தாயே யசோதா….
இந்தப் பெண்மணி தனது இருபதாவது வயதில் விதவையானவர்.
மிகவும் ஆழ்ந்த கிருஷ்ண பக்தையான இவர் விருந்தாவனில் உள்ள பங்கே பிஹாரி கோவிலின் வாசலில் அமர்ந்து கொண்டு வரும்பக்தர்களின் செருப்புக்களை பாதுகாக்கும் வேலையை பார்த்துக் கொண்டிருப்பார்.
பக்தர்களாக விரும்பித் தரும் பணத்தை மட்டுமே அவர் பெற்றுக் கொள்ளுவார். தனக்கு என்று குடும்பம் என்று எதுவும் இல்லாததால் அவருக்கு பெரிய செலவுகள் ஏதும் கிடையாது என்பதால் கிடைத்த பணத்தை மட்டும் சேமித்து வைத்துள்ளார். கடந்த 40 வருடங்களாக அவரிடம் சேர்ந்த தொகை எவ்வளவு தெரியுமா? கேட்டால் மலைத்துப் போய்விடுவீர்கள். ரூ.51,02,050/- ஐம்பத்தொரு லட்சம் ரூபாய்கள்.
அவர் அந்த பணத்தை தனக்கென பயன்படுத்தாமல், அதில் இருந்து நாற்பது லட்சம் ரூபாய் செலவில் ஒரு கோசாலையையும், கோவிலுக்கு வரும் யாத்ரிகள் தங்குவதற்காக வேண்டி ஒரு தர்மசாலையையும் அமைத்துக் கொடுத்துள்ளார்.
இந்த அளவுக்கு ஒரு பெரிய வேலையை செய்துவிட்டு அதைப்பற்றி அவர் பெரிதாக வெளிக்காட்டிக் கொள்ளாமல் பக்தர்களுக்கும், பசுக்களுக்கும் சேவையை தொடர்ந்து வருகிறார் இந்தப் பெண்மணி.
பணமே வாழ்க்கையில் எல்லாம் என்று இருப்பவர்களுக்கு இந்த பெண்மணி செய்திருக்கும் அருஞ்செயல் மிகப் பெரிய பாடமாக இருக்கும்.
ஸ்ரீமத் பாகவதத்தில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் “அஹம் பக்தப் பராதீனஹ” என்று கூறுவதாக வருகிறது. என் பக்தர்கள்தான் எனக்கு எல்லாமே. நான் என் பக்தர்களை நம்பி இருக்கிறேன் என்பதாக அதற்கு பொருள் கொள்ளலாம்.
எனவே கிருஷணர் தன்மீது அளவற்ற சுயலமற்ற பக்தியை செலுத்துபவர்கள் மீது அளவற்ற அன்பையும், அருளையும் பொழிந்துதான் ஆகவேண்டும்.
கிருஷ்ண பக்தையாக விளங்கும் விருந்தாவனத்தை சேர்ந்த அந்த பெண்மணியின் பெயர் யசோதா. என்ன ஒரு பொருத்தம் பாருங்கள். பகவான் கிருஷ்ணரின் தாய் பெயரும் யசோதா தான். தனது மகனான கிருஷ்ணனை ஒரு குழந்தையாக மட்டுமே பார்த்து கண்ணும் கருத்துமாக அன்பு பாராட்டுவாளாம் அந்த தாய் யசோதா. அவள் கண்ணுக்கு தெரிந்தது பகவான் கிருஷ்ணர் அல்ல. குழந்தை கிருஷ்ணர் மட்டுமே.
மனிதர்கள் வருவார்கள் போவார்கள். ஆனால், காலம் தோறும் யசோதைகள் விருந்தாவனத்தில் உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள்.