1960-ம் ஆண்டுகளில் இந்தியர்களின் சராசரி ஆயுள் 42 வயது. தற்போது பெண்களுக்கு 67-ம், ஆண்களுக்கு 64-ம் சராசரி வயதாக இருக்கிறது. அதனால் நாமெல்லாம் எதிர்காலத்தில் 80, 90-வது பிறந்த நாளைக்கூட கொண்டாடலாம்! அப்படி கொண்டாட வேண்டும் என்றால் முதுமையை வரவேற்று அதனோடு வாழ பழகிக்கொள்ளவேண்டும்.
நம்மை படைக்கும்போதே கடவுள் நமது உடலில் எந்த பிரச்சினை எதிர்காலத்தில் வந்தாலும் தாக்குப்பிடித்து வாழ வசதியாக, முக்கியமான ஒவ்வொரு உறுப்பிலும் இலவச இணைப்புபோல் அதிகப்படியான அளவை, சக்தியை கொடுத்திருக்கிறார். கிட்னியில் இன்னொன்று, ஈரலில் 80% தேவைக்கு அதிகமாக,கல்லீரலில் 60% தேவைக்கு கூடுதலாக! இப்படி ஒவ்வொன்றிலும் கடவுளின் கருணை தெரிகிறது.
அதனால்தான் இளமையில் ஆடாத ஆட்டம் ஆடினாலும் அடிக்கடி நோய்வாய்ப்படாமல் தப்பித்து விடுகிறோம். ஆனால் முதுமை அப்படி அல்ல. "மார்ஜின் ஆப் எர்ரர்" என்று குறிப்பிடும் அந்த சக்தி இயல்பாகவே முதுமையில் குறைந்து விடுகிறது.
உடலின் எல்லா பகுதிக்கும் முதுமையில் ரத்த ஓட்டம் குறையும். மூளைக்கு செல்லும் ரத்தத்தின் அளவு குறையும்போது "மைனர் ஸ்ட்ரோக்" எனப்படும், வெளிக்கு தெரியாத பக்கவாத பாதிப்புகள் தோன்றும். அதனால் தான் சிலர் 5/6 தடவை அழைத்தபின்பு தான் சுதாரித்துக் கொண்டு "என்னையா அழைத்தீர்கள்"? என்று கேட்பார்கள்.
ஆஸ்டியோபோராசிஸ் என்ற எலும்பு அடர்த்திக் குறைபாடு நோய் முதுமையில் தென்படும். பெண்களுக்கு மாதவிலக்கு நின்று மெனோபாஸ் ஆகும் காலக்கட்டத்திலே இந்த தொந்தரவு தோன்றி விடும். குறிப்பிடத்தக்க பிரச்சினை என்னவென்றால், கீழே அவர்கள் விழுந்தால் எளிதாக எலும்பு முறியும். சிகிச்சை எடுத்துக் கொண்டாலும் விரைவாக பலன் கிடைக்காது. மூட்டுத் தேய்மானமும் முதுமையில் உருவாக்கி, மூட்டு மாற்று அறுவை சிகிச்சை சிலருக்கு தேவைப்படும்.
60 வயதுக்கு பிறகு முதியவர்கள் உடலில் ஒவ்வொரு நோயாக ஒட்டிக்கொள்ளப் பார்க்கும். சர்க்கரை நோய் தாக்கி இருந்தால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்கிறது? என்பதைவிட, சர்க்கரை நோய் எவ்வளவு காலமாக இருக்கிறது என்பது கவனிக்கத் தகுந்தது. ஏன் என்றால் நீண்ட காலமாக அந்த நோய் தாக்கி இருந்தால் கண், கிட்னி, இதயம் போன்றவை பாதிக்கப்படக்கூடும்.
ஈரல், கிட்னி ஆகிய இரண்டு உறுப்புக்களும் நாம் இளமையாக இருக்கும்போது, சாப்பிடும் மாத்திரையில் இருக்கும் தேவையற்றவைகளை அப்படியே பிரித்தெடுத்து ரத்தத்தில் கலக்கவிடாமல் வெளியேற்றிவிடும். முதுமையில் அந்த இரண்டு உறுப்புக்களின் செயல்பாடும் மந்தமடைவதால் நோய்களுக்காக சாப்பிடும் மாத்திரைகளில் இருக்கும் தேவையற்றவைகளும் பிரித்து எடுக்கப் படாமல் அப்படியே ரத்தத்தில் கலந்து விடும். அதனால் தான் முதுமையில் நோய்களுக்காக சாப்பிடும் மருந்துகளால் அதிக பக்க விளைவுகள் சிலருக்கு தோன்றுகிறது.
நோயாளிகளுக்கு டாக்டர்கள் மாத்திரைகள் பரிந்துரைக்கும்போது, மிக குறைந்த அளவு, அதிகபட்ச அளவு என்ற இரு எல்லைகளை கையாண்டு அதற்கு தக்கபடி மாத்திரைகள் உட்கொள்ள வேண்டிய அளவை நிர்ணயிப்பார்கள். இதை "தெரபூயிடிக் வின்டோ" என்பார்கள். அந்த இடை வெளியை முதுமையில் மிக கவனமாக கண்காணித்து மாத்திரைகள் வழங்க வேண்டும். தேவைக்கு அதிகமான டோஸ் கொடுத்துவிட்டால் பக்க விளைவுகள் அதிகரித்துவிடும்.
