Pages

Friday, December 11, 2020

இறந்தவரின் ATM Card

இறந்தவர்களின்  ATM Card லிருந்து  குடும்பதினர் பணம் எடுப்பது சரியா?

முத்துக்குமார் என்பவர் பிரபல வங்கி ஒன்றின் கிளையில் கணக்கு வைத்திருந்தார். அதே வங்கியில் ஃபிக்ஸட் டெபாசிட்டும் போட்டிருந்தார். இந்த நிலையில் முத்துக்குமார் எதிர்பாராதவிதமாக மரணமடைந்துவிடுகிறார். அவருடைய ஏ.டி.எம் கார்டு அவருடைய குடும்பத்தாரிடம் இருந்தது. அந்தக் கார்டின் (pin) பின் நம்பர் தெரிந்த காரணத்தால் அவருடைய மனைவி அவர் இறந்த பிறகு, அவருடைய வங்கிக் கணக்கில் இருந்த பணம் அனைத்தையும் எடுத்தார்.

ஆனால், ஃபிக்ஸட் டெபாசிட்டிலிருந்து அவரால் அவ்வாறு பணத்தை எடுக்க முடியவில்லை.

வங்கிக் கிளையை அணுகி தன் கணவரின் ஃபிக்ஸட் டெபாசிட் தொகையைத் தனக்குத் தருமாறு கடிதம் கொடுக்கிறார். இறந்தவரின் இறப்புச் சான்றிதழ் மற்றும் வாரிசுச் சான்றிதழை இணைத்து தன் கணவரின் சேமிப்பு பணத்தை தன் கணக்குக்கு மாற்றித் தருமாறு வேண்டுகோள் விடுத்தார். இறந்தவரின் வங்கிக் கணக்குகளை ஆராய்ந்த வங்கி அதிகாரிகள் இறப்புச் சான்றிதழில் உள்ள தேதிக்குப் பிறகு, இறந்தவரின் கணக்கிலிருந்து பணம் எடுத்ததை அறிகின்றனர்.

நம்மில் பலருக்கும் இது போன்ற நிலை ஏற்படக்கூடும். வங்கி விதிமுறைகளின்படி இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பது தவறாகும். அவர்கள் இறந்தவரின் நேரடி வாரிசுதாரர் ஆக இருந்தாலும்கூட இதுபோன்று பணம் எடுப்பது தவறாகும்

ஒருவர் மரணம் அடைந்துவிட்டால் அந்தக் குடும்ப உறுப்பினர்கள் விரைவாக வங்கியை அணுகி வாடிக்கையாளர் இறந்த தகவலை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவித்தவுடன் வங்கி உடனடியாக இறந்தவரின் கணக்கை முடக்கி வைக்கும். அதன் பிறகு, அந்த வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து ஏ.டி.எம் வாயிலாகவோ, காசோலை அல்லது வங்கியின் வலைதளங்கள் வாயிலாகவும் பணத்தை யாராலும் எடுக்க முடியாது. இவ்வாறு செய்வது முறையற்ற பரிவர்த்தனைகள் நடைபெறுவதை உடனடியாகத் தடுத்து நிறுத்தும்.

இறந்தவரின் கணக்கிலிருந்து பணத்தைப் பெறுவதற்கு வங்கிகள் பல நடைமுறைகளைக் கொண்டிருக்கும். இந்த நடைமுறைகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் சரியான நபரிடம் இறந்தவரின் பணத்தைச் சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன. அதனால் குறுக்கு வழியில் பணத்தை எடுக்க முயல்வது ஒருவருக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

ஒருவர் சேமிப்பு கணக்கு அல்லது வேறு கணக்குகள் தொடங்கும்போது அந்த வாடிக்கையாளர் தமது கணக்குக்கு நாமினியை நியமிக்க வேண்டும். அவ்வாறு நாமினியை நியமித்து இருந்தால் இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வங்கி அதிகாரிகளிடம் அந்த நாமினி வழங்க வேண்டும். மேலும், நாமினியாக நியமிக்கப்பட்டவர் உரிய கே.ஒய்.சி அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். இந்த நடைமுறையில் வங்கிகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் இருக்கலாம்.

வங்கி அதிகாரிகள் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்து அதன் பிறகு, இறந்தவரின் கணக்குகளை முடித்து அந்தப் பணத்தை நாமினிக்கு மாற்றித் தருவர்.

வங்கியில் கணக்கு ஆரம்பிக்கும்போது நாமினியாக ஒருவரையும் குறிப்பிடவில்லை என்றால் இறப்புச் சான்றிதழ் உடன் இறந்தவர்களுடைய வாரிசுதாரர் சான்றிதழை (Legal Heir) இணைக்க வேண்டும். மேலும் ரிஜிஸ்டர் பத்திரத்தில், அனைத்து வாரிசுதாரர்களும், நாங்கள்தான் இறந்தவரின் வாரிசுகள் என்ற உறுதி மொழியை அளிக்க வேண்டும். இந்த உறுதிமொழியை நோட்டரி பப்ளிக் அல்லது அரசு அதிகாரிகளிடமிருந்து உறுதிப்படுத்தி கையொப்பம் பெற்று இருக்க வேண்டும். இந்த நடைமுறையும் வங்கிகளுக்கு இடையே சிறு மாற்றத்துடன் விளங்கலாம்.

