Pages

Saturday, November 18, 2017

சிவன் - விஷ்ணு போர்


சிவனும் விஷ்ணுவும் இணைந்து அசுரர் பலரை அழித்திருப்பதும் அவர்களை வதைப்பதில் ஒருவருக்கொருவர் உதவியிருப்பதும் நமக்கு தெரியும்.  ஆனால், அசுரன் ஒருவனைக் காப்பதற்காக சிவனும் விஷ்ணுவும் சண்டையிட்ட கதையையும்  படியுங்கள். 

மகாபலி, திரிவிக்ரமனால் பாதாள உலகில் அழுத்தப்பட்ட பின் நிகழ்ந்த சம்பவம் இது. 

மகாபலியின் நூறு பிள்ளைகளில் மூத்தவன் பாணாசுரன்.  ஆயிரம் கைகளும் அபார வலிமையையும் உள்ள அவன் சிறந்த சிவபக்தன்.

ஒரு சமயம், பரமன் ஆனந்த் தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தபோது, தன் ஆயிரம் கைகளாலும் ஆயிரம் வகையான இசைக்கருவிகளை வாசித்தான், பாணாசுரன்.

அதனால் மகிழ்ந்த மகேசன், அவன் விரும்பும் வரத்தைக் கேட்கச் சொன்னார்.

பரமேசனே தன் பாதுகாவலனாக இருந்ததால், தன்னை எவராலும் வெல்ல முடியாதல்லவா..? எனவே, "என் தலைநகரான சோணிதபுர நாட்டுக் கோட்டையின் பாது  காவலராக நீங்கள் இருக்க வேண்டும்" என்று கேட்டான் பாணாசுரன்.   "அப்படியே ஆகட்டும்" என்று வரமளித்தார் ஈசன்.

அவ்வளவுதான்.  ஆயிரம் கைகளாலும் ஆயிரமாயிரம் அக்கிரமங்களைச் செய்தான்.   விரைவியேயே அவனை எதிர்ப்பவர் எவரும் இல்லாமல் போனதால், ஆணவம் அதிகரித்தது அவனுக்கு.

பாதுகாவலாய் இருந்த பரமனிடம் சென்று கேட்டான்.  மகேஸ்வரா எவருடனானவது போர் புரிய வேண்டும் என்று என் தோள்கள் துடிக்கின்றன, என்ன செய்வது?  விரைவில் உன் ஆசை நிறைவேறும் என்று சொன்னார் ஈசன்.  அவன் சந்திக்கப்போகும் பிரச்சினையை  எண்ணி மனதிற்குள் சிரித்தார். 

அதே சமயம், பாணாசுரனின் மாளிகை அந்தப்புரத்தில் தோழியர் சூழ்ந்து நிற்க ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த அவன் மகள் உஷை தூக்கத்தில் சிரித்தாள்.  காரணம், அவள் கண்ட கனவு.  கட்டிளம் காளை ஒருவனுடன் காதல் புரிவதுபோல் வந்த கனவு.

சட்டென்று விழித்த உஷை தூக்கம் கலைந்த பின்னும் ஏக்கம் கலையாதவளாய் இருந்தாள்.  அவளது எண்ணத்தை புரிந்த அவள் தோழி சித்ரலேகா ஒரு வண்ணத்ததைக் குழைத்து இளவரசர்களின்  சித்திரத்தை வரைந்து அவளிடம் காட்ட, தன கனவில் வந்தவன் படத்தை அடையாளம் காட்டினாள் உஷை. அவன் அநிருத்தன், கிருஷ்ணரின் மகனான ப்ரத்யும்னனின் மைந்தன்.

உடனே சென்று அவனை கவர்ந்து வருவதாக சொன்ன சித்ரலேகா, மாய உருவெடுத்து துவாரகை சென்று அங்கே மஞ்சத்தில் தூங்கி கொண்டிருந்த அநிருத்தனை திரிஷ்கரணி என்ற மந்திரத்தால் மயக்கி சோணிதபுரத்துக்கு கொண்டு வந்தாள் .

மனம் கவர்ந்தவனை பார்த்து மகிழ்ந்தாள் உஷை.  மயக்கம் தெளிந்த அநிருத்தன், உஷையின் அழகில் மயங்கினான்.  நாட்கள் வாரங்களாகி மாதங்களாகி நகர்ந்தன.

