.
கண்டகி கேட்டதோ ஒரே ஒரு வரம் மட்டும் தான். அதுவும் எப்போதும் ஸ்ரீமந்நாராயணன் பக்கத்திலேயே தான் ஒரு தாயாகவும் பெருமாள் மகனாகவும் இருக்க வேண்டும் என்பது தான் அது.
அப்போது ஸ்ரீமந்நாராயணன் சொல்கிறார் ஒரு பக்தனின் சாபத்தால் தான் மலையாக மாறவேண்டி இருப்பதால் மலையோடு சார்ந்த நதியாகக் கண்டகி எப்போதும் தன்னுடன் இருக்கலாம் என்று சொல்லுகிறார்.
சாபம் பெற்ற நாராயணன் மலையாக மாறக் கண்டகி அதே பேரோடு நதியாக ஓடுகிறாள். ஒரு மாலைபோல் மலையைச் சுற்றிக் கொண்டு ஓடும் கண்டகியின் வயிற்றில்தான் சாளக்கிராம கற்கள் கிடைகின்றது.
"கண்டகி நதி புராணம் "