எல்லா வியாதிகளுக்கும் அறிகுறி உண்டு. இளமையில் உடலில் அதிக சக்தி இருக்கும்போது அறிகுறிகளை எளிதாக கண்டு சிகிச்சையை உடனே தொடங்கி விடலாம். முதியவர்களுக்கு உடலில் சக்தி குறைவதால் உள்ளே நோயின் பாதிப்பு அதிகம் இருந்தாலும், அறிகுறிகளை அவ்வளவு எளிதாக கண்டறிய முடியாது.
சிறுநீர் பாதை அருகில் ப்ரோஸ்டேட் சுரப்பி உள்ளது. முதுமையில் அந்த சுரப்பி வீங்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்கத் தோன்றும். முழுமையாக வெளியேறவும் செய்யாது. திடீரென்று சிறுநீர் வெளியேறாமல் தொந்தரவு செய்வதும் உண்டு. உடல் இயக்கம் குறைவதால் தூக்கமின்மையும் முதியோர்களை அதிகம் தொந்தரவு செய்கிறது. பற்கள் விழுந்து விடுவதால் அவர்களால் மென்று சாப்பிட முடியாது. அதனால் பிரச்சினையும், ஜீரணக் கோளாறும் தோன்றுகிறது. புற்று நோயும் முதியோர்களை அதிக அளவில் தாக்கி நிலைகுலையச் செய்கிறது. கட்டி, ஆறாத புண்கள் தோன்றினாலோ, இருமலில், வாந்தியில் சிறுநீர் மற்றும் மலத்தில் ரத்தம் வெளிப்பட்டாலோ டாக்டரிடம் சென்றுவிட வேண்டும். பெண்களைப் பொறுத்த வரையில் அதிக ரத்தப் போக்கு உடனடியாக கவனிக்கத் தகுந்தது. இது போன்ற ஏராளமான உடல் பிரச்சினைகள் மட்டுமின்றி, மனப் பிரச்சினைகளாலும் முதியோர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
கடைப்பிடிக்க வேண்டியவைகள்:
- முதுமையை ஓய்வுக்கான பருவம் என்று நினைத்து முடங்கக் கூடாது.
- மனதுக்கும், உடலுக்கும் ஆக்டிவ்வாக வேலை கொடுத்துக் கொண்டே இருக்கவேண்டும். டிவி பார்ப்பது, தூங்குவது போன்று பொழுதை கழித்தால் உடலும் மனதும் சோர்ந்து போகும்.
- பேரக் குழந்தைகளிடம் தாத்தா, பாட்டி மாதிரி பழகாமல் நட்பாக பழகுங்கள, விளையாடுங்கள், இரவில் அவர்களோடு கதை பேசி தூங்குங்கள்.
- புகை, மது பழக்கம் இருந்தால், 50 வயதுக்கு முன்பே விட்டு விடுங்கள்.
- 55 வயது கடக்கும்போது வருடத்திற்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்து, நோய்களை தொடக்கத்திலே கண்டறியுங்கள்.
- முதுமை எல்லோர்ருக்கும் உண்டு என்பதால் இளமையிலேயே மருத்துவ காப்பீடு செய்து விடுங்கள். முதுமையில் அதிக நம்பிக்கையை அது உருவாக்கும்.
- 50 வயது நெருங்கும் முன்பே உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வந்து, உடற்பயிற்சியையும் தொடங்கிவிடுங்கள்.
- மனைவியுடனான தாம்பத்திய வாழ்க்கையிலும் ஆர்வம் காட்ட வேண்டும்.
- பெரும்பாலான முதியோர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்து, அடிபட்டு படுத்த படுக்கையாகித் தான் மரணத்தை நெருங்குகிறார்கள். அதனால் வழுக்காத வகையில், தண்ணீர் தேங்காத வகையில், கைப்பிடியோடு உட்கார்ந்து எழும் வசதியுடன் முதியோர்களுக்கான பாத்ரூமை அமையுங்கள். இரவில் அவசரமாக பாத்ரூம் போக, சுவிட்சை தேடித் பிடித்து லைட் போட முடியாது. அதனால் இரவு முழுவது விளக்கு எரியட்டும்.
- தம்பதிகளில் யாராவது ஒருவர் இறந்து, இன்னொருவர் தனிமரம் ஆகும்போது தனிமை அவர்களை கடுமையாக வாட்டும். அதை போக்க அவர்களை, நட்பு, உறவு, ஆன்மிகம், பொழுதுபோக்கில் கவனத்தை திசை திருப்ப வேண்டும்.
- ஒவ்வொரு மனிதரும் சம்பாதிக்கும் சொத்து அவர்களது வாரிசுகளுக்குத்தான் போய் சேர வேண்டும். ஆனால் முதுமையை இனிமையாக நீங்கள் கடக்க வேண்டும் என்றால் உங்கள் பெயருக்கு சொத்துக்களையும், பணத்தையும் வைத்துக் கொள்ளுங்கள். இதில் வாரிசுகளின் கவலை, கண்ணீர், நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து விடாதீர்கள்.
- முதுமை இயற்கை தரும் சாபம் அல்ல; வரம்! அதனால் அதை மனதார ஏற்று, நட்போடு கைகோர்த்துக் கொண்டால் மீதமுள்ள நாட்களிலும் மகிழ்ச்சியாக வாழலாம்.