ஒருநாள் உஷையின் அந்தப்புரத்தில் ஆண்குரல் வருவதை தற்செயலாகக் கேட்ட வீரர்கள் அரசன் பாணாசுரனிடம் சொன்னார்கள்.

அதிர்ந்த அரசன் அதிவேகமாய் அந்தப்புரம் சென்றான். அநிருத்தனை அங்கே கண்டதும் கோபம் கொண்டு, இவனை பிடித்து இருட்டு அறையில் அடையுங்கள் என்று வீரர்களுக்கு உத்தரவிட்டான்.

அநிருத்தனைக் காணாமல் வாடியது துவாரகை.  எல்லாம் தெரிந்தும் ஏனோ மௌனமாக இருந்தார் கிருஷ்ணர்.

ஒருநாள் துவாரகை வந்த நாரதர் அநிருத்தன் சோணிதபுர சிறையில் அடைபட்டிருப்பதை கிருஷ்ணரிடம் சொன்னார்.  உடனே பாணாசுரனை எதிர்க்க படை புறப்பட்டது. 

சோணிதபுரத்தை நெருங்கியதும் சோதனை ஆரம்பமாகியது அவர்களுக்கு.  அசுரனின் கோட்டைக்கு காவலாய் இருந்தார் ஈசன்.அசுரனை காத்து நிற்கும் ஈசனை தாக்க எல்லோரும் தயங்கி நிற்க, கிருஷ்ணர் தாமே முன் வந்து நின்றார்.


எதிர்ப்போர் இன்றி ஏங்கி கிடந்த பாணாசுரன் விரைந்து வந்தான், ஆவேசமாய் போரிட்டான்.  கொடுத்த வாக்கினை காப்பதற்காக கிருஷ்ணரை தடுத்து போரிட்டார் சிவன்.  யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர எண்ணிய மாயவன், மாயமான ஒரு வேலை செய்தார். அந்த மாயையால் மயங்கி நின்றார் மகாதேவன்.பாதுகாக்க  பரமன் இருந்த தைரியத்தில் பரபரப்பாக போரிட்ட பாணாசுரனும் அவன் வீரர்களும் அரன் மயங்கி நின்றதை கண்ட அதிர்ச்சியிலேயே அலறி ஓடிப்போனார்கள்.

சரியாக அதேசமயம் மாயையில் இருந்து விடுபட்ட சதாசிவன் மகாபலியின் வம்சத்தினரை வதைப்பதில்லை என்று வாக்கு தந்ததை கிருஷ்ணருக்கு  நினைவுபடுத்தினார். பாணாசுரனை மன்னித்து ஆசிபுரிந்தார் கிருஷ்ணர்.  அச்சத்தை நீக்கிய அசுரன் அவர் பாதம் பணிந்தான்.  தன்  மகளை  அநிருத்தனுக்கு மணம் முடித்து வைத்தான். 

அரியும்  சிவனும் ஒன்று எனக் கூறும்போது அவர்களே போரிட்டது சரியா?

தன் பக்தனான பாணாசுரனை ஈசனே நிறுத்தியிருக்க முடியாதா ?
மாயைகளுக்கெல்லாம் அப்பாற்பட்ட மஹாதேவன், கிருஷ்ணரின் மாயையில் சிக்கியது எப்படி? 

பரமன் தன்னை பாதுகாப்பார் என்று முழுவதுமாக நம்பினான் அசுரன். பக்தனின் நம்பிக்கை பொய்யாகக்கூடாது என்பதற்காகாவே கிருஷ்ணருடன் போரிட்டார் ஈசன். 

பக்தனாகவே இருந்தாலும் அகந்தை கொண்டால், அதற்குரிய தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்பதாலேயே அவனை கிருஷ்ணருடன்  மோதும்படி செய்தார்.

மஹாதேவன் மாயையில் சிக்கியது எப்படி?  அது வேறொன்றும் இல்லை.  உண்மையில், கிருஷ்ணரின் மாயையில் சிக்கியவர்கள் பாணாசுரனும் அவனது வீரர்களும் தான்.   ஈசன் மாயையில் சிக்கி மயங்கி நிற்பதாக மாயத்தோற்றம் அவர்களுக்கு ஏற்பட்டதே தவிர, உண்மையில் அவர் மயங்கவும் இல்லை, மாயைக்கு ஆட்படவுமில்லை.