இந்தச் சான்றுகளை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து சேமிப்புப் பணத்தை வாரிசுதாரர்களுக்கு வழங்குவார்கள். இறந்தவர்களுக்கு பல வாரிசுகள் இருந்து அவர்களில் ஒருவருக்கு இந்தப் பணத்தை வழங்க வேண்டும் என்றால் மற்ற வாரிசுதாரர்கள் இந்தப் பணம் தனக்கு வேண்டியதில்லை என்றும் குறிப்பிட்ட அந்த வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதம் கொடுக்க வேண்டும். அந்தக் கடிதத்துடன் மற்ற வாரிசுதாரர்கள் உடைய KYC சான்றுகளையும் வழங்க வேண்டும். இவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து குறிப்பிட்ட வாரிசுதாரருக்கு பணத்தை வழங்குவார்கள்.

இறந்தவர் வங்கியில் நகைக் கடன் அல்லது வீட்டுக் கடன் பெற்று இருந்தால் இதே நடைமுறையைத்தான் பின்பற்ற வேண்டும். அந்தக் கடன் தொகையை வாரிசுதாரர்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும். வாரிசுதாரர்கள் கடனை மீட்பதற்கு முன்வந்தால் கடன் நிலுவைத் தொகையை இறந்தவரின் கணக்கில் செலுத்தி பிற சான்றிதழை வழங்க வேண்டும். அவற்றை வங்கி அதிகாரிகள் சரிபார்த்து கடனை முடித்து வைத்து அடமானமாகப் பெற்ற நகைகளையோ, வீட்டுப் பத்திரத்தையோ வாரிசு உரிமையாளரிடம் வழங்குவார்கள்.

வங்கிக் கணக்கில் நாமினியாக நியமிக்கப்படும் நபர் அந்த பணத்தை நிர்வகிக்கும் நபராகத்தான் கருதப்படுவார். நாமினியின் கடமையானது பெறப்பட்ட பணத்தை வாரிசுதாரர்களுக்குப் பிரித்துத் தருவது ஆகும். அவ்வாறு இல்லாமல் நாமினியாக இருப்பவர் முழுவதுமாகப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.

வாரிசுகளுக்கு இடையே அல்லது நாமினியாக நியமிக்கப்பட்டவருக்குள்ளே பணத்தை பங்கிடுவதில் சிக்கல் ஏற்பட்டால் வழக்கு மூலமாகவே தீர்க்கப்பட வேண்டும். அந்த வழக்கு தீர்க்கப்படாத வரை வாரிசுதாரர்கள் யாரும் அந்தப் பணத்துக்கு உரிமை கோர முடியாது.a

நமது நாட்டில் உரிமை கோரப்படாத பல லட்சம் கோடி பணம் பல வங்கிகளிலும், தொழிலாளர் வைப்பு நிதியிலும் இருக்கின்றது. இவற்றுக்கு மூல காரணம் வாடிக்கையாளர்கள் முறையாக நாமினியை இந்தக் கணக்குகளில் தாக்கல் செய்யாதது ஆகும். சேமிக்கும் பணத்தைக் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரிவிக்காததும் இந்தப் பிரச்னைக்கு வழி வகுக்கும். மேலும், அந்தப் பணத்தைத் தெளிவாக உயில் போன்ற ஆவணங்களில் குறிப்பிட்டு தெரிவிக்காதது குடும்ப உறுப்பினர்களிடம் சட்ட சிக்கலை ஏற்படுத்தக் கூடும். அதனால், சேமிப்புக் கணக்குகளில் மட்டுமில்லாது கடன் கணக்குகளையும் குடும்ப உறுப்பினர்களிடம் முறையாகத் தெரியப்படுத்தி வங்கிக் கணக்கு புத்தகத்தில் நாமினியைத் தேர்வு செய்வது இதுபோன்ற பிரச்னைகளிலிருந்து குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

ஒருவரை தினமும் தொடர்வது மரணம் என்றால் அது மிகையல்ல. தனக்கு ஒன்றும் ஆகாது என்ற அதீத தைரியத்தில் பலர் வங்கிக் கணக்குகளில் முறையாக நாமினி விவரங்களைப் பதிவதில்லை. நம் பணம் நமக்குப் பிறகு முறையாக நமது குடும்ப உறுப்பினர்களுக்குச் செல்வதற்கு உறுதி செய்வது நமது கடமை. அதை ஒவ்வொருவரும் உணர்ந்து செயல்படுவது மரணத்துக்குப் பிறகு, நமது குடும்ப உறுப்பினர்களைக் காப்பாற்றும்.

சரி முத்துக்குமார் விஷயத்துக்கு வருவோம்.

முத்துக்குமார் விஷயத்தில் வங்கி அதிகாரிகள் அவருடைய மனைவி செய்த தவற்றைச் சுட்டிக் காட்டினார்கள். அவருடைய வாரிசுதாரர்கள் முத்துக்குமாரின் மனைவி பணம் எடுத்ததை ஆட்சேபிக்கவில்லை. அதனால், வங்கி அதிகாரிகள் முத்துக்குமாரின் குடும்ப உறுப்பினர்களிடம் மன்னிப்புக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டு ஆவணங்களை சரிபார்த்து முத்துக்குமாரின் பணத்தை அவரின் மனைவிக்கு மாற்றிக் கொடுத்து உதவினர்.